World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைPolice attack opposition protest in Sri Lanka இலங்கையில் எதிர்க் கட்சி ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸ் தாக்தல் By our correspondents தோல்விகண்ட எதிர்க் கட்சி வேட்பாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக நேற்று மத்திய கொழும்பில் மறியலில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்கார்கள் மீது இலங்கை பொலிசாரும் அரசாங்க-சார்பு குண்டர்களும் தாக்குதல் தொடுத்தனர். தெற்கு நகரங்களான மாத்தறையிலும் காலியிலும் மற்றும் கிழக்கில் அம்பாறையிலும் நடந்த எதிர்க் கட்சிக் கூட்டங்களையும் பொலிசார் கலைத்தனர். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் உத்தியோகபூர்வ கட்டளையின் படி இராணுவப் பொலிசார் திங்கட் கிழமை இரவு பொன்சேகாவை கைது செய்தனர். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை கொல்லவும் அரசாங்கத்தை தூக்கி வீசவும் சதித்தித் திட்டம் தீட்டினார் என்ற உறுதியற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார். இந்த கைது, நாட்டின் சகல எதிர் கட்சிகள் மீது பாய்வதற்கான பரந்த நடவடிக்கையின் ஒரு பாகமாகும். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான நேற்றைய வன்முறைத் தாக்குதல்கள், அரசாங்கம் எதிர்ப்புக்களை பொறுத்துக்கொள்ளாது என்பதற்கான இன்னுமொரு செய்தியாகும். ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா.) ஆகிய எதிர்க் கட்சிகள், கொழும்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் ஹல்ட்ஸ்டோர்ஃப் என்ற இடத்தில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் வருவதற்கு முன்னதாகவே அரசாங்க அரசியல்வாதிகளால் சுமார் 150 குண்டர்கள் அணிதிரட்டப்பட்டிருந்ததோடு அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் தெளிவான திட்டத்துடன் இருந்தனர். அவர்கள் இரும்புக் கம்பிகள், வெற்று போத்தல்கள் மற்றும் பொல்லுகள் சகிதம் ஆயுதபாணிகளாயிருந்தனர். கலகம் அடக்கும் படை மற்றும் தண்ணீர் பீய்ச்சும் இயந்திரம் உட்பட நூற்றுக்கணக்கான பொலிசார் நிலைகொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொலிசார் நீதவான் ஒருவருக்கு விண்ணப்பித்திருந்த போதிலும் நீதவான அதை மறுத்துவிட்டார் --இது ஆளும் வட்டாரத்துக்குள் ஆழமான பிளவுகள் இருப்பதற்கான இன்னுமொரு அறிகுறியாகும். மேலும் கைதுகளை மேற்கொள்ளுமாறு ஆத்திரமூட்டும் சுலோகங்களை கத்தியதோடு ஆர்ப்பாட்டக்காரர்களை பிரிவினைவாத தமிழீழ விடுதலைப புலிகளின் ஆதரவாளர்கள் என கண்டனம் செய்த அரசாங்க-சார்பு குண்டர்களை கலைக்க பொலிசார் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியவுடன், ஆயுதபாணிகளாக நின்ற குண்டர்கள் தாக்கத் தொடங்கினர். அந்தக் கும்பலை ஓரங்கட்ட முயற்சிக்காத பொலிசார், எதிர்க கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகையையும் தண்ணீர் டாங்கியையும் பயன்படுத்தி தாக்குதல் தொடுக்க இந்த ஆத்திரமூட்டலை சாக்குப் போக்காக பயன்படுத்திக்கொண்டனர். சுமார் 5,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றுகூடிய பின்னர் மட்டுமே பொலிசார் பின்வாங்கியதோடு குண்டர்களும் அகன்றனர். எதிர்க் கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்பது பேர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்த அதே வேளை, பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகா, அவரது கைதை சவால் செய்து அடிப்டை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். எதேச்சதிகாரமான கைதில் இருந்து விடுதலை மற்றும் சட்டவிரோதக் கைது உட்பட ஜெனரலின் அரசியலமைப்பு உரிமைகள் இந்தக் கைதின் மூலம் மீறப்பட்டுள்ளதாக அந்த மனு பிரகடனம் செய்தது. அந்த மனுவில் இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படவுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகா கொழும்பில் கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் மற்றும் சில வெளிநாட்டு தூதரகங்களும் தலையிட்டதன் பின்னர், நேற்று மாலை அவரது மனைவி அனோமாவும் அவரது சட்டத்தரணி விஜேதாச இராஜபக்ஷவும் அவரைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். ஜனாதிபதி இராஜபக்ஷவும் மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயாலளாருமான கோடாபயவும் பொன்சேகாவின் கைது பற்றி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மிகவும் உறுதியற்றவை மற்றும் முரண்பாடானவை. அவற்றை எந்தவொரு வடிவிலான அரசாங்க-விரோத எதிர்ப்புக்கும் அதை பயன்படுத்திக்கொள்ள முடியும். சேவையில் இருக்கும் உயர்மட்ட ஜெனரல் என்ற வகையில், "அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டுவந்த ஏனைய எதிர்க் கட்சி தலைவர்களுடன் அவர் பல கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளார். இது ஒருவகையில் தேசத்துரோகத்துக்குச் சமமாகும்..." என பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலியே ரம்புக்வெல்ல செவ்வாய் கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார். குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படவில்லை என ரம்புக்வெல்ல ஏற்றுக்கொண்டார். அதற்குப் பதிலாக, குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்த ஆதாரங்கள் "சேகரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படும்" என்றார். இதே போல், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியிர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தாதவது: "எங்களால் குற்றச்சாட்டுக்கள் எவை என்பதை சரியாக சொல்ல முடியாது." சட்டமா அதிபர் திணைக்களத்தினால் "கிடைக்கும் ஆதராங்களைக் கொண்டு" குற்றச்சாட்டுக்கள் தீர்மாணிக்கப்படும். பலபேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதோடு ஏனையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என ரம்புக்வெல்ல சுட்டிக் காட்டினார். "கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவுட்ன சம்பந்தப்பட்ட மேலும் பல இராணுவத்தினரும் சிவிலியன்களும் உள்ளனர். இன்னும் பலர் கைதுசெய்யப்படவுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையினுரம் பொலிசாரும் விசாரித்து வருகின்றனர்". ரம்புக்வெல்லவின் தர்க்கத்தின் மூலம், சகல எதிர்க் கட்சிகளதும் தலைவர்கள் பொன்சேகாவுடன் "சதி செய்தவர்கள்", அவர்கள் கைது செய்யப்டுவதற்கு இலாயக்கானவர்கள். பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்களுக்காக தடுப்பு நிலையங்களை ஸ்தாபிக்க அதிகாரமளிப்பதற்காக அவசரகால சட்டத்தின் கீழ் ஒரு அசாதாரணமாக வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டுள்ளார். வவுனியாவில் தொழில் நுட்பக்கல்லூரி இராணுவ முகாம், கொழும்பு கடற்படை தலைமையகம், திருகோணமலை கடற்படை முகாம் மற்றும் அனுராதபுரத்தில் சாலியபுரவில் உள்ள இராணுவ முகாமிலும் இத்தகைய தடுப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த பதட்டமான சூழ்நிலையில், குறிப்பிட்ட திகதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்தாகவே, அரசாங்கம் நேற்று பாராளுமன்றத்தை கலைத்ததாக அறிவித்தது. பொன்சேக கைது செய்யப்பட்டவுடனான இந்த காலக்கெடு, எதிரிகளை அச்சுறுத்தவும் மற்றும் எதிர்க் கட்சியினரை குழப்பத்துக்குள் தள்ளவும் தெளிவாக திட்டமிடப்பட்டதாகும். அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கப்படாத "அரசியலமைப்பு மாற்றத்தை" பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்பார்க்கின்றது. அரசாங்கத்தின் பாய்ச்சல் வெறுமனே எதிர்க் கட்சிகள் மீது இலக்குவைக்கப்பட்டதல்ல. மாறாக, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதாகும். புலிகளை இராணு ரீதியில் தோற்கடித்த இராஜபக்ஷ, 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்தவும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்ற 2.6 பில்லியன் டொலர் கடனுக்கான நிபந்தனைகளை நிறைவேற்றவும் உழைக்கும் மக்கள் மீது "பொருளாதார யுத்த" ஒன்றுக்கு தாயாராகின்றார். சர்வதேச நாணய நிதியத்தின் வயிற்றிலடிக்கும் திட்டங்களை திணிப்பதற்கு ஏற்கனவே கலந்துரையாடல்கள் அடிநிலையில் இடம்பெறுகின்றன. அடுத்த ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை 5 வீதமாக குறைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள இலக்கு "சவாலாக" இருப்பதாக நாட்டின் மத்திய வங்கி ஆளுனர் நிவார் கப்ரால் நேற்று லண்டனில் தெரிவித்தார். கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 9 முதல் 11 வீதம் வரை அதிகரித்திருந்ததாக சுயாதீன பொருளியலாளர்கள் மதிப்பிட்டிருந்தனர். 2011ல் இந்த பற்றாக்குறையை அரைவாசியாக குறைப்பது என்பது, பாராளுமன்ற தேர்தலின் பின்னர் இப்போது முன் வைக்கப்படவுள்ள அடுத்த வரவு செலவுத் திட்ட்தில் வாழ்க்கைத் தரத்தின் மீதும் சமூக சேவைகள் மீதும் படு மோசமான வெட்டுக்கள் மேற்கொள்ளப்டுவதையே அர்த்தப்படுத்துகிறது. யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. உட்பட எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தின் பொருளாதர நிகழ்ச்சித் திட்டத்தை பங்கிட்டுக்கொள்கின்றன. இலங்கை முதலாளித்துவத்தின் நலன்களை விரைவுபடுத்துபவர்களும் அமுல்படுத்துபவர்களும் அவர்களே. இராஜபக்ஷவுடனான அவர்களது வேறுபாடு வெறும் தந்திரோபாயமே. அது சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை சிறப்பாக அமுல்படுத்துவது எப்படி மற்றும் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுகளுக்கிடையில், குறிப்பாக சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உக்கிரமடைந்துவரும் பகைமையில் எந்தப் பக்கம் அணிதிரள்வது என்பது சம்பந்தமான பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டதாகும். இப்போது எதிர் கட்சிகள், ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களாக தம்மைக் காட்டிக்கொண்டு தமது சரிந்து போயுள்ள ஆதரவை மீண்டும் தூக்கி நிறுத்த முயற்சிக்கின்றன. அவை உத்தியோகபூர்வ எதிர்ப்பின் மீதான வெளிப்படையான பாய்ச்சல் வெகுஜன அதிருப்திக்கு எண்ணெய் வார்க்கும் என்ற ஆளும் தட்டினர் மத்தியிலான பீதியை அவை பிரதிபலிக்கின்றன. அவர்கள், இராஜபக்ஷவின் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்துக்கும் மற்றும் இராணுவத்தின் சகல யுத்தக் குற்றங்களுக்கும் கூட்டாக பொறுப்புச் சொல்லவேண்டிய பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்தனர். எதிர் கட்சி ஆர்ப்பாட்டக்கார்கள் மீதான நேற்றைய வன்முறைகளும், மேலும் கைதுகளை மேற்கொள்வதற்கான அச்சுறுத்தல்களும், தமது ஆழமான பொருளாதார நெருக்கடியின் முழு சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது திணிப்பதற்கு எதேச்சதிகார வடிவிலான ஆட்சிக்கு இலங்கையின் வர்த்தக மற்றும் அரசியல் ஸ்தாபனமும் திரும்புகின்ற நிலையில், ஜனநாய உரிமைகள் மீதான பெரும் தாக்குதல்களை முன்னெச்சரிக்கின்றன. |