World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Rockets kill 12 near Marjah
More civilian deaths as US launches offensive in southern Afghanistan

மர்ஜாவிற்கு அருகே ரொக்கெட் தாக்குதலில் 12 பேர் மரணம்

தெற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தாக்குதல் தொடங்கியதால் அதிகமான பொதுமக்கள் இறப்புக்கள்

By Patrick Martin
15 February 2010

Back to screen version

வரப்போகும் பல கொடுமைகளில் முதலாவது என்று கருதக்கூடிய விதத்தில், இரண்டு அமெரிக்க இராணுவ ரொக்கெட்டுக்கள் தற்போதைய தாக்குதலுக்கு இலக்கான மர்ஜாவிற்கு அருகே ஒரு வீட்டைத் தாக்கியதில் 12 பேர் இறந்து போனார்கள். அமெரிக்க இராணுவ அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்கள் நிரபராதியான சாதாரண குடிமக்கள் ஆவார்கள் என்றும் அமெரிக்கா மற்றும் நேட்டோ அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருந்தவர்கள் என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இந்தச் சம்பவம் மர்ஜா மற்றும் மத்திய ஹெல்மண்ட் மாநிலத்தில் நட் அலியைச் சுற்றி உள்ள பகுதிகள் மீது அமெரிக்கத் தலைமையிலான இரண்டாம் நாள் தாக்குதலில் போர் தீவிரமடைந்த போது நடந்தது. கிட்டத்தட்ட 15,000 துருப்புக்கள் சனிக்கிழமை அதிகாலையில் தாக்குதலைத் தொடங்கின. 5,000 அமெரிக்க மரைன்கள், பிரிட்டிஷ், கனேடிய, டேனிஷ் மற்றும் எஸ்டோனியத் துருப்புக்களும் ஜனாதிபதி ஹமித் கர்சாய் கைப்பாவை அரசாங்கத் துருப்புக்களும் இதில் ஈடுபட்டன.

இரண்டு திசைகளில் இருந்து தலிபான் கெரில்லா போராளிகள் குறிபார்த்து சுட்டதை அடுத்து ஒரு மரைன் பிரிவு ராக்கெட்டுக்களை செலுத்த உத்தரவிட்டது. டிரக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆயுதமான HIMARS எனப்படும் High Mobility Artillery Rocket Sysem இதற்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் இரு ரொக்கெட்டுக்களும் 1,000 அடி இலக்கில் இருந்து தள்ளி ஒரு வீட்டைத் தாக்கின என்று அமெரிக்க அதிகாரிகள் செய்தி ஊடகத்திடம் கூறினர்.

ரொக்கெட்டுக்கள் இலக்கில் இருந்து இவ்வளவு தொலைவில் ஏன் தாக்கின என்பதற்கு விளக்கம் ஏதும் இல்லை. ஆனால் இச்செயலில் பொறுப்பற்ற தன்மை இருந்தது. ஏன், பீதிகூட இருந்தது என்பது தெளிவு. செய்தி ஊடகத்திடம் ஒரு இராணுவ அதிகாரி அதிகமான அளவில் தரையில் தாக்குதல் நடைபெற்றதால் காயமுற்ற அமெரிக்க படையினரை அப்புறப்படுத்த முடியாமல் ரொக்கெட்டுக்கள் பயன்படுத்தப்பட்டன என்று கூறினார். "இச்சூழ்நிலையில் இது அதிகமான செயற்பாடு, ஆனால் பொதுவாக அது துல்லியமாக இருக்கும்" என்று நேட்டோ அதிகாரி McClatchy News Service இடம் கூறினார். "ஒரு விமானத் தாக்குதலுக்கு அழைப்பு செய்வதை விட இது நல்லது என்று ஒருவேளை நினைத்தனர் போலும்."

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் தலைவரான ஜெனரல் ஸ்ரான்லி மக்கிரிஸ்டன் இறப்பு எண்ணிக்கை பற்றி ஆப்கானிய அரசாங்கத்திற்கு ஒரு மன்னிப்பு வேண்டுகோள் விடுத்தார். HIMARS ரொக்கெட்டுக்கள் பயன்படுத்தப்படல் தற்காலிகமாக சம்பவம் பற்றி பரிசீலனை முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில் வான் தாக்குதல்கள் ஒப்புமையில் அபூர்வமாகத்தான் இருக்கும் என்னும் அமெரிக்க அதிகாரிகளின் கருத்து இருந்தபோதிலும், மர்ஜாவில் துருப்புக்களுடன் நுழைந்திருந்த நிருபர்கள் அமெரிக்க ஜெட்களில் இருந்து போடப்பட்ட குண்டுகள் அடிக்கடி வெடித்தது பற்றி தகவல் கொடுத்தனர். குறைந்தது ஒரு சம்பவத்தில் அமெரிக்க இராணுவத் துருப்புக்கள் கெரில்லாக்கள் தங்கியிருந்து அமெரிக்க ரோந்துப் பிரிவு ஒன்றைக் கட்டுப்படுத்தியிருந்த கட்டிடத்தின்மீது கோப்ரா தாக்குதல் ஹெலிகாப்டர் மூலம் Hellfire ஏவுகணைத் தாக்குதல் ஒன்றை நடத்தக் கோரின.

அமெரிக்க மரைன் அதிகாரி ஈராக்கிய நகரம் பல்லுஜாவின்மீது நடத்திய தாக்குதல்களின் தற்போதைய தாக்குதல்களை ஒப்பிட்டுக் கூறியதை ஒரு பிரிட்டிஷ் செய்தி அமைப்பு மேற்கோளிட்டது. "பல்லுஜாவிலும் இவ்வளவு தீவிரம் இருந்தது. ஆனால் அங்கு நாங்கள் வடக்கில் இருந்து புறப்பட்டு தெற்கே சென்றோம்." ரொய்ட்டர்ரிடம் கேப்டன் ரியன் ஸ்பார்க்ஸ் கூறினார்: "மர்ஜாவிற்கு நாங்கள் பல பகுதிகளில் இருந்து வருகிறோம், மையத்திற்கு செல்லுகிறோம், எனவே பல கோணங்களில் இருந்தும் சுடுகிறோம்."

மூத்த அமெரிக்க தளபதிகள் பல்லுஜாவுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்கப் பெரிதும் முயன்றனர். அங்கு மரைன்கள் திறமையுடன் ஒரு வாரப் போரில் நகரத்தை அழித்தனர். அதில் அதிகளவு மனித இறப்புக்களும் இருந்தன. இப்பொழுது அமெரிக்கப் பிரச்சார முறை தளபதி மக்கிரிஸ்டலின்கீழ் ஆப்கானிய மக்களின் "இதயத்தையும், மனத்தையும்" கைப்பற்றுதலாக இருக்க வேண்டும் என்று உள்ளது. "நமக்கு பல்லுஜா போல் இங்கு தேவையில்லை." என்று கடந்த வாரம் மக்கிரிஸ்டன் ஒரு பேட்டியில் கூறினர். "பல்லுஜா ஒன்றும் முன்மாதிரியல்ல."

தெற்கு ஆப்கானிஸ்தானில் மரைன்களின் தளபதியாக இருக்கும் பிரிகேடியர் ஜெனரல் லாரி நிக்கல்சனும் ஒப்பிடுதல் செய்வதை விரும்பாமல், கூறினார்: "மக்கள் ஒன்றும் நமக்கு எதிரிகள் அல்ல. மக்கள்தான் வெகுமதி, அவர்களுக்காகத்தான் போரிடுகிறோம்." இந்தக் கருத்து விருப்பமின்றி வெளிப்பட்டிருக்கக்கூடும். உறுதியாக பல்லுஜாவிலும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் மற்றய நடவடிக்கைகள் போல் உள்ளூர் மக்கள் எதிரிகளாகக் கருதப்பட்டு கூட்டு தண்டனையும் விதிக்கப்பட்டது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது.

12 சாதாரண மக்களை அவர்கள் வீட்டில் கொன்றதை ஒப்புக் கொள்ளுமுன், அமெரிக்க இராணுவக் கட்டுப்பாடு மர்ஜா செயற்பாடுகளில் 27 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர் என்று அறிவித்தனர். அவர்கள் அனைவரும் தலிபான் கிளச்சியாளர்கள் என்று கூறப்பட்டது. இது வியட்நாமில் அமெரிக்க நடைமுறையைத்தான் நினைவிற்கு கொண்டுவருகிறது. அங்கு அமெரிக்கக் குண்டுகள், தாக்குதல்கள், பீரங்கி மற்றும் நாபாம் தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வியட்நாமியரும் "வியட் காங்" காரர் என்று முத்திரையிடப்பட்டார்கள்.

இன்னும் 30 நாட்களுக்கு அவ்வப்பொழுது மர்ஜாவில் தீவிரப் போர் தொடரும் என்று நிக்கல்சன் கணித்துள்ளார். முதல் இரு நாட்களில் அமெரிக்க இராணுவம் நிறுவியுள்ள பெரும் கட்டுப்பாட்டைக் காணும்போது, இந்தக் கணிப்பு பல வாரங்கள் வீடு வீடாகச் சோதனை நடத்தப்படும், கதவுகள் பிளக்கப்படும், அமெரிக்கத் துருப்புக்களும் ஆப்கானிய ஒத்துழைப்பாளர்களும் கிளச்சியாளர்கள் உள்ளனரா என்பதைச் சோதிப்பர் என்று தெரியவருகிறது.

தற்போதைய நடவடிக்கையின் முக்கிய புதிய தன்மை அப்பகுதியில் செயல்படக்கூடிய ஆப்கானிய அரசாங்கத்தை நிறுவதல் என்பது அரசியல் இலக்கு என்ற விதத்தில் உள்ளது. சிவில் விவகாரங்களை பொறுப்பெடுத்துக் கொள்ளுவதற்கு "ஒரு பெட்டியில் அரசாங்கத்தை" இறக்குமதி செய்வதாக மக்கிரிஸ்டல் பெருமை பேசிக்கொண்டார். மேலும் மர்ஜா பகுதியை காவல் புரிய 2,000 ஆப்கானிய தேசிய போலீஸ் அதிகாரிகளும் அனுப்பப்படுவார்கள்.

ஒரு முழு, நிரந்தர "ஆப்கான்" நிர்வாகம் நிறுவப்படும் என்று கூறுவது நகைப்பிற்கு இடமானது. அதுவும் காபூலில் இருக்கும் கர்சாய் அரசாங்கத்தின் தன்மையை பார்க்கும்போது அதாவது ஒரு கைக்கூலி ஆட்சி முற்றிலும் அமெரிக்க நிதிகள் மற்றும், படையை நம்பி உள்ளது.

"Operation Moshtarak", அதாவது ஆப்கானிஸ்தானில் டாஜிக் சிறுபான்மை பேசும் பேர்சிய மொழியில் இருந்து வந்த டரி மொழியில் "ஒன்றாக இணைந்து செயல்படுதல்" என்ற பெயரில் இராணுவத் தாக்குதலுக்கு பெயர் கொடுத்திருப்பது கூற்றை இன்னமும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. ஒரு டரி மொழிப் பெயரை உபயோகப்படுத்தியிருப்பது, செயற்பாட்டில் பங்கு கொள்ளும் ஆப்கானியத் துருப்புக்கள் பெரும்பாலானவர்கள் டாஜிக்குகள், முன்னாள் வடக்குக் கூட்டில் டாஜிக் தளத்தில் துருப்பினராக இருந்தவர்கள், அது 2001ல் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க ஆதரவு கொடுத்தது என்பதைக் குறிக்கிறது.

ஆனால் ஹெல்மண்ட் மாநிலம், மர்ஜா பகுதியில் உள்ள மக்கள் பஷ்டோ மொழி பேசுபவர்கள், தலிபானில் பெரும்பாலானவர்களைப்போல். இராணுவ நடவடிக்கைக்கு டாரிப் பெயரைக் கொடுப்பது உள்ளூர் பஷ்டூன் மக்களுக்கு தாங்கள் எதிரி இன குழுவினால் வெற்றி பெறப்படுகிறோம் என்ற உணர்வைக் கொடுக்குமே ஒழிய புதிய "தேசிய" ஆப்கானிய நாட்டில் ஒருங்கிணைப்பு என்பது தோன்றாது.

ஒரு இராணுவ நிலைப்பாட்டில் இருந்து அதிக ஆயுதங்கள் கொண்ட அமெரிக்க, பிரிட்டிஷ் துருப்புக்கள் சுடும் திறன், நகரும் திறன் இவற்றில் பெரும் மேன்மை உடையவை என்பதை சனிக்கிழமை காலை மர்ஜாவிற்கு பல நிலக்கண்ணிகள், IED க்கள் என்று சமீப காலத்தில் கிளச்சியாளர்களால் வைக்கப்பட்ட நிலப்பகுதியைக் கடந்து ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டதில் நிரூபணம் ஆயிற்று. வான்வழியே வந்த துருப்புக்கள் 11 சோதனைச் சாவடிகளை நிறுவி தரையில் இருந்து வரும் படைகள் வந்துசேரும் முன்னரே சிறு நகரத்தின்மீது திறமையான கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டன. ஒரே ஒரு பிரிட்டிஷ் மற்றும் ஒரு அமெரிக்க வீரர் மட்டுமே முதல் நாள் நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.

கிட்டத்தட்ட 15,000 துருப்புக்கள் அமெரிக்க தலைமையிலான தாக்குதலில் பங்கு பெறும்போது, அமெரிக்க இராணுவம் எதிர்த்தரப்பு படைகள் 1,000த்தில் இருந்து 150 என்று கூட குறைந்தவிதத்தில் இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது. "மூத்த இராணுவ அதிகாரி" ஒருவர் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் கூறியுள்ளபடி மர்ஜாவில் உள்ள கெரில்லாப் போராளிகளில் 75 சதவிகிதத்தினர் உள்ளுர்வாசிகள் ஆவர்கள். இது அவர்களுக்கு மக்களுடன் எளிதில் இணைந்து பின்னர் சாதகமான சூழ்நிலையில் போரிடத் திரும்ப உதவுகிறது. இந்த எண்ணிக்கை "தலிபான்" என்ற முத்திரையை பொறுப்பற்ற முறையில் வெளிநாட்டு ஆக்கிரமிப்புப் படைக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் எவரையும் குறிக்கப் பயன்படுகிறது என்பதையும் நிரூபிக்கிறது.

மர்ஜா தாக்குதல் உடனே ஒபாமா நிர்வாக செய்தித் தொடர்பாளாரால் பெரும் இராணுவ வெற்றி என்று தம்பட்டம் அடிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ், ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் CNN ஞாயிறு பேட்டியில் "State of the Union" நிகழ்ச்சியில் இது அமெரிக்க மூலோபாயத்தில் பெரும் மாற்றத்தைக் குறிக்கிறது என்றார்.

"கடந்த காலத்தில் அடிக்கடி செய்தது போல், இடத்தில் இருந்து மக்களை முற்றிலும் அகற்றிவிடாமல், இப்பகுதி எடுக்கப்பட வேண்டும், பகுதியை எடுத்துக் கொண்டதன் பின்னர் அங்கு மக்களுக்கு கட்டிடங்கள், பாதுகாப்பு, நல்ல பொருளாதார வாய்ப்பு மற்றும், நல்ல ஆட்சி கொடுப்பது ஆகியவை ஆப்கானிய முகத்தை அதிகம் காட்டியிருப்பதாகும். இது ஒரு முக்கியமான கணம், ஏனெனில் முதல் தடவையாக ஜனாதிபதியின் புதிய மூலோபாயத்தை ஒன்றாகக் கொண்டு வந்திருக்கிறோம்."

பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை ஆதாரங்களை மேற்கோளிட்டுள்ள செய்தி ஊடகத் தகவல்கள்படி, மர்ஜா மீதான தாக்குதல் ஹெல்மண்ட் ஆற்றுப் பகுதி முழுவதிலும் உள்ள மக்கள் தொகை அதிகமான பகுதியை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது. இது மாநிலம் முழுவதும் கந்தகார் வரை ஆப்கானிஸ்தானின் இரண்டாம் பெரிய நகரம் வரை படர்ந்துள்ளது. இரு மாநிலங்களிலும் கிட்டத்தட்ட 85 சதவிகித மக்கள் இத் பகுதியை ஒட்டி உள்ளனர். இதுதான் ஒபாமாவினால் ஆப்கானிஸ்தானிற்கு உத்தரவிடப்பட்டுள்ள 30,000 கூடுதல் துருப்புக்களின் முக்கிய இலக்கு ஆகும்.

ஆனால் ஒரு ஆப்கானிய அதிகாரி பிரிட்டிஷ் செய்தித்தாள் The Guardian க்கு சுட்டிக் காட்டியுள்ளதுபோல், மர்ஜா மையமாக இருக்கும் நட் அலி மாவட்டமானது தலிபான் திறமையுடன் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் அல்லது அதன் செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கும் நாட்டின் 700 மாவட்டங்களில் ஒன்றுதான் இது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved