World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spain: Government and unions conspire to impose austerity measures

ஸ்பெயின்: அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கடுமையான நடவடிக்கைகளை சுமத்த சதி செய்கின்றன

By Vicky Short
10 February 2010

Back to screen version

ஆளும் சோசலிச தொழிலாளர் கட்சி (PSOE) அரசாங்கத்தின் பிரதமர் José Luis Zapatero, ஸ்பெயினின் தொழிற்சங்கத் தலைவர்களுடன் தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் கடுமையான நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்துவதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக இரகசிய கூட்டங்களை நடத்தியுள்ளார்.

ஐக்கிய பொது ரபஜாடோர் (UGT-Union General de Trabajadores) தலைவர் Candido Mendez, CCOO (Comisiones Obreras) தலைவர் Ignacio Fernandez Toxo ஆகியோருடன் கடந்த மாதக் கடைசியில் தன்னுடைய இல்லமான Moncloa அரண்மனையில் தனித்தனியே இரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். சென்ற முறை புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு காட்டிய பின்னர், இம்முறை எப்படி சீர்திருத்தங்கள் ஏற்கப்படப்போகின்றன என்று கேட்கப்பட்டதற்கு Mendez "இவற்றில் போதுமான முறைகளும் வளைந்து கொடுக்கும் தன்மையும் தொழிலாளர் சந்தையை சிறப்புடையதாகச் செய்வதற்கு உள்ளது" என்றார்.

அப்பொழுது முதல், அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளிடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தைகளானது தொழிலாளர் உறவுகளை முற்றிலும் மாற்றும் விதத்தில் நடைபெற்று வருகின்றன. IMF போன்ற சர்வதேச நிதிய அமைப்புக்கள் இதைத்தான் கோரியுள்ளன. அரசாங்கமானது ஓய்வூதியம் பெறும் வயதை அதிகரிக்கும் அதனுடைய நோக்கத்தையும் அறிவித்துள்ளது. அதாவது ஓய்வூதிய நலன்களை பெறுவதற்கு தற்போதைய 15 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகள் உழைத்தால்தான் தகுதி கிடைக்கும் என அதிகரிக்கிறது. மேலும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தும் அதனுடைய திட்டத்தையும் அது வெளிப்படுத்தியுள்ளது. இது நேரடியாக சமூகத்தின் வறிய தட்டுக்களுக்கு பாதிப்பைக் கொடுக்கும், ஏனெனில் அடிப்படைப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப் போகின்றன.

பேச்சுக்களை "ஒரு அதிசயம்" என்று எல் பைஸ் பத்திரிகை கூறியுள்ளது. முதலாளிகள் சங்கமான Confederation de Empresarios de Espana (CEOE) தலைவர் Gerardo Diaz Ferari திட்டங்கள் "உடன்பாடானது" என்று விவரித்து, வரைவு உடன்பாடு "நல்ல திசையில் சென்று கொண்டிருப்பதாகவும்" கூறினார். இதேபோன்ற ஒப்புதலைத்தான் CYPME சிறு தொழில்துறை முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவரான Jesus Barcenas யும் கூறியுள்ளார்.

பல திட்டங்கள் தெளிவற்று இருந்தாலும் தெளிவான நோக்கமானது பணிநீக்கச் செலவுகளை குறைத்தல், வேலைகளுக்கு இடையே வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகரித்தல் மற்றும் ஓய்வூதிய வயதை 67 ஆக உயர்த்துதல் (அரசாங்கம் இதை 70 என விரும்புகிறது) ஆகியவைகள் ஆகும். வேலைக்கு வராமல் இருப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் இருக்கும். அதாவது "அது நிரந்தர நோய் விடுமுறை என்ற பிரிவின்கீழ் எப்பொழுதும் மறைக்கப்படுகிறது" என்று வெறுக்கத்தக்க முறையில் ஆவணம் கூறியுள்ளது. ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது தேசிய சமூகப் பாதுகாப்பு மையமும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையே விபத்துக்கள் மற்றும் வேலை தொடர்புடைய நோய்கள் பற்றிய தகவல்கள் பறிமாற்றத்தை அதிகரிக்கும். சேமிக்கப்படும் பணம் நிறுவனத்திற்கு கொடுக்கப்படும்.

தற்காலிக ஒப்பந்தங்களை முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என்ற கூற்றின் பின்னணியில், காலவரையற்ற மற்றும் தற்காலிக வேலைகளுக்கு இடையே உள்ள "இரட்டை முறையை" முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்று கூறுவது, நிரந்தர வேலைகளுக்கு வளைந்து கொடுக்கும் தன்மையைக் கொடுத்து தற்காலிக வேலைகளை எளிதில் முடிவிற்கு கொண்டுவரும் முயற்சியாகும். பணிநீக்கத்திற்காக இழப்பீடு பணம் கொடுத்தல் நாட்களின் எண்ணிக்கை தற்போதைய ஆண்டு ஒன்றுக்கு 45 நாட்கள் என்பதில் இருந்து 33 ஆகக் குறைக்கப்படும்.

மக்கள் தொழிலையும் குடும்ப வாழ்க்கையையும் இணைப்பது எளிது என்று காட்டும் வகையில் ஆவணமானது நிரந்தரமான பகுதி நேர ஒப்பந்தங்களை நிறுவனங்கள் அதிகரித்தால் அதற்கான ஊக்கத் தொகைகள் உண்டு என்று திட்டமிட்டுள்ளது.

இளைஞர்களிடையே 50 சதவிகித வேலையின்மை இருப்பதற்கு பெருகிய எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையில் ஆவணமானது நிறுவனங்கள் இளைஞர்களுக்கு தங்களுக்குத் தேவைப்படும் பிரிவுகளில் தக்க பயிற்சி கொடுக்க வேண்டும், இதற்கு முறையான வேலை ஒப்பந்தங்கள் வேண்டும் என்று கூறியுள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியத்தை கொடுத்தல் என்ற மறைப்பில், பொதுவாக ஆண்களின் ஊதியங்கள் குறைக்கப்படும், இவை பொதுவாக பெண்களின் ஊதியங்களைவிட மிகவும் அதிகமாகும்.

தற்காலிகமாக வேலை செய்ய இயலாமல் போதல் மற்றும் நோய்க்கான விடுப்புக் காலம் பற்றி இன்னும் அதிக கட்டுப்பாடுகள் இருக்கும். நிறுவனம் எதிர்கொள்ளும் நிலைமையை ஒட்டி பணிநீக்கங்கள் இல்லாமல், பணி வாரம் குறைக்கப்படலாம். அது அரசாங்கத்தின் பணத்தை வேலையின்மை நலன்களில் சேமிப்பைக் கொடுக்கும்.

கூட்டுப் பேரப் பேச்சுக்களின் பரப்பானது ஊதியங்கள், பணிக்காக பல இடங்களுக்கு செல்லுதல் பணி மணித்தியாலங்களுக்குள் அடக்கப்படுதல், தகவமைத்து மாற்றி அமைத்துக் கொள்ளும் நிலை மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றையும் அதிகரித்துக்கொள்ளும். வேறுவிதமாகக் கூறினால், தொழிற்சங்கங்கள் முற்றிலும் நிர்வாகத்தை நடத்துவதுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, நெருக்கடிக்காலத்தில் நிறுவனத்திற்கு உதவும். அவற்றின் பங்கு தொழிலாளர்கள் வாழ்க்கை தரங்களை தாக்குதலும் தீவிர சுரண்டுதலுக்கு முதலாளிக்கு உதவுதலும் என்று இருக்கும்.

இந்த திட்டங்களுக்கு தெருக்களுக்கு வந்து பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அரசாங்கம் கருதவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் திரைக்குப்பின் நடக்கும் விவாதங்கள், அது அளிக்கும் திட்ட முறை ஆகியவை அக்கூற்றுக்களை நம்ப வைக்கவில்லை. ஸ்பெயினுடன், போர்த்துகல் மற்றும் கிரேக்கமும் வரவு-செலவுப் பற்றாக்குறை பற்றி தீர்வு காண கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று IMF கூறியுள்ளது. IMF ன் தலைமைப் பொருளாதார வல்லுனர் Olivier Blanchard, "இந்த நெருக்கடியுடன் போர்த்துகல், ஸ்பெயின் மற்றும் கிரேக்கம் ஆகியவை தீவிர இடரில் உள்ளன.....வேதனை தரும் சரிபார்ப்புக்களை அவை செய்ய வேண்டும் என்பது உட்குறிப்பாகும்."

போட்டியை மீண்டும் நிறுவதல் என்பதற்கு அதிக தியாகங்கள் தேவை, ஊதியங்களைக் குறைத்தல் போன்றவை என்று அவர் கூறினார்.

சுவிஸ் வங்கியான UBS, ஸ்பெயினின் பொருளாதாரம் 2011 வரை தொடர்ந்து மந்த நிலையில் இருக்கும் என்றும் வேலையின்மை விகிதம் 2010-ல் 20 சதவிகிதத்தையும்விட அதிகமாகும் என்றும் அடுத்த தசாப்தம் முழுவதும் 15 சதவிகிதத்தில் இருக்கும் என்றும் கணித்துள்ளது. இந்த நிலைமையில் அடுத்த தசாப்தத்தில் ஊதியங்களில் 10 சதவிகிதக் குறைப்பு என்பது முக்கியமானது என்று வங்கி கூறியுள்ளது.

"பற்றாக்குறைத் தரத்தில் கிரேக்கத்துடன் கடைசி நிலையில் இருக்கும் ஆபத்தை ஸ்பெயினும் எதிர்கொள்ளுகிறது" என்ற தலைப்பில், பைனான்ஸியல் டைம்ஸ் ஸ்பெயின் தன்னுடைய பற்றாக்குறையை 2009ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.4 சதவிகிதம் என்பதில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய இலக்கான 2013 க்குள் 3 சதவிகிதம் என குறைக்க விரும்புகிறது என்றும், ஆனால் எவ்வாறு அப்படிச் செய்யமுடியும் என்பது பற்றி உறுதியாக இல்லை என்றும் எழுதியுள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு ஸ்பெயின் அரசாங்கத்தால் அனுப்பப்பட்டுள்ள "உறுதிக்கான திட்டம்" (கடும் சிக்கனம் என்று பொருள்) அரசாங்கம் நான்கு ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ள 3 சதவிகிதம் என்று பற்றாக்குறையை குறைத்துவிடும் என்று கூறியுள்ளது. இதற்கு வாழ்க்கைத் தரங்கள் மற்றும் பணி நிலைமைகள் ஆகியவற்றின்மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும். இத்திட்டம் மூன்று ஆண்டுகளில் செலவுகளை 50 பில்லியன் யூரோக்கள் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இது ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் IMF இரண்டும் கோரும் 8 சதவிகிதத்திற்கும் மேலான பற்றாக்குறையைக் குறைப்பதற்கு ஒரு துவக்க முயற்சிதான். வேலையின்மைக்கான நலன்கள் மட்டும் கடந்த ஆண்டு 31.5 பில்லியன் என்று உயர்ந்துவிட்டன. இது முன்னைய ஆண்டைவிட 50 சதவிகிதம் அதிகமாகும்.

ஸ்பெயினும் மற்றய கிரேக்கம், போர்த்துகல், அயர்லாந்து மற்றும் இத்தாலி போன்ற நாடுகளும் தங்கள் வரவு-செலவுப் பற்றாக்குறைக்கு நிதி திரட்ட முடியாது என்ற பீதியும் அந்நாடுகள் தங்கள் சிக்கனத் திட்டங்களை செயல்படுத்த இயலாது என்று முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்ககையடுத்து பெப்ருவரி 4ம் தேதி ஸ்பெயினின் பங்குச் சந்தை கிட்டத்தட்ட சரிவை விரைவுபடுத்தியது. மட்ரிட் குறியீடான Ibex கிட்டத்தட்ட 6 சதவிகிதம் குறைந்தது. நவம்பர் 2008-க்கு பின்னர் இது பெரிய சரிவாகும். பார்க்ளேஸ் கபிடலின் ஜூலியன் கலோ ஐரோப்பிய ஒன்றியம் நெருக்கடி உடன்படிக்கை அதிகாரங்களைப் பயன்படுத்தி 122வது விதியின்படி இச்சரிவை நிறுத்தலாம் என்று எச்சரித்துள்ளார். இல்லாவிடில் இது " 'லெஹ்மன் முறை' சுனாமியை ஏற்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும் பகுதிகளுக்கு பரவக்கூடும்" என்றும் எச்சரித்துள்ளது.

இவ்வாறு நடந்தால், இந்நாடுகளில் ஆட்சி நடத்தப்பட முடியாமல் போகலாம் என்று செய்தி ஊடகம் பரபரப்பான ஊகங்களை வெளியிட்டுள்ளது.

ஸ்பெயினின் செய்தி ஊடகமானது ஸ்பெயினின் பங்குச் சந்தை சரிவிற்கு அதற்கு எதிரான எச்சரிக்கைகளானது அச்சுறுத்தல்களாக அதற்கு எதிராக உயர்ந்ததைப் பற்றி குறைகூறியதோடு கிரேக்கத்துடன் மிகைப்படுத்தப்பட்ட தவறான ஒப்பீடுகள் பற்றியும் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ஸ்பெயினில் கிரேக்கத்தைவிட வேலையின்மை விகிதம் இரு மடங்கு என்னும் உண்மையை இது புறக்கணிக்கிறது. பற்றாக்குறையானது சற்றுத்தான் குறைவு. தற்போதைய நாணய, பத்திர மற்றும் பங்குகள் நெருக்கடி ஸ்பெயின் எதிர்கொண்டிருக்கும் ஆழ்ந்த பொருளாதார இடர்பாடுகளின் விளைவு ஆகும். அத்துடன் PSOE தொழிலாளர்கள் மீது தாக்குதல்களை செயல்படுத்த தாமதிப்பதன் காரணமும் சேர்ந்து பூகோளச் சந்தைகள் கவனிப்பூடாக ஊகமாக எரியூட்டப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் நெருக்கடியின் அளவு சமீபத்திய பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிவரங்களால் வெளிப்படை ஆகிறது. இது உத்தியோகபூர்வ கணிப்புக்களை அனைத்தையும்விட அதிகமாக உள்ளது. ஜனவரி மாதம் வேலையின்மையில் கிட்டத்தட்ட 125,000 அதிகம் உயர்வு ஏற்பட்டு, உத்தியோகபூர்வ வேலையின்மையை 4,326,500 அல்லது தீவிரமாக உழைக்கக்கூடிய மக்களில் 18.8 சதவிகிதம் என்று ஆக்கியுள்ளது. மற்றய ஆதாரங்கள் இது குறைந்த மதிப்பீடு என்றும் வேலையின்மை எண்ணிக்கை 4.5 மில்லியன் அல்லது 19.4 சதவிகிதம் இருக்கும் என்றும் கூறுகின்றன. இதற்கும் மேலாக, பல சுய தொழில் பார்க்கும் மக்கள் திவாலாகிவிட்டிருந்தும் வேலையின்மை நலன்களை கோரவில்லை, அவர்கள் சமுக பாதுகாப்பு மையத்திற்கு ஓய்வூதிய விகிதங்களை பாதுகாப்பதற்கு கட்டணங்களை தொடர்ந்து செலுத்துகின்றனர்.

வேலையின்மையானது வெளிநாட்டுத் தொழிலாளிகளையும் இளைஞர்களையும் பெரிதும் தாக்கியுள்ளது. கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வேலையின்மை விகிதம் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே 29.7 சதவிகிதம் என்றும் வேலை செய்பவர்கள் எண்ணிக்கை 11.75ல் இருந்து 6.1 சதவிகிதம் சரிந்தவிட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்காலிக வேலை, முக்கியமாக கட்டுமானத் துறையில், 25 சதவிகிதம் குறைந்துவிட்டது. இது தொழிலாளர்களின் மிக வறிய தட்டுக்களைப் பாதிக்கிறது. வேலைசெய்ய கூடியவர்களில் அனைத்து சனத்தொகையில் வேலையின்மையானது அதிர்ச்சி தரும் வகையில் 1.2 மில்லியன் என்று ஆகியுள்ளது.

AGETT எனப்படும் தற்காலிக வேலைதேடித்தரும் அமைப்புக்களின் கூட்டமைப்பு நீண்ட காலமாக வேலையில்லாமல் 1.5 மில்லியனுக்கும் மேலானவர்கள் உள்ளனர் என்றும் புதிய வேலைகள் அவர்களுக்கு கிடப்பது மிகவும் கடினம் என்றும் கூறியுள்ளது.

இந்த வாரம் Barclays, Citi மற்றும் Santander வங்கிகள் ஏற்பாடு செய்திருந்த லண்டனில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஸ்பெயினின் வெளியுறவு மந்திரி Elena Salgado வும் அவருடைய உதவியாளர் Jose Manuel Campa வும் அரசாங்கத்தின் பொருளாதார மூலோபாயத்தையும் அது செயல்படுத்த இருக்கும் "சீர்திருத்தங்களையும்" பாதுகாத்தனர். அதற்கு பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கம்பா அரசாங்கம் சீராக பொருளாதாரம் மீளவில்லை என்றால் பொதுச் செலவுகளை இன்னும் குறைக்கும் என்று கூறினார். பிரஸ்ஸல்ஸுக்கு அனுப்பப்பட்டுள்ள உறுதி பற்றிய திட்டத்தையும் தாண்டி "தேவையான திருத்தங்களை" அரசாங்கம் நான்கு ஆண்டுகளில் பற்றாக்குறையை குறைக்க வழி செய்யும் என்று அவர் உறுதியளித்தார்.

எல் பைஸ் கருத்துப்படி சில முதலீட்டாளர்கள் PSOE உடைய நடவடிக்கைகள் போதுமானவையா, ஸ்பெயின் அரசாங்கம் இக்கட்டான நிலையை எதிர்கொள்ளுமா என்பது பற்றிய ஐயங்களை வெளிப்படையாகக் கூறினார்கள். அரசாங்கம் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது சமூக அதிருப்தியை எதிர்கொள்ளும். ஆனால் இவ்வாறு செய்யாவிட்டால் சந்தைகளில் இருந்து தண்டனையை எதிர்கொள்ளும்.

மூன்றாவது துணைத் தலைவரான மானுவல் சாவ்ஸ் அரசாங்கம் அதன் ஓய்வூதிய சீர்திருத்த திட்டங்களை அளிக்க இருப்பதாகவும் ஒரு தொழிலாளர் சீர்திருத்த சட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று நம்புவதாகவும் கூறினார். "அரசாங்கத்திற்கும் சமூக முகவர்களுக்கும் இடையே ஒற்றுமை என்ற தோற்றத்தை அளிப்பது மிகவும் முக்கியம் இந்த உலகிற்கு" என்று அவர் சேர்த்துக் கொண்டார். இது தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு நேரடி முறையீடு ஆகும். PSOE ஆனது மக்கள் முன்னணி எனப்படும் PP வலதுசாரி எதிர்க்கட்சியின் ஆதரவையும் நாடியுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved