World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Greek public sector workers strike against austerity measures

கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக கிரேக்க பொதுத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

By our reporters
11 February 2010

Back to screen version

ஏதென்ஸில் உள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பொது அலுவலங்கள் மற்றும் விமான நிலையம் நேற்று 24 மணி நேர வேலைநிறுத்தத்தின்போது மூடப்பட்டன. மருத்துவமனைகள் மிக அவசரப் பணிகளை மட்டும் நடத்தின. பஸ்கள் குறைந்த கால அட்டவணையை கடைப்பிடித்தன. விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் விமானப் போக்குவரத்து பொறியியல் வல்லுனர்களும் வெளிநடப்பு செய்ததனால் அனைத்து விமான போக்குவரத்தும் தடைப்பட்டது. இதற்கு இடையில், ஏதென்ஸ்-சலோனிகா முக்கிய கார்ப் பாதையை விவசாயிகள் மறியல் ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச வங்கிகளின் ஆணைகளின்படி பாப்பாண்ட்ரு அரசாங்கத்தின் கடும் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட உள்ளமைக்கு எதிராக இந்த எதிர்ப்புக்கள் நடைபெறுகின்றன. தன்னுடைய பற்றாக்குறையை 12.7 சதவிகிதத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் 3 சதவிகிதத்திற்கும் குறைவாக செய்யுமாறு கிரேக்கம் கட்டாயப்படுத்தப்படுகிறது.

நேற்று மாலை, புதிய வரிவிதிப்பு, சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. பொதுத்துறை ஊழியர்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் கூடுதலாக பணிபுரிய வேண்டும். எரிபொருள் விலைகள் லிட்டருக்கு 1.5 யூரோ என்று உயர்ந்துவிட்டன. இது 10 சதவிகிதம் கூடுதல் ஆகும்.

தொழிலாளர்கள் கிரேக்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கையில், பிரதம மந்திரி Giorgos Papandreou பாரிசில் தன்னுடைய சிக்கன நடவடிக்கை திட்டத்தை பாதுகாத்துத் தன் அரசாங்கம் "அனைத்துவிதத்திலும் அதைச் செயல்படுத்த முழு முடிவு எடுத்துள்ளதாக" அறிவித்தார்.

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியுடன் பேச்சுக்கு பின்னர், பாபாண்ட்ரு பிரெஞ்சு ஜனாதிபதியிடம் "உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்த நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்.... அதற்குத் தேவையானவற்றை செய்யத் தயார்" என்று உத்தரவாதம் கொடுத்தார்.

ஏதென்ஸிலும் தெசலோனிகியிலும் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஏதென்ஸ் உத்தியோகபூர்வ ஆர்ப்பாட்டம் பொதுத்துறை தொழிற்சங்கம் ADEDY ஆல் அழைப்பு விடப்பட்டிருந்தது. இது சமூக ஜனநாயக PASOK உடன் தொடர்புகளை கொண்டது. ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி KKE உடன் தொடர்புகளை கொண்ட PAME தனி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தது. இரு ஆர்ப்பாட்டங்களிலும் 20,000 பேருக்கு மேல் கலந்து கொண்டனர். அதில் ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், தீயணைக்கும் படையினர், துப்புரவுத் தொழிலாளர்கள், பொறியியல் வல்லுனர்கள், அகழ் பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

"முதலாளித்துவ ஒட்டுண்ணிகளுக்கு வேண்டாம் என்போம். செல்வம் தொழிலாளர்களுக்குத்தான் சொந்தம்.", "தொழிலாளர்களின் பதில் முதலாளிகள்மீது போர்", "அடிமைத் தொழிலாளர் முறை வேண்டாம்", "பிரபுத்துவத்தினர் நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும்" என்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளும் இருந்தன.

இத்தகைய போராளித்தன சூழ்நிலையுடன் உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களின்மீது குறிப்பிடத்தக்க வகையில் அவநம்பிக்கையும் இருந்தது. அவற்றின் மூலோபாயம் வேலைநிறுத்தமானது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் நடவடிக்கைகான பகுதியான அணிதிரட்டல், இவற்றின் முலம் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை குறைத்து கட்டுப்படுத்தலாம் என்பதுதான்.

"நிதி அமைச்சரக ஊழியர்களின் ஆரம்ப முயற்சி" என்ற குழுவும் எதிர்ப்பில் இருந்தது. அவர்களுடைய பதாகையில், "அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், தொழிற்சங்கங்கள் வெகுஜன செய்தி ஊடகத்தின் இரகசிய உடன்பாட்டு ஒத்துழைப்பில் நடத்தும் திட்டங்களை தொழிலாளர்கள் இரத்துச் செய்து நீக்கிவிடுவர்" என்று இருந்தது.

குழுவில் ஒருவரான அலெக்சிஸ் கூறினார்: "தொழிற்சங்கங்களின் தலைமை தொழிலாளர்களின் நலன்களை கைவிட்டுவிட்டன. தொழிலாளர்கள் கீழிருந்து மேல் வரை தங்களை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும்." என்றார்.

வேணி, மயா என்னும் இரு ஆசிரியர்களும் தங்கள் சங்கம் தங்கள் உண்மை நலன்களை பிரதிபலிக்கிறதா என்று சந்தேகப்பட்டனர். வேணி கூறினார்: "அவர்களுடைய நடவடிக்கை பொதுவாக 24 மணி நேர வேலைநிறுத்தத்துடன் நின்றுவிடுகிறது"; இதை அவரும் அவருடைய சக ஊழியர்களும் கேலியுடன் "ஆண்டு" வேலைநிறுத்தம் என்று குறிப்பிடுகின்றனர். "இதற்கு நாங்கள் எதிராக உள்ளோம்" என்று அவர் கூறினார்.

ஏதென்ஸ் மையத்தில் இருக்கும் பள்ளிகளில் வளங்கள் மிகக் குறைவாக உள்ளன என்று வேணி விளக்கினார். "ஆசிரியர்கள் 700 யூரோ என்ற மக்கள் பிரிவிற்குள் வராவிட்டாலும், அவர்களுடைய வாழ்க்கைத்தரம் ஒன்றும் அதிகம் அல்ல. அரசியல்வாதிகள் தங்கள் நெருக்கடியை ஏற்கனவே விலைவாசி, கடன்களால் கஷ்டப்படும் எங்களுடைய இழப்பில் தீர்க்க முயல்கின்றனர்."

பனயோடிஸ் ஏதென்ஸில் ஒரு பெரிய கட்டமைப்பு நிறுவனத்தில் இயந்திரம் இயக்குபவராக உள்ளார். "கிரேக்க தொழிலாளர்களுடைய நிலைமை கடினமாக உள்ளது. வாழ்க்கைச் செலவினங்கள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. ஊதியங்களோ குறைக்கப்படுகின்றன. மூன்று ஆண்டுகளாக எனக்கு ஊதிய உயர்வு இல்லை. மிக அதிக வேலையின்மை, குறிப்பாக கட்டுமானத்துறையில் உள்ளது. அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். நான் வேலை செய்யும் நிறுவனத்திலும் இப்படித்தான். சுமத்தப்படும் நடவடிக்கைகள் தொழிலாளர்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும்தான் உள்ளன. இப்பொழுது அரசாங்கம் ஓய்வூதிய வயதை அதிகரித்து, ஓய்வூதியத் தொகைகளை குறைக்க விரும்புகிறது. பாபாண்ட்ரூ அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் எதிர்பார்த்தது வேறு."

"எனக்கு பெரும் திகைப்பு, ஏமாற்றப்பட்டுவிட்டேன், கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டேன் என்ற உணர்வுதான் உள்ளது. பல நேரமும் தொழிலாளர்களுக்கு தேர்தலுக்கு முன் கொடுக்கப்படும் உறுதிமொழிகள் பின்னர் செயல்படுத்தபடுவதில்லை என்றுதான் காண்கிறேன். இன்று அவர்கள் மோசமான வகையில் பலவற்றை சுமத்துகின்றனர். அரசாங்கம் பகுதி கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் நிறுவனத்தில் நான் வேலை பார்க்கிறேன். மிரட்டல் மற்றும் பொருளாதார அழுத்தங்களால் இன்று இங்கு இல்லாமல் உள்ள தொழிலாளர்களை நான் மறக்க முடியாது. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிகக் குறைவான வருமானங்களில் ஒன்றைத்தான் நாங்கள் கொண்டுள்ளோம். ஆனால் ஐரோப்பாவில் வேறு எந்த சூப்பர் சந்தையிலும் இல்லாத அளவிற்கு அதிக விலைகளைக் கொடுக்கிறோம்." என்று யியனிஸ் கூறினார்.

வேலையில்லாதவர்கள் இன்னும் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோர்புவில் இருந்து நிக்கோஸ் நவம்பர் மாதத்தில் இருந்து வேலையில் இல்லை. அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. மாதம் 540 யூரோக்களை வேலையின்மை நலன்களில் இருந்து பெறுகிறார். இதுவும் ஏப்ரல் மாதத்துடன் நின்றுவிடும். "ஏற்கனவே கஷ்டத்தை உணர்கிறேன்." என்றார் அவர். இவருடைய அடுக்கு மாடி வீட்டின் வாடகையே 515 யூரோ மாதத்திற்கு என்று உள்ளது. அவருடைய குடும்பம் அவருடைய பாட்டியின் ஓய்வூதியம் என்ற துணை வருமானத்தில்தான் வாழ முடியும். "ஐரோப்பாவில் அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராகப் போராட வேண்டும்" என்றார்.

இந்த சர்வதேச தொழிலாள ஐக்கியம் என்னும் தன்னெழிச்சியான நிகழ்விற்கு முற்றிலும் எதிராக SYRIZA மற்றும் Coalition of the Radical Left போன்ற அமைப்புக்களின் தேசியக் கண்ணோட்டம் உள்ளது. அவை கடும் சிக்கன நடவடிக்கைகளை தாங்களும் எதிர்ப்பதாக கூறிக் கொள்கின்றன.

Synaspismos என்னும் SYRIZA கூட்டிற்குள் இருக்கும் மிகப் பெரிய குழுவின் சர்வதேச தொழிற் பகுதியின் Costas Isychos உடன் பேசினோம். மற்றய ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தொழிலாளர்கள் பற்றி அவர் முற்றிலும் தேசிய பார்வையைத்தான் வெளிப்படுத்தினார். இத்தாலியில் Rifondazione காட்டிக் கொடுப்பை ஒப்பிட்டுக்கொள்ளும் விதத்தில், முதலாளித்துவ பிரோடி அரசாங்கத்துடன் சேர்ந்து இத்தாலிய தொழிலாளர்களின் ஓய்வூதிய உரிமைகள் மீதான தாக்குதலுக்கு ஒத்துழைத்தது என்பது பற்றி கேட்கப்பட்ட போது அவர் கூறினார்: அதாவது "மற்றய நாடுகளில் உள்ள உண்மைநிலை பற்றி நாங்கள் கருத்துக்கூறவியலாது. இங்கு கிரேக்கம் பற்றிப் பேசுகிறோம். SYRIZA வின் அனுபவம் உலகில் பிரத்தியேகமானது" என்றார்.

பொதுத்துறையின் இரண்டாம் ஒருநாள் வேலைநிறுத்தம் பெப்ருவரி 17ம் தேதி நடக்க உள்ளது. பெப்ருவரி 24ம் தேதியும் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved