World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிGermany: Hartz IV welfare legislation ruled unconstitutional ஜேர்மனி: Hartz IV பொதுநலச் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்னும் தீர்ப்பு By Dietmar Henning பெப்ருவரி 9ம் தேதி Karlsruhe ல் உள்ள ஜேர்மன் அரசியலமைப்பு நீதிமன்றம் (BVG) வயது வந்தவர்களுக்கும் குழந்தைகளுக்குமான தற்போதைய பொதுநல உதவி கணக்கீட்டு முறை அரசியலமைப்பிற்கு புறம்பானது என்று அறிவித்துள்ளது. ஆனால் இது ஜேர்மனியில் நீண்ட காலமாக வேலை இல்லாதவர்கள், அவர்களுடைய குடும்பங்கள் இன்னும் அதிகப் பணம் எதிர்பார்க்கலாம் என்று அர்த்தப்படாது. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் சமூகநலன்கள் வழங்கும் கணிப்பீட்டு முறையில் "வெளிப்படையான தன்மை" இல்லை என்று சுட்டிக்காட்டி, ஆண்டு இறுதிக்குள் இந்த முறையை திருத்துமாறு உத்தரவிட்டுள்ளது. ஏராளமான குடும்பங்கள் தற்போதைய உதவித் தொகை பற்றி மேல்முறையீடு செய்திருந்தன. ஏனெனில் அது ஒழுங்குமுறையாக இல்லாததுடன் ஜேர்மன் அரசியலமைப்பில் உத்தரவாதமளித்துள்ள குறைந்தபட்ச வாழ்க்கை செலவுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மிகக் குறைவான நலன்களைத்தான் தருகிறது. ஆனால் உயர்நீதிமன்றம் புகாரில் முதல் புள்ளியைத்தான் ஏற்றுள்ளது: அதாவது உதவிநிதிகள் எப்படி நியாயப்படுத்தப்படுகின்றன, கணக்கிடப்படுகின்றன என்ற வினாவை. "அந்த ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள அணுகுமுறையின் சட்டபூர்வத்தன்மையில் இருந்து அரசியலமைப்பினால் ஏற்கமுடியாத தன்மை எழுகின்றது" என்று நீதிமன்றத்தின் தலைவரும் தலைமை செனட் மாஜிஸ்ட்ரேட்டுமான Hans-Jurgen Papier தன்னுடைய தீர்ப்புரையில் எழுதியுள்ளார். ஆனால் குறைந்த பட்சம் வாழ்வதற்கு தேவையான வருமானம் என்ன என்று துல்லியமாக எந்தத் தொகையையும் குறிப்பிடவில்லை. மாறாக, இது "சட்டமியற்றுபவர்கள்" அதாவது பாராளுமன்றம்தான் அந்த தரத்தை நிறுவ வேண்டும் என்று வலியுறுத்திவிட்டார். "இத்தரங்கள் பற்றிய மதிப்பீடு முறையான பொது சாட்சிய அடிப்படையில் நியாயப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்; உண்மையான நீதி விசாரணைக்கு முறையான வகையில் ஒருதலைப்பட்ச மதிப்பீடாக இருக்கக்கூடாது." என்று அவர் தொடர்ந்து எழுதியுள்ளார். ஆனால் உண்மையோ "இந்த ஒருதலைப்பட்ச மதிப்பீடுகள்" வேண்டுமேன்றே ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD) தலைமையில் இருந்த முன்னாள் சமூக ஜனநாயக-பசுமைக் கட்சிக் கூட்டணி அரசாங்கத்தால் நிறுவப்பட்டது என்பதுதான். ஷ்ரோடர் கூட்டணியின் நோக்கம் வேலை இல்லாதவர்களுடைய நலன்களை கடுமையாக குறைக்க வேண்டும் என்று தெளிவாக இருந்தது. சமூக ஜனநாயகக் கட்சியினரும், பசுமைக் கட்சியினரும் இக்கொள்கையை அலங்காரச் சொல்வகையில் "வேலை தேடுவதற்கு ஊக்கம்" என்று அளித்தனர். Hartz IV பொதுநல உதவித் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட போது, வேலயின்மை உதவி விகிதம் மாதம் ஒன்றிற்கு 345 யூரோக்கள் என்று இருந்தது. அது உத்தியோகபூர்வ தேசிய வருமானம், நுகர்வு இவற்றின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இவை வருமான அளவுகோலின் கீழ் 25 சதவிகிதத்தினருள் ஒற்றை நபரின் சராசரி செலவைக் கணக்கெடுத்தன. இந்த அற்பத் தொகைகளும் பின்னர் அதுவும் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக குறைக்கப்பட்டன.உதாரணமாக அடிப்படை மளிகைப் பொருட்கள்ளுக்கு தேவையான தொகை 4 சதவிகிதம் குறைக்கப்பட்டது, சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்கள் 9 சதவிகிதம் குறைக்கப்பட்டன; "கலாச்சார, ஓய்வுநேர" படிகள் 45 சதவிகிதம் குறைக்கப்பட்டன! இதைத்தவிர, மின்வசதி, சொந்தப் போக்குவரத்து, "ஆடம்பரப் பொருட்கள்" என்று அழைககப்படும் "விளையாட்டு விமானங்கள்" (!) ஆகியவற்றிற்கு கொடுக்கப்பட்ட நிதி முற்றிலும் திரும்பப் பெறப்பட்டது. குறைவூதியத் தொழிலாளர்களான முடிவெட்டுபவர்கள், விற்பனையாளர்கள், சுத்தம் செய்பவர்கள், உதவியாளர்கள் போன்றவர்கள் "விளையாட்டு விமானங்கள்" அநேகமாக வைத்திருக்க மாட்டார்கள் என்பது கூறத் தேவையில்லை. தேசிய மதிப்பீடு (spot surveys) ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவதால், ஷ்ரோடர் அரசாங்கம் உயரும் வாழ்க்கைச் செலவுகள் குறியீடுகளை புறக்கணித்து, ஓய்வூதியத் தரங்களை வருமான ஆதரவுத் தரங்களுக்காக கொடுக்கப்படுவதற்கு அளவுகோலாக பயன்படுத்தினர். ஆனால் இந்த இரண்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. "தற்போதைய கணக்கிடும் சூத்திரம் தேசியக் கருவூலத்தின் நலத்திற்குத்தான் உதவும்" என்று Frankfurter Rundschau எழுதியுள்ளது; "ஏனெனில் பெரும்பாலான ஓய்வூதியங்கள் அதிகம் பெருகுவதில்லை." உயர் நீதிமன்றம் முற்றிலும் நிராகரித்தது, குழந்தைகள் நலனுக்கான கணக்கீட்டை Hartz IV நியாயப்படுத்தியதுதான். இவை வயது வந்தவர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை அடிப்பைடயாகக் கொண்டவை, அதாவது வயது வந்தவர்களுக்கு கிடைக்கும் பணத்தில் 50 சதவிகிதம் இளைஞர்களுக்கு கிடைக்கும்; 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 60 சதவிகிதம் கிடைக்கும். இந்த அபத்தமான முடிவான மிகச்சிறிய குழந்தைகள், கைக்குழந்தைகள் புகையிலை, மதுபானத்திற்கு 11.90 யூரோ பெற்றுக் கொள்ளும், ஆனால் மாற்றுத் துணிக்கு எதுவும் பெறா! இதைத்தவிர, பொம்மைகளுக்கு என 62 சென்ட்டும் 3.83 யூரோ சினிமா, நாடகக் கொட்டகை செல்வதற்கு என்றும் பெறும். கல்வி, விளையாட்டுக்கள், இசை ஆகியவற்றிற்கான உதவிகள் முற்றிலும் கணக்கில் இருந்து விடுபட்டுள்ளன. மேலும் "மிக கஷ்டப்படுபவர்களுக்கு", நீண்டகால நோயாளிகளுக்கு அல்லது பெற்றோர்கள் ஒருவரைவிட்டு ஒருவர் தொலைவில் இருக்கும் தன்மையில், குழந்தைகளை பார்க்க அதிக பயணச் செலவு செய்ய வேண்டிய நிலையில், Hartz IV விதிகளில் அவற்றிற்கு இடமில்லை. நீதிமன்றம் இந்தக் கூறுபாட்டையும் குறைகூறியுள்ளது. அரசியலமைப்பு நீதிமன்றக் கருத்தின்படி, வருமானம், நுகர்வு என்று கணக்கிடுவது அடிப்படை அரசியலமைப்பு சட்டங்களை மீறவில்லை. ஆனால் அவற்றைப் பற்றிய ஒருதலைப்பட்ச விளக்கம்தான் மீறுகிறது. அரசியலமைப்பு நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம் பொதுநல நிதிகள் குறைந்த பட்சமாக உள்ளன என்பது அல்ல, மாறாக அவற்றை மதிப்பிடும் தரங்கள் போதுமான வெளிப்படைத் தன்மையை கொண்டிருக்கவில்லை என்பதுதான். பல அரசியல்வாதிகள் அரசியலமைப்பு நீதிமன்ற தீர்ப்பைப் பற்றிய விவாதத்தை பயன்படுத்தி பொதுவாகவே பொதுநல நிதிமீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர். தாராளவாத ஜனநாயகக் கட்சித் (FDP) தலைவர் கீடோ வெஸ்டர்வெல்ல அரசியலமைப்பு நீதிமன்ற தீர்ப்பிற்கு கடுமையான எதிர்ப்பை, "தீர்ப்பு சோசலிச வகையானது" என்று அறிவித்துள்ளார். வெஸ்டர்வெல்லே இப்பொழுது ஜேர்மனியின் வெளியுறவு மந்திரியும், அதிபர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்-CDU) தலைமையில் உள்ள கூட்டணி அரசாங்கத்தில் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) ஒரு பங்காளி ஆகும். கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் முக்கிய உறுப்பினர், ஹெஸ்ஸ மாநில பிரதமர் Roland Koch ஏற்கனவே இருக்கும் பொதுநல விதிகளை கண்டித்துள்ளார். மற்ற கட்சி உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் தொழிலாளர்கள் குழு தலைவர் Peter Weiß, போன்றவர்கள் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் கீழ் தற்போதுள்ள முறையில் எந்த சீர்திருத்தமும் கொடுப்பனவுகளில் உயர்விற்கு வகை செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். அற்பத்தனமான Hartz IV உதவித் தொகைகளில் எந்த அதிகரிப்பும் கூடாது என்று எச்சரித்தவர்களில் சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பேர்லின் மாவட்ட பிராந்தியமான Neukölln உடைய மேயர் Heinz Buschkowsky உள்ளார். Neukölln பேர்லின் மாவட்டங்களில் மிக வறுமையான பகுதிகளில் ஒன்றாகும்; ஏராளமான விகிதத்தில் குடியேறியவர்கள் இங்கு வறுமையால் வாடுகின்றனர். பல முறையும் Buschowsky வேலையற்றோர், வறியவர்கள் மீதான கண்டங்களைக் காட்டியதால் தலையங்கங்களில் இடம்பெற்றுள்ளார். ஜேர்மன் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு Hartz IV நிதியை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான மக்களுடைய நிலைமையில் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யாது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு ஷ்ரோடர் அரசாங்கம் அறிமுகப்படுத்திய சட்டத்தின் முழுக் குற்றம்சார்ந்த தன்மையை சுட்டிக் காட்டுகிறது. புதிய வேலை வாய்ப்புக்களை தோற்றுவிப்பதற்கு முற்றிலும் மாறாக, சமூக ஜனநாயக-பசுமைக் கட்சி கொண்டுவந்த சட்டம் ஜேர்மனியில் மிகப் பெரிய குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை நிறுவுவதில் முக்கிய பங்கைக் கொண்டது. இவ்விதத்தில் சட்டம் அதிக வெற்றியை அடைந்தது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி Hartz IV நிதியங்களை பெறுபவர்களான 6.7 மில்லியன் பேர்களில் 1.2 மில்லியன் வேலை செய்கின்றனர். அதில் 300,000 முழு நேரப் பணியில் உள்ளனர். மேலும் வேலை செய்யும் வறியவர் பெரும் பிரிவு உணர்வுபூர்மாக முதலாளிகளால் அனைத்து ஜேர்மனிய தொழிலாளர்களின் ஊதியங்களை குறைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் 1998 முதல் 2005 வரை ஆட்சி செய்த சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கம் பற்றிய பேரழிவு தரக்கூடிய மதிப்பீடாகும். |