World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan government prepares new Internet restrictions இலங்கை அரசாங்கம் புதிய இணையத்தள கட்டுப்பாடுகளுக்கு தயாராகின்றது By Sarath Kumara இலங்கை அதிகாரிகள், இன்னுமொரு அடிப்படை ஜனநாயக உரிமை மீறலில், அரசாங்கத்தை விமர்சிக்கும் இணையத் தளங்களை தணிக்கை செய்ய புதிய நடவடிக்கைகளுக்குத் தயாராகின்றனர். கடந்த திங்கட் கிழமை எதிர்க் கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை உட்பட அரசியல் எதிர்ப்புகள் மீதான பரந்தளவான பாய்ச்சலின் மத்தியில், கடந்த இரவு பல இணையத் தளங்களில் இந்தத் திட்டம் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. கொழும்பைத் தளமாகக் கொண்ட நேற்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகையில் மேலும் விபரங்கள் வெளியாகியுள்ளன. தொலைத்தொடர்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையினால் (டி.ஆர்.சி.) வரையப்படும் விதிகளின் கீழ், இணையத்தள மூலக்குறிப்பு (ஐ.பி.) முகவரியை பெற்றுக்கொள்ள அதிகாரியிடம் சகல செய்தி இணையத் தளங்களும் பதிவுசெய்துகொள்வது வலுக்கட்டாயமானதாக்கப்படும். இந்த ஐ.பி. முகவரியை கையாளும் தேசிய கடுகதி இணைய சேவை ஆலோசனை சேவையும், இந்த விதிகளை அமுல்படுத்துவதில் தலையிடும் என டி.ஆர்.சி. அலுவலர் ஒருவர் அந்த பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார். கூகிள் தேடுதல் தளத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கடந்த வாரம் டி.ஆர்.சி. தலைவராக நியமிக்கப்பட்ட தகவல் திணக்கள ஆணையாளர் இதை மறுத்து, ஜனாதிபதி இராஜபக்ஷவிடம் இருந்து தனக்கு இன்னமும் அறிவுரைகள் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார். ஆயினும், ஏற்கனவே நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களை தன் வசம் வைத்துள்ள இராஜபக்ஷ, இணையம் மற்றும் ஏனைய இலத்திரனியல் தொலைத் தொடர்புகள் உட்பட ஊடகங்கள் மீதான இறுக்கமான கட்டுப்பாட்டை மேற்பார்வை செய்வதன் பேரில், கடந்த வாரம் ஊடக அமைச்சை தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இணையத்தள தணிக்கையை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் சீனாவின் உதவியை நாடியுள்ளதாகவும் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இணையத்தள தனிக்கை சம்பந்தமான குற்றச்சாட்டில் பூகோள தேடுதல் தள இராட்சதனான கூகிள் உடன் சச்சரவில் சிக்கிக்கொண்டுள்ள சீனாவின் நிபுணர்கள் 'எதிர்ப்பு இணையத் தளங்களை' தடுக்க இலங்கைக்கு உதவி செய்ய உள்ளதாக அந்த பத்திரிகை விளக்கியுள்ளது. "இந்தக் காரணத்துக்குத் தேவையான வகைதுறைகளை திட்டமிட அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சீனாவின் இராணுவ புலனாய்வுத் துறையில் இருந்து ஐ.டி. நிபுணர்கள் இங்கு வரவுள்ளனர்." சீனாவின் தலையீடு தற்செயலானதல்ல. குவிந்துவரும் சமூக அமைதியின்மை மற்றும் தூர விளைவுகள் கொண்ட இணையத்தள தணிக்கை தொடர்பான பரந்த எதிர்ப்பின் மத்தியில், சீனாவில் விற்கப்படும் சகல சொந்த பாவனை கம்பியூட்டர்களும் அரசாங்க இணைய வடிகட்டு மென்பொருள் புகுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் என பெய்ஜிங் கோருகின்றது. இணையத் தளத்தில் உள்ள பிரமாண்ட எண்ணிக்கையிலான தகவல்களை ஆய்வு செய்ய, மிகவும் மேம்படுத்தப்பட்ட தரவு-தேடும் செயலிகளுடன் பழைய தேடுதல் தளங்களை அடிப்டையாகக் கொண்ட வழிமுறைகளை பதிலீடு செய்வதில் ஈடுபடும் சீன பொலிஸ் திணைக்களங்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. (பார்க்க: "China forced to delay Internet censorship measure")இலங்கை அரசாங்கம், கடந்த மே மாதம் தோல்வியடைந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசி நான்கு ஆண்டுகால யுத்தத்தின் போது தனக்கு நிதி மற்றும் அரசியல் ரீதியிலும் ஆயுதங்களை வழங்குவதன் மூலமும் உதவி செய்த சீனாவின் பக்கம் மேலும் மேலும் இழுபட்டுச் செல்கின்றது. அதற்குப் பிரதியுபகாரமாக, சீனா, இலங்கையின் தெற்கில் உள்ள ஹம்பந்தொட்டையில் ஒரு பிரதான துறைமுகத்தை கட்டுவது உட்பட முதலீட்டு வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்காவுடன் குவிந்துகொண்டிருக்கும் பதட்ட நிலைமையின் மத்தியில், சகல நாடுகளிலும் உள்ள அரசாங்கங்களுடன் சீனா மூலோபாய கூட்டணியை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப்பதோடு அவற்றில் இலங்கையும் அடங்கும். இணையத்தள கட்டுரைகள் மற்றும் செய்திகளில் உள்ளடங்கியுள்ளவற்றை கண்காணிக்க இலத்திரணியல் கண்காணிப்பு முறையில் சீன பொறியியலாளர்கள் வேலை செய்வார்கள் என்ற செய்தியை பெல்பிட்ட நிராகரித்தார். ஆயினும், புதிய விதிகளின் தேவையை அவர் வலியுறுத்தினார். "எங்களிடம் இன்னமும் அத்தகைய விதிமுறைகள் இல்லை. ஆனால் உள்ளடக்கங்களை கண்காணிக்கும் மற்றும் விதிமுறைக்குட்படுத்தும் முறையான திட்டமொன்று இருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்," என அவர் தெரிவித்தார். அரசியல், கலாச்சாரம், மதம் அல்லது இலக்கியம் சார்ந்த உள்ளடக்கமாக இருந்தாலும் சரி, அவை "சமுதாயத்தில் பிரச்சினைகளை உருவாக்குமானால்" அவற்றை சோதனையிட வேண்டும் என பெல்பிட்ட தெரிவித்தார். அரசாங்கத்தை விமர்சித்து ஃபேஸ் புக்கில் எழுதிய மற்றும் ஏளனம் செய்யும் செய்திகளை அனுப்பியவர்களை டி.ஆர்.சி. தேடிக் கண்டுபிடித்தது என்பதை பெல்பிட்ட மறுத்தார். ஆயினும், தேர்தல் மோசடி செய்ததாக அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி தொலைபேசிகளில் குறுந்தகவல்களை அனுப்பியதாகக் கூறி பல எதிர்க்கட்சி ஆதரவாளர்களை பொலிசார் ஏற்கனவே கைதுசெய்துள்ளனர். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் ஆணையாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்ததாவது: "சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர், விசாரணைகள் முடிவடைந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்." குற்றச்சாட்டுக்களின் வகையை அல்லது எத்தனைபேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்களை தர அவர் மறுத்துவிட்டார். "மத மற்றும் கலாச்சார விழுமியங்களையும்" "தேசிய நலன்களையும்" பாதுகாத்தல் என்ற பெயரில், எதேச்சதிகாரமான அரசியல் கட்டுப்பாடுகள், மக்களால் பார்க்கக்கூடிய மற்றும் கேட்கக்கூடியவற்றின் மீதும் திணிக்கப்படவுள்ளன. வெகுஜன ஊடக மற்றும் தகவல் தொடர்பு அமைச்சின் ஆலோசகர் சரித்த ஹேரத் தெரிவித்ததாவது: "எங்களது தேசிய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், எனவே உள்ளடக்க விதிமுறைகள் என்ற விடயம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டியது முக்கியமானதாகும்." இத்தகைய தயாரிப்புகள், கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் ஏனையவர்களின் கருத்துக்களை தெரிந்துகொள்ளும் சுதந்திரத்தின் மீதான அரசாங்கத்தின் தாக்குதலின் புதிய கட்டத்துக்குச் சமமானவை. அரசாங்கம் குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்கள் பற்றி அக்கறை கொண்டுள்ளது. ஏனெனில், தொலைத்தொடர்பு தொழிற்துறை மதிப்பீட்டின்படி, இலங்கையில் இப்போது பதின்மூன்று மில்லியன் நடமாடும் தொலைபேசி பாவனையாளர்களும் ஒரு மில்லியன் இணையப் பாவனையாளர்களும் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக, இராஜபக்ஷ அரசாங்கம் ஊடகங்கள் மீதான தாக்குதலை உக்கிரப்படுத்தியுள்ளது. அது புலிகளுக்கு சார்பான தமிழ்நெட் மற்றும் தமிழ் கனேடியன் இணையங்களை தடுத்துள்ளதோடு அந்தத் தடையை இன்னமும் முன்னெடுக்கின்றது. அண்மையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, லங்கா ஈ நியூஸ் மற்றும் நிதாச என்ற இணையத் தளங்களை அதிகாரிகள் தடுத்தார்கள். 2006 மற்றும் 2009ம் ஆண்டுகளுக்கு இடையில், பத்திரிகையாளர்கள் உட்பட 14 ஊடக சேவையாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவானவர்கள் தொந்தரவு, அச்சுறுத்தல், அடி அல்லது கைதுகளை சந்தித்துள்ளதோடு உயிராபத்துக்குப் பயந்து சுமார் பத்து பன்னிரண்டு பேர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இதுவரை குற்றவாளிகள் எவரும் கைதுசெய்யப்படவோ தண்டனை வழங்கப்படவோ இல்லை. ஒராண்டுக்கு முன்னர், ஆயுதக் கும்பல் ஒன்று எம்.டி.வி./சிரச ஒளிபரப்பு நிலையங்களை நாசம் செய்தோடு, இன்னுமொரு தனியான சம்பவத்தில், ஒரு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்கு அருகில் கொழும்பு புறநகர் பகுதியில் சண்டே லீடர் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் பட்டப் பகலில் கொல்லப்பட்டார். கடந்த செப்டெம்பரில், கொழும்பு நீதிமன்றம் தமிழ் ஊடகவியலாளரான ஜே.எஸ். திஸ்ஸநாயகத்தை பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ், முன்னெப்போதுமில்லாதவாறு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. புலிகள் மீதான புதுப்பிக்கப்பட்ட யுத்தம் மற்றும் தமிழ் பொது மக்கள் மீதான அதன் தாக்கங்கள் பற்றி விமர்சித்து 2006 மற்றும் 2007ல் நோர்த் ஈஸ்ரன் மன்த்லி சஞ்சிகையில் எழுதிய இரு கட்டுரைகள் தொடர்பாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஜனவரி 26 ஜனாதிபதி தேர்தலுடன் சேர்த்து, மேலும் ஊடகவியளாளர்கள் காணாமல் போகும் சம்பவங்களும் கைதுகளும் இடம்பெற்றுள்ளன. லங்கா ஈ நியுஸில் வேலை செய்த பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட, ஜனவரி 24 முதல் காணாமல் போயுள்ளார். தேர்தல் முடிந்து ஒரு சில நாட்களில், எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னிணியின் (ஜே.வி.பி.) ஆதரவு பத்திரிகையான லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த கைது செய்ப்பட்டு இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எதிர்க் கட்சி வேட்பாளர் பொன்சேகா கைது செய்யப்பட்டமை, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளும் மற்றும் ஜெனரலுக்கு ஆதரவளித்த ஏனைய ஆதரவாளர்களும் கைதுசெய்ப்பட்ட பரந்த வலைவீச்சின் ஒரு பாகமாகும். இணைய தணிக்கைகளை திணிக்க எடுக்கும் கடைசி முயற்சிகள், பொலிஸ் அரசை ஸ்தாபிப்பதை நோக்கிய இன்னுமொரு அடியெடுப்பாகும். இத்தகைய நடவடிக்கைகள், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஏப்பிரல் 8 நடக்கவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான நகர்வில் எதிர்க் கட்சிகளை அடக்குவதற்கு பயன்படுத்தப்படலாம். |