WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The new decade begins
புதிய தசாப்தம் ஆரம்பமாகிறது
Barry Grey
4 January 2010
Use this version
to print | Send
feedback
அமெரிக்கா அதன் ஆக்கிரோஷ, இராணுவவாதக் கொள்கைகளை மத்திய ஆசியா,
கிழக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, இன்னும் அப்பாற்பட்ட பகுதிகளிலும் தீவிரப்படுத்தும் என்ற அடையாளங்களை
காட்டும் தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் புதிய தசாப்தம் ஆரம்பமாகிறது.
* ஜனவரி 2, சனிக்கிழமையன்று,
ஜனாதிபதி ஒபாமா தன்னுடைய வாராந்திர வானொலி மற்றும் இணையதள உரையில் முதல் தடவையாக, உத்தியோகபூர்வமாக
யேமனிலும் சோமாலியாவிலும் அமெரிக்க இராணுவ வன்முறை விரிவாக்கப்படுவதற்கு அரங்கு அமைத்துள்ள
டெட்ரோயிட் செல்லவிருந்த நோர்த்வெஸ்ட் விமானம் 253ன் மீது கிறிஸ்துமஸ் தினத்தன்று நடத்தப்பட்ட ஒரு தோல்வியுற்ற
குண்டுத் தகர்ப்பு தாக்குதல்தான் காரணம் என்று கூறினார். "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற அலங்காரச்
சொற்றொடரை ஒபாமா புதுப்பித்து, "எமது நாடு பல விளைவுகளை அளிக்கக்கூடிய வன்முறை, வெறுப்பு நிறைந்த
வலைப்பின்னலுடன் போரில் உள்ளது... அவர்களைத் தோற்கடிக்க, நம் நாட்டைக்காக்க அனைத்தையும் நாம் செய்வோம்."
என்றும் கூறினார்.
இதன் பின் அமெரிக்கா "இந்தத் தீவிரவாதிகள் எங்கிருந்து சதிசெய்து, பயிற்சி அளித்தாலும்
--கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து தென்கிழக்கு ஆசியா வரையில் என்றாலும், ஐரோப்பாவில் இருந்து பாரசீக
வளைகுடா வரை என்றாலும்-- தளரா அழுத்தத்தைச் செலுத்தும்" என்று அவர் கூறினார். இத்தகைய நிலைப்பாடுதான்
உலகில் எந்தப் பகுதியாயினும் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் தவிர்க்க இயலாத் தன்மையை நியாயப்படுத்துவது
ஆகும்.
யேமன் மீது ஒரு பெரிய இராணுவத் தாக்குதல் படரும் என்பது அமெரிக்காவும் பிரிட்டனும்
அந்நாட்டில் உள்ள தூதரகங்களை மூடுவதாக அறிவித்துள்ளதில் இருந்து குறிப்பைப் பெறுகிறது.
* ஜனவரி 3ம் தேதி, ஞாயிறன்று, நியூ யோர்க் டைம்ஸ்
பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோளிட்டு, அவர்கள் ஈரானுக்கு எதிராக "வலுவான, உடனடி
நடவடிக்கைகளை மேற்கோள்ள விரும்புகின்றனர்" என்று ஒரு கட்டுரையில் கூறியுள்ளது. புதிய பொருளாதாரத்
தடைகள் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைகளுடன் தொடர்புடைய வணிகங்களுக்கு எதிராக
இயக்கப்படும் என்று டைம்ஸ் தகவல் கொடுத்துள்ளது.
"நிர்வாகம் அரேபிய மற்றும் ஆசிய நாடுகள் ஐரோப்பாவுடன் புரட்சிகர
படைகளுடைய தொடர்புடைய நிறுவங்களுடன் நிதித் தொடர்புகளை துண்டிக்கும் முயற்சிகளில் இணைய வேண்டும் என்ற
நோக்கத்தை கொண்டுள்ளது" என்று செய்தித் தாள் எழுதியுள்ளது.
2008 தேசிய உளவுத்துறை மதிப்பீடான ஈரானிய விஞ்ஞானிகள் 2003ல்
தொடக்கப்பட்ட அணுவாயுத தள வடிவமைப்பை நிறுத்திவிட்டனர் என்பதை ஒபாமா நிர்வாகம் நிராகரித்துள்ளது
என்றும் டைம்ஸ் கூறியுள்ளது. இது ஈரானை தனிமைப்படுத்தி முடக்கவும், தெஹ்ரானில் "ஆட்சி மாற்றம்"
அடையப்படுவதற்கும் புதிய விரிவாக்கம் என்பது தெளிவு.
* அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் நடத்திவரும் அதன் இராணுவ
வன்முறையை முடுக்கிவிடும் என்பதற்கான புதிய அடையாளங்களையும் புத்தாண்டு கொண்டு வந்துள்ளது. புத்தாண்டிற்கு
முன்பு 72 மணி நேர காலம் தொடங்கி, அமெரிக்கா மூன்று தனித்தனி டிரோன் தாக்குதல்களை வடக்கு
வஜீரிஸ்தானில் உள்ள பாக்கிஸ்தான் எல்லைப்பகுதியில் நடத்தியுள்ளது; இது ஆப்கானிய எல்லைக்கு அருகே இருக்கும்
ஒரு பழங்குடிப் பகுதி ஆகும். செய்தி ஊடகத் தகவல்களின்படி, இத்தாக்குதல்கள்களில் 7 பேர் மடிந்தனர்.
அத்தகைய பல தாக்குதல்களில் நடப்பது போலவே, பாதிக்கப்பட்டவர்கள் தாலிபன் போராளிகள் என்று
விவரிக்கப்பட்டனர்.
பாக்கிஸ்தான் உறுதிகுலைக்கப்படுவது என்பது அமெரிக்க இராணுவம் மற்றும் அரசியல்
அழுத்தம் தீவிரமாக்கப்படுவது, வன்முறைப் பெருக்கம், குருதி கொட்டுதல் என்று தெற்கு வஜீரிஸ்தானில் ஒரு
கிராமத்தில் தற்கொலைப்படைத் தாக்குதல் வெளிப்பட்டதில் இருந்து மிகுந்துள்ளது; அதில் 75 சாதாரண குடிமக்கள்
கொல்லப்பட்டனர்; இன்னும் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்து
500 பேருக்கும் மேலாக கொல்லப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் அது சமீபத்தியதாகும்.
ஆப்கானிஸ்தானில் டிசம்பர் 30 அன்று நடந்த ஒரு நேட்டோ ஏவுகணைத்தாக்குதல்
ஏழு குடிமக்களை ஹெல்மண்ட் மாநிலத்தில் கொன்றது; அது ஒபாமா நிர்வாகத்தால் உத்தரவிப்பட்டுள்ள அமெரிக்க
தலைமையிலான தாக்குதலின் மையப்பகுதி ஆகும். முந்தைய வாரம் 10 குடிமக்களை, அவர்களுள் 8 பேர் பள்ளி
செல்லும் பையன்கள், குனார் மாநிலத்தில் நேட்டோ தாக்குதல் கொன்றதை அடுத்து இது வந்துள்ளது.
அதே நேரத்தில், வாஷிங்டன் புத்தாண்டை சீனாவிற்கு எதிராகத் தூண்டுதல்களை
தொடர்ச்சியாக நடத்தியிருப்பதுடன் தொடங்கியுள்ளது. இது ஆசியாவில் மேலாதிக்கத்திற்கு அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் நீண்ட கால போட்டி நாடு என கருதப்படுவதற்கு எதிராக அமெரிக்காவின் ஆக்கிரோஷமான
நிலைப்பாட்டைக் குறிக்கிறது.
டிசம்பர் 30ம் தேதி, அமெரிக்க சர்வதேச வணிகக் குழு சீன எஃகு குழாய்கள் மீது
10 முதல் 15 சதவிகித வரிகளை சுமத்தியது; இக்குழாய்கள் எரிவாயு, எண்ணெய் ஆகிய துறைகளில்
பயன்படுத்தப்படுபவை. அதற்கு முந்தைய தினம் அமெரிக்கா சீனாவில் இருந்து வரும் எஃகு கிரேட் பொருள்கள்
மீது, ஏராளமாக தள்ளிவிடும் பொருட்கள் மீது சுமத்தும் வரிகளை விதித்தது. ஆண்டின் முற்பகுதியில் அமெரிக்கா
சீனாவில் இருந்து வரும் நுகர்வோர் டயர்கள்மீது 35 சதவிகித காப்புவரிகளைச் விதித்தது.
இச்சமீபத்திய காப்புவரி நடவடிக்கைகளை பெய்ஜிங் கடுமையாகக் கண்டித்தது; இவை
சீனா தன்னுடைய நாணயமான யுவானின் மதிப்பை உயர்த்தக் கட்டாயப்படுத்தும் நடவடிக்கை தீவிரமாக்கப்படுவதின்
ஒரு பகுதி ஆகும். அதையொட்டி அமெரிக்காவிற்குள் சீன இறக்குமதிகள் குறைக்கப்படுதலும் சீனாவிற்கும் மற்ற
நாடுகளுக்கும் அமெரிக்க ஏற்றுமதிகள் அதிகப்படுத்தப்படுதலும் இதன் நோக்கமாகும்.
இந்தப் புதிய அமெரிக்க நடவடிக்கைகள் ஜனவரி 1ம் தேதி ஒரு புதிய வணிகப் பகுதி
ASEAN
நாடுகள் எனப்படும் தெற்கு ஆசிய நாடுகள் சங்கத்தில் உள்ள 10 நாடுகளுக்கு இடையே முறையாக
தொடங்கியிருப்பதுடன் இணைந்து வந்துள்ளது. பெய்ஜிங் தலைமையில் உள்ள இப்புதிய வணிக முகாம் உலகின் மூன்றாம்
மிகப் பெரிய முகாம் ஆகும்; வாஷிங்டன் இதை அப்பகுதியில் அமெரிக்க பொருளாதார மேலாதிக்கத்திற்கு
அச்சுறுத்தல் என்று கருதுகிறது. சமீப ஆண்டுகளில் சீனா
ASEAN னின் மூன்றாம் மிகப் பெரிய வணிகப் பங்காளி என்று
அமெரிக்காவை கடந்து, ஜப்பானுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அடுத்தாற்போல் உள்ளது.
இதைத்தவிர வாஷிங்டன் போஸ்ட் ஞாயிறன்று ஒபாமா நிர்வாகம் அடுத்த
சில மாதங்களில் தைவானுக்கு புதிய ஆயுதங்கள் விற்பனை பற்றி அறிவிப்பதற்கு தயாரிக்கிறது என்றும் அதில்
Black Hawk
ஹெலிகாப்டர்கள், ஏவுகணை எதிர்ப்பு வகைகள் அடங்கும் என்று தெரிவித்துள்ளது. தலாய் லாமாவைச் சத்திக்கவும்
ஒபாமா திட்டங்களை கொண்டுள்ளார்.
அமெரிக்க ஆளும் உயரடுக்கில் சீன-எதிர்ப்பு காப்புவரி முறை அதிகரித்துள்ளமை
புத்தாண்டு தினத்தன்று தாராளவாத பொருளாதார வல்லுனரும் நியூ யோர்க் டைம்ஸின் கட்டுரையாளர்
போல் க்ருக்மன்னும் வெளியிட்ட ஆக்கிரோஷ வர்ணனையில் வெளிப்பட்டுள்ளது. சீனாவில் நாணய முறை மற்றும் வணிகக்
கொள்கை பற்றி "கொள்ளை முறை" என்று விவரித்த க்ரூக்மன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும்
பொருளாதார பாதுகாப்பு வாத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, "சீனா தன்னுடைய நாணயத்தின் மதிப்பை உயர்த்த
மறுப்பதால்தான் அவை துல்லியமாக எடுக்கப்படுகின்றன" என்றார்.
"இன்னும் பல அத்தகைய நடவடிக்கைகள் முற்றிலும் பொருத்தமானவையே" என்று
அவர் மேலும் கூறினார். அவர் சீனர்களை "தங்கள் பிடிவாதத் தன்மையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் அல்லது
இன்னும் பெரிய நிகழ்வுகளின் தொடக்கத்தை எதிர்கொள்ள வேண்டும்" என்று எச்சரித்தார்.
கடந்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் 9/11
தாக்குதல்களை போலிக் காரணமாகப் பயன்படுத்தி அமெரிக்க நாட்டு மக்களும் உலகமும் "21ம் நூற்றாண்டுப்
போர்களில் நுழைகின்றன" என்று அறிவித்தார். சர்வதேச சட்டத்தை மீறும் வகையில், 2002ல் அமெரிக்கா
தடுத்தலுக்கான போர் என்ற கொள்கையை ஏற்றது; இதன்படி வாஷிங்டன் தற்பொழுது அல்லது வருங்காலத்தில்
அமெரிக்க உலக நலன்களுக்கு ஆபத்தை அளிக்கக்கூடும் என்று கருதும் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த
உரிமை கொண்டுள்ளது என்று அதில் உறுதிப்படுத்தப்பட்டது.
புதிய தசாப்தத்தின் ஆரம்பத்தில், இந்தக் கொள்கை புதுப்பிக்கப்பட்டு,
விரிவாக்கப்படுகிறது. ஒரு குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி மற்றும் அதன் ஆதிக்கம் நிறைந்த காங்கிரசிற்கு பதிலாக
ஜனநாயகக் கட்சியினர் வந்துள்ளனர், அதுவும் போருக்கு எதிராக மக்கள் கொண்டிருந்த எதிர்ப்பின் அடைப்படையில்
நிகழ்ந்தது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படைக் கொள்கையில் எந்த பாதிப்பையும் கொள்ளவில்லை.
கடந்த தசாப்தம் என்று மட்டும் இல்லாமல், கடந்த நூற்றாண்டில் நடந்த இன்னும்
பெரிய பேரழிவுகளினால் உலகம் அச்சுறுத்தப்படுகிறது. தொழிலாள வர்க்கம் ஒரு புதிய சமூக, அரசியல்
எழுச்சிக்காலத்தில் நுழைகையில், இவற்றில் இருந்து மையப் படிப்பினைகள் கற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஒபாமா
நிர்வாகம் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் போருக்கு மூலகாரணமான முதலாளித்துவத்திற்கு
எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கம் திரண்டு எழுவதன் மூலம்தான் ஏகாதிபத்தியப் போருக்கு முற்றுப் புள்ளி
வைக்க முடியும். |