World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Two million Greek workers strike against austerity measures

கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இரண்டு மில்லியன் கிரேக்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்

By our reporters in Athens
25 February 2010

Back to screen version

புதன்கிழமை அன்று ஒரு பொது வேலைநிறுத்தத்தில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் கிரேக்கத் தொழிலாளர்கள் பங்கு பெற்றனர். பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் PASOK கட்சியின் அரசாங்கம் சுமத்தியுள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த வெகுஜன ஒரு நாள் நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முன்னைய பழமைவாத அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றிய தொழிலாள வர்க்கத்தின் சீற்றத்திற்கு ஜனரஞ்சக அழைப்பு விடுத்த அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பாப்பாண்ட்ரூ விரைவில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச வங்கிகள் வேலைகளின் ஊதியங்கள் மற்றும் சமூகநல திட்டச் செலவுகள் ஆகியவற்றை கடுமையாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு கிரேக்கத்தின் உயரும் வரவு-செலவு பற்றாக்குறை குறைக்கப்பட்டு அரசாங்கக் கடன் தவறுதல் இல்லாமல் போகும் என்ற நிலை ஏற்படுவதற்கு தலைவணங்கினார்.

கடும் சிக்கன நடவடிக்கை திட்டத்திற்கு பெரியளவு மக்கள் எதிர்ப்பை இந்த வேலைநிறுத்தம் பிரதிபலித்தது. ஆனால் திட்டமோ ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் நிதிய நலன்களால் போதுமான அளவிற்கு கடுமையைக் கொண்டிருக்கவில்லை என்று குறைகூறப்பட்டது. மக்கள் நடவடிக்கை நாட்டைக் கிட்டத்தட்ட செயலற்ற தன்மைக்கு கொண்டு வந்தது.

கிரேக்கத்திற்கும், கிரேக்கத்தில் இருந்தும் அனைத்து விமான பயணங்களும் --சில அவசரப் பயணங்களைத் தவிர-- இரத்து செய்யப்பட்டன. ஏனெனில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தில் இணைந்துகொண்டனர். இது நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையமான ஏதென்ஸ் இன்டர்நேஷனலை மூடும் கட்டாயத்திற்கு உட்படுத்தியது. பொதுப் போக்குவரத்தும் கடுமையான இடையூறுக்கு உட்பட்டது. ஏதென்ஸ் மெட்ரோ மற்றும் பஸ் பணிகள் பெயரளவிற்குத்தான் செயல்பட்டன. இதனால் வேலைநிறுத்தத்தில் இருப்பவர்கள் நகர மையத்திற்கு செல்ல முடிந்தது. இரயில்களும் படகுப்பிரிவு போக்குவரத்தும் நின்று போயின.

பொதுப் பள்ளிகள், வரி அலுவலகங்கள், நீதிமன்றங்கள் இன்னும் பிற அரசாங்கக் கட்டிடங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டன. அதே போல் பொது மருத்துவமனைகள் மற்றும் பிற அரசாங்க பணிகளும் மூடப்பட்டன. முக்கிய அகழ்பொருள் மற்றும் ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸ் உட்பட சுற்றுலா இடங்களும் மூடும் கட்டாயத்திற்கு உட்பட்டன.

செய்தி ஊடகத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். செய்தியாளர்கள், தேசிய செய்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தம் செய்தனர். இதன் விளைவாக வியாழனன்று எந்தச் செய்தித்தாளும் வெளிவரவில்லை. செய்தி ஊடகத் தொழிலாளர்களின் தொழில்துறை நடவடிக்கையினால் தேசிய தொலைக்காட்சியில் வேலைநிறுத்தம் பற்றி தகவல்கள் ஏதும் வரவில்லை.

கண்டம் நெடுகிலும் அரசாங்கங்களால் இப்பொழுது சுமத்தப்படும் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கம் பெருகிய முறையில் எதிர்ப்பதின் பின்னணியில் இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது--அரசாங்கங்கள் பெயரளிற்கு சமூக ஜனநாயகம் அல்லது பழமைவாதம் என்று எக்கட்சியாயினும் இதையே செய்கின்றன.

முன்னைய தினம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஓய்வூதிய நலன்களை குறைத்தல், சட்டபூர்வமாக ஓய்வூதிய வயதை 65-ல் இருந்து 67-க்கு உயர்த்துதல் போன்ற அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிராக ஸ்பெயினில் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஜோஸ் ஜாபடெரோவின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கமும் தொழிலாளர்களின் பணி உரிமைகளைப் பாதிக்கும் சட்டத்தை செயல்படுத்த முனைகிறது. சமீபத்திய El Pais நடத்திய கருத்துக் கணிப்பு 84 சதவிகிதத்தினர் அரசாங்கத்தின் தொழில்துறை "சீர்திருத்தங்களை" எதிர்த்தனர் என்று கண்டறிந்துள்ளது.

போர்த்துக்கல், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலும் கடந்த சில நாட்களில் ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் நடைபெற்றன.

திங்களன்று ஜேர்மனியில் முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனமான லுப்ட்தான்சாவின் விமானிகள் தங்கள் பணிகள், நிலைமைகள் மீதான தாக்குதலை எதிர்த்து ஒரு நான்கு நாள் வேலைநிறுத்தம் ஒன்றைத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களுடைய தொழிற்சங்கம் ஒரே நாளில் இதை முடித்துவிட்டது.

பிரான்சில் விமானப் போக்குவரத்துக் கட்டுபாட்டு அதிகாரிகள் செவ்வாயன்று ஐரோப்பாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு முறை மறுசீரமைக்கப்படுவதை எதிர்த்து ஒரு நான்கு நாள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். ஏயர் பிரான்ஸின் விமானிகள் சனிக்கிழமை அன்று தொழில்துறை நடவடிக்கையை மறுசீரமைப்பு நடவடிக்கைகைகள், வேலை இழப்புக்கள் ஆகியவற்றை எதிர்த்து நடவடிக்கையில் இறங்கினார்கள். இங்கிலாந்தில் பிரிட்டிஷ் ஏயர்வேஸில் வேலைபார்க்கும் 12,000 விமானி ஓட்டி அறை ஊழியர்கள் மறுசீரமைப்புடன் தொடர்புடைய வேலை இழப்புக்கள் மற்றய நடவடிக்கைகளை எதிர்த்து வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக 80 சதவிகித வாக்குகளை அளித்துள்ளனர்.

மார்ச் 1ம் தேதி செக் போக்குவரத்துத் தொழிலாளர்கள் குறைந்த கட்டணங்கள் போன்ற நலன்களை அகற்றும் திட்டத்திற்கு எதிராக அனைத்து இரயில், பஸ் பாதைகளில் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். மார்ச் 4ம் தேதி போர்த்துகலில் பொதுத் துறை ஊழியர்கள் ஊதியத் தேக்கம் மற்றும் ஓய்வூதிய உரிமைகள்மீதான தாக்குதல்களை அரசாங்கம் சுமத்துவதற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.

நேற்றைய நடவடிக்கை PASOK தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்தபின் முதல் பொது வேலைநிறுத்தம் ஆகும். இரண்டு முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள், தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ளவைகளால் முறையே இதற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது--கிரேக்க தொழிலாளார்கள் பொதுக் கூட்டமைப்பு (GSEE) மற்றும் அரசாங்க ஊழியர்கள் கூட்டமைப்பு (GSEE) இரண்டும் ஒன்றாக இணைந்த விதத்தில் கிரேக்கத் தொழிலாளர் தொகுப்பின் ஐந்து மில்லியனில் பாதியை பிரதிபலிக்கின்றன.

கிரேக்க அரசாங்கத்தின் திவால்தன்மைக்கு தாங்கள் விலை கொடுக்க வேண்டும் என்று வந்துள்ள முயற்சிகள் அனைத்திற்கும் போராளித்தன எதிர்ப்பை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நிரூபித்திருக்கையில், தொழிற்சங்க அதிகாரிகள் தாங்கள் பாப்பாண்ட்ரூவுடன் பேச்சுக்குத் தயார் என்ற குறிப்பைக் காட்டினர். தொழிற்சங்கங்களின் நோக்கம் திரும்பப் பெறுதல் என்பதைவிட சிக்கனத் தொகுப்பில் மாற்றம் செய்ய அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக்கிய GSSE இன் தலைவர் யியன்னிஸ் பனகோபோலஸ் செய்தியாளர்களிடம், வரவு-செலவு பற்றாக்குறைகளைக் குறைப்பதற்கு "சுமையை நியாயமான முறையில் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம்" என்றார்.

Spyros Papaspyros, ADEDY ன் தலைவர், "அடுத்த இரு வாரங்களில் கூடி அடுத்த நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம்." என்றார்.

பெப்ருவரி 16-ம் தேதி ஐரோப்பிய ஒன்றிய நிதி மந்திரிகள் கிரேக்க மக்களை திறமையுடன் வாக்கு இழக்கச் செய்யும் வகையிலும் நாட்டின் வரவு-செலவு அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிசீலனைக்கு உட்படுத்துவதிலும் திறமையாக உடன்பட்டனர். ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி 2012-க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.7 சதவிகிதத்தில் இருந்து 3- க்குள்ளாக பொதுப் பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்னும் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் என்று வலியுறுத்தியபின்கூட இந்த நிலை வந்துள்ளது.

இந்த ஆண்டு பற்றாக்குறை 8.7 சதவிகித்திற்கு உறுதியாக குறைக்கப்படும் என்று பாப்பாண்ட்ரூ கூறியுள்ளார். செயல்படுத்தப்படும் குறைப்புக்கள் பொதுச் செலவுகளில் 2.5 பில்லியன் யூரோக் குறைப்பின் ஒரு பகுதியாகும். இதில் பொதுத்துறையில் ஊதியத் தேக்கம், பொதுத்துறை ஊழியர்களுக்கான போனஸில் உடனடி 20 சதவிகிதக் குறைப்பு மற்றும் சராசரி ஓய்வூதிய வயது இரு ஆண்டுகள் உயர்த்தப்படுதல் ஆகியவை அடங்கும்.

விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மற்றய நடவடிக்கைகளில் தற்பொழுது இருக்கும் 19 சதவிகித மதிப்புக்கூட்டு வரியில் உயர்வு, மற்றும் மதுபானம், புகையிலை மீதான வரிகளில் உயர்வு ஆகியவை அடங்கும். ஐரோப்பிய ஒன்றியமானது ஏதென்ஸ் பொதுத்துறை ஊழியர்கள் இப்பொழுது 12 மாதத்திற்கு இரு மாதங்கள் கூடுதலாக பெற்றுவரும் ஊதியத்தை 12 மாதம் என்று குறைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

வேலைநிறுத்தத்திற்கு முன்பு, நிதியச் சந்தைகள் PASOK அரசாங்கத்தின்மீது இன்னும் கடுமையான குறைப்புக்களை செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தன. Fitch அமைப்பு கொடுக்கும் தரங்கள் கிரேக்கத்தின் நான்கு பெரிய வங்கிகளின் கடன் மதிப்புக்களை குறைத்தன. இந்த நடவடிக்கை அரசாங்கத்திற்கு சர்வதேச வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து தாமதம் ஏற்படாமல் பணத்தைத் திருப்பிக் கொடுக்க கடன் வாங்குவதை அதிக சிரமத்திற்கு உட்படுத்தும்.

தலைநகரில் இரு எதிர்ப்பு அணிவகுப்புக்கள் நடந்தன. ஒன்று PAME எனப்படும் அனைத்துத் தொழிலாளர்களின் போராளி முன்னணி, ஸ்ராலினிச கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்தது, மற்றொன்று GSEE, ADEDY கூட்டமைப்புக்களும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களும்.

கிட்டத்தட்ட 40,000 தொழிலாளர்களும் இளைஞர்களும் ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர். பல தொழிலாளர்கள் கையால் செய்யப்பட்ட கோஷ அட்டைகளைக் கொண்டுவந்து, "நெருக்கடிக்கு பிரபுத்துவம் விலை கொடுக்க வேண்டும்", "நிரந்தர, உறுதியான வேலைகள் அனைவருக்கும் வேண்டும்" என்ற கோஷங்களையும் போட்டனர்.

"எல்லாப் பணமும் எங்கே போயிற்று?", "முதலாளித்துவத்திற்கு பில்லியன் கணக்கான யூரோக்கள், தொழிலாளர்களுக்கு ஒன்றும் இல்லையா--எழுச்சி பெறுங்கள்!", "எங்கள் நலன்களில் கைவைக்காதீர்கள்", "சந்தைகளையும் வங்கிகளையும்விட மக்கள் முக்கியம்", "அதிக தாக்குதல்கள் நடந்துவிட்டன, போதும்" போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.

எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர் கலகப் பொலிசாரால் சின்டக்மா சதுக்கத்தில் மிளகாய்ப் பொடி தூவல், கண்ணீர்ப்புகை ஆகியவற்றால் தாக்கப்பட்டனர். இது எதிர்ப்பாளர்கள் ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தில் நுழையாமல் தடுப்பதற்கு செய்யப்பட்டது என்று பொலிஸ் கூறியது. சில ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் மிருகத்தனமாகத் தடிகளால் அடித்ததுடன் பல கைதுகளையும் செய்தனர்.

இரண்டாவது மிகப் பெரிய நகரமான தெசலோனிகியில் கிட்டத்தட்ட 7,000 மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கூடினர் என்று பொலிஸ் கூறியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் மற்றய நகரங்களிலும், சிறுநகரங்களிலும் நடைபெற்றன.

ஆனால் எதிர்ப்புக்கள் நடந்துவரும்போதே, அரசாங்கம் அடுத்த வாரம் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அடுத்த வாரம் தெரிவிக்கவுள்ளதாக அறிவித்தது. செவ்வாயன்று ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் அதிகாரிகள் வருகை புரிந்ததை அடுத்து இந்த அறிவிப்பு உள்ளது. முன்னதாக IMF-ன் தலைமைப் பொருளாதார வல்லுனர் ஒலிவியே பிளான்சார்ட் கிரேக்கம் போன்ற அதிக கடன்கள் இருக்கும் நாடுகள் "மிக வேதனை தரும்" வரவு-செலவு இறுக்கக்காலத்தை எதிர்கொள்ள வேண்டும், இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நீடிக்கக்கூடும், "தியாகங்கள் செய்யப்பட வேண்டும்" என்று எச்சரித்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved