World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US to turn up heat on Iran

குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்ய ஈரான் மீது அமெரிக்கா அழுத்தத்தை அதிகரிக்கிறது

Peter Symonds
8 January 2010

Back to screen version

தெஹ்ரானின் அணுசக்தி திட்டங்கள் பற்றி ஜனாதிபதி ஒபாமா பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாட்டிற்கு விதித்திருந்த காலக்கெடுவான டிசம்பர் 31 முடிவடைந்ததை அடுத்து, அமெரிக்க நிர்வாகம் ஏற்கனவே ஈரானுக்கு எதிராக ஆக்கிரோஷ புதிய நடவடிக்கைகளுக்கு சமிக்கை காட்டியுள்ளது. திங்களன்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் "உரையாடலுக்கான கதவுகள் இன்னும் திறந்திருக்கின்றன", என்று அறிவித்தார்; ஆனால் "அணுவாயுதத் தயாரிப்புக்களில் ஈடுபடும் விதத்தில்" ஈரான் நடவடிக்கைகளை எடுத்தால் அமெரிக்கா "வெறுமே வேடிக்கை பார்க்காது" என்று எச்சரித்தார்.

இன்னும் கூடுதலான பொருளாதாரத் தடைகளை ஈரான்மீது சுமத்தவதற்கான தயாரிப்புக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. P5+1 எனப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான், ரஷ்யா, சீனா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் அடுத்த 15 நாட்களில் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் ஈரானுக்கு எதிராக கொண்டுவர இருக்கும் தண்டனை நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்கு கூட உள்ளனர். இந்த வாரம் சீனா இன்னும் கூடுதலான தடைகளை பொருத்தமற்றதென பகிரங்கமாக கூறியபோதிலும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஐ.நா. ஒப்புதல் இருந்தாலும், இல்லாவிட்டலும் நடவடிக்கைகளை தொடக்க உள்ளன.

கடந்த ஞாயிறு வெளிவந்த நியூ யோர்க் டைம்ஸ் பதிப்புக் கட்டுரையில் உடனடி நடவடிக்கைகள் கூறப்பட்டுள்ளன. பெயரிடப்படாத வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஈரானுக்குள் இருக்கும் உள்நாட்டு அமைதியின்மை மற்றும் யுரேனிய செறிவூட்டல் பற்றிய தொழில்நுட்ப இடர்பாடுகளும் ஈரானிய தலைவர்களை "வலுவான, உடனடி, புதிய பொருளாதார தடைகளுக்கு குறிப்பிடத்தக்கவகையில் ஆபத்திற்கு உட்படுத்தும்" என்று கூறியுள்ளனர். ஈரானுக்குள் இருக்கும் அரசியல் பதட்டங்களை பயன்படுத்தும் விதத்தில் ஒபாமா நிர்வாகம் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக்களை அடக்குவதில் தொடர்புடைய ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் பிரிவை இலக்கு வைக்க முயன்றுள்ளது.

டிசம்பர் 30ம் தேதி வாஷிங்டன் போஸ்ட்டில் வந்த கட்டுரை ஒன்று புதிய தடைகளைக் கொண்டுவருவதற்கு முன்பே, "ஈரான்மீது வியத்தகு கடினப்போக்கை" நிர்வாகம் எடுக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. நடவடிக்கைகள், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் மூலம், நட்பு நாடுகளின் உதவியுடன், ஒருதலைப்பட்சமாக என அமெரிக்காவால் மூன்று விதத்தில் எடுக்கப்படலாம்; மூன்றும் அநேகமாக ஒரே நேரத்தில் தொடக்கப்படலாம். ஐ.நா.வில் எடுக்கப்படும் முதல் நடவடிக்கை பெப்ருவரி வரை தாமதப்படலாம்; அபொழுது ஈரானுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கும் பிரான்ஸ், பாதுகாப்புக் குழுவில் சீனாவிற்கு பதிலாக தலைமைப்பதவியை ஏற்கும்.

தவிர்க்க முடியாத மோதலின் அச்சுறுத்தும் அடையாளங்கள், தெஹ்ரானை சேதப்படுத்தும் விதத்தில் நடத்தப்படும் செய்தி ஊடகப் பிரச்சாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது ஆகும். புதனன்று நியூ யோர்க் டைம்ஸ் ஒரூ நீண்ட கட்டுரையை வெளியிட்டது; இதில் "ஈரான் முழுவதும் உள்ள நிலவறைகள் மற்றும் நிலத்தடிப் பாதைகளின் வலைப்பின்னல்களில் பெருகிய முறையில் அதன் அணுசக்தி நிலையங்களின் பெரும்பகுதியை மறைத்து வைத்துள்ளது" என்று காட்டப்படுகிறது. இந்தக் கட்டுக் கதை, உலகம் முழுவதும் பலமுறை கூறப்பட்டுள்ளது; படிப்பவர் மனதில் "ஏராளமான நிலத்தடிப் பாதைகள்", "ஈரானின் இழிந்த புலப்படாத அணுசக்தி முயற்சி" "இன்னும் மறைக்கப்படுதல்" போன்ற கருத்துக்களை எழுப்புகிறது. தெஹ்ரானுக்கு "மறைந்திருக்கும் இந்த தன்மையே", "திருட்டுத்தனமான ஆயுதம்தான்" என்று கூறப்படுகிறது.

கட்டுரையின் நீளம் ஒரு புறம் இருக்க, கட்டுரையில் உண்மை மிகக் குறைவாகத்தான் உள்ளது. செப்டம்பர் மாதம் G-20 உச்சிமாநாட்டின்போது ஒபாமாவினால் கோம் நகரத்திற்கு அருகே உள்ள நிலத்தடி யுரேனிய செறிவூட்டல் நிலையம் பற்றிய உண்மை "வெளிப்படுத்தப்பட்டது என்று அது சுட்டிக்காட்டியுள்ளது. ஈரான் ஏற்கனவே கோம் ஆலை பற்றி சர்வதேச அணுசக்தி அமைப்பிடம் தெரிவித்துள்ளது. IAEA அதற்கு பின்னர் அந்த இடத்திற்கு சென்று அது இன்னமும் கட்டுமான கட்டத்தில் இருப்பதாகவும் எந்தக் கருவியும் பொருத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளது. ஆனாலும்கூட ஈரானில் ஏராளமான நிலத்தடிப் பாதைகள் இருப்பது பற்றியும், வெளிநாட்டு நிறுவனங்கள் நிலத்தடிப் பாதைகள் அமைக்கும் கருவிகள் விற்பதற்கு இருப்பது பற்றியும் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட் ஒரு போக்குவரத்து பொறியியல் வல்லுனர் என்ற முறையில் "நிலத்தடிப் பாதைகளில்" காட்டும் ஆர்வம் ஆகியவை பற்றி டைம்ஸ் பரபரப்புடன் எழுதியுள்ளது; நாட்டின் மலைத் தன்மையைக் காணும்போது இவை எல்லாம் வியப்பளிக்காது என்று தோன்றும்.

சமீபத்தில் ஈரானிய புலம்பெயர்ந்த எதிர்த்தரப்புக் குழுவிலிருந்து - ஈரானிய எதிர்ப்பு தேசிய அவையிலிருந்து (NCRI)- வெளிவந்துள்ள கூற்று பற்றி கட்டுரை அதிக மதிப்பைக் கொடுத்துள்ளது, "அணுசக்தி ஆயுதங்களைத் தயாரிப்பதில்" சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ள "ஆலைக்குழுக்கள்" தெஹ்ரானுக்கு கிழக்கே உள்ளே மலைகளின் அடியில் உள்ளன என்று அது கூறியுள்ளது. மேலும் ஈரானின் நிலத்தடி செறிவூட்டல் நிலையம் நாடன்ஸில் 2002ல் இருந்தது பற்றி NCRI அம்பலப்படுத்தியிருந்த்தாகவும், கோம் பற்றிய "கண்டுபிடிப்பு" பிற குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமாக உள்ளன என்றும் அது கூறுகிறது. IAEA தலைவர் மகம்மத் எல் பரடேய் NCRI உடைய கூற்றுக்கள் பலவும் "போலியானவை" என்று கூறியிருக்கும் கருத்துக்களை கட்டுரை உதறித்தள்ளிவிட்டது.

NCRI பிரச்சாரத்தை ஒரு நல்ல நாணயம் என்று கூறுவது புஷ் நிர்வாகமும் செய்தி ஊடகமும் ஈராக்கிய அகதிகள் 2003 ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்த ஏராளமான பேரழிவு ஆயுதங்கள் இருந்ததாகக் கூறப்பட்டத்தைத்தான் நினைவுபடுத்துகிறது. NCRI மக்கள் முஜாஹிதீன் அல்லது MEK என்னும் குட்டி முதலாளித்துவ தேசிய அமைப்புடன் தொடர்பு கொண்டது; அதுதான் ஈரானுக்குள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. முன்னாள் ஐ.நா. ஆயுத ஆய்வாளர் Scott Ritter Target Iran என்னும் தன்னுடைய புத்தகத்தில் நாடன்ஸ் பற்றி NCRI அம்பலப்படுத்தியுள்ளது என்பது அதன் ஆதாரங்களை அடிப்படையாகக் கொள்ளாமல், இஸ்ரேலிய உளவுத்துறையீன் மூலம் வந்தது என்றார்; அது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தகவலையும் தரும், தவறான தகவலையும் தரும்.

நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை உளவுத்துறை பிரிவுகளால் செருகப்படும் கட்டுரைகளின் தன்மை அனைத்தையும் கொண்ட தொடர்ச்சியான கதைகளில் சமீபத்தியதுதான். கடந்த மாதம் பிரிட்டனை தளமாகக் கொண்ட டைம்ஸ் கசிந்த ஈரானிய ஆவணங்கள் என்று சந்தேகத்திற்கு இடமானவற்றை வெளியிட்டது; அவை அங்குள்ள ஆட்சி அணுவாயுதத்தை செலுத்தும் கருவிக்கு ஆராய்ச்சி செய்வதாகக் கூறுபவை. கடந்த வாரம், அசோசியேட்டட் பிரஸ் பெயர் சொல்லாத ஒரு நாட்டில் இருந்து வந்த உளவுத்துறை அறிக்கையை மேற்கோளிட்டு, ஈரான் காஜக்ஸ்தானிடம் 1,372 டன் சுத்திகரிக்கப்பட்ட யுரேனிய தாதுப்பொருளை, அல்லது "மஞ்சள் கட்டியை" வாங்கும் இரகசிய உடன்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறியது. பல முறையும் அணுவாயுதத் திட்டத்தை மறுத்துள்ள ஈரான் இக்கூற்றுக்கள் கட்டுக்கதை என மறுத்துள்ளது. இத்தகைய முறையான அச்சுறுத்தும் கதைகளைக் கூறுவதின் நோக்கம் ஈரானுக்கு எதிராக தண்டனை கொடுக்கும் நடவடிக்கைகளை நியாப்படுத்தும் விதத்தில் மக்களிடையே உறுதியற்ற நிலை, அச்சம் என்ற சூழலை உருவாக்குவதுதான்.

நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையில் மிக இழிந்த கூறுபாடு ஈரானின் "ஏராள நிலத்தடிப்பாதைகளை" தாக்குவது பற்றிய அதன் வெளிப்படையான விவாதம் ஆகும். நிலத்தடி நிலையங்களை தாக்குதவதற்கு மரபார்ந்த ஆயுதங்களை இஸ்ரேல் கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட பின்னர், செய்தித்தாள் "ஒபாமா நிர்வாகம் இராணுவ நடவடிக்கை எடுப்பதையும் விருப்புரிமையாகக் கொண்டுள்ளது என்றும் பென்டகன் ஒரு பயங்கரமான நிலத்தடித் தாக்குதல் ஆயுதத்தை தயாரிக்க விரைகிறது" என்றும் கூறியுள்ளது. 2007ல் Massive Ordnance Penetrtor என்னும் ஆயுதம் சோதிக்கப்பட்டது, அத்திட்டம் கடந்த ஆண்டு விரைவுபடுத்தப்பட்டது, மற்றும் ஒரு பெரிய 136 டன் குண்டுத் தயாரிப்பு இந்த ஆண்டு பிற்பகுதியில் தயாராவது ஆகியவை, இதற்கு உதாரணங்கள் ஆகும்.

ஒபாமா நிர்வாகம் ஒரு இராணுவத் தாக்குதலுக்கு உடனடித் திட்டங்களை கொள்ளவில்லை என்றாலும், அதன் நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாத தர்க்கம் உள்ளது. ஈரானிய புரட்சிகரப் பிரிவிற்கு எதிரான அதன் பெரும் பொருளாதார தடைகள் தெஹ்ரானை மண்டியிட வைப்பதில் தோற்றால், அமெரிக்க காங்கிரஸ் ஈரானுக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் ஏற்றுமதி செய்வதை பெரும் தடை செய்வதற்கு ஒபாமா நிர்வாகத்திற்கு அனுமதி கொடுக்கும் சட்டத்தை விவாதித்து வருகிறது. அதே நேரத்தில் "இராணுவ விருப்புரிமையும்" தயார் நிலையில் இருக்கும்; இது பதட்டங்களுக்கு எரியூட்டி, மற்றொரு அமெரிக்கத் தலைமையிலான புதிய காலனித்துவ போர் என்ற ஆபத்திற்கு வகை செய்யும்.

ஒபாமா ஈரானுடன் மோதலுக்கு தயாரித்தல் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான போர் விரிவாக்கத்துடன் சேர்க்கப்படும்; அதேபோல் யேமன் மீதும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" விரிவாக்கப்படும். ஈரானுக்கு எதிராக அதனிடம் இருப்பதாகக் கூறப்படும் அணுவாயுதத் திட்டங்களுக்கு எதிரான வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள், அல் குவைதாவை அகற்ற எனக் கூறப்படும் ஒபாமாவின் ஆப்போக் போரில் இருந்து மாறுபட்டது அல்ல. அமெரிக்காவின் பெரும் நோக்கம் அதன் பொருளாதார, மூலோபாய மேலாதிக்கத்தை மத்திய ஆசியா, மத்திய கிழக்கு என்னும் எரிபொருள் செழிப்பு உடைய பகுதிகளில் நிறுவுவது ஆகும்--இப்பகுதிகளுக்கு வரலாற்றளவில் ஈரான் அச்சு போல் இருந்துள்ளது. புஷ்ஷைப் போலவே ஒபாமாவும் பொறுப்பற்ற விதத்தில் அமெரிக்காவின் சரியும் பொருளாதார சக்தியை ஈடுகட்டும் வகையில், அதன் போட்டியாளர்களுக்கு எதிராக, மூலோபாயத்தை வளர்க்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஈரானுடன் மோதல் என்பது மத்திய கிழக்கு பகுதிக்கு ஆபத்தை வெளிப்படையாக கொண்டுவருவதுடன் மட்டும் அல்லாமல், மற்ற முக்கிய சக்திகளையும் போரில் ஈடுபடுத்தும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved