World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா Greece: Strikes continue as EU demands more severe austerity measures கிரேக்கம்: ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் மேலும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைக் கோருகையில் வேலைநிறுத்தங்கள் தொடர்கின்றன By Julie Hyland கிரேக்கத்தில் பொது மற்றும் தனியார் துறைகள் இரண்டிலும் பெப்ருவரி 24 திட்டமிடப்பட்டுள்ள பொது வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக பல வேலநிறுத்தங்கள் நடைபெறவுள்ளன. செவ்வாயன்று நிதி அமைச்சரகம் மற்றும் சுங்க அலுவலகங்களின் தொழிலாளர்கள், கடும் சிக்கன நடவடிக்கைகளை சமூக ஜனநாயக PASOK அரசாங்கம் சுமத்துவதற்கு எதிராக பல நாட்கள் வேலைநிறுத்த நடவடிக்கைகளை தொடங்கினார்கள். புதனன்று, "போதும்! நெருக்கடியானது அரசாங்க ஊழியர்களால் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கான செலவு செல்வந்தர்களால் கொடுக்கப்பட வேண்டும்" என்ற கோஷங்கள் எழுதப்பட்ட அட்டைகளை சுமந்த வண்ணம் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான நிதி அமைச்சரக மற்றும் சுங்கத் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நிகழ்த்தினார்கள். வேலை நிறுத்தமானது தேசிய புள்ளிவிவர அலுவலகம், சந்தைக் கண்காணிப்பு, ஹெலெனிம் மூலதனச் சந்தைகள் குழு போன்றவற்றின் அரசாங்க நடவடிக்கைகளை பாதித்ததுடன், வணிகத்தில் பரந்தளவு இடையூறுகளை இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பிரிவுகளில் ஏற்படுத்தியது. வியாழனன்று சுங்கத்துறை தொழிலாளர்கள் தங்கள் நடவடிக்கையை இன்னும் 48 மணி நேர சுழற்சி வேலைநிறுத்தங்களுக்கு விரிவுபடுத்த இருப்பதாகவும் புதன்கிழமை பொது வேலைநிறுத்தம் வரை சுங்க அலுவலகங்களை மூடிவிடப்போவதாகவும் அறிவித்தனர். பெட்ரோல் எடுத்துச் செல்லும் லொறி டிரைவர்கள் இன்று ஒரு 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதையொட்டி பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றய பொதுத்துறை பணி டிரக் டிரைவர்களும் வேலைநிறுத்தத்தில் சேர இருப்பதாக அச்சுறுத்தியுள்ளனர். டாக்சி டிரைவர்களும் ஒரு இரண்டாவது 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் அரசாங்க ஊழியர்கள் நடாத்திய 24 மணி நேர வேலைநிறுத்தமானது பள்ளிகளை மூடியதுடன் மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. கிரேக்கத் தொழிற்சங்கங்கள் பகுதியான வேலை நிறுத்தங்கள் மற்றும் ஒரு நாள் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்குக் காரணம் மக்கள் எதிர்ப்பைக் குறைத்து கட்டுப்படுத்திவிடுவது என்பதாகும். திரைக்குப் பின்னால் அவர்கள் PASOK அரசாங்கத்துடன் முன்னோடியில்லாத கடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த அவகாசம் பெறுகின்றனர். ஆனால் கிரேக்க, ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பானது தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவற்றுடன் பிணைந்துள்ள "இடது" கட்சிகளின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும் என்ற அச்சம் உள்ளது. அக்டோபர் மாதம் கோஸ்டஸ் கரமனலிஸ்ஸின் பழைமைவாத அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்ட பரந்தளவு அதிருப்தியை ஒட்டி அதிகாரத்திற்கு வந்த PASOK கட்சி மிகப் பரந்த பொதுநலச் செலவுக் குறைப்புக்களை செயல்படுத்துகிறது. இதற்குக் காரணம் 2012-க்குள் நாட்டின் தற்போதைய 12.7 சதவிகிதப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகித பற்றாக்குறையாக குறைத்துவிடும் என்று சர்வதேச நிதியச் சந்தைகளுக்கு அது கொடுக்கும் உத்தரவாதம்தான். பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ தன்னுடை அரசாங்கம் தேவையானால் "வலிமையைப் பயன்படுத்தும்" என்று கூறியுள்ளார். பொதுத்துறையில் ஊதிய முடக்கம் உட்பட தற்பொழுது செயல்படுத்தப்படும் பல நடவடிக்கைகள் அதாவது அரசாங்க ஊழியர்களுக்கு போனஸ்களில் 20 சதவிகித வெட்டுக்கள், சராசரி ஓய்வூதிய வயதை இரு ஆண்டுகள் அதிகரித்தல் மற்றும் அதிக வரிகள் ஆகியவை அடங்கியுள்ளன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கருத்துப்படி, பல கிரேக்க அரசாங்க ஊழியர்களை பற்றிய அரசின் நடவடிக்கைகளின் மொத்த பாதிப்பானது "ஊதியத்தின் உண்மை மதிப்பில் 25 சதவிகிதக் குறைப்பு என்று இருக்கும்". ஆனால் இது கூட முக்கிய சர்வதேச நிதிய அமைப்புக்களால் போதுமான அளவு கடினமானது இல்லை என்று கருதப்படுகிறது. முன்னதாக இந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி மந்திரிகள் PASOK-யின் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்று நிராகரித்து, ஏதென்ஸ் கடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் தோல்வியுற்றால், ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் தேர்ந்தெடுக்கப்படாத பிரதிநிதிகள் நாட்டின் நிதியக் கொள்கைகளை தங்கள் கரங்களில் ஐரோப்பிய ஒன்றிய லிஸ்பன் உடன்பாட்டின் 129.6 விதியின்படி எடுத்துக் கொண்டு தங்கள் ஆணைகளை சுமத்துவர் என்று அறிவிப்பு கொடுத்தனர். தங்கள் அறிக்கையில் நிதி மந்திரிகள் "கிரேக்கத்திற்கு அதன் பொருளாதார கொள்கைகளை ஒன்றியத்தின் பரந்த பொருளாதார கொள்கை வழிகாட்டி நெறிகளுக்கு ஏற்ப கொண்டுவரவேண்டும் என்ற பரிந்துரை கொடுத்துள்ளதுடன், முறையான பொருளாதார மற்றும் ஒன்றியத்தின் நாணயச் செயல்பாடு நடப்பதற்கு தடைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த பரிந்துரையை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும்" கூறியுள்ளனர். "ஏதென்ஸ் 2010-ல், வரவு-செலவு அறிக்கையில் குறைந்தது 4 சதவிகிதத்திற்கு சரிசெய்தல் வேண்டும். அதன் பற்றாக்குறையை 2012-ல் இறுதிப் பட்சமாக 3 சதவிகித்திற்குள் கொண்டுவர வேண்டும் என்றும்" அறிக்கை வலியுறுத்தியுள்ளது. இதற்கு "ஒரு தைரியமான, விரிவான கட்டுமான சீர்திருத்தத் திட்டம் தேவை", அது "ஊதியங்கள், ஓய்வூதியச் சீர்திருத்தம், சுகாதாரப் பாதுகாப்புச் சீர்திருத்தங்கள், பொது நிர்வாகம், பொருட் சந்தை, வணிகச் சூழல், உற்பத்தித்திறன், மற்றும் வேலை வளர்ச்சி" ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். முன்னேற்றத்தை பற்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்க மார்ச் 16 வரை ஏதென்ஸுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பரிசீலனை மே 15-ல் நடத்தப்படும் என்றும் அதற்குப் பின்னர் ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய நிதிப்பிரிவு ஆணையர் Olli Rehn ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் வல்லுனர்கள், "வரவிருக்கும் நாட்களில் ஏதென்ஸில்" அரசாங்கத்தின் முன்னேற்றத்தை பரிசோதித்துப்பார்க்க இருப்பார் என்று கூறினார். ஜேர்மனியில் துணை நிதி மந்திரியான Joerg Asmussen என்பவர் "கிரேக்கம் தான் இனி சாதிக்க வேண்டும்" என்று மந்திரிகள் தெளிவுபடுத்தியதாக பின்னர் கூறினார். அவர் மேலும் "கிரேக்கத்திற்கு இன்னும் கூடுதலான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது", அயர்லாந்து மற்றும் லாட்வியாவின் உதாரணத்தை ஏதென்ஸ் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த நாடுகள் பொதுநலச் செலவுகளையும் ஊதியங்களையும் பெரிதும் குறைத்துவிட்டன என்று தெரிவித்தார். ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெலின் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் வணிகக் குழுவின் தலைவரான Kurt Lauk, "ஒரு நாடு திவால் நிலையில் இருந்த மீழ வேண்டுமென்றால், அந்த நிலையில் அதற்கு வாக்களிப்பு கூடாது என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும்--அது கவுன்சிலாயினும் சரி, வேறு பிரச்சினை என்றாலும் சரி." என்று அச்சுறுத்தினார். பிரிட்டனின் Telegraph நாளேடு, "கிரேக்கத்திற்கு அதன் வாக்களிக்கும் உரிமையை ஒரு கூட்டத்திற்கு நிறுத்துவது என்னும் அடையாள நடவடிக்கை நடைமுறையில் வேறுபாடு எதையும் கொடுக்காது, அது ஒரு அரசியலமைப்பு நெறி என்ற விதத்தில் இறைமை இழப்பு என்ற பெரும் இழப்பைப் பிரதிபலிக்கும்", இது "ஒரு பொருளாதார இறைமை" போல் ஆகும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துப்படி, "ஜேர்மனிய மற்றும் பிரெஞ்சு வங்கிகள் மொத்தத்தில் $119 பில்லியனை கிரேக்கத்தில் கடன் வாங்கியவர்களுக்கு மட்டும் கொடுத்துள்ளன. $900 பில்லியனுக்கும் மேல் யூரோப்பகுதியில் இழப்புவரக்கூடிய இடங்களில் கிரேக்கத்திற்கும் மற்றய நாடுகளுக்கும் அதாவது போர்த்துக்கல், அயர்லாந்து, ஸ்பெயின் ஆகியவற்றிற்கு கொடுத்துள்ளது." ஜேர்னல் தொடர்ந்து எழுதுகிறதாவது, "பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் வங்கித்துறைகள் மொத்தத்தில் ஐரோப்பிய வங்கிகள் இந்நாடுகளுக்கு கொடுத்த கடன்களில் பாதிக்கும் மேல் கொண்டுள்ளன....ஏதென்ஸ் பணம் கொடுக்கத் தவறினால், முதலீட்டாளர்கள் பிரெஞ்சு, ஜேர்மனிய வங்கிகள் இந்த இழப்புத் திறனிற்கு ஈடுகொடுத்து நிற்க முடியுமா என்ற வினாவை எழுப்புவார்கள். அது பீதியைத் தூண்டும், நிதியமுறை முழுவதும் எதிரொலிக்கும்." ஜேர்மனிய மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவம் கிரேக்கத்திற்கு இயல்பான பிணை எடுப்பு கிடையாது என்று வலியுறுத்துவது பெரும்பாலும் அரசியல் நிர்ப்பந்தங்களை ஒட்டி உந்துதல் பெற்றது ஆகும். ஏதென்ஸை ஒரு சோதனைக் களமாக கண்டு, அவை கண்டம் முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு வேலைகள், ஊதியங்கள், வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றின்மீது கடுமையான தாக்குதல்கள் சுமத்தப்படுவதில் எந்த தளர்ச்சியும் இருக்காது என்றும் ஒவ்வொரு நாட்டிற்கும் இத்தகைய தயாரிப்புக்கள் உள்ளன என்றும் தெளிவுபடுத்தியுள்ளன. அமெரிக்க முதலீட்டு நிறுவனம் Goldman Sachs உடன் தொடர்ந்த சிக்கலான நிதிய நடவடிக்கைகளில் ஏதென்ஸ் ஈடுபட்டிருந்தது பற்றிய சமீபத்திய கூற்றுக்கள் நிதியப் பற்றாக்குறையின் அளவை மூடிமறைக்கும் நோக்கத்தை கொண்டது என்பதும் இதே இலக்கைத்தான் கொண்டுள்ளன. இக்குற்றச்சாட்டுக்கள் கிரேக்க மக்கள்--ஐரோப்பிய ஒன்றியத்தில் வறியவர்களில் ஒரு பகுதி, வேலையின்மை விகிதம் 24 வயதிற்கு உட்பட்டவர்களில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் என்ற நிலையில்--அவர்களுடைய "ஊதாரித்தனத்திற்கு" விளைவாக வறுமையை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றன. மற்றொரு ஆத்திரமூட்டும் தன்மையுள்ள அறிக்கையில் ஜேர்மனியில் கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் தலைவர் Horst Seehofer, மேர்க்கெல் கூட்டணி அரசாங்கத்தில் ஒரு உறுப்பினராக உள்ளவர், ஏதென்ஸ், ஜேர்மனிய வரிசெலுத்துவோர் பணத்தில் இருந்து "ஒரு யூரோ" கூட பெறக்கூடாது என்று கூறியுள்ளார். "கிரேக்கத்தின் நடத்தை--தன் வருமானத்திற்கு அப்பால் பல ஆண்டுகளாக வாழும் முறையும், பிரஸ்ஸல்ஸிற்கு தவறான புள்ளிவிவரங்களை கொடுத்ததும்--இறுதியில் வெகுமதிக்கு உட்பட்டது அல்ல" என்று அவர் கூறினார். கோல்ட்மன் சாஷ்ஸுடன் உடன்பாடு கொண்டு $10 பில்லியன் மதிப்புடைய நாணய மாற்றங்களை பயன்படுத்தி நாட்டின் கடனுக்கு உதவும் வகையில் செயல்பட்டது என்று வந்துள்ள அறிக்கைகளுக்கு இந்த வார இறுதிக்குள் விளக்கம் கொடுக்குமாறு ஏதென்ஸிடம் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்ற முறையின் கீழ் கிரேக்கம் திறமையுடன் 640 மில்லியன் பவுண்டுகளை கடனாகப் பெற்றது என்றும், அது நாணய வணிகம் என்று கருதப்பட்டதால் கணக்கு புத்தகங்களில் இடம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் கடன் கிரேக்கத்தை அரசாங்கக் கடன்கள் பற்றிய யூரோப்பகுதி தேவைகளை பூர்த்தி செய்ய உதவியதாக கூறப்படுகிறது. அதன்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு மேல் வரவு-செலவு பற்றாக்குறை இருக்கக்கூடாது. 1999-ல் யூரோ முகாமில் சேருவதற்கு இந்த அளவுகோலை சந்திக்க கிரேக்கத்தால் முடிவேயில்லை. ஆனால் 2001-ல் வெற்றி பெற்றது. கோல்ட்மன் சாஷ்ஸ் இதையொட்டி 192 மில்லியன் பவுண்டுகளை நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்ததற்காக ஆதாயமாக அடைந்தது. இந்த மாற்றுக்கள் ஐரோப்பிய ஒன்றிய விதிகளை மீறவில்லை என்றும் உண்மையில் அந்த நேரத்தில் சட்டபூர்வம்தான் என்றும் ஏதென்ஸ் வலியுறுத்தியுள்ளது. கிரேக்கத்தின் பொதுக்கடன் நிர்வாக அமைப்பின் தலைவராக 2001-ல் இருந்த Christopher Sardelis செயல்களில் இருந்து கிடைத்த ஆதாயம் "அற்பமானவை" என்றார். ஆயினும்கூட மேர்க்கெல் குற்றச்சாட்டுகளை ஒரு "அவதூறு" என்றும் கிரேக்கம் "பல ஆண்டுகளாக புள்ளிவிவரங்களை தவறாகக் கொடுத்து வருகிறது" என்றும் குற்றம் சாட்டினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவர அலுவலகம் Eurostat ஏதென்ஸிடம் நாணய மாற்றுக்கள் பற்றிய தகவலைக் கொடுக்கமாறு உத்தரவிட்டுள்ளது. இதைத் திருப்திகரமாகச் செய்யவில்லை என்றால் கிரேக்கம் ஐரோப்பிய நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படக்கூடும் என்ற தகவல்களும் வந்துள்ளன. அங்கு இது பெரும் அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும். கோல்ட்மன் சாஷ்ஸ் தொடர்பு பற்றிக் குறிப்பிட்ட ஐரோப்பிய நிதிய விவகாரங்கள் ஆணையர் Rehn என்பவர், "வங்கிகளும் தங்களை நிதிய நெருக்கடிக்கு பின்னரும், இது அறநெறி முறையுடன் இணைந்து இருப்பதா என்று கேட்டுக் கொள்ள வேண்டும்" என்று கூறினார். பெரிய வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களின் கணக்குமுறை செயல்கள் 1930க்குப் பின்னர் ஏற்பட்டுள்ள உலகின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் நேரடியாக தொடர்பு கொண்ட நிலையில் Rehn அவற்றின் "அறநெறி" பற்றி குறிப்படுவது நம்பகத்தன்மையை சோதிக்கிறது. இதேபோல்தான் Eurostat சமீப காலம் வரை swaps பற்றி தெரியாது என்கின்ற கூற்றும் உள்ளது. பல வர்ணனையாளர்கள் ஜூலை 2003 வணிக ஏடான Risk-TM Nick Dunbar எழுதிய கட்டுரையை சுட்டிக்காட்டியுள்ளனர். அதில் "கோல்ட்மன் சாஷ்ஸ் உதவியுடன் கிரேக்கம் மிகப் பெரிய swaps உடன்பாட்டைப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றிய இலக்குகள் நிர்ணயித்துள்ள கடன் விகிதத்தை தன் நாட்டிற்கு தக்க வைத்துக் கொண்டுள்ளது." நடவடிக்கைகள் பற்றி விசாரிக்க ஒரு ஆணைக்குழு நியமிக்கப்படுவதாக பாப்பாண்ட்ரூ அறிவித்துள்ளார். ஓரளவேனும் இந்த நடவடிக்கை அவருடைய ஐரோப்பிய பங்காளிகளுக்கு தான் தேவையான பரிகாரத்தை சுமத்துவது பற்றி நம்பவைக்கும் நோக்கத்தைக் கொண்டது. புதனன்று முறைசாரா அமைச்சர் குழுக் கூட்டத்தில் பிரதம மந்தரி தன் அரசாங்கம் "ஒரு புதிய பக்கத்தை திறக்கத் தயார்" என்றும் "கணிசமாக பற்றாக்குறைகளைக் குறைக்க" தயார் என்றும் கூறினார். "எங்கள் திட்டங்களை செயல்படுத்த எங்களுக்கு போதுமான அவகாசம் வேண்டும்" என்பதுதான் அவருடைய ஒரே வேண்டுகோள். |