SWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Unite New York City teachers, students, workers to stop
school closings and cuts
பள்ளி மூடல்கள், செலவுக் குறைப்புக்களை நிறுத்த நியூயோர்க் நகர ஆசிரியர்களே, மாணவர்களே,
தொழிலாளர்களே ஐக்கியப்படுங்கள்
Statement of the Socialist Equality Party
10 February 2010
Use this version
to print | Send
feedback
நகரம் முழுவதும் வந்துள்ள எதிர்ப்புக்களை மீறி நியூயோர்க்கின் பில்லியனர் நகரமுதல்வர்
மைக்கேல் ப்ளூம்பேர்க் பள்ளி மூடல்களையும் வரவுசெலவு திட்ட குறைப்புக்களையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்.
இத்தாக்குதல்கள் பணிநீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள், வீடுகள் ஏலத்திற்கு விடப்படல், மருத்துவமனைகள் மூடப்படல்,
பொதுப் போக்குவரத்தில் குறைப்புக்கள் ஆகியவற்றுடன் இணைந்து நடக்கின்றன. தாங்கள் தோற்றுவிக்காத, வங்கியாளர்கள்
செய்து அதற்கான பிணை எடுப்பிற்கு விலை கொடுக்கும் வகையில், நிதிய நெருக்கடியின் பொருளாதாரச் சுமையை
தொழிலாளர்கள் சுமக்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
எந்த முக்கிய ஜனநாயக அல்லது குடியரசுக் கட்சி தலைவரும் பொதுக் கல்விமுறையை
பாதுகாக்க முன்வரவில்லை. ஜனவரி 26 அன்று பாரிய பொதுக்கூட்டத்தில் கல்வித்துறையின் திட்டமான 19 பள்ளிகளை
மூடுவதற்கு ஆதாரவாக ஒருவர் கூட பேசவில்லை என்ற நிலையில், இந்த மூடல்கள் கல்விக் கொள்கைக் குழுவால்
ஒப்புதல் பெற்றன. அக்குழு ப்ளூம்பேர்க்கின் கட்டுப்பாட்டில் உள்ளது. இன்னும் அதிக பள்ளி மூடல்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
இது ப்ளூம்பேர்க்கின் கொள்கை மட்டும் அல்ல. ஆல்பனி மற்றும் வாஷிங்டனில் உள்ள
ஜனநாயகக் கட்சியினருடைய கொள்கையும்தான். ஜனநாயகக் கட்சியின் ஆளுனர் டேவிட் பாட்டர்சன் நியூயோர்க்
மாநிலத்திற்கு $1.4 பில்லியன் கல்விச் செலவுக் குறைப்பைக் கோரியுள்ளார். புஷ்ஷின் "எந்த குழந்தையையும்
விட்டுவிடக்கூடாது" என்ற சட்டத்திற்குப்பதில் ஜனாதிபதி பாரக் ஒபாமா இத்தாக்குதலுக்கு உந்துதல் கொடுத்து,
"மேல்நோக்கிய போட்டி" என்ற தன்னுடைய திட்டத்தை விரிவாக்கி, இன்னும் அதிக பிற்போக்குத்தன செயற்பட்டியலை
கொண்டுவந்துள்ளார். இதையொட்டி பள்ளித் தொகுப்புக்களுக்கு கூட்டாட்சி நிதியம் பெறுதல், மரபார்ந்த பொதுப்
பள்ளிகளை பட்டயப் பள்ளிகளுக்கு (charter
schools-பொது நிதியில், ஆனால் தனியார் நிர்வாகத்தில்
இருப்பவை) ஆதரவாக மூடல், மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் ஊதியம்
கொடுத்தல், என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இருக்கும்--இந்த நடவடிக்கைகள் பள்ளி முறையில் இருக்கும் சமத்துவமற்ற
தன்மையை அதிகப்படுத்தும்.
2002ல் இருந்து மேயர் ப்ளூம்பேர்க்கும் அவருடைய பாடசாலைக்கான ஆளுனர்
ஜோல் கிளைன் உம் நியூயோர்க் நகரத்தில் 111 பள்ளிகளை மூடிவிட்டனர். அமெரிக்காவிலேயே தொகுதிப்
பள்ளிகளில் இது மிக அதிகம் ஆகும். ப்ளூம்பேர்க்கின் கூறப்பட்ட இலக்கான நகரத்தின் 1 மில்லியன் மாணவர்களில்
10 சதவிகிதத்தினரை பட்டயப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக இது செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 26 கூட்டம் நிரூபித்தபடி, இக்கொள்கைகளுக்கு எதிர்ப்பு வெடிப்புத் தன்மை
நிறைந்ததாகப் போய்விட்டன. "சீர்திருத்தங்கள்" என்று கூறப்படும் மாற்றங்கள் ஒரு பிரிவினை முறை, வர்க்க
அடிப்படை முறையைத் தோற்றுவிக்கின்றன என்னும் பெருகிய உணர்வு உள்ளது. இதில் பள்ளிகள் உதவியோ, தேவையான
வழங்களோ இல்லாமல் நீந்த வேண்டும் அல்லது மூழ்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவு மாணவர்களில் ஒரு சிறு பிரிவினர், வணிகத்தின் தேவையான
உயர்பதவிகள், நிர்வாகத்திற்காக பூர்த்தி செய்யக் கூடியவர்கள் என்றும் பெரும்பாலான மாணவர்கள் குறைந்த
பயிற்சி பெற்று குறைவூதிய வேலை அல்லது வேலையின்மையில் வாட வேண்டும் என்ற நிலைதான் வரும். பள்ளி மூடல்களுக்கு
எதிரான ஆர்ப்பாட்டங்கள் வெற்றிகரமாக இருந்திருந்தாலும், பள்ளிகள் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைகளால் பேரழிவிற்கு
உட்படுகின்றன. பல ஆண்டுகள் குறைந்த நிதியம் மட்டுமே கிடைத்ததால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு
இன்னும் வரவிருக்கும் பள்ளி ஆண்டில் நியூயோர்க் நகரப் பள்ளிகளுக்கு மட்டும் குறைப்புக்கள் $900 மில்லியன் என்ற
அதிகளவாக இருக்கக்கூடும்.
மிகத் தீமை பயக்கும் தாக்குதல்களில் ஒன்று பெருநகரப் போக்குவரத்துப் பிரிவு
தங்கள் பள்ளிகளுக்கு நிலத்தடி இரயில்கள், பஸ்களில் செல்ல 500,000 மாணவர்களுக்கு தேவைப்படும்
போக்குவரத்து வசதிகளை எடுத்துவிடுவதாகக் கூறியுள்ள அச்சுறுத்தல்தான்.
இதற்கிடையில் ப்ளூம்பேர்க் இன்னும் கையெழுத்திடப்படாத ஒப்பந்தத்தில் சலுகைகளை
அவர்கள் காட்டாவிட்டால் 8,500 ஆசிரியர்கள் குறைக்கப்பட்டுவிடுவர் என்று எச்சரித்துள்ளார். ஏற்கனவே
பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு இக்குறைப்புக்கள் இன்னும் நிலைமையை
மோசமாக்கும். எல்லா வகுப்புக்களிலும், நியூயோர்க் நகரத்தின் எல்லா நகரப்பிரிவுகளிலும் வகுப்புக்களில்
எண்ணிக்கை கடந்த 11 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அதிகமாகவிட்டன. வகுப்புக்களில் எண்ணிக்கை குறைக்கப்பட
வேண்டும் என்பதற்காக $760 மில்லியன் ஒதுக்கப்பட வேண்டும் என்ற 2006 நீதிமன்றத் தீர்ப்பை ப்ளூம்பேர்க்
புறக்கணித்துள்ளார்.
பொதுக்கல்விக் கொள்கை இலாப நலன்களைத் தளமாகக் கொண்டால் அது மோசடி
வகையில்தான் பாதுகாக்கப்பட முடியும். பள்ளிகள் மூடப்படுமா, ஆசிரியர்கள் செயல்திறனுக்கு ஏற்ப ஊதியம்
பெறுவரா என்பவற்றை நிர்ணயிக்கும் நியூயோர்க் மாநில தேர்வுகளின் மதிப்பு எண்கள் வேண்டுமென்றே
மிகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த என்ரோன் மாதிரி கல்வி கணக்கீட்டு முறையின் விளைவாக, மாணவர்கள்
அடிப்படைக் கல்வி இல்லமலேயே உயர்வகுப்பிற்கு அனுப்பப்படுகின்றனர். அதிகமான மாணவர்கள் கல்விமுறையில்
இருந்தே நீங்கிவிடுகின்றனர். Community Service
Society நியூயோர்க்கில் 16 வயதில் இருந்து 24 வயதிற்குள்
200,000 பேர் உயர்நிலைப்பள்ளி முடிக்காமலும் வேலையும் கிடைக்காமலும் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
பொதுக் கல்வியைச் சிதைத்தல் என்பது பெருநிறுவன உயரடுக்கிற்காக அதுவே
வடிவமைத்த அரசாங்கக் கொள்கையின் நேரடி விளைவு ஆகும். விரிவான பள்ளிகளை சிறிய பள்ளிகளுக்காக மூடுதல்
என்பது Bill and Melinda Gates
Foundtion 2003ல் நன்கொடை அளித்த $51 மில்லியன்
நிதியிலேயே விதை தூவப்பட்டிருந்தது. 2008 ஜனாதிபதித் தேர்தலில், கேட்ஸ் மற்றும் சக பில்லியனர் எலி
ப்ரோடின் அறக்கட்டளைகள் $24 பில்லியனை வேட்பாளர்கள் ஆதரவுக்கு கொடுத்தனர். இதில் ஒபாமாவும்
அடங்குவார். அவரோ பட்டயப் பள்ளிகள், திறனுடன் பிணைந்த ஊதியம் மற்றும் ஆசிரியர்கள் பணிநீக்கம்
ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்தார்.
இப்படி பட்டய பள்ளிகளுக்காக ஊக்கம் கொடுத்தல் கல்வியை முன்னேற்றுவிப்பதற்காக
என்று இல்லாமல், நிதிய உயரடுக்கு தேசிய அளவில் வரியில் இருந்து ஒதுக்கப்படும் கல்வி நிதியான $500
பில்லியன், நியூயோர்க் நகரத்தில் ஒதுக்கப்படும் $20 பில்லியன் ஆகியவற்றின்மீது தனியார் இலாபத்திற்காக
கைகளில் பிடித்துக்கொள்ளும் உந்துதலைத்தான் பிரதிபலிக்கிறது. இறுதியில் அவர்கள் இலக்கு தனியார்மயமாக்குதல்
மூலம் பொதுக் கல்வியை அழித்துவிடுவதுதான்.
பள்ளி மூடல்களும் பட்டயப் பள்ளிகளுக்கான ஆர்வமும் மரபார்ந்த, விரிவான
பள்ளிகளுக்கான சூழ்நிலையை மோசமாக்குகின்றன. இதனால் இன்னும் பல பள்ளிகள் "தோற்றுவிட்டன" என்று
முத்திரையிட்டு மூடப்படுவது நியாயப்படுத்தப்படும். சிறிய பள்ளிகளால் ஏற்கப்படாத சிறப்புக் கல்வி மற்றும் ஆங்கில
மொழி கற்பவர்கள் ஏற்கனவே கூடுதல் சுமையைக் கொண்ட பொதுக் கல்வி முறையில் நுழைக்கப்படுகின்றனர்.
இதற்கிடையில் வீடுகள் இல்லாத மாணவர்கள், பள்ளிகள் மூடப்படுவதால் வாழ்வில் தடையை எதிர்கொள்ளுபவர்களின்
எண்ணிக்கையும் உயர்கிறது.
மிகச் சிறந்த சர்வதேச கல்விச் சீர்திருத்தங்கள் கூட பொதுப் பள்ளிகளின் நெருக்கடியைத்
தீர்க்க முடியாது. இவை சமூகச் சமத்துவமின்மையைக் கொண்டுள்ள ஒரு வர்க்க சமூக நெருக்கடியின் ஒரு பகுதிதான்.
பொதுக் கல்வி முறையைக் பாதுகாப்பதற்கு தொழிலாளர் வர்க்கத்திற்கு, பொதுப்
பள்ளிகளை மூடி அவற்றிற்கு நிதி இல்லாமல் செய்து அதே நெரத்தில் வங்கி நிர்வாகிகளுக்கு பில்லியன் கணக்கில் மேலதிக
கொடுப்பனவுகளை உறுதி செய்யும் ஒரு அமைப்புமுறைக்கு எதிராக இயங்க ஒரு அரசியல் வேலைத்திட்டம் தேவையாக
உள்ளது.
UFT எனப்படும் ஆசிரியர்களின்
ஒன்றுபட்ட கூட்டமைப்பு பள்ளிகளையோ, ஆசிரியர்களின் வேலைகளையோ, நிலைமைகளையோ பாதுகாக்க
முடியாது. ஏனெனில் அது இந்த அமைப்புமுறையின் ஒரு பகுதிதான். பட்டயப் பள்ளிகளின் விரிவாக்கத்தில்
உட்குறிப்பாக உள்ள தனியார்மய மூலோபாயத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக,
UFT தன்னுடைய
மூன்று பள்ளிகளையே மாதிரிப் பள்ளிகள் என்று திறந்துள்ளது. அவை தொழிற்சங்கங்கள் எப்படி தனியார்
நிர்வாகத்துடன் ஒத்துழைத்து அங்கத்துவப்பணத்தை அதற்கு ஈடாகத் தக்கைவைத்துக் கொள்ளலாம் என்பதைக்
காட்டுகின்றன.
UFT அதிகாரத்துவம் முழுமையாக
ஜனநாயகக் கட்சியுடன் இணைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இது உட்குறிப்பாக ப்ளூம்பேர்க்கின் மறுதேர்தலுக்கு
ஆதரவு கொடுத்தது.
பொதுக் கல்வி முறையைக் காப்பதற்கான போராட்டத்திற்கு ஜனநாயகம் மற்றும்
குடியரசுக் கட்சிகளுடனும், அவற்றிற்கு ஆதரவு கொடுக்கும் அதிகாரத்துவ தொழிற்சங்கங்களுடனும் ஒரு அரசியல்
முறிவு தேவைபடுகிறது.
நியூயோர்க் நகரம், மற்றும் மாநிலம் முழுவதும்
உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவுகளையும் ஐக்கியப்படுத்தி
பொதுக் கல்வியில் குறைப்புக்களை நிறுத்தவும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் வோல் ஸ்ட்ரீட்டின் இலாபங்கள்,
மேலதிக கொடுப்பனவுகளில் இருந்து பள்ளிகளை மறுகட்டமைக்கவும், கூடுதலான ஆசிரியர்களை கெளரவமான
ஊதியங்களில் நியமிக்கவும், அனைவருக்கும் தரமான கல்வி கொடுக்க உத்தரவாதத்திற்காக மாற்றப்படுவதற்கு ஒரு
சுயாதீன அணிதிரளல் தேவையாகும்.
இதன் பொருள் ஒரு புதிய வகை சமூக அமைப்பிற்கான போராட்டம் ஆகும். அது
தனியார் இலாபத்திற்குப் பதிலாக சமூகத் தேவைகளுடன் ஆரம்பித்து வங்கிகள் உட்பட, பொருளாதாரத்தின் முக்கிய
நெம்புகோல்கள் பொதுஉடைமை ஆக்கப்பட்டு ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இது முதலாளித்துவத்திற்கு
ஒரே மாற்றீடான சோசலிசத்திற்கான போராட்டமாகும்.
கல்விமீது தாக்குதலுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பரந்துபட்ட
எதிர்ப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று சோசலிசச் சமத்துவக் கட்சி அழைப்பு விடுகிறது. ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள்
மற்றும் பிற வெகுஜன நடவடிக்கைகள் பள்ளி மூடல்கள், பட்டயப் பள்ளிகள் படையெடுப்பு, குறைப்புக்கள்
ஆகியவற்றை எதிர்த்து நடத்தப்பட வேண்டும். சமூகங்களிலும் பள்ளிகளிலும் மிகப் பரந்த வகையில் திரட்டப்படுவதற்கு
செயற்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
ஜனநாயகக் கட்சியினர், இரு கட்சி முறை இவற்றிடம் இருந்து முறித்துக் கொள்ளும்
ஒரு புதிய அரசியல் மூலோபாயத் அடித்தளம் இப்போராட்டத்திற்கு தேவையாகும். அதே போல் ஒரு தொழிலாளர்
அரசாங்கத்திற்காக போராடுவதற்கு ஒரு பரந்துபட்ட சுயாதீன அரசியல் அமைப்பும் கட்டமைக்கப்பட வேண்டும்.
இக்கொள்கைகளுடன் உடன்பாடு இருக்கும் அனைவரையும் சோசலிச சமத்துவக்
கட்சியில் சேர்ந்து தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய சோசலிச தலைமையைக் கட்டமைக்க உதவுமாறு
அழைப்புவிடுகின்றோம். |