Sri Lankan SEP press conference condemns government's
anti-democratic measures
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, எதிர்க் கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத்
பொன்சேகா கைது செய்யப்பட்டமை உட்பட, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம்
முன்னெடுத்துக்கொண்டிருக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டனம் செய்வதற்காக கொழும்பில்
வியாழக்கிழமை ஊடகவியலாளர்கள் மாநாடு ஒன்றை நடத்தியது.
இராஜபக்ஷ அரசாங்கம் கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார
நெருக்கடியை எதிர்கொள்கின்றது என பீரிஸ் தெரிவித்தார். அது அரசியல் எதிரிகள் மற்றும் ஊடக அமைப்புக்கள்
மீது பாய்வதோடு வேலைத் தளங்களில் தெழிற்சங்க செயற்பாட்டாளர்களை தாக்குவதும், எந்தவொரு
விமர்சனத்தையும் மெளனமாக்குவதற்கு அது உறுதிபூண்டுள்ளதையே வெளிக்காட்டுகிறது.
"இராஜபக்ஷவின் பிரதான போட்டியாளரான சரத் பொன்சேகா கைது
செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையானது மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களில்
பிரதானமானதாகும். இராஜபக்ஷ அரசாங்கம் பொலிஸ் அரசை ஸ்தாபிப்பதை நோக்கி துரிதமாக நகர்வதையே
அது காட்டுகிறது. பொன்சாகவுடன் சோசலிச சமத்துவக் கட்சி அரசியல் ரீதியில் உடன்படாத போதிலும்,
இராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த ஜனநாயகமற்ற நடவடிக்கையை நிபந்தனையின்றி கண்டனம் செய்வதுடன் அவர்
உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என கோருகிறது," என அவர் கூறினார்.
இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் பொன்சேகாவை ஆதரித்த எதிர்க் கட்சிகளுக்கும்
இடையில் அடிப்படை வேறுபாடுகள் கிடையாது என பீரிஸ் விளக்கினார். எவ்வாறெனினும், பொருளாதார
நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிப்பது எப்படி மற்றும் அவர்களது எழுச்சிபெறும்
போராட்டங்களை நசுக்குவது எப்படி என்பது பற்றிய முக்கியமான தந்திரோபாய வேறுபாடுகளே
அவர்களுக்கிடையில் உள்ளன. எனவே இந்த ஜனநாயக-விரோத தாக்குதல்களின் உண்மையான இலக்கு, இந்த
நாட்டின் தொழிலாளர்களே அன்றி, பொன்சேகா அல்ல.
"இதுவரை கடந்த நான்கு ஆண்டுகளாக 14 ஊடகவியலாளர்களும் ஊடக
சேவையாளர்களும் கொல்லப்பட்டுள்ளதோடு சிரச டி.வி, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.)
ஆசிரியர் பல வாரங்கள் தடுத்து வைத்திருந்த பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஒரு
செய்தி நிருபர் காணாமல் போயுள்ளார். இப்போது இந்தத் தாக்குதல்களின் பாகமாக அரசாங்கம் இணையத்
தளங்களை கட்டுப்படுத்த திட்டமிடுகின்றது," என அவர் தெரிவித்தார்.
"இராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் பொன்சேகா
பிரதிநிதித்துவம் செய்யும் எதிர்த் தரப்பு முகாமும், முதலாளித்துவ வர்க்கத்தினதும் பெரும் வர்த்தகர்களதும்
நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே விதமான பொருளாதார கொள்கையையே கொண்டுள்ளனர்.
இராஜபக்ஷ, பொன்சேகா ஆகிய இருவரும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை
முன்னெடுத்ததோடு பாதுகாப்பு படைகள் இழைத்த யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்பாளிகளாவர். கடந்த மே
மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர் கிட்டத்தட்ட 300,000 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு இன்னமும்
சுமார் 100,000 மக்கள் அந்த முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்."
"1948ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, பிரதான கட்சிகள் தமிழர்-விரோத
இனவாத கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவர்கள் 1948ல் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின்
பிரஜா உரிமையை பறித்தனர். 1956ல் சிங்களத்தை அரசகரும மொழியாக பிரகடனம் செய்தனர். 1972
அரசியலமைப்பில் பெளத்தத்தை அரச மதமாக ஸ்தாபித்தனர். எப்போதும் தொழிலாள வர்க்கத்தை
பிளவுபடுத்துவதையே இலக்காகக் கொண்ட இந்த இனவாத கொள்கை 1983ல் கொடுரமான யுத்தமாக
வெடித்தது. கடந்த 26 ஆண்டுகளாக அது தமிழ் சிறுபான்மையினரை நசுக்குவதற்காக முன்னெடுக்கப்பட்டது," என
அவர் கூறினார்.
பிரதான எதிர்க் கட்சிகளான வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி. யும்
யுத்தத்தையும் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதையும் ஆதரித்தன. அதே சமயம், நவசமசமாஜக்
கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி ஆகிய முன்னாள் இடது கட்சிகள், பெரும் வல்லரசுகளின் அனுசரணையில் நடந்த
சமாதானப் பேச்சுக்கள் என சொல்லப்பட்டவற்றின் பின்னால் அணிதிரண்டன.
"சோசலிச அனைத்துலகவாதத்தின் அடிப்படையில் யுத்தத்தை எதிர்த்த ஒரே கட்சி
சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. யுத்தத்துக்கு முடிவுகட்டுமாறும் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை
துருப்புக்களை நிபந்தனையின்றி திருப்பியழைக்குமாறும் கட்சி கோரிக்கை விடுத்தது. அது தமிழர்களதும் உழைக்கும்
மக்களதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும் சிங்கள மற்றும் தமிழ் பேசும் தொழிலாளர்களை
ஐக்கியப்படுத்துவதற்குமான எமது போராட்டத்தின் பாகமாகும். அவ்வாறு செய்த அதே வேளை, சாதாரண தமிழ்
மக்களின் நலன்களை அன்றி தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநித்துவம் செய்யும் புலிகளில் இருந்து
எங்களை வேறுபடுத்திக்கொள்கிறோம்.
யுத்தம் முடிந்தவுடன் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவருவதாக
இராஜபக்ஷ உறுதியளித்த போதிலும், ஆழமடைந்துவரும் இனவாத பதட்ட நிலைமைகளையும் வாழ்க்கைத் தரம்
சீரழிந்து வருவதையும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையுமே மக்கள் அனுபவிக்கின்றனர், என
பீரிஸ் சுட்டிக் காட்டினர். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சோசலிச சமத்துவக் கட்சி விடுத்த எச்சரிக்கைகள்
முழுமையாக ஒப்புவிக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
தீவின் மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டிய அவர்
தெரிவித்ததாவது: "அரசாங்க கடன் 4 ரில்லியன் ரூபாய்களை எட்டியுள்ளது. இது மொத்த தேசிய உற்பத்தியில்
90 வீதமாகும். கடந்த ஆண்டு கூர்மையான அந்நிய செலாவணி நெருக்கடியை இராஜபக்ஷ எதிர்கொண்ட போது,
அவர் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றார்.
இப்போது சர்வதேச நாணய நிதியம், அரசாங்கம் மொத்த தேசிய உற்பத்தியில் 11 வீதமாக உள்ள வரவு
செலவுப் பற்றாக்குறையை 2011ல் 5 வீதமாகக் குறைக்க வேண்டும் என கோருகின்றது. அதாவது, சமூக
சேவைகளையும் மானியங்களையும் வெட்டித் தள்ளுவதும் தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய வரிகளை
திணிப்பதுமாகும்.
இலங்கை விதிவிலக்கானது அல்ல. உலகம் பூராவும் உள்ள நாடுகள், உழைக்கும்
மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மிகப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அதே
சமயம், பூகோள பொருளாதார நெருக்கடியானது பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான உக்கிரமடைந்துவரும்
பகைமைக்கு எண்ணெய் வார்ப்பதோடு இலங்கை போன்ற நாடுகளையும் அதற்குள் இழுத்துத் தள்ளி, மோதல்கள்
மற்றும் யுத்த ஆபத்துக்களை அதிகரிக்கின்றது.
தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களைப் பற்றி எச்சரிக்கவும் மற்றும்
அவர்களது சுயாதீன வர்க்க நலன்களுக்குப் போராடுவதற்காக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி அணிதிரட்டவும்,
ஏப்பிரலில் நடக்கவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், யாழ்ப்பாணம், நுவரெலியா, கொழும்பு மற்றும்
காலி மாவட்டங்களில் போட்டியிட சோசலிச சமத்துவக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக இலங்கையில்
தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கமொன்றுக்கான சோசலிச வேலைத் திட்டத்துக்காக கட்சியின் வேட்பாளர்கள்
போராடுவார்கள் என பீரிஸ் கூறினார். எதிர்காலத்தில் முழு தேர்தல் அறிவித்தல் ஒன்று வெளியிடப்படும் என்றும்
அவர் தெரிவித்தார்.
ஹிரு எஃப் எம் மற்றும் அதன் தமிழ் வானொலியான சூரியன் எஃப் எம், சோசலிச
சமத்துவக் கட்சி ஊடகவியலாளர் மாநாட்டை வியாழக்கிழமை மாலை செய்தியில் வெளியிட்டதோடு மறுநாள்
வீரகேசரி மற்றும் ஐலன்ட் பத்திரிகையும் செய்தியை வெளியிட்டிருந்தன. மாநாட்டுக்கு வருகை தர முடியாமல்
போன பல ஊடக நிறுவனங்கள் சோசலிச சமத்துவக் கட்சியுடன் தொடர்புகொண்டு கட்சியின் அறிக்கையின்
பிரதிகளை தருமாறு கேட்டுக்கொண்டன.