World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Workers and youth at Athens protest speak to the World Socialist Web Site

தொழிலாளர்களும் இளைஞர்களும் ஏதென்ஸில் உலக சோசலிச வலைத் தளத்திடம் கருத்துத் தெரிவிக்கின்றனர்

By our reporters
25 February 2010

Back to screen version

புதனன்று கிரேக்க பொது வேலைநிறுத்தத்திலும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களிலும் ஏதென்ஸில் பங்கு பெற்ற பல தொழிலாளர்களும் இளைஞர்களும் பொருளாதார நெருக்கடி பற்றித் தாங்கள் உணர்ந்துள்ளதை உலக சோசலிச வலைத் தள நிருபர் குழுவிடம் கூறினார்கள்.

கோஸ்டாஸ் ஸ்டெளம்பியாடிஸ் கூறினார்: "நான் அரசாங்க முனிசிபல் ஊழியராக கிரேட்டில் வேலை செய்கிறேன். தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன. எங்கள் ஊதியங்கள், சமூகப்பாதுகாப்பு மற்றும் அனைத்துமே தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன. அரசாங்கம் இதைச் செய்வதற்குக் காரணம் எங்களிடம் இருந்து எட்டு மணி நேர வேலை நாள் மற்றும் வாரத்திற்கு ஐந்து நாள் என்பதை அரசாங்கம் அகற்ற முற்படவதுதான். பல ஆண்டுகளாக நாங்கள் போராடிப் பெற்றது, எங்கள் பெற்றோர்கள் போராடிப் பெற்றது அனைத்தையும் அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொள்ள முயல்கிறது. எனவேதான் தெருக்களுக்கு போராட வந்துள்ளோம்.

"எங்களுடைய ஊதியங்கள் அச்சறுத்தலுக்கு உட்பட்டுள்ளன. இது ஒன்றும் தேசிய நிலைமையினால் அல்ல. சர்வதேசச் சூழலினால். எனவேதான் நாங்கள் எங்கள் உரிமைகளை பாதுகாக்கவும், தேவையானால் தாக்குவதற்கும் தயாராக புறப்பட்டுள்ளோம். அவர்கள் இந்த நெருக்கடிக்கு தொழிலாளர்கள் விலை கொடுக்க வேண்டும் என்று கூறுவதுதான் எங்களுக்கு கோபத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் நாங்கள் ஒன்றும் இந்த நெருக்கடியை தோற்றுவிக்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம்.

ஒரு பெரிய செய்தித்தாளில் வேலைபார்க்கும் செய்தி ஊடகத் தொழிலாளி கோஸ்டாஸ் சரிஸ் WSWS இடம் கூறினார்: "தொழிலாளர்களிடையே உள்ள முக்கிய உணர்வு இந்த நடவடிக்கைகள் பற்றிய கோபம்தான், ஏனெனில் இந்த நெருக்கடியை நாங்கள் தோற்றுவிக்கவில்லை, ஆனால் இதற்கான விலையை நாங்கள் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த நெருக்கடி பணக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டது. எனவே செய்தித்துறை உட்பட ஒவ்வொரு துறையிலும் உள்ள தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தம் ஒரு பெரிய முன்னோக்கிய அடிவைப்பு என்று நினைக்கின்றனர். நமக்கு ஒரு வேலைநிறுத்தம் போதாது. இன்னும் முன்னேறி அனைத்துத் தொழிலாளர்களின் கூடுதலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும், அப்பொழுதுதான் பணக்காரர்கள் விலை கொடுப்பார்கள் ஆனால் நாங்கள் அல்ல.

"ஐரோப்பா முழுவதற்கும் ஒரு சோதனைக் களம் போல் கிரேக்கம் பயன்படுத்தப்படுகிறது என்று நான் ஒப்புக் கொள்ளுகிறேன். சர்வதேசத்திற்கும் என்று கூட சொல்லலாம். ஏனெனில் இந்த நெருக்கடி பூகோள நெருக்கடி ஆகும். ஐரோப்பாவில் இந்த நெருக்கடி ஆழ்ந்திருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் இதே நிலைமைதான் அமெரிக்காவிலும் பாரியளவான கடன்கள் உள்ளதைப் பார்க்க முடியும். இதை நீங்கள் பிரிட்டனிலும் காணலாம், மற்றய முக்கிய பொருளாதாரங்களிலும் காணலாம். பிரச்சினை என்னவென்றால், இந்த நாடுகள் அனைத்திலும் அவர்கள் பணக்காரர்களையும் மற்றும் வங்கிகளையும், நிதிய சரிவை ஈடுகட்ட, பொதுப் பணத்தை செலவழித்து காப்பாற்ற முற்படுகின்றனர். இப்பொழுது அவர்கள் நாங்கள் இதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்!

"கிரேக்கத்தை பொறுத்தவரை பிரச்சினை இது ஒரு சக்தி வாய்ந்த பொருளாதாரம் இல்லை. எனவே நிதிய குறைபாடுகளை இட்டு நிரப்புவது இன்னும் கடினம் ஆகும். எனவே தாக்குதல் இங்கு வலுவாகவும் பெரும் பாதிப்பைக் கொடுக்கும் விதத்திலும் உள்ளது.

"பாப்பாண்ட்ரூவும் PASOK- யும் முழுமையாக ஒரு யூ வடிவில் திருப்பத்தை செய்துள்ளன. ஏனெனில் கடந்த தேர்தலில் அவர்களுக்கு பெரும் வெற்றி கிடைத்தது. பழமைவாதிகளைவிட 10 சதவிகித அதிகப் பெரும்பான்மை கிடைத்தது. இப்பொழுது அரசாங்கம் ஒவ்வொன்றாக அளித்த உறுதிமொழிகளையும் முறிக்கிறது.

"இங்குள்ள மக்கள் மாறுகின்றனர், தற்பொழுதைய அரசியலுக்குள் தீர்வு இல்லை என்பதை உணர்ந்து வருகின்றனர் எனவே மக்கள் ஒரு மாற்றீட்டைக் காண விரும்புகின்றனர்.

"நாங்கள் பெரிய வெட்டுக்களையும் இன்னும் அதிக பணிநீக்கங்களையும், குறிப்பாக ஊடகப் பிரிவில் எதிர்கொண்டிருக்கிறோம். முன்பு பொருளாதாரத்தின் வைரம் போல் இப்பிரிவு இருந்தது. ஒரு பணக்காரத்துறையாக இருந்தது. இப்பொழுது செய்தி ஊடகப் பிரிவிலும் நாங்கள் வேலைநிறுத்தம் செய்கிறோம்.

"அவர்கள் ஊதியங்கள் அனைத்தையும் ஒரே நிலையில் வைக்கின்றனர். இதையொட்டி வேலை இன்னும் கடினமாகிறது. எங்களுக்கும் கடன் இருக்கிறது. ஏனெனில் ஏதேனும் பணம் செலவழிக்க நாங்கள் விரும்பினால், நாங்கள் கடன் வாங்க வேண்டும். ஏனெனில் கிரேக்கத்தில் ஊதியங்கள் மிகக் குறைவு. எனவே பல குறைவூதியம் பெறும் தொழிலாளிகள் பெரும் பிரச்சினையில் உள்ளனர்."

ஏதென்ஸில் பொதுத்துறையில் சமூக காப்பீட்டுத் தொழிலாளியாக காத்தரினா மாலகெள வேலை பார்க்கிறார். அவர் WSWS இடம் கூறினார்: "எது உறுதியானது என்றால் தொழிலாளர்கள் இந்த நெருக்கடிக்கு காரணம் இல்லை என்று உங்களுக்கு நான் கூறுவேன். பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்கள் ஏற்கனவே மற்றய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது கிரேக்கத்தில் மிகக்குறைவு. எனக்கு 1,100 யூரோக்கள் கிடைக்கின்றன. ஓரளவு போனஸும் உண்டு. ஆனால் 1,500 யூரோக்கு மேல் நான் ஒருபோதும் பெற்றது கிடையாது. 25 ஆண்டுகளாக நான் வேலை பார்த்து வருகிறேன். நான் ஒன்றும் புதிதாக வேலையில் சேர்ந்தவள் இல்லை.

வங்கிகளிடம் இருந்து கடன்களை வாங்கியிருக்கக்கூடாது என்பதுதான் நடந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மாறாக நாம் வங்கிகளிடத்தில் இருந்துதான் பணத்தைப் பெற வேண்டும். ஏனெனில் அவர்கள்தான் முதலில் எங்கள் பணத்தைத் திருடியவர்கள். இப்பொழுது எங்களுக்கு அவர்கள் கடன் கொடுக்கின்றனர். எங்களிடம் இருந்து இன்னும் கூடுதலான பணத்தை இறுதியில் பெறுவதற்காக! இது நியாயமில்லை, தொழிலாளர்கள் இதற்கு ஒருபோதும் விலை கொடுக்கக்கூடாது.

"நான் இரு கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். முதலில் ஐரோப்பா முழுவதும் இருக்கும் தொழிலாளர்கள் இந்த நெருக்கடியை எதிர்க்க ஒன்றுபட வேண்டும். நம் உரிமையை முதலாளித்துவத்தினர் எடுத்துக் கொள்ள நாம் அனுமதிக்கக்கூடாது. நிதிய நிறுவனங்களுக்கு இந்த அளவிற்கு செல்வாக்கைக் கொடுக்கக்கூடாது.

"இரண்டாவது தகவல் ஜேர்மனிய அரசாங்கத்தை நோக்கியது. 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இங்கு இருந்தனர், நாட்டை அழித்தனர். இப்பொழுது மீண்டும் இதை அழிக்க விரும்புகின்றனர். இந்த வகையான பொருளாதார முறை மூலம்.

"தொழிலாளர்கள் எல்லை கடந்து ஒன்றுபட வேண்டும் என்று நீங்கள் கூறுவதுடன் நான் உடன்படுகிறேன். அப்பொழுதுதான் எங்களுக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் தடுக்கப்பட முடியும். ஆனால் ஒவ்வொரு நாடும் சிறு அரசியல் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. இவை நாட்டிற்குள்தான் தீர்க்கப்பட முடியும்."

WSWS ஆன்டனி மற்றும் டிமிட்ரிஸ் என்கின்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்ற இரு மாணவர்களிடமும் உரையாடியது.

கிரேக்கத்தில் இளைஞர்கள் வேலையின்மை பிரச்சினை பற்றி ஆன்டனி கூறினார். "ஐரோப்பாவிலேயே மோசமான வேலைவிகிதத்தை நாங்கள் கொண்டிருக்கிறோமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் எங்கள் நாடு சர்வதேச முதலாளித்துவ முறைக்கு ஒரு சோதனைக் களமாக உள்ளது என்று எனக்குத் தெரியும். தொழிலாளர்கள் எப்படி இதை எதிர்கொள்ளுவர் என்று காண விரும்புகின்றனர். அவர்களை எதிர்த்து, அவர்கள் தோற்றுவித்த நெருக்கடிக்கு நாங்கள் விலை கொடுக்க மறுத்தால், மற்ற நாடுகளில் என்ன நடக்கும் என்பதற்கு இது முதல் அடையாளமாக இருக்கும். எல்லா நாடுகளிலும் இதே நிலைமைதான் தாமதித்தோ, விரைவிலோ வரும் என்று நான் நம்புகிறேன்.

"அனைவரும் தாங்கள் இதற்கு விலை கொடுக்க வேண்டியதில்லை என்று உணர்வது மிகவும் முக்கியமாகும். என்னுடைய தனிப்பட்ட கருத்தில் அவர்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் எங்களைச் சித்திக்க வைக்க முயல்கின்றனர். நாம் கொடுக்காவிட்டால் எங்களுக்கு அனைத்தையும் இழக்க வைப்பார்கள். நம்முடைய சமூகத்தை அல்லது பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேறு வழி இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

"எனவே முதலாளிகள் ஏற்கனவே எப்படித் தப்புவது என்று கண்டுபிடித்து விட்டனர். அவர்கள் நெருக்கடியில் இருந்து தங்களை மீட்டுக் கொள்ளுவதற்கு அவர்கள் அதில் இருந்து எவ்வளவு இலாபம் பெறமுடியுமோ அதற்கு முயல்கின்றனர். அவர்களுக்கு ஆபத்து முடிந்துவிட்டது என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் இது இன்னும் முடியவில்லை என்று நாங்கள் நினைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதையொட்டி எங்களை இன்னும் அதிக வரி கொடுக்கச் செய்ய அவர்கள் விரும்புகின்றனர். வருங்காலத்தில் அவர்கள் திட்டமிடும் சட்டங்களுக்கு இன்னும் கீழ்ப்படியும் நிலையைக் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்."

டிமிட்ரிஸ் கூறினார்: "எங்கள் கல்விக்காக எங்கள் குடும்பத்தில் பணப் பிரச்சினை இல்லை. ஆனால் வருங்காலத்தில் பிரச்சினைகள் இருக்கும் என்பதை நான் அறிவேன். நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. பின்னர் வேலை கிடைப்பதும் எங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும். மேலும் நெருக்கடியானது குறைந்த வருமானம் உடைய மக்களை அதிகம் பாதிக்கிறது.

"முதலாளித்துவம் மற்றும் பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளை பொறுத்தவரை, அவர்கள் நாங்கள் இப்பொழுது உள்ள நிலையை எதிர்பார்த்தனர். நம்முடைய சமூகத்தை அவர்கள் வைத்திருக்கும் முறை மற்றும் சர்வதேச நிறுவனங்களை செயல்படுத்தும் அவர்களது முறையானது சர்வதேச அளவில் பணம் ஒரு சிலருக்குத்தான் செல்லும் என்ற விதத்தில் உள்ளது.

"முந்தைய அரசாங்கம் கடந்த ஆண்டு 28 பில்லியன் யூரோக்களை வங்கிகளுக்கு தற்போதைய நெருக்கடியில் இருந்து அவற்றை காப்பாற்றக் கொடுத்தது. இப்பொழுது PASOK உடைய கடும் சிக்கன திட்டத்தையொட்டி, நாங்கள் அவர்கள் கடந்த ஆண்டு வங்கிகளுக்கு கொடுத்ததைவிட குறைவாகத்தான் பெற முயற்சிக்கிறோம்.

இப்பொழுது செயல்படுத்தப்படும் கல்விக் குறைப்புக்களை பற்றி குறிப்பிட்ட டிமிட்ரி, "இப்பொழுது நம் சமூகத்தின் தூண்கள் என்று இருப்பதைக் குறைக்க விரும்புகின்றனர். எங்களுக்கு உரிமை உடைய விஷயங்களுக்கு அவர்கள் பணத்தைக் குறைக்க விரும்புகின்றனர். சுதந்திரக் கல்வி, சுதந்திரமான வகையில் முறையான கல்வி இவற்றிற்கு எங்களுக்கு உரிமை உண்டு. இப்பொழுது அவர்கள் கூறும் கல்வி முறை அல்ல.

"கல்வி என்பது நாங்கள் குழந்தைகளாக இருப்பது முதல் பல்கலைக்கழகக் காலம் வரை இருக்க வேண்டும் என்று நான் பொருள் கொள்ளுகிறேன். அவர்கள் ஓய்வூதியங்களைக் குறைக்க முற்படுகின்றனர், சுகாதாரக் காப்பீட்டை குறைக்கின்றனர். நாங்கள் இவற்றிற்கு விலை கொடுத்துள்ளோம், எங்கள் பெற்றோர்கள் கொடுத்துள்ளனர், இன்னமும் நாங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்."

"சோசலிசமும் கிரேக்கக் கடன் நெருக்கடியும்" என்ற அறிக்கையின் பிரதிகளை WSWS ஆதரவாளர்கள் ஏதென்ஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விநியோகித்தனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved