World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Obama ignores China's warnings and meets Dalai Lama

சீனாவின் எச்சரிக்கைகளை புறக்கணித்து ஒபாமா தலாய் லாமாவைச் சந்திக்கிறார்

By John Chan
22 February 2010

Back to screen version

கடந்த வியாழனன்று திபெத்தின் நாடுகடத்தப்பட்ட தலாய் லாமாவுடனான சந்திப்பு அமெரிக்க சீன உறவுகளை மேலும் சேதப்படுத்தும் என்று சீனா பலமுறை எச்சரித்தும்கூட, அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அவரைச் சந்தித்தார். இப்பிரச்சினை பற்றி பெய்ஜிங் மற்றும் வாஷங்டன் இரண்டும் சமரச முயற்சிகளைக் காட்டிய போதிலும், இரு முக்கிய சக்திகளுக்கும் இடையே அழுத்தங்கள் ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து தீவிரமாகி உள்ளன.

கடந்த ஆண்டு அமெரிக்கா பூகோள நிதிய நெருக்கடியுடன் போராடிவந்தபோது, ஒபாமா குறிப்பிடத்தக்க வகையில் தலாய் லாமாவை சந்திக்க மறுத்துவிட்டார். அமெரிக்க bonds மற்றும் பிற securities களை சீனா பெருமளவு வாங்கியிருப்பதை தக்க வைத்துக் கொள்வதில் வாஷிங்டன் தீவிரமாக இருந்தது. அவைதான் வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பு மற்றும் பெருகிய கடன்களை முட்டுக்கொடுக்க உதவியாக இருந்தன. இந்த ஆண்டு ஒபாமா தலாய் லாமாவைச் சந்தித்துள்ளதுடன், தைவானுக்கு 6.4 பில்லியன் டாலர் ஆயுதத் தொகுதியை விற்கவும் ஒப்புதல் கொடுத்துள்ளதுடன், வணிகப் பிரச்சினைகளில் கடுமையான நிலைப்பாட்டையும் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் வணிக ரீதியான அபராதங்களை எதிர்கொள்ளும் விதத்தில் பெய்ஜிங், அமெரிக்க கோழிக்குஞ்சு இறக்குமதிகளில் காப்புவரிகளை சுமத்தி, தைவானுக்கு ஆயுதங்கள் விற்றதற்காக பெரிய அமெரிக்க நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் என்ற அச்சுறுத்தலையும் கொடுத்துள்ளது. ஆனால், தலாய் லாமா பயணத்தின்போது உறவுகள் இன்னும் சீர்குலைதலை தடுக்கும் விதத்தில் சீனா அமெரிக்க விமானத் தளத்தைக் கொண்ட USS Nimitz இன்னும் நான்கு போர்க் கப்பல்களை கடந்த வாரம் ஹாங்காங்கில் நிறுத்துவதற்கு அனுமதித்தது. நவம்பர் 2007-ல் ஜனாதிபதி புஷ் தலாய் லாமாவுடன் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பெய்ஜிங் USS Kitty Hawk-கிற்கு அனுமதியை மறுத்தது.

இப்பேச்சுக்களின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தாத விதத்தில் ஒபாமா நடந்து கொள்ள முற்பட்டார். இது ஒரு "தனி" நிகழ்ச்சி என்று விவரித்தார். ஜனாதிபதி தலாய் லாமாவுடன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இல்லாமல் Map Room-ல் சந்தித்தார். 2007-ம் ஆண்டு திபெத்திய சின்னமான அவருக்கு காங்கிரசின் தங்கப் பதக்கத்தைக் கொடுத்த புஷ்ஷின் பெரும் ஆத்திரமூட்டுதல் நடவடிக்கையுடன் ஒப்பிடும்போது, ஒபாமா நிதானத்துடன் செயல்பட்டார். ஆயினும் கூட அவர் பேச்சுவார்த்தைகள் இல்லை என்று கூறிவிடவில்லை. இது இரு நாடுகளுக்கு இடையே உள்ள அழுத்தத்தை அதிகரிக்கும்.

பேச்சுக்களுக்கு பின்னர் ஒரு கூட்டு அறிக்கையில் ஒபாமா திபெத்தில் சமய, பண்பாட்டு மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க தன் "வலுவான ஆதரவு" உண்டு என்பதைச் சுட்டிக்காட்டினார். இது அப்பகுதியில் பெய்ஜிங்கின் அடக்குமுறை ஆட்சி பற்றிய மறைமுகமான குறைகூறல் ஆகும். அதே நேரத்தில், அமெரிக்க-சீன உறவில் "நேரிய மற்றும் ஒத்துழைப்புத்தன்மையின்" முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்த அறிக்கை இரு நாடுகளுக்கும் இடையே உள்ள சிக்கல் வாய்ந்த உறவைப் பிரதிபலிக்கிறது. ஒருபுறத்தில், வாஷிங்டன் பெய்ஜிங்குடன் ஈரானுக்கு எதிரான ஐ.நா.பொருளாதாரத் தடைகள், கோபன்ஹேகன் காலநிலை உச்சி மாநாட்டில் அமெரிக்கத் திட்டம் உட்பட பல உலகப் பிரச்சினைகள் பற்றி அமெரிக்காவின் கோரிக்கைகளை சீன மறுத்தது பற்றி கடின நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. ஒபாமா பொருளாதார "சமச்சீரற்ற" தன்மைகளையும் குறிப்பாக வணிகத்தில் குறைக்கும் உறுதியைக் கொண்டுள்ளார். சீனா, டொலருக்கு எதிராகத் தன் நாணயமான யுவானின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

மறுபுறத்தில் பெய்ஜிங் மற்றும் வாஷிங்டன் இரண்டும் பொருளாதார உறவுகளில் எழுச்சி பெறும் அரசியல் அழுத்தங்களின் பாதிப்பு பற்றி கவலைப்படுகின்றன. சீனா தன் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கச் சந்தைகளை அதிகம் நம்பியுள்ளது. அமெரிக்கா, சீனா தன் வணிக உபரிகளை அமெரிக்க bonds-களை மீண்டும் வாங்க வேண்டும் என்ற நிலையில் உள்ளது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் வாஷிங்டனானது அமெரிக்க நிதி அமைச்சரகத்தின் புள்ளிவிவரங்கள் காட்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீனா அமெரிக்க bonds-களை 43.5 பில்லியன் டாலர் குறைத்துள்ளது பற்றி கவலை கொண்டுள்ளது.

தலாய் லாமா வருகையைப் பொறுத்தவரையில், திபெத்தியர்களுக்காக ஒருவிதத்தில் அவர் சுதந்திரத்திற்காக போராடுபவர் என்று அமெரிக்க அரசியல் மற்றும் செய்தி ஊடக ஸ்தாபனங்களை விமர்சிக்காத வகையில் உயர்த்திப் பேசுவது முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும். மனித உரிமைகள் பற்றிய வாஷிங்டன் நிலைப்பாடு எப்பொழுதும் அதன் மூலோபாய, பொருளாதார நலன்களினால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் பெய்ஜிங் மீது பல பிரச்சினைகள் பற்றி அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு வழிவகையாக கொள்ளப்படுகிறது. அமெரிக்க பெருநிறுவனங்கள் Wal-Mart முதல் GM வரை சீனாவின் நூற்றுக்கணக்கான மில்லியன் கொண்ட தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பற்றி, குறைவூதிய தொழிலாளர் தொகுப்பின் அளிப்பை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பொலிஸ் அரசாங்கத்தை நம்பியிருப்பது பற்றி ஒபாமா மெளனமாக உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிகள் தலாய் லாமாவை சந்திப்பது எப்பொழுதுமே பெய்ஜிங்கிற்கு உள்ளார்ந்த ரீதியாக அச்சுறுத்தலை கொடுக்கும். திபெத்தியர்களிடையேயும் மற்றய தேசிய சிறுபான்மையினரிடத்தும், பிரிவினை உணர்விற்கு ஊக்கம் தரும். அவை பெய்ஜிங்கின் சந்தை சார்பு சீர்திருத்தங்களை ஒட்டி பாகுபாட்டைக் கண்டிருப்பதுடன் பெருகிய சமூக சமத்துவமின்மையும் கொண்டிருக்கின்றன. தலாய் லாமாவின் செயலாளர் Chhime Chhoekyapa நிருபர்களிடம் திபெத்தியர்கள் "ஒரு உலக பெரும் சக்தியான அமெரிக்காவின் ஜனாதிபதி, பெரும் துறவியாரைச் சந்திப்பது பற்றி ஊக்கம் பெறுவர்" என்றார். நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் திபெத்திய கொடிகளுடன் வெள்கை மாளிகைக்கு முன்னே பேச்சுக்களின் போது குழுமியிருந்தனர்.

தன்னுடைய பங்கிற்கு பெய்ஜிங் மார்ச் 2008 போல் திபெத்தில் பரந்த எதிர்ப்புக்கள் மீண்டும் வந்துவிடக்கூடாது என்று அச்சம் கொண்டுள்ளது. அவை மிருகத்தனமாக சீன துணை இராணுவப் பொலிசாரால் அடக்கப்பட்டன. ஜனாதிபதி ஹு ஜின்டாவோ மற்றும் பிரதமர் வென் ஜியாபாவோ இருவரும் ஜனவரி மாதம் 2001-ல் இருந்து முதல் தடவையாக ஒரு திபெத் நடைமுறை மாநாடு ஒன்றை திபெத்தில் "இனரீதியான ஐக்கியத்தை" வளர்க்க விவாதித்தனர். இதற்கு 60 பில்லியன் டாலர் பொருளாதாரத் திட்டம் மற்றும் கிராமப்புற திபெத்தியர்களின் தேசிய சராசரி வருமானத்தை 170 சதவிகிதம் 2020-க்குள் உயர்த்தவும் வகை செய்யப்பட்டது. உள்ளூர்ப் பொருளாதாரம் ஏற்கனவே 2001-ல் இருந்து 170 சதவிகிதம் வளர்ந்துவிட்டது. ஆனால் திபெத், ஹான் என்று எவராயினும் உழைக்கும் மக்களுக்கு அதிக நலன்களைக் கொடுக்கவில்லை. ஹான் சீன வணிகர்களும் உள்ளூர் திபெத்திய உயரடுக்கினரும் தான் ஆதாயமுற்றனர்.

திபெத்தில் சமூக அமைதியின்மை வரக்கூடிய பெய்ஜிங்கின் பூகோள மற்றும் பிராந்தியப் போட்டிகள் அதன் முக்கிய எல்லைப் பகுதிகளில் இருப்பது பற்றிய கவலைகளை அதிகரித்துள்ளது. திபெத்திய இந்திய மற்றும் நேபாள எல்லையில், பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு அருகே உள்ளது. ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் அதன் நவ காலனித்துவப் போரை விரிவாக்கிக் கொண்டுள்ளது. பாக்கிஸ்தானிய அரசாங்கத்தையும் எல்லைப் பகுதியில் இருக்கும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அழுத்தம் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் வாஷிங்டன் ஆசியாவில் சீனாவின் முக்கிய போட்டி நாடான இந்தியாவுடன் அதன் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.

சீனாவும் இந்தியாவும் 1962-ல் ஒரு எல்லைப் போரை நடத்தின. சமீப மாதங்களில் இந்த மோதலுக்கு உரிய எல்லைகள் நெடுகிலும் அழுத்தங்கள் பெருகியுள்ளன. நேபாளத்தில் சீனச் செல்வாக்கானது, இந்தியா தன்னுடைய செல்வாக்கு மண்டலம் என்று நினைத்துள்ள இடத்தில் பெருகி வருகிறது. நேபாளத்தின் உள்நாட்டு மந்திரி பெய்ஜிங்கிற்கு இம்மாதத் தொடக்கத்தில் பயணித்து நாட்டில் உள்ள திபெத்தியர்களின் "சீன-எதிர்ப்பு"க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை விவாதித்தார் நேபாளத்துடன் சீனாவுடைய வணிகம் 2003-ல் இருந்து நான்கு மடங்காகிவிட்டது. நியூயோர்க் டைம்ஸ் நேபாளத்தின் அதிகாரிகள் சீனாவை திபெத்திய இரயில் பாதையை நேபாள எல்லை வரை விரிவாக்க வேண்டும் என்று கோரியதாக தெரிவித்துள்ளது.

வாஷிங்டனின் நெருக்கமான உறவுகள் இந்தியாவை தன்னுடைய நலன்களை ஆக்கிரோஷமாக உறுதிப்படுத்த ஊக்கம் கொடுத்துள்ளன. கடந்த வாரம் இந்தியா, சீனாவின் எல்லைப் பகுதியில் வடகிழக்கில் 30,000 மலைப் பிரிவுத் துருப்புக்களை கூடுதலாக இரண்டை நிலைநிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது மோதலுக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு அருகே ஆகும். சீனாவில் இது தென் திபெத் என்று அறியப்படுகிறது. கடந்த ஆண்டு சீனா, ஆசிய வளர்ச்சி வங்கித் திட்டங்களை அருணாச்சல பிரதேசத்தில் செய்து கொள்வதற்கு தடுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அப்பகுதி மீது இந்தியாவின் உரிமையை எதிர்ப்பதை நிரூபணம் செய்தது.

தலாய் லாமா முறையாக சமீபத்திய ஆண்டுகளில் சுதந்திர திபெத்திற்கான அழைப்புக்களை கைவிட்டாலும், இன்னும் கூடுதலான பிராந்திய தன்னாட்சிக்கு தொடர்ந்து குரல் கொடுக்கிறார். மேலும் பெய்ஜிங்கிக்கு CIA உடன் தலாய் லாமா திபெத்தில் பனிப்போர்க் காலத்தில் 1950-களில் அமைதியின்மையை தூண்டுவதில் கொண்டிருந்த பங்கு பற்றி நன்கு தெரியும். மேலும் பெய்ஜிங், வாஷிங்டன் தீவிர திபெத்திய பிரிவினைவாதத்திற்கு மீண்டும் ஊக்கம் கொடுக்கலாம் என்ற கவலையையும் கொண்டுள்ளது. இதன் விளைவாக சீனாவும் அமெரிக்காவும் வெள்ளை மாளிகையில் சமீபத்தில் நடந்த பேச்சுக்களைப் பற்றி அதிகம் விவாதிக்கவில்லை. அவ்வாறு செய்தால் அது இரு நாடுகளுக்கும் இடையே சந்தேகத்தையும், பிளவையும்தான் அதிகரிக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved