World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Many German local authorities nearing bankruptcy

பல ஜேர்மன் உள்ளூராட்சி சபைகள் திவாலின் விளிம்பில் உள்ளன

By Elisabeth Zimmermann
21 January 2010

Back to screen version

2010 ஆரம்பத்தில் ஜேர்மனியில் பல உள்ளுராட்சி, பிராந்திய ஆளுனர்கள் உள்ளூராட்சி நிதியங்களின் தற்போதைய பேரழிவு நிலைமை பற்றி கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். சர்வதேச நிதிய-தொழில்துறை நெருக்கடியுடன் சேர்ந்து அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்ட கொள்கைகள் பல நகர, மாவட்டசபை நிர்வாகங்களின் மீது பொருளாதார அழுத்தத்தை தீவிரமாக்கியுள்ளன. 2009ல் அவர்களுடைய கடன்களின் அளவு 5 பில்லியன் யூரோக்கள் என்று உயர்ந்தது. இக்கடன்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 பில்லியன் யூரோக்களுக்கு உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை நினைத்துப் பார்க்க முடியாத குறைப்புக்களும் பொருளாதார நடவடிக்கைகளையும் இதன் விளைவாக ஏற்படும்.

ஜேர்மன் நகராட்சி மன்றக்குழுக்களின்படி, உள்ளூராட்சி நிர்வாகத்தின் வரி வருவாய்கள் 2009ல் 7 பில்லியன் யூரோக்கள் சரிந்தன. உள்ளூராட்சி சபைகளுக்கு முக்கிய வருமான ஆதாரமாக இருந்த வர்த்தக வரிகள் 18 சதவிகிதம் சரிந்தது. இந்த வரிகள் உள்ளூர் வர்த்தக மற்றும் தொழில்நிறுவனங்களால் அந்தந்த சிறு நகரம் அல்லது மாவட்ட அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட்டு வந்தன.

சில உள்ளூர் நிர்வாகளை பொறுத்தவரையில், இந்த வர்த்தக வருமானங்கள் 60ல் இருந்து 80 சதவிகிதம் வரை குறைந்துவிட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக, 2008 வரை முழு உற்பத்தியுடன் இயங்கிவந்த தொழிற்துறைகள் பின்னர் கடந்த ஆண்டு சரிந்த இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. உதாரணமாக கார் மற்றும் அதன் தொடர்புடைய உதிரிப்பாகங்களை விநியோகித்துவந்த தொழிற்துறை, பொறியியல் ஆலைகள் மற்றும் எஃகு, இராசயனத் தொழில்கள் இவ்விதத்தில் பாதிப்பிற்குள்ளாகின.

அதே நேரத்தில் சமூகநலத்திட்ட நிதிகள், வேலையில்லாதவர்களுக்கான வீட்டு செலவின நலன்கள் பெற்றவர்களுடைய எண்ணிக்கை தீவிரமாக பெருகியுள்ளது. இந்த நிதி அளிப்புக்கள் 2009ல் 40 பில்லியன் யூரோக்களை அடைந்தன. நகரசபை நிர்வாகங்களின் கூட்டப்ைபின் இயக்குனரான ஸ்ரெபான் ஆர்டிகுஸ் நகரசபை வரவுசெலவுத் திட்டங்களில் இருந்த வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையேயான இடைவெளி மிகஅதிக எதிர்மறை அளவான(-)11 பில்லியன் யூரோக்களை இந்த ஆண்டு அடையும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

பொருளாதார நெருக்கடியின் பொதுப் பாதிப்போடு, "தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்தும் சட்டம்" என்று கடந்த ஆண்டு இறுதியில் வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU), கிறிஸ்துவ சமூக யூனியன் (CSU), சுதந்திரச் சந்தை சார்புடைய தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) ஆகியவற்றின் கூட்டணியிலான ஜேர்மன் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்த சட்டம் பிரச்சினைகளை அதிகப்படுத்திவிட்டது. இச்சட்டத்தின் வர்த்தகத்தின் மீது வரிக்குறைப்புக்கள் மற்றும் பிற நடவடிக்கைகளால், உள்ளூராட்சி நிர்வாகங்களின் வரி வருமானம் இன்னும் கிட்டத்தட்ட 1.6 பில்லியன் யூரோக்கள் இந்த ஆண்டு குறைந்துவிடும்.

குடும்பங்களுக்கு மிகக்குறைந்த விதத்தில் கொடுக்கப்பட்ட மேலதிக பணம் (மாதத்திற்கு 20 யூரோக்கள்), மழலையர் பள்ளிகள், குழந்தைகள் பாதுகாப்பு மையங்களில் கூடுதல் கட்டணத்திற்கும், அதே போல் பள்ளிநாளின் நேரம் அதிகமாவதால் கரைந்துவிடும். கடந்த ஆண்டு கணக்கிலடங்கா கடன்பட்டிருந்த சிறு நகர, மாவட்ட நகரவைக் குழுக்கள் ஏற்கனவே கடுமையான குறைப்புக்களைச் செயல்படுத்தி பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொண்ட விதத்தில் உள்ளூர் நிர்வாகங்களின் உள்கட்டுமானம், சமூக மற்றும் கலாச்சார வசதிகள், பொதுநலப் பணிகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் முன்னணியில் இருப்பது ஜேர்மனிய தலைநகரமான பேர்லின்தான். "வறுமையின் தலைநகர்" என்று கருதப்பட்டுள்ள நிலையில், இது ஒன்பது ஆண்டுகளாக சமூக ஜனநாயகக் கட்சி (SDP), மற்றும் இடது கட்சி (Left Party-அல்லது அதன் முன்னோடி) ஆகியவற்றின் கூட்டணியால் ஆளப்படுகிறது. எந்த இடத்திலும் இங்கு போல் பொதுச்செலவு மிக அதிக அளவு குறைக்கப்படவும் இல்லை, ஆட்கள், ஊதியங்கள், சமூகப் பணிகளும் மிருகத்தனமான முறையில் குறைக்கப்படவும் இல்லை. வேலையின்மையில் கையெழுத்திடும் மக்கள் அல்லது "ஒரு யூரோ" வேலைகளில் இருப்பவர்கள் (ஜேர்மனிய முறை ஒன்றின்படி வேலைதேடுபவர்கள் மிகக்குறைந்த ஊதியம் கொடுக்கும் வேலையை தாங்கள் பெறும் நிதிஉதவியுடன் மேலதிகமாக கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்) பேர்லினில் உயர்ந்த தரத்தை அடைந்துவிட்டது. பல சமூக, கலாச்சார வசதிகள் மூடப்பட்டுவிட்டன அல்லது அவற்றின் அங்கத்துவ கட்டணத்தை அதிகப்படுத்தி விட்டன அல்லது நுழைவுக் கட்டணங்களை அதிகப்படுத்திவிட்டன.

இதே போன்ற பிரச்சினைகள்தான் இப்பொழுது பல கிழக்கு, மேற்கு ஜேர்மனி சிறு நகரங்களையும் பாதித்துள்ளன. இவை பொருளாதாரச் சரிவு மற்றும் பல ஆண்டுகள் உயர் வேலையின்மை விகிதத்தால் அவதியுறுகின்றன. உதாரணமாக, வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா, எல்லாவற்றிற்கும் மேலாக ரூர் பகுதியில். இங்கும் பல பொது நலன வசதிகள், இளைஞர் விடுதிகள், நீச்சல் குளங்கள், நூலகங்கள், அரங்குகள் மற்றும் பிற கலாச்சார வசதிகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.

Süddeutsche Zeigung ஏட்டின் சமீபத்திய தகவல்படி, பல மேற்கு ஜேர்மனி சிறுநகர, நகரசபைகள் குறுகிய கால கடன்கள் வாங்கியதின் மூலம்தான் தப்பிப் பிழைத்துள்ளன. ரைன் நதிக்கரையில் டுஸ்ஸுல்டோர்வ் நகரத்திற்கும் கொலோன் நகரத்திற்கும் இடையிலுள்ள சர்வதேச இரசாயன நிறுவனம் Bayer AG தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள லிவர்குஸன் நகரமானது இந்த ஆண்டு கடனில் மூள்கியுள்ளது. தற்போதைய விகிதத்தில் நகரத்தில் கடன் சுமை 2015ல் மொத்த உள்ளூர் நகரசபை சொத்துக்களின் மதிப்பையும் விட அதிகம் ஆகிவிடும்.

ரூர் பகுதியில் பிற சிறுநகரங்களை போலவே, லிவர்குஸன் திவாலான நிறுவனம் நீதிமன்றப் பொறுப்பில் நிர்வகிக்கப்படுவது போல் நிர்வகிக்கப்படுகிறது. இதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும், புதிய பாக்ஸ் இயந்திரம் உட்பட முதலில் மாவட்ட நகரவை நிர்வாகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஒபர்ஹுவுஸன், எஸ்ஸன், வூப்பெற்றால் போன்ற நகரசபைகளும் நீண்டகாலமாக இத்தகைய சூழலில்தான் இயங்குகின்றன.

ஜேர்மனிய உள்ளூராட்சி நிர்வாக சங்கத்தின் தலைவர் மற்றும் பவுட்ஸன் நகரசபை தலைவரான கிறிஸ்டியான் ஸ்ராம் (CDU)ஐ மேற்கோளிட்டு Süddeutsche Zeitung, "ஐரோப்பிய கலாச்சார தலைநகர் என்று குறிப்பிடப்பட்டுள்ள எஸ்ஸன் நகரில் ஆரம்ப பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன; ரெம்ஸ்ஸெட் நகரில் தெருவிளக்குகள் இரவில் அணைக்கப்படுகின்றன, பிற சிறு நகரங்களிலும் மாவட்டங்களிலும் பொது நீச்சல் குளங்களில் நீர் வெப்ப நிலைகள் குறைக்கப்பட்டவிட்டன. இத்தகைய விந்தையான நடவடிக்கைகளுக்கு காரணம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். வினா எழுப்புவது நியாயமே. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய நடவடிக்கைகள் கற்பனை செய்தும் பார்க்க முடியாதவை."

மேற்கு ஜேர்மனியில் குறிப்பாக குறைவாக இருக்கும் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு அளிக்கும் புதிய திட்டங்கள், சமூகப் பணிகள் உள்ளூராட்சி நிர்வாகங்களின் வரவுசெலவுத் திட்டங்களில் அழிவை ஏற்படுத்தியுள்ளன. ஜேர்மனிய பாராளுமன்றம் சமீபத்தில் 2013க்குள் எல்லா பெற்றோர்களும் அத்தகைய குழந்தைப் பாதுகாப்பு மையத்திற்கு தமது குழந்தைகளை அனுப்பும் உரிமை பெற்றவர்கள் என்று கூறியிருந்தது. ஆனால் இதற்கான நிதிய உத்தரவாதம் உள்ளூர் அதிகாரங்களுக்கு விடப்பட்டிருந்தது. அவற்றின் வருமான ஆதாரங்களோ குறைக்கப்பட்டுவிட்டன. இக்காரணத்தை ஒட்டி ஜேர்மனிய சிறுநகரங்கள், நகரசபைகளிள் சங்கத்தின் தலைமை நிர்வாகி ஹெர்ட் லான்ட்பேர்க் இந்த உறுதிமொழி செயல்படுத்தப்பட முடியாதது" என்று கூறிவிட்டார்.

Forsa ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் நடத்திய அளவை ஒன்று 66 சதவிகித பெற்றோர்கள் குழந்தை பாதுகாப்பு மையத்தை விரும்புகின்றனர், பாராளுமன்றம் சட்டம் இயற்றியபோது 35 சதவிகித பெற்றோர்கள்தான் விரும்பியிருந்தனர் என்று கூறுகிறது. இதன் பொருள்1.3 மில்லியன் குழந்தை பாதுகாப்பு மையங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும். ஆரம்பத்தில் 750,000 மையங்கள் போதும் என்று எதிர்பார்க்கப்பட்டது; இதற்கு இன்னும் கூடுதலாக 150,000 மழலையர் பாதுகாப்பு தொழிலாளர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.

வர்த்தக நிறுவனங்களின் மீதான வரிகள் குறைந்து உள்ளூராட்சிகளுக்கு வருமானம் குறைந்த நிலையில், அவற்றின் வருமான வரிகள் வருவாயும் மேலும் குறைந்துள்ளன. இதற்குக் காரணம் வேலையின்மை விகிதத்தில் ஏற்றம், குறைந்த நேர பணி நிலைமைகள் மற்றும் ஊதியத் தரங்களில் குறைப்பு ஆகியவை ஆகும்.

உள்ளூர் நிர்வாகங்கள் மீது தேசிய, மாகாண அரசாங்கங்கள் ஏராளமான புதிய சட்டங்கள் மற்றும் விதிகளை கடந்த சில ஆண்டுகளில் சுமத்தியுள்ளன. உதாரணமாக ஜேர்மனிய பாராளுமன்றம் வேலையின்மை நலன்கள் அல்லது சமூகப் பாதுகாப்பின் கீழ் வாழும் மக்களுடைய வீடுகள், வெப்பமூட்டும் செலவுகளுக்கான நிதியுதவிகளைக் குறைத்துவிட்டது. ஆனால் இச்செலவுகளோ இப்பொழுதான் உயர்ந்திருக்கின்றன.

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டால், டோர்ட்முண்ட் நகரில் வெப்பப்படுத்துதல், வீடுகள் செலவினங்கள் அரசாங்க "நிதியில்" செலவழிக்கப்படாத நிலையில், அத்தகைய செலவுகள் கடந்த இரு ஆண்டுகளில் 9.5 மில்லியன் யூரோக்கள் அதிகமாகிவிட்டன. இவ்விதத்தில் உள்ளூர் நகரசபையின் கடன் தவிர்க்க முடியாததாகின்றது. வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா நகரசபைகள் ஆணையம் கொடுத்துள்ள கணிப்பு ஒன்றின்படி, தணிக்கைக்கு உட்படும் வரவு-செலவுத் திட்டத்தை அவற்றிற்கு உரிய வரம்பிற்குள் செயல்பட வேண்டும். எனவே அவை உரிய மாவட்ட அதிகாரத்தின் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

நிதிய நெருக்கடியினால் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்டுள்ள வூப்பெற்றாலில் ஐந்து பொது நீச்சல் குளங்கள் இந்த ஆண்டு மூடப்பட இருக்கின்றன. இதைத்தவிர நகரத்தின் மேயரான பீற்றர் யுங் (CDU) நகர நாடக அரங்கம் திட்டமிட்டுப் புதுப்பிக்கப்படுவதையும் தற்காலிகமாக நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இதைத்தவிர அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அரங்குகளுக்கான உதவித் தொகைகளில் 2 மில்லியன் யூரோக்கள் குறைப்பு இருக்கும். இது அரங்கு மூடப்படுவதற்குக் கூட வகை செய்யலாம். அதுவோ Tanzstheater Wuppertal Pina Bausch உடனான தொடர்பினால் உலகப் புகழ் பெற்றது ஆகும்.

டுஸ்ஸுல்டோர்வ் நகர மாவட்டத் தலைவர் யூர்கன் பூஸோவ் (SDP) வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல சிறு நகர ஆட்சிக்குப் பொறுப்பான பீற்றர் யுங்கின் திட்டங்களை புகழ்ந்து நிதி நெருக்கடியில் உள்ள பிற சிறு நகரங்களும் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று உதாரணமாகக் காட்டியுள்ளார். Westdeutschen Allgemeinen Zeitung பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் அவர், "வூப்பெற்றாலில் உள்ளவர்கள் தங்கள் அரசாங்க நாடக அரங்கை மூடிய தைரியம் உண்மையில் குறிப்பிடத்தக்கது" என்று அறிவித்தார். அதே பேட்டியில் பல நகரங்களும் தங்கள் நிர்வாகத்தை இணைத்தால் ஊழியர்களுக்கு வழங்கும் செலவுகள் குறையும் என அவர் அழைப்பு விடுத்தார்.

ஜேர்மனிய அரசாங்கத்திடம் இருந்து நூற்றுக்கணக்கான பில்லியன் கணக்கில் நிதி வாங்கிய வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களுக்கு முற்றிலும் மாறாக, உள்ளூராட்சி மன்றங்கள் அத்தகைய உதவியை எதிர்பார்க்க முடியாது. மக்களின் சமூக, கலாச்சார தேவைகள் என்று வரும்போது பண உதவி ஒதுக்கப்படுவதில்லை. CDU-CSU-FDP கூட்டணி அரசாங்கம் இப்பொழுது நெருக்கடியால் உருவாகிய கடன் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும் ஒரு பொறிமுறையை "கடன் மட்டுப்படுத்தல் சட்டம்" என்பதனால் உருவாக்கி, அதை அரசியலமைப்பு சட்டத்திலும் உறுதிப்படுத்தியுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved