இலங்கை அரசாங்கத்தின் பொலிஸ் அரசை நோக்கிய துரிதமான நகர்வுகள், இந்தத்
தீவில் தொழிலாள வர்க்கத்திற்குள்ள ஆபத்தை குறிப்பது மட்டுமன்றி, உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கும்
ஒரு எச்சரிக்கையாகும். நாட்டுக்கு நாடு கடன் நெருக்கடி வெடித்துள்ளதோடு சர்வதேச நிதி மூலதனத்தால் கோரப்படும்
கொடூரமான வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்புக்களை அரசாங்கங்கள் நசுக்கி வருகின்ற நிலையில்,
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஜனநாயக-விரோத வழிமுறைகள், எல்லா இடங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ள
நடவடிக்கைகள் குறித்த ஒரு முன்கூட்டிய அறிகுறியாகும்.
கொழும்பிலான அரசியல் பதட்ட நிலைமைகள், கூர்மையடைந்துவரும் பரந்த சர்வதேச
முன்னெடுப்புக்களை எடுத்துக் காட்டுகிறது. இந்த தீவு, 26 ஆண்டுகால கொடூரமான இனவாத யுத்தத்தில் மூழ்கிப்போயிருந்தது.
அந்த யுத்தம் கடந்த மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
2006ல் யுத்தத்தை மீண்டும் தொடங்கி அதை குறிப்பாக ஈவிரக்கமின்றி முன்னெடுத்த ஜனாதிபதி இராஜபக்ஷ,
இப்போது தீவுக்கு தான் "சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவருவதாக" தெரிவிக்கின்றார்.
விடயம் எதிர்ப் பக்கமாக உள்ளது. மோதல்களின் முடிவு அடிநிலையில் உள்ள எந்தவொரு
பிரச்சினையையும் தீர்க்கவில்லை. தனது குற்றவியல் யுத்தத்துக்கு நாட்டை ஈடுவைத்த இராஜபக்ஷ, பெரும் அந்நிய
செலாவனி நெருக்கடியை தடுக்க, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.6 பில்லியன் டொலர்களை கடனாகப்
பெறத் தள்ளப்பட்டார். இப்போது சர்வதேச நாணய நிதியம் ஆணைகளை இடுகின்ற நிலையில், அரசாங்கம் உழைக்கும்
மக்களின் வாழ்க்கைத் தரத்தை பெருமளவு அரிப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றது.
சமூகக் கொந்தளிப்புக்கு எதிரான தயாரிப்பில், அரச இயந்திரங்கள் மீதான தனது
பிடியை இறுக்கிக்கொள்ள இராஜபக்ஷ முயற்சிக்கின்றார். யுத்த காலத்தின் போது, அவர் உறவினர்கள், நெருக்கமான
ஆலோசகர்கள் மற்றும் ஜெனரல்களைக் கொண்ட ஜனாதிபதி குழுவொன்றின் மூலம் அதிகளவு இயங்கியதுடன் பாராளுமன்றத்தில்
இருந்து சுயாதீனமாகவும் அரசியலமைப்பையும் சட்ட விதிகளையும் அதிகளவு அலட்சியம் செய்து இயங்கினார். ஜனாதிபதி,
வேலை நிறுத்தங்களை தடை செய்ய, ஊடகங்களை அச்சுறுத்த மற்றும் விசாரணையின்றி பரந்தளவில் கைதுகளை மேற்கொள்ளவும்,
இன்னமும் அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தின் கீழ் தனக்குள்ள விரிவான அதிகாரங்களை வசதியாகக் கையாண்டார்.
பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்புடன் செயற்பட்ட அரசாங்க-சார்பு கொலைப் படைகள், அரசியல்வாதிகள்
மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை கொலை செய்துள்ளன.
புலிகள் மீதான இராணுவ "வெற்றியை" அரசியல் ரீதியில் சுரண்டிக்கொள்ள முடியும்
என கணக்கிட்டு, தன்னை அதிகாரத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே
இராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். கொடூரமான மோதல்கள் மத்தியில் நடந்த ஜனவரி 26
ஜனாதிபதி தேர்தலில், தமது "பொது வேட்பாளராக" நாட்டின் முன்னாள் உயர்மட்ட ஜெனரல் சரத்
பொன்சேகாவை எதிர்க் கட்சிகள் ஆதரித்தன. இராஜபக்ஷவின் உள்வட்டாரத்தின் பாகமாக இருந்த பொன்சேகா,
ஜனாதிபதியுடன் முரண்பட்டுக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த நவம்பரில் இராஜனாமா செய்தார்.
இராஜபக்ஷவின் தேர்தல் வெற்றி, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாறாக, நாட்டின்
ஆளும் வட்டாரத்துக்குள் நடக்கும் கோஷ்டி மோதல்களாக மட்டுமே விவரிக்கக் கூடிய நிலைமையை
ஏற்படுத்தியுள்ளது. தோல்வியை ஏற்றுக்கொள்ளாத பொன்சேகா, சட்ட ரீதியில் சவால் செய்வதாக
அச்சுறுத்தினார். பொன்சேகா, இராஜபக்ஷவை தூக்கிவீச திட்டமிட்டார் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டின்
அடிப்படையில், அவரை இராணுவத்தை விட்டு கைது செய்ததன் மூலம் கடந்த வாரம் அரசாங்கம் இதனை
பிரதிபலித்தது.
மறுநாள் பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி பொதுத் தேர்தலுக்கு ஏப்பிரல் 8ம்
திகதியை குறித்துள்ளார். அது இப்போது பீதி மற்றும் அச்சுறுத்தல் நிறைந்த அரசியல் சூழ்நிலையில் இடம்பெறுகிறது.
அரசியலமைப்பை மாற்றி, அதன் மூலம் இராஜபக்ஷவின் எதேச்சதிகார ஆட்சிக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்க
வழிவகுப்பதன் பேரில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதே இலக்கு என அரசாங்கம் ஏற்கனவே
அறிவித்துள்ளது.
கொழும்பு ஸ்தாபனத்தில் நடக்கும் உள் மோதலின் சகல குரோதங்களையும்
பொறுத்தளவில், இந்த குழு முரண்பாடுகள், உழைக்கும் மக்கள் மீது புதிய பொருளாதாரச் சுமைகளை எவ்வாறு
திணிப்பது மற்றும் பெரும் வல்லரசுகளுக்கு இடையில், குறிப்பாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில்
கூர்மையடைந்துவரும் பகைமையில் எந்தப் பக்கம் அணிசேர்வது போன்ற தந்திரோபாய பண்பையே கொண்டுள்ளன.
இராஜபக்ஷவின் அதிதீவிர நகர்வுகள், தீவில் வர்க்க பதட்ட நிலைமைகள் வெடிக்கும் நிலைமையை நெருங்குகின்றன
என்பதற்கான நிச்சயமான அறிகுறியாகும்.
கிரேக்க கடன்கள் சர்வதேச தலைப்புச் செய்திகளாக உள்ள அதே வேளை,
இலங்கையிலான பொருளாதார நெருக்கடி இதே போன்ற பருமனைக் கொண்டுள்ளது. 2009 முதல் 10
மாதங்களில், நாட்டின் மொத்த கடன் தொகை நான்கு ட்ரில்லியன் ரூபாய்களை (35 பில்லியன் டொலர்கள்)
நெருங்கியது. சர்வதேச நாணய நிதியத்தின் படி, மொத்த தேசிய உற்பத்தியுடனான மொத்த பொதுக் கடன்
வீதம், 2008ல் 87 வீதத்தை எட்டியது. வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியுடன்
11.3 வீதமாக அதிகரித்துள்ளதோடு 2011ன் முடிவில் இந்த வீதம் 5 வீதமாக குறைக்கப்பட வேண்டும் என
சர்வதேச நாணய நிதியம் கோருகின்றது.
அரசாங்கம் பொதுச் செலவை மேலும் வெட்டித்தள்ள நடவடிக்கை எடுக்க
வேண்டியுள்ளது என கடந்த வாரம் கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், ஹொங்கொங் அன்ட் ஷங்ஹாய் பேங்க்
கோபரேஷனின் சிரேஷ்ட பொருளியலாளர் ரொபேர்ட் பிரியர்-வன்டேஸ்ஃபோர்ட் தெரிவித்தார். இராஜபக்ஷவின்
பொருளாதார தரவுகளை நிராகரித்த பிரியர்-வன்டேஸ்ஃபோர்ட் தெரிவித்ததாவது: "அவர் பயங்கரவாதிகளுக்கு
[புலிகளுக்கு] செய்தது போல் இதைச் செய்ய வேண்டும். இலங்கை அதன் மூலவாய்ப்பு வளத்தை அடைவதை
தடுக்கக்கூடிய காரணி, கவனமின்மை, வீணடிப்புகள் மற்றும் அரசாங்க செலவில் மோசடி போன்றவையாகும்."
கிரேக்க பொருளாதார நடவடிக்கைகளை இப்போது இலங்கையில் மிகவும் பரவலாக
பயன்படுத்த வேண்டும். ஆனால், தெளிவான உண்மை என்னவெனில், பிரமாண்டமான புதிய பொருளாதார சுமைகள்
தொடர்பாக வெகுஜன எதிர்ப்புக்கள் வளர்ச்சியடைகின்ற நிலையில், இலங்கையின் அரசியல் வழிமுறைகள் கிரேக்கத்திலும்
ஏனைய இடங்களிலும் பயன்படுத்தப்படும். இந்த நெருக்கடி, இலங்கை போன்ற பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட
நாடுகளில் இருந்தும் மற்றும் கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து போன்ற ஐரோப்பிய
நாடுகளின் பிரச்சினைகளில் இருந்தும் தனிமைப்பட்டதல்ல. கிரேக்கத்திலான நெருக்கடியானது ஜேர்மனி மற்றும் பிரான்ஸ்
மீது கனமாக தாக்கத்தை ஏற்படுத்துவதோடு ஐரோப்பிய ஒன்றியம் பூராவும் எதிரொலிக்கும். அமெரிக்காவைப்
போலவே பிரிட்டனும் கடுமையாக கடன்பட்டுள்ளது. தனது டொலர் சர்வதேச சேமிப்பு நாணயமாக இன்னமும்
இருப்பதன் காரணமாக, அமெரிக்கா அதன் வரவுசெலவு பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் 10.6
வீதமாக வைத்துகொள்ள முடிந்துள்ளது.
தற்போதைய பூகோள பொருளாதரா நெருக்கடி, ஒரு தற்காலிக இயல்நிகழ்வு
அல்ல. மாறாக, இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலக முதலாளித்துவத்தின் சமநிலையை மீள் ஸ்தாபிதம் செய்ய
நடைமுறைப்படுத்தப்பட்ட வழிமுறையின் பொறிவின் விளைவாகும். யுத்தத்தின் பின்னரான மீள் ஸ்தாபிதத்துக்கு மையமாக
விளங்கிய அமெரிக்கா, இப்போது பொருளாதார வீழ்ச்சியில் இருப்பதோடு அது தற்போதைய நிதி கொந்தளிப்பின்
மையமாகவும் உள்ளது. குறிப்பிட்ட பொருளாதாரங்களின் அல்லது ஒட்டு மொத்த பூகோள பொருளாதாரத்தின் குறுகிய
கால வளர்ச்சி வீழ்ச்சி என்னவாக இருந்தாலும், உலகம் புதிய பொருளாதார கொந்தளிப்புக்குள் நுழைந்துள்ளது.
அது தொழிலாள வர்க்கத்துக்கு ஆழமான அரசியல் உள்ளர்த்தங்களைக் கொண்டுள்ளது.
இலங்கையிலான எச்சரிக்கை அறிகுறிகளை நிராகரிக்கும் எவரும் மோசமான பிழையை
செய்தவராவார். அதன் குறிப்பிடத்தக்க வரலாறு மற்றும் பூகோள பொருளாதாரத்துடனான அதன் உறவின்
காரணமாக, இந்த சிறிய தீவு, சர்வதேச ரீதியில் இடம்பெறும் பொருளாதார மற்றும் அரசியல் முன்னெடுப்புகளை
அடிக்கடி கூர்மையாக பிரதிபலிக்கின்றது. இறுதி ஆய்வுகளில், உக்கிரமடைந்துவரும் பொருளாதார மற்றும் சமூக
பட்ட நிலைமைகளின் மத்தியில், உலகம் பூராவும் உள்ள ஆளும் தட்டுக்கள், இலங்கை வழிமுறையை ஏற்றுக்கொள்வதன்
மூலம் தமது சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ள தள்ளப்படுகின்றன.
தொழிலாள வர்க்கம் அவசியமான முடிவை பெறவேண்டும்: தொழிலாள வர்க்கத்தின்
அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை காப்பதற்கான ஒரே வழி, தற்போதைய சமூக
ஒழுங்கை தூக்கி வீசி, ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, பெரும்பான்மை மக்களின் எரியும்
தேவைகளை இட்டு நிரப்புவதற்காக சமுதாயத்தை மறு கட்டமைப்பு செய்வதாகும்.