World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A turning point in Europe

ஐரோப்பாவில் ஒரு திருப்பு முனை

Chris Marsden
26 February 2010

Back to screen version

கிரேக்கத்தில் 2 மில்லியன் பொது மற்றும் தனியார்துறை தொழிலாளர்கள் பங்கு பற்றிய பொது வேலை நிறுத்தம் ஐரோப்பா முழுவதும் உள்ள அரசியல் நிலைமையில் ஒரு திருப்பு முனையைக் குறிக்கிறது. இது ஐரோப்பாவின் அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் பொருளாதார நெருக்கடி மற்றும் வங்கிகள் பிணை எடுப்பிற்கு பல பில்லியன்களை கொடுத்ததின் விலையை தொழிலாளர்கள் கொடுக்க வேண்டும் என்னும் முயற்சிகளுக்கு பெருகிய முறையில் எதிர்த்து போராடும் இயக்கம் வளர்ந்துள்ளதின் மிக முக்கியமான வெளிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

தொழிலாள வர்க்கத்தின் இந்தப் புதிய இயக்கத்தின் ஆரம்பத்திலேயே இரண்டு அடிப்படைக் கூறுபாடுகள் வெளிப்பட்டுள்ளன: அதாவது இந்த இயக்கம் எல்லை கடந்த, சர்வதேச தன்மையை பெற்றுள்ளது மற்றும் தொழிலாளர்கள் தங்கள் பழைய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் அமைப்புக்களின் திவால்தன்மையை உடனடியாக எதிர்கொண்டனர்--இவைகள் அனைத்தும் ஒரு தேசியவாத வேலைத்திட்டத்துடன்தான் பிணைந்துள்ளவை.

உண்மையில், உத்தியோகபூர்வ "இடது" அரசாங்கங்களால் சுமத்தப்படும் கடும் சிக்கன நடவடிக்கைகள் "மத்திய" மற்றும் "வலது" அரசாங்கங்கள் சுமத்துவதைவிடக் குறைவானதாக இல்லை.

இந்த வாரம் ஐரோப்பா முழுவதும் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் காணப்பட்டன.

திங்களன்று, ஜேர்மனியின் லுப்ட்தான்சாவின் 4,500 விமானிகள் வேலைநிறுத்தம் செய்தனர். பிரான்சில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஆறு பிரெஞ்சு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் தொழிலாளர்களுடன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பிரிட்டிஷ் ஏயர்வேஸ் விமான ஓட்டிகள் குழு 80 சதவிகித வாக்குகளை வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாகக் கொடுத்துள்ளது.

செவ்வாயன்று மட்ரீட், பார்சிலோனா மற்றும் வலென்சியா ஆகியவற்றில் ஜோஸ் ஜாபட்ரேறோவின் ஸ்பெயினின் சோசலிச தொழிலாளர் கட்சியின் (PSOE) அரசாங்கத்தின் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. செக் குடியரசின் தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளன.

போர்த்துக்கலில் மார்ச் 4-ம் தேதி வரவு-செலவு பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.3 சதவிகிதத்தில் இருந்து 2013-க்குள் 3 சதவிகிதம் என்று குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊதியத் தேக்கம் விரிவாக்கப்படுவது பற்றி பொதுத்துறை ஒரு நாள் வேலைநிறுத்தம் ஒன்றைத் திட்டமிட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புகளும் தங்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் கொடுக்கும் ஆரம்ப விடையிறுப்பு மட்டுமே. மிகப் பரந்தளவிலான அணிதிரட்டல்கள் எந்த நாடுகளில் மிகக் கடுமையான வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளனவோ அங்கு நடைபெற்றுள்ளன.

போர்த்துக்கல், இத்தாலி, கிரேக்கம் மற்றும் ஸ்பெயின்--"PIGS" என்று அழைக்கப்படுபவை--வங்கிகளாலும் நிதிய ஊக வணிகர்களாலும் இலக்கு கொள்ளப்பட்டு, தங்கள் வரவு-செலவு பற்றாக்குறையை பெரிதும் குறைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தால் உத்தரவிடப்பட்டுள்ளன. இது ஐரோப்பா முழுவதும் இதே போன்ற வெட்டுக்களை கொண்டுவர முன்னோடியாக அமையும். ஆனால் தொழில்துறை அமைதியின்மையானது ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பரவியுள்ளது என்னும் உண்மை உண்மையான ஐரோப்பா தழுவிய இயக்கத்தின் வளர்ச்சித் திறனைச் சுட்டிக் காட்டுகிறது.

ஐரோப்பாவில் வர்க்கப் போராட்டம் மீண்டும் தலையெடுப்பதற்கு அடித்தளத்தில் இருக்கும் போக்குகள் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆபிரிக்காவிலும் உள்ளன.

பல எதிர்ப்புக்களும் ஆர்ப்பாட்டங்களும் ஒப்புமையில் சிறியவை--இக்காரணி நிதிய ஊடகத்தால் அந்தந்த அரசாங்கங்கள் சிக்கன நடவடிக்கையை சுமத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கோரப் பயன்பட்டன. ஆயினும்கூட, பல முன்னோக்கு கருத்துத் தெரிவிப்பாளர்கள் இந்த நடவடிக்கைகளின் பரந்தளவிலான விளைவுகள் பற்றி தெளிவாக அறிந்திருந்தனர். Independent-ல் எழுதிய Sean O'Grady "ஐரோப்பாவின் குளிர்கால அதிருப்தி" தொடக்கத்தை வேலைநிறுத்தங்கள் குறித்து நிற்கின்றன என்றார். "இவை 1968-ல் இருந்த புரட்சிகர தீவிரத்திற்குப்பின் கண்டத்தில் பொதுமக்களுடைய மிகப் பெரிய அமைதியின்மையை நிரூபிக்கும் தொடக்கமாக உறுதியளிக்கின்றன" என்று அவர் தொடர்ந்து எழுதினார்.

மில்லியன் கணக்கான மக்கள் வேலையின்மையில் தள்ளப்படுதல் மற்றும் கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி ஆகியவற்றில் சமூக சேவைகள் துடைத்தெறியப்பட்டு பாதிப்பைக் கொடுக்கும் சிக்கன நடவடிக்கைகளின் அரசியல் பாதிப்பைப் பற்றி அவர் "நமக்கு நினைவு தெரிந்ததில் இருந்து ஜனநாயகம் சேதமடைந்து இருந்த நாடுகளில் பாசிச அல்லது இராணுவ தலைவர்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன." என்றார்.

கண்டம் முழுவதும் பரவியுள்ள சமூக அரசியல் இயக்கத்திற்கான தளம், பெரும் சர்வதேச வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட உலகப் பொருளாதார முறையினால் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொதுப் பிரச்சினைகளில் வேர்களைக் கொண்டிருக்கின்றன. இந்த அமைப்புக்களும் அவை பிரதிபலிக்கும் நிதியத் தன்னலக்குழுக்களும் சமூகநலத் திட்டங்கள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களில் முன்னோடியில்லாத வெட்டுக்களைக் கோருகின்றன. ஐரோப்பிய அரசாங்கங்கள் வங்கிகளுக்கு கொடுத்த டிரில்லியன் கணக்கான டாலர்களை திருப்பிக் கொடுப்பதற்கு இவை நடைபெறுகின்றன. அதிக கடன்களைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் மீது போதுமான தாக்குதல்களை நடத்த விருப்பம் இல்லாத பொருளாதாரங்களை ஊகித்து, இலக்கு வைக்கப்பட்டுள்ள அரசாங்கங்கள் மீது நிதிய அழுத்தங்களை அதிகரிக்கின்றன.

தற்போதைக்கு ஐரோப்பாவில் வளர்ச்சியுறும் இயக்கத்தின் புறநிலையான சர்வதேச குணாம்சநிலையானது அரசியல் அல்லது அமைப்புமுறை ரீதியான வெளிப்பாடு இல்லை. மாறாக, ஒவ்வொரு இடத்திலும் அது தொழிற்சங்கங்கள் அப்பட்டமாக நாசப்படுத்தும் அளவிற்கு கொண்டுள்ள உறுதியான எதிர்ப்பைக் காண்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு முயற்சிகள் பல காட்டிக் கொடுக்கப்பட்டதையும் இந்த வாரம் கண்ணுற்றது. ஜேர்மனிய விமானிகள் சங்கமான Vereinigung Cockpit முதல் நாள் முடிவிலேயே லுப்ட்தான்சா வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்டது. பிரான்சில் மிகப் பெரிய தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு பெரும் எண்ணெய் நிறுவனமான டோட்டலுக்கு எதிரான வேலைநிறுத்தத்தை முடித்தது. இரண்டிலுமே தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் எந்தக் கோரிக்கையிலும் வெற்றி அடையாமல் சரணடைந்தன. தன்னுடைய பங்கிற்கு Unite தொழிற்சங்கம் நேற்று அதன் உறுப்பினர்கள் "பிரிட்டிஷ் ஏயர்வேஸுக்கு எதிராக ஆதரவு கொடுத்த வேலைநிறுத்தம்" இன்னும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தது.

நடந்து முடிந்து விட்ட இந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள், தொழிற்சங்கக் கண்ணோட்டத்தின்படி சீற்றத்தை திசை திருப்ப உதவுவதோடு, சிக்கன நடவடிக்கைகள் எடுக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக அரசியல் இயக்கம் ஒன்றை அணிதிரட்டாது. தொழிற்சங்கங்கள் தங்கள் அரசாங்கங்களை ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஊக வணிகக்காரர்களின் பிணைக்கைதிகள் போல் சித்தரிக்கின்றன. முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகள் என்று சித்திரிப்பதில்லை.

கிரேக்கத்தில் PASOK, ஸ்பெயினில் PSOE, போர்த்துகல்லில் சோசலிஸ்ட் கட்சி என்று வலதுசாரி அரசாங்கங்களுக்கு மக்கள் காட்டிய விரோதத்தின் விளைவாக அதிகாரத்திற்கு வந்த சமூக ஜனநாயக அரசாங்கங்கள்தான் இத்தகைய கடுமையான குறைப்புக்களைச் சுமத்துகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கமானது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டது. உறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கு பதிலாக சிக்கன வரவு-செலவு நிதிய அறிக்கை வந்தபோதிலும் அவை விசுவாசமாக உள்ளன.

தொழிற்சங்கங்களின் நோக்கமே சமூக அழுத்தங்களை கட்டுப்படுத்தி அவை பெருவணிகம், அரசாங்கத்திற்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக் கொள்ளுவதுதான். கிரேக்க தொழிலாளர்களின் பொதுக் கூட்டமைப்பின் (GSEE) செய்தித் தொடர்பாளர், PASOK-ன் திட்டமிட்டு கடும் சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவது என்பது "பெரும் துன்பம் நிறைந்தது, ஏனெனில் இது சமூக அமைதியின்மை, மோதல்களுக்கு வழிவகுக்கும்" என்ற விதத்தில் தெளிவாக்கினார்.

உலக நிதியாளர்களால் ஊதியங்களையும் பணிகளையும் 10 முதல் 15 சதவிகிதம் வரை குறைப்பதற்கு ஒரு முன்மாதிரி போல் அயர்லாந்து காட்டப்படுகிறது. பியன்னா பெயில் அரசாங்கம் இவ்வாறு செய்ய முடிவதற்கு முழுக் காரணம் அது அயர்லாந்தின் தொழிற்சங்கங்களை முழுமையாக நம்பியுள்ளது; அவைதான் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பாதிக்கும் வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக நடந்த வேலைநிறுத்தங்களை நிறுத்திவிட்டன.

அயர்லாந்தின் தொழிற்சங்கங்கள் காங்கிரஸ், அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையை ஒரு பொதுத்துறை விதிக்கு ஏற்ப உழைத்தல் என்பதின் மூலம் வரம்பு காட்டியுள்ளது. இதன் தலைவர் Jack O'Conor, "நாங்கள் வரவு-செலவுத் திட்டத்தை மாற்ற விரும்பி, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மதிப்பை குறைக்கிறோம் என்று எங்களை சிலர் சித்திரிக்கக்கூடும். உடன்பாடுகள் அடையப்பட முடியும் என்பதை உறுதியாக நான் கூறுவேன்." என்றார்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் விருப்பங்கள் எப்படி இருந்தாலும், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஆணைகளின் பேரில் நடத்தப்படும் வெட்டுக்கள் பற்றிய சீற்றம் தொடர்ந்து வளரும். இந்த எதிர்ப்பில் அவற்றின் முயற்சி இதை நெரித்து, காட்டிக் கொடுப்பதாகும். அது ஒரு வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழிற்சங்கங்கள் மற்றும் அவை பாதுகாக்கும் அரசாங்கங்கள் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு அரசியல் எழுச்சியின் வடிவமைப்பை அவை தவிர்க்க முடியாமல் அடையும்.

கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துகல் அல்லது பிற இடங்களில் தொழிலாளர்களை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கு தேசியத் தீர்வு கிடையாது. தொழிலாளர்கள் பூகோள அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு பொதுப் போராட்டத்திற்கு தள்ளப்படுகின்றனர். ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினை தேசியவாத முதலாளித்துவ சார்பு உத்தியோகபூர்வ தொழிலாளர் இயக்கத்திற்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கான ஒரு புதிய தலைமைக்கும், புதிய வெகுஜன அமைப்புக்களுக்கும் தளமாக ஒரு சோசலிச மற்றும் சர்வதேசத் திட்டத்தை ஏற்பதுதான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved