World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
The lessons of the Massachusetts election மாசாச்சுசெட்ஸ் தேர்தலின் படிப்பினைகள் Jerry White செவ்வாயன்று எட்வார்ட் கென்னடியின் இறப்பினால் ஏற்பட்ட செனட் காலியிடத்தை நிரப்புவதற்கு நடந்த மாசாச்சுசெட்ஸ் தேர்தலில் குடியரசுக்கட்சி பெற்ற வெற்றி ஒபாமா நிர்வாகத்திற்கும் ஜனநாயகக் கட்சிக்கும் பலத்த அடி என்பதோடு, அமெரிக்காவில் பெருகிவரும் பரந்த சமூக அதிருப்தி, சீற்றம் ஆகியவற்றின் வெளிப்பாடும் ஆகும். தவிர்க்க முடியாமல் பெரு வணிகத்தின் இரு கட்சிகளின் ஆதிக்கத்தில் உள்ள அரசியல் அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் ஒபாமாவின் வலதுசாரிக் கொள்கைகள் மீதான மக்களின் எதிர்ப்பால் இலாபமடைந்தவர்கள் குடியரசுக் கட்சியினர்தான். அதுவும் மிகத் தீவிர வலதுசக்திகளுடன் தொடர்புடைய ஒரு வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். இங்குதான் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை உள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகள், வெற்றி பெற்ற செனட் உறுப்பினர் ஸ்கொட் பிறைவுண் இனை பெருகும் வேலையின்மைக்கும் மற்றும் ஒபாமாவின் பிற்போக்குத்தன சுகாதாரப் பாதுகாப்பு "சீர்திருத்தத்திற்கும்" எதிரான பரந்த மக்கள் சீற்றத்தினை தனக்கு சாதகமாக அழைப்புவிட அனுமதித்துள்ளது. ஒபாமாவின் ''சீர்திருத்தம்'' மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கும் மத்தியதர வகுப்பு மக்களுக்கு நலன்களையும் சேவைகளையும் குறைப்பதனூடாக பெருநிறுவனங்களிற்கும் அரசாங்கத்திற்குமான சுகாதார செலவினை குறைக்கின்றது. அதிருப்தியின் வெளிப்பாடு மட்டும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள், ஜனநாயக உரிமைகள்மீதான தாக்குதலுக்கு விடையாகிவிடாது. மாசச்சுசெட்ஸ் தேர்தலின் அரசியல் படிப்பினைகளை பெற்றுக்கொள்வது முக்கியமாகும். ஜனநாயகக் கட்சியினர் இன்னும் வலதிற்கு நகர்ந்துள்ளது இதை எதிர்கொள்ளும் விதத்தில் உள்ளது என்பது கணிக்கத்தக்கதுதான். புதனன்று ABC News க்கு கொடுத்த பேட்டி ஒன்றில், ஜனாதிபதி ஒபாமா காப்பீடு அற்றவர்களுக்கு சுகாதாரக் பாதுகாப்பை கைவிடத் தான் தயாராக இருப்பதாகவும், தன்னுடைய சுகாதாரப் பாதுகாப்பு முறையை செலவினக் குறைப்பிற்காக சீரமைக்க குடியரசுக் கட்சியினருடன் உடன்பாடு கொள்ளத் தயார் என்றும் கூறினார். மக்கள் காப்பீட்டை தனியார் சந்தையில் வாங்கும் ஆரம்பத்திட்டத்திற்கான சட்டபூர்வ தேவையைக் கைவிடுவததன் மூலம் கட்டணங்கள் இன்னும் அதிகரிக்கப்படும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் தமது பிரதிபலிப்பை காட்டியுள்ளன. முக்கிய ஜனநாயகக் கட்சியினர் வங்கிகள்மீது பெயரளவு கட்டுப்பாட்டை கூட கைவிடத் தயார் என்றும் பெருநிறுவன மாசுபடுத்துவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்மீதும் அவ்வாறே நடந்து கொள்ளத் தயார் என்றும் அடையாளம் காட்டியுள்ளனர். ஒபாமா ஆலோசகர்களிடம் இருந்து வெளிவரும் தொழில்கள் மீது கவனம் காட்டுதல் பற்றிய "உறுதியற்ற பேச்சுக்கள்", முன்னோடியில்லாத வகையில் அடிப்படை நலன்கள் திட்டமான மருத்துவக்காப்பு, சமூகப் பாதுகாப்பு இவற்றில் குறைப்புக்கள், பெருவணிகம், செல்வந்தர்களுக்கு இன்னும் வரிச் சலுகை கொடுத்தல் பற்றிய இரகசிய வார்த்தை பிரயோகங்கள்தான். செவ்வாயன்று, ஒபாமாவும் காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியினரும், மாசாச்சுசெட்ஸ் தேர்தல் தினத்தன்று, இந்த மற்றும் இன்னும் பிற சமூகத் திட்டங்களில் பெரும் வெட்டுக்களை முன்மொழியும் இருகட்சி குழுவை நிறுவ உடன்பட்டனர். அடுத்த வாரம் நாட்டிற்கு ஆற்றும் உரையில் ஒபாமா நிதியக் கட்டுப்பாடும், பெருநிறுவன வரிக் குறைப்புக்களும் வேலை தோற்றுவித்தலுக்கு முக்கிய திறவுகோல்கள் என்று வாதிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமாவின் ஆலோசகர்கள் தாங்கள் மீண்டும் அமெரிக்க மக்களை இத்தகைய பிற்போக்குத்தன திட்டத்தை மக்களை திருப்திப்படுத்தும் பேச்சுடன் இணைக்க முடியும் என்று நம்புகின்றனர். அவர்கள் நினைப்பது தவறு. ஜனநாயக கட்சிக்கு வாக்களிப்பவர்கள் மாறியதால் ஏற்பட்ட மாசாச்சுசெட்ஸ் வாக்களிப்பு "மாற்றத்தின்" வேட்பாளருக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான மக்கள் அவருடைய பிரச்சாரம் ஒரு மோசடி என்பதை உணர்ந்துவிட்டனர் என்பதைக் காட்டுகிறது. உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வு முற்றிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒபாமா தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்குள் WSWS எழுதியது: "ஒபாமாவின் வெற்றி பற்றி எத்தகைய ஆரம்ப களிப்புகள் இருந்தாலும், ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி வெகுவிரைவிலேயே பல மில்லியன் அமெரிக்க மக்கள் வாழ்வில் உணரப்படுவதுடன், புதிய நிர்வாகத்தின் அடித்தளத்தில் இருக்கும் வர்க்க நலன்களை தெளிவுபடுத்தவும் ஆரம்பிக்கும். இது அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்திற்கான புதிய சகாப்தத்திற்கு அரங்கு அமைக்கும்." மாசாச்சுசெட்ஸ் சங்கடம் ஜனநாயகக் கட்சிமீது பேரழிவு தரக்கூடிய கருத்து என்பது மட்டும் இல்லாமல் ஒபாமா மீதும்தான். பல தசாப்தங்கள் அமெரிக்கத் தாராளவாதம் அடையாள அரசியலைத் தழுவியதின் உருவகம்தான் அவர். அதுவோ சமூக சீர்திருத்தத்தின் எந்த திட்டதையும் நிராகரிப்பதுடன் தொடர்வதுடன், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பெருகிய முறையில் விரோதப் போக்கை கொண்டது. அரசியல் அடையாளங்கள், வாழ்க்கை முறை இவற்றின் மூலம், மத்தியதர வர்க்கத்தின் சலுகை பெற்ற தட்டுக்களுக்கு அழைப்புவிடும் விதத்தில், ஜனநாயகக் கட்சி அமெரிக்க நிதிய பிரபுத்துவத்துடன் தன்னை நெருக்கமாகப் பிணைத்துள்ளது. தேர்தல் முடிந்து இவ்வளவு விரைவில் குடியரசுக் கட்சியுடன் சமரசத்திற்கு ஒபாமா நகர்ந்ததே இரு கட்சிகளுக்கும் இடைய கடுமையான அரசியல் இடைப்பூசல்கள் இருந்தபோதிலும் கூட, ஆளும் வர்க்கத்தின் அடிப்படை நலன்களை நிர்ணயிக்கும் அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளிலும், அவற்றின் வேறுபாடுகள் மிகவும் கவனத்தில் கொள்ளமுடியாதவை என்பது நிரூபணமாகிறது. இதிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய அரசியல் படிப்பினைகள் என்ன? தொழிலாள வர்க்கத்தின் நலன்களும் விருப்புகளும் நிதிய உயரடுக்கின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள இரு கட்சி முறையின் வடிவமைப்பிற்குள் வெளிப்பாட்டைக் காண முடியாது. தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சியையும் இரு-கட்சி முறையையும் நிராகரிக்க வேண்டும், ஆளும் வர்க்கத்திற்கு தன் தேவைகளையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் ஒரு வெகுஜன சுயாதீன இயக்கத்தை கட்டமைக்க வேண்டும். வேலையின்மை, அடக்குமுறை, போர் ஆகியவற்றிற்கு ஒரே மாற்றீடு ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்கு போராடுவதுதான். அதுதான் நிதியப் பிரபுத்துவத்தின் பிடியை முறித்து சமூகத்தை ஜனநாயக, சமத்துவ அஸ்திவாரங்களில் மறு சீரமைக்க முடியும். இதுதான் சோசலிசச் சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் ஆகும் |