World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan union endorses SEP presidential candidate

இலங்கைத் தொழிற்சங்கம் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தருகிறது

By our correspondent
23 January 2010

Back to screen version

மத்திய வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் (CEBU) நிர்வாகக்குழு ஜனவரி 15ம் தேதி சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) வேட்பாளர் விஜே டயஸிற்கு இலங்கையில் நடக்க இருக்கும் 26ம் தேதி ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு கொடுத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அரசியல் முன்னோக்கிற்கு நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றின் தீர்மானம் ஆதரவு கொடுத்துள்ளமை தீவின் பிற தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு வழிகாட்டியை வழங்குகிறது. இப்பொழுது உள்ள மகிந்த இராஜபக்ஷ அல்லது முன்னாள் இராணுவத் தலைவர் சரத் பொன்சேகா என்னும் முதலாளித்துவ வேட்பாளர்கள் இருவரில் எவர் தேர்தலில் வெற்றிபெற்றாலும் அதன் சமூக நிலைமைகள் மீதும் மற்றும் ஜனநாயக உரிமைகள்மீதும் நடத்தப்பட இருக்கும் தாக்குதல்களுக்கு எதிராகப் போராட தொழிலாள வர்க்கம் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைமையில் அணிதிரள வேண்டும்.

பல தசாப்தங்களாக மத்திய வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் தொடர்ந்து சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் முன்னோடி அமைப்பான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினுடைய உறுப்பினர்களை முக்கியமான பதவிகளுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். 1996ல் மத்திய வங்கி ஊழியர்களின் தொழிற்சங்க தலைமையகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சார்ந்த தாக்குதலை நடத்தி பல தொழிலாளர்களை கொன்ற பின்னரும் மத்திய வங்கி ஊழியர்களின் தொழிற்சங்க தலைமையின் கீழ் தமிழ்-எதிர்ப்பு போரை எதிர்த்துள்ளதுடன், முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு சோசலிச மாற்றீட்டிற்கான போராட்டத்திற்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்துத் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காக போராடியுள்ளது.

மத்திய வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கம் இவ்விதத்தில் தன் வேட்பாளர் விஜே டயஸிற்கு உறுதியான ஆதரவை கொடுத்துள்ளது பற்றி சோசலிச சமத்துவக் கட்சி பாராட்டுத் தெரிவிக்கிறது. மேலும் பாரியளவில் விநியோகிப்பதற்காக இத்தீர்மானத்தை அச்சிட்டு வெளியிடும் முடிவையும் பாராட்டுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான விஜே டயஸின் பிரச்சாரம் இலங்கை, தெற்கு ஆசியா மற்றும் சர்வதேச அளவில் ஒரு சர்வதேச சோசலிச கட்சியை கட்டமைக்கும் நான்காம் அகிலத்தின் போராட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.

மத்திய வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் நிர்வாகக் குழுவின் தீர்மானம் கூறுகிறது:

சர்வதேச தொழிலாள வர்க்க வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கவும்! சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் விஜே டயஸுக்கு வாக்களிக்கவும்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொழிலாள வர்க்கத்தின் ஒரு முக்கிய அரசியல் திருப்புமுனைக் காலத்தில் நடக்க உள்ளது.

தொழிலாள வர்க்கத்தின்மீது புதிய தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த அவருடைய கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பதவிக்காலத்திற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜனாதிபதி இராஜபக்ஷ தேர்தலை நடத்த உள்ளார். சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இருந்து அவ்வாறு செய்வதற்கு அவருக்கு உத்தரவு வந்துள்ளது. அவர் உழைக்கும் மக்கள்மீது வரிப்பளுவை இன்னும் அதிகரிக்கவும், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலச் செலவுகளைக் குறைக்கவேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்.

ஜனாதிபதி இராஜபக்ஷவிற்கு இந்த கஷ்டங்களைச் சுமத்திவிட்டு தேர்தலை நடாத்தினாலும் தான் தோற்பேன் என்பது நன்கு தெரியும். மாறாக இராணுவ வெற்றியைப் பயன்படுத்தி தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட முடியும் என்று அவர் நம்புகிறார். அதன் பின் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்ட மக்கள் மீதான தாக்குதலை தொடக்கலாம் என்று கருதுகிறார்.

மற்றொரு முதலாளித்துவ வர்க்க வேட்பாளரான தளபதி பொன்சேகாவிடம் ஒன்றும் வேறுவித செயற்பட்டியல் கிடையாது. அவருக்கு ஆதரவு கொடுக்கும் முக்கிய கட்சியாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மக்கள்மீது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை கட்டாயப்படுத்தி சுமத்திய இகழ்வுற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது.

ஜனநாயகம், பொருளாதாரச் செழிப்பு இவற்றிற்கு உறுதி கூறி, செலவினங்களைக் குறைத்தல், வேலையின்மைப் பிரச்சினையை தீர்த்தல் போன்ற உறுதிமொழிகள் இரு வேட்பாளர்களாலும் கூறப்படுகின்றன. அவை மக்களை ஏமாற்றி, அதிகாரத்தை வெல்வதற்கான தந்திரோபாயம்தான்.

இராஜப்க்ஷ மற்றும் பொன்சேகாவின் வரலாறு இதுதான்:

வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் தமிழ் மக்களை அடக்குவதற்கு மிருகத்தனமான போரைத் தொடக்கியது; கிட்டத்தட்ட 300,000 போர் அகதிகளை கடுஞ்சிறை முகாம்களில் அடைத்தது; பயங்கவாரதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகால சட்டங்கள் போன்ற அடக்குமுறைச் சட்டங்களை மக்கள் மீது சுமத்தி, தங்கள் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்களை பயங்கரவாதத்திற்கு உடந்தை என்று அச்சுறுத்தியது, செய்தி ஊடகத்தை நசுக்கியது, பாதுகாப்பு படைகளின் ஆதரவின்கீழ் குண்டர்களைப் பயன்படுத்தி எதிரிகளை கடத்திச் செல்லுதல், காணாமற்போகச் செய்தல் மற்றும் படுகொலைகளை செய்தல் ஆகியவைதான்.

கடந்த 60 ஆண்டுகளில் வாக்காளர்கள் ஒடுக்குமுறையான நிலைமையில் இருந்து தப்பலாம் என்ற நம்பிக்கையில் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்திற்கு பதிலாக மற்றொன்றிற்கு வாக்களித்தனர். ஆனால் மக்களின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் அன்றாடம் வீழ்ச்சியடைந்துதான் வருகின்றன. தொழிலாளர்கள் இரு முக்கிய வேட்பாளர்களில் எவருக்கும் ஆதரவு கொடுக்க முடியாது.

அவர்களில் எவர் அதிகாரத்திற்கு வந்தாலும், அது தொழிலாளர்களுக்கு எதிரான இராணுவ, போலீஸ் அடக்குமுறையைத் தீவிரமாக்குவர், ஜனநாயக உரிமைகளை மிதித்துத் தள்ளுவர்.

முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவு "கட்சியற்ற" வேட்பாளர் சரத் பொன்சேகாவின் தலைமையின்கீழ் ஒரு போலீஸ் அரசாங்கத்தை கொண்டுவருதல் எளிது என்ற முடிவிற்கு வந்துள்ளது.

உலக முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கங்களை சரியாகப் புரிந்துகொண்டு, விஞ்ஞானபூர்வ சோசலிசத்தை தளமாகக் கொண்ட சமூக அமைப்புமுறையை கட்டமைக்கவில்லை என்றால், பிரச்சினைகள் பெரிதாகி போர், வறுமை, சமூக வறிய நிலை ஆகியவற்றிற்கு வழிவகுத்து முழு மக்கள் தொகுப்பையும் பேரழிவிற்கு உட்படுத்திவிடும். நாம் நிலைமையின் முழு தாக்கங்களை நன்கு விளங்கிக்கொண்டு எம்மை ஒழுங்கமைத்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

மத்திய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் சோசலிச சமத்துவக் கட்சி முன்வைத்துள்ள தொழிலாளர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளையும் வாழ்க்கை நிலைமையையும் ஒரு தொழிலாளர்கள் விவசாயிகள் அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதின் மூலம்தான் பாதுகாக்க முடியும் என்னும் நிலைப்பாட்டிற்கு ஒப்புதல் கொடுக்கிறது. அத்தகைய அரசாங்கம் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரும். அத்திட்டம் இலாப முறைக்கு எதிராக, முழுப் பொருளாதாரத்தையும் சர்வதேச சோசலிச நிலைப்பாட்டில் மறு ஒழுங்கமைத்து உழைக்கும் மக்களின் நலன்களுக்காக இயக்கும்.

தொழிலாள வர்க்கம் எந்த சூழ்நிலையிலும் ஆளும் வர்க்க வேட்பார்கள் முன்வைக்கும் "தீர்வுகளினால்" ஏமாந்துவிடக்கூடாது. சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரான விஜே டயஸ், ஒருவர்தான் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளார்.

இரு முக்கிய முதலாளித்துவ வேட்பார்கள் மட்டுமல்லாமல் மற்றைய 19 வேட்பாளர்களும் முதலாளித்துவத்தை பாதுகாக்கும் கொள்களைகளைத்தான் ஆதரிக்கின்றனர்.

மத்திய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் அனைத்து தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் முதலாளித்துவ கட்சி வேட்பாளர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் நிராகரித்து சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் விஜே டயஸிற்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved