WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan SEP replies to the United Socialist Party
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, ஐக்கிய சோசலிச கட்சிக்கு பதிலளிக்கின்றது
By Wije Dias
4 February 2010
Use this version
to print | Send
feedback
வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) உடனான தமது சந்தர்ப்பவாத
சூழ்ச்சித் திட்டங்கள் பற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் அம்பலப்படுத்தலால் ["இலங்கை தேர்தல்: ஐக்கிய
சோசலிச கட்சியின் இரண்டு முகங்கள்"] தெளிவாக புண்பட்டுள்ள ஐக்கிய சோசலிச கட்சியின் (யூ.எஸ்.பி.)
முன்னாள் இடதுசாரிகள், தமது பகட்டான அரசியலை பாதுகாக்க முயற்சிப்பதன் பேரில் பதில் வெளியிடத் தள்ளப்பட்டுள்ளனர்
["வீரம்மிக்க ஐக்கிய சோசலிச கட்சி (யூ.எஸ்.பி.) மீதான அவதூறுகளுக்கு பதில்]
யூ.என்.பி. உடனான அவர்களின் "சுதந்திரத்துக்கான கூட்டு மேடை" என்பதை வெளிப்படையாக
பாதுகாக்கும் ஐக்கிய சோசலிச கட்சியின் பதில், தொழிலாள வர்க்கத்துக்கு முக்கியமான விடயங்களை
எழுப்புகிறது. இந்த "ஐக்கிய முன்னணியை" ஸ்தாபிப்பதில் அதனது "வீரம்மிக்க" நிலைப்பாடு ஜனநாயக உரிமையை
பாதுகாத்தது என ஐக்கிய சோசலிச கட்சி கூறிக்கொள்வதோடு பெருமைபட்டுக்கொள்கிறது. வர்க்க சமரசப்படுத்தலை
செய்யும் ஐக்கிய சோசலிச கட்சியின் கூட்டணியானது யூ.என்.பி. தலைவர்களை "ஜனநாயகவாதிகள்" என போலியாக
சித்தரிப்பதோடு மட்டுமன்றி, இதுவரை தொழிலாளர்கள் இந்த சூழ்ச்சித் திட்டங்களுக்குள் இழுத்துத் தள்ளப்பட்டுள்ளதோடு,
தொழிலாளர்கள் தமது சொந்த சுயாதீன நடவடிக்கையின் ஊடாக தமது உரிமைகளை பாதுகாக்க அவர்களுக்குள்ள
இயலுமையை கீழறுக்கின்றது. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஜனநாயக
உரிமைகள் மீதான தனது தாக்குதல்களை உக்கிரப்படுத்துகின்ற நிலையில், உழைக்கும் மக்கள் அவசியமான அரசியல்
படிப்பினைகளை கற்றுக்கொள்வது அவசியமாகும்.
மிகவும் அடிப்படையான விடயங்களுக்கு செல்வதற்கு முன்னர், ஐக்கிய சோசலிச
கட்சியின் பதிலில் உள்ள திரிபுபடுத்தல்களை வெளியில் கொண்டுவருவது அவசியமாகும். இந்த எழுத்தாளர், "சரத்
பொன்சேகாவுக்கு பிரச்சாரம் செய்ததாக ஐக்கிய சோசலிச கட்சி மீதும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க
ஜயசூரிய மீதும் அவதூறாக குற்றஞ்சாட்டும் சோசலிச சமத்துவக் கட்சியின் "பழிதூற்றும் கட்டுரையை" கண்டனம்
செய்கின்றார். மேற்கோள்கள் எதுவும் காட்டப்படவில்லை, அல்லது காட்டியிருக்க முடியும். சோசலிச சமத்துவக்
கட்சியின் கட்டுரையானது இந்த நடவடிக்கையை மிகவும் துல்லியமாக விளக்கியுள்ளது: யூ.எஸ்.பி. பொன்சேகாவை
நேரடியாக ஆதரிக்காவிட்டாலும், 2009 ஜனவரியில் "சுதந்திரத்துக்கான மேடையில்" யூ.என்.பி. உடன்
இணைந்துகொண்டதன் மூலம், அது இந்த அதிருப்திக்குட்பட்டுள்ள முதலாளித்துவ கட்சிக்கு ஜனநாயக நற்சான்றிதழ்
வழங்கி உதவி செய்துள்ளது. மறுபக்கம், கடந்த மாத தேர்தலில் தனது ஜனாதிபதி வேட்பாளராக ஜெனரல்
பொன்சேகாவை யூ.என்.பி. ஆதரித்தபோது, ஐக்கிய சோசலிச கட்சியின் இத்தகைய நடவடிக்கைகள் யூ.என்.பி.
க்கு பெரும் சேவையாற்றியுள்ளன.
ஐக்கிய சோசலிச கட்சியின் எழுத்தாளர், சுதந்திரத்துக்கான மேடை ஸ்தாபிக்கப்பட்ட
போது, "பொன்சேகா விடயம் இருக்கவில்லை" என தெரிவிப்பதன் மூலம் இந்த விடயத்தை தட்டிக்கழிக்கின்றார்.
2009 ஜனவரியில் பொன்சேகா ஒரு வேட்பாளராக இருக்கவில்லை என்பது நிச்சயமான உண்மைதான். ஆனால்,
அவர் நாட்டின் உயர்மட்ட ஜெனரலாக இருந்ததோடு, அந்த வகையில் அவர் இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள்
மற்றும் ஜனநயாக உரிமை மீறல்களுக்கு இராஜபக்ஷவுடன் பொறுப்பை பங்கிட்டுக்கொள்கின்றார். உண்மையில், சுதந்திரத்துக்கான
மேடையை ஸ்தாபிக்கத் தூண்டிய, சண்டே லீடர் பத்தரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, ஏறத்தாழ
நிச்சயமாக இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட அரசாங்க-சார்பு கொலைப் படையாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும், ஒரு ஆண்டின் பின்னர், இராஜபக்ஷவிடமிருந்து பிரிந்த பொன்சேகா,
தனது இராணுவப் பதவியை இராஜனாமா செய்துவிட்டு, யூ.என்.பி. மற்றும் சிங்கள அதி தீவிரவாத மக்கள்
விடுதலை முன்னணியின் "பொது வேட்பாளராக" நின்றார். யூ.என்.பி. ஜெனரலை அனைத்துக்கொண்ட போதிலும்,
ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் ஜயசூரிய, அந்த மேடையின் ஆண்டு நிறைவை கொண்டாடுவதில் யூ.என்.பி.
தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொள்வதில் தயக்கம் காட்டவில்லை. யூ.என்.பி. பொன்சேகாவை
ஆதரிப்பதை கண்டனம் செய்ய அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளாத ஜயசூரிய, அந்த அமைப்பின்
"வெற்றியை" பற்றி பரஸ்பரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதில் ஈடுபட்டதோடு, ஜனாதிபதி தேர்தலில் யார்
வெற்றி பெற்றாலும் அதை தொடர்வதற்கு வாக்குறுதியளித்தார்.
ஐக்கிய சோசலிச கட்சியின் பதிலில் பெரும்பகுதி, அந்தக் கட்சியினதும் அதன்
தலைவரதும் "வீரம்மிக்க" வெற்றிகளை மேற்கோள்காட்டுவதாக உள்ளது. எவ்வாறெனினும், பேராண்மை என்பது
ஒரு அரசியல் அளவுகோல் அல்ல. உதாரணமாக, பாசிஸ்டுகள் தமது எதிர்ப்போக்கு குறிக்கோள்களுக்காக
போராடுவதில் உயர்ந்த சரீரரீதியான உத்வேகத்தை காட்ட முடியும். பொதுவில், தமது அரசியலை
மறைப்பதற்காக இடைவிடாது தம்மை மிகைப்படுத்திக்கொண்டு தமது உத்வேகத்தைப் பற்றி தற்பெருமை பேசும்
குட்டி முதலாளித்துவ அரசியல்வாதிகளைப் பற்றி தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த விடயத்திலும்
அவ்வாறே.
ஐக்கிய முன்னணி
பேராண்மை பட்டியலின் மத்தியில், தனது "சுதந்திரத்துக்கான மேடை, ஒரு அரசியல்
கூட்டணி அல்ல, மாறாக அது பிரமாண்டமான அடக்குமுறைக்கு எதிரான குரல்களை ஒன்றுபடுத்துவதற்கான
களமே... ஐக்கிய சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் அமைதியாக இருக்க மறுத்ததோடு ஒரு அரசியல்
கூட்டமைப்பில் இணைவதற்கன்றி, ஜனநாய உரிமைகளை காப்பதில் ஒரு உறுதியான நடைமுறைப் பிரச்சாரத்தில்
ஈடுபடத் தயாரானார்கள். முதலாளித்துவ வரம்புக்கு வெளியில் செல்ல மறுப்பவர்களுக்கும் கூட அது எந்தவொரு
சக்திகளையும் தடுத்து நிறுத்தாமல் இருக்க சரியானதாக இருந்தது," என ஐக்கிய சோசலிச கட்சி
வலியுறுத்துகிறது.
ஜயசூரிய மற்றும் அவரது வலதுசாரி கூட்டாளிகளால் உருவாக்கப்பட்ட "ஜனநாயகம்"
பற்றிய கூட்டான வாய்வீச்சுக்களுக்கு மாறாக, இந்த அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட நடைமுறை பிரச்சாரம்
என்ன? என ஒருவர் கேட்கக் கடமைப்பட்டுள்ளார். அரசாங்க சார்பு கொலைப் படைகளின் நடவடிக்கையை
எதிர்க்க, தொழிலாளர்களையும் அவர்களது அமைப்புக்களையும் பாதுகாக்க அல்லது அரசாங்கத்துக்கு எதிரான ஒரு
அரசியல் தாக்குதலின் பாகமாக தொழிலாள வர்கக்த்தின் எந்தவொரு பகுதியினரும் அணிதிரட்டப்படவில்லை. அல்லது
அது நடந்திருக்க முடியாது. ஒரு வெளிப்படையான முதலாளித்துவ கட்சியான யூ.என்.பி., முதலாளித்துவ ஆட்சிக்கு
அச்சுறுத்தல் விடுக்கக் கூடிய தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு நடவடிக்கைக்கும் இயல்பாகவே எதிரானதாகும்.
ஐக்கிய சோசலிச கட்சி மறுத்த போதிலும், எந்தவொரு செயல்முறை
நடவடிக்கையிலும் ஈடுபட அர்ப்பணித்துக்கொள்ளாதவர்களை உள்ளடக்கிய, யூ.என்.பி. உடனான ஒரு அரசியல்
கூட்டையே யூ.எஸ்.பி. ஸ்தாபித்துள்ளது என்பதை "சுதந்திரத்துக்கான மேடையின் யாப்பு" மிகவும்
தெளிவுபடுத்துகிறது.
"இந்த நிலத்தின் நான்கு மூலையிலும் மற்றும் சகல இன மற்றும் மத மக்கள்
மத்தியிலும்" "வாழ்வதற்கான உரிமை" மற்றும் "கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்தை" பாதுகாப்பது பற்றிய
தெளிவற்ற சாத்தியமான பதங்களிலேயே அந்த குறுகிய ஆவணம் பேசுகிறது. செயல்முறை நடவடிக்கைகள் பற்றி
அதில் ஒரு சொல்லும் இல்லை.
அதன் பதிலில், ஐக்கிய சோசலிச கட்சி இந்த அரசியல் கேவலத்தை
பரிந்துரைப்பவர்களாக லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் பெயர்களை பயன்படுத்திக்கொண்டுள்ளது. தேவையான
மேற்கோள்களை "உலக சோசலிச வலைத் தளத்தின் கற்றறிந்த பேராசிரியர்களுக்கு" வழங்க முடியும் என்றும் கூட
அந்த எழுத்தாளர் குத்தலாக தெரிவிக்கின்றார். தேவையில்லை. மார்க்சிச இயக்கத்தில் நீண்ட வரலாற்றைக்
கொண்ட ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்துக்கும் மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி தனது முழு அரசியல் இருப்பின்
ஊடாக மேற்கொண்ட, எப்பொழுதும் தொழிலாள வர்க்கத்துக்கு ஆபத்தானது என நிரூபிக்கப்பட்ட சந்தர்ப்பவாத
கூட்டணி முறைக்கும் இடையிலான வேறுபாடுகள் பற்றி சோசலிச சமத்துவக் கட்சி மிகவும் விழிப்பாக இருக்கின்றது.
வர்க்கப் போராட்டத்தின் வழிமுறைகளைப் பயன்படுத்தி வர்க்க எதிரிக்கு எதிராக
தனது உரிமைகளை காக்க தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதும் அணிதிரட்டுவதுமே ஐக்கிய முன்னணியின்
உட்பொருளாகும். இந்த முன்னெடுப்பில், தொழிலாள வர்க்கத்தின் சந்தர்ப்பவாத தலைவர்களின் தடுமாற்றத்தையும்
போலித்தனத்தையும் அம்பலப்படுத்த மார்க்சிஸ்டுகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்வர். ஐக்கிய
முன்னணியை ஸ்தாபிப்பதில் இன்றியமையாத நிபந்தனை என்னவெனில், புரட்சிகரக் கட்சியின் அரசியல் சுயாதீனமேயாகும்
--கூட்டு அரசியல் வேலைத்திட்டமோ, பொதுச் சுலோகமோ மற்றும் பதாதைகளை கலந்துகொள்வதோ அல்ல.
நாசிகளுக்கு எதிராக 1930களில் சமூக ஜனநாயகவாதிகளுடன் ஜேர்மன் கம்யூனிஸ்ட்
கட்சியின் ஐக்கிய முன்னணிக்காக பிரச்சாரம் செய்த போது லியோன் ட்ரொட்ஸ்கி தெளிவுபடுத்தியதாவது: "சமூக
ஜனநாயகவாதிகுடன் அல்லது ஜேர்மன் தொழிற்சங்க தலைவர்களுடன் பொது மேடை கிடையாது, பொது
வெளியீடுகள், பதாகைகள், சுலோக அட்டைகள் கிடையாது! எப்படி வேலை நிறுத்தம் செய்வது, யார் வேலை
நிறுத்தம் செய்வது, மற்றும் எப்போது வேலை நிறுத்தம் செய்வது என்ற விடயத்தில் மட்டும் உடன்படுங்கள்!
பிசாசுடன் கூட அதனது பாட்டியுடன் மற்றும் நொஸ்கேயுடன் மற்றும் கிரிஸென்ஸ்கியுடன் கூட அத்தகைய ஒரு
உடன்பாட்டுக்கு வரமுடியும். ஒரு நிபந்தனை, ஒருவரின் சொந்தக் கைகளை கட்டிப்போடுவதற்கல்ல."
யூ.என்.பி. ஆட்சியில் இருக்கும் போது, 1980களின் கடைப்பகுதியில், சோசலிச
சமத்துவக் கட்சி யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சரியாக இதையே செய்தது. 1983ல் தமிழீழ
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்த யூ.என்.பி., தெற்கில் வளர்ச்சிகண்டு வந்த
அமைதியின்மையை நசுக்க பாதுகாப்பு படைகளை விடுவித்துக்கொள்வதன் பேரில், வடக்கில் இந்திய அமைதிப்படை
என சொல்லப்படுவதை அனுமதிப்பதற்காக இந்திய-இலங்கை உடன்படிக்கயில் கைச்சாத்திட்டது. அது,
எதிர்ப்போக்கு சிங்கள பேரினவாத நிலைப்பாட்டில் இருந்து இந்த உடன்படிக்கையை எதிர்த்த ஜே.வி.பி. யை
நசுக்கும் சாக்கில் மார்ஷல் சட்டத்தை அமுல்படுத்தியது. பாதுகாப்பு படைகளும் மற்றும் பாசிச வகை ஜே.வி.பி.
கும்பல்களாலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களும்
படுகொலை செய்யப்பட்டனர்.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது யூ.என்.பி. அரசாங்கத்துக்கு எதிராக
தொழிலாளர் பாதுகாப்பு படைகளை, கூட்டு மறியல் போராட்டங்களை, கூட்டு ஆர்ப்பாட்டங்களை மற்றும் ஒரு
பொது வேலை நிறுத்தத்தை அமைப்பது போன்ற செயல்முறை நடவடிக்கைகளை எடுக்க ஐக்கிய முன்னணியை
பிரேரித்து, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் மற்றும் அப்போது ஜயசூரியவும்
ஒரு தலைவராக இருந்த நவசமசமாஜக் கட்சிக்கும் கடிதம் எழுதியிருந்தது.
இந்தப் பிரேரணையை முழுமையாக நிராகரித்த நவசமசமாஜக் கட்சி, "புதிய
பாட்டாளி வர்க்க சீர்திருத்தவாத வெகுஜனப் போக்காக" அது விவரித்த ஸ்ரீலங்கா மக்கள் கட்சியை
(எஸ்.எல்.எம்.பி.) உள்ளடக்காமைக்காக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை "குறுங்குழுவாதிகள்" என
குற்றஞ்சாட்டியது. அப்போது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விளக்கியவாறு, ஒரு முதலாளித்துவக் கட்சியாக இருந்த
எஸ்.எல்.எம்.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (ஸ்ரீ.ல.சு.க.) இணைக்கப்படுவதாக இருந்தது. அதன்
தலைவர் சந்திரிகா குமாரதுங்க, நாட்டின் ஜனாதிபதியானார். ஸ்ரீ.ல.சு.க. யின் தற்போதைய தலைவர் வேறு
யாருமல்ல, ஜனநாயக-விரோத வழிமுறைகளில் பேர் போன ஜனாதிபதி இராஜபக்ஷவே ஆவார்.
இந்த வேறுபாடுகள் தெளிவாக இல்லாமல் இருந்திருக்கலாம். புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகம் விடுத்த ஐக்கிய முன்னணிக்கான அழைப்புக்கு எதிராக, புரட்சிகர மார்க்சிச கட்சியால் ஏற்றுக்கொள்ள
முடியாதது என லெனினும் ட்ரொட்ஸ்கியும் எப்போதும் வலியுறுத்திவந்த அரசியல் கூட்டமைப்பை நவசமசமாஜக் கட்சி
உறுதியாக பாதுகாத்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சுட்டிக் காட்டியது போல், நவசமசமாஜக் கட்சி,
"முன்நோக்கு மற்றும் முன்நோக்கிய பாதை" என்ற பெயரில் அரசாங்கத்துக்கான ஒரு பொது வேலைத் திட்டத்தின்
அடிப்படையில் முதலாளித்துவ எஸ்.எல்.எம்.பி. உடன் ஒரு தேர்தல் கூட்டை ஸ்தாபித்துக்கொண்டது. ஸ்ராலினிஸ்டுகளால்
முன்னிலைப்படுத்தப்பட்ட இத்தகைய மக்கள் முன்னணி கூட்டுகள், 1930களில் பிரான்சிலும் ஸ்பெயினிலும் தொழிலாள
வர்க்கத்துக்கு அரசியல் அழிவுக்கு வழிவகுத்தது. பெறுபேறு இலங்கையில் 1980களில் வேறுபட்டதாக இருக்கவில்லை
--தொழிலாள வர்க்கத்துக்கு சுயாதீன அரசியல் அணிதிரள்வு மிகவும் அத்தியாவசியமான கட்டத்தில் அது துல்லியமாக
தொழிலாள வர்க்கத்தை முடமாக்கியது.
ஜே.வி.பி. யை அரசாங்கத்துக்குள் எடுக்க வழிமுறைகளை கையாண்டு பார்த்த
பின்பு, 1989ல் இருந்து தெற்கு பூராவும் ஜே.வி.பி. மற்றும் சிங்கள கிராமப்புற இளைஞர்களுக்கு எதிராக
பாதுகாப்புப் படைகளை யூ.என்.பி. ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கட்டவிழ்த்துவிட்டார். இராணுவத்தாலும்
அதன் கொலைப் படைகளாலும் மற்றும் அதன் இரகசிய சித்திரவதை முகாங்கள் மற்றும் சிறைச்சாலை வலயமைப்பின்
ஊடாகவும் 60,000 இளஞர்கள் படுகொலை செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜயசூரிய மேடையை
பங்கிட்டுக்கொள்ளும் மற்றும் ஜனநாயகத்துக்கான போராளியாக சித்தரிக்கும் தற்போதைய யூ.என்.பி. தலைவர்
ரணில் விக்கிரமசிங்க, அந்த யூ.என்.பி. அரசாங்கத்தில் அமைச்சராக இருந்ததோடு அதன் குற்றங்களுக்கும் நேரடி
பொறுப்பாளியாவார், என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
வரலாறு பற்றி
எவ்வாறெனினும், ஐக்கிய சோசலிச கட்சி சகல வரலாற்று விடயங்களையும்
அலட்சியம் செய்கின்றது. "ஏறத்தாள இலங்கை பற்றிய அவர்களது எல்லா கட்டுரைகளிலும், உலக சோசலிச
வலைத் தளம், குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டு சகலதுக்கும் லங்கா சம சமாஜக் கட்சியின்
(ல.ச.ச.க.) காட்டிக்கொடுப்பை குற்றஞ்சாட்டுவதோடு, பெருமைபட்டுக்கொள் ஒன்றுமில்லாத தமது ஹீலியவாத
மரபை பற்றி கொஞ்சமே சொல்கின்றது. அண்மைய சம்பவங்கள் கூட லங்கா சம சமாஜக் கட்சியின்
காட்டிக்கொடுப்பின் பாகமாக விளக்கப்படுகிறது. வரலாறு அதையும் விட மிகவும் சிக்கலானது. மார்க்சிஸ்டுகள்
என்ற வகையில், வரலாற்றுத் தோல்விகளை பற்றி புரிந்துகொள்வது முக்கியமானது. ஆனால், நாங்கள் இப்போது
இருக்கும் காலத் தொடக்கத்தை அக்கறையில் எடுத்துக்கொண்டு, வரலாற்றில் ஒரே விடயத்தை குறிப்பிட்டு
சகலதுக்கும் அதைக் குற்றஞ்சாட்டுவதை விடுத்து, காலகட்டத்தை புரிந்துகொள்வதற்கு மார்க்சிசத்தை பயன்படுத்த
வேண்டும்," என அது பிரகடனம் செய்கின்றது.
மேலும் தெரிந்துகொள்ள விரும்புபவர் எவரும் அந்தரத்தில் விடப்படுவார். எதுவும்
தெளிவுபடுத்தப்படவில்லை. வரலாற்றுப் பிரச்சினைகள் பற்றிய இந்த அற்பத்தனமான போக்கு, குட்டி முதலாளித்துவ
அமைப்புக்களின் தரக்குறியீடாகும். ஜயசூரிய வரலாற்றை நினைவு கூர்வதை, குறிப்பாக தனது சொந்த அமைப்பின்
வரலாற்றை நினைவுகூர்வதை விரும்பவில்லை. தொழிலாள வர்க்கம் பெரும் விலை கொடுக்க நேர்ந்த
சந்தர்ப்பவாத சூழ்ச்சிகளதும் அரசியல் மூழ்கடிப்புகளின் துதிபாடல்களே அவரது சாதனையாக உள்ளது.
எப்படியாயினும், இலங்கையிலும் மற்றும் அனைத்துலகிலும் தனது சொந்த மூலோபாய அனுபவங்களில் இருந்து
தேவையான பாடங்களை கற்றுக்கொள்ளுமளவுக்கு மட்டுமே தொழிலாள வர்க்கத்தால் முன்செல்ல முடியும்.
மார்சிசத்துக்கும் அல்லது புரட்சிகர அரசியல் கொள்கைகளுக்கும் ஐக்கிய சோசலிச கட்சிக்கும் இடையில் எந்தத்
தொடர்பும் இல்லை என்பதை வரலாறு தெளிவுபடுத்துகிறது.
பரந்த தொழிலாள வர்க்க போராட்டங்களின் மத்தியில் 1964ல் சிறிமா
பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்த லங்கா சம சமாஜக் கட்சியின்
காட்டிக்கொடுப்பு, இலங்கையிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் தொழிலாள வர்க்கத்துக்கு ஆழமான தாக்கத்தைக்
கொண்டிருந்தது. ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியாக வெளியில் தெரிந்த ஒரு கட்சி, சோசலிச அனைத்துலகவாத
அடிப்படைகளை வெளிப்படையாக கைவிட்டது அதுவே முதல் தடவையாகும். இதன் விளைவாக, வர்க்க
ஐக்கியத்துக்கான போராட்டம் இன்மையால், குட்டி முதலாளித்துவ கெரில்லாவாத ஜே.வி.பி. மற்றும் விடுதலைப்
புலிகள் உட்பட இனவாத அரசியல் தழைத்தோங்கியது. அடுத்து வந்த முழு வரலாற்றையும் லங்கா சம சமாஜக்
கட்சியின் காட்டிக்கொடுப்பு தீர்மானிக்காவிட்டாலும், அதன் விளைவுகளை புரிந்துகொள்ளாமல் உள்நாட்டு யுத்தத்தின்
வெடிப்பு உடப்ட அடுத்து வந்த அபிவிருத்திகளை புரிந்துகொள்வது சாத்தியமற்றது.
1964ல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரித்தானிய பகுதியான,
சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைவரான ஜெரி ஹீலி, கொழும்புக்கு சென்றதோடு, பண்டாரநாயக்க
அரசாங்கத்துக்குள் நுழைவதற்கு முடிவெடுக்கும் லங்கா சம சமாஜக் கட்சி மாநாட்டுக்கு வெளியில் பிரச்சாரம்
செய்தார். 1950களின் முற்பகுதியில், மைக்கல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மன்டேல் ஆகியோரின் தலைமையின்
நான்காம் அகிலத்துக்குள் தலைதூக்கிய சந்தர்ப்பவாத போக்கிலேயே இந்தக் காட்டிக்கொடுப்பு வேரூன்றியுள்ளது
என்பதை ஹீலி அடையாளங்கண்டார். யுத்தத்துக்குப் பின்னரான முதலாளித்துவ மீள்ஸ்தாபிதத்துக்கும் மற்றும்
ஸ்ராலினிச, சமூக ஜனநாயகவாத மற்றும் முதலாளித்துவ தேசியவாதிகளின் மேலாதிக்க தலைமைத்துவத்துக்கும்
பப்லோவாதிகள் அடிபணிந்தனர்.
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அங்கம் வகிக்கும் நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழு, பப்லோவாத சந்தர்ப்பவாதத்துக்கு எதிராகப் போராடவும் ட்ரொட்ஸ்கிசத்தின்
கொள்கைகளை பாதுகாக்கவும் 1953ல் ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது ஐக்கிய சோசலிச கட்சி கூட்டு வைத்துள்ள
சந்தர்ப்பவாத "அகிலமான" தொழிலாளர் அகிலத்துக்கான குழு, காலஞ்சென்ற டெட் கிராண்டுடன்
தொடர்புபட்டுள்ளது. பப்லோ மற்றும் மன்டேலுக்கு சமமான நோக்கை கொண்டிருந்த டெட் கிரான்ட்,
பப்லோவாத அகிலத்தின் பிரித்தானிய பகுதிக்கு குறிப்பிட்டகாலம் வாக்குரிமை கொண்டிருந்தார்.
சிலோன் என்ற அவரது பிரசுரத்தில்: மாபெரும் காட்டிக்கொடுப்பு என ஹீலி விளக்கினார்:
"[லங்கா சம சமாஜக் கட்சியின்] சீரழிவு, அனைத்துலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்குள்ளான போராட்டத்துடன்
விடுவிக்கமுடியாதளவு பிணைந்துள்ளது. அது, பப்லோவினதும் அவரது ஐரோப்பிய பங்காளிகளான ஜேர்மயின்
[மன்டேல்] மற்றும் பியர் பிராங்கினதும் காட்டிக்கொடுப்பை முழு உதாரணமாகக் கொண்டுள்ளது." "இதற்கான
பதில் இலங்கையில் அன்றி, பப்லோவாத திருத்தல்வாதத்துக்கெதிரான போராட்டம் பற்றிய சர்வதேச கற்கையில்
காண வேண்டும். இந்தக் கூட்டின் உண்மையான சிருஷ்டிகள் பாரிசில் உள்ளனர்," என அவர் வலியுறுத்தினார். பல
ஆண்டுகளாக லங்கா சம சமாஜக் கட்சியின் பின்னடைவை அனுமதித்து பொறுத்துக்கொண்ட இந்த பப்லோவாதிகள்,
கொழும்பில் கூட்டணி அரசாங்கத்துக்கு வழியமைத்தனர்.
1968ல் ஸ்தாபிக்கப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், இந்தப் படிப்பினைகளின்
அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டதோடு ஹீலியின் இந்த மரபுரிமையை பெருமையுடன் காக்கின்றது. ஹீலியின் பிந்தைய
அரசியல் சீரழிவுக்கு எதிராக, பு.க.க. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் சேர்ந்து ஒரு அரசியல்
போராட்டத்தை முன்னெடுக்க முடிந்ததும் இந்த அடிப்படையிலேயே ஆகும். ஹீலியின் அரசியல் சீரழிவு சோசலிச
தொழிலாளர் கழகத்தின் புதிய வடிவமாயிருந்த பிரிடிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவில் 1985-86ல்
உச்சக் கட்டத்தை அடைந்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் காட்டிக்கொடுப்பில் இருந்து அவசியமான
படிப்பினைகளை விவரமாக நான்காம் அகிலம் ஆராயாந்து கொண்டிருந்த அதே வேளை, ட்ரொட்ஸ்கிச
கொள்கைகளை காக்க குறிப்பாக 1960களில் ஹிலி இட்டு நிரப்பிய மிகப்பெரும் அரசியல் வகிபாகத்தையும்
முன்பைவிட சிறப்பாக அடையாளம் கண்டது.
லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு மறக்கப்படுவதை ஐக்கிய
சோசலிச கட்சி விரும்புவது ஆச்சரியத்திற்குரியதல்ல. ஜயசூரிய, நவசமசமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு
கருணாரட்னவுடன் சேர்ந்து, காட்டிக் கொடுப்பின் பின்னரும் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக, லங்கா சம சமாஜக்
கட்சியில் தொடர்ந்தும் இருந்தனர். 1965ல் பண்டாரநாயக்க அரசாங்கம் கவிழ்ந்த போதிலும், லங்கா சம
சமாஜக் கட்சி தலைவர்களுக்கு கொடுத்த பிரதான அமைச்சர் பதவிகளுடன் இன்னுமொரு கூட்டரசாங்கம் 1970ல்
பதவிக்கு வந்தது. அந்தக் கூட்டணி அரசாங்கம், 1971ல் ஜே.வி.பி.யினரை நசுக்கி, ஒரு மதிப்பீட்டின்படி
15,000 இளைஞர்களை கொன்று, பெளத்தத்தை அரச மதமாக ஆக்கிய இனவாத அரசியலமைப்பை திணித்து,
கல்வியில் தமிழர்களுக்கு எதிரான பாரபட்ச நடவடிக்கைகளை அமுல்படுத்தி மற்றும் தமிழ் பேசும் தோட்டத்
தொழிலாளர்களை இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல நெருக்கிய நிலையிலும், ஜயசூரியவும் கருணாரட்னவும் லங்கா சம
சமாஜக் கட்சி யிலேயே இருந்தனர். உண்மையான சந்தர்ப்பவாதிகளைப் போல், 1977 பொதுத் தேர்தலில்
லங்கா சம சமாஜக் கட்சி தோல்வி கண்டு, தொழிலாளர்கள் மத்தியில் தூற்றப்பட்ட பின்னரே அவர்கள் அதில்
இருந்து விலகினர்.
ஜயசூரியவும் கருணாரட்னவும் 1978ல் நவசமசமாஜக் கட்சியை ஸ்தாபித்ததோடு
தொடர்ந்து தமது சொந்த கருவிகளுக்கு தலைமை வகிக்க பிரிந்து சென்ற போதிலும், அவர்கள் வர்க்க ஒத்துழைப்பை
செய்யும் கூட்டணிவாத அரசியலில் இருந்து பிளவுபடவில்லை. நவசமசமாஜக் கட்சி மற்றும் அதில் இருந்து பிரிந்த ஐக்கிய
சோசலிச கட்சியும் அடித்த அரசியல் குட்டிக்கரணங்கள் மற்றும் பாய்ச்சல்கள் அனைத்தையும் மதிப்பிடுவதற்கு
-1964ல் லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு- "வரலாற்றில் இருந்து ஒரே விடயத்தை"
சுட்டிக்காட்டுவது உண்மையில் சாத்தியமற்றதுதான். ஆனால், அவர்களது சகல சூழ்ச்சிகளதும் வர்க்கப் பண்பானது,
1964ல் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டின் வழியில் நிற்கின்றது. முதலாளித்துவத்தின் ஏதாவதொரு பகுதிக்கு
தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்து அவர்கள் சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரள்வதை தடுப்பதே அவர்களது
நிலைப்பாடாகும். இத்தகைய கட்சிகள் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துக்குள்ளேயே தங்களை மேலும் மேலும்
ஒருங்கிணைத்துக்கொள்பவையாக உள்ளன.
சந்தர்ப்பவாத அரசியலுடன் இத்தகைய அனுபவங்கள் பற்றிய ஒரு ஐந்தொகையை
தொழிலாளர்களும் இளைஞர்களும் வரைந்துகொள்ள வேண்டிய நேரம் இதுவாகும். ஜனவரி 26 நடந்த ஜனாதிபதி
தேர்தலின்பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள், இராஜபக்ஷ அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தின்
மீது ஆழமான தாக்குதல் தொடுக்கத் தயாராகின்ற நிலையில், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை அது
உக்கிரமாக்குவதை தெளிவுபடுத்துகின்றன. இராஜபக்ஷவின் எதிரி ஜெனரல் சரத் பொன்சேகா பெயரளவிலான இலக்காக
இருந்த போதிலும், அரசாங்கத்தின் அதிகரித்துவரும் எதேச்சதிகார வழிமுறைகள் தொழிலாள வர்க்கத்தை இலக்காகக்
கொண்டவை. பொன்சேகா வெற்றி பெற்றிருந்தாலும், அவரும் இதே வழிமுறைகளை பின்பற்றியிருப்பார். வெளித்தோன்றுவது
என்னவெனில், ஒரு புதிய புரட்சிகர காலகட்டமாகும். இதில் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்துக்கு அடிபணிவதானது
அழிவுகரமானது என்பது ஒப்புவிக்கப்படும். தொழிலாளர்களும் இளைஞர்களும் புதிய வழியை அமைத்துக்கொள்ள
வேண்டும்: இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் வரலாற்றுப் படிப்பினைகளை கவனமாக கற்று, மார்க்சிச
கொள்கைகளில் தங்களையே பயிற்றுவித்துக்கொண்டு, தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசத்துக்கான
போராட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியில்
இணைந்துகொள்ள வேண்டும். |