World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan election: General Fonseka's anti-working class agenda இலங்கை தேர்தல்: ஜெனரல் பொன்சேகாவின் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான நிகழ்ச்சித் திட்டம் By Wije Dias சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக பிரவேசித்துள்ளமை நாட்டின் ஆழமடைந்துவரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் மத்தியில் அரசியல் ஸ்தாபனத்தின் கணிசமான பகுதியினர் பொலிஸ்-அரச ஆட்சியை நோக்கி திரும்புவதை சுட்டிக்காட்டுவதாக மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையானது வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியும் (யூ.என்.பி.) சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) "ஒரு குறைந்தபட்ச பொது வேலைத்திட்டமாக" ஏற்றுக்கொண்டுள்ள பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரு எதிர்க் கட்சிகளும் இந்த முன்னாள் இராணுவத் தளபதிக்கு முண்டு கொடுப்பதோடு அவரை தற்போதைய ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவுக்கு எதிரான ஒரு ஜனநாயக மாற்றீடாக முன்னிலைப்படுத்துகின்றன. உலகம் பூராவுமுள்ள ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று, பொன்சேகாவும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பிரச்சாரத்தை பின்பற்றுகிறார். ஒபாமாவின் குறிப்புக்களில் இருந்து ஒர் வரியை எடுத்துக்கொண்டுள்ள அவர், தனது விஞ்ஞாபனத்திற்கு "நம்பிக்கையான மாற்றம்" என தலைப்பிட்டுள்ளார். "நான் வேறுபட்டவன். நான் மாறியுள்ளேன். நான் நம்பக்கூடிய மாற்றத்தை கொண்டுவருவேன்," என அவர் பிரகடனம் செய்கின்றார். ஒபாமாவைப் போலவே, பொன்சேகாவும் தனது உண்மையான நிகழ்ச்சி நிரலை மறைத்து வைத்துக்கொண்டு, தற்போதைய ஆட்சி மீதான பரந்த எதிர்ப்புக்கு அழைப்பு விடுக்கின்றார். உண்மையில் இந்த இரு வேட்பாளர்களுக்கிடையில் எந்தவொரு அடிப்படை வேறுபாடும் கிடையாது. இராஜபக்ஷ 2006 ஜூலையில் தீவை மீண்டும் யுத்தத்திற்குள் மூழ்கடித்ததுடன், நாட்டின் உயர்மட்ட ஜெனரலாக இருந்த பொன்சேகா பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை ஈவிரக்கமின்றி முன்னெடுத்தார். இந்த இரு நபர்களுமே, இராணுவத்தின் கண்மூடித்தமான குண்டுத் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கும் இலட்சக் கணக்கானவர்கள் வீடு வாசல்களை இழந்ததோடு கடந்த மே மாதம் புலிகள் தோல்விகண்ட பின் 280,000 தமிழ் பொது மக்களை அடைத்து வைத்திருந்தமைக்கும் பொறுப்பாளிகளாவர். பொன்சேகா, யுத்தத்தை முன்னெடுத்த, ஜனநாயக உரிமைகளை நசுக்கிய மற்றும் யுத்தத்தின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்திய இராஜபக்ஷவைச் சூழ இருந்த அரசியல்-இராணுவ குழுவின் பிரதான பங்காளியாவார். இப்போது அவர் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கண்ட எதிரியாக தன்னைக் காட்டிக்கொள்வதோடு, தானும் தனது இராணுவமும் மிகக் குறைந்தபட்சத்திலேனும் உடந்தையாய் இருந்த "காணாமல் ஆக்கும் நடவடிக்கைகள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளை மேற்கொள்ளும் கலாச்சாரத்தையும்" கூட அவர் விமர்சிக்கின்றார். ஜனாதிபதி, இராணுவ உயர்மட்டத்தினரை ஓரங்கட்டிவிட்டு யுத்த வெற்றிக்கு தானே உரிமைகொண்டாடியதை அடுத்து பொன்சேகா இராஜபக்ஷவிடமிருந்து விலகினார். பொன்சேகாவின் "நம்பிக்கையான மாற்றம்" என்ற செய்தி இரு வேறுபட்ட பார்வையாளர்களுக்காக விடுக்கப்பட்டதாகும். முதலாவதாக அவர் இராஜபக்ஷ ஆட்சி மீது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே எழுந்துள்ள பாரிய எதிர்ப்பை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றார். அவர் ஒரு நேர்மையான மனிதராகவும் ஜனநாயகத்தை, அமைதியை மற்றும் சுபீட்சத்தை கொண்டுவரப் பிறந்தவராகவும் பொய்யாகக் காட்டிக்கொள்கின்றார். இத்தகைய வாய்வீச்சு மிகவும் அவசியமாகியிருப்பது ஏனெனில், இந்த அரசாங்கம் மட்டுமல்ல முழு அரசியல் ஒழுங்குமே தொழிலாள வர்க்கத்தின் கண்முன்னால் அவமதிப்புக்குள்ளாகி இருப்பதனாலேயே ஆகும். பரந்த வெகுஜன உணர்வுகளுக்கு அழைப்பு விடுத்த பொன்சேகா பின்வருமாறு புலம்புகிறார்: "யுத்தத்தின் முடிவில் மக்கள் எதிர்பார்த்த சமாதானம் நடைமுறைக்கு வரவில்லை. அவர்களது எதிர்பார்ப்புகள் தூக்கியெறியப்பட்டுள்ளன. பொருளாதாரம் பொறிந்துபோயுள்ளது." ஒரு நாளுக்கு மூன்று வேளை சாப்பாட்டுக்கு செலவிட முடியாமல் பலர் உள்ளனர் என்ற உண்மையையிட்டும் கூட அவர் கொஞ்சம் முதலைக் கண்ணீர் வடிக்கின்றார். தான் ஒரு அரசியல்வாதியாகவோ மோசடிக் காலாச்சாரத்தின் பங்குதாரியாகவோ இல்லை என அவர் வலியுறுத்துகிறார். அதே சமயம், ஆளும் வர்க்கத்துக்குத் தேவையான பலம்வாய்ந்த மனிதனாகவும் பொன்சேகா தன்னைக் காட்டிக்கொள்கின்றார். "சட்டமும் ஒழுங்கும் தகர்ந்து போயுள்ளதாக" அவர் முறைப்பாடு செய்கின்றார். "இராணுவத்தில் 40 ஆண்டு அனுபவம் கொண்ட நான் ஒரு அரசியல்வாதியல்ல. தீர்மானங்களை எடுப்பதற்கு பயப்படாத தலைவன் நான். எனது வாக்குறுகளில் நான் தீர்மானங்களை வெளியிட்டுள்ளேன்," என அவர் பறைசாற்றுகின்றார். "நீதியான ஒழுக்கமான சமுதாயத்தை" ஏற்படுத்த அவர் சபதமெடுத்துள்ளார். இவை அச்சுறுத்தும் கருத்துக்களாகும். கடந்த ஆண்டுகளை திரும்பிப் பார்க்கும் போது, ஒவ்வொரு தீர்க்கமான நெருக்கடி காலத்தின் போதும், கொழும்பு ஸ்தாபனம் வழமையாக தலைமைத்துவ பற்றாக்குறையால் தடுமாறியுள்ளதோடு பாராளுமன்ற அரசியலின் இழிந்த பண்பை திட்டித் தீர்த்துள்ளது. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஆசிரியர் தலையங்கம் எழுதுபவர்கள், பாராளுமன்ற விதிமுறைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்கிக்கொண்டு சவாரி செய்யும், ஆளும் கும்பல் வேண்டுகோள் விடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு வெள்ளைக் குதிரையில் பயணிக்கும் வீரணுக்கு அழைப்புவிடுத்து வந்துள்ளனர். இப்போது, தீவின் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் மோசமடைந்து வரும் நிலையில், ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவினர், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமில்லாத ஆனால் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக அரச இயந்திரத்தை இலாவகமாக கையாளக்கூடிய ஒரு ஜெனரலான பொன்சேகாவின் பக்கம் திரும்பியுள்ளன. கடந்த புதன் கிழமை அவர் வர்த்தகத் தலைவர்களுக்கு கூறியது போல், "இந்தச் சூழ்நிலையில் ஒழுக்கமான, அர்ப்பணிப்பு கொண்ட, நேர்மையான, வெளிப்படையான மற்றும் தீர்மானங்களை எடுப்பதில் பயப்படாத ஒரு தலைவர் இலங்கைக்குத் தேவை." அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில், நாட்டை மிகவும் "வர்த்தகத்துக்கு நட்புடையதாக" ஆக்குவதாக பொன்சேகா வாக்குறுதியளிக்கின்றார். வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கும், வரி செலுத்துவதற்கும், கட்டுமான அனுமதிகளைப் பெறுவதற்கும், சொத்துக்களை பதிவு செய்வதற்கும், கடன் பெறுவதற்கும் மற்றும் கடல் கடந்த வர்த்தகத்தை மேற்கொள்வதற்குமான வழிமுறைகளை நவீனமாக்குவதோடு இலகுவாக்குவதாகவும் பொன்சேகா வாக்குறுதியளிக்கின்றார். "முதலீட்டாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு உதவுவதற்காக, பழைய காலத்தில் முதலீட்டுச் சபை வழக்கத்தில் கொண்டிருந்த நிலைப்பாடான சகல சேவைகளையும் ஒரிடத்திலிருந்தே பெறும்" முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதாகவும் அவர் வாக்குறுதியளிக்கின்றார். எவ்வாறெனினும், பொன்சேகாவின் முழு பொருளாதார நிகழ்ச்சித் திட்டமும் மோசடியை அடிப்படையாகக் கொண்டது. யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. போன்று, அவரது விஞ்ஞாபனமும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் "எல்லையற்ற மோசடி, இலஞ்சம், உறவினருக்கு தகாத முறையில் சலுகை அளித்தல் மற்றும் இறுமாப்பு கொண்ட ஊதாரித்தனத்தால்" மட்டுமே நாட்டில் பொருளாதார துன்பங்கள் ஏற்பட்டுள்ளதாக மீண்டும் மீண்டும் பிரகடனம் செய்கின்றது. அதை இல்லாமல் செய்தால் சகலரதும் வாழ்க்கைத் தரத்தையும் முன்னேற்ற போதுமானளவு பணம் இருக்கும் என பொன்சேகா கூறிக்கொள்கின்றார். இதை நம்பும் எவரும் ஏமாளியாவார். சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் கூர்மையாக சீரழிந்து வருவதற்கான மூல காரணம் இந்த முதலாளித்துவ முறையும், அது இலங்கையில் ஏற்படுத்திய 26 ஆண்டுகால அழிவுகரமான உள்நாட்டு யுத்தமுமேயாகும். தேர்தலின் பின்னர் நிகழ்ச்சி நிரலில் இருப்பது, சமாதானமும் சுபீட்சமும் அல்ல. மாறாக, வாழ்க்கைத் தரத்தின் மீதான கொடூரமான புதிய தாக்குதலாகும். இராஜபக்ஷ தனது யுத்தத்துக்கு செலவிடுவதற்காக தீவை முழுமையாக அடகு வைத்துள்ளதோடு அந்நிய செலவானி நெருக்கடியை தவிர்க்க சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.6 பில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றார். அடுத்த ஜனாதிபதி பொன்சேகாவாக இருந்தாலும் சரி இராஜபக்ஷவாக இருந்தாலும் சரி, சர்வதேச நாணய நிதியத்தின் வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக அமுல்படுத்தத் தொடங்குவார். பொன்சேகா பல ஆண்டுகளாக இராணுவ அதிகாரியாக இருந்திருக்கலாம், ஆனால் அவர் கொழும்பு அரசியல்வாதிகளின் பாத்திரத்துக்கு உடனடியாக அடிபணிந்தார். இராஜபக்ஷவைப் போல், ஜெனரலும் அனைவருக்கும் வெற்று வாக்குறுதிகளை வழங்குவதில் நிபுணராக இருக்கின்றார்: சகல குடும்பங்களுக்கும் நிதி பாதுகாப்பு, இளைஞர்களுக்கு தொழில், தொழிலாளர்களுக்கு உயர்ந்த சம்பளம், வறியவர்களுக்கு மேலும் நலன்புரி சேவைகள், விவசாய உற்பத்திகளுக்கு உயர்ந்த விலையும் விவசாயிகளுக்கு மானியங்களும், என அந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. பொன்சேகாவுக்கே தெரிந்த விதத்தில், இந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாது. தனது இராணுவம் கண்மூடித்தனமாக குண்டு வீசி, சித்திரவதை செய்து சிறைவைத்த தமிழ் சிறுபான்மையினருடன் "தேசிய ஒருமைப்பாட்டை" ஏற்படுத்துவதாகக் கூட ஜெனரல் வாக்குறுதியளிக்கின்றார். கடந்த 60 ஆண்டுகளாக, கொழும்பு அரசியல் ஸ்தாபனம் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த தனது முக்கிய ஆயுதமாக தமிழர்-விரோத இனவாதத்திலேயே தங்கியிருந்து வந்துள்ளது. உத்தியோகபூர்வ பாரபட்சங்கள் 1983ல் யுத்தத்துக்கு வழிவகுத்தன. அப்படி ஒரு "ஒருமைப்பாடு" ஏற்பட்டால், தொடர்ந்தும் அவர்களது ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படவுள்ள தமிழ் மக்களை சாந்தப்படுத்துவதற்காக தமிழ் முதலாளித்துவ கும்பலின் பகுதிகள் அதற்கு சம்பந்தப்படுத்திக்கொள்ளப்படும். பொன்சேகா காப்பாற்றும் ஒரே வாக்குறுதி "ஆயுதப் படைகளை நவீனமயப்படுத்துவதே" ஆகும். அவர் ஜனாதிபதி தேர்தலில் வென்றால், அவர் அரசியல் எதிர்ப்புக்களை நசுக்க, பொலிசுடன் சேர்த்து தனது ஆதரவுத் தளமாகவும் உபகரணமாகவும் இராணுவத்தில் தங்கியிருக்கத் தள்ளப்படுவார். அது எமக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தைக் கொண்டுவரும்: பொன்சேகா நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றுவதாகவும், பாராளுமன்றத்தை பலப்படுத்துவதாகவும் மற்றும் ஜனநாயக உரிமைகளை மீள ஸ்தாபிப்பதாகவும் வாக்குறுதியளிக்கின்றார். தனது முதல் நடவடிக்கையாக, ஒரு புதிய அனைத்துக் கட்சி காபந்து அமைச்சரவையை அமைப்பதாகவும், அவசரகாலச் சட்டங்களை (அகற்றுவதற்கன்றி) திருத்துவதாகவும், பாராளுமன்றத்தை கலைத்து, புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜெனரல் வாக்குறுதியளிக்கின்றார். பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், அவர் ஒரு புதிய சர்வாதிகாரியாக இருப்பாரே அன்றி ஒரு ஜனநாயகவாதியாக இருக்கமாட்டார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றுவதற்கு மாறாக, அவர் முன்னைய எந்தவொரு ஜனாதிபதியையும் விட அதன் நீண்ட விளைவுகளைத் தரக்கூடிய அதிகாரங்களை மேலும் உயர்ந்தளவு விரிவுபடுத்துவார். தனக்கென ஒரு அதிகாரத் தளம் இல்லாத அவர், கட்டளைகளை பிறப்பிக்கவும் அமைச்சர்களையும் அரசாங்கங்களையும் பதவி விலக்கவும் மற்றும் நாட்டின் தொடரும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் அரச இயந்திரத்தை அணிதிரட்டவும் தனக்குள்ள இயலுமையில் அவர் தங்கியிருப்பார். இறுதியாக ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். பொன்சேகா இராஜதந்திரத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை சமிக்ஞை செய்கின்றார். வர்த்தகத் தலைவர்களுடன் பேசிய அவர், இராஜபக்ஷ "சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தை" தகர்த்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். அவர் "ஜீ.எஸ்.பி. பிளஸ் விவகாரத்தை அசட்டுத் துணிச்சலுடன் தவறாகக் கையாள்வதாக" தனது எதிரியை அவர் விமர்சிக்கின்றார். ஜீ.எஸ்.பி. என்பது ஆடை உற்பத்தி உட்பட இலங்கை ஏற்றுமதிகளுக்கு கிடைத்த வரிச் சலுகையாகும். இதை ஐரோப்பா மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை மேற்கோள் காட்டி இடை நிறுத்தியது. பொன்சேகா "சர்வதேச சமூகத்தை" பற்றி பேசும் போது, அவர் இராஜதந்திர ஆதரவு, இராணுவ வியாபாரம் மற்றும் நிதி உதவிக்காக இராஜபக்ஷ நாடியிருந்த சீனாவை விட, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தையே அர்த்தப்படுத்தினார். கொழும்பில் அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ளும் வழிமுறையாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இராஜபக்ஷவின் யுத்தக் குற்றங்கள் மற்றும் ஜனநாயக உரிமை மீறல்கள் தொடர்பாக மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களை முன்வைத்தன. இலங்கைக்கு எதிரான "சர்வதேச சதி" என கண்டனம் செய்ததன் மூலம் பதிலிறுத்த இராஜபக்ஷ, மேலும் சீனாவை நம்பியிருந்தார். பொன்சேகா, தான் மிகவும் உறுதியாக இலங்கையை அமெரிக்க முகாமுக்கு ஆதரவளிக்க தள்ளிச்செல்வதாக எல்லாவற்றுக்கும் மேலாக வாஷிங்டனுக்கு சுட்டிக் காட்டுகிறார். பொன்சேகாவோ அல்லது இராஜபக்ஷவோ தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அடுத்த அரசாங்கம் இராஜபக்ஷ விவரித்த "பொருளாதார யுத்தத்தை" துரிதமாக முன்னெடுக்கும், அது உழைக்கும் மக்களை இலக்காகக் கொண்டிருக்கும் என சோசலிச சமத்துவக் கட்சி மீண்டும் எச்சரிக்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர் விஜே டயஸும் இந்தத் தேர்தலில் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் கல்வியூட்டவும், சோசலிச கொள்கையை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்கான போராட்டத்தில் அவர்களது அடிப்படை உரிமைகளை காக்க அவர்களை சுயாதீனமாக அணிதிரட்டத் தொடங்கவும் போராடுகின்றனர். |