World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan election announced amid climate of fear and intimidation

பீதி மற்றும் அச்சுறுத்தல் சூழ்நிலையின் மத்தியில் இலங்கையில் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

By Sarath Kumara
12 February 2010

Back to screen version

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஜனவரி 26 ஜனாதிபதி தேர்தலில் தனக்கு எதிராகப் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்த மறு நாளே, பாராளுமன்றத்தை கலைத்து ஏப்பிரல் 8 அன்று பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கால எல்லை தற்செயலானதல்ல. அரசியல் எதிர்ப்புக்களை அச்சுறுத்தவும் நசுக்கவும் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையில் சகல வழிமுறைகளையும் பயன்படுத்தவுள்ள ஒரு தேர்தலுக்கே இந்த கைது களம் அமைத்துள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அரசியலமைப்பை மாற்ற இயலக்கூடியவாறு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முயற்சிப்பதாக தெளிவுபடுத்திவிட்டது. சுதந்திர முன்னணியின் பொதுச் செயாலளர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சரவையை குறைக்கவும் மற்றும் குறிப்பிடத்தக்க அரசியலமைப்புத் திருத்தங்களை செய்யவும் ஒரு மக்கள் ஆணையை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக புதன் கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

தற்போது, அரசாங்கம் ஒரு கையாளுவதற்கு எளிதற்ற மற்றும் ஸ்திரமற்ற கட்சிகளின் கூட்டணியில் தங்கியிருக்கின்றது. ஜனாதிபதி ஏறத்தாழ ஒவ்வொரு அரசாங்க சார்பு பாராளுமன்ற உறுப்பினருக்கும், அவர்களது விசுவாசத்தை தொடர்ந்தும் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இலஞ்சம் வழங்கும் வகையில் அவர்களுக்கு ஒரு அமைச்சர் பதவியையோ அல்லது வேறு ஏதாவது பதவியையோ வழங்கத்தள்ளப்பட்டுள்ளார்.

இராஜபக்ஷ, தனது சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) பலத்தை அதிகரித்து, தனது கூட்டணி கட்சிகளின் செல்வாக்கை குறைத்து மற்றும் மிகவும் இலகுவாக நிர்வகிக்கத்தக்க நிர்வாகமொன்றை அமைக்க விரும்புகிறார். ஆயினும், அமைச்சரவையின் அளவை குறைப்பது மட்டும் மிகவும் வெளிப்படையான ஆட்சிக்கு வழிவகுக்காது. அரசாங்கம் நாட்டின் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதற்கு தயாராகின்ற நிலையில், அது பாராளுமன்றத்தின் மீதும் மற்றும் அரச இயந்திரத்தின் சகல பிரிவுகள் மீதும் தனது பிடியை இறுக்கிக்கொள்ள முயற்சிக்கின்றது.

அச்சமூட்டும் வகையில், என்ன வடிவிலான அரசியலமைப்பு திருத்தங்கள் பிரேரிக்கப்படுகின்றன என்பது பற்றி பிரேம ஜயந்த சுட்டிக்காட்டவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில், அமைச்சர்களை நியமிக்கவும் பதவிவிலக்கவும் மற்றும் அரசாங்கமொன்றை பதவி விலக்கவும் ஏற்கனவே இராஜபக்ஷ விரிவான அதிகாரங்களைக் கொண்டுள்ளார். தற்போது அவர் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களை தன்வசம் கொண்டுள்ளார். கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்விகண்ட போதிலும், தற்போதைய அவசரகால நிலைமையின் கீழ், அவரால் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்யவும், ஊடக தணிக்கைகளை திணிக்கவும் மற்றும் குற்றச்சாட்டுக்கள் இன்றி கைது செய்ய அதிகாரமளிக்கவும் முடியும்.

இராஜபக்ஷ பெருமளவில் நாட்டின் சட்ட முறைமையையும் அரசியலமைப்பையும் அலட்சியத்துடனேயே நடத்தி வந்துள்ளார். 2008 டிசம்பரில், அரசியலமைப்பின் 17வது திருத்தத்தின் கீழ் கோரப்பட்டுள்ள அரசியலமைப்புப் சபையை ஸ்தாபிக்குமாறு அவருக்கு உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ஜனாதிபதி உதைத்துத் தள்ளினார். வெளிப்படையாக உருமறைத்து விடுத்த சரீர தாக்குதல் அச்சுறுத்தல் ஒன்றில், "சட்டத்துறை அதிகாரிகளின் வீடுகளுக்கு கல் எறியப்பட்டு மற்றும் மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு பிரேரணைகள் கொண்டுவரப்பட்ட காலகட்டம் பற்றி" அவர் நீதிபதிகளுக்கு நினைவூட்டினார்.

அரசியலமைப்பின் கீழ், அரசாங்கத்தாலும் எதிர்க் கட்சியாலும் கூட்டாக ஸ்தாபிக்கப்படும் இந்த அரசியலைமைப்புச் சபை, பொலிஸ், தேர்தல் திணைக்களம், சட்டத்துறை மற்றும் பொது நிர்வாகத்தின் ஏனைய பகுதிகளை ஸ்தாபிப்பற்கும் பரந்த பொறுப்பைக் கொண்டுள்ளது. இராஜபக்ஷ தனது நெருங்கிய விசுவாசிகளை நியமிக்கவும் மற்றும் அரச இயந்திரத்தை இயக்கவும் தளக்குள்ள சொந்த இயலுமையை குறுக்கறுப்பதன் காரணமாக, இத்தகைய மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளைக் கூட அமுல்படுத்துவதை ஏற்கமறுக்கின்றார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அரசியலமைப்புச் சபையை ஸ்தாபிக்கும் நடவடிக்கையை கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது அரசாங்கம் அதை முன்னெடுக்கப் போவதாக பிரேமஜயந்த சுட்டிக்காட்டுகிறார். இந்த மனமாற்றத்துக்கான காரணத்தை அடையாளங்காண்பது சிரமம் அல்ல. சுதந்திர முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதில் வெற்றி பெற்றால், தம் விருப்பப்படியான அரசியலமைப்புச் சபையை ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லது நாங்கள் அதன் கட்டமைப்பை அரசியலமைப்பு ரீதியாக மாற்றுவோம் அல்லது அதை முழுமையாக தூக்கி வீசுவோம் என எதிர்க் கட்சிகளுக்கு இறுதி நிபந்தனை விதிக்கக்கூடிய நிலையில் அது இருக்கும்.

நிச்சயமாக, சுதந்திர முன்னணி இன்னமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவேண்டும். ஆனால், அது ஜனாதிபதி தேர்தலில் போல், எதிர்க் கட்சிகளுக்கு எதிரான குண்டர் நடவடிக்கைகள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களோடு சேர்த்து, தேர்தல் பிரச்சாரத்துக்காக அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள் உட்பட அரச வளங்களை பகிரங்கமாக பயன்படுத்தும் அதே வழி முறைகளை பயன்படுத்தும் என்பதற்கான ஒவ்வொரு அறிகுறியும் உள்ளன. ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இரண்டு வார காலத்தில், அரசாங்கம் பொன்சேகாவின் ஆதரவாளர்களை கைதுசெய்து, இந்த முன்னாள் இராணுவத் தளபதியின் விசுவாசிகளான இராணுவ அதிகாரிகளை பதவிவிலக்கி, எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த பத்திரிகையின் ஆசிரியரை கைது செய்து மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் வலைத் தளங்களை தடுத்துள்ளது.

திங்கட் கிழமை, அர்சாங்கத்தை தூக்கிவீசுவதற்காக எதிர்க் கட்சிகளுடன் சதி செய்தார் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டின் கீழ் பொன்சேகா அவரது அலுவலகத்தில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு இராணுவ பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாட்டின் முன்னாள் உயர்மட்ட ஜெனரலும் மற்றும் ஜனாதிபதி வேட்பாளருமான பொன்சேகாவை அந்த முறையில் கைது செய்யமுடியுமெனில், எந்தவொரு அரசியல் எதிரியும் இந்த முறையிலேயே நடத்தப்பட முடியும். எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பொன்சேகா சதியில் ஈடுபட்டிருந்தால், அவர்களும் "தேசத்துரோக" நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதே அதன் உட்பொருளாகும்.

அரசுகுச் சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகையின் நேற்றைய ஆசிரியர் தலைப்பு, எதிர்க் கட்சிகள் சார்ந்த ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தலுக்கு சமமான ஒன்றை விடுத்தது. "கடந்த பல வாரங்களாக ஊடகங்களை கவனமாக வாசித்தால், பிழையான தகவல்களுக்கு பல உதாரணங்களை ஒருவர் காண முடியும்," என அது தெரிவிக்கின்றது. ஜனாதிபதி தேர்தலின் நேர்மையைப் பற்றி "தவறான தகவல் தந்ததாக" ஊடகங்களை விமர்சித்த பின்னர், அந்த பத்திரிகை பொன்சேகா கைதுசெய்யப்பட்டதை வரவேற்கிறது.

இந்த கைதை அங்கீகரிக்காமல் இருப்பதற்குள்ள உரிமையை ஏற்றுக்கொள்ளும் அந்த ஆசிரியர் தலைப்பு, "இது குறிப்பிட்ட சில ஊடகங்களும் குறிப்பிட்ட அரசியல்வாதிகளும் கூறிக்கொள்வது போல் இந்தக் கைது சட்ட விரோதமானது என்ற முடிவுக்கு வர எவரையும் அனுமதிக்கவில்லை. அந்த கருத்தை பரப்பும் எந்தவொரு ஊடகமும் அல்லது நபரும் பிழையான தகவல்களை வழங்குவதோடு இராணுவத்துக்குள்ள அதிகாரங்கள் பற்றி மக்களையும் பிழையாக வழிநடத்துகின்றனர்," என பிரகடனம் செய்கின்றது.

"இந்த பிழையான தகவல் தருவதானது, நாட்டின் எதிரிகள்... நாட்டுக்கு அவப்பேறைக் கொண்டுவரக் கூடிய மற்றும் தேசிய பாதுகாப்பையும் அரச இறைமையையும் சமரசத்துக்குள்ளாக்கக் கூடிய திகைப்பூட்டும் நிலைமைக்குள்ளும் கூட தள்ளிவிடக் கூடிய ஆபத்தில் தங்கியிருக்கின்றது," என அந்த பத்திரிகை எச்சரிக்கின்றது.

முதலாளித்துவ ஜனநாயக வரம்புக்குள் கூட, பிரஜைகளால் கைதுகள் தொடர்பான சட்டப்பூர்வத் தன்மை மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும், விவகாரங்கள் தீர்மானிக்கப்படும் இடமான நீதிமன்றத்தின் ஊடாக சவால் செய்ய முடியும். உண்மையில், பொன்சேகாவின் கைது விவகாரம் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற அடித்தளத்தில் அவரது கைதின் சட்டப்பூர்வத் தன்மையை கேள்விக்குள்ளாக்குவதை அங்கீகரிக்க முடியாது என பிரகடனம் செய்வதன் மூலம், அரசாங்கம், எது சட்டப் பூர்வமானது மற்றும் ஏற்கத்தக்க மற்றும் ஏற்கக் கூடாத பகிரங்க விமர்சனம் எத்தகையது என்பதை தீர்மானிக்கும் உரிமையை அதுவே எடுத்துக்கொள்கின்றது.

கொழும்பு ஊடகங்கள் நன்கு அறிந்தவாறு, அத்தகைய அச்சுறுத்தல்கள் மோசமான விளைவுகளைக் கொண்டவை. கடந்த நான்கு ஆண்டுகளாக, பாதுகாப்புப் படையினருடன் கூட்டாக இயங்கும் அரசாங்க சார்பு கொலைப் படைகளால், எதிர் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் அல்லது "காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்". இராஜபக்ஷ அரசாங்கத்திடம் இது பற்றி கவனத்திற்குக் கொண்டுவந்தால், அது "தேசிய பாதுகாப்பின்" நலனுக்காக அத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கும்.

தேர்தலின் போதும் அதன் பின்னரும் மேலோங்கவுள்ள அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறை சூழ்நிலை பற்றிய இன்னுமொரு எச்சரிக்கையே அந்த ஆசிரியர் தலையங்கமாகும். இறுதி ஆய்வுகளில், ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் மோசமான தாக்குதல்கள், அடிப்படையில் பொன்சேகாவை மற்றும் எதிர்க் கட்சிகளை இலக்காகக் கொண்டதல்ல, மாறாக அவை தொழிலாள வர்க்கத்தை இலக்காகக் கொண்டதாகும். தேர்தல் முடிந்த கையோடு, அடுத்த இராஜபக்ஷ அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் வயிற்றிலடிக்கும் கோரிக்கைகளின் வழியில் வாழ்க்கைத் தரத்தின் மீது கடுமையான தாக்குதலை முன்னெடுப்பதோடு எந்தவொரு எதிர்ப்பின் மீதும் அரச இயந்திரத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தும்.

புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால நீண்ட யுத்தத்தின் போது, ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள், பொலிஸ் அரசுக்கான வரைவுத் திட்டத்தை வழங்கும் பிரமாண்டமான இராணுவ-பொலிஸ் இயந்திரத்தை கட்டியெழுப்பியுள்ளன. இராஜபக்ஷ தனது முதல் பதவிக் காலத்தின் போது, அரசியல் எதிர்ப்புக்களை அச்சுறுத்தவும் நசுக்கவும் தனக்குள்ள விரிவான அதிகாரங்களை உச்சிவரை சுரண்டிக் கொண்டார். இப்போது அவர் உழைக்கும் மக்களுக்கு எதிராக பொருளாதார யுத்தமொன்றை தொடங்கத் தயாராகின்ற நிலையில், ஜனாதிபதி தனது சர்வாதிகார ஆட்சிக்கு ஒரு அரசியலமைப்பு இறப்பர் முத்திரையை வழங்க மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்பார்க்கின்றார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved