World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
இத்தாலி
Italian police incarcerate 1,300 migrant workers after Calabria protest கலப்ரியா ஆர்ப்பாட்டத்தை அடுத்து இத்தாலிய போலீஸார் 1,300 குடிபெயர்ந்த தொழிலாளர்களை சிறையில் அடைக்கின்றனர் By Marianne Arens and Stefan Steinberg இத்தாலிய போலீஸ் மற்றும் காராபினியரியும் கிட்டத்தட்ட 1,300 ஆபிரிக்க தொழிலாளர்களை கடந்த வார இறுதியில் ரோசார்னோவின் கலப்ரிய சிறு நகரத்தில் கைது செய்து அவர்களை பஸ்களிலும், இரயில்களிலும் காவல் மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். குடியேறியவர்கள் கடந்த வியாழன் மற்றும் வெள்ளியன்று அதற்கு முந்தைய நாள் இனம்தெரியா நபர்கள் சில குடியேறியவர்கள்மீது சுட்டதற்காக ரோசர்னோவில் எதிர்ப்பை தொடக்கியிருந்தனர். வன்முறை மோதல்களும் ஒட்டு மொத்த கைதுகளும் இத்தாலியிலும் ஐரோப்பாவிலும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின் மீது ஐரோப்பிய அரசாங்கங்கள் நடத்தும் தாக்குதல் ஆகியவற்றால் பெருகி வரும் சமூக பதட்டங்களை குறிக்கின்றன. ஐரோப்பிய உயரடுக்கு இதையொட்டி வரும் சமூகச் சீற்றத்தை குடியேறிய தொழிலளர்கள் மீது திருப்ப முயல்கிறது; அதே நேரத்தில் ரோசர்னோ போன்ற இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை திரித்து, முழுத் தொழிலாள வர்க்கம், குடியேறுபவர்கள், உள்ளூர் தொழிலாளர்கள் அனைவர் மீதும் போலீஸ் அரசாங்க நடவடிக்கைகளை எடுக்கவும் முயல்கிறது. இத்தாலியின் உள்துறை மந்திரி ரோபர்டோ மரோனி ரோசர்னோ நிகழ்வுகளை "மிக அதிக சகிப்புத்தன்மை காட்டுவதால்" விளைந்தது என்று விரைவில் விளக்கினார். உண்மையில், இத்தாலிய அரசாங்கத்தின் "சகிப்புத்தன்மையின்" விளைவு என்பதற்கு முற்றிலும் மாறாக--குடியேறியவர்களிடம் நடந்து கொண்ட விதத்தில், ஐரோப்பாவிலேயே மிக மிருகத்தனமான செயல்களில் ஒன்றாக இது இருந்தது-- ரோசர்னோவில் குடியேறிய தொழிலாளர்கள் எதிர்ப்பு பல மாதங்களாக புகைந்து கொண்டிருந்தது. இதற்குக் காரணம் மனிதத் தரத்திற்கும் குறைவான பணி மற்றும் வாழ்க்கை நிலைமைகளும், வேண்டுமென்றே கலப்ரியாவில் உள்ள மாஃபியா அமைப்பு போன்ற 'Ndragheta உடைய தவறான போக்கும்தான். 'Ndragheta தொழிலாளர்களுக்கு எதிராக நடத்திய வன்முறைதான் எதிர்ப்புக்களை தூண்டியிருக்க வேண்டும். அதற்கு முந்தைய தினம் ஒரு சில குடியேறிய தொழிலாளர்கள் இனம்தெரியாத துப்பாக்கி தாரர்களால் சுடப்பட்டு காயமுற்றனர். காயமுற்றவர்களில் ஒருவர் டோகோவில் இருந்து வந்தவர்.இதை எதிர்கொள்ளும் விதத்தில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், "நாங்கள் ஒன்றும் மிருகங்கள் அல்ல!" என்று கூச்சலிட்டுக் கொண்டு, தங்கள் எளிய வீடுகளில் இருந்து புறப்பட்டு ரோசர்னோ நகர மையத்திற்கு அணிவகுத்து வந்தனர்; அங்கு அவர்கள் தடுப்பு சுவர்களை அகற்றி, குப்பைத் தொட்டிகளை தலைகீழே கவிழ்த்து, கார் சன்னல்களையும் உடைத்ததாகக் கூறப்படுகிறது. கலபிரியாவில் ஒரு சிற்றூரான 16,000 மக்களைக் கொண்ட ரோசர்னோவில் ஆரஞ்சு அறுவடை நேரத்தில் கிட்டத்தட்ட 1,500 தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். மிகக் கடினமான வேலை, குறைந்த ஊதியம் பெறும், ஆபிரிக்காவில் இருந்து முக்கியமாக வரும் சட்டவிரோதமாக உள்ள குடியேற்றத் தொழிலாளர்களால் செய்யப்படுகிறது. ஆபிரிக்கர்கள் தெற்கு இத்தாலியை சுற்றி வேலை புரிகின்றனர்--வசந்த காலத்தில் காம்பனியாவில் தக்காளி அறுவடை செய்தல், சிசிலியில் கோடை காலத்தில் திராட்சைகளை பறித்தல், துவக்க இலையுதிர்காலத்தில் புக்லியாவில் ஆலிவ்களை பறித்தல், இறுதியில் பிந்தைய இலையுதிர்காலத்தில் கலப்பிரியாவில் ஆரஞ்சை எடுத்தல் என்று. இவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 2 அல்லது 3 யூரோக்களுக்கு மேல் ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. பணி இருக்கும்போது ஆபிரிக்க குடியேறிய தொழிலாளர்கள் பெரும் அழுத்தத்தின்கீழ் கடுமையாக உழைத்து, கூடாரங்களிலும் கார்ட்போர்ட் தடுப்பு அமைப்புக்களிலும் உறங்குகின்றனர். ரோசர்னோவில் 200 ஆபிரிக்க தொழிலாளர்கள் ஒரு கைவிடப்பட்ட ஆலையில், வெப்ப வசதி, கழிப்பறை, நீர் இவை இல்லாமல் வாழ்ந்து வந்தனர். இத்தாலியில் சர்வதேச குடியேறுவோர் அமைப்பு (International Organization fro Migration) உடைய செய்தி தொடர்பாளர் Flavio Di Giacomo கருத்துப்படி, இக்கலகங்கள் "பல இத்தாலிய பொருளாதார உண்மைகளை, குறைவூதிய வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மனிதத் தரத்திற்கு குறைவான நிலையில், மனித உரிமைகள் அற்று சுரண்டப்படுவதை தளமாகக் கொண்டவை" என்பதை நிரூபிக்கிறது என்றார்; அவர்கள் "அரை அடிமைத்தனத்தில்" வாழ்கின்றனர் என்றும் அவர் கூறினார். கலபிரிய பழ அறுவடை கூடுதலான முறையில் 'Ndragheta கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது. குடியேறியவர்களின் ஊதியம் அதிகபட்சமாக நாள் ஒன்றிற்கு 23 யூரோக்கள் என்று இருக்கும்; இதில் இருந்து அவர்கள் 5 யூரோக்கள் 'Ndragheta விற்கு "பாதுகாப்பிற்குப் பணம்" கொடுக்க வேண்டும். கடந்த வாரம் வெடிக்கப்பட்ட தோட்டாக்கள், பாதுகாப்புப் பணம் கொடுக்க மறுக்கும் தொழிலாளர்களை தண்டிக்க குற்றக்கூட்டம் நடத்திய செயல் என்று கருதப்படுகிறது. ஒரு சூடான் நாட்டு தொழிலாளி அப்துல் ரஷித் முகம்மத் மஹ்முது இட்டிரிஸ் செவ்வாயன்று CNN இடம், பல குடியேறிய தொழிலாளர்கள் வசிக்கும் ஒரு கைவிடப்பட்ட ஆலைக்கு வெளியே BMW நிறுத்தப்பட்டது, அதில் இருந்து ஒரு நபர் இறங்கி 26 வயது ஆயிவா சாய்போவைச் சுட்டுக் காயப்படுத்தினார்" என்று கூறினார். உள்ளூர் போலீசார் தாங்கள் காயமுற்றவருக்கு உதவ இயலாது என்று கூறிவிட்டனர். ஒரு சில மணி நேரத்திற்குள் கிட்டத்தட்ட 2,000 குடியேறியவர்கள் ரோசர்னோவின் நகர அரங்கிற்கு அணிவகுத்துச் சென்றனர்; ஆனால் அங்கிருந்து போலீசாரால் துரத்தப்பட்டனர். மறுநாளும் இதே அணிவகுப்பை அவர்கள் தொடர முற்பட்டனர். இத்தாலிய அரசாங்கம் இரக்கமற்ற முறையில் குடியேறியவர்களின் எதிர்ப்புக்களை எதிர்கொண்டது. நூற்றுக்கணக்கான போலீசாரும் காராபிநீயரும் உடனடியாக குடியேற்றத் தொழிலாளர்களுக்கு எதிராகத் திரட்டப்பட்டனர். துணை இராணுவ போலீஸ் பிரிவுகள் கண்ணீர்ப் புகை குண்டை போட்டதுடன் எதிர்ப்புத் தெரிவித்த தொழிலாளர்களைத் தடியாலும் அடித்தனர். போலீசாரும் காராபினியரும் தீவிர வலதுசாரிக் குழுக்கள் குடியேறிய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியபோது பேசாமல் பார்த்திருந்தனர். தடிகள், கற்கள், வேட்டைத் துப்பாக்கிகள் இவற்றைக் கொண்டிருந்த தீவிரவாதிகள் குடியேறிய தொழிலாளர்களுடன் பூசலில் ஈடுபட்டனர்; வெள்ளி முழுவதும் இது தொடர்ந்தது. அவர்கள் டிரக்குகளையும், டிராக்டர்களையும் பயன்படுத்தி வெளிநாட்டுத் தொழிலாளர்களை எங்கு இருந்தாலும் வேட்டையாடித் தாக்கினர். குடியேறிய தொழிலாளர்கள் தங்களைக் காத்துக் கொள்ள ஒரு தடுப்பைக் கொண்டனர்; அதில் இரண்டு எரிக்கப்பட்ட கார்கள், ஏராளமான கார் டயர்கள் ஆகியவை இருந்தன; பின்னர் ஆலைக்கட்டிடத்திற்குள் அவர்கள் சென்றனர்; அதுதான் அவர்களுடைய முக்கிய உறைவிடம் ஆகும். பின்னர் பலத்த ஆயுதங்கள் கொண்ட போலீஸ் பிரிவுகள் தொழிலாளர்களைச் சுற்றி பழைய ஆலையின் முன்பு நின்றனர். ஏராளமான குடியேறிய தொழிலாளர்கள் ஓடிப்போயினர், எஞ்சி இருந்தவர்கள் நகரத்தில் இருந்து இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டனர். 1,000 க்கும் மேற்பட்ட குடியேற்ற தொழிலாளர்களை Crotone, Bari, Brindisi ஆகிய இடங்களில் இருக்கும் காவல் மையங்களுக்கு அனுப்புவதற்கு போலீஸ் பஸ்களையும், இரயில்களையும் பயன்படுத்தினர். அதற்கு முன் தொழிலளர்களின் தற்காலிக முகாம்களை ரோசர்னோவிற்கு வெளியே இருப்பவற்றையும் புல்டோசர் வைத்து தகர்த்தனர். சனிக்கிழமை அன்று ஒரு இனவெறி பிடித்த கும்பல் தன்னுடைய கோபத்தை ரோசர்னோவில் எஞ்சியிருந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராகக் காட்டியது. பர்கினா பாசோவில் இருந்து வந்த 29 வயது நபர் இரு கால்களிலும், ஒரு கையிலும் தோட்டாக்களால் காயமடைந்தார். மூன்று குடியேற்ற தொழிலாளர்கள் இருந்த கார் ஒன்று, இரும்புத் தடிகள் வைத்திருந்த குண்டர்களால் நிறுத்தப்பட்டது. மூவரில் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டர், மற்ற இருவர் தப்பி ஓட முடிந்தது. காயமுற்றவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை 67 என்று இருந்தது; இதில் 31 குடியேறிய தொழிலாளர்கள், 17 இத்தாலியர்கள், 19 போலீசார் அடங்குவர். எட்டு ஆபிரிக்கர்கள் இன்னும் மருத்துவமனையில் தீவிர காயத்துடன் உள்ளனர். இத்தாலிய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் ஆபிரிக்க தொழிலாளர்கள் பற்றி இனவெறி நிறைந்த கண்டனங்களை வெளியிட்டனர். உள்துறை மந்திரி மரோனி ரோசர்னோவில் ஆவணமற்று இருக்கும் எந்த ஆபிரிக்க தொழிலாளியும் நாடு கடத்தப்படுவார் என்றார். வடக்கு லீக்கின் மந்திரி ரோபர்ட்டோ கால்டெரோலி இத்தாலிய அரசாங்கத்தின் இனவெறி செயல்பட்டியலை விளக்கி, தெற்கு இத்தாலியில் 18 சதவிகிதம் வேலையின்மை இருக்கும்போது, "பணிகள் இத்தாலியர்களுக்கு செல்ல வேண்டும்... சடவிரோதமாக குடியேறியவர்களுக்கு அல்ல" என்றார். "முதலில் ஒழுங்கை நிறுவுவோம், பின்னர்தான் மற்றவை" என்று முன்னாள் புதிய பாசிச மற்றும் தற்பொழுது பாராளுமன்றத்தில் ஆளும் Popolo della Libertas பிரிவின் Maurizio Gasparri செனட்டில் கூறினார். சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இன்னும் திறமையுடன் நாடு கடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மாஃபியா வகையில் உள்ள அமைப்புக்கள், சமீபத்திய நிகழ்வுகளில் வெளிப்பட்டுள்ளது பற்றி, காஸ்பரி மெளனமாக உள்ளார்; அதே போல் 'Ndrsagheta பழ அறுவடை ஏற்பாடு செய்தல், குடியேறியவர்களின் சட்ட விரோத அந்தஸ்தைப் பயன்படுத்தி பெரும் இலாபம் அடைவது பற்றியும் பேசாமல் உள்ளார். கலகங்களின் முதல் தினத்தில் வடக்கு லீக்கை சேர்ந்த மரோனியும் திட்டமிடப்பட்டு நடத்தப்படும் குற்றங்கள் பிரச்சினை பற்றி Reggio Calabria கூட்டத்தில் பேசினார். அதற்கு சில நாட்கள் முன்புதான் 'Ndragheta ஒரு குண்டுத் தாக்குதலை நகரத்தில் வட்டார நீதிமன்றத்தின்மீது நடத்தியது. மே 2009ல் மாஃபியா எதிர்ப்புக் குழு இப்பகுதியி விவசாய நடவடிக்கைகளில் மாஃபியாவின் பங்கு பற்றி விசாரணைக்கு ஏற்பாடு செய்தார். அந்த விசாரணையை ஒட்டி மூன்று உள்ளூர் வணிகர்களும் இரண்டு பல்கேரிய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். உள்ளூர் குற்றக்குழுக்கள் குடியேறியவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி தங்கள் செயலில் இருந்து கவனத்தை திருப்பியிருக்கக்கூடும் என்பது முற்றிலும் இயல்பே ஆகும் இப்படித்தான் 2008லும் Camorra குற்றக்குழுக்கள் நகரத்தின் குப்பை ஊழலில் தங்கள் பங்கை திசைதிருப்ப நேபிள்ஸில் இனவழித் தாக்குதல்களை நடத்தின. தங்கள் நடவடிக்கைகள் பெர்லுஸ்கோனி அரசாங்கத்தால் நாட்டில் மொத்தமாக இருக்கும் ஆழ்ந்த சமூக நெருக்கடிக்கு திரை கொடுக்கும் என்பதால் வரவேற்கப்படும் என்ற உணர்வில் இக்குழுக்கள் வன்முறையைத் தூண்டி, இனத்தாக்குதல்களைக் கட்டவிழ்க்கின்றன. அரசாங்கம் அதிகாரத்தில் இருப்பதற்கு காரணம் இத்தாலியின் எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க போராட்டங்களை முற்றிலும் கைவிட்டுவிட்டதுதான். சனிக்கிழமை அன்று, இத்தாலியின் மிகப் பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான CGIL ன் பொதுச் செயலாளர் Guglielmo Epifani குடியேற்ற தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு வர மறுத்து "எங்கிருந்து வன்முறை வந்தாலும்" அது கண்டிக்கப்பட வேண்டும் என்றார். 60 மில்லியன் மக்கள் இருக்கும் நாட்டில், இத்தாலியில் நான்கு அல்லது ஐந்து மில்லியன் சட்டபூர்வ குடியேறியவர்களும், கிட்டத்தட்ட அந்த அளவிற்கு ஆவணமற்ற தொழிலாளர்களும் உள்ளனர். அப்பிரிவும் வயது முதிர்ந்த மக்கட் தொகுப்பு, உலகிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டது.ஐரோப்பாவிலேயே மிகக் கடுமையான குடியேற்ற சட்டங்கள் சிலவற்றை பெர்லுஸ்கோனி அறிமுகப்படுத்தியுள்ளார்; இதில் போலீஸ், கடலோரப் பாதுகாப்பு பிரிவிற்கு பரந்த அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன; குடியேறுபவர்கள் இத்தாலிய கடலோரத்தை அடைவதைத் தடுக்கும் நோக்கம் உடையவை. ரோசர்னோ நிகழ்ச்சியை பயன்படுத்தி அரசாங்கம் சட்டத்தை இன்னும் கடுமையாக்கும் என்ற குறிப்புத்தான் உள்ளது. இது இத்தாலியில் மட்டும் இல்லை. ஐரோப்பா முழுவதும், ஆளும் உயரடுக்கு மிகத் தீவிர வலது அரசியல் சக்திகளை தழுவி, ஜனநயக உரிமைகள்மீது புதிய தடைகளைக் கொண்டு வந்து அரசாங்கத்தின் போலீஸ் அதிகாரங்களையும் கட்டமைக்கின்றது; இவை அனைத்தும் "பயங்கரவாதத்தை" எதிர்த்துப் போரிடுதல், குடியேறுபவர்களை கட்டுப்படுத்துதல் என்ற மறைப்பில் நடைபெறுகின்றன உண்மையில் இந்த நடவடிக்கைகள் இன்னும் பரந்த அளவில் தொழிலாள வர்க்கம் முழுவதையும் எதிர்த்து அதன் சமூக நிலை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நடத்த இருக்கும் பரந்த தாக்குதலுக்கு முன்னோடியாகத்தான் உதவுகின்றன. |