World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குThirty years of the German Green Party ஜேர்மன் பசுமைக் கட்சியின் 30 ஆண்டுகள் By Peter Schwarz இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 13, 1980ல் ஜேர்மனிய நகரமான கார்ல்ஸ்ரூஹவில் பசுமைக் கட்சி நிறுவப்பட்டது. அந்த நேரத்தில் அதன் நிறுவனர்கள் உட்பட பலரால் அது நடைமுறையில் உள்ள முதலாளித்துவ கட்சிக்கு ஒரு மாற்றீடு, ஒரு புதிய சமூகத்தின் முன்னோடி என்றுகூடக் கருதப்பட்டது. முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பசுமைவாதிகள் தங்கள் இடத்தை ஒரு சாதாரண முதலாளித்துவ கட்சியாக சமூக ஜனநாயகவாதிகளுக்கும் பழைமைவாதிகளுக்கும் இடையே ஒரு இடத்தைக் கொண்டு உள்ளோம் என்ற நிலையில்தான் இருக்கின்றனர். இக்கட்சி பற்றிய ஒரு இருப்புநிலைக் குறிப்பை வரைவது தேவையும் பொருத்தமும் ஆகும். பசுமைக் கட்சியை நிறுவியவர்கள் 1968ல் கல்வி முறையில் இருந்த சீர்கேடுகள், வியட்நாம் போர், அடினவார் சகாப்தத்தின் அழுத்தமான சூழ்நிலை இவற்றை எதிர்த்து எழுச்சி செய்திருந்த தலைமுறையில் இருந்து வந்தவர்களாவர். 1970களின் தொடக்கத்தில் இது பல திசைகளில் திரும்பியது: சிலர் சமூக ஜனநாயகக் கட்சியில் (SPD) சேர்ந்தனர், சிலர் தங்கள் தனிப்பட்ட வாழ்விற்குத் திரும்பி ஒரு மாற்றீட்டான வாழ்க்கை முறையை மேற்கொண்டனர், மற்றவர்கள் பல மாவோவிச குழுக்களை நிறுவி சீன மாதிரியான ஸ்ராலினிசத்தை போற்றினர். பசுமைவாதிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர், அணுவாயுத நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள், சுற்றுச்சூழல் வாதிகள், பெண்ணுரிமை இயக்கத்தினர், மற்றும் சில "பாரம்பரியத்தையும் தந்தைநாட்டையும் பாதுகாக்கும்" நிறைந்தவர்களும் இணைந்தனர். இந்தப் போக்குகளைக் கொண்டிருந்த அனைவருக்கும் பொதுவான கருத்து அவர்கள் வர்க்கப் போராட்டத்தை நிராகரித்ததுதான். 1968 இயக்கத்திலிருந்து, தொழிலாள வர்க்கம் உணர்மையற்ற கும்பல், பிற்போக்குத்தன கருத்துக்களுக்கு இணங்குவர், நுகர்வோர் முறையுடன் முழுமையாக ஒருங்கிணைந்துவிடும் தன்மையுடையது என்ற முற்கருத்தை கொண்டுவந்தது. எனவே சமூகம் வேறுவிதமாக புதுப்பிக்கப்பட வேண்டும்; அதாவது சிந்தனைப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும், அது சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சமாதான நிலைப்பாடு மற்றும் முதலாளித்துவ ஜனநாயகம் புத்துயிர்ப்பு பெற வேண்டும் என்ற விதத்தில் என்ற கருத்தை கொண்டிருந்தது. 1968 இயக்கத்தின் கோட்பாட்டு வழிகாட்டிகளான ஹேபேர்ட் மார்கூஸ, மக்ஸ் ஹொக்கன்கைமர், தியோடர் அடோரோ (Herbert Marcuse, Max Horkheimer, Theodor Adoro) ஆகியோர் பசுமைவாதிகளின் தொட்டில் பருவத்தில், உடனே தெரியவில்லை என்றாலும், அதன் காப்பாளர்களாக இருந்தவர்கள். அவர்கள் "சடத்துவவாழ்வின் உற்பத்தி முறைதான் சமூக, அரசியல், அறிவார்ந்த வாழ்க்கையின் நிலைகள் ஆகியவற்றின் பொது சமூக நிகழ்போக்கை நிர்ணயிக்கிறது (மார்க்ஸ்)" என்னும் வரலாற்று சடத்துவவாத நிலைப்பாட்டினை தனிநபர்தான் சமூக மாற்றத்திற்கு உந்துதல் சக்தி கொடுப்பவராகக் கருதப்படுகிறார் என்ற உயர் இலக்கு கண்ணோடத்தை கொண்டனர். வர்க்கப் போராட்டத்திற்கு பதிலாக அவர்கள் ஆன்மீக, உளரீதியான, பாலியல் விடுதலை ஒரு தனிபருக்கு என்பதை சமூக முன்னேற்றத்திற்கான உண்மை இயக்குவழியாகக் கொள்ளுகின்றனர். இக்கோட்பாடுகள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட ரூடி டுட்ஸ்க (Rudi Dutshke) அவற்றை ஒரு சிந்தனைக் கூட்டாக இணைத்தார். அது அவரை 1968 இயக்கத்தின் பேச்சாளராக்கியது. அவர் பசுமைவாதிகளின் நிறுவன மாநாட்டின் தயாரிப்புக்களுடன் நெருக்கமாக ஈடுபாடு கொண்டிருந்தார். ஒரு படுகொலை முயற்சியின் தாக்கத்தின் நீண்டகால விளைவாக அவர் மாநாட்டிற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு இறந்து போனார். பசுமைவாதிகளின் தீவிரவாத கருத்துக்கள் சில பழைமைவாதிகளையும் சமூக ஜனநாயகவாதிகளையும் அச்சுறுத்தப் போதுமானதாக இருந்தாலும், கட்சியின் தீவிரவாதம் பெரும்பாலும் வெளித்தோற்றமான, முடி, உடையுடுத்தல், வாழ்க்கை முறை இவற்றைத்தான் வரம்பாகக் கொண்டிருந்தது. அடித்தளத்தில் அவர்கள் பிற்போக்குத்தன பார்வை கொண்டவர்களாக, உண்மையான அர்த்தத்தில் பழைமைவாதிகளாகவே இருந்தனர். பசுமைவாதிகள் தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து, அதன் இருப்புகாரணமாக அது தற்காலத் தொழிற்துறையுடன் பிரிக்கமுடியாமல் பிணைந்துள்ளதால் அதன் சமூகப் பிரச்சினைகளை தனிச்சொத்துடைமை தளைகளில் இருந்து உற்பத்தி சக்திகளை விடுதலை செய்வதின் மூலம்தான் தீர்க்கமுடியும் என்ற கண்ணோட்டத்தில் இருந்து சமூகத்தைக் குறைகூறவில்லை. மாறாக, பசுமை வாதிகள் சமூகத்தை நவீன உற்பத்தி முறையினால் அச்சம் அடையும் குட்டி முதலாளித்துவத்தின் நிலைப்பாட்டில் இருந்து குறைகூறினார்கள். மிக வெளிப்படையான சமூகப் பிரச்சனைகளை கடப்பதற்கு பழைய உற்பத்தி வழிவகைகளை நாட முற்படுகின்றனர். கட்சியின் பொருளாதார திட்டத்தில் இது தெளிவாக, வெளிப்படையாக உள்ளது அது "தேசிய, சர்வதேச உழைப்பு பங்கீட்டு முறையில் இருந்து திரும்பி நுகர்வோர் சார்புடைய உற்பத்தி முறைக்கு, அதுவும் உள்ளூர், பிராந்திய சந்தைகளுடைய நலன்களுக்காக" என்று அழைப்பு விட்டது. இவ்வேலைத்திட்டத்தின் அடிப்படை பிற்போக்குத் தன்மை பப்லோவாத தலைவர் ஏர்னெஸ்ட் மண்டெல் போன்ற மார்க்சிஸ்ட்டுக்கள் என்று தம்மை கூறிக் கொள்ளுபவர்கள், பசுமைவாதிகளை சமூக ஜனநாயக கட்சிக்கு (SPD) "ஒரு இடது மாற்றீடு" என ஆர்வத்துடன் வரவேற்பதற்கு தடையாக இருக்கவில்லை. மண்டேலின் மதிப்பீட்டில் இருந்த தவறை பசுமைவாதிகள் விரைவில் நிரூபித்தனர். சுற்றுச் சூழல் தகர்ப்பு, போர், பிற சமூகத் தீமைகளை எதிர்த்தல் என்ற அவர்களுடைய வேலைத்திட்ட அறிவிப்புக்கள் ஆளும் உயடுக்குடன் ஒரு உடன்பாட்டிற்கு செல்ல தடையாக இருக்கவில்லை. கட்சியின் வளர்ச்சி இறுதியில் நிறுவன உறுப்பினர்களிடையே இருந்த கற்பனாவாத கருத்துக்களுக்கு பதிலாகத்தான் அதன் சமூக இருப்பில் இருந்துதான் வந்தது. பசுமைவாதிகள் நகர்ப்புற, நல்ல கல்வி கற்ற மத்தியதர வர்க்கங்களை தளமாகக் கொண்டனர். அவர்களுடைய வாழ்க்கைத் தரங்கள் 1980, 1990 களில் உயர்ந்தது, ஆனால் தொழிலாள வர்க்கத்தினது தேக்கமடைந்து, சரிவடையத் தொடங்கியது. 1980 களின் ஆரம்பத்தில் பசுமைவாதிகள் நிறைய மாநிலச் சட்டமன்றங்களில் நுழைந்தனர். 1983ல் அவர்கள் முதல்தடவையாக கூட்டாட்சி பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்; 1985ல் ஜொஸ்கா பிஷ்ஷர் ஒரு ஜேர்மனிய மாநிலத்தில் (ஹெசி) முதல் பசுமைக்கட்சி மந்திரியானார். 1998ல் பசுமைவாதிகள் கூட்டாட்சி அரசாங்கத்தில் சமூக ஜனநாயக கட்சியின் சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடரின் கீழ் சேர்ந்தனர். பசுமைவாதிகள் கூட்டாட்சி அரசாங்கத்தில் சேர்வதற்குக் கொடுத்த விலை தங்கள் உறுதியான அமைதிவாத நிலைப்பாட்டை குப்பையில் போட்டதாகும். புதிய அரசாங்கம் அமைக்கப்படு முன்பே, பசுமைவாதிகள் பாராளுமன்றச் சிறப்புக் கூட்டத்தில் யூகோஸ்லாவியாவிற்கு எதிராக நேட்டோ போர் தொடுத்துள்ளதில் ஜேர்மனி பங்கு பெறுவதற்கு வாக்களித்தனர். முன்னாள் தெருச்சண்டைக்காரர் ஜொஸ்கா பிஷ்ஷரிடம் மதிப்பிற்குரிய பதவியான வெளியுறவுத்துறை கொடுக்கப்பட்டது. ஜேர்மனிய இராணுவம் சர்வதேச ஈடுபாடுகளைக் கொள்ளுவதற்கு மக்கள் எதிர்ப்பு ஆழ்ந்திருப்பதை கடப்பதற்காக இது செய்யப்பட்டது. இன்று பசுமைவாதிகள் ஜேர்மனிய இராணுவவாதத்தின் மிக ஆக்கிரோஷமான ஆதரவாளர்களாக உள்ளனர். ஒரு பெரும் திறமையுடன் கூடிய இராணுவம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று கோருவதுடன், ஆப்கானிஸ்தான் போருக்கும் ஆதரவைக் கொடுக்கின்றனர். பசுமைவாதிகள் சமூகப் பிரச்சினைகள் என்று வரும்போது முதலாளித்துவ அரசியலில் வலதுசாரிப்புறம் உள்ளனர். சமூக ஜனநாயக கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, அவர்கள் கூட்டாட்சிக் குடியரசின் வரலாற்றில் மிகப் பரந்த சமூக வெட்டுத் திட்டங்களை செயல்படுத்தினர். ஷ்ரோடரின் பொதுநல எதிர்ப்பு "செயற்பட்டியல் 2010" சமூக ஜனநாயக கட்சிக்குள் அழுத்தங்களை தூண்டி இடது கட்சியாக பிளவடைய வழிவகுத்தபின், பசுமைவாதிகள் உறுதியாக அவருடைய கொள்கைகளுக்கு ஆதரவைக் கொடுத்தனர். பரந்த மக்கள் எதிர்ப்பிற்கு இடையே உறுதியாக இருக்குமாறு அவர்கள் ஷ்ரோடருக்கும் ஊக்கம் கொடுத்து, பொதுநலச் செலவுகளில் இன்னும் அதிக வெட்டுக்களும் வேண்டும் என்றனர். இன்று பசுமைவாதிகள் பழைமைவாதிகளுடன் ஒரு அரசாங்கத்தில் ஒத்துழைக்கும் விருப்பத்திற்குத் தயாராக உள்ளனர். முதல் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி (CDU)-பசுமைவாதிகள் கூட்டணிகள் ஏற்கனவே ஹாம்பேர்க்கிலும், சார்லாந்திலும் நிறுவப்பட்டுவிட்டன. சார்லாந்தில் இது மூன்று கட்சிக் கூட்டணியாக தடையற்ற சந்தையை ஆதரிக்கும் சுதந்திர ஜனநாயகக் கட்சியுடனும் (FDP) சேர்ந்துள்ளது. 75 ஆண்டுகளில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், வலதுசாரிகளாக பசுமைவாதிகள் வளர்ச்சியுற்றிருப்பதில் இருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்வது குறிப்பாக இளைய தலைமுறைக்கு மிகவும் அவசியமாகும். முதலாளித்துவ சமூகத்தின் தீமைகள் ஏதும் பசுமைவாதிகளின் கருத்துக்களால் கடக்கப்பட முடியாது. அவர்கள் மேல்மட்டமான காரணங்களில் மாற்றங்களை செய்ய மட்டும்தான் கவனம் செலுத்துகின்றனர். இராணுவாதம், சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றை வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்தி, முதலாளித்துவத்தை அகற்ற ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொள்ளுவதற்கு போராடும் ஒரு கட்சி மூலம்தான் எதிர்க்கப்பட முடியும். |