World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Vote for Wije Dias, SEP presidential candidate

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜே டயஸுக்கு வாக்களியுங்கள்

The Socialist Equality Party (Sri Lanka)
22 Janaury 2010

Back to screen version

ஜனவரி 26 நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி அதன் வேட்பாளர் விஜே டயஸுக்கு வாக்களிக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. சோசலிச வேலைத் திட்டத்தை பரிந்துரைக்கும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காகப் போராடும் ஒரே வேட்பாளர் டயஸ் மட்டுமே.

இரு முதலாளித்துவ வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் அவரது எதிரியான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கொடூரமான வெட்டுக்குத்துக்கள் நடந்தாலும், அவர்கள் இருவரும் ஒரே அடிப்படை வேலைத்திட்டத்தையே கொண்டுள்ளனர். யார் வெற்றி பெற்றாலும், மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்துவதன் மூலம் செல்வந்தத் தட்டின் நலன்களைப் பாதுகாப்பர்.

அவர்கள் இருவரும் இப்போது யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொள்ளும் அதே வேளை, அவர்கள் இருவரும் சாவையும் அழிவையும் மற்றும் ஜனநாயக உரிமை மீறல்களையும் தவிற வேறு எதையும் கொண்டுவராத யுத்தத்துக்கு பொறுப்பாளிகள் ஆவர். இராணுவம் பொதுமக்களை படுகொலை செய்யும் போது, அதன் கொலைப் படைகள் நூற்றுக்கணக்கானவர்களை கொலை செய்து கொண்டிருந்த அல்லது காணாமல் ஆக்கிக்கொண்டிருந்த போது, அல்லது சிப்பாய்கள் இரண்டரை இலட்சம் தமிழ் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை தடுப்பு முகாங்களில் அடைத்து வைத்த போது ஜனாதிபதி தனது உயர்மட்ட ஜெனரலுடன் எந்தவொரு முரண்பாடும் கொண்டிருக்கவில்லை அல்லது ஜெனரல் தனது ஜனாதிபதியுடன் எந்தவித முரண்பாடும் கொண்டிருக்கவில்லை.

கடந்த மே மாதம் இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த போதிலும், கடந்த ஏழு மாதங்களாக உழைக்கும் மக்களுக்கு காணக் கிடைத்திருப்பது என்ன? இராஜபக்ஷ சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவருவதாக வாக்குறுதியளித்த போதிலும், விலைவாசி தொடர்ந்தும் ஏறிக்கொண்டே இருப்பதோடு வாழ்க்கைத் தரம் தொடர்ந்தும் சீரழிந்துகொண்டே இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, இராஜபக்ஷவும் பொன்சேகாவும் யுத்தத்தை முன்னெடுத்த கொடூரமான விதம், நீடித்த இனப் பகைமையை தோற்றுவித்துள்ளது. இது மேலும் இன பிளவுகளையும் மோதல்களையும் தவிர்க்க முடியாமல் ஏற்படுத்தும்.

இராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்திருந்தாலும், அவசரகாலச் சட்டம் மற்றும் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டங்கள் உட்பட முழு பொலிஸ் அரச இயந்திரமும் இன்னமும் அமுலில் உள்ளன. வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக ஏற்கனவே ஜனாதிபதி தனது அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தியுள்ளார். தேர்தல் முடிவடைந்தவுடன், அடுத்த அரசாங்கம் அதனது வேலைத்திட்டங்கள் தொடர்பான எந்தவொரு விமர்சனத்தையும் அல்லது எதிர்ப்பையும் நசுக்க பொலிஸ் அரசின் முழு சக்தியையும் பயன்படுத்துவதில் இரக்கம் காட்டாது.

இலங்கையை "ஆசியாவின் அதிசயமாக" மாற்றுவதாக இராஜபக்ஷ தனது விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும் அதே சமயம் வாக்காளர்களை ஏமாற்றவும் இந்த கற்பனையை வடித்திருக்கின்றார். உண்மையில், அடுத்து வரும் மாதங்களில் பொருளாதார நிலைமைகள் நல்ல நிலைமைக்குத் திரும்பாமல், நாடகபாணியில் மோசமடையப் போவதையும் தெரிந்துகொண்டதாலேயே இராஜபக்ஷ முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு பிரதியுபகாரமாக சர்வதேச நாணய நிதியம் கோரும் கொடூரமான பொருளாதார வெட்டுக்களை மறைப்பதற்காக அவர் வரவு செலவுத் திட்டத்தைக் கூட தேர்தலுக்குப் பின்னர் ஒத்தி வைத்துக்கொண்டார்.

பொன்சேகா பெரும் பொய்யராகவே உள்ளார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் வீணடிப்புக்கள் மற்றும் மோசடிகளை இல்லாமல் ஆக்குவதன் மூலம் தொழில், நலன்புரி சேவை, கல்வி, சுகாதார பராமரிப்பு போன்ற அனைத்தையும் அனவருக்கும் தன்னால் வழங்க முடியும் என அவர் வாக்குறுதியளிக்கின்றார். உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளின் உண்மையான தோற்றுவாயான, முதலாளித்துவ முறைமையின் வங்குரோத்தையே மூடி மறைப்பதற்காகவே இவை அனைத்தும் கூறப்படுகின்றன. கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தை தொற்றிக்கொண்டுள்ள மோசடி நடவடிக்கையானது, பரந்த பெரும்பான்மையினரின் செலவில் ஒரு சில செல்வந்தர்களுக்கு இலாபத்தைத் தரும் இந்த பொருளாதார ஒழுங்கிலேயே வேரூன்றியுள்ளது.

உண்மையான பொருளாதார நிலைமை பற்றி பொன்சேகாவாலோ அல்லது இராஜபக்ஷவாலோ நேர்மையாக பேச முடியாது. 1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பூகோள பொருளாதார நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை. அது ஒரு புதிய கட்டத்துக்குள் நுழைகின்றது. வங்கிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களை காப்பாற்ற பிரமாண்டமான தொகையை பிணையாக வழங்கியமை, ரில்லியன் டொலர் கணக்கில் கடனை பிரமாண்டமாக பெருக்கியுள்ளதோடு அவை இப்போது தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது. விதிவிலக்கின்றி, இலங்கையும் பல ஆண்டுகால பெரும் இராணுவச் செலவின் காரணமாக கடன்பட்டுள்ளது. ஏற்றுமதிகள் சரிந்துபோயுள்ளன. நாடு வங்குரோத்தடைவதை தவிர்க்க இராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கத் தள்ளப்பட்டார். இப்போது தொழிலாளர்கள் அந்த விலையை கொடுக்கத் தள்ளப்பட்டுள்ளனர்.

தேவையான பொருளாதார நடவடிக்கைகளை திணிப்பதற்கு பொன்சேகா நன்கு ஆயுதபாணிக்கப்பட்டிருக்கிறார் என சிந்திக்கும் ஆளும் கும்பலின் சக்திவாய்ந்த பகுதியினர் அவரை ஆதரிக்கின்றனர். தேவையானது என்ன என்பதை ஜெனரல் புரிந்துகொண்டுள்ளார். அண்மையில் வர்த்தகத் தலைவர்கள் மத்தியில் பேசிய அவர், "இலங்கைக்கு இந்த நிலைமையில் ஒழுக்கமான, அர்ப்பணிப்பு கொண்ட, நேர்மையான, வெளிப்படையான மற்றும் கடுமையான தீர்மானங்களை எடுப்பதற்கு பயப்படாத ஒரு தலைவர் தேவை," எனத் தெரிவித்தார். இந்த இரக்கமற்ற ஜெனரலை ஒரு "ஜனநாயகவாதியாக" காட்ட ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட எதிர்க் கட்சிகள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெட்கமற்ற மோசடிக்கு சமமானதாகும்.

இருவரும் தெற்காசியாவைச் சூழ சுழன்றுகொண்டிருக்கும் சர்வதேச பகைமைகளின் ஆபத்துக்குள் இலங்கையை இழுத்துப் போடும் நடவடிக்கையை வெவ்வேறு திசைகளில் இருந்து எடுக்கின்றனர். இராஜபக்ஷ இராஜதந்திர ஆதரவு, நிதி, முதலீடு மற்றும் ஆயுதங்களுக்காக மேலும் மேலும் சீனாவிலும் மற்றும் அதன் பங்காளிகளிலும் தங்கியிருந்தார். தனது அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவும் ஐரோப்பாவும் எடுத்த முயற்சிகளை "ஒரு சர்வதேச சதி" என அவர் கண்டனம் செய்தார். பொன்சேகா நாட்டின் பாரம்பரிய உறவுகள் முறிந்து போனதையிட்டு ஆழமாக கவலை கொண்டுள்ள ஆளும் தட்டின் பகுதியினருக்காக பேசுகிறார். வர்த்தகத் தலைவர்கள் மத்தியில் பேசும் போது, "மேற்கத்தைய எதிர்ப்பை கிளறிவிடவும் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேற்குலக நாடுகளே கீழறுத்து வருவதாக கூறி மக்களை ஏமாற்றவும்" முயற்சிப்பதாக இராஜபக்ஷவை அவர் திட்டினார்.

கொள்ளையடிக்கும் சக்திகளின் ஏதாவதொரு குழுவின் பின்னால் நிற்பதன் மூலம் எந்தவொரு முன்னேற்றமும் வரப்போவதில்லை. அமெரிக்கா, பிராந்தியத்தில் தனது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை அபிவிருத்தி செய்துகொள்வதன் பேரில் ஏற்கனவே ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் யுத்தங்களை நடத்திக்கொண்டிருப்பதோடு பாகிஸ்தானையும் உள்நாட்டு யுத்தத்துக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றது. மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, ஆபிரிக்கா மற்றும் சர்வதேச ரீதியிலும் மூலப் பொருட்கள் மற்றும் எரிசக்திகளின் வழங்கல்களை தன்பக்கம் ஒன்றுசேர்த்துக்கொள்ள சீனா முயற்சிக்கின்றது. இத்தகைய சகல சதியாலோசனைகள், சூழ்ச்சித் திட்டங்கள் மற்றும் யுத்தங்களுக்கு எதிராக இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கம் பிராந்தியம் பூராவும் உள்ள தனது வர்க்க சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து நிற்க வேண்டும்.

ஏனைய சகல கட்சிகளும் இராஜபக்ஷவுக்கும் பொன்சேகாவுக்கும் பின்னால் அணிதிரண்டுள்ளன. பெருந்தோட்டப் பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி உட்பட தொழிற்சங்கங்கள், வெற்றிபெறக் கூடியவர் மற்றும் தங்களுக்கு அமைச்சர் பதவிகள் தரக்கூடியவர் என தாம் யாரைக் கருதுகின்றனவோ அதன்படி பொன்சேகாவையும் இராஜப்கஷவையும் ஆதரிக்கின்றன.

முன்னர் புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை இரக்கமற்று முன்னெடுத்த மனிதரான பொன்சேகாவையே ஆதரிக்கின்றது. அசாதாரணமான முறையில் கரணம் அடித்துள்ள தமிழ் கூட்டமைப்பு, இப்போது ஜெனரல் தமிழர்களின் பிரச்சினைக்கு அனுதாபத்துடன் செவிமடுப்பார் என கூறிக்கொள்கின்றது. இந்த அனைத்து கேவலமான அடிமைத்தனமும் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துக்குள் தமிழ் கூட்டமைப்புக்கு ஒரு இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கே ஆகும்.

புலிகளின் இராணுவத் தோல்வியானது, எல்லாவற்றுக்கும் மேலாக, தனியான முதலாளித்துவ தமிழ் அரசுக்கான அதன் முன்நோக்கின் அரசியல் வங்குரோத்தின் விளைவேயாகும். அதன் இனவாத அரசியல், ஜனநாயகவிரோத வழிமுறைகள் மற்றும் பொது மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த மட்டுமே உதவியதோடு புலிகளை சிங்களவர்களிடம் இருந்து மட்டுமன்றி தமிழ் வெகுஜனங்களில் இருந்தும் துண்டித்து விட்டது. தமிழ் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் தனியான தீர்வு கிடையாது. முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கான தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் பகுதியாக மட்டுமே தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை வெல்ல முடியும்.

முன்னாள் இடதுசாரிகளான நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் (ஐ.சோ.க.) வேட்பாளர்களை நிறுத்தியுள்ள போதிலும், அவர்கள் மிகவும் விமர்சிக்கும் மனநிலையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஆளும் வர்க்கத்தின் ஏதாவது பகுதியுடன் கட்டிப்போடுவது மட்டுமே அவர்களது இலக்கு. ஐ.சோ.க. வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய, வலதுசாரி யூ.என்.பி. க்கும், அதன் மூலம் அதன் வேட்பாளர் பொன்சேகாவுக்கும் ஜனநாயக ஆடை அணிவிப்பதற்காக அண்மையில் யூ.என்.பி. யின் போலியான "சுதந்திரத்துக்கான மேடையில்" ஏறினார். நவசமசமாஜக் கட்சி சற்று வேறுபட்ட பாதையை எடுத்துள்ளது. அது முதலாளித்துவத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு கொஞ்சம் தனியான தீர்வு உண்டு என்ற ஆபத்தான மாயைக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சிக்கும், தமிழ் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற சிவாஜிலிங்கத்துக்கு பின்னால் தனது ஆதரவை நகர்த்தியுள்ளது.

தீங்கு விளைவிக்கும் இருவரிலும் பொன்சேகாவோ அல்லது இராஜபக்ஷவோ குறைந்த தீங்கானவர் என நம்பவைக்க எடுக்கும் மோசடி முயற்சிகளை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். கொடூரமான உண்மை என்னவெனில், இந்தத் தேர்தல் உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கப் போவதில்லை. சுதந்திரத்தில் இருந்து 60 ஆண்டுகால பதிவுகள், யுத்தத்துக்கும் வறுமைக்கும் மற்றும் மோசமான ஜனநாயக உரிமை மீறல்களுக்கும் மட்டுமே வழிவகுத்துள்ள முழு முதலாளித்துவத்தின் மீதும் குற்றஞ்சாட்டுகின்றன. இப்போது, பொருளாதார நெருக்கடி மோசமடைகின்ற நிலையில், இனவாத யுத்தத்தை முன்னெடுத்தவர்கள் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிராக ஒரு "பொருளாதார யுத்தத்தை" முன்னெடுக்க தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள்.

அடுத்து வரவுள்ள வர்க்க யுத்தத்திற்கு தயாராவதற்காக தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் கல்வியூட்டி அவர்களை அணிதிரட்ட இந்தத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் செய்கின்றது. ஆளும் வர்க்கத்தின் சகல கட்சிகளில் இருந்தும் அடிப்படையில் பிரிந்து தமது சொந்த பலத்தின் மீது அணிதிரண்டால் மட்டுமே தொழிலாள வர்க்கத்தால் அதன் அடிப்படை உரிமைகளில் எதையும் காக்க முடியும். முழு அரசியல் ஸ்தாபனத்துக்கும் மற்றும் அதன் பிற்போக்கு வேலைத்திட்டத்துக்கும் தமது எதிர்ப்பையும், ஒரு சோசலிச மற்றும் அனைத்துலகவாத மாற்றீட்டுக்கான தமது நனவுப்பூர்வமான ஆதரவையும் வெளிப்படுத்த எமது வேட்பாளர் விஜே டயஸுக்கு வாக்களிக்குமாறு நாம் உழைக்கும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரான விஜே டயஸ், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினருமாவார். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில், கட்சியின் நான்கு தசாப்த கால கொள்கைப் பிடிப்பான போராட்டத்துக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராவார். 26 ஆண்டுகால யுத்தத்தை இடைவிடாமல் எதிர்த்ததோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல துருப்புக்களையும் உடனடியாக திருப்பியழைக்குமாறு கோரிய ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

இராணுவ ஆக்கிரமிப்புக்கு உடனடியாக முடிவுகட்டுமாறும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் சகல ஒடுக்குமுறை சட்டங்கைளயும் அகற்றுமாறும் சோசலிச சமத்துவக் கட்சி தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கும். எமது முன்நோக்கு பாராளுமன்ற சூழ்ச்சித் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, சோசலிச முறையில் சமுதாயத்தை மீளக் கட்டியெழுப்ப தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான ஒரு பொதுப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற வெகுஜனங்களையும் சுயாதீனமாக அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டது. தெற்காசியாவிலும் சர்வதேச ரீதியிலும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான எமது அழைப்பின் அர்த்தம் அதுவே.

சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்குமாறும், எங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசிக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சியை இலங்கையிலும் மற்றும் தெற்காசியாவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்ப இணைந்துகொள்ளுமாறும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்தக் கட்டுரையின் ஆசிரியர் கீழ்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கின்றார்:

2010 ஜனாதிபதி தேர்தலுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் விஞ்ஞாபனம்

சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவதற்கு ஒரு சோசலிச வேலைத் திட்டம்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved