World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka's top court to hear challenge to candidate's arrest

இலங்கை உயர் நீதிமன்றம் வேட்பாளர் கைது செய்யப்பட்டமைக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது

By K. Ratnayake
13 February 2010

Back to screen version

அரசாங்க சட்டத்தரணிகள் நேற்று முன்வைத்த எதிர்ப்புக்களை நிராகரித்த இலங்கை உயர் நீதிமன்றம், ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டுள்ளதை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரிக்க முடிவு செய்தது. கடந்த நவம்பரில் நாட்டின் உயர்மட்ட ஜெனரல் பதவியில் இருந்து இராஜனாமா செய்த பொன்சேகா, ஜனவரி 26 நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவிடம் தோல்வியடைந்தார்.

மிகவும் சூடேரிய அரசியல் சூழ்நிலைக்குள் இந்த வழக்கு நடக்கின்றது. இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் கட்டளையின் பேரில் இராணுவ பொலிசாரால் கடந்த திங்கட் கிழமை பலாத்காரமாக கைது செய்யப்பட்ட பொன்சேகா, கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது கைதானது அவரது ஆதரவாளர்களும் உதவியாளர்களும் கைது செய்யப்பட்டமை உட்பட அரசாங்கத்தின் பரந்த பாய்ச்சலின் ஒரு பகுதியாகும்.

நேற்றைய விசாரணைகளுக்கு முன்னதாக, கனமாக ஆயுதம் தரித்த கமான்டோக்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொலிசார், எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) ஆதரவாளர்களை அச்சுறுத்துவதற்காக நீதிமன்ற வளாகத்தை சுற்றி வளைத்திருந்தனர். சகல வாகனங்களும் சோதனையிடப்பட்டதோடு பாதசாரிகள் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

அரசாங்க பேச்சாளர், பொன்சேகா அரசாங்கத்தை சதிப் புரட்சி மூலம் தூக்கி வீசுவதற்கு எதிர்க் கட்சிகளுடன் சதி செய்தார் என்பது உட்பட அவருக்கு எதிராக ஆதாரமற்ற பலவித குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். வியாழக் கிழமை, சிங்கப்பூர் ஸ்ரெயிட்ஸ் டைம்ஸ் ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில், ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ, பொன்சேகா "நிச்சயமாக ஒரு சதிப் புரட்சியை" திட்டமிட்டார் என பிரகடனம் செய்தார். நன்கு முன்னதாகவே தான் திட்டமிட்டவாறு பொன்சேகாவின் குற்றங்கள் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என விளைபயனுள்ள வகையில் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

அரசாங்கமும் இராணுவமும் இன்னமும் ஆதாரங்களை நிரூபிக்கவில்லை. பாதுகாப்புச் செயலாளர் கூறிக்கொண்டதாவது: "அவர் இராணுவத் தளபதியாக இருந்த கடைசிக் காலகட்டத்தில், தனது விசுவாசிகளை கொழும்புக்கும் அவரது படைப்பிரிவுக்கும் கொண்டுவந்த அவர் [பொன்சேகா], தனது படைப்பிரிவில் இருந்த சிரேஷ்ட உறுப்பினர்களை எல்லா இடங்களிலும் பதவியில் அமர்த்தினார். இவை அனைத்தும் இராணுவ சதிப் புரட்சியாகவே தோன்றுகிறது.

எவ்வாறெனினும், அந்த சந்தர்ப்பத்தில் பொன்சேகா கைது செய்யப்படவில்லை. மாறாக, அவர் கடந்த ஜூன் மாதம், அதாவது ஏழு மாதங்களுக்கு முன்னர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக பதவி உயர்த்தப்பட்டார். அவரை ஒரு அரசியல் அச்சுறுத்தலாக அரசாங்கம் கருதுவதாலும் மற்றும் அவரது கைதை பயன்படுத்தி எதிரிகளை அச்சுறுத்த முடியும் என்ற ஒரே காரணத்துக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்சேகா கைது செய்யப்பட்டு மறுநாள், பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி இராஜபக்ஷ, ஏப்பிரல் 8ம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதாக அறிவித்தார்.

இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு, பாதுகாப்புச் செயலாளர் இராஜபக்ஷ, இராணுவத் தளபதி ஜயசூரிய, சட்ட மா அதிபர் மற்றும் இராணுவ பொலிஸ் தளபதிக்கும் எதிராக பொன்சேகாவின் விடுதலையைக் கோரி அவரது மனைவி அனோமாவால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, பேச்சு சுதந்திரம், எதேச்சதிகார கைதில் இருந்து விடுதலை மற்றும் அரசியல் கருத்தின் அடிப்படையில் காட்டப்படும் பாரபட்சம் உட்பட பொன்சேகாவின் அரசியலமைப்பு உரிமைகள் பன்மடங்கு மீறப்பட்டடுள்ளதாக குற்றஞ்சாட்டுகிறது.

ஜெனரல் எதேச்சதிகராமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொன்சேகாவின் சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் நீதிமன்றில் தெரிவித்தார். பொன்சேகா கைது செய்யப்படும் போது அவருக்கு குற்றப் பத்திரிகை கொடுக்கப்படவில்லை என்றும் ஐந்து நாட்கள் ஆகியும் இன்னமும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் பிரதிநிதி எஸ். இராஜரட்னம், பொன்சேகா கைது செய்யப்படும் போது அவருக்கு குற்றச்சாட்டுக்கள் பற்றி தெரிவிக்கப்பட்டது என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட பிரதிவாதியின் சட்டத்தரணிகள் "அது பொய்" என தெரிவித்ததோடு ஜெனரலை நாயைப் போல் இழுத்துச் சென்றுள்ளார்கள் என தெரிவித்தனர். அந்த சந்தர்ப்பத்தில் பொன்சேகாவுடன் இருந்த நான்கு எதிர்க் கட்சி அரசியல்வாதிகளின் சத்தியக் கடதாசிகளை இணைத்திருப்பதாக அஸீஸ் தெரிவித்தார்.

இராணுவ பொலிஸ் பயன்படுத்தப்பட்டமை மற்றும் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்துகின்றமை போன்றவற்றையும் எதிர்த்தி அஸீஸ், இந்த முன்னால் தளபதிக்கு இராணுவ சட்டம் பொருந்தாது என்றும் வாதிட்டார். சிவில் சட்டத்தின் கீழ் மட்டுமே பொன்சேகா மீது குற்றஞ்சாட்ட முடியும் எனத் தெரிவித்த பிரதிவாதியின் சட்டத்தரணி இந்த கைதையும் தடுத்துவைப்பையும் "சட்ட விரோதமானது" என வகைப்படுத்தினார்.

மனு சரியாக வரையப்படவில்லை என கூறி, நுட்ப பிரச்சினைகளின் மூலம் மனுவை இரத்துச் செய்யும் முயற்சியில் அரசாங்க சட்டத்தரணி இராஜரட்னம் ஈடுபட்டார். பொன்சேகா இராணுவக் கைதில் இருந்தாலும், தனது கனவன் சார்பாக அனோமா பொன்சேகா மனு தாக்கல் செய்ய முடியாது எனவும் அவர் வாதிட்டார். பிரதம நீதியரசர் அசோக டீ சில்வா, ஷிரானி திலகவர்தன, சநிரா ஏக்கநாக்க ஆகிய மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளும் அந்த வாதத்தை நிராகரித்தனர். அடுத்த விசாரணை பெப்பிரவரி 23 நடக்கவுள்ளது.

இந்த நீதிமன்ற வழக்கு ஒரு வெற்றி என யூ.என்.பி. தலைவர் கரு ஜயசூரியவரும் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் கூறிக்கொண்டனர். ஆயினும், அரசாங்கத்துக்கும் எதிர்க் கட்சி முகாங்களுக்கும் இடையில், ஆளும் வட்டாரத்தினுள் நடக்கும் கூர்மையான உள் மோதல்களின் மத்தியில் நீதிமன்றம் உட்பட முழு அரச இயந்திரமும் மேலும் மேலும் அரசியல்மயமாகி வருகின்றன. உயர் நீதிமன்றம் இப்போது இந்த கூர்மையான அரசியல் பதட்ட நிலைமைகளின் குவிமையமாகியுள்ளது.

கொழும்பு அரசியல் ஸ்தாபனத்திலான இந்த கூர்மையான தந்திரோபாய வேறுபாடுகள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த மே மாதம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னரே வெடித்தது. எதிர்க் கட்சி, யுத்தத்தை ஆதரித்ததோடு அரசாங்கத்தின் சந்தை-சார்பு பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் ஆதரித்த போதிலும், அது இராஜபக்ஷவின் ஜனநாயக-விரோத வழிமுறைகளை எதிர்ப்பதோடு அவரது மேற்குலக எதிர்ப்பு நிலைப்பாட்டையும் விமர்சிக்கின்றன. இந்த முரண்பாடுகளின் கொடூரத் தன்மை, தீவின் பொருளாதார நெருக்கடியால் உருவாக்கப்பட்டுள்ள ஆழமடைந்துவரும் சமூக பதட்ட நிலைமைகளை பிரதிபலிக்கின்றன.

யூ.என்.பி. யும் ஜே.வி.பி. யும் பொன்சேகாவின் விடுதலையைக் கோரி பல போராட்டங்களை நடத்தியிருந்த போதிலும், பொலிசாரதும் அரசாங்க-சார்பு குண்டர்களதும் வன்முறைத் தாக்குதல்களை எதிர்கொண்டன. கடந்த மூன்று நாட்களாக கொழும்பு, கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகம மற்றும் தெற்கு நகரங்களான காலி மற்றும் மாத்தறையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் பொலிசாரால் கண்ணீர் புகை, தண்ணீர் அடித்தல் மற்றும் குண்டாந்தடி தாக்குதல்களின் மூலம் கலைக்கப்பட்டன. இந்த ஒவ்வொரு இடங்களிலும், பொலிசாரின் பாதுகாப்பில் இருந்த ஆயுதபாணி குண்டர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கினர்.

வியாழன் அன்று, புதன் கிழமை கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட எட்டு பேரை நீதவான் நீதிமன்றுக்கு பொலிசார் கொண்டு வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமது கட்சிக்காரரையே பொலிசார் கைது செய்துள்ளனர், ஆனால் அவர்கள் ஆர்பபாட்டக்காரர்களை தாக்கிய ஆயுதபாணி குண்டர்களை கைதுசெய்யத் தவறிவிட்டனர் என பிரதிவாதிகளின் சட்டத்தரணி மன்றில் விளக்கினார். பொலிசாரை கண்டனம் செய்த நீதவான், உண்மையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கட்டளையிட்டார்.

பொன்சேகா கைது செய்யப்பட்டு கடந்த நான்கு நாட்களில் கொழும்பு பங்குச் சந்தை 2.1 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை, அரசியல் நிலைமை சீரழிந்து வருவது சம்பந்தமாக வர்த்தக வட்டாரத்தினர் உணர்ச்சிவசமடைந்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. வெள்ளிக் கிழமை, அனைத்து பங்கு விலை சுட்டெண் 14.87 புள்ளிகளால் அல்லது 0.4 வீதத்தால், 3,710 வரை வீழ்ச்சிடைந்தது. இது பெப்பிரவரி 5ன் பின்னர் ஏற்பட்ட குறைந்த மட்டமாகும். யுத்தத்தின் முடிவை அடுத்து ஒரு பொருளாதார விரிவாக்கத்தின் எதிர்பார்ப்பில் நாட்டுக்குள் பெருக்கெடுத்த ஊக மூலதனத்தினால், 2009ல் பெற்ற 125 வீத திரட்சியை அடுத்து, இந்த ஆண்டு இன்னமும் இந்தப் புள்ளி 9.6 ஆக உள்ளது.

பொன்சேகா கைது தொடர்பாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப் பற்றி கலந்துரையாட ஜனாதிபதி இராஜபக்ஷ யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்தார். பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு விக்கிரமசிங்க கேட்டுக்கொண்ட போதிலும், "சட்ட விதிகளுக்கே முதலிடம்" என ஜனாதிபதி சிடுமூஞ்சித்தனமாக வலியுறுத்தி மறுப்புத் தெரிவித்தார்.

அரசாங்கம் மேலும் கைதுகளை முன்னெடுக்கத் தயாராகின்றது. பொன்சேகாவின் சதியில் சேவையில் உள்ள இராணுவத்தினர் மற்றும் சிவிலியன்களின் உடந்தையைப் பற்றி இராணுவமும் பொலிசாரும் விசாரணை நடத்துகின்றனர் என செய்வாய் கிழமை பாதுகாப்பு பேச்சாளர் கெஹெலியே ரம்புக்வெல்ல ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அதே தினம், இராணுவ சிப்பாய்களை தடுத்து வைப்பற்காக பல்வேறு இராணுவ வளாகங்களில் நான்கு தடுப்பு முகாங்களை ஸ்தாபிப்பதை தீவின் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியா வர்த்தமானி மூலம் அறிவித்தார்.

வியாழக் கிழமை, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுனில் டி சில்வாவும் மற்றும் முன்னாள் இராணுவ கட்டளைத் தளபதி நிஹால் சந்திரசிறியும், பொன்சேகாவை ஆதரித்தமைக்காக தாம் கைதுசெய்யப்படவுள்ளோம் எனக் கூறி, கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்கூட்டியே பிணை கோர முயற்சித்தனர். அதே தினம், பொன்சேகாவின் இராணுவ நீதிமன்ற விசாரணையில் சாட்சியமளிக்க ஜே.வி.பி. பொதுச் செயலாளார் டில்வின் சில்வா அழைக்கப்படலாம் என அமைச்சரவை பேச்சாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா அறிவித்தார். யாப்பாவின் படி, ஜெனரல் சேவையில் இருந்த போது சில்வாவிடம் சட்டவிரோதமாக ஆலோசனை கேட்டுள்ளார்.

தனது அரசியல் வேட்டையில் இருந்து பின்வாங்குவதற்குப் பதிலாக, இராஜபக்ஷ அரசாங்கம் ஏப்பிரல் 8 பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தனது பொலிஸ்-அரச நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறது. அரசியலமைப்பை திருத்துவதற்கு அனுமதி பெறுவதற்காக மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதே இலக்கு என அது பகிரங்கமாக தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது ஒட்டு மொத்த தாக்குதலைத் தொடுக்கவும் மற்றும் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் நசுக்குவதற்குமான தயாரிப்பாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved