WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
SEP campaigns in Jaffna
யாழ்ப்பாணத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரங்கள்
By our correspondents
21 January 2010
Use this version to
print | Send
feedback
சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் யாழ் தீபகற்பத்தில்
தொழிலாளர்கள், மீனவர்கள், போர் அகதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில்
வலுவான ஆதரவையும் பிரதிபலிப்பையும் யாழ்ப்பாண நகரில் ஜனவரி 17 தேர்தல் கூட்டத்தைக் கட்டமைக்கும் பிரச்சாரம்
செய்கையில் கண்டனர். சோசலிச சமத்துவக் கட்சி
மற்றும் அதன் ஜனாதிபதி
வேட்பாளர் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையின் 10,000 கணக்கான
பிரதிகளையும் அவர்கள் வினியோகித்தனர்.
தமிழ் மக்களின் முக்கிய புத்திஜீவித, கலாச்சார மையமாக யாழ்ப்பாண தீபகற்பம்
இருந்து வந்தது. ஆனால் தொடர்ச்சியான கொழும்பு அரசாங்கங்கள் நடத்திய 26 ஆண்டுகால வகுப்புவாத
போர்களால் அது பேரழிவிற்கு உட்பட்டுள்ளது. பல வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன; பல்லாயிரக்கணக்கான மக்கள்
கொல்லப்பட்டனர், காயமுற்றனர் அல்லது அகதிகள் ஆயினர். செழிப்பான பண்ணைகள், பழத் தோட்டங்கள் ஆகியவை
உயர்பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
1981 ல்
அரசாங்க ஆதரவு பெற்ற குண்டர்கள் தெற்கு ஆசியாவிலேயே மிகச் சிறந்தவற்றுள் ஒன்று எனக் கருதப்பட்ட
யாழ்ப்பாண நூலகத்தை எரித்தனர். இதில் மொத்தம் 95,000க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும் கிடைத்தற்கரிய கையெழுத்துப்
பிரதிகளும் ஓலைச் சுவடிகளும் ஆவணங்களும் இருந்தன. அனைத்து நூல்களும் அழிக்கப்பட்டுவிட்டன.
இராணுவ மோதல் தமிழீழ விடுதலைப் புலிகள் நசுக்கப்பட்டதுடன் மே 18 அன்று முடிவடைந்தாலும்,
இலங்கை இராணுவம் இன்னமும் தீபகற்பத்தை ஆக்கிரமித்து அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுகிறது
யாழ்ப்பாண மாணவர்களுடன் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் பேசுகிறார்
சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்கள் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலும்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் நூற்றுக்கணக்கானவர்களுடன் உரையாடினர். குருநகர், அரியாலை, கரைநகர்,
மூளாய், சுழிபுரம், பண்ணாகம், சித்தங்கேணி, சங்கானை, சண்டிலிப்பாய், மானிப்பாய், புங்குடுத்தீவு, வேலணை
மற்றும் சுண்ணாகம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அவர்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர்.
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் முன்னோடிக் கட்சியான
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்
ஆகியவற்றின் கொள்கை ரீதியான போராட்டம் பெரிதும் பாராட்டப்பட்டது. கட்சி பல ஆண்டுகளாக கொழும்பு
அரசியல் ஆளும் வர்க்கத்தின் சிங்கள சோவினிசம் மற்றும் முதலாளித்துவ தேசியவாத முன்னோக்கை கொண்டிருந்த
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்
எதிராக தொழிலாள வர்க்கத்தின்
சுயாதீனத்திற்காக கடினமான சூழ்நிலையிலும் பிரச்சாரம் செய்திருந்தது.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ஒரு இளம் தொழிலாளி, சோசலிச சமத்துவக்
கட்சி தேர்தல் அறிக்கையைப் படித்தபின் பின்வருமாறு கூறினார்: "இத்தகைய அறிக்கையை முன்வைக்கும் எந்தக்
கட்சியும் நல்ல கட்சியாக இருக்க வேண்டும். 26 ஆண்டு போர்க்காலத்தில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு
விட்டோம். பல மோசமான அனுபவங்களைக் கொண்டு விட்டோம். அனைத்து அரசியல் கட்சிகளும் கொழும்பு அரசாங்கத்தை
அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளைத்தான் ஆதரித்தன. அவை இப்பொழுது மதிப்பிழந்துள்ளன. உங்கள் கட்சி மக்களிடம்
இருந்து ஆதரவைப் பெறும் என்று நினைக்கிறேன். உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்."
இலங்கை உள்நாட்டுப் போரைத் தவிர, பல வினாக்கள் சோவியத் ஒன்றியத்தின்
வீழ்ச்சி, சீனாவின் தன்மை பற்றி எழுப்பப்பட்டன. நிர்வாகக் கலை இறுதியாண்டு மாணவர் ஒருவர் சீனாவில் வெளிப்பட்டு
வரும் முதலாளித்துவம் பற்றிக் கேட்டார். விவாதங்களுக்குப் பின்னர் அவர் ரஷ்யா, சீனா ஆகியவற்றில் என்ன நடந்தது
என்பது பற்றி அறிந்து கொண்டதாகக் கூறினார். "முன்பு நாங்கள் ட்ரொட்ஸ்கியுடனான லெனினுடைய வேறுபாடுகள்
பற்றித்தான் கேள்விப்பட்டுள்ளோம். இப்பொழுது ட்ரொட்ஸ்கிசம் என்றால் என்ன என்பதைப்பற்றி அறிந்துள்ளோம்.
இன்னும் இது பற்றிய கலந்துரையாடலை விரும்புகிறோம்."
அரசியல் விஞ்ஞான இறுதியாண்டு மாணவர் ஒருவர் கூறினார்: "உங்கள் அறிக்கை தமிழ்
தேசியப் பிரச்சினை எப்படி சிறந்த முறையில் தீர்க்கப்படும் என்று விளக்குகிறது. தமிழர்களையும் சிங்களவர்களையும்
இணைத்து வெகுஜனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியலமைப்பு மன்றத்திற்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்."
இந்த மாணவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் நாட்டின் அரசியல் கைதிகள் பற்றி இன்னும் எழுத வேண்டும்
என்று கோரினார். 10,000க்கும் மேற்பட்ட நிரபராதி தமிழர்கள் "தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்கள்"
என்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பலரும் அதில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
சோசலிச
சமத்துவக் கட்சி உறுப்பினர் தேர்தல் வேலைத்திட்டத்தை விளக்குகிறார்
ஒரு சோசலிச சமத்துவக் கட்சிக் குழு யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு மேற்கே உள்ள
புங்குடுதீவில் பிரச்சாரம் செய்தது. கிட்டத்தட்ட 500 குடும்பங்கள், போர் முடிவிற்குப் பின் வவுனியா வடக்கு நகர்ப்புறத்திற்கு
அருகே இருந்த பரந்த இராணுவத்தால் நடத்தப்பட்ட மனிக் பார்மில் காவலில் வைக்கப்பட்டதை அடுத்து அங்கு மறு
குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
போருக்குப் பின் காவலில் வைக்கப்பட்டவர்கள் அனைவரும், முக்கிய அரசியல் கட்சிகள்தான்
அவர்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு பொறுப்பு என்று குற்றம்சாட்டினர். இப்பொழுது பதவியில் உள்ள இராஜபக்ஷ
அல்லது எதிர்க்கட்சிகளின் "பொது வேட்பாளரான" முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவிடமோ அவர்களுக்கு
சிறிது நம்பிக்கையும் கிடையாது.
ஒருவர் கூறினார்: "நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி எவரும்
பேசுவதில்லை. கைவிடப்பட்ட, சேதமுற்ற வீடுகளில் நாங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளோம். அரசாங்கம் எங்களுக்கு
நிலம் ஏதும் கொடுக்கவில்லை; நிரந்தரமாக குடியேற ஏதும் செய்யவில்லை. எங்கள் நிலங்களும் வீடுகளும் இருக்கும்
வன்னிக்கு போகவும் நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. தக்க வேலைகளோ, சுதந்திரமோ எங்களுக்குக் கிடையாது.
"அதிகாரிகள் எவர் மீதேனும் சிறிதும் ஆதாரமின்றி சந்தேகப்பட்டால், கடற்படையின்
பொது உறவுகள் அதிகாரி அவர்களுடைய பிறந்த தேதி சான்று, அடையாள அட்டையை எடுத்துக் கொண்டுவிடுவார்.
ஒவ்வொரு ஞாயிறும் அவர்கள் கடற்படை அலுவலகத்திற்கு சென்று கையெழுத்துப்போட வேண்டும். தேர்தலில் எவர்
வெற்றி பெற்றாலும், எங்கள் பிரச்சினைகள் தீரப் போவதில்லை. அதனால் தேர்தலில் எங்களுக்கு அக்கறை
இல்லை."
1980களில் மீன்பிடிப்பவர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் இப்பகுதிகளில்
வசித்து வந்தனர். ஆனால் போரை அடுத்து இடைவிடாது தொந்திரவை எதிர்கொண்டனர். பெரும்பாலானவர்கள்
1990ல் இலங்கை இராணுவம் இதை ஆக்கிரமித்த பின்னர் நீங்கிவிட்டனர். மூன்றில் ஒரு பகுதி மக்கள்தான் இன்னமும்
உள்ளனர்.
தண்ணீர் மிகக் கடுமையான பிரச்சினை ஆகும். பிராந்தியக்குழு, அரசாங்கம் சாரா
அமைப்பான சர்வோதயா மற்றும் கூட்டுறவுச் சங்கம் ஆகியவை நீர் கொடுத்தாலும் மக்கள் அதற்காக 45 லிட்டர்களுக்கு
15 ரூபாய்கள் கொடுக்க வேண்டும். அப்பொழுதும் கூட நீர் அன்றாடம் வருவதில்லை--மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு
ஒருமுறைதான் வரும்.
முன்பு மனிக் பார்மில் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒரு இளம்பெண் கூறினார்: "இராஜபக்ஷ
அல்லது பொன்சேகாவை நாங்கள் நம்ப முடியாது. இருவருமே போரின்போது நாங்கள் எதிர்கொண்டு பொறுத்துக்
கொள்ள முடியாத கஷ்டங்களுக்கு பொறுப்பானவர்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி
இரண்டுமே போருக்கான பொறுப்பை கொண்டவை. எங்கள் பூர்விக இடங்களில் இருந்து நாங்கள் குடிபெயரும்
கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளோம்.
ஒரு
யாழ்ப்பாண வாசி சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கைகளை விவாதிக்கிறார்
"அனைத்துத் தமிழ் கட்சிகளும் இப்பொழுது இந்த இரு வேட்பாளர்களுக்கு ஆதரவாக
உள்ளன. சரத் பொன்சேகா முன்னாள் இராணுவத் தளபதி. அவர் ஜனாதிபதியானால் நாட்டை இராணுவமுறைப்படிதான்
ஆள்வார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் (தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்பு ஆதரவு கொடுத்தவை)
தங்கள் சொந்த நலன்களுக்குத்தான் உழைக்கின்றனர். மக்களுக்கு இவர்களால் எந்த நன்மையும் கிடையாது."
ஒரு இளம் பெண்மணி முன்பு சோசலிச சமத்துவக் கட்சியை பற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை
என்றாலும், கலந்துரையாடல் முக்கியமானதாக இருந்தது என்றார். சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையை
படித்து யாழ்ப்பாணத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுவதாகவும் அவர் கூறினார்.
அரச சாரா அமைப்பில் வேலை செய்யும் மற்றொரு தொழிலாளி, சோசலிச சமத்துவக்
கட்சி ஒன்றுதான் தமிழ் மக்களின் நலன்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்றார். "இது
சிந்திக்கும் மக்களுக்கான கட்சி" என்று அவர் கருத்துக் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளுடைய இராணுவத்
தோல்வி முழு தமிழ் அரசியல் அமைப்பு முறையின் அரசியல் வங்குரோத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
"இப்பொழுது தமிழ் மக்களிடையே இருக்கும் அரசியல் வெற்றிடம் ஒரு சோசலிச
வேலைத்திட்டத்தினால் நிரப்பப்பட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்புடைய கொள்கைகள் எப்பொழுதும் முதலாளித்துவ
வேலைத்திட்டத்தை பாதுகாத்து முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு உதவியது. இப்பொழுது தமிழ் மக்கள் சிந்திக்க
தலைப்பட்டுவிட்டனர். உங்கள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு கிடைக்கும்" என்றார்.
ஒரு ஆசிரியர் கூறினார்: "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி
என்னும் இரு முக்கிய கட்சிகளும் தமிழ் மக்களின் உயிருடன் விளையாடிவிட்டன. இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு
அவர்களுக்கு உதவுகிறது." சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிச வேலைத்திட்டம் நல்லது என்று நினைப்பதாக
அவர் கூறினார்: "அது எவ்வாறு நடைமுறைக்கு வரும் என்று எனக்குத் தெரியவில்லை." என்றார்.
புங்குடுதீவு பகுதியில் மீன்பிடித்தல்தான் இப்பொழுது முக்கியமான வேலையாகும். வேறு
எந்த வேலைவாய்ப்புக்களும் இல்லை; பல இளைஞர்களும் வேலையின்மையில் உள்ளனர்.
ஒரு இளைஞர் தான் பாடசாலையில் உயர் வகுப்பு வரை படித்துள்ளதாகவும் இப்பொழுது
அப்பகுதியில் உள்ள பல இளைஞர்களைப் போல் மீன்பிடிப்பதாகவும் கூறினார். "எங்களுக்கு முறையான வேலைகள்
இல்லை. நாங்கள் மிகப் பழைய முறைகளில் மீன்பிடிக்கிறோம். மீன்களை விற்பதிலும் கஷ்டங்களை எதிர்கொள்ளுகிறோம்.
பைபர் கண்ணாடிப் படகுகள் இருந்தால் கடலுக்குச் சென்று அதிக மீன்களைப் பிடிப்போம்."
இராஜபக்ஷ மற்றும் பொன்சேகா இருவரையும், ஆயிரக்கணக்கான நிரபராதி இளைஞர்கள்
கொல்லப்பட்டதற்கு பொறுப்பு என்றார். "ஆனால் இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு பொன்சேகாவிற்கு
ஆதரவு கொடுக்கிறது. இது அவர்களுடைய உண்மையான அரசியலை அம்பலப்படுத்துகிறது" என்றார். |