World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan election: Rajapakse promises "economic war" இலங்கை தேர்தல்: இராஜபக்ஷ "பொருளாதார யுத்தத்திற்கு" உறுதியளிக்கின்றார் By Wije Dias, SEP presidential candidate ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கை ''எதிர்காலம் பற்றிய ஒரு பார்வை" ("Vision for the Future) 100 பக்கங்களுக்கும் மேலான பொய்களையும் தவறான உறுதிமொழிகளையும் கொண்டிருக்கிறது. ஆனால் அதில் உள்ள ஒரு முக்கிய கருத்து உண்மையெனத் தெரிகிறது: ஜனாதிபதி "பொருளாதார யுத்தம்" ஒன்றை உறுதியளிக்கிறார். அதை நிச்சயமாக அவர் அல்லது அவருடைய முக்கிய முதலாளித்துவ போட்டியாளரான ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி பெற்றாலும் தொழிலாளர்கள் சந்திக்கவேண்டியிருக்கும். தன்னுடைய சிறந்த பொருளாதார சாதனைகளைப் பற்றி பெருமை அடித்துக் கொள்வதற்கு இராஜபக்ஷ "பொருளாதார யுத்தம்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். இலங்கைக்கு ஒரு வனப்பான எதிர்காலத்தைக் காட்டும் விதத்தில் "ஆசியாவில் எழுச்சி பெற்றுவரும் அதிசயம்" என்று கூறுகிறார். தேர்தல் முடிந்த பின்னர் ஒரு "பொருளாதார யுத்தம்" வரும். ஆனால் அது இராஜபக்ஷ இட்டுக்கட்டும் கற்பனையானதாக இருக்காது. ஆயிரக்கணக்கானவர்கள் இறப்பு, நூறாயிரக்கணக்கானவர்கள் இடம் பெயர்ந்தமை, சிறு நகரங்கள் அழிந்துபோனமை, வானளாவ உயர்ந்துள்ள விலைகள் என யுத்தத்தின் சுமைகள் அனைத்தையும் தொழிலாள வர்க்கத்தின் மீது இராஜபக்ஷ சுமத்திய நிலையில், அவர் பெருநிறுவன உயரடுக்கின் இலாபங்களுக்காக தொழிலாளர்களை இன்னும் அதிக தியாகங்களை செய்யக் கட்டாயப்படுத்துவார். பொன்சேகா அல்லது இராஜபக்ஷ இருவரில் எவரும் இலங்கையின் பொருளாதாரம், மக்களை எதிர்கொண்டுள்ள உண்மையான நிலை பற்றிப் பேசுவதில்லை. பொன்சேகா நகைப்பிற்கிடமான வகையில் ஒவ்வொரு பொருளாதார இடர்பாட்டையும் இராஜபக்ஷ ஆட்சியின் ஊழல் மீது சுமத்துகையில், ஜனாதிபதி பிரச்சினைகளே இல்லை என்று எளிதில் மறுத்துவிடுகிறார்? கடந்த நான்கு ஆண்டுகளில் தான் நாட்டின் தனிநபர் வருமானத்தை இருமடங்கு ஆக்கிவிட்டதாக இராஜபக்ஷ அபத்தமான முறையில் கூறுகிறார். அடுத்த ஆறு ஆண்டுகளில் அதை இன்னும் இருமடங்காக்க போவதாகவும் கூறுகிறார். அவருடைய கொள்கைகளால் தீவு உலகப் பொருளாதார நெருக்கடியால் பாதிப்படையாமல் எழுந்துவந்துவிட்டது என்று ஜனாதிபதி பீற்றிக் கொள்ளுகிறார். கொழும்பு பங்குச் சந்தை உலகிலேயே இரண்டாம் விரைவில் வளர்ந்து கொண்டிருக்கும் சந்தை என்ற "பெருமையை" பெற்றுள்ளதாகவும் அவர் பறைசாற்றிக் கொள்ளுகிறார். இராஜபக்ஷ முன்வைக்கும் புள்ளிவிவரங்கள் கொழும்பு பங்குச் சந்தையில் தேர்ந்த ஏமாற்றுக்காரர்கள் காட்டும் கணக்குகளைப் போல் உள்ளன. வரலாற்றில் எந்த நாடும் அதன் தனிநபர் வருமானத்தை நான்கு ஆண்டுகளில் இரு மடங்கு ஆக்கியதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் மதிப்பிடப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஆண்டு ஒன்றிற்கு 6 சதவிகிதம்தான். இந்தத் தன்னுடைய புள்ளிவிவர மோசடியை எப்படி இராஜபக்ஷ கொண்டுவர முடிந்தது? தன்னுடைய புள்ளிவிவரங்களில் 2008ல் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் உயர்ந்துவிட்ட விலை ஏற்றங்களையும் அவர் சேர்த்துள்ளார். ஒரு கிலோகிராம் அரிசியின் விலை உயர்ந்துவிடுவதால் ஒருவருக்கும் கூடுதலான அரிசி கிடைத்துவிடுவதில்லை; அதேபோல்தான் பொருளாதார வளர்ச்சியும். இராஜபக்ஷ தன்னுடைய புள்ளிவிவரங்களை நாட்டின் மத்திய வங்கியில் இருந்து பெறுகிறார் என்பது எந்த அளவிற்கு அரசாங்க அமைப்பும் அரசியல் ஆளும்வர்க்கமும் தீவின் உள்நாட்டுப் போரினால் மதிப்பிழந்துபோயுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பொய் கூறுதல் என்பது அரசாங்க அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வாழ்க்கை நெறியாகிவிட்டது. உண்மை என்ன என்றால், இராஜபக்ஷ தீவை இயன்ற அளவிற்கு அவருடைய போர்ச் செலவுகளுக்காக அடகு வைத்துவிட்டார். அரசாங்கக் கடன் கடந்த செப்டம்பர் மாதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90 சதவிகிதம் என்று ஆயிற்று. அரச நிதியங்கள் கரைந்துபோகாமல் இருந்ததற்கான ஒரே காரணம் இராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து $2.6 பில்லியன் பெற்று கொடுக்க வேண்டிய கடன் நெருக்கடியை சமாளித்ததனால்தான். தேர்தலை முன்கூட்டியே இராஜபக்ஷ அறிவித்ததின் காரணம் பொருளாதார நிலைமை மோசமாகப் போகிறது என்பது பற்றி அவர் அறித்துள்ளதால்தான். சர்வதேச நாணய நிதியத்தின் மறைமுகமான உடன்பாட்டுடன், தேர்தல் முடியும் வரை அவருடைய பொருளாதார கொள்கைகளின் விளைவுகளை மறைக்க அவர் வரவுசெலவுத்திட்ட அறிவிப்பை ஒத்திவைத்துள்ளார். தேர்தல் உறுதிமொழிகளுக்கு செலவழிக்க பணம் இல்லை என்பது ஒரு புறம் இருக்க, அடுத்த அரசாங்கம் பொதுச் செலவினங்களை இன்னும் குறைக்க முற்படும். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 2011க்குகள் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை 4 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும். அப்படி இருக்கும்போது, இரு வேட்பாளர்களில் ஒருவருக்கும் போலீஸ் அல்லது இராணுவச் செலவுகளை குறைக்கும் நோக்கம் இல்லாத நிலையில், பொதுக் கல்வி, சுகாதாதரம், பொதுநலம் மற்றும் விலை மானியத் தொகைகளுக்கு நிதிகள் கிடைக்காது. ஏற்கனவே ஊதியத் தேக்கத்தில் இருக்கும் பொதுத்துறைத் தொழிலாளர்கள் இன்னும் அதிக தியாகம் செய்யக் கோரப்படுவர். மறுகட்டமைத்தல், தனியார்மயமாக்குதல் ஆகியவை விரைவுபடுத்தப்படும். அதில் மின்விசை மற்றும் பெட்ரோலிய துறைகள் வரிசையில் முதல் இடங்களில் இருக்கும். இராஜபக்ஷ தன்னுடைய அறிக்கைக்கேற்ப நடந்து கொள்ளுவார் என்று எவரேனும் நினைத்தால், அவருடைய மகிந்த சிந்தனா அல்லது மகிந்த பார்வை 2005க்கான தேர்தலில் இருந்த உடைந்துபோன உறுதிமொழிகளை நினைவுகூர வேண்டும். சமாதனத்திற்கு உறுதியளித்தார், மாறாக நாட்டை மீண்டும் ஒரு மிருகத்தன, இனவாதப்போரில் மூழ்கடித்தார். இளைஞர்களுக்கு வேலை தருவதாக உறுதியளித்தார், மாறாக அவர்களை மரணத்திற்குத்தான் அனுப்பிவைத்தார். வாழ்க்கைத் தரங்களை உயர்த்துதல், கல்வி, சுகாதரம் போன்ற பணிகளை முன்னேற்றுவித்தல் என்ற உறுதிமொழிகள் பொய்யாகிவிட்டன. வாழ்க்கைச் செலவினங்கள் வானளாவ உயர்ந்து, வறுமை அதிகரித்துவிட்டது. தன்னுடைய "பொருளாதாரப் போர்" பற்றிய பொருளை கடந்த மே மாதம் இராஜபக்ஷ அடிக்கோடிட்டுக் காட்டினார். அவர் "எமது வீரமிகு துருப்புக்கள் எட்டு மணி நேரம் என்றில்லாமல் நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம் மூன்று முழு ஆண்டுகளாக பணிபுரிகின்றன" என்றார். அவர்களுடைய தியாகங்களை நினைவில் கொள்ளுமாறு அவர் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார், அவர்கள் முன்னுதாரணம் பின்பற்றப்பட வேண்டும் என்றும், "வேலை செய்யும் நேரத்தை மட்டும் நினைக்கக்கூடாது" என்றும் கூறினார். நான்கு ஆண்டுகளுக்கு அனைத்துத் தொழிற்சங்கங்களின் உதவியுடனும் இராஜபக்ஷ கெளரவமான ஊதியங்கள், வேலைநிலைமைகள் பற்றிய ஆகக்குறைந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளைக்கூட அடக்கினார். போர் முயற்சியை நாசப்படுத்துவதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுப்பதாகவும், வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை பலமுறையும் குற்றம் சாட்டினார். இராணுவம் போலீசை பயன்படுத்தி வேலைநிறுத்தங்களை முறித்தார். கடந்த ஆண்டு இறுதியில், ஜனாதிபதி தன்னுடைய அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி துறைமுகம், மின்துறை, பெட்ரோலியம், நீர்த்துறை தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான உரிமை இல்லை என்று தடை விதித்தார். இராஜபக்ஷ அல்லது பொன்சேகா தேர்தலில் வெற்றிபெற்றாலும் அடுத்த அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அதிகரித்த இதே போலீஸ் அரசாங்க நடவடிக்கைகளைத்தான் பயன்படுத்தும். இவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான புதிய "பொருளாதாரப் போரில்" பயன்படுத்தப்படும். எனவேதான் இராணுவ, போலீஸ் அளவு அப்படியே வைக்கப்பட்டுள்ளதுடன், அவசரகால நிலைமை மற்றும் அடக்குமுறைச் சட்டங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன. இலங்கையை "ஆசியாவின் அதிசயமாக" மாற்றும் இராஜபக்ஷவின் திட்டம், சாதாரண தொழிலாளர்களை இலக்கு கொண்டது அல்ல. மாறாக அது பெருவணிகத்திற்கும் வெளிநாட்டு முதலீட்டளர்களுக்கும் ஒரு விற்பனைக்குரல் ஆகும். "நம் தாய்நாட்டை, ஒரு கடற்படை வலிமை, விமானத் துறை, வணிகம், எரிசக்தி, அறிவுத் துறை மையமாக வளர்த்து, கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே ஒரு முக்கிய பாலமாக்கி" தீவை அனைத்திற்குமான இணைப்பிடமாக்கவும் அவர் உறுதியளித்துள்ளார். புதிய துறைமுகங்கள், புதிய சர்வதேச விமான நிலையம், கடல் பகுதியில் எண்ணெய் எடுத்தல் மற்றும் தீவை "ஆசியாவின் சிறந்த வணிக மையங்களில் ஒன்றாக்குவது" ஆகிய உறுதிகளைக் கொடுத்துள்ளார். இத்தகைய பெரும் திட்டம் முழு கற்பனையாக போய்விடக்கூடாது என்பதற்காக இராஜபக்ஷ பெருகிவரும் சர்வதேசப் போட்டியைப் பயன்படுத்தும் நம்பிக்கையை கொண்டுள்ளார். குறிப்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே இருக்கும் போட்டியை பயன்படுத்தி இதனால் வெளிநாட்டு முதலீடுகளை பெறவும் இலங்கை வணிகப் பிரிவிற்கு அதிக இலாபங்களை கொடுக்கவும் முனைகின்றார். இவருடைய சமீபத்திய "நோக்கு" ஒரு தயாராகவுள்ள குறைவூதிய தொழிலாளர்களை விநியோகிப்பதை உறுதிப்படுத்துவதன் மூலமாக தொழிலாளர்களின் சமூக நிலையின்மீது நீண்டகால விளைவுடைய தாக்குதலை ஏற்படுத்தும் தன்மையை உடையது. இது இலங்கை பெரும் சக்திகளுக்கு இடையேயான போட்டியினுள்ளும் மோதலுக்குள்ளேயும் இழுக்கப்படும் என்பதையை அர்த்தப்படுத்துகின்றது. இத்திட்டங்கள் அனைத்தும் மிக உறுதியற்ற அஸ்திவாரங்களில் அமைக்கப்பட்டவை. இலங்கை மற்றும் சர்வதேச செய்தி ஊடகத்தில் கூறப்படும் கற்பனைக்கு முற்றிலும் மாறாக, உலகப் பொருளாதார நெருக்கடி இன்னும் முடியவில்லை--அது இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது. தற்போதைய ஸ்திரப்பாடு போன்ற தோற்றம் பாரியளவில் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு டிரில்லியன் கணக்கில் பிணையெடுத்து வாங்கப்பட்ட செயலாகும். ஏற்கனவே முக்கிய கடன் நெருக்கடிகள் கிரேக்கம், அயர்லாந்து போன்ற நாடுகளில் வந்துவிட்டன. அங்கு அரசாங்கங்கள் கொடூர வரவு-செலவுத் திட்டங்களை சுமத்தி தொழிலாள வர்க்கத்தின் மீது அனைத்து செலவினங்களையும் சுமக்கச் செய்துள்ளன. இந்தப் பொருளாதார புயல்களில் இருந்து முற்றிலும் விலக்கு என்பதற்கு மாறாக, இலங்கை குறிப்பிடத்தக்க வகையில் பாதிப்பிற்கு உட்படும். அதன் ஏற்றுமதித் தொழில்கள் அனைத்தும் உலகப் பொருளாதாரச் சரிவினால் பெரும் சேதமுற்றுள்ளன. பல ஆயிரக்கணக்கான வேலைகள் இழக்கப்பட்டுள்ளன. இன்றுவரை, இலங்கை தொழிலாளர்கள் அனுப்பும் பணங்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால் மத்திய கிழக்கில் பொருளாதாரக் கொந்தளிப்பு தாக்குகையில் அது விரைவில் மாறும். மற்ற இடங்களில் உள்ள அரசாங்கங்களை போல், அடுத்த ஜனாதிபதி வங்கிரோத்தான முதலாளித்துவ முறைக்கு முட்டுக் கொடுத்து நிறுத்த தொழிலாள வர்க்கத்தை தியாகங்கள் செய்யுமாறு பணிக்கத் தயங்கமாட்டார். இன்னும் ஒரு எச்சரிக்கை செய்யப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை அடுத்து, பொன்சேகா மற்றும் இராஜபக்ஷ இருவரும் "இனப் பிரச்சினையை" தாங்கள் தீர்க்கப்போவதாகவும் அனைத்து சமூகங்களும் அதையொட்டி நல்லிணக்கத்துடன் வாழ்வர் என்றும் கூறுகின்றனர். அவர்களுடைய மற்ற உறுதிமொழிகளைப் போலவே, இதுவும் ஒரு பொய்தான். இருவருமே கொடூரமான போர்க்குற்றங்களுக்கு பொறுப்பு கொண்டவர்கள். கால் மில்லியன் தமிழ்மக்களை சிறைப்படுத்தியது, வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பை கொண்டது ஆகியவை இனவாத அழுத்தங்களையும் மோதல்களையும் அதிகப்படுத்தத்தான் செய்யும். பிரச்சாரப் போக்கின்போது இவர்கள் இருவரும் தேசியவெறி உணர்வைத் தூண்டும் வகையில் தமிழ் அரசியல்வாதிகளின் உதவியுடன் தாய்நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்ளுகின்றனர். தொழிலாள வர்க்கத்தினர் ஒரு மதிப்பீட்டை செய்துகொள்ளவேண்டும். இகழ்வு, வெறுப்பு, அவநம்பிக்கை ஆகியவை போதாது. பொன்சேகா, இராஜபக்ஷ என்று எவர் அதிகாரத்திற்கு வந்தாலும், தொழிலாளர்கள் மிக உண்மையான ஆபத்துக்களை எதிர்கொள்ளுகின்றனர். தங்கள் வாழ்க்கைத் தரங்களில் மிருகத்தனமாக தாக்குதல், போலீஸ்-அரசாங்க நடவடிக்கைகள், இனவாத அழுத்தங்கள் வன்முறை எனத் தொழிலாளர்களை தூண்டிவிட்டு பிரிக்கும் முயற்சிகள் ஆகியவற்றை எதிர்கொள்ளுவர். இவை அனைத்தும் இலங்கை முதலாளித்துவத்தின் வங்குரோத்தை எடுத்துக்காட்டுகின்றன. அதனால் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள், ஜனநாயக விழைவுகளை தீர்க்க இயலாமல் உள்ளது. தொழிலாள வர்க்கம் தாக்குதலை எதிர்கொள்ளுவதற்கு ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் சுயாதீனமாக தன்னுடைய சொந்த அரசியல் அணிதிரளலுக்கு தயாரிப்பதின் மூலம்தான் முடியும். ஒரு ஜனாதிபதி பொன்சேகா அல்லது ஜனாதிபதி இராஜபக்ஷவிற்கு பதிலாக தெற்கு ஆசியா, சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் ஒரு தொழிலாளர்கள், விவசாயிகளின் அரசாங்கத்திற்கான கோரிக்கை எழுப்பப்பட வேண்டும். சோசலிச சமத்துவ கட்சியும் மற்றும் அதன் வேட்பாளர் விஜே டயஸும் இந்த முன்னோக்கிற்குத்தான் போராடுகின்றனர். எங்கள் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருமாறு உங்களை வேண்டிக்கொள்கின்றோம். |