World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Thousands of Tamils still in detention camps

இலங்கை: ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னமும் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

By Subash Somachandran and Kamal Rasenthiran
19 February 2010

Back to screen version

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதலின் கடைசி நாட்களில் மோதல்களில் இருந்து தப்பி இடம்பெயர்ந்த பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள் வட இலங்கையில் இழி நிலையிலான தடுப்பு முகாங்களில் இன்னமும் உள்ளனர். வவுனியா நகருக்கு அருகில் உள்ள மெனிக் பார்ம் முகாமில் கிட்டத்தட்ட 80,000 பேர் இன்னமும் இருப்பதோடு, உத்தியோகபூர்வ எண்ணிக்கை 106,000 ஆக உள்ளது.

கடந்த மே மாதம் புலிகள் தோல்வியடைந்ததை அடுத்து, ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக 280,000 பேரை சுற்றி வளைத்த இராணுவம், முற் கம்பிகளாலும் ஆயுதம் தரித்த இராணுவத்தினராலும் சுற்றி வளைக்கப்பட்ட தடுப்பு நிலையங்களுக்குள் அவர்களை தள்ளியது. எவரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. பார்க்கச் சென்றவர்கள் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். பொலிஸ் மற்றும் இராணுவப் புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களும் "புலி சந்தேக நபர்களாக" இதர மூடிய முகாங்களுக்குள் அடைக்கப்பட்டனர்

கடந்த அக்டோபரில், ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய போது, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் முகாங்களில் கட்டுப்பாட்டைத் தளர்த்தியதோடு ஜனவரி 31ல் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள சகலரும் மீளக் குடியேற அனுமதிக்கப்படுவார்கள் என வாக்குறுதியளித்தது. டிசம்பர் 1 அன்று, திரும்பிச் செல்வதற்கு வீடுகள், அல்லது தங்குவதற்கு உறவினர்கள் இருந்த கைதிகள், பாதுகாப்புப் படையினரால் விசாரிக்கப்பட்ட பின், இறுதியாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

ஆயினும், பெரும்பாலான அகதிகளுக்கு செல்வதற்கு இடம் இல்லை. யுத்தத்தின் கடைசி மாதங்களில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிராந்தியம் பூராவும் முற்றுகை யுத்தத்தை ஈவிரக்கமின்றி முன்னெடுத்த இராணுவம், நகரங்களையும் கிராமங்களையும் நாசமாக்கியது. ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பபட்டனர். சமாளித்து தப்பிக்கொண்டவர்கள் மெனிக் பார்முக்கும் ஏனைய தடுப்பு முகாங்களுக்கும் மெலிந்துபோய், காயமடைந்து அல்லது சுகயீனமுற்று வந்து சேர்ந்தனர்.

மனிதாபிமான விவகாரங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஐ.நா. அலுவலகத்தின் (ஓ.சி.எச்.ஏ.) படி, 160,000 பேர் தங்களது சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பியுள்ளனர். எவ்வாறெனினும், இவை எச்சரிக்கையுடன் நோக்க வேண்டிய அரசாங்கத்தின் புள்ளி விபரங்களாகும். பெரும்பாலன மக்கள் தமது சொந்த நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் திரும்பிச் செல்லவில்லை. அவர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் சிறிய அல்லது வழங்கப்படாத உதவிகளில் பிழைத்துக்கொள்ள போராடுகின்றனர். உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின் படி, 29,060 பேர் "கூட்டுக் குடும்பமாக" அல்லது உறவினர்களுடன் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு வருமானம் கிடையாது மற்றும் அவர்கள் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளுக்கும் பொலிஸ் அனுமதி கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

முந்தைய யுத்தப் பிராந்தியத்தில் "கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கையால் "மீளக் குடியேற்றும் நடவடிக்கைகள் தாமதமாகின்றன" என்ற அதே நொண்டி சாக்கை மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷார்ட் பதூர்தீன் தெரிவித்துக்கொள்கின்றார். அவரது செயலாளர் யூ.எல்.எம். ஹலல்டீன், ஏப்பிரல் 8 நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்காக இன்னுமொரு போலி வாக்குறுதிக்கு சமமான ஒன்றை கூறுகிறார். "வரும் ஏப்பிரலில் பாராளுமன்ற தேர்தல் நடக்கும் போது அனைவரும் மீளக் குடியேற்றப்பட்டிருப்பார்கள்," என அவர் தெரிவித்தார்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் அண்மையில் மெனிக் பார்ம் "நலன்புரி முகாமுக்கு" சென்று கீழ்வரும் அறிக்கையை பதிவு செய்தார்கள்.

***

சில தமிழ் அகதிகளை "மீளக் குடியேற்றிய" பின்னர், வவுனியா தடுப்பு முகாமில் நிலைமை முன்னேற்றமடைந்துள்ளதாக கொழும்பு அரசாங்கம் கூறிக்கொள்கின்றது. நாம் வவுனியா மேற்கில் மன்னார் வீதியில் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மெனிக் பார்ம் முகாமுக்கு சென்றிருந்தோம். அங்குள்ள அகதிகளின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதோடு, ஜனாதிபதி இராஜபக்ஷவின் பொய்களை மேலும் அம்பலப்படுத்தியுள்ளது.

மெனிக் பார்ம் முகாம் அமைக்கப்பட்டுள்ள செட்டிக்குளத்துக்கு நாம் பயணித்துக்கொண்டிருந்த போது, பல இடிந்து போன அரசாங்க கட்டிடங்களை காணக் கூடியதாக இருந்தது. அவை "புலி சந்தேக நபர்களை" தடுத்து வைக்க இப்போது பயன்படுத்தப்படுகிறது. உயரமான சுவர்கள் மற்றும் முற்கம்பிகளால் சூழப்பட்டுள்ள அந்த சிறைகள் இராணுவத்தின் காவலில் உள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பிரதானமாக இளைஞர்களும் யுவதிகளுமாவர். அவர்கள் விசாரிக்கப்பட்டு "மீள் கல்வியூட்டுவதற்காக" இழுத்துச் செல்லப்பட்டவர்கள். இந்த முகாங்களுக்கு எவரும் அனுமதிக்கப்படுவதில்லை.

மெனிக் பார்மில் உள்ள மக்கள், கடந்த மே மாதம் அமைக்கப்பட்ட சிறிய கூடாரங்களில் இன்னமும் வாழ்கின்றனர். இந்த கூடாரங்கள் இப்போது இத்துப்போன நிலைமையில் உள்ளன. இப்போது மக்களால் முகாங்களுக்கு உள்ளும் வெளியிலும் நடமாட முடியும், ஆனாலும் அவர்கள் இன்னமும் இராணுவத்தின் காவலிலும் முற்கம்பிகள் சூழப்பட்ட நிலையிலும் உள்ளார்கள். போதுமான உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார வசதிகள் இன்றி எட்டு மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இந்த மக்களின் முகங்களில் கோபமும், சீற்றமும், சோர்வும் தெரிகின்றன.

புலி சந்தேக நபர்களாக இளைஞர்களை பிடிப்பது நிறுத்தப்படவில்லை. இராணுவப் புலனாய்வுத் துறையினர் இரவிலும் பகலிலும் மக்களை தூர இழுத்துச் செல்வதற்காக வருவதாக எங்களிடம் கூறப்பட்டது.

மக்களுக்கு நடமாடும் சுதந்திரத்தை கொடுத்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இது பொய். வெளியேற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டியிருப்பதோடு அவர்களது விடுதலைக்கு உத்தரவாதம் கிடையாது.

குறுகிய கால விடுதலைக்காக, முகாமில் உள்ள இராணுவ அலுவலகத்தில் விண்ணப்பம் ஒன்றை நிரப்பிக் கொடுக்க வேண்டும். அந்த விண்ணப்பப் படிவத்தில் கைச்சாத்திடுவதன் மூலம் ஒரு குடும்ப உறுப்பினர் பிணை நிற்க வேண்டும். "நடமாடும் சுதந்திரம் கொடுக்கப்பட்டவர்கள்" அன்றைய தினமே முகாமுக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் திரும்பத் தவறினால், பிணை நின்ற குடும்ப உறுப்பினர் கைது செய்யப்படுவார்.

உறவினர்களை பார்க்க வருபவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடமும் சிறை போன்றதே. முகாமின் நுழைவாயிலில் உறவினர்கள் பொலிசில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கமராக்கள் அல்லது செல் போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உறவினர்களை பார்க்க வருபவர்கள் ஒரு மீட்டருக்கும் மேலாக உறவினர்களை நெருங்க முடியாது. மற்றும் அவர்கள் சத்தமாகப் பேசிக்கொண்டால் மட்டுமே கேட்கும். பேசுவது என்னவென்பதை சிப்பாய்கள் கண்காணிப்பதோடு மட்டுப்படுத்தப்பட்ட நேரமே வழங்கப்படுகிறது.

உணவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கான நிவாரணப் பங்கீடானது அரிசி, மா மற்றும் சீனி ஆகியவற்றில் ஒவ்வொரு கிலோவும் 100 கிராம் தானியம் அல்லது பருப்புமாகும். மக்களிடம் வேறு அத்தியாவசியப் பொருட்களை வாங்க பணம் கிடையாது. அவர்கள் மீன், இறைச்சி, முட்டை அல்லது மரக்கறி உண்பதில்லை. இந்த நிவாரண பங்கீடு போதாது என்பது தெளிவு. மற்றும் சிறுவர்களும் முதியவர்களும் போசாக்கின்மையால் வாடுகின்றனர்.

தண்ணீர் அரிதானதாக இருக்கின்றது. தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரும் ஒரு வாரத்துக்கு ஐந்து லீட்டர் குடி தண்ணீரையே பெறுகின்றனர். குளிப்பதற்கும் கழுவுவதற்கும் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், தண்ணீர் உப்புத் தண்மை கொண்டதாக உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையை குறைப்பதற்காக, முகாமுக்குப் பொறுப்பாக உள்ள இராணுவ நிர்வாகம் அருகில் உள்ள தண்ணீர் அணையில் இருந்து சேறு கலந்த தண்ணீரை கொண்டுவந்து தருகிறது. எவ்வாறெனினும் மக்கள் அந்த தண்ணீரை பயன்படுத்த மறுக்கின்றனர்.

டசின்கணக்கானவர்கள் அனுமதி பெற்ற பின்னர் முகாமுக்கு வெளியிலும் உள்ளும் செல்வதை நாம் கண்டோம். இவர்களில் பலர் தமது எஞ்சியுள்ள உடமைகளையும் மற்றும் நிவாரணப் பொருட்களைக் கூட விற்று ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வெளியில் செல்கின்றனர். அரசாங்கம் இந்த அப்பாவி மக்களை முழுமையாக அநாதைகளாக்கியுள்ளது.

முகாமில் சுகாதார சேவை சீரழிந்து போயுள்ளது. கடந்த மாதம் பொறுப்பை மாகாண சபை அரசாங்கத்திற்கு கைமாற்றிய கொழும்பு அரசாங்கம் சுகாதார சேவையை வழங்குவதில் இருந்து கைகழுவிக் கொண்டது. ஆயினும், மாகாண சுகாதார சேவைகளில் நிதிப் பற்றாக்குறை நிலவுவதோடு சிதைந்துகொண்டிருக்கின்றது. முகாமுக்கு வரும் வைத்தியர்கள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களே பார்வையிடுகின்றனர்.

ஆயிரக்கணக்கான இளம் பிள்ளைகள் கல்வி இழந்துள்ளனர். சுமார் 2,500 பாடசாலை மாணவர்கள் வவுனியாவில் உள்ள பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு வசதிகளோ ஆசிரியர்களோ கிடையாது. மாணவர்கள் பாடசாலை முடிவடையும் வரை மரங்களின் கீழ் அமர்ந்திருந்துவிட்டு முகாங்களுக்குத் திரும்புகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த முகாங்களில் ஒன்றுக்கு விஜயம் செய்த இராஜபக்ஷ, அங்குள்ளவர்கள் முகங்கொடுக்கும் நிலைமைகள் பற்றி ஆத்திரமடைந்தவராக பாசாங்கு செய்தார். மீள் குடியேற்ற நடவடிக்கையை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதியளித்தார். அகதிகளுக்கு "வசதிகளை" செய்து கொடுக்குமாறு இராணுவச் சிப்பாய்களுக்கு இராஜபக்ஷ "ஆலோசனை" வழங்கும் காட்சிகளை அரசுக்குச் சொந்தமான தொலைக் காட்சிகள் ஒளிபரப்பின. அவை அனைத்தும் வெறும் காட்சிக்காகவே. அதன் பின்னர் எதுவுமே நடக்கவில்லை.அகதிகள் மத்தியில் எந்தளவு சீற்றம் காணப்பட்டதெனில், இராஜபக்ஷவுக்கு அல்லது எதிர்க் கட்சி வேட்பாளரும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஈவிரக்கமின்றி முன்னெடுத்த ஜெனரலுமான சரத் பொன்சேகாவுக்கும் ஒரு சிலரே வாக்களிக்க விரும்பியிருந்தனர். மேல் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தெளிவுபடுத்துவது போல், முகாங்களுக்கு உள்ளேயான நிலைமைகள், தங்களைப் பார்வையிட வருபவர்களுடன் கூட வெளிப்படையாக பேசுவதற்குக் கூட சிரமமானதாக உள்ளது. ஆனால், ஒரு சில உணர்வலைகளை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. ஒருவர் தெரிவித்ததாவது:

"தமது வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த விரும்பியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சிலர் காலையிலேயே சென்று வாக்களிக்க முடிந்தது. ஆனால், மதிய நேரத்தின் பின்னர், அகதிகள் பொன்சேகாவுக்கு வாக்களிக்கக் கூடும் என்ற காரணத்தால் அவர்களை வெளியில் செல்ல இராணுவமும் பொலிசும் அனுமதிக்கவில்லை.

"எங்களுக்கு எதிராக அரசாங்கம் இழைத்த குற்றங்களால் பலர் அதை அகற்ற விரும்புகின்றனர். ஆனால், அவர்களில் யாருக்கும் ஒருவர் ஏன் வாக்களிக்க வேண்டும்? எங்கள் மீது குண்டு மழை பொழிய இராணுவத்துக்கு கட்டளையிட்ட போது இராஜபக்ஷவும் பொன்சேகாவும் ஒன்றாகவே கூடி இருந்தனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved