World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Five years since the Hartz IV labour "reforms"

ஜேர்மனி: ஹார்ட்ஸ் IV தொழிலாளர் "சீர்திருத்தங்களுக்கு" நான்கு ஆண்டுகளுக்கு பின்னர்

By Dietmar Henning
31 December 2009

Back to screen version

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 1, 2005 அன்று ஹார்ட்ஸ் IV தொழிலாளர், பொதுநலச் "சீர்திருத்தங்கள்" நடைமுறைக்கு வந்தன. அதிபர் கெஹார்ட் ஷ்ரோடரின் தலைமையின்கீழ் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சியின் கூட்டாட்சி அரசாங்கத்திற்காக ஹார்ட்ஸ் குழு இயற்றியிருந்த நான்காம் சட்டத்தில் வேலையின்மை நலன்களில் பல விளைவுகளையுடைய மாற்றங்கள் அடங்கியிருந்தன; இவை சமூக நலன்களுடன் இணைக்கப்பட்டன.

அப்பொழுது முதல், ஒரு வேலையில்லாத நபர் ALG I எனப்படும் வேலையின்மை நலன் I ஐ, அவருடைய முந்தைய ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதை, வேலை இழந்து ஓராண்டிற்கு மட்டும் பெறுவார். அதற்கு பின்னர் அவர் வேலையின்மை நலன் II ஐப் பெறுவார். மற்ற பொதுநலன்களைப் போல் இதன் மதிப்பு முந்தைய வருமானத்தைப் பொறுத்து இராமல், நாணய மதிப்பில் மாதம் ஒன்றிற்கு 359 யூரோக்கள் என்று இருக்கும். பல தசாப்தங்கள் வேலை பார்த்து, வேலையின்மை காப்பீட்டுத் திட்டங்களுக்கு பணம் செலுத்தியவர்கள்கூட ஓராண்டு வேலையில்லை என்றால் வறுமையில் வாழ்வதற்குத் தள்ளப்படுவார்.

ஒரு சிறு விதிவிலக்கை தவிர, நலன்களின் அளவைக் கணக்கிடும்போது சொத்துக்களின் மதிப்பும் எடுத்துக் கொள்ளப்படும். தன்னுடைய வயதான காலத்திற்காக எவரேனும் சேமித்திருந்தால் ALG II ஐப் பெறுவதற்கு முன் அதை உபயோகிக்க வேண்டும்.

மேலும் ALG II ஐப் பெறுபவர்கள், "தொழிலாளர் சந்தையில் தாங்கள் தீவிரமாக இணையும் முயற்சிகளை தொடர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. எது "நியாயமான" வேலை வாய்ப்பு என்பது பற்றி இருந்த விதிகள் அகற்றப்பட்டன. இதன் விளைவாக தங்கள் தகுதிக்கு சிறிதும் ஒத்திராத மிகக் குறைவூதிய வேலைகளை ஏற்கும் கட்டாயத்திற்கு மக்கள் உட்படுவர்; அதைத்தவிர தொலைதூரத்திற்கு சென்று வேலையில் சேர வேண்டிய நிலையும் உண்டு. அவர்கள் மறுத்தால் நலன்கள் குறைக்கப்படும் அல்லது திரும்பப் பெறப்படும் என்ற அச்சுறுத்தல் உண்டு.

Hartz IV "சீர்திருத்தங்களுக்கு" பொறுப்பு உடையவர்கள் இவற்றை நியாயப்படுத்தும் வகையில், வேலையின்மை எண்ணிக்கையை தாங்கள் தீவிரமாக குறைத்துவிடுவதாக கூறினர். அதுவும் நடக்கவில்லை.

கூட்டாட்சி வேலைதரும் அமைப்பை (BA) சேர்ந்த Nuremberg Institute for Employment Research (IAB), ஹார்ட்ஸ் நடவடிக்கைகளை வாடிக்கையாக பரிசீலித்தது. இது ஹார்ட்ஸ் IV விதிகள் "எச்சரிக்கையுடன் கூடிய நேரிய இருப்பு நிலைக் குறிப்பை கொடுத்துள்ளது" என அறிவித்துள்ளது. "இந்தப் போக்கு" தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்களின் நோக்கங்கள் அடையப்பட்டுவிட்டன என்பதைக் காட்டுகிறது என்றும் அது கூறுகிறது. ஆனால் IAB யின் இயக்குனர் Joachim Moller பல பெரிய பிரச்சினைகள் உள்ளன, நீண்ட கால வேலையின்மை பற்றி போதிய கவனம் இல்லை போன்றதை உதாரணம் காட்டியுள்ளார். ALG II உதவியைப் பல ஆண்டுகள் பெற்றபின்னும், ஒரு சிலர்தான் இயல்பான தொழில் வாழ்க்கைக்கு வருகின்றனர்.

Hartz IV நலன்களை பெறா நிலை "ஒப்புமையில் அபூர்வம்தான்" என்று ஆய்வின் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். வேலைகொடுக்கும் அதிகாரிகள் பயன்டுத்தும் வழிவகைகள் பல நேரமும் வேலையின்மை பிரச்சினையை தீர்க்க போதுமானதாக இல்லை என்ற முடிவிற்கும் அவர்கள் வந்துள்ளனர்.

தொழிற்சங்கங்கள், அறக்கட்டளைகளின் பிரதிநிதிகள் ஹார்ட்ஸ் IV விதிகள் தோல்வி அடைந்துள்ளன என்று கூறுகின்றனர். Thüringer Allgemeine Zeitung க்கு கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் Welfare Association தலைவரான Ulrich Schneider கூறினார்: "ஹார்ட்ஸ் IV சீர்திருத்தங்கள் வந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடியவில்லை." உதாரணமாக வேலை செய்யும் திறனுடைய ALG II உதவி பெறுவோரின் எண்ணிக்கை 2005ல் "சீர்திருத்தங்கள்" அறிமுகமானதில் இருந்து நிரந்தரமாக உள்ளன.

நலவாரிய அமைப்பு கொடுத்துள்ள மதிப்பீடுகளின்படி, ஏப்ரல் 2009ல் ஹார்ட்ஸ் IV உதவி பெறுபவர்களில், வேலை செய்யும் திறனுடையவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4.93 மில்லியன் ஆக இருந்தது. செப்டம்பர் 2005ல் வேலை செய்யும் திறமை உடைய, ஆனால் வேலையின்மையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 5.15 மில்லியன் ஆக இருந்தது.

இவ்விதத்தில் ஹார்ட்ஸ் IV ஐ நம்பியிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையும் ஒரே சீராகத்தான் உள்ளது என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2005ல் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 1.78 மில்லியன் ஹார்ட்ஸ் IV ஐ நம்பியிருந்தனர்; ஏப்ரல் 2009, அதற்குப் பின்னர் இந்த எண்ணிக்கை 1.74 மில்லியன் என்று உள்ளது.

ALG II உதவி பெறுபவர்களில் பாதிப் பேர் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பொதுநலன்களை பெறுகின்றனர். "ஹார்ட்ஸ் IV உதவியைப் பெறுபவர்கள் [வருங்காலம் பற்றி] எந்த முன்னோக்கையும் கொண்டிருக்கவில்லை. இந்த முடிவு பற்றி நாம் ஆய்வு செய்ய வேண்டும்" என்று Schneider கூறியுள்ளார்.

ஆனால் ஹார்ட்ஸ் IV நடவடிக்கைகள் அவை வேலையின்மையை எதிர்த்து இயக்கப்பட்டவை என்று கொண்டால்தான் "தோற்றுவிட்டன" என்று கூற முடியும். உண்மையில் "செயற்பட்டியல் 2010ல்" உள்ள மற்ற கூறுபாடுகளைப் போல் இவை வேறு இலக்குகளை நோக்கமாகக் கொண்டவை ஆகும்.

SPD-பசுமைக் கட்சி அரசாங்கம் இதை வடிவமைத்து வேலையில்லாதவர்கள் மீது அழுத்தம் கொடுப்பதை அதிகரிக்கவும், கூட்டு பேர முறையை முறிக்கவும் பயன்படுத்தினர்; பிந்தையதின்படி ஜேர்மனிய தொழிலாளர்கள் முன்பு ஒப்புமையில் அதிக ஊதியங்களைப் பெற்று வந்தனர்; இப்பொழுது மிகப் பெரிய குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. உண்மையான, வர்க்க நோக்கங்களை பொறுத்தவரையில், ஹார்ட்ஸ் IV மிகுந்த வெற்றியைக் கொண்டது எனக் கூறலாம்.

ஹார்ட்ஸ் IV ற்கு நீண்டகாலம் வேலையில்லாதவர்கள் எந்த வேலையையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இருப்பதால், இது மொத்தத்தில் ஊதியங்களைக் குறைக்க உதவுகிறது. உண்மை ஊதியத்தரங்கள் 1980களின் நடுப்பகுதிக்கு--25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு--சென்றுவிட்டன. மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவது ஒரு புறம் இருக்க, தங்களை காப்பாற்றிக் கொள்ளக்கூட முடியாத ஊதியங்கள் உள்ள வேலைகளில்தான் இருக்கின்றனர்.

கிட்டத்தட்ட 9 மில்லியன் மக்கள் பகுதி நேர வேலையில் உள்ளனர்; 7 மில்லியன் மக்கள் "சிறு வேலைகள்" எனப்படுவதில் உள்ளனர்; அவை அதிகபட்சம் மாதம் ஒன்றிற்கு 400 யூரோக்களைக் கொடுக்கின்றன. 300,000க்கும் மேற்பட்டமக்கள் அதிகாரிகளால் "ஒரு யூரோ வேலைகளை" எடுத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்; அவற்றில் ALG II நலன்களைத் தவிர மணி ஒன்றிற்கு 1 யூரோ ஊதியம் கொடுக்கப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் தற்காலிக வேலையின்மை தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்த நவீன அடிமைத் தொழிலில் ஏதேனும் ஒருவிதத்தில் ஒரு மில்லியன் மக்கள் வரை ஈடுபட வேண்டும் என்ற நிலை உள்ளது. சர்வதேசப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக முதலில் பணிநீக்கம் பெற்றவர்கள் இவர்கள்தான்; எனவே முன்பு இருந்ததைவிட அவர்கள் எண்ணிக்கை இப்பொழுது பாதிதான் உள்ளது.

ஜேர்மனியில் குறைவூதியங்கள் பரந்த அளவில் உள்ளன என்பது IAQ எனப்படும் Institute of Labour and Qualification, என்று Duisburg-Essen பல்கலைக்கழக ஆய்வுப்பிரிவின் ஆய்வு ஒன்று ஜூலை மாதத்தில் வெளிவந்தது. கிட்டத்தட்ட 6.5 மில்லியன் மக்கள்--ஐந்து வேலைபார்ப்பவர்களில் ஒருவருக்கும் மேலான விகிதம்--மேற்கு ஜேர்மனியில் மணிக்கு 9.62 யூரோ ஊதியத்திற்கும், கிழக்கு ஜேர்மனியில் 7.18 யூரோவிற்கும் வேலை பார்க்கின்றனர். இதுதான் (OECD) Organization for Economic Cooperation and Development பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு அடையாளம் காட்டியுள்ள மிகக் குறைவான ஊதிய வரம்பு ஆகும்.

மூன்றில் ஒரு குறைவூதியம் பெறுபவர்கள் மணி ஒன்றிற்கு மொத்தம் 6 யூரோக்கும் குறைவான தொகைக்கு வேலை செய்கின்றனர்; 1.2 மில்லியன் மக்கள் 5 யூரோவிற்கும் குறைவான ஊதியத்தைப் பெறுகின்றனர். முழுநேர ஊழியர்களும் குறைந்த மணிநேர ஊதியத்தின் பாதுகாப்பைப் பெறவில்லை. முழு நேரம் வேலை பார்த்தும், குறைவூதிய பிரிவில் கால் பகுதியினர் மாதம் ஒன்றிற்கு 800 யூரோக்கள்தான் சம்பாதிக்கின்றனர். கிட்டத்தட்ட 1.3 மில்லியன் பேர் கூடுதல் Hartz IV நலன்களைப் பெறுகின்றனர்; அதுதான் குறைந்த பட்ச உயிர் பிழைத்திருக்கும் மட்டத்திற்கு அவர்களைக் கொண்டுவருகிறது.

ஹார்ட்ஸ் IV அறிமுகப்படுத்தப்பட்டது, பின் குறைவூதியப் பிரிவு பரவியது, ஆகியவை முன்பு ஒப்புமையில் அதிக ஊதியங்களைக் கொடுத்து வந்த தொழில்களில் நேரடி தாக்கத்தைக் கொடுத்தன. ஓபல் கார்த்தயாரிப்பு தொழிலாளர்கள் இது பற்றி நன்கு கூற முடியும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு உலோகம், மின்துறை தொழில்களில் இருந்ததைவிட 30 சதவிகிதம் கூடுதலாகப் பெற்றவர்கள் இப்பொழுது கணிசமாகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர்.

பல கூட்டு பேர ஒப்பந்தங்களில் தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்ட விதிகள் நிறுவனங்களுக்கு ஆலைக்கு ஆலை வேறுபடும் விதத்தில் ஒப்பந்த விதிகளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கின்றன. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தொழில்துறை ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதைவிட மிகக் குறைவாகத்தான் பெறுகின்றனர்.

மிகக் குறைந்த நிறுவனங்கள்தான் தொழில்துறை ரீதியான ஒப்பந்தங்களினால் கட்டுப்படுத்தப்பட்டவை. தொழிற்சங்கங்களும் முதலாளிகள் சங்கங்களும் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள குறைந்தபட்ச விதிகள் அவர்களைக் கட்டுப்படுத்தாது. இது 30 சதவிகிதத்திற்கும் மேலான நிறுவனங்களில் இப்பொழுது நடைமுறையில் உள்ளது; குறிப்பாக கிழக்கில். அங்கு நான்கில் ஒரு நிறுவனம்தான் கூட்டு உடன்பாடுகளுக்கு கட்டுப்பட்டவை.

இவ்விதத்தில் ஒப்பந்த ஊதிய விகிதங்களில் பெயரளவு உயர்வுகள் இருந்தாலும், உண்மை ஊதியங்கள் மீண்டும் இந்த ஆண்டு 1.2 சதவிகிதம், 2009 வசந்தகால காலாண்டில் மட்டும் சரிந்தன.

ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு (DGB) ஹார்ட்ஸ் IV சீர்திருத்தங்கள பற்றிக் கூறிய குறைகூறல்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை. DGB வாரிய உறுப்பினர் Annelie Buntenbach (பசுமைக் கட்சி) எது "நியாயமான" உத்தியோக அளிப்பு என்பதை வரையறுக்கும் விதிகள் தளர்த்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்; மேலும் வேலையற்றவர்களுக்கு தடைகள் அளிக்கப்படுவதும் தளர்த்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஒரு பரந்த அளவிலான குறைந்தது மணி ஒன்றிற்கு 7.50 யூரோ ஊதியம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஹார்ட்ஸ் சீர்திருத்தங்கள் "ஊதியச் சரிவிற்கு" கதைவைத் திறந்துவிட்டதாகக் கூறிய இந்தப் பெண்மணி, "வேலை இல்லாதவர்கள் எந்தவித வேலையையும், மிகக் குறைவான ஊதியமாகறஇருந்தாலும், ஏற்கவேண்டும்" என்றார்.

இத்தகைய குறைகூறல்கள் முற்றிலும் இழிந்தவை ஆகும். தொழிற்சங்க பிரதிநிதிகள் பெருவணிகம், கூட்டாட்சி அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஒன்றாக குழுவில் உட்கார்ந்தனர்; அதற்கு தலைவர் Peter Hartz ன் பெயர் இடப்பட்டது; அவர்தான் "சீர்திருத்தங்களை" எழுதியவர். மேலும் கூட்டாட்சி வேலை அமைப்பின் தலைவர் என்ற முறையில் Buntenbach ஹார்ட்ஸ் நடவடிக்கைகளை செயல்படுத்தும் பொறுப்பைக் கொண்டவர் ஆவார்.

ஹார்ட்ஸ் IV நடவடிக்கைகளின் உந்தித்தள்ளல் ஒன்றும் இரகசியமாக இருந்தது இல்லை. 2004 கோடை காலத்தில் பல மாதங்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த எதிர்ப்புக்களில் தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ள மறுத்தன. கூட்டாட்சி அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருந்த பசுமை வாதிகள் சான்ஸ்லர் ஷ்ரோடருக்கு ஆதரவு கொடுத்தது; அவர் "தெருக்களில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு" தான் பணிவதாக இலை என்று அறிவித்தார்.

இன்றும் கூட, அனைத்துப் பாராளுமன்றக் கட்சிகள் ஹார்ட்ஸ் IV ஐ ஆதரிக்கின்றன; ஆனால் சில தங்கள் பொறுப்பை மறைக்கும் விதத்தில் சில வண்ணப் பூச்சுக்களுக்கு அழைப்பு விடுகின்றன.

உதாரணமாக, கிறிஸ்துமஸ் வருதற்கு முன்பு CDA எனப்படும் கிறிஸ்துவ ஜனநாயக பணியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் Gerald Weiss, ஹார்ட்ஸ் IV உதவி பெறுபவர்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸும் கொடுக்க வேண்டும் என்றார். "ஒரு சிறு கிறிஸ்துமஸ் அளிப்பு என்பது ஹார்ட்ஸ் IV நலன் பெறுவர்களுக்கு கிறிஸ்துமஸை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வைக்கும்" என்று அவர் Bild செய்தித்தாளிடம் கூறினார். இந்த திட்டம் அடுத்த கிறிஸ்துமஸ்வரை மறந்துவிடப்படும்.

கிறிஸ்துமஸுக்கு சற்று முன்பு, சமூக ஜனநாயகக் கட்சி (SPD) தலைவர் Sigmar Gabriel பல ஆண்டுகள் வேலையின்மை காப்பீடு பங்களிப்புக்களைக் கட்டியவர்கள் அதிக ஆதரவு பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது வேலையின்மையில் இருப்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் நிறுவனங்களுக்கும் நலனைத் தரும். "நீண்ட காலமாக அவர்கள் வயதானவர்களை முன்போல் எளிதில் வீட்டிற்கு அனுப்ப முடியவில்லை என்று முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர் என்று Spiegel Online ஒரு தலையங்கக் கருத்தில் கூறியது. காப்ரியலுக்கு வெற்றி கிடைத்தால், "1980 கள் மற்றும் 1990 களில் இருந்த ஓய்வூதியக் கொள்கை புதுப்பிக்கப்படும்" என்று அந்த இதழ் எழுதியுள்ளளது.

தற்போதைய கிறிஸ்துவ ஜனநாயக-சுதந்திர ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நீண்ட கால வேலையற்றவர்கள் தங்கள் சொத்துக்களை இன்னும் செலவழிக்க வேண்டும் என்று விரும்புகின்றது.

Hartz IV ஐ எதிர்க்கும் ஆர்ப்பாட்டங்கள் கணிசமாக இடது கட்சியின் வெளிப்பாட்டிற்கு உதவியுள்ளன. ஓஸ்கார் லாபொன்டைன், மற்றும் பிற மூத்த SPD, மற்றும் PDS அரசியல்வாதிகள் எதிர்ப்புக்களை தொழிற்சங்கம் மற்றும் SPD யின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இயக்கம் வளர்ந்துவிடக்கூடும் என்பதற்கான அடையாளமாக கருதினர். எனவே எதிர்ப்புக்களின் தலைமையில் தங்களை இருத்திக் கொண்டு, அவற்றை திசை திருப்ப முற்பட்டனர். இன்று இடது கட்சி, ஹார்ட்ஸ் சட்டங்கள் அகற்றப்பட வேண்டும் என்று கூறவில்லை, மாறாக நலன்களின் தரங்கள் கூட்டப்பட வேண்டும் என்றுதான் கூறுகிறது.

விஷயங்கள் எப்படி மாறக்கூடும் என்பது பொருளாதார வல்லுனர் வொல்ப்காங் பிரான்ஸின் திட்டத்தில் காட்டப்படுகிறது. அதில் வேலையின்மை நலன் IIல் மாதத்திற்கு 359 யூரோக்கள் என்பதற்கு பதில் 250 யூரோக்கள் மட்டும் என குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்து உள்ளது. கூட்டாட்சி அரசாங்கத்திற்கு Council of Experts for the Assessment of Economic Development கொடுத்த Hartz IV வளர்ச்சித் திட்டத்தின் மாதிரியை அவர் நம்புகிறார்; அதற்கு அவர்தான் தலைமை தாங்கினார். இந்த புதிய சீர்திருத்தத்தின் மையக்கருத்து "நலன்களின் தரம் 30 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும்" என்பதாகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் மணிக்கு மூன்று யூரோக்களுக்கும் குறைவான ஊதியங்கள் வேண்டும் என்றார். அதுதான் வேலைகளை தோற்றுவிக்கும் சிறந்த வழி என்றும் அவர் கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved