இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி
உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்ததில் இருந்து 62 ஆண்டுகளைக் குறிக்கும் வருடாந்த சுதந்திர தின உரையை
வியாழக்கிழமை ஆற்றினார். இரண்டாவது பதவிக் காலத்தை வென்று ஒரு வாரமே கடந்துள்ள நிலையில்,
இராஜபக்ஷ தனது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் மூலத் திட்டத்தை காட்ட இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக்கொண்டார். தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் என்ற பெயரில், அவர் தொழிலாள வர்க்கத்துக்கு
எதிரான ஒரு பொருளாதார தாக்குதலுக்குத் தயாராகின்றார்.
இருந்து ஒரு சுருக்கப் பகுதியை தமிழில் வாசித்தார். அது தீவின் தமிழ் சிறுபான்மையினருடன் சமரசத்துக்கு
முயற்சிப்பதற்கு மாறாக, ஒரு அச்சுறுத்தல் போன்றே இருந்தது.
"ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம். இதுவே எமது வழி", என
இராஜபக்ஷ பிரகடனம் செய்தார். ஆனால் இந்த ஆணை, 1983ல் உள்நாட்டு யுத்தத்துக்கு வழிவகுத்த, நாட்டின்
தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக 62 ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட பாரபட்சத்தின்
முன்னால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2006ல் யுத்தத்தை மீண்டும் தொடங்கிய இராஜபக்ஷ, ஈவிரக்கமின்றியும் தமிழ்
மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கியும் அதை முன்னெடுத்தார். கடந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர்
வரை, வெறுமனே புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிராந்தியத்தில் வாழ்ந்த தமிழர்கள் என்ற காரணத்துக்காக,
அவரது அரசாங்கம் 280,000 பொது மக்களை அடைத்து வைத்திருந்தது.
"தாய்நாட்டை மறக்கக் கூடாது. அதை காட்டிக்கொடுக்கக் கூடாது. இந்த
நாட்டில் எவரும் சிறுமான்மையினர் இல்லை என நாம் கருதுகிறோம். நாட்டை நேசிக்கும் அனைவரும் இலங்கைத்
தாயின் பிள்ளைகள்," என இராஜபக்ஷ தொடர்ந்தார். இதன் உட்பொருள், "இலங்கைத் தாய்க்கு" போதுமான
தேசப்பற்றை காட்டத் தவறும் சகலரையும், குறிப்பாக தமது இரண்டாந்தரப் பிரஜை என்ற நிலையை சவால்
செய்யும் தமிழர்களை, அதற்கேற்றவாறு நடத்தவேண்டிய துரோகிகள் என்பதாகும்.
திட்டமிடப்பட்ட ஊடக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இந்த நிகழ்வுக்கு
சிறிதளவே பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். அங்கு வந்திருந்த ஒரு சில சாதாரண உழைக்கும் மக்கள்
உத்தியோகபூர்வ மேடையில் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். கண்டிய வாசிகள் மத்தியில், பாராட்டை விட
முறைப்பாடுகள் அதிகமாக இருந்தது. இராணுவ அணிவகுப்பின் முடிவற்ற ஒத்திகைக்காக வீதிகள் மூடப்பட்டிருந்ததை
சிறு வியாபாரிகள் விமர்சித்தனர். ஆயிரக்கணக்கான பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை தங்க வைப்பதற்காக மூன்று
நாட்கள் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததாக தாய்மார்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்குத்
தெரிவித்தார்கள்.
விழாவில் பெருமைக்குரிய இடம் பாதுகாப்பு படைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. உளவு
பார்க்கவும் கட்டாயப்படுத்தவும் ஒரு உபகரணமாக இராஜபக்ஷவால் அமைக்கப்பட்ட 41,000 பேரைக் கொண்ட
ஒரு துணைப் படையான ஊர்காவற் படை மற்றும் பொலிஸ் படையின் பல்வேறு பிரிவுகளுடன் இராணுவம், கடற்படை
மற்றும் விமானப்படையின் அணிவகுப்புக்கள் நடந்தன. ஜனாதிபதி "உயிரையும் உடற் பாகங்களையும் அர்ப்பணித்த வீர
சிப்பாய்களை நினைவுகூர்ந்தார்". இவர்களில் பெரும்பாலானவர்கள், அவர்களின் பொருளாதார நெருக்கடியை
பயன்படுத்தி சேர்ந்துக்கொள்ளப்பட்ட கிராமப்புற இளைஞர்களாவர். அவர்கள் வேறு தொழில் கிடைக்காததால்
இராணுவத்தில் சேர்ந்துகொண்டவர்கள் ஆவர்.
இராஜபக்ஷவின் உரையின் பிரதான உந்துதல் பொருளாதாரத்துடன்
சம்பந்தப்பட்டிருந்தது. சீனாவிற்கு அடுத்து ஆசியாவில் வேகமாக வளர்ச்சிகண்டுவரும் இரண்டாவது நாடாக இலங்கை
உள்ளது என பெருமைபட்டுக்கொண்ட அவர், தீவுக்கு "முதலீட்டாளர்களுக்கு கெளரவ அழைப்பு விடுத்தார்".
"யுத்தத்தின் காரணமாக கடந்த 30 ஆண்டுகாலமாக இழக்கப்பட்ட சகலதையும் திருப்பிக் கொண்டுவர" தனது
"புதிய பதவிக்காலத்தை" பயன்படுத்துவதாக அவர் வாக்குறுதியளித்தார். அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில், அவர்
அதை "பொருளாதார யுத்தம்" என குறிப்பிட்டுள்ளார்.
யதார்த்தத்தில், இராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரமாண்டமான இராணுவச் செலவின்
விளைவாக பொருளாதாரம் கடனில் மூழ்கியுள்ளது. கடந்த ஆண்டு அந்நிய செலாவனி நெருக்கடியை
தவிர்ப்பதற்காக, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.6 பில்லியன் டொலரை கடனாகப்
பெறத்தள்ளப்பட்டது. மேலதிக மறுசீரமைப்பு நடவடிக்கைகள், தனியார்மயமாக்கள் மற்றும் பொதுச் செலவில்
கடுமையான வெட்டுக்கள் போன்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளின் முழு உள்ளடக்கத்தையும்
மறைப்பதற்காக, இராஜபக்ஷ வரவு செலவுத் திட்டத்தை தேர்தலின் பின்னர் வரை ஒத்திவைத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியின் சுமைகளை யார் சுமக்க வேண்டும் என்பது பற்றி
இராஜபக்ஷவின் உரையில் சந்தேகத்துக்கு இடமிருக்கவில்லை. "சோம்பேரித்தனம், அக்கறையின்மை மற்றும்
ஆற்றலின்மையை கொண்ட நாட்டை மாற்றீடு செய்வதற்கு ஒரு செயலூக்கமுள்ள முன்னேறிய தேசமாக கட்டியெழுப்ப
வேண்டும்," என அவர் கூறினார். கடமையில் இருக்கும் கால எண்ணிக்கையைப் பற்றி சிந்திக்காமல், யுத்தத்தில்
போராடிய சிப்பாய்களைப் போல் உழைக்கும் மக்கள் வேலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர் புலிகளின்
தோல்வியின் பின்னர் தெரிவித்த கருத்துக்களையே இந்தக் குறிப்புக்கள் நினைவூட்டுகின்றன.
தனது அரசாங்கம் கூட்டுத்தாபன தட்டுக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின்
இலாபத்துக்காக சந்தை சார்பு வேலைத்திட்டத்தை தயாரிக்கின்றது என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
"பொதுத் துறையைப் போல் தனியார் துறைக்கும் பொறுப்புள்ளது" என அவர் தெரிவித்தார். "யுத்தத்தின் போது
இக்கட்டில் இருந்த தனியார் துறைக்கு இப்போது சிறந்த சூழல் கிடைத்துள்ளது. உடனடி தீர்மானங்களை எடுக்கக்
கூடிய மற்றும் மக்களுடன் சினேகப் பூர்வமான ஒரு பொதுச் சேவையை நான் எதிர்பார்க்கிறேன்."
"ஒரு மக்களுடன் சினேகிதமான" அரசாங்க துறையால் உழைக்கும் மக்களின்
சுகாதார பராமரிப்பு, கல்வி மற்றும் நலன்புரி சேவைகளை முன்னேற்ற எதுவும் செய்ய முடியாது. சர்வதேச
நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளின் கீழ், இராஜபக்ஷ அரசாங்கம் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை
2009ல் மொத்த தேசிய உற்பத்தியில் 7 வீதமாகக் குறைக்கவும் மற்றும் 2010ல் 6 வீதமாகக் குறைக்கவும்
கட்டுப்பட்டுள்ளது. இராஜபக்ஷ எதைக் குறிப்பிடுகின்றார் எனில், ஒரு சில செல்வந்தர்கள் தனியார் இலாபத்தை
ஈட்டுவதற்காக சிறந்த வசதியை வழங்கும் வகையில் அரச இயந்திரத்தை மறு சீரமைப்பதையே ஆகும்.
ஜனாதிபதி தனது உரையில் வெளிநாட்டு கொள்கை பற்றி கவனமாக குறிப்பிட்டார்.
தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, "சர்வதேச சதித்திட்டத்துக்கு" எதிராக இலங்கை தேசத்தை காப்பதாக
இராஜபக்ஷ காட்டிக்கொண்டார். சர்வதேச சதித்திட்டம் என்பது, தமது பகைவர்களின், குறிப்பாக சீனாவின்
செலவில் கொழும்பில் தமது செல்வாக்கை பெருக்கிக்கொள்வதற்காக மனித உரிமைகள் விவகாரத்தை
சுரண்டிக்கொள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் எடுத்த முயற்சிகளாகும்.
இலங்கை "இப்போது சர்வதேச உறவுகளின் தங்க யுகத்துக்குள் நுழைகின்றது" என
கண்டியில் இராஜபக்ஷ பிரகடனம் செய்தார். "எங்களது வெளிநாட்டுக் கொள்கை சுதந்திரமானதும்
அணிசேராததுமாகும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்... இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஏனைய அயல்
நாடுகளுடன் நெருக்கமான நேச உறவை பேணிவருகின்றோம் என்பது இரகசியமானதல்ல. ஆபிரிக்கா, மேற்கு,
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனும் நாம் நெருக்கமான உறவை பேணி வருகின்றோம்," என அவர்
மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக, இங்கு அமெரிக்கா குறிப்பிடப்படவில்லை. கடந்த மே மாதம்,
இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணையை நடத்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய
சக்திகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எடுத்த நகர்வுக்கு எதிராக, இராஜபக்ஷ சீனா மற்றும் ஏனைய
பங்காளிகளுடன் அணிதிரண்டார். அதன் பின்னர், அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டியின் அறிக்கையொன்று, மனித
உரிமைகள் விவகாரத்தை வாஷிங்டன் முக்கியமற்றதாக்க வேண்டும் என பரிந்துரைத்து, "பிராந்தியத்தில் அமெரிக்க
பூகோள மூலோபாய நலன்களுக்கு" "ஒரு நிகழ்ச்சித் திட்டம்" மட்டும் போதாது எனத் தெரிவித்தது.
இலங்கை இராஜதந்திரத்தின் ஒரு புதிய "தங்க யுகத்துக்குள்" நுழைவதற்கு மாறாக,
இந்த சிறிய தீவானது தெற்காசியாவிலும் சர்வதேச ரீதியிலும் பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான
உக்கிரமடைந்துவரும் பகைமையில் இழுபடுகின்றது. அமெரிக்கா, மத்திய கிழக்குக்கும் ஆபிரிக்காவுக்குமான பிரதான
கடல் மார்க்கத்தை பாதுகாப்பதற்காக தனது கடற்படை மூலோபாயத்தின் ஒரு பாகமாக தீவை
பயன்படுத்திக்கொள்ள விரும்பும் சீனாவை சகல வழிகளிலும் ஓரங்கட்டி இல்லாமல் ஆக்குவதன் பேரில், கொழும்பில்
தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது.
இராஜபக்ஷ சூழ்ச்சித்திட்டம் வகுத்து சமநிலைப்படுத்த ஏக்கத்துடன் முயற்சித்தாலும்,
அது பெரும் வல்லரசுகளின் முன்னெப்போதும் இல்லாத பெரும் போட்டி மற்றும் மோதல்களில் மிகவும் ஆழமாக
நாடு சிக்கிக்கொள்ளும். இதன் சாத்தியமான அழிவுகரமான விளைவுகள், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் அயலில்
பாகிஸ்தானில் விரிவாக்கப்பட்டுவரும் அமெரிக்கத் தலைமையிலான யுத்தத்தில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.
இராஜபக்ஷ, இலங்கைக்கு சமாதானத்தையும், சுபீட்சத்தையும் மற்றும் உலக
அங்கீகாரத்தையும் கொண்டுவந்த சக்திவாய்ந்த ஆட்சியாளர் என்ற தோரணையை உருவாக்க முயற்சிக்கின்றார்.
உண்மையில், அவர் கடந்த 62 ஆண்டுகால சுதந்திரத்தில் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்த மற்றும் தீவின்
உழைக்கும் மக்களுக்கு வறுமை மற்றும் இனவாத யுத்தத்தைத் தவிர வேறெதையும் கொண்டுவராத ஊழல் மிக்க
இலங்கை முதலாளித்துவத்தின் ஒரு அரசியல் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார்.