WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan election: The two faces of the
United Socialist Party
இலங்கை தேர்தல்: ஐக்கிய சோசலிச கட்சியின் இரண்டு முகங்கள்
By Wije Dias
14 January 2010
Use this version
to print | Send
feedback
சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) தேர்தல் பிரச்சாரத்தின் போது, சில
சமயங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது: ஏன் மூன்று சோசலிச வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்கள்?
சோசலிச சமத்துவக் கட்சிக்கும் நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி (ஐ.சோ.க.) போன்ற
ஏனைய கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?
பல தசாப்தங்களாக கோட்பாடு மற்றும் வேலைத் திட்டம் பற்றிய விடயங்களில் இத்தகைய
மத்தியதர வர்க்க, தீவிரவாத அமைப்புக்களுக்கும் சோ.ச.க. க்கும் இடையில் பாலத்தால் இணைக்க முடியாத
வர்க்க இடைவெளி இருப்பது பற்றி சோ.ச.க. விளக்கியுள்ளது. தொழிலாள வர்க்கம் ஆளும் வர்க்கத்தின் அனைத்து
பிரிவுகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக சோ.ச.க. போராடி வந்துள்ளது.
ஐ.சோ.க. மற்றும் நவசமசமாஜக் கட்சியும், தொழிலாளர்களை பிரதான முதலாளித்துவ கட்சிகளில் ஏதாவது
ஒன்றுக்கு கீழ்ப்படுத்துவதன் மூலம் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் துணைக் கருவிகளாகவே செயற்பட்டு வந்துள்ளன.
கடந்த காலத்தில் இத்தகைய விஷயங்கள் தெளிவற்றதாக தோன்றியிருக்கலாம். இன்று,
இலங்கை முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடியின் கீழ், இத்தகைய முன்னாள் தீவிரவாத கட்சிகளுக்கும் முதலாளித்துவ
வர்க்கத்தின் கட்சிகளுக்கும் இடையிலான உறவு வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, மத்திய கொழும்பில், ஐ.சோ.க. யின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய,
வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் அதன் பங்காளிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் மக்கள் பிரிவுடன் ஒரே மேடையில் ஏறினார். தற்போதைய ஜனாதிபதி தேர்தலில், யூ.என்.பி. யும்
சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு
எதிரான ஒரு "பொது வேட்பாளராக போட்டியிடும்" முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை
ஆதரிக்கின்றன.
இது எதுவுமே, "சோசலிச"
ஜயசூரிய போலித்தனமான "சுதந்திரத்துக்கான மேடையில்" பங்கெடுத்துக்கொண்டு, வலதுசாரி அரசியல்வாதிகளை
ஜனநாயக உரிமைகளை காப்பவர்களாக பாராட்டி, அதற்குப் பிரதியுபகாரமாக பாராட்டு மழையை பெற்றுக்கொள்வதையும்
தடுக்கவில்லை. யூ.என்.பி. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) மக்கள் பிரிவையும் பொறுத்தவரையில்,
ஜயசூரிய அவற்றுக்கு ஜனநாயக நற்சான்றிதழ்கள் வழங்கி, அதன் மூலம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு
எதிரான இராஜபக்ஷ அரசாங்கத்தின் இனவாத போரை ஈவிரக்கமின்றி நடத்திய பொன்சேகாவை ஆதரிக்க
உதவியதில் ஒரு முக்கியமான சேவை செய்துள்ளார்.
அந்தக் கூட்டம், சண்டே
லீடர் பத்திரிகையின்
ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க தனது அலுவலகத்தை நோக்கி காரை ஓட்டிச் சென்றபோது பட்டப் பகலில் கொல்லப்பட்ட
ஆண்டு நிறைவை குறிப்பதற்காக கூட்டப்பட்டிருந்த நிலையில், அது மிகவும் மோசடித்தனமானதாகும். அவரது கொலையானது
பாதுகாப்பு படையினரின் உடந்தையுடன், இல்லையெனில் அவர்களது கட்டளையின் கீழ் இயங்கும் அரசாங்க சார்பு
கொலைப்படைகள் நடத்திய நூற்றுக்கணக்கான கொலைகளில் ஒன்றாகும். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்
போது, விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை இராஜபக்ஷ மற்றும் பொன்சேகா முகாங்கள்
ஒருவருக்கொருவர் எதிராக சுமத்திக்கொண்டனர். உண்மை என்னவெனில், இந்தகைய கொலைப் படைகளின் குற்றங்களுக்கு
ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் ஜெனரல் பொன்சேகா இருவருமே பொறுப்பாளிகளாவர்.
இராஜபக்ஷவுக்கு எதிரான ஜனநாயக மாற்றீடு என்ற ஆடையை ஜெனரல் பொன்சேகாவுக்கு
அணிவிக்க யூ.என்.பி. யும் அதன் பங்காளிகளும் ஏக்கத்துடன் முயற்சிக்கின்றனர். ஜயசூரிய அந்தக் கூட்டத்தில்
அவர்களுடன் சேர்வதற்கு கடமைப்பட்டுள்ளார். பொன்சேகா பற்றி அவர் மெளனமாக இருந்தாலும்,
பொன்சேகாவின் ஆதரவாளர்களை பாராட்டுவதில் அவருக்கு குற்ற மனப்பான்மை இருக்கவில்லை. கடந்த ஆண்டு
விக்கிரமதுங்கவின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பேசிய ஜயசூரிய, "சட்டவிரோத கொலைகளுக்கு
முடிவுகட்டவும் ஜனநாயகத்தை உத்தரவாதம் செய்யவும்", யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும்
ஸ்ரீ.ல.சு.க. மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீரவுடன் சேர்ந்து சுதந்திரத்துக்கான மேடையை உருவாக்க
தீர்மானம் எடுத்ததாக அவர் பெருமையாக கூறிக்கொண்டார். "இந்த சுதந்திரத்துக்கான மேடையை" உருவாக்கும்
திட்டத்தை நான்தான் பிரேரித்தேன் என கூறுவதில் நான் பெருமைப்படுகின்றேன்," என அவர் பிரகடனம்
செய்தார்.
ஜயசூரிய தொடர்ந்தும் புளுகினார்: "அப்போதிலிருந்து நாம் குறிப்பிடத்தக்கவாறு ஒரு
வருடத்தை கடந்து வரவில்லையா! அரசியல் கட்சிகளின் ஒரு வெளிப்படையான கூட்டணிக்குப் பதிலாக, புதிய மாதிரி
ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என நான் பிரேரித்தேன். இப்போது அந்தக் கருத்துக்கு ஆதரவு கிடைத்துள்ளது.
நமது முழுமையான நோக்கம் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாகும். அதற்கு நாம் ஜனாதிபதி
சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்ட வேண்டும். அரசியல் ரீதியாக குறிவைக்கப்பட்ட பொலிஸ் வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு
முகங்கொடுத்து நாம் இதுவரை காலம் முன்நகர்ந்துள்ளோம்." "இவர்களை ஒன்று சேர்ப்பது சாத்தியமற்றது என
பலர் அவநம்பிக்கையாக கருதிய சமூக சக்திகளை ஒன்று சேர்ப்பதில் இந்தக் கூட்டணி சமாளித்துக்கொண்டது."
யார் ஆட்சிக்கு வந்தாலும் சுதந்திரத்துக்கான மேடை தொடர வேண்டும் என பிரகடனம் செய்து அவர் உரையை
முடித்தார்.
அது உண்மையிலேயே ஒரு கவனத்தில் எடுக்க வேண்டிய கூட்டணியாகும். அது ஐ.சோ.க. மற்றும்
கடந்த ஆண்டு சுதந்திரத்துக்கான மேடையில் இணைந்துகொண்ட நவசமசமாஜக் கட்சியினதும் அரசியல் சீரழிவுக்கு
அத்தாட்சியாக உள்ளது. இந்த இரண்டு கட்சிகளுமே பல ஆண்டுகளாக பழமைவாத, முதலாளித்துவ யூ.என்.பி. உடன்
ஒப்பிடுகையில் இராஜபக்ஷவின் ஸ்ரீ.ல.சு.க. "குறைந்த தீமையாக" இருப்பதாகக் கூறி, அதற்கு ஆதரவளிக்கும்படி
தொழிலாளர்களை ஊக்குவித்தன. இப்போது முன்னைய "பெரிய தீமையுடன்" ஒரு கூட்டணியை அமைப்பதற்கு தான்
முன்நின்றதாக ஜயசூரிய வெட்கமின்றி கூறிக்கொள்வதோடு, இப்போது யூ.என்.பி. யினர் "ஜனநாயகவாதிகள்" என
புகழ் பாடுகின்றார்! பொன்சேகாவின் பெயர் குறிப்பிடப்படாத அதே சமயம், சொல்லப்படாத செய்தி
என்னவெனில், ஜெனரலின் மூலமாகத்தான் இராஜபக்ஷவின் "ஜனாதிபதி சர்வாதிகாரத்துக்கு" முடிவுகட்ட முடியும்
என்பதேயாகும். மேலும், தேர்தலுக்குப் பிறகும் உறவுகளை தொடர ஜயசூரிய விரும்புகிறார்.
இவை அனைத்துமே விக்கிரமசிங்க மற்றும் சமரவீரவின் காதுகளுக்கு சங்கீத
கானங்களாக உள்ளன.
அவர்கள் குறைந்தபட்சம் தற்போதைக்கு இப்படியான வெறுக்கத்தக்க அரசியல் நாடகத்துடன் சேர்ந்து
செல்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஜயசூரியவை பாராட்டிப் பேசிய ரணில் விக்கிரமசிங்க, "இந்த
சக்தியை உருவாக்குவதில் அவர் முன்முயற்சி எடுத்தார். நாம் அவரை பின்தொடர்ந்தோம். இன்று நாம் வெகுதூரம்
முன்னேறியுள்ளோம். நான் சிறிதுங்கவுக்கு மரியாதை செலுத்துகிறேன். கொலை செய்யப்படலாம் என்ற பயத்தில்
நாம் வெளியேற அஞ்சினோம். அப்போது சிறிதுங்கதான் முன் வந்தார். அது பதவியிலிருக்கும் ஜனாதிபதியை நாம்
சவால் செய்யக் கூடியதான வழியை திறந்துவிட்டது," என்றார். உண்மையிலேயே ஐ.சோ.க. மற்றும்
நவசமசமாஜக் கட்சியும் இல்லாமல் யூ.என்.பி. ஒரு ஜனநாயக முகமூடியை அணிந்துகொள்வது மிகவும்
கடினமாகத்தான் இருந்திருக்கும். யூ.என்.பி. 1980களின் கடைப்பகுதியில் கொலைப் படைகளின் நடவடிக்கைகள்
உட்பட ஜனநாயக விரோத குண்டர் தாக்குதலை நடத்திய ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
அதே போல், "இந்த மேடை தொடர்ந்து இருக்க வேண்டும்" என சமரவீரவும்
புகழ்பாடினார். யூ.என்.பி. உடனான "சிந்தாந்த வேறுபாடுகளை" ஓரங்கட்டிவிட்டு அதனுடன் கூட்டணி
சேர்ந்துகொண்டதற்காக ஜயசூரியவையும் நவசமசமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவையும் அவர்
பாராட்டினார். இராஜபக்ஷவுக்கு எதிரான எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் சேர்வதற்காக ஒரு படி மேலும்
செல்லும்படி ஜயசூரியவுக்கு வேண்டுகோள் விடுத்த சமரவீர, "நாம் இந்த சக்தியை, அதாவது அரச குடும்பத்தை
முடிவுக்குக் கொண்டுவர திரும்ப வேண்டும்." என்றார். ஒரு நேர்மையான மற்றும் நம்பத்தகுந்த நண்பனாக
ஜயசூரியவை பாராட்டிய பின்னர் அவர் பிரகடனம் செய்ததாவது: "துரதிஷ்டவசமாக அவருக்கு வாக்களிக்கக் கூடிய
நிலையில் நான் இல்லை. எனது கட்சி ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்கின்றது. எவ்வாறாயினும் நான் வெளிப்படையாக
கூறுகிறேன். நான் எனது இரண்டாவது விருப்பு வாக்கை சிறிதுங்கவுக்கு கொடுப்பேன்."
இதுவரையில் பொன்சேகாவை வெளிப்படையாக ஆதரிப்பதை ஐ.சோ.க. தவிர்த்துக்கொண்டது.
ஆனால், அது தேர்தல் இரண்டாவது சுற்றுக்குச் சென்றால் இன்னமும் நடக்கலாம். நவசமசமாஜக் கட்சியைப் பொறுத்தவரையில்
அதன் தலைவர் கருணாரட்ன மறுபடியும் யோசிக்கின்றார். சுதந்திரத்துக்கான மேடையில் யூ.என்.பி. உடன் சேர்ந்தது
ஒரு தவறாக இருக்கலாம் என்றும் கூட அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார். கருணாரட்னவின் குற்ற உணர்ச்சியில்
யாரும் ஏமாறக் கூடாது. எண்ணற்ற சந்தர்ப்பவாத கூட்டணிகளின் மிகுந்த அனுபவம் கொண்ட அவர், தனது புதிய
திட்டம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கண்களின் முன் அம்பலமாகி வருகின்றது என்பதை உணர்ந்து கொண்டு,
பின்வாங்கத் தொடங்கினார்.
விக்கிரமசிங்க மற்றும் சமரவீரவுடனான சுதந்திரத்துக்கான மேடை பற்றிய ஜயசூரியவின்
குறிப்புகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நோக்கிய ஐ.சோ.க. யின் தேர்தல் வாய்வீச்சுக்களில்
இருந்து குறிப்பிடத்தக்களவு வேறுபட்டிருந்தது. "முதலாளித்துவ கசாப்பு கடைக்காரர்களுக்கு எதிராக சிறிதுங்க
ஜயசூரியவை ஆதரியுங்கள்" என்ற தலைப்பைக் கொண்ட ஐ.சோ.க. யின் புதிய அறிக்கை, "இரண்டு பிரதான
முதலாளித்துவ வேட்பாளர்களுக்கிடையில் பொது மக்களுக்கு எந்தத் தேர்வும் கிடையாது," என தெரிவிக்கின்றது.
இராஜபக்ஷ அரசாங்கத்தின் குற்றங்களை கண்டனம் செய்தபின் அந்த அறிக்கை தொடர்ந்து
தெரிவித்ததாவது: "ஜெனரல் சரத் பொன்சேகா, போர் முழக்க பேரினவாதிகள் மற்றும் நவீன தாராளவாத
முதலாளிகளின் கைகளில் ஒரு பகடைக் காயாக மாறிவிட்டார். கடந்த நான்கு வருடங்களில் இராஜபக்ஷ
அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட குற்றங்களின் ஒரு பகுதியாக அவர் இருந்துள்ளார். மஹிந்த-கோட்டாபய
(இராஜபக்ஷ சகோதரர்கள்) உடன் அவர் முறித்துக் கொண்டது, எந்தவொரு கொள்கை வேறுபாட்டினாலும்
அல்ல. இத்தகைய இரு இராஜபக்ஷக்களுக்கும் உள்ளே இருக்கும் அதே கர்வமான பாணியைத்தான் அவரும் கூட
வெளிக்காட்டினார். இராஜபக்ஷவை ஒழிப்பதற்காக பொன்சேகாவுக்கு வாக்களிப்பதும் பொன்சேகாவுக்கு எதிராக
இராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதும் அழிவுகரமானது."
இவை அனைத்துமே எடுத்துக் காட்டுவது என்னவென்றால், தனது வாயில் ஒரே சமயத்தில் இரண்டு
பக்கமும் பேசும் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் நடைமுறையின் ஒரு முன்னணி எடுத்துக் காட்டாக ஜயசூரிய உள்ளார்.
பொன்சேகாவை "போர் முழக்க பேரினவாதிகள் மற்றும் நவீன தாராளவாத முதலாளிகளின் ஒரு பகடைக்காய்"
என்று ஐ.சோ.க. பிரகடனம் செய்யும் அதே சமயம், ஜெனரலை ஆதரிப்பவர்களுடன் ஜயசூரிய தோள்களை உரசிக்கொள்வதோடு
பரஸ்பரம் முதுகில் தட்டிக் கொடுக்கின்றார். தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரையில் அத்தகைய சந்தர்ப்பவாத
சூழ்ச்சிகள் தவிர்க்க முடியாத அழிவுகரமான பின்விளைவுகளைக் கொண்டதாகும்.
யார் தேர்தலில் வெற்றி பெற்றாலும், அடுத்து வரும் அரசாங்கம், உழைக்கும் மக்கள் மீது
அழிவுகரமான "பொருளாதார போரை" தொடுப்பதோடு, பல தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டுப்
போரின் போது அபிவிருத்திசெய்யப்பட்ட பொலிஸ்-அரச இயந்திரத்தை எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்கப் பயன்படுத்தும்
என சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே எச்சரிக்கை விடுக்கின்றது. இந்த நிகழ்ச்சி நிரலை திணிப்பதற்கான
மிகவும் நம்பத்தகுந்த கருவியாக பொன்சேகாவை ஆளும் தட்டின் சக்திவாய்ந்த பிரிவினர் ஆதரிக்கின்றனர். ஐ.சோ.க.
மற்றும் நவசமசமாஜக் கட்சியும் சுதந்திரத்துக்கான மேடையில் சேர்வதன் மூலம், யூ.என்.பி. யும் அதன் பங்காளிகளும்
தம்மை "ஜனநாயகவாதிகளாக" காட்டிக்கொள்ள உதவுகின்றன. அவர்கள் அதற்குப் பதிலாக பொன்சேகாவை
ஜனநாயக மாற்றீடாக காட்டுகின்றன. ஜெனரல் ஜனாதிபதியாக வெற்றி பெறுவாராயின், அவரது ஆட்சிக்கும் தொழிலாள
வர்க்கத்துக்கு எதிரான அதன் குற்றங்களுக்கும் ஐ.சோ.க. மற்றும் நவசமசமாஜக் கட்சியும் அரசியல் பொறுப்பாளிகளாவார்கள்.
தொடக்கத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு திரும்புவோம். இந்த சம்பவம் எடுத்துக் காட்டும்
உண்மை என்னவென்றால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்று சோசலிச வேட்பாளர்கள் கிடையாது. ஒரு
சோசலிச வேட்பாளரே உள்ளார். அனைத்துலகவாத, சோசலிச கோட்பாடுகளின் அடிப்படையில் தொழிலாள
வர்க்கத்தின் சுதந்திரமான அரசியல் நலன்களுக்காகப் போராடும் ஒரே ஒரு வேட்பாளர் சோசலிச சமத்துவக்
கட்சியின் விஜே டயஸ் மட்டுமே. இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறும் அதில் பங்கெடுக்குமாறும் தொழிலாளர்களுக்கும்
இளைஞர்களுக்கும் சோ.ச.க. வேண்டுகோள் விடுக்கின்றது. |