இலங்கை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஒரு வராமாக, பெருமளவில் எதிர்க் கட்சிகளுக்கும்
அவர்களது ஆதரவாளர்ளுக்கும் எதிரான வன்முறைகள் தொடர்கின்றன. இந்தத் தாக்குதல்கள் தோல்விகண்ட எதிர்க்கட்சி
வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீதான அரசாங்கத்தின் விரிவடைந்துள்ள பாய்ச்சலின்
பாகமாகும். பொன்சேகா, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிராக சதிப் புரட்சிக்கு முயற்சித்தார் என்ற
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றார்.
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் (சி.எம்.ஈ.வி), இதுவரை 85
தேர்தலுக்குப் பின்னரான வன்முறை முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இந்த முறைப்பாடுகளில்
மிக அதிகமான 50 சம்பவங்களும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தொகையில், 19 சரீர தாக்குதல் சம்பவங்கள், 9 அச்சுறுத்தல் மற்றும் பயமுறுத்தல் சம்பவங்கள்,
சொத்துக்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் 8 மற்றும் மிகக் கொடிய 5 சம்பவங்கள் அடங்களாக 46 பிரதான
வன்முறைகள் நடந்துள்ளன. அந்த முறைப்பாடுகளில் 29 ஆளும் சுதந்திர முன்னணிக்கு எதிராக பதிவுசெய்யப்பட்டுள்ளன.
சி.எம்.ஈ.வி. யில் பதிவான முறைபாடுகளின் எண்ணிக்கை, 1999 மற்றும் 2005
ஜனாதிபதி தேர்தல்களை ஏற்கனவே விஞ்சிவிட்டது. அப்போது முறையே 76 மற்றும் 39 சம்பவங்களே நடந்திருந்தன.
குருணாகல் மற்றும் கண்டி மாவட்டங்களுமே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகும். அங்கு முறையே
10 மற்றும் 5 சம்பவங்கள் நடந்துள்ளன. நியாயமான சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் நவடிக்கை (பஃவரல்)
என்ற இன்னுமொரு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கு, ஜனவரி 26 தேர்தல் நடந்ததில் இருந்து 60 வன்முறைச்
சம்பவங்கள் தெரியவந்துள்ளன.
பழிவாங்கலுக்கு பயந்து அச்சுறுத்தல்கள் மற்றும் குண்டர் வன்முறைகள் சம்பந்தமாக
முறைப்பாடு செய்ய பாதிக்கப்பட்ட பலர் தயங்குகின்ற நிலையில், இந்த எண்ணிக்கைகளில் ஒட்டு மொத்த நிலைமை
குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. "தற்பாதுகாப்பு என்ற அடிப்படையில் முறைப்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டவர்களும்
தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்துகின்றனர். பொலிசில் செய்யப்படும்
முறைப்பாடுகள் பற்றிய தகவல்கள், தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு சென்றடைய வழிவகுப்பதோடு, அது மேலும்
தாக்குதல்களையே விளைவாக்குகிறது என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். எங்களுக்கு கூட அறிவிக்காத மேலும்
பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என நம்புவதற்கு எங்களுக்கும் காரணங்கள் உண்டு," என சி.எம்.ஈ.வி. சுட்டிக்
காட்டியுள்ளது.
பொலிஸ் தேர்தல் பிரிவின்படி, இராஜபக்ஷ பெரும்பான்மையை வென்ற கிராமப்புற
பிரதேசங்களான அம்பாந்தோட்டை, மாத்தளை, அனுராதபுறம், குரணாகல் மற்றும் கண்டி மாவட்டங்களில் பதட்ட
நிலைமைகள் அதிகம் காணப்படுகிறது. கண்டி மாவட்டத்தின் கம்பளையில் தம்பிலிகல வணக்கஸ்தலம் ஒன்றில் ஜனவரி
27 நடந்த கைக்குண்டுத் தாக்குதலில், பெளத்த பிக்கு ஒருவரும் மின்சார சபை ஊழியர் ஒருவருமாக இருவர்
கொல்லப்பட்டுள்ளனர். எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஆதரவாளர்களில் ஆறு பேர்
கடுமையாக காயமடைந்துள்ளனர். இதனால் பொலிசார் பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டத்தை
அமுல்படுத்தியிருந்தனர்.
அம்பாந்தோட்டை யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தேர்தல்
ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில், "தேர்தல் தினத்தன்றும் அதன் பின்னரும் மாவட்டத்தில் மொத்தம் 30
சம்பவங்கள் நடந்துள்ளன," என குறிப்பிட்டுள்ளார். "நபர்கள், வீடுகள் மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள்" மீதான
தாக்குதல்களும் இவற்றில் அடங்கும்.
மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள தேர்தல் தொகுதியில், தேர்தலில் இருந்து
குறைந்த பட்சம் 30 வீடுகள் சேதமாகியுள்ளதாக யூ.என்.பி. பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் அலுவிகார
ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இராஜாங்கனய மற்றும் ஹொரவபத்தன பிரதேசங்களில்,
யூ.என்.பி. மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) ஆதரவாளர்களுக்கு சொந்தமான
பல வீடுகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன.
கடந்த வாரக் கடைசியில் சண்டே டைம்ஸ் ஒரு தொகை சம்பவங்களை வெளியிட்டது.
கடந்த வியாழக் கிழமை, மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரனின் வீட்டின் மீது கிரனேட்
வீசப்பட்டது. ஒருவரும் காயப்படவில்லை. கடந்த வெள்ளிக் கிழமை, சுதந்திர முன்னணியின் கும்பலொன்று
ஜே.வி.பி. யின் களுத்துறை அலுவலகத்தை தாக்கி, சொத்துக்களுக்கு கடும் சேதம் விளைவித்ததோடு அலுவலகத்தில்
இருந்த இருவரை காயப்படுத்தியது. குருணாகல் மாவட்டத்தில், எதிர்க் கட்சி அரசியல்வாதியான அகில விராஜ்
காரியவசத்தின் வீட்டின் மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இரு தொழிலாளர்கள்
காயமடைந்தனர்.
விசாரணைக்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் ஐ.எம். கருணாரட்ன நிருபர்களுக்குத் தெரிவித்த போதிலும், எவரும் கைதுசெய்யப்படவில்லை.
நடவடிக்கைகள் குறைவாக இருக்கின்றமை தற்செயலானதல்ல. இராஜபக்ஷ அரசாங்கத்தால் பொலிசும் இராணுவமும்
வெளிப்படையாக பக்கச்சார்பான முறையில் பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றது.
பொன்சேகா மேற்கொண்டதாக சொல்லப்படும் சதிப்புரட்சி முயற்சி பற்றிய
விசாரணைக்கு இலங்கை பொலிஸ் மா அதிபர் தலைமை தாங்குவதாகவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அத்தகைய திட்டத்துக்கான ஆதரங்கள் எதுவும் அரசாங்கத்தால் காட்டப்படவில்லை. ஆயினும், தேர்தலன்று
பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலைச் சூழ பொலிசும் இராணுவமும் சூழ்ந்திருந்ததுடன் அவரது அலுவலகத்திலும்
தேடுதல் நடத்தி, எதிர்க் கட்சி வேட்பாளருக்கு வேலை செய்ததாக ஓய்வு பெற்ற பல இராணுவ சிப்பாய்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராஜபக்ஷ, எதிரிகளை அச்சுறுத்தும் சாக்குப் போக்காகவே இந்த "சதிப்புரட்சி
முயற்சியை" பயன்படுத்துகிறார். ஜனாதிபதி இந்த வாரம் பாராளுமன்றத்தை கலைத்து, குறிப்பிட்ட காலத்துக்கு
இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பொதுத் தேர்தலை நடத்த எண்ணியுள்ளார் என அவரது பேச்சாளர் ஏற்கனவே
சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அதி பெரும்பான்மையை தந்திருந்தாலும் கூட,
கொதித்துக்கொண்டிருக்கும் அமைதியின்மை மற்றும் இராணுவம், நீதிமன்றம் உட்பட அரச இயந்திரம் வரை
விரிவடைந்துள்ள தொடரும் கசப்பான அரசியல் பிளவுகளையிட்டு அரசாங்கம் தெளிவாக பீதிகொண்டுள்ளது.
கடந்த வாரம் பூராவும், பொன்சேகாவுக்கு விசுவாசமானவர்கள் என தெரியவந்த
சிரேஷ்ட இராணுவ அலுவலர்களில் பலரை அரசாங்கம் ஓய்வு பெறச்செய்துள்ளது அல்லது ஒரங்கட்டியுள்ளது. அதே
சமயம், அது ஊடகங்களுக்கு எதிரான வேட்டையையும் தொடர்கின்றது. அரசுக்குச் சொந்தமான பத்திரிகை மற்றும்
தொலைக் காட்சி சேவைகளில் வேலைசெய்யும் ஊடகவியலாளர்கள் தொடர்பாகவும், தனியார் ஊடகங்களை
மெளனமாக்கவும் அரசாங்கம் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. இராஜபக்ஷ தனது பிரச்சாரத்துக்கான
உபகரணமாக அரசுக்குச் சொந்தமான ஊடகத்தை கவலையின்றி பயன்படுத்திக்கொண்ட விதம் பற்றி தேர்தல்
ஆணையாளரும் துணிச்சலின்றி விமர்சித்தார்.
ஞாயிற்றுக் கிழமை ஜே.வி.பி. சார்பு லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன
சிறிமல்வத்தவை பொலிசார் கைது செய்ததோடு அச்சகத்துக்கும் சீல் வைத்தனர். பத்திரிகையில் வெளியான ஒரு
கட்டுரை "தேசிய பாதுகாப்புக்கு" அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி பொலிஸ் நீதிமன்ற உத்தரவொன்றையும்
பெற்றது. ஆயினும், நேற்று இலங்கை ஸ்தாபனத்துக்குள்ளான பிளவுக்கு இன்னுமொரு அறிகுறியாக, குற்றச்சாட்டை
ஒப்புவிக்க பொலிசார் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி அந்த உத்தரவை நீடிக்க நீதவான்
மறுத்துவிட்டார்.
அதன் ஆசிரியர் தலையங்கத்தில், சண்டே டைம்ஸ், அனைவரதும் குறிப்பாக
இராஜபக்ஷவின் அக்கறையின் சார்பிலும், "பெருந்தகைப் பண்புக்கு" ஒரு சோர்வான வேண்டுகோளை விடுத்தது.
அரசியல் சச்சரவு கட்டுக்கடங்காமல் போகும் என்று ஆளும் வட்டாரத்தில் உள்ள பீதியை வெளிச்சம்போட்டு
காட்டி, தேர்தல் தின இரவு பொன்சேகா இருந்த ஹோட்டலுக்கு வெளியில் இருந்த விட்டுக்கொடுப்பற்ற
நிலைமையை சுட்டிக் காட்டி அது தெரிவித்ததாவது:
"ஜனாதிபதியை முரட்டுத்தனமாய் நடத்துவதற்கு இராணுவத்தில் ஆதரவான சக்திகளை
அவர் [பொன்சேகா] தூண்டிவிடக்கூடும் என்ற உண்மையான பீதி [இராஜபக்ஷ முகாமில்] இருந்து வந்தது.
விடயங்கள் தன்னை மத்திய நிலைக்குக் கொண்டுவர வேண்டுமெனில் தான் வெற்றி பெற வேண்டும் என ஓய்வுபெற்ற ஜெனரல்
மறுபக்கம் உணர்ந்திருந்தார். இரக்க உணர்வுடன் கொழும்பு வீதிகளில் ஒவ்வொரு பக்கத்துக்கும் விசுவாசமான
ஆயுதப் படை பிரிவுகளை நேருக்கு நேர் நிறுத்தக் கூடிய, மோதலில் ஈடுபடாமல் ஊடாடும் முறையை பயிற்சிக்குக்
கொண்டு வந்தது."
"தேசம் ஏற்கனவே பிளவுபட்டது போதும்" என பிரகடனம் செய்ததோடு ஒரு "ஒற்றுமைப்படுத்துபவராகவும்"
மற்றும் ஒரு "பெருந்தகையாகவும்" செயற்படுமாறு அழைப்பு விடுத்து அந்த ஆசிரியர் தலைப்பு முடிவடைந்தது.
எவ்வாறெனினும், தற்போதைய தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளும் அடக்குமுறைகளும் தொடர்வதன் மூலம் வெளிப்படுவது
போல், தனது கோஷ்டி எதிரிகளை அழிக்கவும் கீழறுக்கவும் சகல வழிமுறைகளையும் பயன்படுத்த இராஜபக்ஷ
அரசாங்கம் உறுதியெடுத்துள்ளது.
ஒரு பகுதி இலங்கையிலும் மற்றும் பரந்த பிராந்தியத்திலும் வளர்ச்சி கண்டுவரும்
பெரும் வல்லரசுகளின் போட்டியுடன் சம்பந்தப்பட்ட ஆழமடைந்துவரும் குழு வேறுபாடுகளையே ஆளும்
வட்டாரத்துக்குள் நடக்கும் இந்த அரசியல் யுத்தம் சுட்டிக் காட்டுகிறது. அமெரிக்காவும் இந்தியாவும், இராஜபக்ஷவின்
கீழ் கொழும்பில் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியடைவதையிட்டு கவலை கொண்டுள்ளன.
இந்த கொடிய மோதல்கள் நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதார மற்றும்
சமூக நெருக்கடிகளையும் பிரதிபலிக்கின்றது. இந்த விடயத்தில், அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஐக்கியப்பட்டுள்ளன:
இரு சாராரும் முழு பொருளாதார சுமைகளையும் உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்த தீர்மானித்துள்ளனர்.
அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறைகள், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்கப்
பயன்படுத்தப்படவுள்ள வழிமுறைகள் குறித்த தெளிவான எச்சரிக்கையாகும்.