World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan election sets stage for deep political crisis இலங்கை தேர்தல் ஆழமான அரசியல் நெருக்கடிக்கு களம் அமைக்கின்றது By K. Ratnayake இன்றைய தேசியரீதியான வாக்களிப்புடன் முடிவுக்கு வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தல், வன்முறைகள் மற்றும் இரு பிரதான வேட்பாளர்களான தற்போதை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான கசப்பான குற்றச்சாட்டுக்கள், எதிர்க்குற்றச்சாட்டுக்களால் பாதிக்கப்பட்டுள்ளது. சச்சரவான தேர்தல் முடிவுகள் மற்றும் ஒரு அரசியல்-அரசியலமைப்பு நெருக்கடியின் விளைவாகத் தோன்றும், வெற்றி மற்றும்/அல்லது தேர்தல் மோசடி குற்றச்சாட்டுக்களை அறிவிக்க தயாராக இருப்பதுபோல் இரு வேட்பாளர்களும் காணப்படுகின்றனர். . எல்லாவற்றுக்கும் மேலாக, வாக்காளர்கள் தமது வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றாலும் கூட, இராணுவ அதிகாரிகள் தட்டின் அனுதாபம் யாருக்கு உள்ளது மற்றும் சச்சரவான தேர்தல் முடிவுகள் வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை தீர்மானித்துக்கொள்வதற்காக, வேட்பாளர்களும் மற்றும் அவர்களது பிரதான உதவியாளர்களும், நாட்டின் ஊதிப்பெருத்த இராணுவ-பாதுகாப்பு இயந்திரத்தைப் பற்றிய தமது சொந்த இரகசிய தேர்தலை நடத்துவதாக அறிகுறிகள் தென்படுகின்றன. சனிக்கிழமை பிலியந்தலையில் தனது கடைசி கூட்டத்தில் உரையாற்றி ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ பிரகடனம் செய்ததாவது: "ஜனவரி 26, 27 மற்றும் 28 க்குப் பின்னரும் நானே ஜனாதிபதியாக இருப்பேன். நாங்கள் இத்தகைய சதிகாரர்கள் (எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகாவும் அவரது ஆதரவாளர்களும்) நாட்டை பிரிக்க அனுமதிக்க மாட்டோம்." இராஜபக்ஷ, அண்மைய காலம் வரை நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான யுத்தத்தில் தனது உயர்மட்ட இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகாவை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை ஏற்றுக்கொண்டதன் மூலம் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். தமிழ் கூட்டமைப்பானது கடந்த ஆண்டு இராணுவத் தோல்வியடையும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். தபால் மூல வாக்களிப்பில் தான் வெற்றிபெற்றுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பொன்சேகா தெரிவித்தார் (தேர்தலுக்கப் பின்னரான வாக்கு எண்ணுதலின் ஒரு பாகமாகவே தபால் மூல வாக்களிப்பின் பெறுபேறுகள் வெளியிடப்படும்.) வெற்றி மீது நம்பிக்கை இருப்பதாக தானாகவே பிரகடனம் செய்துகொண்ட அவர், இராஜபக்ஷ தொடர்பான இராணுவ உயர்மட்டத்தினரின் நிலைப்பாட்டைப் பற்றி கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் சமிக்ஞை செய்தார். நிருபர்கள் மத்தியில் பேசிய பொன்சேகா, "எனது வெற்றியை தடுக்க 27ம் திகதி ஒரு இராணுவ சதிப் புரட்சி மேற்கொள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என ஒரு பத்திரிகையாளர் என்னிடம் கேட்டார்.... இராணுவம் எந்தவொரு சட்டவிரோத நகர்விலும் ஈடுபடாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இராணுவத்தின் உயர் அலுவலர்கள் எங்களுடன் தொடர்பு வைத்துள்ளார்கள். அத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டால் அது அதை ஏற்பாடு செய்தவர்களுக்கே திரும்பிப் போகும். இராணுவம் அவர்களுக்கு எதிராகவே திரும்பும்," என தெரிவித்தார். வட மாகாணத்தில் உள்ள சில இராணுவத் தளபதிகளை கொழும்புக்கு வருமாறு அரசாங்கம் கட்டளையிட்டுள்ளதாக அதே பத்திரிகையாளர் மாநாட்டில் பொன்சேகா தெரிவித்தார். தெரிவிக்கப்படாத கருத்து என்னவெனில், அவர்கள் பொன்சேகாவின் விசுவாசிகளாக கணிக்கப்படுவதோடு இராஜபக்ஷவும் அவரது ஆளும் குழுவும் அவர்களை பாதையில் இருந்து அகற்ற விரும்புவதோடு தேர்தல் மோசடிக்கும் வசதி செய்ய முடியும். 600-800 வரையான இராணுவத்தில் இருந்து விட்டோடியவர்கள் முன்னாள் மேஜருக்குப் பின்னால் அவருக்கு ஆதரவாக அணிதிரண்டுள்ளதாக பொன்சேகே மீது குற்றஞ்சாட்டி, வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தனது சொந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். ஏ.எஃப்.பி. நிருபர் ஒருவர், அரசாங்கத்தின் முதலாளித்துவ எதிரிகள் இராஜபக்ஷவின் வெற்றியை தேர்தல் மோசடியின் பெறுபேறு என கூறி அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் சாத்தியம் உண்டா என்பது பற்றி கேட்டபோது, கடுமையான நெருக்கடி இருப்பதற்கான சாத்தியத்தை நிராகரித்த போகொல்லாகம, "இலங்கை மக்களுக்கு வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய நேரமில்லை" என கூறினார். தேர்தல் ஆணையாளரை புறக்கணித்த அரசாங்கம், அண்மைய காலங்களில் தேர்தல் சம்பந்தப்பட்ட வன்முறைகளை தூண்டிவிட்டதோடு தேசிய ஒலிபரப்பு வலையமைப்பின் மீதான தனது கட்டப்பாட்டை பலப்படுத்தியது. இது தேர்தல் பெறுபேறுகள் மற்றும் அவற்றின் நம்பகத்தன்மை சம்பந்தமான ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்திகளும் எவ்வாறு வெளியிடப்பட வேண்டும் என்பதை நெறிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது தெளிவு. இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் தேர்தல் வேட்பாளரான விஜே டயஸும், இராஜபக்ஷ தானே பெயரிட்டுள்ள "பொருளாதார யுத்தம்" ஒன்றுக்காக தனது கைகளைப் பலப்படுத்திக்கொள்வதன் பேரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்புவிடுத்துள்ளார் என விளக்கினர். யுத்தத்தின் செலவாலும் மற்றும் உலக பொருளாதார நெருக்கடியின் காரணாமாக ஏற்றுமதியில் ஏற்பட்ட மோசமான சரிவாலும் ஏற்பட்ட அந்நிய செலாவனி நெருக்கடியை தவிர்ப்பதற்காக, கடந்த ஜூலையில் 2.6 பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியம் கொடுத்த போது, அது விதித்த கடுமையான நிபந்தனைகள அமுல்படுத்துவதும் இந்த பொருளாதார யுத்தத்தில் அடங்கியுள்ளது. எவ்வாறெனினும், இந்த நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்தும் இயலுமை இராஜபக்ஷவுக்கு உண்டு என்பதில் நம்பிக்கைகொள்ளாத இலங்கை ஆளும் உயரடுக்கின் கணிசமான பிரிவுகள், தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான ஒரு பலம்வாய்ந்த மனிதராக செயற்படக்கூடிய சிறந்த வேட்பாளர் என ஜெனரல் பொன்சேகாவை நம்பி, அவரைச் சூழ அணிதிரண்டுள்ளனர். அவரை வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியும் (யூ.என்.பி.) சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) அதே போல் பெரும் வர்த்தகர்களில் பெரும்பகுதியினரும் ஆதரிக்கின்றனர். இராஜபக்ஷ, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருந்து கொழும்பை தூர விலக்கி, சீனாவுடன் நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்துகொண்டுள்ள பரிமாணத்தையிட்டும் இந்த கோஷ்டி கவலை கொண்டுள்ளது. ஜனாதிபதி இராஜபக்ஷ தனது குடும்பம் மற்றும் இராணுவ உயர்மட்ட அலுவலர்களை அடிப்படையாக்க கொண்ட ஒரு சிறிய குழுவின் கையில் பாரியளவு அரசியல் அதிகாரத்தை குவித்துள்ளதையிட்டும் இந்தத் தட்டினர் சீற்றம் கொண்டுள்ளனர். தனது பதவிக் காலத்தில் யுத்தம் மற்றும் பெருமளவான ஒடுக்குமுறை மற்றும் அரசியல் வன்முறைகளை அடையாளமாகக் கொண்டுள்ள இராஜபக்ஷவுக்கு ஒரு ஜனநாயக மாற்றீடாக தான் இருப்பதாக பொன்சேகா கூறிக்கொள்ளும் அதே வேளை, அவரும் இராஜபக்ஷவைப் போல் யுத்தக் குற்றங்களுக்கும் சமரசமற்ற சிங்களப் பேரினவாதத்துக்கும் பொறுப்பாளியாவார். அவர், 26 ஆண்டுகால யுத்தத்தின் போது, பிரமாண்டமான ஆயுதப் படைகளின் எண்ணிக்கையில் தொடங்கி கட்டியெழுப்பப்பட்ட முழு பொலிஸ்-அரச இயந்திரத்தையும் தொடர்ந்தும் பேணிக்காக்க விரும்புகிறார். பிரச்சாரத்தின் இறுதி நாட்களில், ஜனாதிபதியாகவும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) தலைவியாகவும் இராஜபக்ஷவுக்கு முன்னதாக பதவிவகித்த சந்திரிகா குமாரதுங்க, பொன்சேகாவின் வேட்பாளர் நிலையை அங்கீகரித்த போது அவரது பிரச்சாரத்துக்கு மேலும் ஆதரவு கிடைத்தது. "வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் மோசடிகள் தொடர்பாக நான் ஆழமாக கவலை கொண்டிருந்த நிலையில், நான்கு ஆண்டுகால மெளனத்தை கலைக்க நான் முடிவெடுத்தேன்" என குமாரதுங்க தெரிவித்தார். ஆனால் அவரது சொந்த அரசாங்கத்தை பற்றி விவரிக்கும் போதும் நிச்சயமாக இதே வார்த்தைகளை பிரயோகிக்க முடியும். இராஜபக்ஷ தனது கடைசி கூட்டத்தில், தனது எதிரி "சர்வதேச சதிகாரர்களின்" ஆதரவை கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். அவர் அதை தெளிவுபடுத்தாவிட்டாலும், பல சமயங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாக இருப்பதாக எதிர்க்கட்சிகாரர்களை தாக்கி வந்துள்ளார். எந்தவொரு தேர்தல் மோசடிகள் இடம்பெற்றாலும் பெரும் வல்லரசுகளான "சர்வதேச சமூகத்துக்கு" அழைப்பு விடுப்பதாக இறுதி பிரச்சார நிருபர்கள் மாநாட்டில் பொன்சேகாவும் தன் பங்கிற்குத் தெரிவித்தார். கொழும்புக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையில் மலர்ந்துவரும் உறவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உறுதிபூண்டுள்ளதாக வாஷிங்டன் அறிவித்தல் விடுத்துள்ளதோடு அதற்கான மாற்றத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எந்தவொரு தேர்தல் நெருக்கடியையும் அது சந்தேகம் இன்றி பற்றிக்கொள்ளும். இரு வலதுசாரி முதலாளித்துவ முகாங்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன தலையீடு இல்லையேல், சச்சரவான தேர்தல் முடிவின் விளைவை தீர்மானிப்பதில் இராணுவமும் வெளிநாட்டு சக்திகளும் தீர்க்கமான பாத்திரம் வகிக்கும். அச்சுறுத்தும் விதத்தில், இராணுவத்தினதும் அதன் உயர் மட்ட அலுவலர்களதும் அரசியல் விசுவாசம் பற்றிய விடயம், ஏற்கனவே இலங்கை ஊடகத்தில் செயலூக்கத்துடன் கலந்துரையாடப்படும் விடயமாக உள்ளது. ஒரு எதிர்க்கட்சி பத்திரிகையான சண்டே லீடர், கடந்த வாரம் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. தமது ஓய்வுபெற்ற ஜெனரலின் முயற்சியை முன்னிலைப்படுத்த சேவையில் இருக்கும் இராணு அலுவலர்கள் விடுமுறை பெற்றுக்கொண்டு செயற்படுவதுடன், முன்னாள் மற்றும் தற்போதைய இராணுவ அலுவலர்கள் பொன்சேகாவின் பிரச்சாரத்துக்கு செயலூக்கத்துடன் ஆதரவளிக்கின்றனர் என்பதை அந்தக் கட்டுரை வெளிப்படுத்தியிருந்தது. "இராணுவக் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கில், ஒரு புதிய நிகழ்வு தென்படுகிறது. அந்தப் பிராந்தியத்தில் சேவையாற்றும் இராணுவ அலுவலர்கள், தமக்குத் தெரிந்த பொதுமக்களிடம் புத்திசாலித்தனமாக ஒரு 'மாற்றத்துக்காக' வாக்களிக்குமாறு கூறுகின்றனர். சாதாரண சிப்பாய்கள் மிகவும் நேரடியாகத் தெரிவிக்கின்றனர். "பொன்சேகா மஹாத்தயாவுக்கு" அல்லது 'ஜெனரல் ஐயாவுக்கு' வாக்களியுங்கள் என மக்களுக்கு தமிழில் சொல்கிறார்கள்," இராணுவப் புலனாய்வுத் துறை ஆய்வொன்று "படை உறுப்பினர்களில் 75 முதல் 80 வீதம் வரையானவர்கள் தமது முன்னாள் இராணுவத் தளபதிக்கு தீவிர விசுவாசிகளாக உள்ளனர். இராணுவ உத்தியோகத்தர்களில் 40 வீதமானவர்கள் பொன்சேகாவுடன் சகோதரத்துவ உறவுடையதாக இருக்கின்றனர். இதில் மிகப் பெருந்தொகையானவர்கள் கேர்னல் தரத்திலிருந்து கப்டன்கள் வரை'' என கண்டுள்ளதாக டி.பி.எஸ். ஜெயராஜ் கூறுகிறார். "பொன்சேகாவின் முயற்சிகள் இராணுவத்தில் மிகப்பெரும் தாக்கத்தைக் கொண்டுள்ளது. ஆழமான பிளவுகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன. அங்கு செங்குத்தான மற்றும் கிடையான பிளவுகள் உள்ளன. ஏதாவதொரு வழியில் வெற்றிபெற உறுதிபூண்டுள்ள இராஜபக்ஷ, நாட்டின் தேர்தல் விதிகளை வெளிப்படையாக மீறியுள்ளார். தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக தனது பதவியில் இருந்து விலகிவிடுவதாக ஜனவரி 19 அன்று கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க, அதன் மூலம் தனது கட்டளைகளை அரசாங்கம் புறக்கணிப்பையிட்டு தனது அதிருப்தியையும் சீற்றத்தையும் சுட்டிக்காட்டினார். அரச ஊடகங்களின் தேர்தல் செய்தி வெளியிடும் நடவடிக்கையை திசாநாயக்க மீண்டும் மீண்டும் கண்டனம் செய்தார். ஜனவரி 12 அன்று, அரச மின்னியல் மற்றும் அச்சு ஊடகங்களை கண்காணிக்க தான் நியமித்த கண்காணிப்பாளரை அவர் திருப்பியழைத்துக்கொண்டார். உதாரணமாக, பெயர் குறிப்பிடப்படாத அச்சுறுத்தல்களின் காரணமாக அரச ஊடக செய்தி வெளியிடும் நடவடிக்கையை கட்டுப்படுப்படுத்தும் தனது பணியை அவர் கைவிட்டார். அரசாங்கத்தால் கட்டளையிடப்படாமல், அரச ஊடகங்கள் தேர்தல் ஆணையாளரின் கட்டளைகளை மீறி செயற்படாது என்பது தெளிவு. ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய போது, ஊடகத்தின் மீதான அதன் கட்டுப்பாட்டை இறுக்க முயற்சிக்கின்றது என கருதக்கூடிய பல நடவடிக்கைகளை அராசங்கம் எடுத்தது. சனிக்கிழமை, தேசிய தொலைக்காட்சி வலையமைப்பான ரூபவாஹினியின் அரசாங்க அதிகாரிகள், அதன் ஊழியர்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறையை அறிவித்தனர். தேர்வு செய்யப்பட்ட ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். நேற்றுக் தொலைக்காட்சி நிலையத்துக்கு வந்த இராணுவ அதிகாரிகள், அதன் செயற்பாடுகளை பரிசோதித்தனர். இது, அரசாங்க கட்டளைப்படி தொலைக்காட்சி வசதியின் கட்டுப்பாட்டை இராணுவம் எடுப்பதற்கான தயாரிப்பில் சந்தேகத்துக்குரிய ஊழியர்களை கண்டறியும் நடவடிக்கையாகும். பதிவு செய்யப்பட்ட 950 தேர்தல் வன்முறைச் சம்பவங்களில் பெரும் பகுதியை தூண்டிவிடுபவர்களாக அரசாங்க ஆதரவாளர்களே இருந்துள்ளனர். அடித்தல், கொலை செய்தல், பிரச்சார பிரசுரங்கள் மற்றும் அலுவலகங்களை அழித்தலும் இவற்றில் அடங்கும். பிரச்சாரத்தின் போது கொல்லப்பட்ட ஐந்து பேரில் நால்வர் பொன்சேகா ஆதரவாளர்கள். வாக்காளர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் உள்ள வெளிப்படையான இடைவெளி மற்றும் வடக்கில் இடம்பெயர்வு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு நிலைமையின் கீழ் தேர்தல் சூழ்ச்சிகளும் மோசடிகளுக்கும் வாய்ப்புள்ளது என கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேர்தல் ஆணையாளர் திணைக்களத்தின் படி, ஜனவரி 23ம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படாமல் ஒரு மில்லியன் வாக்காளர் அட்டைகள் இருக்கின்றன. வடக்கு மாவட்டங்களான வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் சுமார் 300,000 வாகாகளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை. வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை அத்தியாவசியமானதாக இல்லாவிட்டாலும், விநியோகிக்கப்படாத அட்டைகளை வாக்குப் பெட்டிகளை நிரப்ப இலகுவாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். சுமார் ஒரு மில்லியன் மக்களுக்கு தேசிய அடையாள அட்டையோ அல்லது வாக்களிப்புக்குத் தகுதியான ஏனைய அடையாள அட்டைகளோ இல்லை. தேர்தல் கண்காணிப்புக் குழுவான, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (PAFFREL) என்ற அமைப்பின் பேச்சாளர், தெரிவித்ததாவது, "நாளின் முடிவின் போது, குறைந்தபட்சம் ஒரு மில்லியன் வாக்காளர்கள் அல்லது அதைவிட அதிகமானவர்களுக்கு தேர்தலுக்கு முன்னதாக தற்காலிக தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் அதிகாரிகளின் முயற்சிகள் கைவிடப்பட்டுவிடும் என இலகுவாக சொல்ல முடியும்." இந்தத் தேர்தல், ஆளும் வட்டாரத்தில் அதிகாரத்துக்கான கசப்பான போராட்டத்துக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீதான ஆழமான தாக்குதலுக்கும் களம் அமைக்கும். |