World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்Spacecraft Kepler discovers five extrasolar planets கெப்லர் விண்வெளியோடம் ஐந்து புதிய கிரகங்களை சூரியக் குடும்பத்திற்கு வெளியில் கண்டறிந்தது By Bryan Dyne எமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட கிரகங்களை கண்டறிவதற்கான பிரத்யேக முதல் விண்வெளி ஓடமான கெப்லர், அதன் முதல் ஐந்து புதிய கிரகங்களை சூரியக் குடும்பத்திற்கு வெளியில் கண்டறிந்துள்ளதாக கடந்த மாதம் நாசா அறிவித்தது. இந்த ஐந்தில் நான்கு கிரகங்கள் குருவை (Jupiter) விட பெரியதாக உள்ளனபூமியைப் போல அவற்றில் வாழ முடியாது என்ற போதினும், அவை இத்துணை விரைவாக கண்டறியப்பட்டிருப்பது, கெப்லர் அதன் முதன்மை நோக்கத்தை எட்டுவதற்கு முழு தகுதியைப் பெற்றிருக்கிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது, எதிர்வரும் ஆண்டுகளில் பூமியை போன்ற ஒரு கிரகத்தைக் கண்டறிவதே கெப்லரின் முதன்மை நோக்கமாகும். கெப்லர் மார்ச் 2009-ல் அனுப்பப்பட்டது, அனுப்பப்பட்ட முதல் ஐந்து வாரங்களில் சேகரித்து அனுப்பிய தகவல்களிலேயே இந்த ஐந்து கிரகங்களும் கண்டறியப்பட்டிருந்தன, ஆனால் இந்த கண்டுபிடிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, உறுதிப்படுத்தப்பட பல மாதங்கள் தேவைப்பட்டன. கண்டறியப்பட்டிருக்கும் இந்த கிரகங்கள், கெப்லர் 4b, 5b, 6b, 7b, மற்றும் 8b என்று பெயரிடப்பட்டன. எமது சூரிய மண்டலத்தில் காணப்படுபவைகளோடு ஒப்பிடும் போது இவை மிக மிக பெரிய அளவில் உள்ளன. எல்லாவற்றையும் விட சிறியதாக இருக்கும் ஒன்று அண்ணளவாக நெப்டியூனின் அளவிற்கு உள்ளது, அல்லது பூமியைப் போல நான்கு மடங்கு பெரிய அளவில் உள்ளது. மற்றவை, எமது சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய கிரகமான குருவின் (Jupiter) அளவை விட அண்ணளவாக ஐந்து மடங்கு பெரியதாக இருக்கின்றன, இது இவற்றை தற்போது கண்டறியப்பட்டிருக்கும் பெரும்பாலான பிற 400 சூரிய குடும்பத்திற்கு வெளியிலுள்ள கிரகங்களின் அளவு வரிசையில் கொண்டு போய் சேர்க்கிறது. இந்த ஏனைய கிரகங்கள் அனைத்தும் தரை-மண்டல ஆய்வு நிலையங்கள் மூலமாக கண்டறியப்பட்டவையாகும். கெப்லர் அதன் சுற்றுவட்ட பார்வையில் இருக்கும் 150,000 நட்சத்திரங்களை தொடர்ந்து கண்காணித்ததன் விளைவாக இந்த கிரகங்களைக் கண்டறிந்துள்ளது, அதாவது கெப்லருக்கும் நட்சத்திரத்திற்கும் இடையே கிரகம் கடந்து செல்லும் போது ஒவ்வொரு நட்சத்திரத்தின் ஒளிபிரகாசத்திலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்பட்ட மாற்றங்களின் அடித்தளத்தில் இவற்றைக் கண்டறிந்துள்ளது. எடுத்துக்காட்டாக, சூரியப்புள்ளிகளும் (sunspots) கூட நட்சத்திரங்களின் ஒளிபிரகாசத்தை குறையச் செய்ய முடியும் என்பதில் தான் சிக்கல்கள் தொடங்குகின்றன. எவ்வாறிருப்பினும், கெப்லர் திட்டத்தில் இணைந்து செயலாற்றி வரும் விஞ்ஞானிகள் நிச்சயமாக இந்த சிக்கல்களை பற்றி அறிந்திருப்பார்கள் என்பதோடு அவற்றை கணக்கிலும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். இந்த ஐந்து கிரகங்களுமே அவற்றின் தாய் நட்சத்திரத்திற்கு (parent star) வெகு அருகாமையில் சுற்றி வருகின்றன, இவற்றின் சுற்றுவட்ட காலம் 3.3 முதல் 4.9 பூமி நாட்கள் அளவில் வேறுபடுகின்றன, இதுவே இவற்றை விரைவாக கண்டுபிடிப்பதற்கு உதவி செய்திருக்கின்றன. தங்களின் நட்சத்திரங்களை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் கிரகங்கள் மிக குறைவாக கண்டறியப்படுவதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், ஒரு சுற்றை முடித்து வருவதற்கு அவற்றிற்கும், நட்சத்திரத்தின் முன்னால் கடந்து செல்வதற்கும் நீண்ட காலம் எடுக்கும். ஒரு கிரகத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்னால் குறைந்தபட்சம் மூன்று முறையாவது குறிப்பிட்ட கால இடைவெளியின் அடிப்படையில் இந்த நட்சத்திரத்தின் ஒளிபிரகாசத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகவே, ஓர் ஆண்டை சுற்றுவட்ட காலமாக கொண்ட எந்தவொரு கிரகத்தையும் உறுதிப்படுத்த மூன்று ஆண்டுகளாவது ஆகிவிடும். இதை ஒப்பிட்டு கூறுவதானால், 4 நாட்களை சுற்றுவட்ட காலமாக கொண்டிருக்கும் கெப்லர் 5b போன்ற ஒரு கிரகத்தை உறுதிப்படுத்த 12 நாட்களே தேவைப்படுகின்றன. எமது சூரிய குடும்பத்தில் இருக்கும் கிரகங்களை விட இந்த கிரகங்கள் தங்களுடைய நட்சத்திரத்திற்கு மிக அருகாமையில் இருப்பதோடு மட்டுமில்லாமல், அவை மிகுந்த வெப்பநிலையோடும் காணப்படுகின்றன. எமது சூரிய குடும்பத்தில் புதன் (Venus) கிரகமே மிகவும் வெப்பமானதாகும், இதன் வெப்பநிலை 735டிகிரி கெல்வின் (K) (சுமார் 300டிகிரி சென்டிகிரேட்). இந்த கிரகங்கள் 1500-2000 கெல்வின் வரையிலான வெப்பநிலைக்குள் வருகின்றன, ஏனென்றால் அவற்றின் தாய் நட்சத்திரத்துடன் இருக்கும் அவற்றின் அதீத நெருக்கத்தன்மை (proximity) அவை அதீத கதிர்வீச்சை உள்வாங்கும் என்பதையே குறிக்கின்றன. கெப்லர் செயல்திட்டத்தைக் குறைந்தபட்சம் நவம்பர் 2012 வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, இந்த காலத்திற்குள் பூமியைப் போன்ற கிரகங்கள் சுற்றி வருவதை உறுதிப்படுத்த தேவையான தகவல்களைச் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கிரகங்களைக் கண்டுபிடிப்பதற்கான கெப்லரின் திறன் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, வில்லியம் பொரக்கியின் (William Borucki) தலைமையிலான குழு மேலும் பல கூடுதல் சூரியக் குடும்பத்திற்கு வெளியில் கிரகங்களுக்களை கண்டறிய, கிடைத்திருக்கும் எட்டு மாதத்தின் அனைத்து தரவுகளையும் சலித்தெடுக்கப் போகிறது. இந்த தரவுகள் பூமி போன்ற கிரகம் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு நெருக்கமாக இருக்கின்றன என்ற போதினும், நீண்ட சுற்றுவட்ட காலத்தைக் கொண்ட கிரகங்களும் இருப்பதற்கான ஆதரங்களும் அதில் இருக்கலாம், இது இயற்கை இயல்நிகழ்வை இன்னும் சற்றே புரிந்து கொள்ள எமது அறிவை விரிவாக்குகிறது. |