World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
மத்திய கிழக்கு
Iran's Green Revolution leaders seek compromise with Supreme Leader ஈரானின் பச்சை வண்ண புரட்சித் தலைவர்கள் அதிஉயர் தலைவருடன் இணக்கப்பாட்டை தேடுகின்றனர் By Keith Jones ஈரானின் "பச்சை வண்ணப் புரட்சி" முதலாளித்துவ எதிர்க்கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களும் சமீபத்திய வாரங்களில், ஜூன் 2009 ஜனாதிபதி தேர்தல்களை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து பின்வாங்கி, இஸ்லாமியக் குடியரசிற்கு தங்கள் ஆதரவை மறு உறுதி செய்யும் வகையில் சமரச பகிரங்க அறிக்கைகளை கொடுத்துள்ளனர். கடந்த ஜூன் ஜனாதிபதி தேர்தலில் பதவியில் இருக்கும் மஹ்முத் அஹ்மதிநெஜாட் இல்லாமல் தான்தான் உண்மையாக வெற்றி அடைந்ததாக அறிவித்துக் கொள்ளும் மீர் ஹொசைன் மெளசவி புதிய ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு, ஷியாவின் புனித நாளான அஷுரா அன்று எதிர்த்தரப்பை அடக்கியதற்காக அரசாங்கத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அரசாங்கத்தின் "அச்சுறுத்தும் கொள்கை சில எதிர்ப்பாளர்களை ஏற்கமுடியாத தீவிரத்தனத்திற்கு நகர வைப்பதாகவும், அதையொட்டி அவர்களின் கோஷங்களும் நடவடிக்கைகளும் உள்ளன" என்று மெளசவி கூறியுள்ளார். ஆனால் முன்னாள் பிரதம மந்திரி "தேசிய ஐக்கியத்திற்கும்" அழைப்பு விடுத்துள்ளார்; தற்போதைய ஆட்சி சீர்திருத்தபடலாம் என்று தான் நம்புவதாகவும் அஹ்மெதிநெஜாட்டின் அரசாங்கம் "மக்கள், பாராளுமன்றம், நீதித்துறைக்கு" பொறுப்பு கூற வைக்கப்படலாம் என்றும் அதற்கு பல அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், எதிர்க்கட்சி சார்புடைய செய்தித்தாள்கள் மீது இருக்கும் தடைகள் அகற்றப்பட வேண்டும், மற்றும் நாட்டின் அரசியல் செயல்கள் பற்றிய அரசியலமைப்பு விதிகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். புதிய தேர்தல் சட்டங்கள் "மக்களின் நம்பிக்கையை மறுபடியும் பெறுவதற்கு" தேவை என்று மெளசவி கூறினார். ஆனால் தன்னுடைய "நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தீர்வில்" ஒரு புதிய ஜனாதிபதித் தேர்தல் வேண்டும் என்று வாதிடவில்லை--இதுவரை அவரும் பச்சை இயக்கத்தாரும் அதைத்தான் முக்கிய கோரிக்கையாக முன்வைத்திருந்தனர். இதைத் தொடர்ந்து ஈரானின் ஜனாதிபதியாக 1997ல் இருந்து 2004 வரை இருந்தவரும், மெளசவியின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய ஆதரவு கொடுத்துவர்களில் ஒருவராக இருந்த மஹ்மத் கடாமி இன்னும் சமரசம் நிறைந்த அறிக்கையை வெளியிட்டார். "சீர்திருத்த இயக்கமும் நானும் திரு அஹ்மெதிநெஜாட்டின் தற்போதைய நிர்வாகத்தை அங்கீகரிக்கிறோம், ஆனால் நாம் அதிதீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும்" என்று அவர் எழுதியுள்ளார். கடந்த வாரம் ஈரான் பாராளுமன்றத்தின் முன்னாள் தலைவர் மேதி கரெளபி, 2005, 2009 ஜனாதிபதி தேர்தல்களில் தோற்ற வேட்பாளர், பச்சை வண்ண தலைவர்கள் மூவரில் ஒருவர், அஹ்மெதிநெஜாட் ஈரானின் ஜனாதிபதி என்பதை ஒப்புக் கொள்ளும் தொடர்ச்சியான அறிக்கைகளை வெளியிட்டு, தற்போதைய அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு "சிறந்த நபர்" இஸ்லாமிய குடியரசின் பாதுகாவலரும் உயர் தலைவருமான அயோதுல்லா கொமெனி தான் என்று அறிவித்துள்ளார். கொமேனியின் அதிஉயர் தலைமையை, வேலாயத்-இ-பகிக்கையும் இஸ்லாமிய குடியரசின் மற்றய முக்கிய அமைப்புக்களையும் வினாவிற்குட்படுத்திய கோஷங்கள் "100 சதவிகிதம் தவறானவை" என்று கரெளபி கூறினார். "அதிகார அமைப்புக்கள் மாற்றப்பட வேண்டும் எனக்கூறும் இந்த கோஷங்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை" என்றார். "காசாவும் இல்லை, லெபனானும் இல்லை. என்னுடைய உயிர் ஈரானுக்காக." என்று வலதுசாரி அமெரிக்க சார்பு கோஷம், சில நேரத்தில் எதிர்த்தரப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுவதையும், குறிப்பாக ஈரானின் பாரம்பரிய பாலஸ்தீனிய மக்களுடன் ஒருமைப்பாட்டு தினத்தில் கூறப்படுவதையும் அவர் கண்டித்தார். மூன்று பச்சை வண்ணத் தலைவர்களில் மிக ஆக்கிரோஷமாக கடந்த வாரம் வரை கரெளபி செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. "கடந்த சில வாரங்களில் அழுத்தங்களைக் குறைக்க பல முயற்சிகள் உள்ளன" என்று பெயரிடப்படாத எதிர்த்தரப்புத் தலைவர்களின் நம்பிக்கையைக் கொண்ட ஒருவர் கடந்த மாதக் கடைசியில் நியூயோர்க் டைம்ஸிடம் கூறினார். பச்சை வண்ண எதிர்ப்பை, இடதுகள் உட்பட, அமெரிக்க, ஐரோப்பிய முதலாளித்துவ ஸ்தாபனத்தின் அனைத்துப் பிரிவுகளாலும் "ஒரு ஜனநாயகமாகும் இயக்கம்" என்று பாராட்டப்பட்டது. உண்மையில் அது ஈரானின் முதலாளித்துவ-மதகுருமார் ஸ்தாபனத்திற்குள் இருக்கும் சக்திவாய்ந்த கூறுபாடுகள், அஹ்மெதிநெஜாட் ஜனாதிபதியாக முதலாவது பதவிக் காலத்தில் செயல்படுத்திய அவருடைய ஜனரஞ்சக கொள்கையை எதிர்ப்பவற்றிற்காக குரல் கொடுக்கிறது--அவரோ கடாமி, அவருக்கும் முன் ரப்சஞ்சனி ஆகியோர் செயல்படுத்திய புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் கொண்டிருந்த கடுமையான எதிர்ப்பை ஒட்டி பதவிக்கு வந்தார். 2005-08 எண்ணெய் விலை உயர்வில் வந்த இலாபங்கள் அனைத்தையும் விலைகளுக்கு உதவித் தொகைகள் கொடுத்தல், சமூக நலச் செலவினங்கள் என்று வீணடித்ததாகவும், அமெரிக்காவிற்கு எதிராக மோதல் கொள்கையை தேவையில்லாமல் கொண்டிருக்கிறார் என்பதற்காகவும் அவரை கண்டித்தனர். புரட்சி பாதுகாப்பு படையின் உயர்மட்டம் மற்றும் அதனுடைய வணிக நண்பர்களின் பெருகும் பொருளாதார, அரசியல் வலிமையையும் அவர்கள் எதிர்க்கின்றனர். இவ்விதத்தில் தொடர்புடைய 3 காரணிகள் கொமெனியுடன் சமரசம் காண முற்படும் பச்சை வண்ணத் தலைவர்களின் மாற்றத்திற்கு காரணங்கள் ஆகும்; அஹ்மதிநெஜாட்டின் ஜனாதிபதி பதவியையும் இதற்காக அவர்கள் ஏற்கத் தயாராக உள்ளனர். முதலில் அவர்கள் எதிர்த்தரப்பு எதிர்ப்புக்கள், கடந்த ஜூனில் வெடித்தது முதல் மத்தியதர அடுக்குகளின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது பற்றி கவலை கொண்டுள்ளனர்; மேலும் அதன் பெருகிய தீவிரப்போக்குத்தன்மை பற்றியும் கவலை கொண்டுள்ளனர். வலதுசாரி, முடியாட்சி சார்பு மற்றும் அமெரிக்க சார்பு சக்திகள் வெளிப்டையாக இரண்டும் மற்றும் தங்களை சோசலிஸ்ட்டுக்கள் எனக் கூறிக் கொள்ளுபவர்களும் இஸ்லாமிய குடியரசின் அமைப்புக்கள் பற்றி வினா எழுப்பி கோஷங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இரண்டாவதாக, உலகப் பொருளாதார சரிவு மற்றும் அமெரிக்கத் தலைமையிலான பொருளாதாரத் தடைகளும் ஈரானின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளன; வேலையின்மை மற்றும் பணவீக்கம் இரண்டும் உயர்ந்துள்ளன. நாட்டின் மிகப் பெரிய வங்கிகள் தோல்வியுறும் விளிம்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கொமேனியின் முழு ஆதரவுடன் அஹ்மதிநெஜாட்டின் அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொள்ளும் விதத்தில் வலதிற்கு தீவிரமாக மாறியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் பெரும் பகுதியை தனியார்மயமாக்க தீவிரமாக உள்ளது; எரிபொருள், உணவு, பிற முக்கிய பொருட்கள், சேவைகள் ஆகியவற்றிற்கு கொடுக்கப்படும் $100 பில்லியன் மதிப்புள்ள உதவித் தொகைகளை ஐந்து ஆண்டு காலத்திற்குள் திட்டமிட்டு முடிவிற்கு கொண்டுவர பாராளுமன்றத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. ஈரானிய உயரடுக்கின் அனைத்துப் பிரிவுகளும் இந்த மாற்றங்கள் தொழிலாள வர்க்கத்துடனும் வறியவர்களுடனும் வெளிப்படையாக மோதலைக் கொண்டுவரக்கூடும் என்று உணர்ந்துள்ளன. கடைசியாக, ஆனால் முக்கியத்துவம் குறையாத வகையில், ஈரானுக்கு எதிராக வாஷிங்டனின் இடைவிடா எதிர்ப்பு பிரச்சாரம் உள்ளது. பச்சை வண்ணப் புரட்சித் தலைவர்கள் வாஷிங்டனுடன் சமாதானத்திற்கு தயார் என்றாலும், ஒபாமா தலைமையில் உள்ள அமெரிக்காவோ, முன்னைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் செய்ததைப் போல் மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை தயக்கமின்றி ஈரான் ஏற்க வேண்டும் என்று அறிவிப்பைக் கொடுத்துள்ளது. அணுவாயுதப் பரவா உடன்படிக்கையின்கீழ் முழு அளவிற்கு சிவிலிய அணுத்திட்டத்திற்காக தன் தேவையை அபிவிருத்தி செய்ய அதனுடைய உரிமைகளை ஈரான் செயல்படுத்த வாஷிங்டன் மறுப்பதில் இருந்து இது நிரூபணம் ஆகிறது. சமீபத்திய வாரங்களில் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் தெஹ்ரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் அதிகப்படுத்தியுள்ளது; ஈரான் அதன் சிவிலிய அணுசக்தித்திட்டத்தின் வரம்புகளை ஒப்புக் கொள்ளாவிட்டால் இன்னும் அதிக பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளன. கடந்த வாரம், ஜேர்மனிய தொழில்துறை பெருநிறுவனம் Siemens அடுத்த கோடையில் இருந்து இது ஈரானில் இருந்து புதிய வணிக வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்துள்ளது. ஜேர்மனிய சான்ஸ்ஸலர் அஞ்சலா மேர்க்கெல் இஸ்ரேலிய ஜனாதிபதி Shimon Peres உடன் நடத்திய ஒரு கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில், "ஈரானுக்கு நேரம் வந்துவிட்டது. பரந்த சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை விவாதிக்கும் காலம் வந்துவிட்டது" என்று கூறிய மறுநாள் இந்த அறிவிப்பு வந்துள்ளது. கடந்த வியாழனன்று வாய்மூல வாக்கெடுப்பொன்றில் அமெரிக்க செனட் ஈரான் மீது பெட்ரோல் ஏற்றுமதிக்கான தடை ஒன்றைக் கொண்ட சட்டத்தை இயற்றியது; அதன்படி அமெரிக்க தடையை மீறும் வெளிநாட்டை தளமாகக் கொண்ட அமைப்புக்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் வரும். அத்தகைய தடைகள் ஈரான்மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்; ஏனெனில் அங்கு சுத்திகரிப்புத் திறன் குறைவு, அது தனக்கு தேவையான பெட்ரோலில் 40 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது. வெள்ளியன்று அமெரிக்க செய்தித்தாள்களின் செய்திகளின்படி ஈராக், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போர்களை மேற்பார்வையிடும் ஜெனரல் பெட்ரீயஸ் சமீபத்தில் ஈரானுடன் வருங்காலப் போரைக் கணக்கில் கொண்டு நான்கு வளைகுடா நாடுகளான கர்த்தார், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், பஹாரின் மற்றும் குவைத்தில் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் கொடுத்துள்ளார்; எனவே பாரசீக வளைகுடாப் பகுதியில் எப்பொழுதும் இனி Aegis ஏவுகணை எதிர்ப்பு கப்பல்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளும். முன்னாள் ஜனாதிபதியும் தற்போது இஸ்லாமிய குடியரசின் இரு முக்கிய அமைப்புக்களான வல்லுனர் மன்றம் மற்றும் அவசரக்கால குழு ஆகியவற்றின் தலைவருமான ஹஷேமி ரப்சஞ்சனி கடந்த இரு மாதங்களாக பல தடவைகள் அமெரிக்காவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டி, பச்சை வண்ண எதிர்ப்பாளர்களுக்கும் அஹ்மதிநெஜாட்-கொமெனி ஆட்சிக்கும் இடையே சமரசம் வேண்டும் என்று வாதிட்டுள்ளார். "நாட்டிற்குள் இப்பொழுது நடக்கும் மோதல்களில் வெளிநாட்டு விரோதிகள் குறிப்பட்ட அக்கறை கொண்டுள்ளனர்" என்று கூறிய ரப்சஞ்சனி, "இப்பொழுது, எப்பொழும் இல்லாத அளவிற்கு, நாட்டின் அரசியல் சக்திகள், மக்கள் ஆகியோர் ஐக்கியத்துடன் இருப்பது முக்கியமாகும்" என்றார். ஈரானின் மிகப் பெரிய முதலாளி என்று கருதப்படும் ரப்சஞ்சனி வெளிப்படையாக மெளசவியின் தேர்தல் பிரச்சாரத்தையும், பின்னர் அவர் அஹ்மதிநெஜாட் வெற்றியின் நெறியை சவாலுக்கு உட்படுத்தியதையும் ஆதரித்திருந்தார். தற்போதைய இஸ்லாமியக் குடியரசின் ஆளும் அமைப்புக்களுக்கள் சக்திவாய்ந்த குரலாக மட்டும் மிகத் தொலைவில் இருக்கும் இவர், மதகுருமார்-முதலாளித்துவ ஸ்தாபனத்தில் இருக்கும் போட்டிப் பிரிவுகள் சமரசம் காணவேண்டும் என்று ஆதரவு காட்டுபவராக உள்ளார். மஜ்லிக்களின் பேச்சாளரும் உயர்மட்ட ஷியா சமயகுருக்களுடன் அரசியல் மற்றும் குடும்பத் தொடர்புடைய அலி லாரிஜனி, ரப்சஞ்சனியுடன் சேர்ந்து "அதி தீவிரவாதத்தை" கண்டித்தார். அதாவது இச்சொற்றொடருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவிர எதிர்ப்புத் தன்மையுடையவர்கள் மற்றும் அரசாங்கத்தின் கூடுதல் அடக்குமுறைக்கு வாதிடுபவர் என்று இருவரையும் குறிப்பிடப்படுகிறது. சமரசத்திற்கு பாடுபடும் முயற்சியில் ஈரானின் தேசியத் தொலைக்காட்சி வலையமைப்பு கடந்த மாதம் முக்கிய எதிர்தரப்பு, அரசாங்க ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த விவாதங்களை ஒளிபரப்பியது. ஆனால் ஆட்சியில் சக்தி வாய்ந்த கூறுபாடுகள் எதிர்த்தரப்பிற்கு எந்தச் சலுகைகளும் கூடாது என்று எதிர்க்கின்றனர். அஹ்மதிநெஜாட்டின் மத ஆசான் என்று பொதுவாக விவரிக்கப்படும் அயதுல்லா மஹ்மத் யாஸ்தி கடந்த மாதம் ரப்சஞ்சனியை அதிஉயர் தலைவரிடம் இருந்து "தங்களைப் பிரித்துக் கொண்டுவிட்டவர்களுடன்" சமரசத்திற்கு வாதிட்டதற்கு கண்டித்தார். "இரு புறத்திலும் இருக்கும் நிதானமானவர்கள் கொமெனி தலைமையுடன் எப்படிப் பிரச்சினைகளை தீர்க்க முடியும்? எதிர்த்தரப்பில் நிதானமானவர்கள் யார் என்று கூறுங்கள்" என்றார் யாஸ்தி. மற்றய அரசாங்கச் செய்தித் தொடர்பாளர்களும் எதிர்த்தரப்பினர் அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த ஷாவின் மிருகத்தன ஆட்சியை அகற்றிய பெப்ருவரி 11, 1979 புரட்சி நினைவு தினங்களை இம்மாதம் எதிர்ப்புக்கள் காட்ட அனுமதிக்கப்பட மாட்டா என்று உறுதியாகத் தெரிவித்துள்ளனர். "இஸ்லாமிய புரட்சியைத் தவிர வேறு எந்த குரல் அல்லது வண்ணமும் அகற்றப்படும்" என்று தெஹ்ரானின் புரட்சி பாதுகாப்புப் படைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ஹோசைன் ஹமேதானி கூறினார். "அத்தகைய முயற்சியை சிறுபான்மை மேற்கொண்டால் அது உறுதியாக எதிர்கொள்ளப்படும்." மெளசவியும் கரெளபியும் கடந்த வாரங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குத் தயாரிப்பு நடத்திய இரு முடியாட்சிவாதிகளைத் தூக்கிலிட்டதை "அவசர முடிவு" என்று கண்டித்தனர். ஜூன் தேர்தல்களுக்கு முன்னரே இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்றாலும், பச்சை இயக்க ஆதரவாளர்களுடன்தான் அவர்கள்மீதும் விசாரணை நடந்தது. லண்டனை தளமாகக் கொண்ட பைனான்ஸியல் டைம்ஸிற்கு கடந்த வாரம் விரிவான பேட்டி ஒன்றை கரெளபி கொடுத்துள்ளார், பச்சை வண்ணத் தலைவர்களுடைய சார்பைப் பற்றி அதிகம் அது தெரிவிக்கிறது. இஸ்லாமியக் குடியரசை சூழ்ந்துள்ள பல நெருக்கடிகளும் இரு உயரடுக்குப் பிரிவுகளிலும் உள்ள "நிதானமானவர்களை" ஒன்றுபடுத்தி, அஹ்மெதிநெஜாட்டை அகற்ற வேண்டும் அல்லது குறைந்தது அவருடைய மந்திரிகள் பலரை அகற்ற வேண்டும், அவரது அதிகாரத்தையும் செல்வாக்கையும் ஜனாதிபதி என்னும் முறையில் குறைக்க வேண்டும் என்று வாதிட்டார். "இதற்கு எத்தனை காலம் பிடிக்கும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நீண்ட காலம் பிடிக்காது. சில குறிப்புக்களைப் பாருங்கள்: பணவீக்கம், பொருளாதாரத் தேக்கம், பொருளாதரா மையங்கள் மூடப்படல், குறிப்பாக தொழில்துறைப் பிரிவுகள், இவை இப்பொழுது 20 அல்லது 40 சதவிகிதத் திறனில்தான் வேலை செய்கின்றன, பெருகிய வேலையின்மை, வறுமைக் கோடு 7m. றியால் அதாவது ($700) நிலையில் இருத்தல், அதாவது மக்களில் 40 சதவிகிதம் வறியவர்கள் என்ற நிலை." இஸ்லாமியக் குடியரசிற்கு, வேலயட்-இ-பகிஹ் உட்பட, அவருடைய ஆதரவை வலியுறுத்திய கரெளபனி, பிந்தைய நிறுவனம் இஸ்லாமிய குடியரசிற்குள் ஷியா மத குருக்களின் மேன்மையான அரசியல் நிலையை உறுதிப்படுத்தி நிற்கிறது என்றார். ஆனால் இந்த அவருடைய ஆதரவு ஆட்சிக்கு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து புரட்சிகர சவால் வருமே என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. "பெரும்பாலான மக்கள் ஆட்சியை அகற்ற விரும்பவில்லை. உண்மையில் இந்த நாட்டின் வருங்காலம் பற்றி கவலைப்படுபவர்கள், ஆட்சியைக் கவிழ்ப்பது பற்றி இருக்கக்கூடாது, ஏனெனில் அதில் இருந்து என்ன விளையும் என்று தெரியாது. இமாம் கொமெனியின் அசாதாரண தலைமைத் திறன்கள் இல்லாமற் போயிருந்தால், 1979 புரட்சிக்கு பின்னர் என்ன ஏற்பட்டிருக்கும் என்பதைக் கடவுள்தான் அறிவார்." என்று கரெளபி பைனான்ஸியல் டைம்ஸிடம் கூறினார். ஷியா மக்கள் மயம் உதவியுடன் 1978, 1982ல் உலுக்கிய வெகுஜன ஏகாதிபத்திய-எதிர்ப்பு எழுச்சி, முதலாளித்துவத் திட்டத்திற்கு எதிராக வந்ததை அயோதுல்லா கொமெனி அராசங்கக் கருவியைப் பயன்படுத்தி திசைதிருப்பி இரக்கமின்றி இடது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அமைப்புக்கள் அனைத்தையும் அடக்கியதில் கொண்டிருந்த முக்கிய பங்கைத்தான் கரெளபி குறிப்பிடுகிறார்--இதற்கு மெளசவி, ரப்சஞ்சனி, கொமெனி ஆகியோர் அனைவருடைய முழு ஆதரவும் இருந்தது. ஆனால் புரட்சியை அடக்கும் கொமெனியின் திறன் அரசியல் தந்திரத்தின் முக்கிய முடிவு அல்ல. மாறாக தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் இருந்த வெற்றிடத்தின் விளைவுதான் அது. ஸ்ராலினிச துடேக் கட்சியும் மற்றய மார்க்சிச குழுக்கள் என்று கூறிக் கொண்டவையும் தொழிலாள வர்க்கத்தை கொமெனியின் ஆட்சிக்கு ஈரானில் நடந்த புரட்சி ஒரு முதலாளித்துவ-ஜனாநாயகப் புரட்சி, எனவே தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கு பிரிவின் தலைமையில் நடக்க வேண்டும் என்று கூறிவிட்டன. முப்பது ஆண்டுகளுக்கு பின்னரும் ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளையும் எதிர்ப்பதற்கு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வது தான் மிக முக்கியமான வினாவாக உள்ளது. |