World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிWhat is behind the power struggle in the German Left Party? ஜேர்மன் இடதுகட்சி அதிகாரப் போட்டியின் பின்னணியில் என்ன? By Lucas Adler ஜேர்மனிய இடது கட்சியில் இதன் தலைவர் ஒஸ்கார் லாபொன்டைனுக்கும் அதன் தேசிய செயலாளர் டீற்மார் பார்ட்ஸ் இற்கும் இடையே வெளிப்படையான அதிகாரப் போட்டி வெளிப்பட்டுள்ளது. கட்சியிலுள்ள லாபொன்டைன் பிரிவின் பெருகிய அழுத்தத்தின் பேரில் பார்ட்ஸ் தன்னுடைய பதவியை கடந்த வெள்ளியன்று இராஜிநாமா செய்தார். ஜனவரி 5ம் தேதி Spiegel Online இடது கட்சியின் பாராளுமன்ற பிரிவின் தலைவர் கிரிகோர் ஹீஸிக்கு எழுதப்பட்ட கடிதம் பற்றி தகவல் கொடுத்தது. அதில் இடது கட்சியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா, பார்டன்-வூர்ட்டெம் பேர்க் ஆகிய வட்டார மாநிலத் தலைவர்கள் பார்ட்ஸ் பற்றி கடுமையான குறைகூறல்களைத் தெரிவித்து அவருடைய இராஜிநாமாவை கோரியிருந்தனர். பார்ட்ஸ் இற்கு எதிரான முக்கிய குறைகூறல் அவர் லாபொன்டைனின் சொந்த வாழ்க்கை பற்றி வதந்திகளை பரப்புகிறார் என்றும், லாபொன்டைன் ஒரு புற்றுநோய்க் காரணத்தை அடுத்து குறுகிய காலத்திற்கு அரசியல் செயல்களில் இருந்து விலகுவதாகக் கூறியதை அடுத்து கட்சித் தலைவருக்கு அடுத்து வரக்கூடியவர் யார் என்ற விவாதத்தை தொடக்கினார் என்பதாகும். இதன்பின் பூசல் அதிகரித்தது. லாபொன்டைனுக்கு நெருக்கமான வட்டங்கள் பார்ட்ஸ் உடனான தன்னுடைய உறவு சமரசத்திற்கு இடமின்றி சேதப்படுத்துவிட்டது என்று லாபொன்டைன் கூறினார் என்றும், பார்ட்ஸ் தன்னுடைய பதவியை இராஜிநாமா செய்தால்தான் மே மாதம் நடைபெற இருக்கும் கட்சிப் பதவிக்கு வேட்பாளராக தான் நிற்கப் போவதாகவும் கூறியதாகத் தெரிவித்தனர். இப்பொழுது பார்ட்ஸ் சென்றுவிட்டார். தன்னுடைய பங்கிற்கு தனக்கும் லாபொன்டைனுக்கும் இடையே அதிகாரப் போராட்டம் அல்லது போட்டி ஏதும் இல்லை என்று பார்ட்ஸ் மறுத்தார். ஜனவரி 11 அன்று பார்ட்ஸ் இற்கு எதிராக ஹீஸி அணிவகுத்தார். பல சட்டமன்றங்கள், வட்டார அமைப்புக்களில் இருந்து வந்திருந்த 700 கட்சி உறுப்பினர்கள் இருந்த கூட்டம் ஒன்றில் இடது கட்சியின் பாராளுமன்ற தலைவர் கட்சியில் உள்ள "பொறுத்துக் கொள்ள முடியாத கண்டனச் சூழலை" பெரிதும் கண்டித்து பார்ட்ஸ் விசுவாசமற்றவர் என்று குற்றம் சாட்டினார். இதற்கு ஒரு வாரம் முன்பு, லாபொன்டைனை அவருடைய மாநிலத் தொகுதியான சார்லாந்தில் ஹீஸி சந்தித்தார். இருவரும் ஜனவரி 11 அன்று ஹீஸி கூறிய கருத்துக்களைப் பற்றி பொதுவாக உடன்பாடு கொண்டிருக்கக்கூடும். இதைத் தொடர்ந்து பெரும் எதிர்ப்புக்கள் கிழக்கு ஜேர்மனிய வட்டார அமைப்புக்களில் இருந்து வெளிப்பட்டன. சாக்சனி-அன்ஹால்ட்டின் பிராந்திய துணைத் தலைவர் பியர்க்க புள் Spiegel Online இடம் பார்ட்ஸ் இற்கு ஹீஸி "படிப்படியான நிலைகுலையும் தாக்குதலைக் கொடுக்கிறார்." என்றார். "கட்சியின் பரந்த அடுக்குகள் பார்ட்ஸ் மற்றும் அவருடைய நடைமுறை அரசியலுக்கு ஆதரவு கொடுப்பவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது வெளிப்படை. அது மிகவும் வருந்தத்தக்கது." என்றும் சேர்த்துக் கொண்டார். இடது கட்சியின் மக்லெபேர்க்-மேற்கு பொமரேனியா மாநிலத்தின் பிராந்தியத் தலைவர் ஸ்ரெபான் பொக்ஹான் தன்னுடனைய ஆதரவை புதுப்பிக்கப்பட்டுள்ள பார்ட்ஸ் இன் வேட்புக்கு வெளிப்படுத்தியுள்ளார். "அவர் மீண்டும் நிற்க வேண்டும் என்பதற்கு என்னால் இயன்றதைச் செய்வேன்." என்றார் அவர். துரிஞ்கியா மாநிலத்தில் இருக்கும் இவர் சக அங்கத்தவரான போடோ றாமலோ, பார்ட்ஸ் பற்றிய குறைகூறல்கள் மூடிய கதவிற்குப் பின்னால்தான் நடந்திருக்க வேணடும் என்று வருத்தப்பட்டு பகிரங்கமாக எவரும் முதுகில் குத்தப்படுவதுபோன்ற தோற்றம் கொடுக்கப்படுவது ஏற்கத்தக்கது அல்ல" என்றும் அறிவித்தார். கட்சியின் துணைத் தலைவர் ஹாலினா வாஷியானியா, ஹீஸி தொடுத்துள்ள விசுவாசமற்றவர் என்ற குற்றச்சாட்டு "கற்பனையானது" என்றும் ஹீஸி கட்சி நிர்வாகக் குழுவின் கூட்டம் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார். மோதல்கள் இப்பொழுது வெளிப்படையான வகையில் இடது கட்சியில் வந்துவிட்டன. ஆனால் இவற்றின் வேர்கள் அமைப்பின் அஸ்திவாரங்களில் உள்ளன. கூட்டாட்சிக் குடியரசின் வரலாற்றிலேயே மிகப் பெரிய பொதுநலக் குறைப்புக்கள், மிகப் பெரிய குறைவூதியத் துறையை தோற்றுவித்தது, ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையில் மீண்டும் இராணுவவாதத்தை புகுத்தியது உட்பட சமூக ஜனநாயகக் கட்சி (SPD)-பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கத்தின் (1998-2004) கொள்கைகள் சமூக ஜனநாயக் கட்சிக்கும் தொழிலாள வர்க்கத்திற்குள் உள்ள அதன் மரபார்ந்த ஆதரவாளர்களுக்கும் இடையே பாரிய பிளவை ஏற்படுத்தியது. பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் சமீபத்திய தேர்தல்களில் சமூக ஜனநாயகக் கட்சி நாடு முழுவதும் 10 மில்லியன் வாக்காளர்களை இழந்துள்ளது. இதே கால கட்டத்தில் சமூக ஜனநாயகக் கட்சியில் இருந்து 250,000 உறுப்பினர்கள் விலகி விட்டனர். இது ஆளும் உயரடுக்கிற்கு தொழிலாள வர்க்கத்தைக் கட்டுப்படுத்தும் அதன் மிக முக்கிய அரசியல் கருவியைப் பயனற்றுச் செய்துவிட்டது. தொழிலாள வர்க்கத்துடன் நீண்டகால பிணைப்புக்களால் சமூக ஜனநாயகக் கட்சி போருக்குப் பிந்தைய காலத்தில் முதலாளித்துவ ஒழுங்கிற்கு மிக முக்கிய தூணாக இருந்து வந்தது. இடது கட்சியின் தோற்றம் ஆளும் வர்க்கத்தின் தொலைநோக்குடைய பிரிவுகள் இந்த நிகழ்வுகளுக்கு காட்டியுள்ள பதிலளிப்பாகும். சமூக ஜனநாயகக் கட்சி தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்தும் வழிவகையை இழந்துள்ள நிலையில், ஒரு புதிய கட்சி அச்செயலை செய்வதற்குத் தேவைப்பட்டது. இடது கட்சி நிறுவப்படுவதற்கு முக்கிய பங்கை லாபொன்டைன் கொண்டிருந்தார். சமூக ஜனநாயகக் கட்சித் தலைவராக அவர் 1998ல் தேர்தல் வெற்றியை ஏற்பாடு செய்திருந்தார். தன் முந்தைய கட்சியுடன் முறித்துக் கொண்டு, தன்னுடைய புதிய திட்டத்தை எச்சசொச்சமான ஸ்ராலினிச, சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுடன் சேர்த்துத் தளமாகக் கொண்டார். கிழக்கில் ஸ்ராலினிச ஜனநாயக சோசலிச கட்சியினர், மேற்கே ஏமாற்றம் அடைந்திருந்த தொழிற்சங்க மற்றும் முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சி செயலர்கள், WASG எனப்படும் தேர்தல் மாற்றீட்டு அமைப்பை நிறுவிக்கொண்டனர். . இடது கட்சி 1960, 1970களில் இருந்த சமூக சீர்திருத்த முறைக்கு மீளுவது இயலும் என்ற போலித்தோற்றத்தை வளர்த்தது. ஆனால் ஏன் இத்தகைய அரசியல் வியத்தகு முறையில் சரிந்தது என்பதை ஆராயாமல், இது சமூக ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு சரிவிற்கான காரணத்தையும் பிரதிபலிக்கவில்லை. இடது கட்சியை நிறுவியவர்கள் அனைவரும் இதைப் பற்றிப் பொருட்படுத்த வேண்டாம் என்று ஒப்புக் கொண்டனர். அதே நேரத்தில் ஆரம்பத்தில் இருந்து கட்சிக்குள் அடித்தளத்தில் பிளவுகள் இருந்தன. நாட்டின் மேற்குப்பகுதியில் கட்சியின் தன்மை, சொல்லளவிலேனும், சமூக ஜனநாயகக் கட்சியில் இருந்து தன்னை தனிப்படுத்திக் காட்டிக் கொள்ள ஒருவித இடது வார்த்தை ஜாலங்களை ஏற்கும் கட்டாயத்தில் இருந்தது. கிழக்கில் இடது கட்சி அதன் முன்னோடிக் கட்சியான ஜனநாயக சோசலிசத்திற்கான கட்சி (PDS) போல் பல ஆண்டுகள் அரசாங்கத்தின் பல மட்டங்களில் தீவிர பங்கைக் கொண்டிருந்தது. சமூக ஜனநாயகக் கட்சியுடன் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களில் ஒத்துழைத்திருந்ததுடன், முதலாளித்துவ ஒழுங்கிற்கு நம்பகமான தூணாக இருக்கும் என்று நிரூபித்திருந்தது. ஜேர்மனியில் சமூக அழுத்தங்களின் வளர்ச்சி இடதுகட்சிக்குள் இருக்கும் பிரிவுகளையும் பிளவுகளையும் அதிகப்படுத்தியது. தொழிலாள வர்க்கத்தின் அடுக்குகள் பெருகிய முறையில் தீவிரமயப்படுத்தப்பட்டதை எதிர்கொள்ளும் விதத்தில், லாபொன்டைன் இன்னும் கூடுதலான தீவிரவாத நிலைப்பாடுகளைக் காட்டிக்கொண்டு சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஒரு இடது மாற்றீடு என்பது போல் தோற்றமளித்தார். இவருடைய நிலைப்பாடு கட்சியின் பிராந்திய அமைப்புக்களிடம் இருந்து எதிர்ப்பைக் கண்டது. ஏனெனில் அது அவர்களுடைய முந்தைய, மரபார்ந்த முதலாளித்துவக் கட்சிகளுடன் கொண்டிருக்கும் அரசியல் உடன்பாடுகளுக்கு அச்சுறுத்தலைக் கொடுத்தது. இந்த எதிர்ப்பைத்தான் இடது கட்சிக்குள் பார்ட்ஸ் பிரதிநிதித்துவப்படுத்தினார். பல ஆண்டுகளாக அவர் இடது கட்சிக்கும் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் மாநில அளவில் உடன்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்து வந்திருந்தார். தேசிய மட்டத்திலும் உடனடியாக சமூக ஜனநாயகக் கட்சி உடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருந்தார். பார்ட்ஸ் சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் சீக்மார் காபிரியலுடன் சுமுக உறவுகளைக் கொண்டுள்ளார். அவ்வப்பொழுது அவரை இவர் பேர்லினில் உள்ள Einstein Cafe ல் பார்க்கச் செல்வதுண்டு. பார்ட்ஸ் தன்னுடைய கட்சியின் அமைதிவாத போக்குகளையும் தூர எறிந்து சில காலம் கட்சியை சர்வதேச "சமாதான செயற்பாடுகளுக்காக" ஜேர்மனிய இராணுவம் பயன்படுத்தப்பட வேண்டிய தேவையை உணருமாறு கோரினார். இரு முகாம்களுக்கு இடையே மோதல்கள் குறிப்பிடத்தக்க வகையில் பிரண்டன்பேர்க் மாநிலத்தின் புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளின்போது வெளிப்பட்டது. இடது கட்சிக்கும் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் மாநிலத்தில் ஒரு கூட்டணி கூடாது என்று லாபொன்டைன் பகிரங்கமாக எதிர்த்தார். அதில் பொதுத்துறையில் ஐந்து வேலைகளில் ஒரு வேலை அகற்றப்பட வேண்டும் என்ற திட்டம் உடன்பாட்டில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. தன்னுடைய பங்கிற்கு பார்ட்ஸ் பிராண்டன்பேர்க் உடன்பாட்டினை பாதுகாக்க முற்பட்டார். இரு கட்சிகளும் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு கூட்டணி உடன்பாட்டை அடைந்தன. லாபொன்டைன் மற்றும் பார்ட்ஸ் இன் பிளவுகள் பற்றிய பல வேறுபட்ட பிரதிபலிப்புகள் கட்சிக்குள் இருக்கும் கடுமையான வேறுபாடுகளின் தன்மைகளைக் காட்டுகின்றன. மேற்குப் புறத்தில் பிராந்திய அமைப்புக்கள் பார்ட்ஸ் உடைய இராஜிநாமாவிற்கு அழைப்புவிட்டிருக்கையில், கட்சியின் அனைத்து ஐந்து பிராந்திய அமைப்புக்களும் கிழக்கு ஜேர்மனியில் தேசிய செயலாளருக்கு ஆதரவாக உள்ளன. அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கை ஜனநாயக சோசலிசத்திற்கான முன்னணி (Forum for Democratic Socialism) என்பதின் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த அரங்கு இடது கட்சியினுள் ஒரு வலதுசாரிப் போக்கு ஆகும். இது சமூக ஜனநாயகக் கட்சியும்-இடது கட்சியும் பேர்லின் செனட்டில் கொண்டிருந்த சமூக எதிர்ப்புக் கொள்கைகளை இடது பக்கமிருந்து வரும் எதிர்ப்பில் இருந்து பாதுகாக்க வெளிப்பட்டிருந்தது. ஒரு குறுகிய, கடினச் சொற்கள் நிறைந்த அறிக்கையில் இடது கட்சியின் இணைத் தலைவர் லோதார் பிஸ்கி (முன்னாள் PDS) பார்ட்ஸ் இற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார். அதே நேரத்தில் இடது கட்சியின் துரிஞ்சியா பாராளுமன்றப் பிரிவின் தலைவர் போடோ ராமலோ Berliner Zeitung பத்திரிகையிடம், " பார்ட்ஸ் இராஜிநாமா என்று இப்பொழுது கோரப்படுவது ஒரு காரில் இருந்து ஒரு சக்கரத்தை வேண்டுமேன்றே அகற்றப்பட வேண்டும் என்பதற்கு ஒப்பானது ஆகும்." இந்த முழு விவகாரத்தின் வியத்தகு கூறுபாடு இடது கட்சிக்குள் மோதல் நடத்தப்படும் விதமாகும். உண்மையாக இதிலடங்கியுள்ள பிரச்சினைகளை எவரும் ஆராய விரும்பவில்லை. மாறாக தனிக் கடிதங்கள் என்று கூறப்படுபவற்றில் இருந்து விவரங்கள் செய்தி ஊடகத்திற்கு கொடுக்கப்பட்டு, கட்சியின் போக்குகளை செல்வாக்கிற்கு கொண்டுவர முயற்சிகள் உள்ளன. இந்த விவாதத்தில் உத்தியோகபூர்வமாக லாபொன்டைன் தொடர்பு கொண்டிருக்கவில்லை. பார்ட்ஸ் வேறுபாடுகள் உள்ளன என்பதை மறுக்கிறார். இது எதிர் முகாம்களுள் கொள்கையளவில் அரசியல் வேறுபாடுகள் ஏதும் இல்லை என்பதைத்தான் நிரூபிக்கிறது. லாபொன்டைனுக்கும் பார்ட்ஸ் இற்கும் இடையே உள்ள மோதல் இடதுகட்சி அண்மையில் முதலாளித்துவ முறைக்கு எந்தக் குறிப்பிட்ட விதத்தில் முட்டுக் கொடுக்கும் என்பதை நிர்ணயிக்கக்கூடும். சமூக முரண்பாடுகள் பெருகியிருக்கையில், லாபொன்டைன் இடது கட்சி முன்கூட்டி மத்திய அரசாங்கத்தில் பங்கு பெறுவது பற்றி நடவடிக்கை எடுத்தால், அது கட்சியை விரைவில் இழிவுபடுத்திவிடும் என்று உறுதியாக இருக்கிறார். ஏனெனில் அந்நிலையில் அது முதலாளித்துவத்தின் கருவியாகச் செயல்பட முடியாது. ஆனால் பார்ட்ஸ் இற்குப் பின்னால் இருக்கும் செல்வாக்குக்குழு லாபொன்டைனின் இடது வார்த்தைஜாலங்கள் மக்கள் அதிருப்தியையும், அதிகாரத்தில் இருக்கும் இடது கட்சியின் சமூக விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் கிளர்ந்தெழச்செய்துவிடக்கூடும் என்று அஞ்சுகின்றது. அத்துடன் நாட்டின் கிழக்கே அரசியல் உறுதித்தன்மைக்கு முக்கிய காரணி என்ற அதன் பாத்திரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்று கருதுகிறது. இந்த தந்திரோபாய வேறுபாடுகளுக்கு அடித்தளத்தில் இரு முகாம்களும் நிபந்தனையற்ற முறையில் முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கம் எது வந்தாலும் அதற்கு எதிராகக் பாதுகாக்க விழைகின்றன. |