WSWS :Tamil : வரலாறு
The Revolution Betrayed and the fate of the Soviet
Union
காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியும் சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியும்
By Peter Daniels
25 February 2009
Use this
version to print | Send
feedback
கீழ்வருவது சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அன் ஆர்பர்,
மிச்சிகனில், ஆகஸ்ட் 2007 இல் நிகழ்த்தப்பட்ட ஒரு விரிவுரையாகும்.
சோவியத் அரசின் வர்க்க தன்மை மற்றும் அதனை நோக்கிய நமது அணுகுமுறை குறித்த
பிரச்சினையை நாம் இன்று தலைப்பாக எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சிலர், எதற்கு இந்த கவலை? என்ன
வித்தியாசத்தை இது நிகழ்த்தப் போகிறது? சோவியத் ஒன்றியம் சுமார் 16 வருடங்களுக்கு முன்பாக மறைந்து
போய் விட்டதே, என்றெல்லாம் கூறக் கூடும்.
ஒரு நடைமுறைவாதி இந்த விவாதத்தில் முற்றுமுதலாய் எந்த நோக்கமும் இல்லாததாய் உணரலாம், ஆனால்
மார்க்சிஸ்டுகளுக்கோ இந்த பிரச்சினை முற்றிலும் வேறுபட்டதாய் நிற்கிறது. ரஷ்ய புரட்சியின் 74 வருட வரலாறு
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பெரும் மூலோபாய அனுபவம் ஆகும். அக்டோபர் 1917 முதல் வெற்றிகரமான
சோசலிசப் புரட்சியை அடையாளப்படுத்தியது. அந்த புரட்சியை நோக்கிய ஒருவரின் அணுகுமுறை எவ்வாறாய்
வேண்டுமானாலும் இருந்தாலும் அதனை ஒரு வகை விசித்திரமான விபத்து என்று கருதாத வரையில் அது ஆய்வு செய்யப்படுவதற்கும்
புரிந்து கொள்ளப்படுவதற்குமான ஒன்றாகும். சோவியத் ஒன்றியம் மறைந்து போனது என்றாலும், அது தனது
அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் வரலாறு இன்றி
21ம் நூற்றாண்டு
உலகத்தை ஒருவரால் கருதிப் பார்க்க முடியாது. உலகெங்கிலும், முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் மற்றும் காலனி
மற்றும் அரைக் காலனி நாடுகள் என இருவகை உலகிலும் பில்லியன் கணக்கானவர்களுக்கு இல்லாவிட்டாலும் நூற்றுக்கணக்கான
மில்லியன் மக்களுக்கு அது ஒரு இலட்சிய முன்னோடியாகத் திகழ்ந்தது. ரஷ்ய புரட்சியை முன்னோடியாகக் கொண்டு
நடத்தப்பட்ட மக்கள் போராட்டங்களின் மூலம் சீர்திருத்தங்கள் வெல்லப்பட்டன. அப்புரட்சி நிகழ்ந்ததற்கு புறநிலையான
வரலாற்றுக் காரணங்கள் இருந்துடன் அதேபோல் அதற்கு பின்வந்த அதன் சீரழிவு மற்றும் இறுதியாக கலைந்து போனதற்கும்
இருந்தன. தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாய் ஆயுதபாணி ஆக்குவதற்கும் 21ம் நூற்றாண்டின் போராட்டங்களுக்கு
தயார்படுத்தும் பொருட்டு 20ம் நூற்றாண்டின் படிப்பினைகளை கற்றுக் கொள்வதற்கும், ரஷ்ய புரட்சி மற்றும் சோவியத்
அரசின் தன்மையைப் புரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும்.
ரஷ்யாவில் அக்டோபர் 1917 புரட்சியை தத்துவார்த்த ரீதியாக முன்கணித்த முதல்
மார்க்சிஸ்டாகவும், பின் அந்த புரட்சியின் இணைத் தலைவராகவும், பின் அதன் வரலாற்றாசிரியராகவும் இருந்த
லியோன் ட்ரொட்ஸ்கி தான் அது காட்டிக் கொடுக்கப்பட்டது பற்றி குறித்து எழுதப்பட்ட திட்டவட்டமான செவ்வியல்
படைப்புக்கும் ஆசிரியர். சென்ற சனிக்கிழமையுடன் சரியாக 71 ஆண்டுகளுக்கு முன்தேதியிட்டு எழுதப்பட்ட அறிமுக
உரையுடன், 1936ம் ஆண்டில் காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி
(The Revolution Betrayed)
ËTM வெளியிடப்பட்டது.
ஸ்ராலினிசத்தின் குற்றங்களில் ஒரு புதிய குருதி தோய்ந்த அத்தியாயமான முதலாவது மாஸ்கோ விசாரணைகளின்
அதே காலத்தில் இது நிகழ்ந்ததுடன், முழுமையாக முன்கணிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வு புத்தகத்தின் பக்கங்களிலும்
விளக்கப்படுகிறது.
சோவியத் ஒன்றியம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் ஆய்வு 1923ம் ஆண்டு முதல் இடது எதிர்ப்பாளர்கள்
நடத்திய மொத்த போராட்டத்தின் விளைபொருளாகவும் உச்சமாகவும் அமைந்ததாகும். இந்த போராட்டம் சோவியத்
நிலைமைகளில் இருந்து ஆரம்பித்ததும் இல்லை, அல்லது சோவியத் ஒன்றியத்துக்குள் முடிந்துவிடுவதும் இல்லை. ட்ரொட்ஸ்கி
விளக்கியதைப் போல, உலக முதலாளித்துவ சங்கிலி தனது பலவீனமான கண்ணியில் உடைந்தது தான் அது, ஆனால்
உடைந்தது கண்ணி மட்டும் அல்ல அந்த சங்கிலியே தான். புரட்சியின் தலைவர்கள் பிரம்மாண்டமான முட்டுக்கட்டைகளுக்கு
முகம் கொடுத்தும் அது குறித்தும் நன்கு அறிந்தவர்களாய் இருந்தனர், உள்நாட்டு யுத்தத்தில் தலையீடு செய்த ஏகாதிபத்திய
இராணுவங்கள் மற்றும் வெண்படையை தோற்கடிக்க வேண்டிய உடனடியான சவாலானது அது பிரம்மாண்டமான ஒன்றாக
இருந்தது என்கிற போதும் - அதற்கு அப்பாலும் அந்த தடை இருந்தது என்பதையும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச சீர்கேடும் முதலாளித்துவத்தின் மீட்சியும் நிகழ்ந்து கொண்டிருந்த நிலையில்,
முதலாளித்துவ உலகின் பிற மிக முன்னேறிய பாகங்களில், புரட்சி பிரம்மாண்டமான சந்தர்ப்பங்களை வழங்கின,
புரட்சிகர எழுச்சிகளின் ஒரு காலகட்டத்தை ஆரம்பித்து வைத்ததோடு தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும்
எண்ணற்ற சந்தர்ப்பங்களை உருவாக்கியது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுவது அவசியமாகும்.
காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி
புத்தகத்தின் நமது 1991 பதிப்பில் தனது அறிமுக உரையின் வெகு முதல் பத்திகளிலேயே டேவிட் நோர்த்
விளக்குவது போல, இந்த திறனாய்வு சடவாத இயங்கியலின் அறிவியல் ஆயுதத்தை பயன்படுத்தி மட்டுமே
செய்யப்பட்டிருக்க முடியும், அத்துடன் அதுவே இம் மார்க்சிச வழிமுறையின் வெளிப்பாடாகவும் அபிவிருத்தியாகவும்
ஆகிறது. ஏகாதிபத்தியம் மற்றும் சோவியத் ஒன்றியத்திற்குள்ளிருந்த ஏகாதிபத்தியத்தின் தத்துவார்த்த மற்றும்
அரசியல் முகவர்களிடமும் மற்றும் கம்யூனிச அகிலத்திடம் இருந்தும் ரஷ்ய புரட்சியை பாதுகாப்பதற்கான தனது
போராட்டத்தில், ட்ரொட்ஸ்கியால், புரட்சிக்கும் தொழிலாளர் அரசுக்கும் இடையில் இருந்த அடிப்படை
முரண்பாடுகளை கண்டறியவும் விளங்கப்படுத்தவும் முடிந்தது, விஞ்ஞானபூர்வமாக, வேறு வார்த்தைகளில்
சொல்வதானால், ஒரு வாழும் உயிராக அதனை ஆய்வு செய்ய முடிந்தது. இந்த புத்தகத்தில் "சோசலிசமும்
அரசும்" என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் இது குறிப்பாக மிகச் சக்தி வாய்ந்த வகையில்
விளங்கப்படுத்தப்படுகிறது.
தொழிலாளர் அரசின் இரட்டை குணாம்சமானது அதன் மிகப் பொதுவான உலகளாவிய
முக்கியத்துவம், மற்றும் அதேபோல் ஸ்தூலமாக சோவியத் ஒன்றியத்துடன் தொடர்புபட்ட விடயம் என இரண்டிலுமே
விளக்கப்படுகிறது. இது தலைமையின் பிரச்சினையோ அல்லது தொழிலாளர் அரசுக்கு அதன் இரட்டைத் தன்மையை
அளிக்கும் கொள்கைகளின் பிரச்சினையோ அல்ல மாறாக அதன் இருப்பின் அத்தியாவசிய உண்மையாகும் அது.
ஒவ்வொரு தொழிலாளர் அரசும் (அல்லது சோசலிச அரசும், இந்த இடத்தில் ட்ரொட்ஸ்கி இந்த பதத்தை சற்று
தளர்வாய் பயன்படுத்தும் விதத்தில்) - அது அமெரிக்காவில் என்றாலும் முதலாளித்துவ விநியோக வடிவங்களுடன்
இணைந்த சமூகமயப்பட்ட உற்பத்தியினால் இந்த இரட்டை குணாம்சத்தைக் கொண்டிருக்கும்.
ஸ்ராலினிசத்தையும் அது புரட்சியை எவ்வாறு அழித்தது என்பதையும் நாம் புரிந்து
கொள்வதற்கு முன்பாக, அது சிறப்புரிமை எடுத்துக் கொண்ட சோவியத் அதிகாரத்துவத்தின் ஆட்சி என்பதை புரிந்து
கொள்வது அவசியமாகும். அத்துடன் சோவியத் அதிகாரத்துவத்தை நாம் புரிந்து கொள்வதற்கு முன்னதாக,
அதிகாரத்துவவாதம் என்பதன் அர்த்தத்தை ஒரு விஞ்ஞான, மார்க்சிச நிலைப்பாட்டில் இருந்து நாம் புரிந்து
கொள்ள வேண்டும். இத்தகையதொரு ஆய்வின் தத்துவார்த்த அடித்தளங்களை ட்ரொட்ஸ்கி தெளிவுபட
எடுத்துரைத்தார்.
" பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
முதலாளித்துவ மற்றும் சோசலிச சமூகங்களுக்கு இடையே ஒரு பாலத்தை உருவாக்குகிறது" என்று அவர்
எழுதுகிறார். "எனவே, அதன் சாரத்திலேயே, அது ஒரு தற்காலிகப்பட்ட தன்மையை தாங்கி நிற்கிறது.
சர்வாதிகாரத்தை உணர்கின்ற அரசின் ஒரு தற்செயலான ஆனால் மிக அத்தியாவசியமான பணி, தனது சொந்த
கலைப்புக்கு தயாரிப்பு செய்வதை.... வர்க்கங்களற்றதும் சடப்பொருள் முரண்பாடுகளற்றதுமான ஒரு சமூகத்தின்
கட்டமைப்புக்கு தயாரிப்பு செய்வதையும் சேர்த்து அடக்கியதாகும். அதிகாரத்துவவாதமும் சமூக அமைதியும்
ஒன்றுக்கொன்று உடன்பாடற்றவையாகும்.
ட்ரொட்ஸ்கி தொடர்ந்து எழுதுகிறார்: "...பிரச்சினை என்னவென்றால் உற்பத்தி
சாதனங்களின் சமூகமயமாக்கம் மட்டுமே தானாக 'தனிநபர் இருப்புக்கான போராட்டத்தை' அகற்றி விடுவதில்லை.
"ஒரு சோசலிச அரசு, அது அமெரிக்காவில் மிகவும் முன்னேறிய முதலாளித்துவத்தின் அடிப்படையில் என்றாலும்,
உடனே ஒவ்வொருவருக்கும் அவருக்கு வேண்டிய எல்லாவற்றையும் வழங்கி விட முடியாது, எனவே ஒவ்வொருவரையும்
அவரால் முடிந்த அளவு உற்பத்தி செய்ய தூண்டி விடும் நிர்ப்பந்தத்திற்கு அது தள்ளப்படும். இந்த சூழ்நிலைகளில் சாதனத்தின்
கடமையானது இயல்பாக அரசின் தலையில் விழுகிறது, அது தன் செயலாக, பல்வேறு மாற்றங்கள் மற்றும்
தணிப்புகளுடன் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட உழைப்பு ஊதிய வழிமுறையை பின்பற்றுவதை தவிர வேறொன்றையும்
செய்ய முடியாது. இந்த பொருளில் தான் மார்க்ஸ் 1875ம் ஆண்டில் எழுதினார்: "கம்யூனிச சமூகத்தின் முதல் கட்டத்தில்
முதலாளித்துவ சட்டமானது....., முதலாளித்துவ சமூகத்தில் இருந்து நெடிய பிரசவ வலிகளுக்குப் பின் அது வெளிவந்திருக்கும்
அந்த வடிவத்தில், தவிர்க்கமுடியாததாய் இருக்கிறது...."
மார்க்சின் இந்த பத்தி குறித்து லெனின் குறிப்பிடுகையில் கூறினார்: "நுகர்வுப்
பொருட்களின் விநியோகம் தொடர்பான விடயத்தில் முதலாளித்துவ சட்டம் ஒரு முதலாளித்துவ அரசு வடிவத்தை
எடுக்கின்றது என்பது உண்மையே, ஏனெனில் சட்டத்தின் சட்டப்பூர்வமான வடிவங்களை பின்பற்றுவதை
நிர்ப்பந்தப்படுத்தும் ஒரு அமைப்பு இல்லாமல் சட்டம் என்பது ஒன்றுமேயில்லை. அப்படியானால் கம்யூனிசத்தின் கீழ்
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலாளித்துவ சட்டம் மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கத்தினரே இல்லாமல் ஒரு
முதலாளித்துவ அரசு உயிர்வாழும் என்பது புரிந்து கொள்ளத்தக்கதாய் இருக்கிறது!."
" எத்தனை காலத்திற்கு, சமூகத்தின்
சோசலிச உருமாற்றத்தை கடமையாகக் கருதிக் கொண்ட அரசு (தொழிலாளர் அரசு) சமத்துவமின்மையை,
அதாவது, ஒரு சிறுபான்மை எண்ணிக்கையிலானோரின் சடத்துவ சிறப்புரிமையை, பலாத்காரமான வழிமுறைகளின்
மூலம் பாதுகாக்க நிர்ப்பந்திக்கப்படுகிறதோ, அத்தனை காலத்திற்கு அது முதலாளித்துவ வர்க்கத்தின் ஒருவர் கூட
இல்லாமலிருப்பினும் ஒரு 'முதலாளித்துவ' அரசாகத் தான் திகழ்கிறது. இந்த வார்த்தைகள் போற்றுதலும் இல்லை
தூற்றுதலும் இல்லை; அவை வெறுமனே விடயங்களை அவற்றின் உண்மையான பெயர்களில் அழைக்கின்றன, அவ்வளவு
தான்." என்று அதன்பின் ட்ரொட்ஸ்கி முடிக்கிறார்.
இந்த ஆழமான வார்த்தைகள் அதிகாரத்துவவாதத்தின் புறநிலை சடத்துவ வேர்களை
விளக்குவதுடன் மற்றும் புரட்சிகர தலைமையின் கீழ் ஒரு தொழிலாளர் அரசு, அதிகாரத்துவத்தை மிகக் குறைந்த
அளவினதாக வைத்திருக்க மிகத் தொலைநோக்குடனான கொள்கைகள் மூலம் போராடியாக வேண்டுமே தவிர அது
வெறுமனே தானாக போய் விடும் என்றோ உதாசீனப்படுத்தத்தக்கது என்றோ நடிக்க முடியாது என்பதையும் விளங்கப்படுத்துகின்றன.
இதன் அர்த்தம் என்னவென்றால், கட்சியும், தொழிலாள வர்க்கமும் (தானும்) அதிகாரத்துவத்தை கட்டுப்பாட்டில்
கொண்டிருக்க வேண்டுமேயன்றி, இது தலைகீழாய் இருக்க கூடாது. இதன் அர்த்தம் எல்லாவற்றிற்கும் மேலாய்
என்னவென்றால், தொழிலாளர் அரசு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கி கைகளை நீட்டியாக வேண்டும்,
சோசலிசப் புரட்சியின் விரிவாக்க வடிவத்தில் அதன் உதவியைப் பெற்றாக வேண்டும். ட்ரொட்ஸ்கி இதனை
பின்வருமாறு விளக்குகிறார்:
முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர் இயக்கத்தின் கழுத்தை நெரித்துக்
கொண்டிருக்கும் அதிகாரத்துவவாத போக்குகள், ஒவ்வொரு இடத்திலும் ஒரு பாட்டாளி வர்க்க புரட்சிக்கு பின்னரும்
கூட தங்களை யாரென காட்டிக் கொள்ளும். ஆனால், எந்த அளவுக்கு ஒரு புரட்சியில் இருந்து வெளிவரும் சமூகம்
வறுமையானதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு இந்த "நியதி"யின் வெளிப்பாடு கூடுதல் கடுமையானதாகவும்
கூடுதல் வெளிப்படையானதாகவும் அதிகாரத்துவத்தால் எடுக்கப்படும் வடிவங்களைவிட கூடுதல் மோசமானதாகவும்
இருப்பதுடன் அது சோசலிச அபிவிருத்திக்கு கூடுதல் அபாயகரமானதாய் மாறும்...."
அளவு பண்பாக உருமாறுவதை, அதிகாரத்துவவாதத்திலிருந்து சோசலிசத்திற்கு அந்நியப்பட்ட
ஒரு அதிகாரத்துவ சாதியாக மாறுவதை, ட்ரொட்ஸ்கி சற்று விரிவுபட ஆய்வு செய்கிறார். பழமைவாத அதிகாரத்துவத்திற்கு
எதிராக இடது எதிர்ப்பாளர்களால் தலைமையேற்கப்பட்ட மொத்தப் போராட்டமும், எவ்வாறு ஸ்தூலமான சூழ்நிலைகளின்
கீழ், தவிர்க்க முடியாததான அதிகாரத்துவவாதம் அவ்வாறல்லாத அதிகாரத்துவ ஆட்சியாக மாறியது என்பதை விளங்கப்படுத்துகிறது.
அதிகாரத்துவம் தடுக்கப்படவில்லை, தணிக்கப்படவில்லை, ஒத்திசைந்த பொருளாதார அபிவிருத்தி மூலம் பெருகிய
முறையில் குறைந்தபட்ச அளவுக்கு சுருக்கப்படவில்லை. மாறாக, அது வளர்ந்து பரவி இறுதியில் போல்ஷிவிக் கட்சியின்
கழுத்தை நெரித்தது, அரசியல் அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து தட்டிப் பறித்தது, தொழிலாள
ஜனநாயகத்தை நொருக்கியதோடு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை காட்டிக் கொடுத்தது,
கடைசியில் புரட்சிகர தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு எதிராக பரந்த படுகொலை நடவடிக்கையை நடத்தியது.
ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டம்
இது ஒரு தவிர்க்கவியலாத நிகழ்ச்சிப்போக்காக இருக்கவில்லை. உண்மையில்,
ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்று இருந்தது. ஸ்ராலினிசத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் இருந்தது,
சாத்தியக்கூறுகள் மிகக் கடுமையானதாக இருந்தபோதிலும், கடுமையான தோல்விகளுக்கு பின்னரும், ஒரு புரட்சிகர
வெற்றி சோவியத் ஒன்றியத்தின் சீரழிவைத் திருப்பி அதனை மீண்டும் சோசலிசத்தை விட்டு விலகிச் செல்லும்
பாதையில் அல்லாமல் சோசலிசப் பாதையில் இருத்தியிருக்க முடியும் என்கிற வகையான ஏராளமான சந்தர்ப்பங்கள்
அப்போதும் இருந்தன.
லெனின் சோவியத் அரசை அதிகாரத்துவ உருத்திரிபுகளுடனான ஒரு தொழிலாளர்
அரசு என வர்ணித்தார். யாரும் இந்த வரையறையை ஆட்சேபிக்கவில்லை. தான் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில்,
அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை லெனின் தொடக்கினார், அதன் வளர்ச்சியில், குறிப்பாக
ஸ்ராலினின் கீழ், புரட்சிக்கான பெருகியதொரு அபாயத்தை அவர் கண்டார். அதிகாரத்துவத்திற்கு எதிரான
போராட்டம், ட்ரொட்ஸ்கி மத்தியவாத அதிகாரத்துவம் என்று அழைத்த, ஸ்ராலின் கன்னைக்கு பின் திடப்பட்டிருந்த
ஒரு ஆளும் தட்டிற்கு எதிரான ஒன்றாக ஆனது, ஆயினும் அது இடதுக்கும் வலதுக்கும் இடையில், ஒரு பக்கத்தில்
தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றொரு பக்கத்தில் குலாக் மற்றும் புதிய பொருளாதார கொள்கையின் கீழ்
உருவான தனி முதலாளிகளுக்கும் (Nepman)
இடையில் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டிருந்தது.
அரசியல் போராட்டமானது சமரசப்படுத்தமுடியாத ஒன்றாக இருந்தது,
அதனாலேயே சினோவியேவ், காமனேவ், ரடேக் மற்றும் மற்றவர்களுடன் அரசியல் முறிவும் அவசியமான
ஒன்றாகவும் இருந்தது; ஆனாலும் அது சோவியத் கட்சி மற்றும் கம்யூனிச அகிலத்தின் சீர்திருத்தத்திற்கான ஒரு
போராட்டமாக தான் அப்போதும் இருந்தது. பின்னர் தான், ஜேர்மனியில் நாஜிக்கள் வெற்றி பெற்ற பின்னர்
ஜேர்மன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் தோல்வியுற்று, ஸ்ராலினிஸ்டுகள் தங்களின் குற்றப்பங்கினை
பாதுகாத்ததன் பின்னால் தான், அதிகாரத்துவம் ஒரு நனவு மிகுந்த எதிர்புரட்சி சக்தியாக ஆகியிருந்தது என்று
ட்ரொட்ஸ்கி முடிவுக்கு வந்தார். சர்வதேச தொழிலாள வர்க்கம் மற்றும் உலகப் புரட்சியின் நலன்களைப்
பிரதிநிதித்துவப்படுத்திய புரட்சிகர மார்க்சிச போக்கு, அதற்கு எதிராக போல்ஷிவிக் கட்சியை அழித்து அதனை
தனது கருவியாக மாற்றிக் கொண்டிருந்த ஒரு ஒட்டுண்ணி மற்றும் எதிர்புரட்சி சாதி பெருகிய முறையில் தங்களை
திடப்படுத்திக் கொண்ட சிறப்புரிமை எடுத்துக் கொண்ட தட்டுகள் என்ற இந்த போட்டி சக்திகளுக்கு இடையிலான
போராட்டத்தின் பல்வேறு கட்டங்கள் குறித்த ஒரு குமிழ் அளவு சுருக்கம் தான் இது.
ஆயினும் தொழிலாளர் அரசு அப்போதும் அழிக்கப்பட்டிருக்கவில்லை என்பது இங்கு வலியுறுத்திக்
கூறப்பட வேண்டும், இதனையே ட்ரொட்ஸ்கி இந்த முழுக் காலத்திலும் செய்கிறார். இது திரும்ப திரும்ப கூறப்படுவதற்கும்
ஆய்வு செய்யப்படுவதற்கும் தகுதியாகிறது, ஏனெனில் இது தான் ஏராளமான விமர்சகர்களும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில்
இருந்து வெளியேறியவர்களும் புரிந்து கொள்வதில் தோல்வியடைந்த, கட்சிக்கும் அரசுக்கும் இடையிலான முக்கியமான
வேறுபாடு ஆகும். 1933ம் ஆண்டு நிலவரப்படி, ஸ்ராலினிசம் வெறுமனே ''மத்தியவாத'' வகையானதாக
இல்லாமல் எதிர்புரட்சிகரமானதாக மாறியிருந்தது. ஆயினும், அப்போதும் கூட, மரண பலவீனமுற்ற நிலையில்
சீரழிவுற்ற நிலையில் இருந்தாலும், சோவியத் ஒன்றியம் இன்னும் ஒரு தொழிலாளர் அரசாகத் தான் இருக்கிறது
என்பதை ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். அதிகாரத்துவம் புரட்சிக்கும், தொழிலாளர் அரசுக்கு சவக்குழி வெட்டுபவராக
உள்ளது என்கிற உண்மையில் அதன் எதிர்புரட்சித் தன்மை துல்லியமாக வெளிப்பட்டதே தவிர அது ஏற்கனவே அவற்றை
புதைத்துவிடவில்லை.
எப்படி ஒரு புரட்சிகர அரசாங்கம் என்றால் ஒரேநாள் இரவில் சோசலிசத்தை
ஸ்தாபகம் செய்யமுடியாதோ, அதே போலத் தான், ஒரு தேமிடோரிய (Thermidorian)
பிரதிபலிப்பு
என்பது -அது தொழிலாள வர்க்கம் ஒரு ஒட்டுண்ணி அதிகாரத்துவத்திடம்
அதிகாரத்தை இழப்பதாக இருந்தாலும் கூட - புரட்சியின் வரலாற்று வெற்றிகள் ஒரே நாளில் அல்லது தானாக
அழிந்து விட்டதான அர்த்தத்தை அளிப்பதில்லை. ட்ரொட்ஸ்கி விளக்கியது போல, இவை மரண அபாயத்தில்
இருந்தன. மேலும், இந்த வெற்றிகள் நிரந்தரமானவை என்பதாக கூறப்படும் மிகக் கொஞ்ச மெத்தனத்தையும்
ஊக்குவிப்பதற்கு அப்பாற்பட்டு, இடது எதிர்ப்பாளர்கள், ஒரு புதிய அரசியல் புரட்சியில் அதிகாரத்துவம்
தூக்கியெறியப்படாது போனால் தொழிலாளர் அரசு தவிர்க்கவியலாமல் அழிக்கப்படும் என்று எச்சரித்தனர்.
ஒரு சீரழிந்த தொழிலாளர் அரசு இருப்பது நீடித்தால் அந்த உள்ளபடியான நிலை
நீடிப்பதே இறுதியில் சோசலிசத்திற்கு இட்டுச் சென்று விடும் என்று அர்த்தமல்ல, மாறாக அதற்கு நேரெதிரானதே
விளையும். இது நான்காம் அகிலம் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்ததாய் இருந்த ஒரு முக்கியமான வேறுபாடு
ஆகும். இந்த முக்கிய தத்துவார்த்த வெற்றியை பாதுகாக்கவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது,
சோவியத் ஒன்றியத்திற்கு என்ன ஆனது என்பதை நா.அ.அ.குழுவால்
மட்டுமே விளக்க முடியும் என்பதன் காரணமும் இது தான்.
எதிர்ப்பாளர்களுக்கு உள்ளேயே இருந்தவர்கள் உட்பட, புரட்சி மற்றும் தொழிலாளர்
அரசின் மரணத்தை அவசரகதியில் அறிவிப்பு செய்தவர்களுக்கு எதிராக ஒரு அரசியல் மற்றும் தத்துவார்த்த
போராட்டத்தை நடத்துவதற்கு வெகு ஆரம்பத்தில் இருந்தே இடது எதிர்ப்பாளர் அணி கடமைப்பட்டிருந்தது. இந்த
போராட்டத்திற்காகத் தான் ட்ரொட்ஸ்கி, 1933ம் ஆண்டு தேதியிட்டு தொடங்கும் சோவியத் அரசின் வர்க்க
தன்மை (The Class Nature of the Soviet
State), மற்றும் சுமார் 18 மாதங்களுக்கு பின்னர்,
தொழிலாளர் அரசு, தேர்மிடோர் மற்றும் போனபார்ட்டிசம் (The
Workers' State, Thermidor and Bonapartism)
ஆகியவற்றுக்கு அர்ப்பணித்தார். பழைய போல்ஷிவிக்கான வி.எம்.ஸ்மர்னோவ் போன்ற சாகசதுணிச்சல்மிகுந்த
புரட்சிகர மனிதர்களையும், மற்றும் புரட்சி முழுமையாய் அழிக்கப்பட்டு விட்டது என்று கூறியவரான முன்னாள்
கம்யூனிஸ்ட் போரிஸ் சோவரைன் போன்ற சாகச துணிச்சல் ரொம்பவும் குறைந்த இன்னும் பலரையும் அவர்
குறிப்பிடுகிறார்.
பின்னாளில் ஜேம்ஸ் பேர்ன்ஹாம் மற்றும் மக்ஸ் சாட்மன் (அமெரிக்க சோசலிச
தொழிலாளர் கட்சியில் குட்டி முதலாளித்துவ எதிர்ப்பாளர் அணி ஒன்றின் தலைவர்கள், சோவியத் ஒன்றியத்தை
பாதுகாப்பதை கைவிட்ட மிக முக்கியமான ஆபத்தானவர்களாக இவர்கள் ஆகினர்) ஆகியோருக்கு எதிரான
போராட்டத்தில் ட்ரொட்ஸ்கி சற்று விரிவாக விளக்கியது போல, எல்லாவற்றுக்கும் முதலாய் வெறுமனே
"பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தில் பாட்டாளி வர்க்கத்தின் மேலான சர்வாதிகாரம் உள்ளடங்கி இருக்க
முடியாது" என்று கூறுவதானது அறிவியலற்றதாகும்.
தனது சமூகவியல் வரையறைகள்
A=A என்பதைத்
தாண்டி செல்லாத ஒரு உத்தியோகபூர்வவாதிக்கு, ஒன்று இன்னொன்றை அடக்கியிருக்கவில்லை என்பது ரொம்ப
வெளிப்படையான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால், ட்ரொட்ஸ்கி 1933ம் ஆண்டில் எழுதியது போல, "இத்தகைய
ஈர்ப்புமிகுந்த காரணகாரிய விளக்கமெல்லாம், நிகழ்ச்சிப்போக்கினை அது யதார்த்தத்தில் அபிவிருத்தியுறுகின்ற
சமயத்தில் செய்யப்படுகின்ற ஒரு சடவாத பகுப்பாய்வில் இருந்து உருவாக்கம்பெறுவன அல்ல, மாறாக தெளிந்த
கருத்துவாத தத்துவங்களின் மேல், கான்ட்வாத நெறிமுறைகளின் மேல் கட்டப்படுவனவாகும்."
ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் குற்றங்களை ஒரு கணத்திற்கு கூட குறைத்துக்
காட்டாமல், "பாட்டாளி வர்க்கத்தின் மீது அதிகாரத்துவத்தின் சர்வாதிகாரம் குறித்த ஆய்வறிக்கைகளை, ஒரு
வெகு ஆழமான பகுப்பாய்வின்றி, அதாவது அதிகாரத்துவ ஆதிக்கத்தின் சமூக வேர்கள் மற்றும் வர்க்க வரம்புகள் குறித்த
ஒரு தெளிவான விளக்கம் இல்லாமல், வடிக்க முயன்றால் அது இறுதியில் மென்ஷிவிக்குகளிடையே வெகு பிரபலமாய்
இருந்த உயர்ந்த பிதற்றல் ஜனநாயக சொற்றொடர் பிரயோகங்களாய் தான் முடியும்" என்றும் ட்ரொட்ஸ்கி
கோடிட்டுக் காட்டுகிறார்.
அதிகாரத்துவம் ஒரு வர்க்கம் அல்ல
இவ்வாறு, சோவியத் ஒன்றியம் "அரசு முதலாளித்துவ"த்தின் ஒரு வகையை அல்லது
ஒரு புதிய வகை ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிய வாதத்தை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார்.
"ஒரு மார்க்சிசவாதியை பொறுத்தவரை, வர்க்கம் என்பது மிக முக்கியமான அத்துடன் ஒரு விஞ்ஞானபூர்வ
வரையறைக்குட்பட்ட அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு வர்க்கம் என்பது தேசிய வருவாய் பகிர்ந்தளிப்பில் அதன்
பங்கேற்பு மூலமாய் மட்டும் வரையறுக்கப்படுவதில்லை, மாறாக பொருளாதாரத்தின் பொதுவான கட்டமைப்பில்
அதன் சுயாதீனமான பாத்திரத்தின் மூலமும் மற்றும் சமூகத்தின் பொருளாதார அடித்தளங்களில் அதன் சுயாதீனமான
வேர்களின் மூலமும் தான்....அதிகாரத்துவம் இந்த அனைத்து சமூக பண்புகளும் இல்லாதிருக்கிறது. உற்பத்தி மற்றும்
விநியோக நிகழ்முறையில் அதற்கு எந்த சுயாதீனமான நிலையும் இல்லை. இதற்கென சுயாதீனப்பட்ட சொத்துடைமை
வேர்கள் கிடையாது. இதன் செயல்பாடுகள் அடிப்படையாக வர்க்க ஆட்சியின் அரசியல் நுட்பத்துடன்
தொடர்புபட்டிருக்கிறது...." (அழுத்தம் மூலத்தில் உள்ளவாறு)
" அதிகாரத்துவம் எடுத்துக்கொண்ட
சிறப்புரிமைகள் தாமாகவே சோவியத் சமூகத்தின் அடித்தளங்களை மாற்றி விடுவதில்லை, ஏனென்றால்
அதிகாரத்துவம் தனது சிறப்புரிமைகளை ஒரு வர்க்கமாக தனக்கு மட்டுமே உரிய எந்த சிறப்பு சொத்துடைமை
உறவுகளில் இருந்தும் பெறவில்லை, மாறாக அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட சொத்துடைமை உறவுகளில்
இருந்து தான் எடுத்துக் கொள்கிறது.....அதிகாரத்துவம் மக்களை கொள்ளையடிக்கும் விடயத்தில், நாம் முகம்
கொடுப்பது வர்க்க சுரண்டலுடன் அல்ல என்பது தான் அந்த வார்த்தையின் விஞ்ஞான அர்த்தத்தில் சரியானதாகும்,
மாறாக, அது சமூக ஒட்டுண்ணித்தனமே, ஒரு மிகப்பெரும் அளவில் என்றாலும் கூட..... [அதிகாரத்துவம்]
பாட்டாளி வர்க்கத்தின் மீதான மிகைவளர்ச்சியாகும். ஒரு கட்டி (Tumor)
பிரம்மாண்டமான அளவுக்கு வாழும் உயிரின் கழுத்தை மறைக்கும் அளவுக்கும் கூட வளரலாம், ஆனாலும் ஒரு கட்டி
எப்போதும் ஒரு சுதந்திரமான உயிரினமாக ஆக முடியாது."
வேறு வார்த்தைகளில் சொன்னால், இது ஒரு சாதியே (Caste)
தவிர, ஆளும் வர்க்கம் அல்ல. சோவியத் அதிகாரத்துவம் தனது முந்தைய சீர்திருத்தவாத முன்னோடிகளுடன்
பொதுவாகப் பகிர்ந்து கொள்வது என்ன, மற்றும் அதன் பாத்திரம் குறித்து தனித்துவமானது என்ன ஆகிய
இரண்டையுமே தொழிலாளர் இயக்கத்துக்குள் அதிகாரத்துவவாதத்துடனான மொத்த அனுபவம் விளங்கப்படுத்துகிறது.
இது ஒரு சிறப்பு வகையின் முதலாவது பெருநிகழ்வாகும், வெறுமனே ஒரு தொழிற்சங்கமல்ல அல்லது கட்சி
எந்திரமல்ல, மாறாக ஒரு அதிகாரத்துவம் ஒட்டுமொத்த அரசு எந்திரத்தின் மீது பிரம்மாண்டமான கட்டுப்பாட்டை
செலுத்துகிறது. அதே சமயத்தில், இது எந்த வரலாற்று முன்னுதாரணங்களும் இல்லாத ஒரு நிகழ்வோ, அல்லது
நமது முந்தைய அனுபவங்களில் கற்ற அனைத்தையும் தூக்கியெறியத் தள்ளும் ஒன்றோ அல்ல.
1794ம் ஆண்டில் பிரெஞ்சு புரட்சியில் ரோபஸ்பியரியின் வீழ்ச்சியுடன் நிகழ்ந்த
எதிர்புரட்சி திருப்பத்தை ஒத்த, சோவியத் தேர்மிடோர் 1924 இல் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக
ஏற்கனவே நேர்ந்து விட்டிருந்ததை தான் முன்னரே அறிந்து கொள்வதில் பிழையுற்றதாக 1935ம் ஆண்டில்
ட்ரொட்ஸ்கி கூறினார். தொழிலாளர் அரசு, தேர்மிடோர் மற்றும் போனபார்ட்டிசம் (The
Workers State, Thermidor and Bonapartism)
என்னும் தனது கட்டுரையில், முதலாளித்துவ மற்றும் தொழிலாளர் அரசுக்கு இடையிலான முக்கியமான வேறுபாட்டை
ட்ரொட்ஸ்கி அழுத்தமாய் விளக்கினார்:
"விவசாயிகளை நிலப்பிரபுத்துவத்திடம் இருந்து விடுவித்து அவர்களுக்கு நிலங்களை வழங்கும்
ஒரு ஆழமான ஜனநாயகப் புரட்சிக்கு பின்னர், பிரபுத்துவ எதிர்புரட்சி என்பது பொதுவாய் சாத்தியமானதல்ல....
பிரபுத்துவத்தின் சங்கிலிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட மறுகணமே, முதலாளித்துவ உறவுகள் தானாகவே அபிவிருத்தியுறுகின்றன.
அவற்றை எந்த வெளி சக்திகளும் தடுக்க முடியாது: தங்களின் சவக்குழியை தாங்களே தான் அவை தோண்டிக்
கொள்ள வேண்டும், தங்களுக்கான சவக்குழி தோண்டுபவர்களையும் அவை முன்னரே உருவாக்கியிருக்கும் நிலையில்."
இவ்வாறு பிரான்சின் தேர்மிடோர் பிரதிபலிப்பு முதலாளித்துவ புரட்சியின் மிகத் தீவிரப்பட்ட பிரிவை அகற்றியது,
ஆனாலும் புரட்சியின் முக்கிய வெற்றிகளை திரும்பப் பெறும் எண்ணமோ திறனோ அதற்கு இல்லை. முடியாட்சியின்
மீட்சியும் கூட, ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் சொல்வதானால் அது தன்னைச் சுற்றி மத்தியகால பூதங்களை
வைத்துக் கொண்டிருந்தாலும் கூட, நிலப்பிரபுத்துவத்தை மறுஸ்தாபகம் செய்யும் சக்தியற்றதாகவே இருக்கும்.
" சோசலிச உறவுகளின்
அபிவிருத்தியில் இது மொத்தமாய் வேறுவகையாய் இருக்கிறது", என்று எழுதுகிறார் ட்ரொட்ஸ்கி. "முதலாளித்துவ
அரசு, புரட்சிக்கு பின்னர், சந்தையை அதன் சொந்த சட்டங்களுக்கு விட்டு விட்டு, தன்னை ஒரு காவல்கண்காணிப்பு
பாத்திரத்திற்குள் கட்டுப்படுத்திக் கொள்கிறது, தொழிலாளர் அரசோ ஒரு பொருளாதார நிபுணர் மற்றும்
ஒருங்கிணைப்பாளரின் நேரடியான பாத்திரத்தை ஏற்கிறது... முதலாளித்துவத்தில் இருந்து தனித்து வேறுபட்ட
விதத்தில், சோசலிசமானது தன்னியல்பாக இல்லாமல் மாறாக நனவுடன் கட்டப்படுகிறது. சோசலிசத்தை
நோக்கிய முன்னேற்றம் என்பது சோசலிசத்தை விரும்பும் அல்லது அதனை விரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அரசு
அதிகாரத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். அபிவிருத்தியின் மிக உயர்ந்த கட்டத்தில், அதன் உற்பத்தி சக்திகள்
முதலாளித்துவத்தின் உற்பத்தி சக்திகளை விடவும் மிகவும் வெகுதாரம் கடந்து செல்கின்றதாய் இருக்கின்ற போது
மட்டும் தான், சோசலிசம் மாற்றமடையமுடியாத ஒரு தன்மையைப் பெற முடியும்...."
இவ்வாறு, சோவியத் தேர்மிடோர் என்பது பிரெஞ்சு புரட்சியை ஒட்டி வந்ததைக்
காட்டிலும் மிகவும் வேறுபட்டதொரு வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. 1794ம் ஆண்டின் தேர்மிடோர்
முதலாளித்துவ புரட்சியை அச்சுறுத்தவில்லை. 1924ம் ஆண்டில் தொடங்கிய தேர்மிடோரோ சோசலிசப் புரட்சியை
அச்சுறுத்தியது. சோசலிசத்தை கட்டும் சாத்தியத்தை அது உடனடியாக இல்லாது செய்து விடவில்லை என்றாலும்,
அதற்கு மரண அபாயத்தை உணர்த்தியது; அதனைக் கேள்விக்குறியாக்கியது. ஆளும் அதிகாரத்துவம் எதன் மீது அது
தங்கியிருந்ததோ அந்த உற்பத்தி உறவுகளுக்கு பெருகிய முறையில் விரோதமுற்றது.
சோசலிசத்திற்கான போராட்டத்தை புரிந்து கொள்வதற்கே இது
முக்கியமானதாகும். இதனால் தான் அதிகாரத்தை கையிலெடுப்பது மற்றும் சோசலிசத்தை கட்டுவது இரண்டுக்குமே
ஒரு புரட்சிகர கட்சி அவசியமாகிறது. சோவியத் ஒன்றியத்தின் முடிவு முதலாளித்துவத்திற்கும் சந்தைக்கும் எந்த
மாற்றும் இல்லை என்பதை நிரூபணம் செய்திருப்பதாக பிரகடனம் செய்த, முதலாளித்துவத்தின் மூடத்தனமான
வக்காலத்துவாதிகளுக்கு, பல தசாப்தங்கள் முன்கூட்டியே மறுத்துரைக்கிறார் ட்ரொட்ஸ்கி. பிரபுத்துவத்தை
முதலாளித்துவம் ஆக்கிரமித்து இடம்பெயர்த்த அதே பாதி-தன்னிச்சையான வழியில் முதலாளித்துவம் மீதான தனது
மேலாதிக்கத்தை சோசலிசம் நிலைநிறுத்துவதில்லை என்பதை மார்க்சிஸ்டுகள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.
காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியின் இதயத்தானப் பகுதி, புள்ளிவிவரங்கள் மற்றும்
உண்மைகளின் அடிப்படையில், சோவியத் தேர்மிடோர் மீதான ஒரு கடினமான ஆய்வுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ட்ரொட்ஸ்கி, அவர் கூறுவதைப் போல, "ஏன் ஸ்ராலின் வெற்றிபெற்றார்" என்பதை விளக்குகிறார். காரணம் ஸ்ராலின்
கன்னை தான் சென்று கொண்டிருந்தது எங்கே என்பதை அறிந்து வைத்திருந்தது என்பதோ அல்லது, அது மிகவும்
தொலைநோக்குடன் சிந்திக்க கற்றிருந்தது என்பதோ அல்ல. யதார்த்த நிலை இதற்கு நேரெதிரானதாய்
இருந்தது. ஆனால் முடிவு போராடும் வர்க்க சக்திகளின் உயிர்வாழும் போராட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது.
பகுத்தறிவுவாத அடிப்படையில் முன்சென்று, அரசியலில் ஒரு தர்க்கரீதியான வாதத்தை
அல்லது ஒரு செஸ் ஆட்டத்தை காண்பதென்பது, தவறாக இட்டுச் செல்லும். "ஒரு அரசியல் போராட்டம் என்பது
அதன் சாரத்தில், நலன்கள் மற்றும் சக்திகளின் இடையேயான போராட்டமே அன்றி, வாதங்களின் இடையேயானது
அல்ல" என்று எழுதுகிறார் ட்ரொட்ஸ்கி. "தலைமையின் பண்பு என்பது மோதலின் முடிவு பற்றி அலட்டிக் கொள்ளாத
விடயத்திற்கு வெகு தொலைவு கடந்ததாகும் என்பது உண்மையே", ஆனால் சரியான யோசனைகள், அவசியமானவை
என்றாலும், அவை மட்டுமே தன்னளவில் போதுமானவையல்ல. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தங்களது அறியாமைக்கும்
குருட்டுத்தனத்திற்கும் பெயர்போன தலைவர்களைக் கோரும் ஆளும் வர்க்கங்களும் ஆளும் குழுக்களும் இருக்கின்றன
[அமெரிக்காவின் நடப்பு நிலைமை ஒரு சிறந்த உதாரணம்].
ஸ்ராலின் கன்னை பல விடயங்களுக்கு குருடாய் இருந்தது, ஆனால் சோவியத் அரசின்
தனிமைப்படலால் அது பெருமளவில் வலிமைப்படுத்தப்பட்டது. ஏகாதிபத்தியத்தின் நெருக்குதல் தான்
அதிகாரத்துவத்தை வலிமைப்படுத்தியது, அதற்கு அது பெருகிய தன்னம்பிக்கையைக் கொடுத்தது, எதிர்ப்பாளர்களின்
உலகப் புரட்சி குறித்த அனுமானக் "கனவுகளை" நிராகரிக்க அது வழிவகை அளித்தது. செம்படை
பிரித்தணுகப்பட்டது, புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் மிகச் சிறந்த ஒரு பகுதி உள்நாட்டுப் போரில்
கொல்லப்பட்டது அல்லது கட்சி மற்றும் அரசை நிர்வகிக்கும் அவசியப் பணிகளுக்கு உள்ளிழுக்கப்பட்டது, அத்துடன்
புதிய பொருளாதாரக் கொள்கை தவிர்க்கவியலாமல் புதிய குட்டி முதலாளித்துவ தட்டுகளின் எழுச்சிக்கு
வழிவகுத்தது.
எல்லாவற்றுக்கும் மேலாய், சர்வதேச சூழ்நிலை அதிகாரத்துவத்திற்கு சாதகமுறத்
தொடங்கியது. ட்ரொட்ஸ்கி எழுதியது போல: "உலக தொழிலாள வர்க்கத்தின் மீது விழுந்த அடிகள் கனமாக
இருந்த மட்டத்திற்கு சோவியத் அதிகாரத்துவம் கூடுதல் தன்னம்பிக்கையுற்றதாய் ஆனது. இந்த இரண்டு உண்மைகளுக்கு
இடையேயான தொடர்பு ஒரு காலக்கிரமவரிசைப்பட்டது மட்டுமன்றி, காரணரீதியானதாகவும் இரு திசைகளில்
செயலாற்றிய ஒன்றாகவும் இருந்தது. அதிகாரத்துவத்தின் தலைவர்கள் பாட்டாளி வர்க்க தோல்விகளை
ஊக்குவித்தனர்; இத்தோல்விகள் (பல்கேரியாவில், ஜேர்மனியில், எஸ்தோனியாவில், போலந்தில், சீனாவில்,
மீண்டும் ஜேர்மனியில்) அதிகாரத்துவத்தின் எழுச்சியை ஊக்குவித்தன."
அதிகாரத்துவம் ஏகாதிபத்தியத்தின் முகவரானது, ஏனென்றால் அதன்
நடைமுறைவாதப்பட்ட ஆயினும் ஈவிரக்கமற்ற தோற்றம் உலக முதலாளித்துவத்தின் தேவைகளுக்கு ஈடுகொடுப்பதாய்
இருந்தது. ஏகாதிபத்தியம் இன்னும் புரட்சியை அழிக்க முடியாதிருந்தது, ஆனால் சோசலிசத்தின் ஒரு நெறிபிறழ்வாய்
அதனைக் காட்ட அது தீவிரமாய் இருந்தது.
அதிகாரத்துவ எழுச்சி தனது வெளிப்பாட்டை, தனியொரு நாட்டில் சோசலிச
கோட்பாட்டிலும், ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நிரந்தரப் புரட்சி தத்துவம் மீதான கண்கூடான தாக்குதல்களிலும்,
போல்ஷிவிக் கட்சி வரலாற்றின் மீதான பொய்மைப்படுத்தலிலும் கண்டது.
சோவியத் ஒன்றியத்தின் ஸ்தூலமான வரையறை மீது ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்,
அவசியமாகவே இது சிக்கலான ஒன்றாக இருந்தது. "சீரழிந்த தொழிலாளர் அரசு" என்கின்ற பதம், நிச்சயமாக
துல்லியமாக இருந்தது மற்றும் "அரச முதலாளித்துவம்" மற்றும் "அதிகாரத்துவ கூட்டாண்மை" ஆகியவற்றில் இருந்து
சரியாக வேறுபடுத்திய தனித்துவம் பெற்றதாய் இருந்தது என்றாலும், அந்த பதமும் கூட இந்த விடயத்திலான விவாதத்தை
அறவே நீக்கி விடவில்லை. ட்ரொட்ஸ்கியின் வரையறையுடன் முறைப்படியான இணக்கத்தை பராமரித்துக் கொண்டு ஆனால்
அந்த வரையறைக்கு முற்றிலும் வேறுபட்டதொரு உள்ளடக்கத்தை வழங்கிய மார்க்சிசத்தின் ஒரு புதிய மறுதலிப்பு
எவ்வாறு எழுந்தது என்பதை பின்னர் காண்போம்.
காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியில் ட்ரொட்ஸ்கி எழுதுகிறார்: "சோவியத் ஆட்சியை
இடைமருவிக் கொண்டிருக்கும் ஒன்றாக, அல்லது இடைப்பட்ட ஒன்றாக வரையறை செய்வதென்பது முதலாளித்துவம்
(அரச முதலாளித்துவம் உட்பட) மற்றும் சோசலிசம் ஆகிய நிறைவுற்ற சமூக வகைப்பாடுகளை கைவிடுவதானதாகும்.
ஆனால், இந்த வரையறை தன்னளவில் முழுக்க நிறைவுற்றதாக இல்லை என்பதொரு பக்கம் இருக்க, இப்போதைய
சோவியத் ஆட்சியில் இருந்து சோசலிசத்திற்கான இடைமருவலுக்கு மட்டுமே சாத்தியம் என்பது போன்ற தவறான
சிந்தனையை உற்பத்தி செய்யும் திறனையும் இது கொண்டிருக்கிறது. யதார்த்தத்தில் இது பின்சறுக்கி முதலாளித்துவத்திற்கு
மருவுவதும் முழுமையாக சாத்தியமானதே."
அத்துடன் நடப்பு நிலைமைகளின் கீழ் சமூகத்தின் தன்மையை சாத்தியமான அளவு
ஸ்தூலமாக விவரிக்க செல்கிறார் அவர்:
" சோவியத் ஒன்றியம்
முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையில் பாதியில் நின்று கொண்டிருக்கும் ஒரு முரண்பட்ட சமூகமாகும்,
இதில்: (அ) உற்பத்தி சக்திகள் இன்னமும் அரச உடமைகளுக்கு ஒரு சோசலிச தன்மையை கொடுக்க
போதுமானதாக இருப்பதில் இருந்து வெகு தொலைவில் உள்ளன; (ஆ) தேவையினால் உருவாக்கப்பட்ட
பண்டையகால செல்வத்தை திரட்டுவதை நோக்கிய போக்கு திட்டமிட்ட பொருளாதாரத்தின் எண்ணற்ற ஓட்டைகள்
வழியே வெளிவருகிறது; (இ) ஒரு முதலாளித்துவ தன்மையைப் பாதுகாக்கும் விநியோக வழிமுறைகள் சமூகத்தின் ஒரு
புதிய வித்தியாசப்படுத்ததலின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன; (ஈ) பொருளாதார வளர்ச்சியானது,
உழைப்போர் வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாய் மேம்படுத்தி வரும் அதே வேளையில், சிறப்புரிமை எடுத்துக்
கொள்ளும் தட்டின் திடீர் உருவாக்கத்தையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது; (உ) சமூக குரோதங்களை சுரண்டி,
அதிகாரத்துவமானது தன்னை சோசலிசத்திற்கு அந்நியப்பட்ட ஒரு கட்டுப்பாடற்ற சாதியாக மாற்றிக்
கொண்டிருக்கிறது; (ஊ) சமூகப் புரட்சியானது, ஆளும் கட்சியால் காட்டிக் கொடுக்கப்பட்ட போதிலும், சொத்து
உறவுகளிலும் உழைக்கும் மக்களின் நனவிலும் அது இன்னும் உயிர்த்திருக்கிறது; (எ) திரண்டிருக்கும் முரண்பாடுகள்
இன்னும் அபிவிருத்தியுறுவது சோசலிசத்திற்கும் இட்டுச் செல்ல முடியும், அதே போல் மீண்டும் முதலாளித்துவத்திற்கும்
கொண்டு செல்ல முடியும்; (ஏ) முதலாளித்துவத்திற்கான பாதையில் எதிர்புரட்சியானது தொழிலாளர்களிடம்
இருந்துவரும் எதிர்ப்பை உடைக்க வேண்டியிருக்கும்; (ஐ) சோசலிசத்தை நோக்கிய பாதையில் தொழிலாளர்கள்
அதிகாரத்துவத்தை தூக்கியெறிய வேண்டியதிருக்கும். இறுதி ஆய்வில், தேசிய அரங்கிலும் சரி உலக அரங்கிலும் சரி,
இந்த பிரச்சினை உயிர்வாழும் சமூக சக்திகளின் போராட்டத்தால் தீர்மானிக்கப்படுவதாய் அமையும்.
புரட்சியின் பாதையையும் அரசின் தன்மையையும் விளக்குவதில் நிச்சயமாக வேறு எந்த
விளக்கமளிப்புகளையும் விட இந்த ஒன்பது-பகுதி வரையறை மிக நெருக்கமாய் செல்கிறது, ஆனால் ட்ரொட்ஸ்கிச
இயக்கத்தை பொறுத்தவரை, இது வெறுமனே எந்திரகதியாய் ஒரு வரையறையை மறுஒளிபரப்பு செய்வதான
விடயமாய் ஒருபோதும் இருக்க முடியாது. பல தசாப்தங்களுக்கு பின்னர், ட்ரொட்ஸ்கி சாத்தியமென்று கற்பனை
செய்ததை விடவும் வெகு அதிக காலம் ஸ்ராலினிச ஆட்சி நீடித்து அதிகாரத்துவத்தின் அழுகலோ தொடர்ந்து
நிகழ்ந்து ஆழமுற்றுக் கொண்டிருந்த போது, மேற்கண்ட வரையறையுடனும் அதன் கீழமைந்த வழிமுறையுடனும்
அடிப்படையான உடன்பாட்டை பராமரிக்கின்ற அதே சமயத்தில், சோவியத் ஒன்றியத்திலும் மற்றும் வேறெங்கிலும்
"உழைக்கும் மக்களின் நனவில்" நேர்ந்த பிரம்மாண்டமான வீழ்ச்சியும், அத்துடன் கொடுங்கோல் ஆட்சியும் கொண்ட
ஸ்ராலினிச அரசின் அசமத்துவ நிலையின் வளர்ச்சி மற்றும் பொருளாதார நெருக்கடியின் ஆழம் ஆகியவையும் கருத்தில்
கொள்ளப்பட வேண்டியது அவசியமாய் இருந்தது.
முரண்பாடுகளின் திரட்சி, சோசலிச பாதைக்காக போராடிய சக்திகள் பெருகிய
சிக்கல்களை எதிர் கொள்ள நேரிட்டதான, மற்றும் அக்டோபர் புரட்சியின் தலைவிதியானது முன்னெப்போதையும்
விட அதிகமாய் மேற்கில் புரட்சிகர அபிவிருத்தியின் மறுஎழுச்சியின் மீது தங்கியிருக்க நேர்ந்ததான, ஒரு கட்டத்தை
எட்டியிருந்தது. நிச்சயமாக இரண்டாம் உலகப் போருக்கு பிந்தையை சோவியத் ரஷ்யா, நாம் காணவிருப்பது
போல் பப்லோவாதிகள் கூறுவதற்கு நேர் எதிராய், சோசலிசத்தை கட்டுவதில் இருந்து விலகிய பாதையில்
முன்னோக்கி சென்றது.
இன்று காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியை கற்றுக்கொள்கையில், மார்க்சிசத்தின்
இந்த அத்தியாவசிய படைப்பை வெறுமனே ஏற்றுக்கொள்வதோடு நின்று விடாமல், இதன் பக்கங்களில் ட்ரொட்ஸ்கி
விளக்கிய முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்திற்காக கடந்த ஏழு தசாப்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட
சிந்தனைகள் மற்றும் போராட்டத்தின் வரலாற்றை திறனாய்வு செய்வதும் மற்றும் உட்கிரகிப்பதும் அவசியமாகும்.
இது தான் கட்சியை கட்டுவதற்கும், அங்கத்தவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கும் இதயமாய் அமைவதாகும். இது
உறுப்பினர் எண்ணிக்கை அளவுடன் ஆரம்பிப்பதான அல்லது வெறுமனே சரியான முழக்கத்தை அல்லது தந்திரோபாய
முன்னெடுப்புகளை கண்டறிவதான விடயமல்ல, மாறாக எல்லாவற்றுக்கும் மேலாய் சோசலிச இயக்கத்தின்
வேலைத்திட்ட அடித்தளத்தையும் மார்க்சிசத்தின் உண்மையான பாரம்பரியத்தையும் இருபத்தியோராம்
நூற்றாண்டுக்காக பாதுகாப்பது மற்றும் அபிவிருத்தி செய்வது பற்றியதாகும்.
இது ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டம்
குறித்த ஒரு ஆய்வுக்கு நம்மை கொண்டு வருகிறது - காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியிலும் மற்றெங்கிலும் ட்ரொட்ஸ்கி
ஆய்வுக்குட்படுத்திய அரச முதலாளித்துவம் மற்றும் அதிகாரத்துவ கூட்டுழைப்புவாத தத்துவங்களை பின்னாளில் ஏற்றுக்
கொண்டவர்களிடம் இருந்து புதுப்பிக்கப்பட்ட தாக்குதல்களைக் கண்ட ஒரு காலகட்டமாகும் இது. அதே சமயம்,
ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளேயுள்ள கூறுகள், போருக்குப் பின்னால் ஸ்ராலினிசம் மற்றும் ஏகாதிபத்தியம் தற்காலிகமாக
மீள ஸ்திரமுற்றதற்கு பதிலிறுப்பாக, ஸ்ராலினிசம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு மீது அரசியல் ரீதியாய்
ஒருங்கிணைந்த ஒரு தாக்குதலை நடத்தின. இதனை அரசியல் ரீதியாய் ஒருங்கிணைந்தது என்று கூறுவது என்ன
பொருளில் என்றால், ஸ்ராலின் புகழ்ச்சிவாதம் மற்றும் சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பதை நிராகரிக்கும் குணாதிசயத்துடனான
கம்யூனிச விரோதத்துக்கு அடிபணிந்தமை ஆகியவற்றை, ஸ்ராலினிசத்திற்கான அடிபணிவு மற்றும் பப்லோவாதிகளின்
இழிவுகரமான வார்த்தைகளில் சொல்வதானால் ஸ்ராலினிசம் "ஒரு புரட்சிகர நோக்குநிலையை முன்னெடுக்க தள்ளப்படும்"
என்பதானதொரு கருத்தாக்கத்தை ஏற்றது.
போருக்கு பிந்தைய காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்கும்
சமயத்தில் ட்ரொட்ஸ்கி முன்கணித்து கூறியிருந்ததை ஒட்டிய வகையில், புரட்சிகர வாய்ப்புகளுக்கு பற்றாக்குறை
இருக்கவில்லை என்பதையும் முதலில் சொல்லியாக வேண்டும். பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் மில்லியன்கணக்கான
தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தனர். மேற்கு
ஐரோப்பாவில் உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பாரிய எழுச்சி, அத்துடன் சீனப் புரட்சி மற்றும் காலனித்துவ உலகம்
முழுவதிலுமான கிளர்ச்சிகளும் இதில் அடக்கம்.
ஆயினும் வெற்றி பெற்றிருந்த ஏகாதிபத்திய சக்திகள் முதலாம் உலகப் போருக்குப்
பிந்தைய அனுபவங்களில் இருந்து கொஞ்சம் கற்றுக் கொண்டிருந்தன. தங்களது முந்தைய எதிரிகளை மறுஸ்திரப்படுத்த
அவை தலைப்பட்டன. தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்தி ஒரு புரட்சிகர சூழ்நிலை அபிவிருத்தியுறாமல் மட்டுப்படுத்துவதற்கு
இத்தாலியில், கிரீஸில் மற்றும் வேறெங்கிலும் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக கிரெம்ளின்
மற்றும் ஸ்ராலினிச கட்சிகளை நோக்கி ஏகாதிபத்திய சக்திகள் திரும்பின. அமெரிக்காவுக்குள்ளே வலிமை வாய்ந்த
சோவியத்-விரோத மற்றும் கம்யூனிச-விரோத பைத்தியக்காரத்தனத்துடன் கைகோர்த்து பனிப்போர் தொடங்கியது
எனினும், அமெரிக்காவும் ரஷ்யாவும் "போருக்குப் பிந்தைய உடன்பாட்டை" நோக்கி நகர்ந்தன.
பனிப் போர் குறித்த ஆரவாரம் மற்றும் கொரியாவில் கொதிக்கும் போர் குறித்த
யதார்த்தம் இவற்றின் பின்னால், இந்த உடன்பாடானது ஏகாதிபத்தியத்தினதும் மற்றும் ஒரு புதிய சமூகத்தின்
பிரதான பாத்திரங்களாக உலகெங்கும் நூறுமில்லியன்கணக்கான மக்கள் இவர்களை எதிர்நோக்க சற்று தற்காலிக
பெருமிதத்துடன் எழுந்திருந்த அதன் ஸ்ராலினிச முகவர்களினதும் தற்காலிக மறுஸ்திரப்படலையும் சாத்தியமாக்கியது.
டொலரின் மேலாதிக்கம் மற்றும் அதற்கு தங்கத்தைக் கொண்டு பின்புல ஆதரவு இவற்றின் அடிப்படையில், அத்தோடு
கீன்சிய தேசிய சீர்திருத்தவாத கொள்கைகளையும் சேர்த்துப் பயன்படுத்தி ஒரு தற்காலிக பொருளாதார
மேலெழுச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் ஸ்தாபிக்கப்பட்டாலும்,
ஆனால் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் உட்படுத்தவும் அதன் அரசியல் சுயாதீனம்
மற்றும் புரட்சிகர அபிலாசைகளை சீர்குலைப்பதற்கும் கொடுக்க வேண்டியதாய் இருக்கும், ஒப்புமையளவில்
சிறியதொரு விலையாகக் கருதி ஏகாதிபத்தியவாதிகள் அதனை ஏற்றுக் கொண்டனர்.
இரண்டாவது ஏகாதிபத்தியப் உலகப் போரின் முதலாம் ஆண்டிலேயே ட்ரொட்ஸ்கி
படுகொலை செய்யப்பட்டார், மற்றும் புரட்சிகர இயக்கத்தின் முக்கிய பிரிவினர் ஒப்புமையளவில்
தனிமைப்படுத்தப்பட்டு, அதிமுக்கிய பகுதிகளில் பாசிசம் மற்றும் ஸ்ராலினிசம் இரண்டின் மூலமும் அடக்குமுறைக்குள்ளாகி
அளவு சுருக்கப்பட்டன. மற்றும் அதி முக்கிய தலைமை இல்லாது செய்யப்பட்டன என்பவை வகித்த பங்கு
சாதாரணமானது அல்ல என்பதையும் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.
இது தன் பங்கிற்கு, நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தவாறு, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின்
மீது தத்துவார்த்த மற்றும் அரசியல் தாக்குதலுக்கான மேடையை அமைத்தது. ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசத்தின்
நெருக்குதல்கள் நான்காம் அகிலத்தின் மட்டங்களிலும் தங்களது பிரதிபலிப்பைக் கண்டன.
போருக்குப் பின் எழுந்த போக்குகள் குறித்து நாம் இங்கே பேசிக்
கொண்டிருக்கிறோம். அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP)
உடன் முறித்துக் கொண்ட குட்டி முதலாளித்துவ எதிர்ப்பாளர் தலைவர்களைப் பொறுத்தவரை, பேர்ன்ஹாம்
மார்க்சிசத்தை உடனடியாக ஏறக்குறைய கைதுறந்து, மிகவும் வலது நோக்கி நகர்ந்து விட்டார். இந்த பாதையை
எடுக்க சாட்மன் ஏறக்குறைய இரண்டு தசாப்த காலம் எடுத்துக் கொண்டார், ஆனால் 1940களின் பிற்பகுதியில்
ஸ்ராலினிச "காட்டுமிராண்டித்தன"த்திற்கு எதிராக "ஜனநாயக" ஏகாதிபத்தியத்திற்கு முக்கிய ஆதரவை அளிப்பது
என்பதான பாதையை அவர் பெருகிய முறையில் தழுவிக் கொண்டிருந்தார்.
போரின் முடிவும் ஸ்ராலினிஸ்டுகளின் தற்காலிக வலிமைப்படலும் சோசலிசம் வரலாற்று
நிகழ்ச்சி நிரலில் இருந்து, குறைந்தபட்சம் சில தலைமுறைகளுக்கேனும், அகன்று விட்டதான அர்த்தத்தை குறிப்பதாக
முடிவுக்கு வந்தவர்களும் இந்த போக்குகளுடன் சேர்ந்து கொண்டனர். அமெரிக்க
SWP க்குள்
கோல்ட்மன் மற்றும் மோரோ ஆகியோரதும், பிரான்சில்
Socialisme ou Barbarie
குழுவினரதும் மற்றும் பிறரது முடிவுகள் இவ்வாறானதாகவே இருந்தன. மற்றும்
SWP
இன் ஜோன்சன்-ஃபோரஸ்ட் குழுவினர் (சி.எல்.ஆர்.ஜேம்ஸ் மற்றும் ரயா துனயேவ்ஸ்கயா), மற்றும் பிரிட்டனில்
டோனி க்ளிஃப் ஆகியோர், சோவியத் ஒன்றியம் தொடர்பாக "அரச முதலாளித்துவம்" என்ற கருத்துடனான
தங்கள் உடன்பாட்டை பிரகடனப்படுத்தினர்.
ஆயினும், நான்காம் அகிலத்திற்கான மிக உடனடியான மற்றும் உயிர்ப்பாதிப்பான
அபாயம் என்பது, நான்காம் அகிலத்தின் ஐரோப்பாவை அடித்தளமாக கொண்ட தலைமைக்குள்ளான பப்லோவாத
திருத்தல்வாதத்தின் வளர்ச்சி மூலம் முன்வைக்கப்பட்டது. "புறநிலை சமூக யதார்த்தம் அடிப்படையாக முதலாளித்துவ
ஆட்சியையும் ஸ்ராலினிச உலகையுமே உள்ளடக்கியிருக்கின்றது" என்று மிசேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல்
அறிவித்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடி
தீர்க்கப்பட்டிருந்தது என்றனர். போர்-புரட்சி, சீரழிந்த தொழிலாளர் அரசுகளின் நூற்றாண்டுகள் போன்ற
இடதுசாரி மற்றும் அதி-தீவிரவாத சொற்பிரயோகங்கள் மற்றும் இதனையொத்த முழக்கங்கள் கொண்டு
மறைக்கப்பட்டாலும், இவர்களின் அடிப்படை அரசியல் தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்துவ தலைமைகளிடம்
சரணடைவதாக இருந்தது. சுயாதீனமான புரட்சிகர கட்சிகளைக் கட்டுவதற்கு இனியும் நேரமில்லை என்பதாக கூறி,
பப்லோவாதிகள் நான்காம் அகிலத்தை ஸ்ராலினிச அமைப்புகளுக்குள் கலைத்து விட செயலாற்றினர்.
பப்லோவாதிகள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மீது பிரம்மாண்டமான சேதாரத்தை
ஏற்படுத்தினார்கள் என்பதை அனைத்துலகக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த திருத்தல்வாதப்
போக்கிற்கு எதிரான போராட்டத்தின் தங்களின் மொத்த வரலாற்றில் இருந்து அறிவார்கள். ஆனால், பப்பலோவாதிகள்
முதலில், 1953 இல் ஜேம்ஸ்.பி.கனனால் வெளியிடப்பட்ட பகிரங்க கடிதத்தாலும்
SWP ஆலும், பின்னர்
அண்மித்த பத்தாண்டுகளில் SWP
ட்ரொட்ஸ்கிசத்தை நிராகரித்ததற்கு எதிரானதும் மற்றும் பிரித்தானிய
தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சீரழிவிற்கு எதிரானதுமான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தினால் எதிர்க்கப்பட்டதுடன்
அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட்டனர்.
கிழக்கு ஐரோப்பா, சீனா, வியட்நாம், வட கொரியா மற்றும் பிற எங்கும்
இருக்கக் கூடிய "சீரழிந்த தொழிலாளர் அரசுகள்" தான் வருங்காலத்தின் அலை என்பதான ஒரு கருத்தை
அபிவிருத்தி செய்து "சீரழிந்த தொழிலாளர் அரசு" என்கின்ற பிரயோகத்தில் இருந்த மார்க்சிச அர்த்தத்தையே
பப்லோவாதிகள் காலி செய்து விட்டனர். காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சிக்கான அறிமுக உரையில் டேவிட்
நோர்த் குறிப்பிடுவது போல, "சீரழிந்த தொழிலாளர் அரசுகளுக்கான நூற்றாண்டு" என்பது நான்கு தசாப்த
காலத்திற்கான விடயமாக முடிந்து போனது. கோர்பசேவ் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தினை
மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறுவது அபத்தமானது என்ற மண்டேலின் அமரத்துவம் பெற்ற கருத்துரை
போல, இந்த காலகட்டத்தில், ஸ்ராலினிச உருக்குலைவின் அந்த தருணம் வரையிலும், பப்லோவாதிகள் வெளியிட்ட
பிரகடனங்களை படிக்கும்போது, மாபெரும் புரட்சிகர அபிவிருத்திகள் பல்வேறு மத்தியவாத மற்றும் திருத்தல்வாத
போக்குகளை "ஒரு கல்லின் மீது மற்றொன்றாய்" தங்கியிருக்க விட்டு விட்டு செல்வதில்லை என்கிற ட்ரொட்ஸ்கியின்
புகழ்பெற்ற சொற்றொடர் ஒருவருக்கு நினைவுக்கு வரும்.
ஆனாலும் இன்று, பிரதானமாக பப்லோவாதிகளை போலல்லாமல், சோவியத் ஒன்றியத்தின்
உடைவு ஒருவகையில் தங்களது தத்துவங்களை நியாயப்படுத்தி இருப்பதாக முழுப் பொய்யுரைக்கும் அரச முதலாளித்துவ
( State
Capitalist) போக்குகள்
குறித்து விவாதிக்க விரும்புகிறேன். அதிலும் குறிப்பாக, நான்காம் அகிலத்தை விட்டு சுமார் 60 வருடங்களுக்கு
முன்பு பிரிந்த மற்றும் 2000 ஆவது ஆண்டில் உயிர்துறந்த முன்னாள் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசவாதியான டோனி கிளிஃபின்
பாத்திரம், பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு (International
Socialist Organization) (ISO
இல் இருந்து
SWP
முறித்துக் கொண்டிருக்கிறது என்றாலும், அவை ஒரு பொதுவான தத்துவார்த்த கண்ணோட்டத்தைத் தான் இன்னும் பகிர்ந்து
கொண்டுள்ளன) ஆகியவை உட்பட ட்ரொட்ஸ்கிசமெனக் கூறிக் கொள்ளும் ஏராளமான மத்தியவாத குழுக்களை அது
விட்டுச் சென்றிருப்பது ஆகியவை குறித்து நான் ஆராய இருக்கிறேன்.
நாம் இன்னும் முன்னேறுவதற்கு முன்னால், இங்கே "மத்திய வாதம்" என்கிற பதப்
பிரயோகமானது 1930களில் ஸ்பெயினில்
POUM
மற்றும் ஜேர்மனியில்
SAP
போன்ற கட்சிகள் விடயத்தில் கூறப்பட்ட அதே பொருளில் பொருந்தாது என்பதையும் இங்கு கட்டாயம் கூறியாக
வேண்டும். அந்த கட்சிகள் எல்லாம் ஸ்ராலினிசத்திற்கும் சமூக ஜனநாயகத்திற்கும் ஒரு மாற்றினை எதிர்நோக்கி
நின்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை தங்களை நோக்கி ஈர்த்தவை ஆகும். அரச முதலாளித்துவவாதிகளோ,
தங்களின் மார்க்சிச-விரோத கண்ணோட்டம் பல தசாப்த காலத்தில் அபிவிருத்தியுற்றதான ஒரு நடுத்தர வர்க்க
குழுவாகும். கிளிஃப் சோவியத் அரச முதலாளித்துவம் குறித்த தனது சொந்த தத்துவ பதிப்பை 1948ம் ஆண்டில்
உருவாக்கினார்.
இந்த தத்துவத்திற்கு சாதகமான வகையில் பல வருடங்களுக்கு முன்பே செய்யப்பட்ட
வாதங்களுக்கு மேலதிகமாய் அவர் அதிகம் சேர்க்கவில்லை. கிளிஃபை பொறுத்தவரை, சோவியத்துகளின் அழிவும்
தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை இழந்ததும், முதல் ஐந்தாண்டு திட்டத்தின் துரித தொழில்மயமாக்கத்திற்கு
தலைமை வகித்த ஆளும் அதிகாரத்துவம், அரச முதலாளித்துவ ஆளும் வர்க்கம் ஒன்றாக உருமாறியிருந்தது என்பதையே
அர்த்தப்படுத்தியது. நாம் முன்னரே சுருக்கமாய் விவாதித்திருந்ததைப் போல, ட்ரொட்ஸ்கி இந்த வாதங்களுக்கு
எல்லாம் பல வருடங்களுக்கு முன்னரே பதிலளித்து விட்டிருந்தார். எந்த வம்சாவளி உரிமையோ அல்லது எந்த
சிறப்பு சொத்து உறவுகளோ இல்லாமல், எவ்வாறு ஒரு ஆளும் சாதி ஆளும் வர்க்கமாக ஆனது என்பதை கிளிஃப்
விளக்கவே இல்லை.
போருக்குப் பிந்தைய அபிவிருத்திகளுக்கு தோல்விவாத பதிலிறுப்பு
கிளிஃபின் கருத்தாக்கத்தில் மூல சிந்தனையோ அல்லது தத்துவார்த்த தீவிரமோ
அதிகமில்லை என்பது ஒருபுறமிருக்க, ட்ரொட்ஸ்கி குறித்த அவரது விமர்சனத்தில் வெளிப்பட்ட அரசியல் கண்ணோட்டம்
மிகவும் வெளிப்பட்ட ஒன்றாக இருந்தது. தனது ஆரம்பப் புள்ளி, 1940களின் பிற்பகுதியில் தவிர்க்கவியலாமல் மாற்றமுற்றிருந்த
உலக சூழ்நிலை குறித்த தத்துவார்த்த சவால் அல்ல, மாறாக ட்ரொட்ஸ்கியின் பொய் வாக்குறுதிகள் மற்றும்
ஆய்வுக்கணிப்புகள் என்று தான் கருதுவதுடனான ஏமாற்றம்தான் என்று அவர் தெளிவுபடக் கூறிவிட்டார்.
ஒரு தசாப்தத்திற்கு
முன்னதாக பேர்ன்ஹாம் மற்றும் சட்மன் கூறிய புகார்களை ஏறக்குறைய வார்த்தை பிறழாமல் அவர் திரும்பக் கூறினார்,
அவர்களும் இதேபோல் தான் ட்ரொட்ஸ்கி ஒரு "போலி தீர்க்கதரிசியாக" ஆகி விட்டதாக அறிவித்திருந்தனர்.
மார்க்சிசத்தை பாதுகாத்தல் என்ற ( In
Defense of Marxism)
படைப்பின் ஒரு பகுதியான "சோசலிச தொழிலாளர் கட்சியில் ஒரு குட்டி முதலாளித்துவ எதிர்ப்பாளர் அணி" என்கின்ற
தனது புகழ்பெற்ற கட்டுரையில் ட்ரொட்ஸ்கி விளக்கியது போல, அவர் தீர்க்கதரிசனம் கூறும் தொழில் எதுவும் செய்து
வரவில்லை. ட்ரொட்ஸ்கி எழுதினார்: " 'தலைமை திவாலாகி விட்டது', 'ஆய்வுக்கணிப்புகள் எல்லாம் தவறாகி
விட்டது', 'நிகழ்வுகள் நம்மை திகைக்கச் செய்து விட்டன', 'நமது முழக்கங்களை மாற்றுவது அவசியமாகும்'
என்றெல்லாம் எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகள் குய்யோ முறையோ என்று கூச்சலிட்டபோது, இந்த பிரச்சினைகளை
கொஞ்சம் கூட தீவிரமாக சிந்திப்பதற்கு மிகச் சிறு முயற்சியும் கூட செய்யாமல் அவர்கள் இவ்வாறு செயல்பட்ட
போது, அவர்கள் அடிப்படையாக கட்சியின் தோல்விவாதிகளாகவே காட்சியளித்தனர்.
கட்சியை ஒரு நனவான புரட்சிகர சக்தியாகக் காணாமல், தங்களது சொந்த கட்சியாகக்
காணாமல் மாறாக வெளியிலமைந்த ஒன்றாகக் கண்ட, பல தலைமுறைப் போராட்டத்தை உருவகப்படுத்தும்
தொழிலாள வர்க்கத்தின் வாழும் நினைவகமான ஒரு பரிசோதனை கூடமாக காணாமல் மாறாக ஒரு தரம்
குறைந்த உற்பத்திப் பொருளை அல்லது குறைபாடுடையதாக கண்டறியப்பட்ட ஒரு சேவையை வழங்கியிருந்த ஒரு
வகை அரசியல் ஆலோசகராக கண்ட, விரக்தியுற்றிருந்த சந்தேகமுற்றிருந்த ஒரு கன்னையை குணாதிசயப்படுத்தி
காட்டவே தோல்விவாதிகள் என்கிற பதத்தை ட்ரொட்ஸ்கி இங்கு பயன்படுத்துகிறார்.
இது ஒரு சிறிய பிரச்சினை அல்ல, ஏனென்றால் கிளிஃப் மற்றும் சட்மன் இருவரது
அனுபவவாத மற்றும் காட்சிவாத
வழிமுறை, மற்றும் விரக்தியுற்ற
குட்டி முதலாளித்துவ வகையினதாக அவர்களது பொதுவான வர்க்கக் கண்ணோட்டம் ஆகியவற்றின் இதயத்தானத்தில்
இது தான் இடம் பிடித்திருக்கிறது.
பல தசாப்தங்களுக்குப் பின், ட்ரொட்ஸ்கிக்குப் பின் ட்ரொட்ஸ்கிசவாதம் என்கிற ஒரு
சிறு புத்தகத்தில், ட்ரொட்ஸ்கியின் "பொய் வாக்குறுதிகளை" கிளிஃப் சுருக்கமாய் பட்டியலிடுகிறார்: "ரஷ்யாவில்
ஸ்ராலினிச ஆட்சி போரில் தப்பிப் பிழைக்க முடியாது என்று அவர் கணித்திருந்தார்..... முதலாளித்துவம்
ஒருகாலத்திற்கான மரண நெருக்கடியில் இருப்பதாக ட்ரொட்ஸ்கி நினைத்தார்.... பின்தங்கிய, வளர்ச்சி குன்றிய
நாடுகளில் முதலாளித்துவ ஜனநாயக பணியை சாதிப்பது தொழிலாள வர்க்க அதிகாரத்தின் மூலம் மட்டுமே
முன்னெடுக்கப்பட முடியும் என்று ட்ரொட்ஸ்கி வாதிட்டார்.... வரும் சில ஆண்டுகளில் நான்காம் அகிலம் ஒரு
மாபெரும் எதிர்காலத்தை கொண்டிருந்தது என ட்ரொட்ஸ்கி அபரிமித நம்பிக்கை கொண்டிருந்தார்." [2]
ட்ரொட்ஸ்கி மீது கூறப்படும் இந்த பயங்கரமான குற்றங்களை ஆராயலாம். இங்கே
குறிப்பிட்ட பல்வேறு குறிப்புகளும் வாக்குறுதிகளைக் குறிப்பிடவில்லை, மாறாக புரட்சிகர முன்னோக்குகளை தான்
குறிப்பிடுகின்றன. 1922ம் ஆண்டில் கம்யூனிச அகிலத்தின் நான்காவது உலக பேரவை மாநாட்டில் தனது உரையில்
ட்ரொட்ஸ்கி கூறியதைப் போல, "புரட்சிகர சாத்தியப்பாடுகள் மற்றும் முன்னோக்குகளை குறைந்த
சாத்தியமாக்கும் வகையில் நமது கொள்கைக்கு நாம் ஒருபோதும் அடித்தளம் அமைத்துக் கொண்டதில்லை".
ஆனால், ஸ்ராலினிசத்தை அழிப்பதற்கும் நான்காம் அகிலத்தை ஒரு வலிமையான
சக்தியாக கட்டுவதற்குமான போராட்டத்தினை அடித்தளமாக கொண்ட ஒரு செயலூக்கமிக்க கொள்கையை
ட்ரொட்ஸ்கி தொடர்ந்தார் என்பது தான் துல்லியமாக கிளிஃபின் கோபத்திற்கு காரணமாகி விட்டது. போட்டி
வர்க்க சக்திகளின் வாழும் போராட்டமானது சிக்கலான முரண்பாடுமிக்க அபிவிருத்திகளில் விளைகிறது, இந்த
அபிவிருத்திகள் எப்போதும் எளிதாக முன்னெதிர்பார்த்தவையாக இருக்காது என்கிற உண்மையை, சகாப்த இயல்பு
குறித்த செல்லாத்தன்மையாக கிளிஃப் எடுத்துக் கொள்கிறார். "ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு நீங்கள்
வாக்குறுதியளித்தீர்கள், ஆனால் இன்னும் நாங்கள் எதிர்நீச்சல் தான் போட்டுக் கொண்டிருக்கிறோம்" என்று அவர்
முனகுகிறார்.
1939-1940 ல்
குட்டி முதலாளித்துவ எதிர்ப்பாளர்களுக்கு அளித்த தனது பதிலில் ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல, முன்னோக்குகள்
ஒரு கடனுறுதிப் பத்திரம் அல்ல, மாறாக நடைமுறைக்கான ஒரு வழிகாட்டியாகும். மார்க்சின் பகுப்பாய்வு
அடிப்படையிலேயே தவறுள்ளது ஏனென்றால் சோசலிசம் முதலில் ஒரு முன்னேறிய முதலாளித்துவ நாட்டில் தான்
தோன்றும் என அவர் நம்பினார் என்றோ, அல்லது ஜேர்மனி மற்றும் முதலாளித்துவ மேற்கின் வேறெங்கிலும்
புரட்சியை எதிர்பார்த்து லெனினும் ட்ரொட்ஸ்கியும் இயக்கத்தை தவறாக வழிநடத்தி சென்றிருந்தனர் என்றோ கூட
ஒருவர் இதேபோல் வாதிடலாம். உண்மையைச் சொல்லப் போனால், புரட்சிகர இயக்கத்தில் இருந்து தாங்கள்
வெளியேறி விட்டதை நியாயப்படுத்துவதற்காக இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறியவர்கள் ஏராளமாய் இருந்தனர்.
கிளிஃபும் அவரது ஆதரவாளர்களும் இந்த மத்தியவாத ஓடுகாலிப் பாரம்பரியத்தில் திடமாய் நிற்கின்றனர்.
கிளிஃபின் வாதங்களை இன்னும் சற்று விரிவாய் பார்த்தால் இது இன்னும்
விளங்கப்படுத்தப்படுகிறது. "இரண்டாம் உலகப் போரின் முடிவில் [அதிகாரத்துவம் உருக்குலையும் என்பதாக
ட்ரொட்ஸ்கி வாக்குறுதியளித்ததை விட] உண்மையான யதார்த்தம் முற்றிலும் வேறு மாதிரியானதாய் இருந்தது,"
என்று கிளிஃப் எழுதினார். "ஸ்ராலினிச ஆட்சி வீழ்ச்சியுறவில்லை. உண்மையில் பார்த்தால், 1945ம் ஆண்டிற்குப்
பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் விரிவாக்கமுற்று அது கொஞ்சம் கொஞ்சமாய் வலிமையுற்றுக் கொண்டு சென்றது."
வழிமுறையும் அரசியல் முடிவும் கூட ஏறக்குறைய பப்லோவை ஒத்ததாய் இருக்க,
கிளிஃப், தான் ஸ்ராலினிசத்தின் ஒரு புரட்சிகர எதிரியாக தொடர்வதாக கூறிக் கொண்ட போதிலும், ரஷ்யா
பாதுகாப்பு வேண்டி கிழக்கு ஐரோப்பாவிற்குள் விரிவாக்கம் செய்து கொண்டதை மாபெரும் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையின்
அடையாளமாக முழுக்க தவறாய் புரிந்துகொண்டுள்ளார். ஸ்ராலின் இறப்பதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னதாக,
கிழக்கு ஜேர்மன் கிளர்ச்சி, பின் ஹங்கேரி புரட்சி மற்றும் 1956ம் ஆண்டில் குருச்ஷேவின் இரகசிய உரை ஆகியவை
நிகழ்ந்திருக்க, ஸ்ராலினிசம் குறித்த அவரது தீர்ப்பு அது ஒருபோதும் கொண்டிருந்திராத உள்வலிமை மற்றும் முற்போக்கான
பாத்திரத்தை அதற்கு அளிப்பதான இலட்சணத்தில் தான் இருந்தது.
முதலாளித்துவ உலகத்தைப் பற்றி? கிளிஃப் எழுதுகிறார், "போருக்குப் பிந்தைய முதலாளித்துவம்
பொதுவான தேக்கத்திலும் மற்றும் சிதைவிலும் சிக்கிக் கொண்டிருக்கவில்லை. உண்மையில் மேற்கத்திய முதலாளித்துவம்
ஒரு பாரிய விரிவாக்கத்தை அனுபவித்தது, இதனுடன் சேர்ந்து சீர்திருத்தவாதத்தின் ஒரு மலர்ச்சியும் வந்தது....
சமூக ஜனநாயக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், சிதறலுறுவதற்கு அப்பாற்பட்டு, போருக்குப் பிந்தைய காலகட்டத்தில்
முன்னெப்போதையும் விட எண்ணிக்கையிலும் ஆதரவிலும் வலிமையுடன் எழுந்தன.... உதாரணமாக, பிரிட்டனில் அட்லி
( Attlee)
அரசாங்கம் சீர்திருத்தவாதத்தின் உச்சத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது... அது தான் அனைத்திலும் மிகத் திறம்பட்ட
சீர்திருத்தவாத தொழிற் கட்சி அரசாங்கமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. அட்லியின் கீழ் தொழிலாளர்களும்
அவர்களது குடும்பங்களும் போருக்கு முன்பிருந்ததை விடவும் மிக மேம்பட்டதொரு நிலையில் வாழ்ந்தனர்." இதே
தொனியில் இன்னும் ஒரு பக்கத்திற்கு தொடர்ந்து எழுதுகிறார் அவர்.
போருக்குப் பிந்தைய பொருளாதார மேலெழுச்சி ( Boom)
நிலை குறித்து, 40 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு முன்பு, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் செய்யப்பட்ட பகுப்பாய்வை
விரிவாய் திரும்பவும் கூறுவதற்கான இடம் இதுவல்ல. அனைத்துலகக் குழு மட்டும் தான், மேலெழுச்சியை அலட்சியப்படுத்துவதற்கு
வெகு தொலைவில், அதனை விளக்கும் திறன் பெற்றிருந்த ஒரே அரசியல் போக்காக இருந்தது என்பதைக் கூறுவதே
போதுமானது. நாம் வலியுறுத்திக் காட்டியது போல, அந்த மேலெழுச்சி முதலாளித்துவத்தின் எந்த உள்ளார்ந்த
வலிமையாலோ அல்லது எஞ்சியிருந்த எந்த முற்போக்கு பாத்திரத்தாலோ விளைந்ததல்ல, மாறாக பாசிச சக்திகளின்
தோல்வியை தொடர்ந்து வந்த சூழ்நிலைகளுக்கான ஒரு பதிலிறுப்பைத் தான் அது பிரதிநிதித்துவம் செய்தது. ஐரோப்பாவில்
ஆயுதபாணியான தொழிலாள வர்க்கத்தின் பாத்திரம், போர் முடிந்தவுடன் உடனடியாக அமெரிக்க தொழிலாள
வர்க்கத்தின் எழுச்சி, சீனாவில் புரட்சி வலிமையுற்றது இவை அனைத்தும் கணக்கில் எடுக்கப்பட வேண்டியிருந்தது. ஏகாதிபத்தியம்
தனது அடிப்படை முரண்பாடுகளில் எதனையும் வெற்றிகொண்டிருக்கவில்லை, ஆனால் தொழிலாளர் இயக்கத்துக்குள்ளாக
தனது இரண்டு முகவர்களான சமூக ஜனநாயகம் மற்றும் குறிப்பாக ஸ்ராலினிசம் ஆகியவற்றின் சேவைகளையும் பயன்படுத்திக்
கொள்ளும் திறன் பெற்றிருந்தது. இவற்றிற்கு அப்பாற்பட்டு போருக்குப் பிந்தைய காலகட்டத்தை புரிந்து கொள்ள
முடியாது.
இன்னொரு பக்கத்தில், கிளிஃப் சீர்திருத்தவாதத்தின் உல்லாச காலத்தை
கொண்டாடினார். எல்லாவற்றிற்கும் மேலாய், பப்லோவாதிகளை போல, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான
போராட்டங்களையும் இந்த காலகட்டத்தில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் அவர் நிராகரித்தார்.
சீரழிந்த தொழிலாளர் அரசு என்னும் தத்துவத்தை கிளிஃப் துறந்ததானது ஒரு திட்டவட்டமான
அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. புரட்சிகர இயக்கம் முகம் கொடுத்த சிக்கல்களுக்கு பதிலிறுப்பாக "ஜனநாயக
முதலாளித்துவ"த்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் நெருக்குதலுக்கு அடிபணிந்ததையே இது பிரதிநிதித்துவப்படுத்தியது.
1939ம் ஆண்டில் ஹிட்லர்-ஸ்ராலின் ஒப்பந்த சமயத்தில் குட்டி முதலாளித்துவ புத்திஜீவிகளிடையே நிலவிய மனோநிலைக்கு
தக்கவாறு சட்மன் எவ்வாறு தகவமைத்துக் கொண்டிருந்தாரோ அதேபோல கிளிஃபும் அவரது ஆதரவாளர்களும்
பனிப் போரின் நெருக்குதல்களுக்கு தகவமைத்துக் கொண்டனர். இன்னும் எளிமையாய் சொல்வதானால், மார்க்சிச-விரோத
பிரச்சாரம் நிலவிய இந்த காலகட்ட நிலவரத்தில் மார்க்சிசத்தை பாதுகாப்பது மிகக் கடினமானதாகவும் மிகவும்
அசெளகாரியமானதாகவும் அவர்கள் உணர்ந்தனர். கனன் தனது பகிரங்க கடிதத்தில் நன்கு கூறியவாறு, தனித்துவமான
ட்ரொட்ஸ்கிசவாதிகள் மட்டுமே ஸ்ராலினிசத்திற்கு மண்டியிடாமல் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடவும், ஏகாதிபத்தியத்திற்கு
மண்டியிடாமல் இறுதிப்பகுப்பாய்வில் ஏகாதிபத்தியத்தின் ஒரு குட்டி முதலாளித்துவ முகவரான ஸ்ராலினிசத்தை எதிர்த்து
போராடவும் திறம்பெற்றிருந்தனர்.
" ஜனநாயக" ஏகாதிபத்தியத்தின்
நெருக்குதலுக்கு அடிபணிவது என்பது கிளிஃபின் வாதங்களில் ஒரு வழக்கமான பல்லவியாக இருக்கிறது. போருக்கு
பின்னரும் ட்ரொட்ஸ்கிசவாதிகள் இன்னமும் சோவியத் ஒன்றியம் சோசலிஸ்டு தான் என்று கூறுகிறார்கள் என்பது தான்
அவரது பிரதான புகார்களில் ஒன்று. "ஸ்ராலினிச ஆட்சியை ஒரு சோசலிச அரசாக, அல்லது
முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையில் ஒரு இடைமருவல் கட்டமாக ஒரு சீரழிந்த தொழிலாளர்
அரசாக கூட உணர்வதென்பது, அது முதலாளித்துவத்தை விடவும் கூடுதலாய் முற்போக்கானதாய் இருந்தது என்று
அனுமானிப்பதானதாகும்," என்று கிளிஃப் எழுதினார். இதே வாக்கியங்களை மற்றய பல இடங்களிலும் பயன்படுத்தும்
கிளிஃப், ட்ரொட்ஸ்கியை பொறுத்த வரை சோவியத் ஒன்றியம் "சோசலிசத்தின் ஒரு உருக்குலைந்த வகையாக"
இருந்தது என்று கூறுகிறார்.
இது ட்ரொட்ஸ்கிச நிலைப்பாட்டினை பொய்மைப்படுத்துதலாகும். தொழிலாளர்
அரசுக்கும் சோசலிசத்திற்கும் இடையிலான வேறுபாட்டை, (ஒரு சீரழிந்த தொழிலாளர் அரசு மற்றும் சோசலிச
சமூகத்திற்கு இடையிலான வேறுபாட்டையும் சேர்த்து தான் என்பதைக் கூற அவசியமில்லை) விளக்குவதற்குத் தான்
காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி எழுதப்பட்டது, இதுவும் முதல் தடவையாக அல்ல. ஸ்ராலினிச ஆட்சி சோசலிசமும்
அல்ல முற்போக்கானதும் அல்ல; அதிகாரத்துவம் இன்னும் அழித்துவிடாதிருந்த புரட்சியின் வெற்றிகள் தான் முற்போக்கானவையாக
எஞ்சியிருந்தன. இந்த முரண்பட்ட யதார்த்தத்தை நிராகரித்த அரச முதலாளித்துவவாதிகள் சோவியத் ஒன்றியத்தை
பாதுகாப்பதை நிராகரித்தனர், இந்த பாதுகாப்பு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் ஸ்ராலினிசத்தை தாண்டி மற்றும்
ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மேலுறுதி செய்யப்பட்ட ஒன்றே தவிர, கிளிஃப் மோசடியாய் தெரிவிப்பது
போல் விமர்சன ரீதியான ஆதரவு என்றவகையில் செய்யப்பட்டதல்ல.
ட்ரொட்ஸ்கியை தவறாய் பிரதிநிதித்துவம் செய்கையில், 1950களின் தசாப்தத்தில்
கிளிஃப், சட்மன்வாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டார். பிரிட்டனில் சர்வதேச சோசலிஸ்டுகள் என்ற பெயரில்
முதலில் அழைக்கப்பட்டு, பின் 1977 முதல் சோசலிச தொழிலாளர் கட்சி என பெயர் மாற்றிக் கொண்ட கிளிஃப்
குழு, சட்மன் செய்ததைப் போல் அதீத வலதின் பக்கம் முற்று முழுதாய் ஒருபோதும் நகர்ந்து விடவில்லை என்றாலும்,
சட்மன் உடனான அதன் கூட்டு நான்காம் அகிலத்தில் இருந்தான அதன் மத்திய வாத முறிவுக்கு சான்றளித்தது.
கிளிஃப் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பல்வேறு கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில்
இடம்பெறும் இன்னுமொரு தொடர்ந்த பல்லவி, நான்காம் அகிலத்தின் வரலாற்றின் மீதான உணர்ச்சியாவேசத்துடனான
பொய்மைப்படுத்தலாகும். முதலாவதும் முதன்மையானதுமாக, அனைத்துலகக் குழுவின் இருப்பே வெறுமனே உதாசீனப்படுத்தப்பட்டது.
பப்லோவை, மண்டேலை, சோசலிச வருங்காலத்திற்கான பாதையாக அணு ஆயுதப் போரைப் பரிந்துரைக்கும்
அதிதீவிரவாத பப்லோவாதியான லத்தீன் அமெரிக்கர் ஜுவான் போசாடாஸை (Juan
Posadas) கிளிஃப் மேற்கோள் காட்டுகிறார். "மண்டேல்,
பப்லோ மற்றும் போசாடாஸ் ஒரே ஸ்திரமான-கொள்கைப்பிடிப்பு மிகுந்த ட்ரொட்ஸ்கிசவாதத்தில் இருந்து வந்தவர்களே",
என்று தான் இறப்பதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்னதாக கிளிஃப் எழுதினார். கனனைப் பற்றியோ, அல்லது
1960களில் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தலைமையேற்று நடத்திய ஜெரி ஹீலி பற்றியோ எந்த
குறிப்பும் இல்லை. கிளிஃபை பொறுத்த வரை, ட்ரொட்ஸ்கிசமும் பப்லோவாதமும் ஒன்று தான், இது அரச முதலாளிகளை
ஸ்ராலினிசத்தின் சமரசமற்ற எதிரிகளாக மோசடியாக முன்நிறுத்துவதற்கு வசதியாக வழிவகை செய்கிறது.
புரட்சிகர சர்வதேசியவாதம் எதிர் தந்திரோபாய சந்தர்ப்பவாதம்
இந்த மோசமான பொய்மைக்கு பின்னால் நான்காம் அகிலத்தின் அடிப்படை ஸ்தாபகத்தை
நோக்கிய கிளிஃப் குழுவின் கடுமையான விரோதம் இருக்கிறது. டங்கன் ஹலாஸ் தனது ட்ரொட்ஸ்கியின் மார்க்சிசம்
புத்தகத்தில் 1979ம் ஆண்டு முதல் இதனைக் கூறி வருகிறார்.
ட்ரொட்ஸ்கி 1930ம் ஆண்டு எழுதிய ஒரு கட்டுரையை ஹலாஸ் மேற்கோள் காட்டுகிறார்:
"உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட் இடதுகள் வெறுமனே ஐந்து தனிநபர்களை மட்டுமே
கொண்டிருக்கின்றனர் என்றால் கூட அப்போதும் ஒரு சர்வதேச அமைப்பையும் அதே சமயத்தில் ஒன்று அல்லது கூடுதலான
தேசிய அமைப்புகளையும் கட்டும் கடமைப்பாடு உடையவர்களாகவே இருப்பார்கள். ஒரு தேசிய அமைப்பை
அடித்தளம் என்றும் சர்வதேச அமைப்பை ஒரு கூரை என்றும் காண்பது தவறானதாகும். இங்கே இருக்கும் இடையுறவு
முற்றிலும் வேறுபட்டதொரு வகையினதாகும். மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் கம்யூனிச இயக்கத்தை, 1847ம் ஆண்டில்
ஒரு சர்வதேச ஆவணத்தை வெளியிட்டும் ஒரு சர்வதேச இயக்கத்தை உருவாக்கியும் தான் ஆரம்பித்தார். இதே
முறை தான் முதலாம் அகிலத்தின் உருவாக்கத்திலும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. மூன்றாம் அகிலத்திற்கான தயாரிப்பு
சமயத்தில் சிம்மர்வால்ட் இடதினால் பின்பற்றப்பட்ட பாதையும் இதுதான். இன்று இந்த பாதை மார்க்சின் கால
நாட்களை விடவும் மிகவும் கூடுதலான கம்பீரத்துடன் உத்தரவிடுகிறது. ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஒரு நாட்டில்
அல்லது இன்னொரு நாட்டில் ஒரு புரட்சிகர பாட்டாளி வர்க்க போக்கு எழுவது என்பது சாத்தியமே என்பது
உண்மை தான், ஆனால் அது ஒரு தனிமைப்பட்ட நாட்டில் செழிக்கவோ அபிவிருத்தியுறவோ முடியாது, உருவாகிய
அடுத்த நாளே அது சர்வதேச தொடர்புகளை, ஒரு சர்வதேச தளத்தை எதிர்நோக்கியாக வேண்டும் அல்லது
உருவாக்கியாக வேண்டும், ஏனென்றால் தேசிய கொள்கையின் சரியான தன்மைக்கான உறுதிப்பாடு இந்த பாதையில்
மட்டுமே காணப்பட முடியும். பல வருடங்களுக்கு தேசிய அளவில் அடைபட்டுக் கொண்டிருக்கும் ஒரு போக்கு திரும்பவியலாமல்
சீரழிவுக்கு தன்னைத்தானே இயல்பாக்கிக்கொள்கின்றது."
சோவியத் அதிகாரத்துவம் தழுவியிருந்த தேசியவாத சோசலிச வகைக்கு எதிராக
சர்வதேசியவாதத்தின் இந்த சக்திவாய்ந்த பாதுகாப்புடன், ஹலாஸ் தன்னைப் பற்றிக் கூறிக் கொண்டது போல,
ஸ்ராலினிசத்திற்கு எதிரான ஒரு மார்க்சிஸ்ட் உடன்படுவார் என்று தான் ஒருவர் கற்பனை செய்வார். ஆனால்
அதுதான் இல்லை. ட்ரொட்ஸ்கியின் வாதங்கள் "விமர்சன ஆய்வுக்கு தாக்குப் பிடிக்க மாட்டா" என்று கூறி இந்த
பத்தியை அவர் கண்டனம் செய்யச் செல்கிறார். ஹலாஸைப் பொறுத்த வரை, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கம்யூனிஸ்ட்
லீக்குக்காக எழுதப்பட்டிருந்தது, "அது பல்வேறு நாடுகளிலும் இருந்தது என்கிற அர்த்தத்தில் தான் அது சர்வதேசியமயப்பட்டதாக
இருந்தது. அடிப்படையில் அது, பாரிஸ், புரூஸெல்ஸ் மற்றும் வேறெங்கிலும் இருந்த ஜேர்மனில் இருந்து வெளியேறிய
கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் மற்றும் ரைன்லாந்து மற்றும் ஜேர்மன் சுவிட்சர்லாந்து குழுக்களை கொண்டிருந்த
ஒரு ஜேர்மன் அமைப்பு."
ஹலாஸ் தொடர்கிறார், "மேலும், முதலாம் அகிலமானது தாராளவாத
செல்வாக்கின் கீழமைந்த பிரிட்டிஷ் தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் புருதோனிஸ்ட் செல்வாக்கின் கீழ் இருந்த
பிரெஞ்சு அமைப்புகளுக்கும் இடையிலான கூட்டணியாகத் தான் தொடங்கப்பட்டது...." இன்னும் சொல்லிக்
கொண்டே போகிறார். இந்த அறியாமையுடனான வரலாற்றுப் பொய்மைப்படுத்தலானது விஞ்ஞான சோசலிசத்தின்
ஸ்தாபக வேலைத்திட்ட ஆவணத்தின் அடிப்படை இயல்பை திட்டமிட்டு தவறாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அத்துடன்
மார்க்சின் ஆயுள்கால பணியைப் பொய்மைப்படுத்தி, ஒரு சர்வதேச இயக்கத்திற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக
தொழிற்சங்கவாதிகளின் ஒரு குழுவுடன் சேர்ந்து அவர் பொறுமையுடன் போராடினார் என்பதற்காக அவரை ஒரு
தொழிற்சங்கவாதியாக மாற்றி விடவும் முயற்சிக்கிறது.
அரச முதலாளித்துவ வாதிகள், ஸ்ராலினிசத்தின் கொள்கையின் எதிரிகளாக
இருப்பதிலிருந்து வெகு விலகி, ஸ்ராலினிசவாதிகளும் அதிக உடன்பாடு காணும் வகையில் கட்சி குறித்த ஒரு
கருத்தாக்கத்தை உருவாக்கி முன்வைத்தனர். ஹலாஸின் கூற்றுப்படி, 1917 முதல் 1936 வரையான அனுபவங்கள்
"பகுதி கோரிக்கைகளுக்காக தேசிய தொழிலாள வர்க்கங்களில் வேரூன்றிய கட்சிகள் மேற்கொண்ட
போராட்டங்களின் ஒரு நெடிய காலகட்டம் மூலமாக அக்கட்சிகளின் தவிர்க்க முடியாத தன்மையை
விளங்கப்படுத்தின."
இதனை விட வெளிப்படையான ஒரு மார்க்சிச மறுதலிப்பை ஒருவர் கோர முடியாது.
இந்தக் கண்ணோட்டம் அரச முதலாளித்துவவாதிகளின் "தந்திரோபாய சந்தர்ப்பவாத" த்தை சுருங்கக் கூறுகிறது.
ஒரு சர்வதேச வேலைத்திட்டத்தின் மீதல்லாமல் பகுதியான கோரிக்கைகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் தொழிலாள
வர்க்கத்தில் தங்களை வேரூன்றிக் கொள்ளத் தலைப்பட்ட இவர்கள், இந்த அனைத்து தசாப்தங்களிலும் துல்லியமாக
இதே வழியிலேயே செயல்பட்டனர். "கட்சியின் அடித்தளவாதம்" மற்றும் தொழிற்சங்கங்களில் அதிகாரத்துவத்துடன்
ஒத்துழைப்பு; தனி ஒரு பிரச்சினை பற்றிய நடுத்தர வர்க்க எதிர்ப்பு, 1970கள் மற்றும் 1980களில் அவர்களின்
நாஜி-விரோத கழகம் போல; இன்று டோமி ஷெரிடன் மற்றும் ஸ்காட்லாந்து தேசியவாதத்துடனும், மற்றும்
ரெஸ்பெக்ட் தேர்தல் கூட்டணியில் ஜோர்ஜ் கலோவே உடனும் ஒத்துழைப்பு. அமெரிக்காவில், ரால்ஃப் நாடர்
மற்றும் கிரீன்கள் மற்றும் மிகச் சமீபத்தில் ட்ரொட்ஸ்கிச விரோத உணர்ச்சிதட்டும் பிரசங்கி பீட்டர் கமீஜோ
ஆகியோரின் மிகப்பெரிய ஊக்குவிப்பாளர்களாக ISO
ஆகியிருக்கிறது.
கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளின் கவிழ்ப்புகள் முன்தொடர, 1991ம் ஆண்டில் நிகழ்ந்த
சோவியத் ஒன்றியத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடைவு முந்தைய தசாப்தங்களில் பல்வேறு இடது பிரிவு
அரசியல் போக்குகளால் உறுதி செய்யப்பட்ட ஸ்ராலினிசத்தின் இயல்பு குறித்த பல்வேறு கருத்தாக்கங்களையும்
சோதனைக்கு உட்படுத்தியது.
நிச்சயமாக பப்லோவாதிகள் உடனடியாகவும் அப்பட்டமாகவும் அம்பலமாயினர்,
உண்மையில் அவர்கள் வெகு ஆரம்பத்திலேயே அம்பலப்பட்டிருந்தனர். பப்லோவாத கண்ணோட்டத்திற்கு பின்னால்
மாறிய, பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியை சேர்ந்த மைக்கல் பண்டா, சோவியத் ஒன்றியத்தில்
முதலாளித்துவத்தின் மீட்சி என்பது இனியும் ஒரு சாத்திய வாய்ப்பாகக் கூட இல்லை என்று, அது நிகழ்வதற்கு ஒரு
சில ஆண்டுகளுக்கு முன், அபத்தமாகக் கருத்துரைத்தது அறிந்ததே.
அரச முதலாளித்துவவாதிகள் சோவியத் ஒன்றியத்தின் உடைவின் ஒருவகை நிரூபணத்தை
கூறுகிறார்கள், ஆனால் இது எந்தவித தீவிர பகுப்பாய்வும் அற்ற குருட்டுத்தனமான உறுதிப்பாடுகளைத் தவிர
வேறெதனையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.
உண்மையில், ரஷ்ய புரட்சியின் 74 வருட வரலாறு மற்றும் சோவியத் ஒன்றியத்தின்
உடைவின் பின்விளைவுகள் பற்றி விளக்குவதில் அரச முதலாளித்துவ மற்றும் அதிகாரத்துவ கூட்டுழைப்புவாத தத்துவங்கள்
அத்தனை முனைகளிலும் தோல்வியுற்றுள்ளன.
ஏன் அதிகாரத்துவம் தனது சொந்த இருப்பை மறுத்து இறுதி வரை தொழிலாள
வர்க்கத்தின் பெயரிலேயே ஆட்சி புரிந்தது என்பதையோ, அல்லது ஏன் அப்போது தன்னளவில் அழிந்துகொண்டிருக்கும்
நிலையிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவ உலகின் தொழிலாளர் இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த
செல்வாக்கு மற்றும் கட்டுப்பாட்டின் மீதே தங்களது அடித்தளத்தை தொடர்ந்து அமைத்துக் கொண்டிருந்தன
என்பதையோ அவர்களால் விளக்க முடியாது.
அதிகாரத்துவம் ஏன் தான் தங்கியிருந்த சொத்து உறவுகளுக்கு விரோதமாய் இருந்தது
என்பதை அரச முதலாளித்துவத்தால் விளக்க முடியாது. அது ஒரு ஆளும் வர்க்கமாக இருந்ததென்றால், ஒரு ஆளும்
வர்க்கம் அதன் ஆட்சிக்கு ஆதாரமாக இருக்கிற ஒன்றுடன் ஒருவகை குரோத உறவுமுறையை வெளிப்படுத்தியது
வரலாற்றில் இது முதன்முறையாகும். உண்மையில், தேசியமயப்பட்ட சொத்துடனான அதன் உறவு ஒட்டுண்ணி வகையான
ஒன்றாக இருந்தது.
அதிகாரத்துவத்தின் சர்வதேச பாத்திரத்தையும் அது விளக்க முடியாது. தனது
சொந்த சொத்தினை பாதுகாக்கும் ஒரு சுயாதீனப்பட்ட காரணியாக அது ஒருபோதும் இருந்ததில்லை, மாறாக
ஏகாதிபத்தியத்தின் முகவராகத் தான் செயல்பட்டது, தொழிலாள வர்க்க இயக்கத்தின் கழுத்தை நெரிப்பதில்
ஆற்றிய பாத்திரத்தின் மூலம் இச்சேவையை அது ஆற்றியது.
தொழிலாளர் இயக்கத்தை கட்டுப்படுத்தும் இந்தத் திறன் தான் 1980களில் ஒரு
முட்டுச் சந்தை எட்டியது. ஸ்ராலினிசம் அதன் பயன்பாட்டுத்திறனை இழந்து விட்டிருந்தது
ஏனென்றால் ஆரம்ப கட்டத்தில் சாத்தியப்பட்டிருந்த வகையான தேசிய
சீர்திருத்தவாத கொள்கையினை தொடர்ந்து முன்செலுத்துவதற்கான எந்த வழிவகையையும் உலகப் பொருளாதார
நெருக்கடி ஸ்ராலினிசத்திற்கு (அப்படிப் பார்க்கையில், சீர்திருத்தவாத மற்றும் தொழிலாளர் அதிகாரத்துவங்களில்
மற்றய அதிகாரத்துவ தலைமைகளுக்கும் தான்) விட்டு வைக்கவில்லை.
நாம் ஏற்கனவே விளக்கியது போல சோவியத் அரசு இரட்டைக் குணாம்சத்தை
கொண்டிருந்தது. இந்த புரிதலில், நான்கு தசாப்த காலங்களுக்கும் கூடுதலான பனிப் போரின் அடிப்படை ஆதாரத்தை
அரச முதலாளித்துவவாதிகளால் விளக்க முடியாது. சோவியத் ஒன்றியம் அரச முதலாளித்துவ வகையினதாக
இருந்தால், சோவியத் ஒன்றியத்தை உலக ஏகாதிபத்தியம் ஒரு அச்சுறுத்தலாகக் கருதியது ஏன்? இது நிச்சயமாக
எவர் ஒருவரின் கற்பனையிலும் உதித்த ஒன்று அல்ல. முதலாளித்துவ உலகம் தன்னை சோவியத் ஒன்றியத்தின் எதிரியாக
பாவித்தது என்றால் அதற்குக் காரணம் அதிகாரத்துவம் அல்ல, மாறாக ரஷ்ய புரட்சி என்னும் உதாரணம் மிகத்
தீவிரமாய் சீரழிந்த வடிவில் நின்றாலும் இன்னும் உயிர் கொண்டிருந்த ஒரு உதாரணமாய் நின்றதன் காரணமாக.
எனவேதான் அது முடிந்த சமயத்திலேயே பனிப்போரும் முடிந்ததற்கான காரணமுமாகும். சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தின்
மீட்சியை ஏகாதிபத்தியம் கொண்டாடியது என்றால் அதன் காரணமும் அது தான். நாம் ஏற்கனவே விரிவாய் பகுப்பாய்வு
செய்து விளக்கிய காரணங்களினால் வெற்றி ஆர்ப்பரிப்பு எல்லாம் மிகவும் குறுகிய காலமே உயிர் வாழ்ந்தது என்றாலும்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உடைவிற்கு பின்னர் அங்கு தொழிலாள வர்க்கத்தின்
மீது விழுந்த அழிவையும் அரச முதலாளித்துவவாதிகளால் விளக்க முடியாது. வாழ்க்கைத் தரத்திலும் ஆயுள்காலத்திலும்
நவீன வரலாற்றில் முன்கண்டிராத ஒரு சரிவை, பாரிய மந்தநிலை காலங்களை விடவும் பெரியதான ஒரு சமூக
பின்சறுக்கலை உலகம் கண்டிருக்கிறது. இது, ஒரு தசாப்தத்திற்கு சற்று கூடுதலான ஒரு காலத்தில், ஸ்ராலின் குறித்த
பின்னோக்கிய நினைவுகளை உருவாக்கும் அளவுக்கு ஒரு சமூகத் துருவப்படுத்தலையும் சமூக துயரத்தையும் உருவாக்கியிருக்கிறது.
அரசின் இயல்பில் ஒரு அடிப்படையான மாற்றத்தின் வகையில் தான் இது புரிந்து கொள்ளப்பட முடியும். முன்பு,
சற்று திரிந்த வழியில் என்றாலும், தொழிலாள வர்க்கத்தின் மீது தங்கியிருந்த இது, கொஞ்சம் சலுகைகளை மேற்கொள்ளும்
நிர்ப்பந்தமுற்றிருந்தது, இன்றோ அது சமூக நிலைமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான படுகொலைக்கு
தலைமையேற்று நடத்துகிறது.
இறுதியாய் ஒரு புள்ளி. முதலாளித்துவ மீட்சிக்கு அவசியமானதாக அமையும் என்று
ட்ரொட்ஸ்கி கருதிய வன்முறையுடனான எதிர்ப்புரட்சியின் விளைபொருளாக முதலாளித்துவ மீட்சி அமையவில்லை என்பதில்
ட்ரொட்ஸ்கியின் வாதம் தவறு என்பது நிரூபணமாயிருப்பதாக அரச முதலாளித்துவவாதிகள் வாதிடுகிறார்கள். இங்கேயும்
திரிப்பது மற்றும் தவறாய் பிரதிநிதித்துவப்படுத்தும் குற்ற உணர்ச்சியில் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். தங்களது
சொந்த தத்துவத்தின் படி, 1928ம் ஆண்டில் முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் ஸ்தாபகமானதுடனேயே முதலாளித்துவம்
மீட்சியுற்று விட்டதாக கூறுவது எவ்வாறு என்பதை விளக்க அவர்கள் கொஞ்சமும் அக்கறைப்படுவதில்லை. அதிகாரம்
ஒரு வர்க்கத்திடம் இருந்து இன்னொரு வர்க்கத்திற்கு முழுக்க அமைதியாய் கைமாறியது என்று அனுமானிக்கும் இது,
அரசு குறித்த மார்க்சிச தத்துவத்தின் உண்மையான ஒரு திரிப்பு ஆகும்.
ட் ரொட்ஸ்கி, 1930களில்
எழுதும்போது, முதலாளித்துவ எதிர்ப்புரட்சியின் அபாயம் குறித்து எச்சரித்தார். பல தசாப்தங்களுக்கு பின்னர்,
முதலாளித்துவ மீட்சியானது ஒப்பீட்டளவில் "அமைதியாக" இருந்ததென்றால் அதற்கு துல்லியமான காரணம் சீரழிவின்
நீடித்த தன்மையாகும். அதிகாரத்துவம் காட்சியில் இருந்தே துடைத்தெடுக்கப்படுவதற்குள், இறுதி அடிகளை
ஒப்பீட்டளவில் அது எளிதானதாக்கும் வகையில் அக்டோபர் புரட்சியின் எஞ்சியிருந்த சாதனைகளின் அழிப்பு
அவ்வாறான ஒரு கட்டத்தை எட்டியிருந்தது. ஆயினும், மறுபடியும், நாம் காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சிக்கு
திரும்பினால், இந்த ஒரு சாத்தியக் கூறும் கூட எதிர்பார்க்கப்பட்டிருந்ததை நாம் காண்கிறோம்.
"மூன்றாவதாய் ஒரு சாத்தியக்கூறினை எடுத்துக் கொள்வோம் - அதாவது ஒரு புரட்சிகர
கட்சியோ அல்லது எதிர்புரட்சிகர கட்சியோ அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை. அதிகாரத்துவம் அரசின் தலைமையில்
இருப்பது தொடர்கிறது. இந்த நிலைமைகளின் கீழும் கூட, சமூக உறவுகள் உறுதியான வடிவமெடுக்காது. சோசலிச
சமத்துவத்தின் சார்பாக அதிகாரத்துவம் அமைதியான தானாக மனமுவந்து தன்னை துறந்து கொள்ளும் என்று நாம்
எதிர்பார்க்க முடியாது. இந்த சமயத்தில், இத்தகையதொரு நடவடிக்கை அளிக்கக் கூடிய வெளிப்படையான அசெளகரியங்கள்
இருந்தும், பதவிகளையும் அலங்கார பொறுப்புகளையும் அறிமுகப்படுத்துவதை சாத்தியமாக அது கருதுகின்றதென்றால்,
வருங்கால கட்டங்களில் அது தவிர்க்கவியலாமல் சொத்து உறவுகளில் தனக்கான ஆதரவுகளை எதிர்நோக்கியாக
வேண்டும். சொத்துடைமையின் நிலவும் வடிவங்கள் என்ன என்பது குறித்து பெரும் அதிகாரத்துவவாதி, அவை அவருக்கு
தேவையான வருவாயை வழங்குவதை உறுதி செய்வதை மட்டுமே புரிகின்றன எனும் பட்சத்தில், அதிகம் அக்கறை
கொள்ள மாட்டார் என்று ஒருவர் வாதிடலாம். இந்த வாதம் உதாசீனப்படுத்துவது அதிகாரத்துவவாதியின் சொந்த
உரிமைகளின் ஸ்திரமின்மையை மட்டுமல்ல, அவரது வம்சாவளியினர் குறித்த பிரச்சினையையும் தன் குடும்பத்தின் புதிய
துதிபாடலானது வானத்தில் இருந்து குதித்ததல்ல சிறப்புரிமைகள் ஒருவரது குழந்தைகளுக்கு கடத்த முடியாது
போனால் அது பாதிப் பயன் கொண்டதாகவே இருக்கும். ஆனால், இறுதி விருப்ப ஆவணத்திற்கான உரிமை என்பது
சொத்து உரிமையில் இருந்து பிரிக்க முடியாத வடிவம் ஆகும். ஒரு அறக்கட்டளையின் இயக்குநராக இருந்தால்
மட்டும் போதாது, அதன் பங்குதாரராகவும் இருப்பது அவசியம். இந்த தீர்மானமான எல்லையில் அதிகாரத்துவத்தின்
வெற்றி என்பது ஒரு புதிய உடைமை வர்க்கத்திற்கு அதன் மாற்றத்தைக் குறிக்கிறது. மற்றொரு பக்கத்தில், அதிகாரத்துவத்தை
பாட்டாளி வர்க்கம் வெற்றி கொள்வதானது சோசலிசப் புரட்சியின் மறுமலர்ச்சியை உறுதிசெய்யும். ஆக, இந்த
மூன்றாவது சாத்தியக்கூறு மீண்டும் நம்மை முதல் இரண்டு சாத்தியக்கூறுகளுக்கே கொண்டு வந்து விடுகிறது, தெளிவு
மற்றும் எளிமையின் நலன்கருதி அந்த இரண்டை நாம் ஆய்வோம்."
ரஷ்ய புரட்சியின் தன்மை மற்றும் சோவியத் அரசின் தன்மை குறித்த பிரச்சினை
அருவமான ஒன்றோ அல்லது ஏட்டுக்கல்வி விடயமோ அல்ல, மாறாக சகாப்தத்தின் தன்மை, இருபதாம் நூற்றாண்டின்
படிப்பினைகள் மற்றும் இன்று தொழிலாள வர்க்கம் மற்றும் மார்க்சிச இயக்கத்தை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள்
ஆகியவை குறித்த மிகவும் அடிப்படையான கேள்விகளை எழுப்பும் ஒன்றாகும். புரட்சி எதிர்பாராது நிகழ்ந்த ஒரு
நிகழ்வு அல்ல. அதேபோல் அதன் சீரழிவும் புறநிலைரீதியான சடத்துவ காரணங்களைக் கொண்டுள்ளது, அவை
உலகப் பொருளாதாரத்தின் மீது தனது செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் செலுத்துவதை ஒருபோதும் நிறுத்தியிராத
முதலாளித்துவ அமைப்பின் அடிப்படை முரண்பாடுகளுடன் ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றன.
துல்லியமாக, உற்பத்தியின் உலகளாவிய தன்மைக்கும் தேசிய அரசின் தடைகளுக்கும்
இடையிலான முரண்பாடுதான் தனது பயங்கர வெளிப்பாட்டை இரண்டு ஏகாதிபத்தியப் போர்களிலும் அத்துடன் ரஷ்ய
புரட்சியின் ஸ்ராலினிச சீரழிவிலும் கண்டது. ஏகாதிபத்திய சகாப்தத்தில் முதலாளித்துவத்தின் முட்டுச் சந்தைக் கடந்து
செல்வதற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பு செய்வதும் தலைமையேற்று நடத்துவதுமான
பணி பெருகும் அவசர அவசியத்துடன் முன்நிறுத்தப்பட்டிக்கிறது என்பதோடு, இப்பணி ட்ரொட்ஸ்கிச அடித்தளங்களையும்
சோவியத் ஒன்றியம் மற்றும் ஸ்ராலினிசம் குறித்த அதன் பகுப்பாய்வையும் அடிப்படையாகக் கொண்டு அமைய
வேண்டும். |