World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Strikes as Greece imposes EU-backed austerity programme

ஐரோப்பிய ஒன்றிய ஆதரவைப் பெற்ற கடும் சிக்கன வேலைத்திட்டத்தை கிரேக்கம் சுமத்துவதற்கெதிரான வேலைநிறுத்தங்கள்

By John Vassilopoulos
4 February 2010

Back to screen version

கிரேக்க அரசாங்கம் சுமத்தியுள்ள கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்தங்கள் திடீரென ஆரம்பித்துள்ளன.

வரிவசூலிக்கும் அதிகாரிகள் அவர்களின் ஊதியங்கள் மற்றும் நலன்களை குறைக்க திட்டமிட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிராக ஒரு 48 மணி நேர வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர். இக்குறைப்புக்களில் ஒரு தொழிலாளருக்கு மாதம் ஒன்றிற்கு நிகரமாக 500 யூரோக்கள் சராசரியாக குறைக்கப்படும். இக்குறைப்புக்கள் மாதம் 2000 யூரோக்களுக்கு மேல் ஊதியம் பெறும் அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கும் ஊதிய வெட்டு என்பதின் ஒரு பகுதியாகும்; இந்த தரத்திற்கு கீழே இருப்பவர்களுக்கு ஊதியத்தில் சொற்ப 1.5 சதவிகிதம் மட்டும் குறைக்கப்படும். வரிவசூல் அதிகாரிகளின் சராசரி வரிச்சுமை 20ல் இருந்து 25 சதவிகிதம் என்றும் உயரும்.

இரு 24 மணி நேர வேலைநிறுத்தங்கள் பொதுத்துறை குடைத் தொழிற்சங்கம் ADEDY யினால் பெப்ருவரி 10 மற்றும் 17 தேதிகளில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையுடன் பள்ளி ஆசிரியர்கள் சங்கமான OLME யும் நடவடிக்கையில் இணையும்; அதன் உறுப்பினர்களும் குறைப்புக்களை எதிர்த்து மார்ச் 8 அன்று நடக்க இருக்கும் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். மருத்துவமனை டாக்டர்கள் சங்கம் OENGE யும் பணி நேரத்திற்குப் பின்னர் செய்யும் வேலைகள் குறைப்பை வரவு-செலவுத் திட்டம் கொண்டு வந்துள்ளதை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுவர்.

இந்தக் குறைப்புக்கள் பொதுத்துறை முழுவதும் அரசாங்கம் திட்டமிட்டுள்ள 10 சதவிகிதக் குறைப்புக்களை சுமத்துவதில் ஒரு பகுதிதான். நேற்று பிரதம மந்திரி PASOK (Panhellenic Socialist Movement) இன் ஜோர்ஜ் பாபாண்ட்ரு பொதுத்துறை ஊதிய வெட்டு, எரிபொருள் இறக்குமதி வரி அதிகப்படுத்துதல், ஓய்வூதிய வயதை உயர்த்துதல் உட்பட பல சிக்கன நடவடிக்கைகளைப் பற்றிய பொதி ஒன்றை முன்வைத்துள்ளார்.

பொருளாதாரச் சரிவினால் குறிப்பிடத்தக்க வகையில் கிரேக்கம் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது; 1974 இராணுவ ஆட்சிக் குழு சரிந்ததற்கு பின்னர் மிகப் பெரிய நெருக்கடியைக் கடந்து கொண்டிருக்கிறது. பொதுக் கடன்கள் மிக அதிக அளவை அடைந்துள்ளன; தற்பொழுது அவை 254 பில்லியன் யூரோக்கள் என்று உள்ளன. கிரேக்கத்தின் தற்போதைய பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.7 சதவிகிதம் ஆகும்; இது யூரோப்பகுதி உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டிய 3 என்பதற்கு பதிலாக நான்கு மடங்கு அதிகம் உள்ளது; ஆரம்ப மதிப்பீடுகளை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் ஆகும்.

கிரேக்கம் கடனைக் கொடுக்க இயலாது என்ற திவால் நிலை, கிரேக்கம் உறுப்பு நாடாக இருக்கும் யூரோப் பகுதிக்கு தொலை விளைவுகளைக் கொடுத்துள்ளது. நிதி மந்திரி ஜோர்ஜ் பாபாகான்ஸ்டான்டினு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் Dominique Strauss-Kahn ஐ கடந்த வெள்ளியன்று டாவோஸில் உலகப் பொருளாதார மகாநாட்டில் சந்தித்தார். IMF இடம் இருந்து கிரேக்கம் உதவி கேட்கிறது என்பதை அவர் மறுத்து, பற்றாக்குறையை எப்படிக் குறைப்பது என்பது பற்றிய நுட்ப ஆலோசனையை மட்டும் கேட்டதாகக் கூறினார். சீனாவில் இருந்து 25 பில்லியன் யூரோ மதிப்புடைய பத்திரக் கடனை நாடியுள்ளது என்று வந்த தகவல்களையும் அரசாங்கம் மறுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோக்கில், IMF மற்றும் சீன உதவி எப்படியும் தவிர்க்கப்பட வேண்டும்--ஏனெனில் தன் உள் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க இயலாது என்ற உட்குறிப்பைக் கொடுத்துவிடும். கிரேக்கத்திற்கு பிணை கொடுப்பது என்பது சர்வதேச சந்தைகளில் யூரோவின் மதிப்பை குறைப்படுத்திவிடும்; கிரேக்கம் திவாலானால், பின் நெருக்கடி விரைவில் போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி ஆகியவற்றிற்கு பரவும்; அந்நாடுகளிலும் பொதுக்கடன் அசாதாரணமாக அதிகமாக உள்ளது; இது முழு யூரோப்பகுதியையும் இந்த முடிவுப் புயலில் இழுத்துவிடும்.

ஐரோப்பிய ஒன்றியமானது கிரேக்கம் மிருகத்தனமான குறைப்புக்களை சுமத்தி நெருக்கடியின் செலவுகளை தொழிலாள வர்க்கத்தின் மீது போடுவது குறித்து போக்குக்கு பெரிதும் சாய்ந்து கொடுக்கிறது. ஐரோப்பியக் ஆணைக்குழு (EC) நேற்று கிரேக்கத்தின் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்தது; இவை 2012 க்குள் பற்றாக்குறையை 3 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டுவரும் நோக்கம் உடையது; ஆனால் அது அரசாங்கம் இன்னும் ஒரு படி மேலே சென்று "ஓய்வூதியம், சுகாதாரப் பாதுகாப்பு சீர்திருத்தங்களையும்", "ஊதியத்திற்கு பேரம் பேசும் முறையை அகற்றுதலையும்" கொண்டுவர வேண்டும் என்று கோருகிறது.

கிரேக்கத்திற்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் அது புள்ளிவிவரங்களை கடுமையாகத் திருத்தி தவறான தகவலைக் கொடுத்ததற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் ஐரோப்பியக் குழு அறிவித்துள்ளது. ஒரு சட்டத்தின் மூலம் கட்டாயமாக மாதந்தோறும் பொது வரவு-செலவுத் திட்ட அறிக்கைகளை நவீனப்படுத்தும் கட்டாயத்திற்கு அரசாங்கம் உட்பட வேண்டும்; இது மே 15க்குள் செயல்படுத்தப்பட வேண்டும் அல்லது சட்டபூர்வ நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். ஐரோப்பிய ஆணைக்குழு கிரேக்கத்தை ஒரு அட்டவணை தயார்செய்து அதற்குள் அதன் கடும் சிக்கன நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது; மேலும் அதன் தற்போதைய செலவுகளில் 10 சதவிகிதத்தை ஒதுக்கி வைத்து ஒரு அவசர இருப்பு நிதியையும் தோற்றுவிக்க வேண்டும்.

பாப்பாண்ட்ரு தூண்டியுள்ள பொதுத்துறை ஊழியர்களிடையே தோன்றியுள்ள எதிர்ப்பு அலை இப்பொழுது போராளித்தன எதிர்ப்பு வெடிப்பின் பரந்த தன்மையில் ஒரு பகுதியாக உள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று பொதுத்துறை ஊழியர்கள், சமீபத்தில் இழிவான முறையில் வந்துள்ள படிப்படியான கட்டங்களில் பணி நீக்கத்திற்கு உள்ளானவர்கள், பாராளுமன்றத்திற்கு வெளியே முகாமிட்டு நியாயமற்ற பணிநீக்கத்திற்கு எதிராக ஆர்ப்பரித்தனர். அவர்களோடு இத்திட்டத்தின்கீழ் வரும் மற்ற தொழிலாளர்களும் சேர்ந்து கொண்டனர்; இவர்கள் நிரந்தர பொது ஊழியர்களுடன் ஒப்பிடும்போது தங்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த ஊதியம், வேலைநிலைமை பற்றி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். "Stage" வேலை அனுபவம், பயிற்சி ஆகியவற்றைப் பெறுவதற்கு நிறுவப்பட்டது; முக்கியமாக கூடுதல் வேலையின்மையில் வாடும் இளைஞர்களுக்கு உதவுவதற்காக; வேலையின்மையோ தற்பொழுது 18 சதவிகிதம் என்று உள்ளது. உண்மையில் இது கிரேக்கப் பொதுப் பணித்துறையில் பின்புறமாக வளைந்து கொடுக்கும் பணி நடவடிக்கைகளை கொண்டுவரும் வழிவகைதான்.

ஏதென்ஸிற்கு வெளியேயும் கடந்த மூன்று வாரங்களாக அமைதியின்மை காணப்படுகிறது; விவசாயிகள் முக்கிய ஏதென்ஸ்-சலோனிகா கார்ப் பாதைக்கு செல்லும் சாலையைத் தடுத்துள்ளனர். கிரேக்க கிராமப்புறம் நீடித்த குறைந்த முதலீட்டினால் அவதியுறுகிறது; இது ஏதென்ஸ் மற்றும் சற்று குறைந்த அளவில் சலோனிகாவையும் பாதிக்கும். விவசாயிகளுடைய கோரிக்கையில் அதிக உற்பத்திச் செலவுகளை கட்டுப்படுத்த நவீன வழிவகைகள் வேண்டும் என்பதும் உள்ளது. தன்னுடைய தொகுப்பில் BBC செய்தியாளர் மார்க் மர்டெல் ஒரு விவசாய பாசன வசதி இல்லாதது பற்றிப் புகார் கூறியதைக் குறிப்பிட்டு, "பாரோக்கள் காலத்தில் எப்படி நீரைப் பெற்றனரோ அவ்விதத்தில்தான் இப்பொழுதும் நீர் பெறுகிறோம் என்றார்" எனக் கூறியுள்ளார்.

பரவும் மக்கள் அமைதியின்மையின் ஆபத்து பற்றி அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது; ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தையோ, சர்வதேச முதலீட்டாளர்களையோ பகைத்துக் கொள்ள முடியாது; அவை ஏற்கனவே அரசாங்கப் பத்திரங்கள் (Bond) மீது ஊக வணிபம் நடத்தி அதன் மதிப்பைக் குறைத்துள்ளனர். தன் நிலையை வலுப்படுத்திக் கொள்ள பாபாண்ட்ரு அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி சிக்கனத்திற்கு ஒரு ஒருமித்த தேசிய ஆதரவு வேண்டும் என்று முறையிட்டுள்ளார்.

செவ்வாயன்று பொதுத் தொலைக்காட்சி உரையில், "கிரேக்கம் ஒரு பெரும் புயலின் மையத்தில் உள்ளது, ஏனெனில் இது யூரோப்பகுதியில் வலுவற்ற பிணைப்பு என்று கருதப்படுகிறது" என்று அவர் அறிவித்தார். இறுதியில் "ஊக விளையாட்டு ... யூரோவைக்கூட தன் இலக்காகக் கொண்டுள்ளது." என்றார்

"நம் தாய்நாட்டின்மீது கொள்ள வேண்டிய கடப்பாடு, கடமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நாடு பெரும் சரிவில் ஆழ்ந்துவிடமால் இருப்பதற்கு, ....தடைகளுக்கும் வேலைநிறுத்தங்களுக்கும்" இடம் இல்லை என்று அவர் அச்சுறுத்தினார்.

புதிய ஜனநாயகக் கட்சி என்னும் எதிர்க்கட்சியின் தலைவரான Antonis Samaras, வலதுசாரி Popular Orthodox Rally ( LAOS) இன் ஜியோர்ஜோஸ் கரட்சபெரிஸ் இருவரும் அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் KKE எனப்படும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் Aleka Papariga, SYRIZA என்னும் தீவிர இடது கூட்டணியின் தலைவர் அலெக்சிஸ் டிசிப்ரஸ் இருவரும் முறையாகத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

கிரேக்க தொழிற்சங்கப் பொதுக் கூட்டமைப்பு ஜனரஞ்சக அலங்காரச் சொற்களைக்கூறி 2000 யூரோக்களுக்கும் குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு போராடும் என்று கூறியுள்ளது. ஆனால் இது தொழிலாள வர்க்கத்தை பிரித்து, பெப்ருவரி இறுதி வரை ஒரு பொது அணிதிரட்டலை ஏற்படுத்த மறுப்பதை மூடிமறைக்கத்தான் உதவும். ADEDYயும் பொதுத்துறை போராளித்தனத்தை குறைக்கும் வகையில் பெயரளவிற்கு 24 மணி நேரம் வேலைநிறுத்தங்களை அவற்றின் பாதிப்பு அதிகம் இல்லாத வகையில் படிப்படியாக செய்வதாக உள்ளது. வரிவசூலிக்கும் அதிகாரிகளின் சங்கம் அதன் உறுப்பினர்களுடைய வருமானத்தில் 8 சதவிகிதக் குறைப்புத்தான் குறிக்கும் என்றால் அவ்விதமான வெட்டை சீர்திருத்த வகையில் ஏற்பதாக தெளிவுபடுத்தியுள்ளனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved