World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government cites European debt crisis to slash spending

ஐரோப்பிய கடன் நெருக்கடியைக் காரணம் காட்டி பிரெஞ்சு அரசாங்கம் செலவினங்களை தீவிரமாக வெட்டுகின்றது

By Kumaran Ira and Alex Lantier
17 February 2010

Back to screen version

தற்போது கிரேக்கத்தில் மையம் கொண்டிருக்கும் ஐரோப்பிய கடன் நெருக்கடி பற்றி உலக நிதிய சந்தைகளில் பீதி எழுந்துள்ள நிலையில், பிரான்சில் கன்சர்வேடிவ் அரசாங்கம் மாபெரும் பொது நலச் செலவுகளை வெட்டும் திட்டத்தை தயாரித்துள்ளது.

பெப்ருவரி 15ம் தேதி சார்க்கோசி தொழிற்சங்கங்களையும் வணிகக் குழுக்களையும் "2010 சமூக நாட்குறிப்பு" பற்றி விவாதிக்க சந்தித்தார். இதில் ஓய்வூதியக் குறைப்புக்கள் முக்கிய தலைப்பாக இருந்தன. ஓய்வுதிய வயதை 60க்கும் மேலாக அதிகரித்தும், ஒன்றாக ஓய்வு ஊதியம் பெறுவதற்கு தகுதிக் காலத்தை 41 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டிக்கும் நடவடிக்கையை அவர்கள் தயாரிக்கின்றனர். அரசாங்கம் "இச்சீர்திருத்தத்தை" 2010 முடிவதற்குள் விவாதித்துச் செயல்படுத்தலாம் என்று எதிர்பார்க்கிறது.

அரசாங்கம் "பொதுத்துறை ஊழியர்கள் இடமாற்றம்" பற்றிய ஆணையையும் பிரகடனப்படுத்தியுள்ளது. இது பொதுத்துறை பணியாளர் தொகுப்பின் மீது ஒரு புதிய சுற்றுத் தாக்குதலின் பகுதி ஆகும். இதில் அரசாங்க, உள்ளூர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் என்று மொத்தம் 5.2 மில்லியன் தொழிலாளர்கள் அடங்குவர்.

பெப்ருவரி 11ம் தேதி பொதுத்துறையின் உயர்குழுவினால் ஆணைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. இது ஒரு ஆலோசனைக்குழுவாகும், நிர்வாக மற்றும் தொழிற்சங்கங்களின் அதிகாரிகளைக் கொண்டது. இச்சட்டம் பொதுத்துறை ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் வடிவமைப்பு கொண்டது. பொதுவாக ஒருமுறை வேலைக்கு எடுக்கப்பட்டுவிட்டால், பொதுத்துறை ஊழியர்கள் நிரந்தரமாக வேலையில் தொடர்வார்கள். நிதியியல் நாளேடான Les Echos கருத்துப்படி புதிய சட்டமானது, "ஊதியங்கள், ஓய்வூதி உரிமைகளை ஒரு ஊழியர் அவருடைய தகுதிக்கேற்ப கொடுக்கப்படும் மூன்று வேலைகளை நிராகரித்தால் இழக்க நேரிடும். ஊதியங்கள், ஓய்வூதிய உரிமைகள் இழக்கப்பட்டுவிட்டால், இன்னும் மூன்று வேலைகளை மறுக்கும் ஊழியர் பணிநீக்கம் செய்யப்படலாம்" எனக் கூறுவதாக எழுதியுள்ளது.

இச்சட்டம் பொதுக் கொள்கையில் பொது திருத்தம் (General Revision of Public Policy) RGPP என்று அழைக்கப்படுவதின் ஒரு பகுதி ஆகும். 2007ல் சார்க்கோசி அதிகாரத்திற்கு வந்த பின்னர் செயல்படுத்தப்படுகிறது. RGPP ஆனது பொதுத்துறை ஊழியத் தரங்களை இரு ஓய்வு பெறும் பொதுத்துறை ஊழியருக்குப் பதிலாக ஒருவரை நியமித்தல், பணியிட மாற்றங்களை வற்புறுத்தல், அரசாங்கப் பணிகளைக் குறைத்தல் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களில் ஆட்குறைப்பு செய்தல் ஆகிய குறைப்புத் திட்டங்களைக் கொண்டுள்ளது. 2007ல் இருந்து 100,000 பணிகள் பொதுத்துறையில் அகற்றப்பட்டு விட்டன. 2010ம் ஆண்டில் 34,000 பணிகள் அகற்றப்பட உள்ளன.

இந்த நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தின் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும். பிரான்சின் கடன்மதிப்பின் தரத்தை ஐரோப்பிய ஒன்றிய மற்றும் சர்வதேச நிதியச் சந்தைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்தைக் கொண்டவை. 2008-ல் உலகப் பொருளாதார நெருக்கடி வெடித்தபின், பிரான்சின் வரவு-செலவுப் பற்றாக்குறை பெரிதும் உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2 சதவிகிதத்தை எட்டியது.

பிரெஞ்சு அரசாங்கம் ஐரோப்பிய ஆணைகுழுவிற்கு பெப்ருவரி தொடக்கத்தில் 2010-2013 க்கான தன்னுடைய உறுதிப்பாட்டுத் திட்டத்தை அளித்தது. பொதுப் பற்றாக்குறை 8.2 சதவிகிதத்தில் இருந்து 2013க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதம் குறைந்துவிடும் என்று இது எதிர்பார்க்கிறது. இதையொட்டி அரசாங்கச்செலவுகளில் 100 பில்லியன் யூரோக்கள் குறைப்பு இருக்கும். இத்திட்டத்தில் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்கள், ஓய்வூதிய நலன்கள், வேலையின்மை நலன்கள் மற்றும் பொதுத்துறை வேலைகள் ஆகியவற்றில் குறைப்புக்கள் அடங்கும்.

2010 அரசாங்க நிதி பற்றிய மதிப்பீட்டில் Cour des Comptes (பிரான்சின் உயர்மட்ட தணிக்கைக்குழு), அரசாங்கம் மிக அவசரமாக அதன் பொதுக்கடனையும் பற்றாக்குறையையும் குறைத்தால்தான் AAA என்ற கடன் மதிப்புத் தரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று எச்சரித்துள்ளது.

அது எழுதியதாவது: "பிரான்ஸ் ஒன்றும் கிரேக்கமோ, ஸ்பெயினோ அல்ல என்பது உண்மை. ஆயினும் பிரான்சின் உயர்மட்ட நிதிய அதிகாரிகள் இப்பொழுது விரைவில் செயல்பட வேண்டும். கடன் அதிகமாகப் பெருகிக் கொண்டிருக்கிறது, 2013 ஐ ஒட்டி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவிகிதத்தை அடையக்கூடும். கடன்கள் மீது வட்டி விகித பணம் கொடுக்கும் சுமை அரசாங்க வருவாயில் 2013ல் 10 சதவிகிதத்தை அடையக்கூடும். அதாவது 90 பில்லியன் யூரோக்கள் என்று (அதாவது உத்தியோகம் பார்க்கும் தொழிலாளிக்கு தலா 3,500 யூரோக்கள் என). ...இந்த 20 சதவிகித உயர்ந்த பட்ச வரம்பிற்கும் அப்பால், ஆபத்து உள்ளது, இயல்பாக என்று இல்லாவிட்டாலும், பிரான்சின் அரசாங்கக் கடன் மதிப்பிற்கு சரிவு ஏற்படக்கூடும்."

வலதுசாரி நாளேடு Le Figaro க்கு ஜனவரி 29 அன்று கொடுத்த பேட்டியில் பிரெஞ்சு பிரதம மந்திரி பிரான்சுவா பியோன் தானும் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியும் "ஒரு தேசிய அணிதிரட்டல் என்பதற்குத் தேவையான முன்னோடியில்லாத முயற்சிகளை மேற்கொள்ள" உறுதி கொண்டதாக தெரிவித்தார். "இதன் பொருள் அமைச்சரக செலவுகளை முடக்குதல், உள்ளூர் நிர்வாகங்களிலும் அதே போல் செய்தல் என்பதாகும்."

மொத்த சுகாதாரச் செலவினங்களில் வளர்ச்சி என்பது "3 சதவிகிதத்திற்கும் கீழே இருக்க வேண்டும். அதை நாம் மறக்கக்கூடாது. சில ஆண்டுகளுக்கு முன்பு 5 அல்லது 6 சதவிகிதத்தில் இருந்தோம்."

இப் பேச்சுவார்த்தைகள் கிரேக்கத்தின் பொதுக் கடன் பற்றாக்குறைக்கு நிதி கொடுப்பது பற்றி, ஸ்பெயின் மற்றும் போர்த்துகலில் அரசாங்கக் கடன் தவறுதல் பற்றி எழுந்துள்ள கவலைகள் பற்றி பீதியுற்ற ஐரோப்பியப் பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே நடைபெறுகின்றன. கிரேக்க சமூக ஜனநாயக பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ அரசாங்கத்தைப் போலவே பெரியளவு வேலை வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை முதலீட்டாளர்களைத் திருப்திபடுத்த அது மேற்கொண்டுள்ளது. பிரான்சின் முதலாளித்துவ "இடதும்" தொழிலாளர்கள் மீது நிதிய மூலதனத்தின் ஆணைகளைச் சுமத்த அணிதிரட்டப்படுகிறது.

பெப்ருவரி 11ம் தேதி France2 தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின்போது PS-ன் முன்னாள் முதன்மைச் செயலாளர் Francois Hollande, "வேலைக் காலத்தை நீட்டித்து ஓய்வூதியங்களுக்கு பணத்தைக் கொடுக்க வேண்டும். மக்கள் இன்னும் அதிக காலம் உழைக்க வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூற வேண்டும். ஆம், வேலைக்காலம் அதிகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் ஆயுள் எதிர்பார்ப்புக்காலம் உயர்ந்துவிட்டது என்பதை அறிவர். அது நீண்டு போகவே, வேலைக் காலமும் அதிகப்படுத்தப்பட வேண்டும்."

இது PS-ன் முதன்மைச் செயலாளர் மார்ட்டின் ஒப்ரி ஓய்வூதிய வயது 61 அல்லது 62க்கு உயர்த்தப்பட வேண்டும் என்று கூறி செய்தி ஊடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பின்னர் வந்துள்ளது. பின்னர் திரும்பப் பெறப்பட்டாலும் ஒப்ரியின் கருத்துக்கள் முக்கிய PS புள்ளிகளான முன்னாள் பிரதமர் லியோனல் ஜோஸ்பன் மற்றும் மிஷேல் ரொக்கார்ட் உட்பட பலராலும் ஆதரிக்கப்பட்டது.

பெப்ருவரி 15 கூட்டத்திற்கு முன் ஸ்ராலினிச CGT தொழிற்சங்கத்தின் தலைவரான Bernard Thibault "மிக அவசரச் சீர்திருத்தம்" பற்றித் தான் கவலை கொண்டுள்ளதாகக் கூறி, உடனேயே சீர்திருத்தம் "இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு" ஒத்திப் போடப்பட வேண்டாம், "ஆனால் சில மாதங்கள் தள்ளிப்போடப்படலாம் எனத் தான்" விரும்புவதாகக் கூறினார். அவர் மேலும் கூறியது: " மற்றய நாடுகளைப் போல் பிரான்ஸும் சர்வதேச நிதியச் சந்தைகளிடம் இருந்து அழுத்தத்தைப் பெற்றுள்ளது என்பதை அறிவேன். இதுவும் அந்த சந்தைகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்."

தீபோவின் கருத்துத்தான் மற்றய தொழிற்சங்கத் தலைவர்கள், வலதுசாரிப் பிரிவு CFDT சங்கத்தின் Francois Chérèque, FO வின் Jean-Claude Mailly ஆகியோராலும் சார்க்கோசியுடன் பேசிய பின்னர் எதிரொலிக்கப்பட்டது. ஓய்வூதியக் குறைப்புக்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் கோடை முழுவதும் நடக்கும் என்பது பற்றி அவர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் CFDT மற்றும் CGT இரண்டும் மற்றய சிறிய சங்கங்களுடன் மார்ச் 23 அன்று ஒரு ஒருநாள் வேலைநிறுத்தம் இருக்கும் என்று அறிவித்தன.

"அணிதிரட்டுவதற்கு நேரம் தேவை" என்று Chérèque கூறினார். வேறுவிதமாகக் கூறினால், சங்கங்கள் அழைப்புவிடும் தொழிலாளர்கள் இன்னும் பல "போலித்தன" வேலைநிறுத்தங்களுக்கு உட்படலாம். அதே நேரந்தில் அவை சார்க்கோசியுடன் வெட்டுக்கள் விவரம் பற்றி பேச்சு வார்த்தைகள் நடத்துவர்.

இந்த நம்பிக்கையற்ற தந்திரோபாயத்துடன், தொழிற்சங்கங்கள் சார்க்கோசியின் 2008 ஓய்வூதியச் சீர்திருத்தங்கள், 2009ல் ஒப்ரியின் மாற்றீட்டு பிணை எடுப்புத் திட்டம் ஆகியவற்றில் கொண்டிருந்த பங்கைத்தான் மீண்டும் கொள்ளுவார்கள். தொழிலாள வர்ககத்தின் எதிர்ப்பை தோல்வியுறுவதற்காகவே நடத்தப்படும் செயல்களில் திசைதிருப்பி விடுவர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved