World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP condemns opposition candidate's arrest

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க் கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டதை கண்டனம் செய்கின்றது

By the Socialist Equality Party (Sri Lanka)
11 February 2010

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி, தோல்வியுற்ற எதிர்க் கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதை ஐயத்துக்கு இடமின்றி கண்டனம் செய்கின்றது. திங்கட் கிழமை இரவு அவர் இராணுவ பொலிசாரினால் கைது செய்யப்பட்டமை ஜனநாயக உரிமைகள் மீதான மோசமான தாக்குதலாகும். அது ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ் பொலிஸ்-அரச ஆட்சியை பலப்படுத்துவதை முன்னறிவிக்கின்றது.

ஜனவரி 26 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த நவம்பரில் இராணுவத்தில் இருந்து இராஜனாமா செய்த பொன்சேகாவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை. அவர் அரச இரகசியங்களை வெளிப்படுத்தினார், அரசாங்கத்தை தூக்கி வீச சூழ்ச்சி செய்தார் மற்றும் ஜனாதிபதியின் சகோதரர் உட்பட இராஜபக்ஷவையும் அவரது நெருக்கமான ஆலோசகர்களையும் படுகொலை செய்யத் திட்டமிட்டார் என்பது போன்ற அரசாங்க பேச்சாளரால் முன்வைக்கப்பட்ட பலவித குற்றச்சாட்டுக்களில் முரண்பாடுகள் நிறைந்துள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் எதையும் ஒப்புவிப்பதற்கு எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை. அரசாங்கத்தின் படி, அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும், மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் பதவிவிலகுவதற்கு முன்னர், சேவையில் இருந்த அலுவலர் என்ற வகையில் பொன்சேகாவின் நடவடிக்கைகள் தொடர்பானவையாக உள்ளன. அவ்வாறெனில் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு இவ்வளவு காலம் எடுத்தது ஏன்? பொன்சேகா எதிர்க் கட்சி வேட்பாளரான போதே அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுக்களை புணைந்துள்ளதோடு, இப்போது அதனது உடனடி தேவைகளான பொன்சேகாவை அரசியல் நடவடிக்கைகளில் இருந்து அகற்றுவதையும் மற்றும் தனது எதிரிகளை அச்சுறுத்துவதையும் நிறைவேற்றுவதற்கு அதை பயன்படுத்துகிறது என்பதே தெளிவான பதிலாகும்.

பொன்சேகா கைது செய்யப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள், இராஜபக்ஷ பாராளுமன்றத்தை கலைத்ததோடு ஏப்பிரல் 8 பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இந்தத் தேர்தல், அரசாங்கத்தின் மீதான எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் நசுக்குவதை இலக்காகக் கொண்ட ஒரு அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறை வலையின் கீழேயே நடக்கும். "அரசாங்கத்தை தூக்கிவீச முயற்சித்தார்" என்ற திட்டவட்டமற்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவப் பொலிசாரால் பொன்சேகாவை இழுத்துச் செல்ல முடியுமாயின், இராஜபக்ஷ ஆட்சியை சவால் செய்யும் எவரும் இதே போன்ற நிலைமையை அல்லது இதற்கும் மோசமானதை எதிர்கொள்ள நேரிடும்.

அரசாங்கம், அசியலமைப்பை மாற்றக்கூடிய மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையை வெற்றிகொள்வதை இலக்காகக் கொண்டுள்ளதாக பிரகடனம் செய்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற முறையில், நாட்டின் தொடரும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் விரிவுபடுத்தப்பட்டுள்ள பெரும் விளைவுகளைக் கொண்ட அதிகாரங்களை இராஜபக்ஷ ஏற்கனவே கொண்டுள்ளார். தனது முதலாவது பதவிக் காலத்தில், பாராளுமன்றத்தை ஒரு இறப்பர் முத்திரையாக தரம் குறைத்த அவர், நாட்டின் நீதிமன்றத்தையும் சட்ட முறைமையையும் அலட்சியம் செய்த ஒரு அரசியல்-இராணுவ குழுவின் ஊடாகவே ஆட்சி செய்தார். இப்போது தனது சர்வாதிகாரப் போக்கு கொண்ட ஆட்சி முறையை வழக்கமாக்குவதற்கு அரசியலமைப்பை மாற்றும் அதிகாரத்தை பெற விரும்புகிறார்.

பொன்சேகாவின் கைது தொடர்பான ஊடகங்களின் பிரதிபலிப்புகள், ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை ஆளும் வட்டாரத்துக்குள் பிரதிநிதிகள் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. "ஆச்சரியமற்ற" வகையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது என வலதுசாரி ஐலண்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. "விரிவடைந்துவரும் நாடகத்தில் தொல்லைக்குள்ளாக்கும் பொறிகள் இல்லாமல் இல்லை" என அதன் ஆசிரியர் தலைப்பு ஏற்றுக்கொண்ட போதிலும், எதிர்க் கட்சிகள் மீது குற்றஞ்சாட்டுவதோடு "அரசாங்கமும் இராணுவமும் சட்ட எல்லைகளுக்குள் செயற்படும் என எதிர்பார்ப்பதாக" தெரிவிக்கின்றது.

அடிக்கடி தாராளவாத பாசாங்குகளை காட்சிப்படுத்தும் டெயிலி மிரர் பத்திரிகையின் சிடுமூஞ்சித்தனத்தில் குறைச்சல் இல்லை. ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சினைகைள ஒதுக்கித் தள்ளியுள்ள அதன் ஆசிரியர் தலைப்பு, அரசாங்கத்தின் அரசியல் கண்மூடித்தனம் பற்றி அதற்கு உபதேசம் செய்கின்றது. பொன்சேகாவை கைது செய்ததன் மூலம், இராஜபக்ஷ "பூஜ்ஜியமாக இருந்த ஜெனரலை கதாநாயகனாக" ஆக்கி விட்டதாக அது தெரிவித்துள்ளது. எந்தவொரு பத்திரிகையும் கைதுகளை கண்டனம் செய்யவில்லை அல்லது எதிர்க் கட்சி அரசியல்வாதிகளை தண்டிப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கவும் இல்லை.

கொழும்பு ஊடகங்களின் பிரதிபலிப்புகள், மெளனமான சர்வதேச பிரதிபலிப்புகளுடன் ஒன்று சேர்கின்றன. இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடந்து இரண்டு வாரங்களே கடந்துள்ள நிலையில், பிரதான எதிர்க் கட்சி வேட்பாளர் பகிரங்கமாக கைது செய்யப்பட்டுள்ளது பற்றி, அமெரிக்க வெளியுறவு திணைக்களம் "வழமைக்கு மாறானது" என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. இந்தக் கருத்து, கடந்த ஆண்டு ஈரானிய ஜனாதிபதி தேர்தலை மோசடியானது என வகைப்படுத்தி அரசாங்கம் எதிர் கட்சிகளை அடக்குவதாக கண்டனம் செய்து அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் முன்னெடுத்த பிரமாண்டமான பிரச்சாரத்துடன் ஒப்பிடும் போது, குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் கொண்டுள்ளது. இரு விடயங்களிலும் -ஈரான் மற்றும் இலங்கை- பிரதிபலிப்பு அல்லது அதற்கும் குறைவான ஒன்று, ஜனநாயக உரிமைகள் மீதான அக்கறையினால் அன்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களாலேயே தீர்மாணிக்கப்படுகின்றன.

பொன்சேகா உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யப்படல் வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி கோருகின்றது. ஆயினும், அவ்வாறு கோரும் அதே வேளை, பொன்சேகா மீதோ அல்லது அவரை ஆதரிக்கும் எதிர்க் கட்சிகள் மீதோ நம்பிக்கை வைக்க வேண்டாம் என நாம் தொழிலாள வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம். கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடையும் வரை, இராஜபக்ஷவின் குழுவில் பொன்சேகாவும் ஒரு பங்காளியாக இருந்ததோடு ஜனாதிபதியால் 2006ல் மீண்டும் தொடங்கப்பட்ட யுத்தத்தை ஈவிரக்கமற்று முன்னெடுத்தார். இருவரும் அரசாங்க-சார்பு கொலைப் படைகளின் செயற்பாடு உட்பட யுத்தக் குற்றங்களுக்கும் ஜனநாயக உரிமை மீறல்களுக்கும் பொறுப்பாளிகளாக உள்ளனர்.

இதே போல், ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய பிரதான முதாலளித்துவ எதிர்க் கட்சிகளுக்கும் ஜனநாயக உரிமைகளை மீறிய நீண்ட வரலாறு உண்டு. அவர்களால் "ஜனநாயகவாதிகளாக" காட்டிக்கொள்ள முடிவதற்குக் காரணம், முன்னாள் இடதுகளான நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதேயாகும். இந்த இரு முன்னாள் இடது கட்சிகளும் பொன்சேகாவை விடுவிப்பதற்காகன எதிர்க் கட்சி இயக்கத்தில் விமர்சனமின்றி இணைந்துகொண்டுள்ளன.

இத்தகைய சந்தர்ப்பவாதிகளின் நடவடிக்கைகள் சோசலிச சமத்துவக் கட்சி அண்மையில் விடுத்த எச்சரிக்கையை உறுதிப்படுததுகிறது (பார்க்க: இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, ஐக்கிய சோசலிச கட்சிக்கு பதிலளிக்கின்றது). ஆளும் வர்க்கத்தில் ஏற்பட்டுள்ள ஒரு அரசியல் வெடிப்பானது, தொழிலாள வர்க்கம் தனது சொந்த நலன்களுக்காக போராடத் தொடங்கினால் ஆளும் வர்க்கத்தின் ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எவ்வாறெனினும், தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவதற்கு பதிலாக, நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் அத்தகைய அபிவிருத்தியை தடுப்பதற்காக பொன்சேகா பற்றியும் வலதுசாரி எதிர்க் கட்சிகள் பற்றியும் ஆபத்தான மாயைகளை வேண்டுமென்றே தோற்றுவிக்கின்றனர்.

ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் நவசமசமாஜக் கட்சியின் நடவடிக்கைகளின் முக்கியத்துவம், இலங்கை முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள ஆழமான நெருக்கடியை கோடிட்டுக் காட்டுகிறது. ஆளும் வட்டாரத்தில் நடக்கும் அரசியல் மோதல்கள், நாட்டின் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமையால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதிதீவிரமான சமூக பதட்ட நிலைமைகளின் உறுபத்தியே ஆகும். சர்வாதிகார ஆட்சி வடிவத்துக்கான இராஜபக்ஷவின் தயாரிப்புக்கள், அடிப்படையில் பொன்சேகாவுக்கும் எதிர் கட்சிகளுக்கும் எதிராக இலக்கு வைக்கப்பட்டதல்ல. மாறாக, தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதாகும். உலகம் பூராவும் தற்போது வெடித்துவரும் கடன் நெருக்கடியின் குறிப்பிடத்தக்க கூர்மையான வடிவத்துக்கு இலங்கை சான்றாக உள்ளது. யுத்தத்துக்கு செலவிடுவதற்காக நாட்டை அடகு வைத்துள்ள இராஜபக்ஷ, இப்போது பொதுச் செலவை வெட்டித்தள்ளவும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது மோசமான தாக்குதலைத் தொடுக்கவும் தள்ளப்பட்டுள்ளார்.

இராஜபக்ஷ மற்றும் பொன்சேகா கன்னைகளுக்கிடையிலான மோதலின் கொடூரத்தன்மை ஒரு புறம் இருக்க, அவர்களுக்கிடையிலான வேறுபாடுகள், தொழிலாள வர்க்கம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது எப்படி, மற்றும் பெரும் வல்லரசுகளுக்கிடையிலான, குறிப்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உக்கிரமடைந்துவரும் பகைமையில் எந்தப் பக்கம் அணிதிரள்வது என்ற முற்றிலும் தந்திரோபாய பண்பைக் கொண்டுள்ளன. தமது உரிமைகளை பாதுகாப்பதற்காக தொழிலாளர்கள் முன்னெடுக்கும் ஒருமுகப்படுத்தப்பட்ட இயக்கமொன்றை எதிர்கொள்ளும் போது, இந்த இரு முகாங்களும், துரிதமாக தமது வேறுபாடுகளை புதைத்துவிட்டு, இந்த இலாப அமைப்பை பாதுகாக்கும் மிகவும் தீவிரமான வழிமுறைகளைப் பயன்படுத்தவும் மற்றும் எதிர்ப்பை நசுக்கவும் தயங்கப் போவதில்லை.

தொழிலாள வர்க்கம் கடுமையான ஆபத்துக்களை எதிர்கொள்கின்றது. முதலாளித்துவத்தின் ஏதாவதொரு பகுதிக்கு அரசியல் ரீதியில் கட்டுண்டிருந்தால் தொழிலாள வர்க்கத்தால் தமது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. அவர்கள் வர்க்கப் போராட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி ஒரு சுயாதீனமான பாதையை வகுத்துக்கொள்ள வேண்டும். வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பதற்கான முதற் படியாக, வேலைத் தளங்களிலும் தொழிலாள வர்க்கப் பிரதேசங்களிலும் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை உடனடியாக ஸ்தாபிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமானது, ஒரு சில செல்வந்தர்களால் அதி பெரும்பான்மையான மக்கள் பொருளாதார ரீதியில் சுரண்டப்படுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக ஒழுங்கான முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்துடன் மாற்றமுடியாதவாறு பிணைக்கப்பட்டுள்ளது. ஆளும் வர்க்கத்தின் சகல தட்டினருக்கும் எதிராக, உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சோசலிச கொள்கையுடனான வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக, தொழிலாள வர்க்கமானது தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காக போராட வேண்டும்.

சிங்களவர்களை தமிழ் தொழிலாளர்களிடம் இருந்தும், இலங்கையில் உள்ள தொழிலாளர்களை தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் இருக்கும் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளிடமிருந்தும் பிளவுபடுத்துவதற்காக பல தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்டு வரும், சகல விதமான தேசியவாதம் மற்றும் இனவாதத்தை நிராகரிப்பது, அத்தகைய ஒரு அரசியல் போராட்டத்துக்கான இன்றியமையாத முன்நிபந்தனையாகும். குறுகிய ஒடுங்கிய தீவுக்குள் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது. ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டமானது பிராந்தியம் பூராவும் மறுறம் பூகோளம் பூராவும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்துடன் உறுதியாக இணைக்கப்பட்டுள்ளது.

இத்தகயை அரசியல் பிரச்சினைகளில் அவசரமாக அக்கறை காட்டுமாறும், கட்சியுடன் தொடர்பு கொண்டு அதன் பிரச்சாரங்களில் செயலூக்கத்துடன் பங்குபற்றுமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved