World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குSouth Africa 20 years after Mandela's release மண்டேலா விடுவிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பின் தென்னாபிரிக்கா Ann Talbot இருபது ஆண்டுகளுக்கு முன்னர் விக்டர் வெர்ஸ்டர் சிறையில் இருந்து நெல்சன் மண்டேலா சுதந்திரமாக வெளியேறினார். 1990 பெப்ருவரி 2ல் அவர் விடுவிக்கப்பட்டமை தென்னாபிரிக்காவில் பெரும்பான்மையான கறுப்பு மற்ற வெள்ளையினம் அல்லாதவர்கள் மீதான கடுமையான இனப்பாகுபாட்டு முறையினதும் மற்றும் வாக்குரிமை மறுப்பு என்பதனதும் மீதான நிறவழி பாகுபாட்டு முறையின் முடிவு என அறிவிக்கப்பட்டது. 1994ல் வந்த தேர்தல்கள் நாட்டின் ஜனாதிபதியாக மண்டேலாவை பதவிக்கு கொண்டுவந்தபோது நாடு "ஒரு வானவில் போன்ற நாடு" என்று பாராட்டப்பட்டது. நிறப்பாகுபாடு முடிவிற்கு கொண்டுவரப்பட்டுவிட்டாலும், இரு தசாப்தங்களுக்கு பின்னர் உலகின் மிகச் சமத்துவமற்ற நாடுகளில் தென்னாபிரிக்கா ஒன்றாக இருக்கின்றது. அரசியலில் பெற்றுக்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிகள்கூட கூடுதலான சமூகப் பொருளாதார சமத்துவத்துவத்திற்கு வாய்ப்பை அளிக்கவில்லை. மாறாக செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பிளவுகள் பெரிதாகிவிட்டன, 1990ல் இருந்ததைக் காட்டிலும் அதிக தென்னாபிரிக்க மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மக்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின்கீழ் வசிக்கின்றனர். எந்த உண்மையான மதிப்பீட்டின்படியும், வேலையின்மை மொத்த மக்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் என்று உள்ளது. அதே நேரத்தில் சமூகத்தில் செல்வம் கொழித்த உறுப்பினர்கள் தங்கள் ஆண்டு வருமானத்தை 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளனர். வேறுபட்ட இனவழிக் குழுக்களுக்கு இடையேயும், ஒவ்வொரு இனக்குழுக்களுக்குள்ளும் சமூக சமத்துவமின்மை வளர்ந்துவிட்டது. பெரும்பாலான தென்னாபிரிக்க கறுப்பினத்தவர்கள் இன்னமும் வறுமையில்தான் வாழ்கின்றனர். ஆனால் உயர்மட்டத்தில் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் (ANC) இருக்கும் சிறிய எண்ணிக்கையினர் பில்லியனர்களாக மாறி, நிறப்பாகுபாடு இருந்த தென்னாபிரிக்காவை ஆட்சி செய்த செல்வ உயரடுக்கில் சேர்ந்துவிட்டனர். ஆண்டு விழாக்களில் சிரில் ராமபோசா ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு மண்டேலா சிறையை விட்டு வெளியே வந்தபோது, தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அவரை வரவேற்றார். இன்று தென்னாபிரிக்காவில் உள்ள பெரும் செல்வந்தர்களுள் அவரும் ஒருவர் ஆவார். அவருக்கும், அவரைப் போன்றவர்களுக்கும் சுய செல்வக்குவிப்பிற்கு மகத்தான வாய்ப்புக்களை கொடுத்த தற்போதைய அரசாங்கத்தை பாராட்டுவதற்கு அவர் விழாவைப் பயன்படுத்தியதில் வியப்பு ஏதும் இல்லை. "இன்று அதிகாரக்கோல் நம்முடைய தலைவர் தோழர் ஜாகோப் ஜுமாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் செங்கோலை எடுத்துக் கொண்டு நாட்டை முன்னேற்றுவிக்க வழிநடத்துகிறார்." என்று சிறைக்கு வெளியே கூடியிருந்த கூட்டத்திற்கு ராமபோசா கூறினார். ஏற்பட்டுள்ள மாறுதல்களின் உருவகமாக ராமபோசா உள்ளார். கறுப்பின பொருளாதார வலிமையளித்தல் திட்டத்தின் (Black Economic Empowerment programme) கீழ் பயன் அடைந்தவர்களுள் அவரும் ஒருவராவார். அதன்படி ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் (ANC) முக்கிய உறுப்பினர்களுக்கு அதிகாரங்களில் பங்குகளை கொடுத்தது. அவருடன் இருந்த திவோர் மானுவேல் நிதி மந்திரியாக தென்னாபிரிக்க பொருளாதாரத்தை உலகச் சந்தைகளுக்கு திறந்துவிடும் உந்ததுலை வழிநடத்தினார். முன்பு மந்திரியாக இருந்தபோது கொண்டுவந்த அதே தடையற்ற சந்தை கொள்கைகளை அவர் இப்பொழுதும் தொடர்கிறார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் புதிய தாராள பொருளாதார முன்னோக்கு பல மில்லியன் கணக்கான வேலைகள் இழப்பிற்கு வகை செய்தது. தொழில்துறை தனியார்மயம் ஆக்கப்படுவதற்கு தயாராக உள்ள நிலையில், வரவிருக்கும் மின்சார விலை உயர்வு அடுத்த சில மாதங்களில் 200,000 வேலைகள் இழப்பிற்கு வகை செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராமபோசாவும் மானுவேலும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸிற்கும் அவர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்த மக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவைப் பிரதிபலிக்கின்றனர். கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே, ஜோஹன்ஸ்பேர்க் அருகே உள்ள Siyathamba போன்ற சிறு நகரங்களில் வேலையின்மைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டு விழாக்கள் முடிந்தபின் Siyathemba விற்கு சென்ற ஜுமா வேலைகள் கிடைக்கும், வீடுகள் கட்டப்படும், வறுமை அகற்றப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் ஓராண்டிற்கு பின்னர் நிலைமை அப்படியேதான் உள்ளது. ஆயினும் சிறு நகரங்களில், குறிப்பாக கறுப்பின இளைஞர்கள் நடத்திய போராட்டம்தான் ஆபிரிக்க தேசிய காங்கிரஸை அதிகாரத்திற்குக் கொண்டுவந்தது. 1985ல் நிறவெறிப் பாகுபாடு காட்டிய அரசாங்கம் இந்த தொழிலாள வர்க்க மக்கள் நிறைந்த பகுதிகளில் கட்டுப்பாட்டை இழந்து ஒரு அவசரகால நிலைமையை அறிவித்தது. நாடே உள்நாட்டு யுத்தத்தின் விளிம்பில் நின்றது. ஆட்சியின் சில பிரிவினரும் முக்கிய வணிகர்களும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸுடன் பேச்சை தொடங்கினர். இந்த அமைப்பு ஒன்றுதான் ஒரு புரட்சிகர எழுச்சியை அடக்க முடியும் என்பதை அவர்கள் உணர்ந்தனர். சிறையில் இருந்து மண்டேலாவை விடுவித்த முன்னாள் ஜனாதிபதி F.W.De.கிளார்க் விழாவைப் போற்றும் ஒரு கூட்டத்தில் தெரிவித்தார்: "பெப்ருவரி 2, 1990ன் 20 வது ஆண்டு நிறைவை கொண்டாடுவது முறையே ஆகும். இது என்னுடைய பங்கையோ, மற்ற தனிநபர் மற்றும் கட்சியின் பங்கைப் பாராட்டுதல் என்று இல்லாமல், பேரழிவைத் தடுத்த நிகழ்வு என்பது பாராட்டப்பட வேண்டும்." "தான் மண்டேலாவை விடுவிக்காவிட்டால் தொடர்ந்து வந்திருக்கும் புரட்சி, அடக்குமுறை என்ற வட்டங்களுக்குள் திருப்திகரமான, பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாடு என்பதற்கான வாய்ப்பு குறைந்து போயிருக்கும்" என்று டி. கிளார்க் கூறினார். பெருகியமுறையில் செல்வாக்கு இழந்துவரும் ஜூமா நிர்வாகத்திற்கும் மண்டேலாவிற்கும் இடையேகூட ஒரு நேரடித் தொடர்பு உள்ளது. இருவருமே தென்னாபிரிக்காவில் முதலாளித்துவத்தை தக்க வைக்க முற்பட்டனர். 91 வயது மண்டேலா பாராளுமன்றக் கூட்டு மன்றங்கள் கூட்டத்தில் ஜுமா நாட்டின் நிலையைப் பற்றி ஆற்றிய உரையைக் கேட்க வந்து, தனக்கு பின் பதவிக்கு வந்தவரின் வணிக சார்புடைய செயல்பட்டியலுக்கும் தன் ஆசியை வழங்கினார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அரசாங்கம் "ஐரோப்பியரல்லாத முதலாளித்துவ வர்க்க செழிப்பிற்கு புதிய துறைகளை திறக்கும்" என்று மண்டேலா எப்பொழுதும் கூறிவந்தார். 1956லேயே அவர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதிகாரத்திற்கு வந்தால், "இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக ஐரோப்பியர் அல்லாத முதலாளித்துவம் தன்னுடைய பெயரில் மில்களையும் ஆலைகளையும் கொண்டு, செயல்படும்; வணிக, தனியார் நிறுவனங்கள் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு செழிக்கும்" என்று உறுதியளித்தார். 1970களின் கடைசிப் பகுதியில் Robbon Island கைதிகளிடையே கடுமையான கொள்கை பற்றிய விவாதம் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் சுதந்திரப் பிரகடனத்தின் தன்மை பற்றி நடைபெற்றது. அது ஒரு சோசலிச ஆவணம் என்று வாதிட்ட கைதிகளை மண்டேலா எதிர்த்தார். பட்டயத்தின் நோக்கம் ஒரு முதலாளித்துவ ஜனநாயகத்தை நிறுவி முதலாளித்துவ முறையைத் தக்க வைப்பதுதான் என்று அவர் வலியுறுத்தினார் அதுதான் அவருடைய அரசாங்கம் துல்லியமாக சாதித்தது, ஜுமாவும் தொடர்வது அதைத்தான். ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் இப்பொழுது செல்வம் படைத்துள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கடந்தகால தீவிரவாத அலங்காரச் சொற்களை மீண்டும் கூற வாய்ப்பு கொடுத்து, தங்கள் ஆதரவாளர்களுக்கு அரசாங்கம் சமூகச் சமத்துவமின்மைப் பிரச்சினையையும் தீர்க்கும் என உறுதிகூற வைத்தது. ஆனால் தென்னாபிரிக்காவில் சமூக நிலைமைகள் வெள்ளையானாலும், கறுப்பானாலும் முதலாளித்துவத்தினால் 1990 இலும் இன்றும் நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளை ஜனநாயக முறையில் தீர்க்க முடியாத என்பதைத்தான் நிரூபிக்கின்றன. அதே பிரச்சினைகள்தான் இன்றும் தொடர்கின்றன. இப்பொழுது அனைவருக்கும் வாக்குரிமை உள்ளது; ஆனால் பெயரளவிற்கு ஜனநாயகம் உள்ளது என்பதைத் தவிர வேறு எதையும் இது காட்டவில்லை. உண்மையான அரசியல் அதிகாரம் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய ஒரு உயரடுக்கின் கரங்களில்தான் குவிந்துள்ளது. அந்த அடுக்குத்தான் இப்பொழுது தன் அதிகாரத்தை கீழிருந்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக அந்த நலன்களை பாதுகாப்பதற்கு ஒரு உலகத் தன்னலக்குழு மற்றும் பெரிய வங்கிகள், பெருநிறுவனங்களின் உள்ளூர் பிரதிநியாகச் செயல்படுகிறது. ஒவ்வொரு தேசியவாத இயக்கமும் இதே போக்கைத்தான் பின்பற்றியது. உலக ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளுடன் அவர்கள் சமாதானம் செய்து கொள்வர். ஆபிரிக்கா முழுவதும் இதே நிலைமைதான் உள்ளது. அதாவது, தேசியவாதத் தலைவர்கள் இப்பொழுது அனைத்து நிறுவனங்கள், சுரங்கப் பெருநிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் உள்ளூர் ஊழியர்களாக செயல்படுகின்றனர். மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா ஆகிவற்றிலும் இதே நிலைதான் உள்ளது. எல்லாவற்றிகும் மேலாக இந்த ஆண்டுவிழா சர்வதேச திட்டத்தை முன்வைக்கும் உண்மையான சோசலிச இயக்கம் தென்னாபிரிக்காவிற்கு தேவை என்பதைத்தான் நிரூபித்துள்ளது; அந்த இயக்கம் வர்க்கம் கடந்த ஒற்றுமை, தேசிய நலன்களுக்கான அழைப்புகள் ஆகியவற்றை நிராகரிக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் வறிய கிராமப்புற மக்கள் ஆகியோரின் நலன்கள் இலாபமுறையுடன் இயைந்திருக்க முடியாது. கடந்த 20 ஆண்டுகளின் அரசியல் படிப்பினை தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீன அரசியல் இயக்கத்தை கட்டமைக்க வேண்டும்; அந்த இயக்கம் முதலாளித்துவ முறையை அகற்ற உறுதி கொண்டு இலாபத்திற்கு என்று இல்லாமல் திட்டமிடப்படும் தேவைகளை அடிப்படையாக உற்பத்தி முறையை கொண்டு உண்மையான சமூக சமத்துவத்தை நிறுவும் நோக்கத்தைக் கொள்ள வேண்டும். இது ட்ரொட்ஸ்கியின் நிர்நதரப் புரட்சி தத்துவத்தை ஆரம்ப புள்ளியாக கொள்ள வேண்டும். ஏகாதிபத்திய சகாப்தத்தில் தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் ஜனநாயகப் பணிகள் ஒரு சோசலிசப் புரட்சியின் போக்கு மூலம்தான் தீர்க்கப்பட முடியும், அதுதான் இறுதியில் உலக அரங்கில் வெற்றிகரமாக விளங்கும். அதற்கு முன்னேற்றமடைந்த ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த அரசியல் இயக்கம் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும். |