World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குUS-China rivalry intensifies அமெரிக்காவிற்கும் சீனாவுக்குமிடையிலான போட்டி தீவிரமாகிறது John Chan கடந்த ஆண்டு, உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களான அமெரிக்காவும் அதனுடைய போட்டி எழுச்சி பெற்றுவருகின்ற நாடான சீனாவும் ஒன்றாகச் சேர்ந்து உலகப் பிரச்சினைகளையும் குறிப்பாக முதலாளித்துவத்தை அழித்துக் கொண்டிருக்கும் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியையும் தீர்த்துவிடும் என்று வெகு அண்மையில் தோன்றிய "G2" என்று பேசுவது ஒரு புதுப்பாணியாக இருந்தது. ஒபாமா நிர்வாகம் தொடர்ச்சியான சினமூட்டும் நடவடிக்கைகளை எடுத்து சீனாவிடம் கடினப்போக்கிற்கான அடையாளத்தைக் காட்டியுள்ளமையானது இந்த ஆண்டு அத்தகைய போலித் தன்மைகள் விரைவில் கரைந்து போகச் செய்தன; இதில் தைவானுக்கு நவீன ஆயுதங்கள் விற்பனை மற்றும் தலாய் லாமாவுடன் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகள் ஆகியவையும் அடங்கியுள்ளன. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பல பொருட்கள், குறிப்பாக எஃகு குழாய்கள், எஃகுத் தகடுகள் மற்றும் டயர்கள் உட்பட பலவற்றின்மீது, அதிக பொருளாதார பாதுகாப்பு வரிகளை அமெரிக்க சுமத்தியதற்கு பின் இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் வெளிவந்துள்ளன. தைவானுக்கு ஆயுத விற்பனை பற்றி பெய்ஜிங் ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளது அதே போல் தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தாலும் உறுதியாக எதிர்ப்பைத் தெரிவிக்கும். சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோ ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் ஒபாமா ஏற்பாடு செய்துள்ள அணுவாயுத பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு அமெரிக்காவுடன் இருதரப்பு இராணுவ உரையாடலை முழுமை செய்ய மாட்டார் என்று அமெரிக்க அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். ஈரானுக்கு எதிரான அதன் அணுசக்தி திட்டங்களுக்காக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை சுமத்த இருக்கும் நிலையில், பெய்ஜிங் பகிரங்கமாக அதை எதிர்த்துள்ள நிலையில், உறவுகள் இன்னும் அதிகமாக சீர்குலையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் அதனுடைய பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் பெருகிய முறையில் பெய்ஜிங்கினால் தடைக்கு உட்படுத்தப்படுகின்றன என்ற உணர்வினால் உந்தப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த நவம்பர் சீனாவிற்கு ஒபாமா மிக அதிகமாக எதிர்பார்த்து மேற்கொண்ட பயணம் தோல்வி அடைந்ததாகத்தான் பரவலான முறையில் கருதப்படுகிறது; டாலருக்கு எதிராக யுவான் மதிப்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற அவருடைய அழைப்பும் புறக்கணிக்கப்பட்டது; மாறாக அமெரிக்கப் பத்திரங்களை (bonds) சீனா தொடர்ந்து வாங்கவேண்டுமானால் அமெரிக்கா நிதியக் கட்டப்பாட்டு நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்ற உபதேசத்தை பெற்றார். கோபன்ஹேகனில் நடைபெற்ற காலநிலை உச்சிமாநாட்டில், சீனாவினால் தலைமை தாங்கப்பட்ட முகாமிலிருந்து அமெரிக்காவிற்கு எதிர்ப்பு ஏற்பட்டது; ஒரு உடன்பாட்டைக் கொண்டுவர ஒபாமா முற்பட்டபோது அம்முகாம் அவரைக் குறிப்பாகப் பொருட்படுத்தாமல் போயிற்று. இத்தகைய பதட்டங்கள், உற்பத்தியின் பூகோளமயமாக்கலினால் முக்கிய பொருளாதார சக்திகளுக்கு இடையே திடீரென மாறும் உறவுகளில் ஆழ்ந்த மூலத்தை கொண்டுள்ளன. அமெரிக்கா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், ஒரு ஆற்றல் மிக்க போட்டி நாட்டை அது எதிர்கொண்டுள்ளது. 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சீனாவைப் போல் எட்டு மடங்கு அதிகமாக இருந்தது. ஒரு தசாப்தத்திற்குப் பின் இந்த எண்ணிக்கை நான்கு மடங்குதான் அதிகம் என்று குறைந்துவிட்டது. இந்த ஆண்டு சீனா உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை ஜப்பானைக் கடந்து பெற்றுவிடக்கூடும். 2009ல் சீனா உலகின் மிகப் பெரிய கார் உற்பத்தியாரும் சந்தையும் என்ற நிலையை அமெரிக்காவைக் கடந்து அடைந்தது. இரு தசாப்தங்களுக்கு முன்பு கார்த் தொழில் சீனாவில் அதிகம் மேன்மை அடைந்திருக்கவில்லை. 2008ல் வெடித்த உலக நிதிய நெருக்கடி அமெரிக்காவை ஆபத்திற்கு உட்படுத்திருக்கும் நிலையானது சீன முதலாளித்துவத்தின் எழுச்சியைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. 2009ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரங்கள் சுருக்கம் அடைந்த நிலையில், சீனா, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு 50 சதவிகிதத்திற்கும் மேலான வழங்கலைக் கொடுத்தது. கடந்த ஆண்டு சீனா ஜேர்மனியைக் கடந்து உலகின் மிக அதிக ஏற்றுமதி நாடு என்று ஆயிற்று. முக்கிய மேற்கத்தைய வங்கிகள் பிணை எடுப்புக்களுக்கு உட்பட்ட நிலை வந்தபோது, ஏழு மிகப் பெரிய ஆசியப் பொருளாதாரங்கள் தங்கள் வெளிநாட்டு நாணய இருப்புக்களை 4.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் என வைத்துள்ளன--இது உலக நாடுகள் பிற அனைத்தும் வைத்திருப்பதைவிட அதிகமாகும். சீனாவிற்கும் ASEAN எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பிற்கும் இடையே தடையற்ற வணிக உடன்பாடு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது; ஒரே இரவில் இது உலகின் மூன்றாவது மிகப் பெரிய தடையற்ற வணிகப் பகுதியாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வட அமெரிக்க தடையற்ற வணிக அமைப்புகளுக்கு அடுத்தாற்போல் வந்துவிட்டது. இந்த உடன்பாட்டில் இருந்து வாஷிங்டன் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது மட்டும் இல்லாமல், அப்பகுதியில் இருக்கும் நாடுகளுடன் ஒரு சில இருதரப்பு உடன்பாடுகளைத்தான் கொண்டிருக்கிறது. மூலப்பொருட்கள், எரிசக்தி மற்றும் சந்தைகளின் தேவைகள் ஆகியவற்றால் உந்துதல் பெற்றிருக்கும் சீனா தன்னுடைய பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி சொத்துக்கள் வாங்குதல், நீண்ட கால ஒப்பந்தங்களை பெறுதல் மற்றும் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை உயர்த்திக் கொள்ள உலகம் முழுவதும் இருக்கும் நாடுகளுக்கு கடன்கள் மற்றும் நிதியுதவி அளித்தல் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளது. 2009ல் பெருநிறுவன இணைப்புக்கள் மற்றும் எடுத்துக் கொள்ளுதல் (Mergers and acquisition) என வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 46 பில்லியன் டாலர் அதிகரித்தமையானது 2005ல் 9.6 பில்லியன் டாலராக இருந்ததைக் காட்டிலும் இது ஐந்து மடங்கு அதிகமாகும். மத்திய ஆசியாவில் இருந்து ஆபிரிக்கா மற்றும் பசிபிக் என்று உலகின் ஒவ்வொரு பகுதியிலும் சீனாவின் பொருளாதார விரிவாக்கமானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளுக்கு ஒரு சவாலாக இருந்து வருவதுடன் இப்போதைய உறவுகளில் பிளவுகளை உண்டாக்குகிறது. இதில் சற்றும் ஒளிவு மறைவில்லாதது பெருகுவது இராணுவப் போட்டி ஆகும். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடைபெறும் அமெரிக்காவின் தலைமையிலான போர்கள், பாக்கிஸ்தானில் தனது கைப்பொம்மைகள் மூலம் நடைபெறும் போர் மற்றும் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல் ஆகியவைகள் மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் தன்னுடைய முக்கிய மூலோபாய பகுதிகளில் அதன் போட்டி நாடுகள் குறிப்பாக சீனாவை விலக்கி வைத்து மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற உந்துதலில் நடைபெறுகின்றன. இன்னும் பரந்த முறையில், அமெரிக்காவானது சீனாவைச் சுற்றிவளைத்து தொடர்ந்து அமைக்கப்படும் கூட்டுக்கள் மற்றும் தளங்கள் ஆகியவற்றை ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிவற்றில் இருந்து ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா வரை நிறுவ முயல்கிறது. தன்னுடைய இராணுவத் திறன்களை கட்டமைக்கும் வகையில் சீனா இதை எதிர்கொண்டுள்ளது. அதாவது மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிற்கு செல்லும் கப்பல் பாதைகளில் ஆழ் கடல் கடற்படை அமைத்தலும், மத்திய ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கை எதிர்க்க நடைமுறைக் கூட்டாளியாக ரஷ்யாவுடன் உறவையும் கொண்டுள்ளது. டிசம்பர் 23ம் தேதி பைனான்சியல் டைம்ஸின் பொருளாதார கட்டுரையாளர் மார்ட்டின் வொல்ப் எழுதிய கட்டுரையில் அவர் சீனாவின் எழுச்சியானது அமெரிக்காவின் "பேரழிவுதரும் வகையில் ஏற்பட்டுள்ள அதிகார இழப்பு", என்னும் தொலைவிளைவுகளைத் தரக்கூடியவைகள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களினாலும், உலக நிதிய நெருக்கடியினாலும்தான் என்று குறிப்பிட்டுள்ளார். "21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் ஆண்டுகள் ஒரு நூற்றாண்டிற்கு முன் இருந்த அதே செல்வாக்குக் குறைவான தன்மையைத்தான் காட்டுகின்றன." என்று அவர் கூறியுள்ளார். உலக மேலாதிக்கத்தில் பிரிட்டனின் சரிவும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போட்டி நாடுகளின் எழுச்சியும் --குறிப்பாக ஜேர்மனி, அமெரிக்கா என-- மூன்று தசாப்தங்கள் எழுச்சி, இரு உலகப் போர்கள், பெரு மந்த நிலை என்பவற்றிற்குதான் வழிவகுத்தது. இதன்பின் அமெரிக்கா புதிய மேலாதிக்க சக்தியாக வெளிப்பட்டது. "இப்பொழுது இன்னும் கடுமையான விதத்தில் அதிகாரம் மாறுதலில் உள்ள சூழ்நிலையைக் கொண்டிருக்கிறோம்." என்று வொல்ப் அறிவித்துள்ளார். சர்வதேச கூட்டுறவு தேவை என்ற பொதுக் கருத்தைத் தவிர வொல்பிடம் வேறு திட்டம் ஏதும் இல்லை. அனைத்து நாடுகளும் பெஞ்சமின் பிராங்க்ளினின் கோட்பாட்டின் மதிப்பை அறிய வேண்டும் என்று முறையிட்டுள்ள விதத்தில் சோகமாக கட்டுரையை முடித்துள்ளார். "நாம் அனைவரும் ஒன்றாகத் தூக்கிலிட்டுக் கொள்ள வேண்டும் அல்லது உறுதியாகத் தனித்தனியே தூக்கிலே தொங்குவோம்." என்பதுதான் அது. வொல்ப் முடிக்கிறார்: என்ன நடக்கும்? ஐயோ, நான் அப்படி ஆகிவிடுமோ என்று சந்தேகிக்கிறேன்." இந்த அவநம்பிக்கைக் குரல், கூடுதலான திறனாயும் தன்மை பெற்றுள்ள முதலாளித்துவ நோக்கர்களிடையே சர்வதேசப் போட்டிகள் தீவிரமாகிக் கொண்டிருக்கின்றன அன்றி, தணியவில்லை என இருக்கும் உணர்வு புரிந்து கொள்ளப்பட்டதைத்தான் காட்டுகிறது. முதலாம் உலகப் போருக்கு நடுவே லெனின் தன்னுடைய தொலை நோக்கு நிறைந்த "ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம்" என்ற துண்டுப் பிரசுரத்தில் உலக முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே நிரந்த உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதை விளக்கியிருந்தார். ஒரு கட்டத்தில் மேற்கோள்ளப்படும் உடன்பாடு போட்டியிடும் முதலாளித்துவப் பொருளாதாரங்கங்களுக்கு இடையே வளர்ச்சி விகிதங்கள் மாறுபட்டிருப்பதால் தகர்ந்துவிடும் ஆபத்தைக் கொண்டது. சரியும் சக்திகளுக்கும் எழுச்சி காணும் போட்டி நாடுகளுக்கும் இடையே உள்ள போட்டி போரிலேயே முடிவெடுக்கப்படும். இன்றைய பதட்டங்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு புதிய சமநிலையை தோற்றுவிப்பதில் அமெரிக்கா கொண்டிருந்த பங்கைப் போன்ற தன்மை எந்த நாட்டிற்கும் இல்லை என்பதால் தீவிரமாகின்றன. சீனா ஒரு மகத்தான பொருளாதார சக்தி, ஆனால் களிமண் போன்ற கால்களை உடையது பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகள் நிறைந்தது. அதன் பொருளாதாரம் மேற்கத்தைய முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் சந்தை ஆகியவற்றை நம்பியுள்ளது. சீனாவின் மிகப் பெரிய பொருளாதார "வலிமை"--அதன் மிக பிரமாண்டமான குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு--தவிர்க்க முடியாமல் ஆழ்ந்த சமூக அழுத்தங்களை தோற்றுவிக்கிறது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உலகில் இரண்டாவது இடத்தில் என வரவிருக்கும்போது 2008ல் அதன் சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் 3250 டாலர் என்று 104வது இடத்தில் ஈராக், ஜோர்ஜியா மற்றும் கொங்கோ குடியரசு ஆகியவற்றிற்கும் பின்னால்தான் உள்ளது. அமெரிக்காவினை அடுத்து அங்கு இரண்டாவது மிகப் பெரிய பில்லியனர்களின் குழு உள்ளது; ஆயினும்கூட அங்கு 150 மில்லியன் மக்கள் நாள் ஒன்றிற்கு 1 அமெரிக்க டொலருக்கும் குறைவான பணத்தில்தான் வாழ்கின்றனர். சீன உயரடுக்கின் தொடர்ந்த அச்சம், அதன் போலிஸ் அரச நடவடிக்கைகள், பெருகி வரும் மகத்தான சமூக வெடிப்பிற்கு ஈடு கொடுக்க முடியாது என்பதுதான். தொடரும் உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், போட்டிகள் தாமதப்படுவதை விட முன்கூட்டியே தீவிரமாகும். புதிய அரசியல் எழுச்சி மற்றும் போர் என்ற காலத்தில் உலகம் நுழைந்துள்ளது. மனிதகுலத்திற்கு ஒரு முற்போக்கான தீர்வுகொடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டும்தான். சர்வதேச பதட்டங்களை அதிகரித்து போட்டியை பெருக்கிக் கொண்டிருக்கும் அதே உலக வழிவகைகள்தான் தொழிலாள வர்க்கத்தையும் மகத்தான முறையில் வலுப்படுத்தியுள்ளது; அதன் வரலாற்றுப் பணி, வங்குரோத்து ஆகிவிட்ட முதலாளித்துவ அமைப்பு முறையையும் அதனுடைய காலாவதியான உலகை தேசிய அரசுகளாக பிரித்துள்ள தன்மைகள் ஆகியவற்றையும் புரட்சிகரமாக தூக்கியெறிதல் ஆகும். அவைகள்தான் போருக்கும் மனிதகுலத்தை பீடித்துள்ள சமூகப் பேரழிவுகள் ஆகியவற்றிற்கும் மூலகாரணமாகும். |