கடந்த வார தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இலங்கை ஜனாதிபதி
மஹிந்த இராஜபக்ஷ, அரசியல் எதிர்ப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு எதிரான வேட்டையை
விரிவுபடுத்தியுள்ளார்.
ஜனாதிபதியை கொலை செய்யவும் இராணுவ சதிப் புரட்சி மூலம் ஆட்சியைக்
கைப்பற்றவும் திட்டம் தீட்டியமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில், எதிர்க் கட்சிகளின் வேட்பாளரான
ஜெனரல் பொன்சேகாவை கைது செய்வது "விரைவில் நடக்கலாம்" என நேற்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி
வெளியிட்டுள்ளது. எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின்
(ஜே.வி.பி.) பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் பேரில் கடந்த டிசம்பரில் இராஜனாமா
செய்யும் வரை, பொன்சேகா நாட்டின் உயர்மட்ட ஜெனரலாக இருந்தார்.
இந்தப் பத்திரிகையின்படி, தேர்தல் தினமான ஜனவரி 26 அன்று மாலை சின்னமன்
லேக்சைட் ஹோட்டலில் பொன்சேகா, அவரது அலுவலர்கள் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்களும் மேற்கொண்ட
நடவடிக்கைகள் மீது குவிமையப்படுத்தி பல நாட்களாக ஒரு உயர்மட்ட பொலிஸ் விசாரணை நடைபெறுகிறது. கனமாக
ஆயுதம் தரித்த நூற்றுக்கணக்கான துருப்புக்களுடன் ஹோட்டலை சுற்றிவளைத்த இராணுவமும் பொலிசும் ஹோட்டலுக்கு
செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைவரையும் சோதனையிட்டனர்.
இந்த விசாரணை, இராஜபக்ஷவின் விசுவாசியான இலங்கை பொலிஸ் மா அதிபர்
மஹிந்த பாலசூரிய மற்றும் அரச புலனாய்வு சேவை ஆணையாளர் கீர்த்தி கஜநாயக்க தலைமையில் இடம்பெறுகிறது.
தேர்தலுக்கு சற்று முன்னதாகவே பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சீ.ஐ.டி.) தலைவராக
கஜநாயக்க நியமிக்கப்பட்டதோடு முன்னாள் சி.ஐ.டி. தலைவரான நந்தன முனசிங்க கொழும்புக்கு வெளியில்
வடமேல் நகரான மன்னாருக்கு இடம்மாற்றப்பட்டார்.
சீ.ஐ.டி. விசாரணையாளர்கள், சினமன் லேக்சைட் ஹோட்டலில் இருத்த
முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் அதேபோல் அப்போது அங்கிருந்த ஓய்வுபெற்ற
இராணுவ சிப்பாயையும் விசாரணைக்குட்படுத்தினர், என சண்டே டைம்ஸ் தெரிவித்தது. சில அறைகளில் ஆயுதங்கள்
பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக துப்பறிபவர்கள் கூறிக்கொண்டனர். முயற்சிக்கப்பட்ட சதிப்புரட்சி தொடர்பாக
அரசாங்கமோ, அரசுக்குச் சொந்தமான ஊடகமோ அல்லது பொலிசோ எந்தவொரு ஆதாரத்தையும்
முன்வைக்கவில்லை. அரசாங்கம் தேர்தலில் தோல்வியடைந்தால், அது ஆட்சியைப் பற்றிக்கொள்ள முயற்சிக்கும்
என்பது பற்றி ஆழமாக அக்கறைகொண்ட எதிர்க் கட்சிகள், பாதுகாப்புக்காக கூட்டாக ஹோட்டலுக்குள்
நகர்ந்திருந்ததாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
வெள்ளிக்கிழமை, கொழும்பில் உள்ள பொன்சேகாவின் அலுவலகத்தில் தேடுதல்
நடத்துவதற்காக பொலிஸ் கொமாண்டோக்களையும் சீ.ஐ.டி. துப்பறிபவர்களையும் அரசாங்கம் அனுப்பி வைத்தது.
15 ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்களை கைது செய்த பொலிஸ், கணினிகளையும் ஆவணங்களையும்
கைப்பற்றிக்கொண்டு அலுவலகத்துக்கும் சீல்வைத்தது. இதுவரை தேர்தல் பிரச்சாரத்தில் பொன்சேகாவுக்காக
வேலை செய்த 20க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பொன்சேகாவும் அவரது மருமகன் தனுன திலகரட்னவும் மற்றும் மேலும் ஏனைய
பலரும் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்குமாறு குடியகல்வு குடிவரவுத் திணைக்களத்துக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவிக்கின்றது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொன்சேகா வெளியேறுவதை தடுக்கும் அல்லது அவரை கைதுசெய்யும்
திட்டங்கள் எதுவுமில்லை என கடந்த வாரம் அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்த போதிலும், அந்த
மறுப்புக்கள் ஒன்றும் நேற்று மீண்டும் குறிப்பிடப்படவில்லை.
ஞாயிற்றுக் கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்திய பொன்சேகா, தன்னை
படுகொலை செய்வதற்கான முயற்சிகள் இருப்பதாக வலியுறுத்தினார். பாதுகாப்புப் படைகளால் தனக்கு வழங்கப்பட்டிருந்த
பாதுகாப்பு வசதிகள், 90 சிப்பாய்களில் இருந்து மூன்று பொலிஸார் மற்றும் ஒரு பொலிஸ் பரிசோதகர் வரை
குறைக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை அவர் சுட்டிக் காட்டினார். ஜனநாயக உரிமை மீறலை விமர்சித்த அவர் தெரிவித்ததாவது:
"நீதிமன்றத்துக்கோ, பொலிசுக்கோ போக முடியாது. எந்த நேரத்திலும் கைதுசெய்யப்படலாம். ஊடக சுதந்திரம்
கிடையாது. அனைவரும் அழுத்தத்தின் கீழ் இருப்பதோடு தமது கடமைகளை உரிமையுடன் செய்ய முடியாதவர்களாக
உள்ளனர்."
தான் கொல்லப்படுவதாக இருந்தால் அரசாங்கத்தின் "இரகசியங்களை"
வெளியிடுவதாக பொன்சேகா எச்சரித்தார். தான் ஒரு சத்தியக் கடதாசியை எழுதியிருப்பதாகவும் தனது
மரணத்தின் போது அது வெளியிடப்படும் என்றும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். தனது "இரகசியங்களை"
பொன்சேகா அம்பலப்படுத்தக் கூடும் என்று பீதியடைய இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஒவ்வொரு காரணமும் உண்டு.
நாட்டின் உயர்மட்ட ஜெனரல் என்ற வகையில், கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும்
வரை அவர்களுக்கெதிரான இனவாத யுத்தத்தை ஈவிரக்கமின்றி முன்னெடுத்ததோடு அவர் இராஜபக்ஷவின் குழுவிலும்
அங்கம் வகித்தார். அதன் மூலம் அவர், தானும் பொறுப்புச் சொல்ல வேண்டிய அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள்
மற்றும் ஜனநாயக உரிமை மீறல்களின் மறைவிடமாக இருக்கின்றார்.
பொன்சேகாவை மெளனியாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் ஒரு ஒரு
முக்கிய காரணம், ஆயிரக்கணக்கான பொது மக்களை இராணுவம் கொன்றமை சம்பந்தமான விபரங்களும் அரசாங்க
சார்பு கொலைப்படைகளின் இயக்கம் பற்றிய விபரங்களும் வெளிச்சத்துக்கு வராமல் இருப்பதை
உறுதிப்படுத்திக்கொள்வதாக இருக்கக்கூடும். ஆயினும், மிகவும் அடிப்படை பிரச்சினைகள் அடிநிலையில் உள்ளன. நாடு
ஆழமடைந்துவரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற நிலையில், நாட்டின் ஆளும்
தட்டுக்குள் கோஷ்டி மோதல் இடம்பெறுவதற்கான அறிகுறியே இராஜபக்ஷவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையிலான
உக்கிரமான மோதலாகும். இத்தகைய கசப்பான முரண்பாடுகள், கொழும்பு உட்பட இந்தப் பிராந்தியத்தில்
செல்வாக்கு செலுத்துவதற்காக மோதிக்கொள்ளும் பெரும் வல்லரசுகளின் -குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனா-
பரந்த போட்டிகளுக்குள் அகப்பட்டுக்கொள்கின்றது.
இந்த ஆழமான அரசியல் பிளவுகள் அரசியல் கட்சிகளையும் ஊடகங்களையும் பாதிப்பது
மட்டுமன்றி, அரச இயந்திரத்துக்குள்ளும் பாதுகாப்பு படைகளுக்குள்ளும் ஊடுருவுகின்றது. பெரும் இடைவெளியில்
வெற்றிபெற்றிருந்தாலும், தனது நிலையை பாதுகாத்துக்கொள்வது கடினம் என்பதையிட்டு இராஜபக்ஷ
பீதிகொண்டுள்ளார். பிரதான பதவிகளுக்கு இராஜபக்ஷ விசுவாசிகளை நியமித்ததுடன் இராணுவ உயர்மட்டத்தில்
ஏற்கனவே ஒரு குலுக்கல் தொடங்கியுள்ளது. தனது ஆதரவாளர்களாக இருந்த மூன்று மேஜர் ஜெனரல்கள், இரண்டு
பிரிகேடியர்கள் மற்றும் நான்கு கேனல்கள் உட்பட 13 இராணுவ சிப்பாய்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக
பொன்சேகா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பிரிகேடியர் துமிந்த கெப்பட்டிவலான, கடந்த ஆண்டு ஜனவரியில் சண்டே லீடர்
பத்திரிகையின் ஆசிரியர் லசன்த விக்கிரமதுங்க கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என குற்றஞ்சாட்டி அவரை
கைதுசெய்துள்ளதாக பொன்சேகா மேலும் தெரிவித்தார். அம்பாறை இராணுவ பயிற்சி பாடசாலையில்
தற்போதைய கட்டளை அதிகாரியாக இருக்கும் கெப்பட்டிவலான, பொன்சேகா இராணுவத் தளபதியாக இருக்கும்
போது அவருக்கு இராணுவ உதவியாளராக சேவையாற்றினார். இராஜபக்ஷ அரசாங்கத்தை விமர்சித்த லசன்த
விக்கிரமதுங்க, பட்டப்பகலில் அலுவலகத்துக்கு வாகனத்தை ஓட்டி சென்றபோது கொல்லப்பட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் (புனர்வாழ்வு) ஆணையாளர் நாயகமாக சேவையாற்றிய
மேஜர் ஜெனரல் தயா ரட்னாயக்க, புதிய பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்ப்டடுள்ளார் -இது
இராணுவத் தளபதிக்கு அடுத்து இராணுவத்தில் இரண்டாவது முக்கிய பதவியாகும். அவர் மேஜர் ஜெனரல் மென்தக
சமரசிங்கவுக்கு பதிலீடாகவே நியமிக்கப்பட்டுள்ளார். மெந்தக சமரசிங்க (கூட்டுத் திட்டமிடல்) ஆனையாளர் நாயகம்
என்ற ஒரு நிர்வாக பதவிக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பொன்சேகாவின் "சதி முயற்சியுடன்" தொடர்புடையவர்களாக பல அலுவலக
ஊழியர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி தெரிவித்தது. அரசுக்குச்
சொந்தமான லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் எட்டு ஊழியர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோடு மேலும்
பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அந்தச் செய்தி மேலும் தெரிவித்தது. முன்னர், சகல செய்தி
வெளியீட்டிலும் சவால் செய்ய முடியாத அரசாங்க கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதன் பேரில், தேர்தல்
தினத்தன்றும் மற்றும் அடுத்த நாளுமாக இரண்டு நாட்கள் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக விடுமுறையில் செல்ல
நெருக்கப்பட்டார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, இராஜபக்ஷ அரசுக்குச் சொந்தமான ஊடகத்தை
தனது பிரச்சார வாகனமாக வெட்கமற்று பயன்படுத்திக்கொண்டார். இந்தப் புதிய விசாரணைகள்,
தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை வெளியீடுகளை முழு அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ்
கொண்டுவருவதை இலக்காக் கொண்டதாகும். லேக் ஹவுஸ் நிறுவனம் ஞாயிற்றுக் கிழமை வெளியிடும் ஆங்கில
பத்திரிகையான நேற்றைய சண்டே ஒப்சேவரில் வெளியான குறிப்பில் இந்த வெளியீடுகளின் தனித்தன்மை
வெளிப்பட்டுள்ளது. "கற்பனை முடிவுக்கு வந்த நிலையில் துரோகி அவமதிப்பை ஏற்றுக்கொள்கிறார்" என அந்தக்
கட்டுரைக்கு தலைப்பிடப்பட்டிருந்தது. புறநிலைமையை பற்றி சாக்குப்போக்கு எதுவும் காட்டாத அந்தக் கட்டுரை,
பாதுகாப்புப் படைகளை அவமதித்து, நாட்டை இழிவுபடுத்தியதோடு "அதிகாரத்தைக் கைப்பற்ற ஒட்டு மொத்த
தாக்குதலை தொடுக்கவும்", இராஜபக்ஷவை சிறைவைக்கவும் மற்றும் அவரது சகோதரர்களை சிரச்சேதம்
செய்யவும் திட்டமிட்டதாக பொன்சேகா மீது குற்றஞ்சாட்டுகிறது.
அரசுக்கு சொந்தமான ஊடகங்களால் சட்டத்திலிருந்து விலக்களிப்புடன் அத்தகைய
செய்திகளை வெளியிட முடிந்துள்ளதுடன் மட்டுமன்றி, அதை சவால் செய்யும் எவரும் துரோகியாக
நடத்தப்படுகிறார். அரசாங்க சார்பற்ற ஊடகத்தின் மீது பாய்வது தொடர்கின்றது. சனிக்கிழமை, "சதிப்புரட்சி"
முயற்சியில் சம்பந்தப்பட்டிருப்பது சம்பந்தமாக விசாரிப்பதாக கூறி, ஜே.வி.பி.-சார்பு லங்கா பத்திரிகையின்
ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டார். பத்திரிகையின் அலுவலகத்துக்கும்
அச்சகத்துக்கும் சீ.ஐ.டி. யினர் சீல் வைத்தனர்.
அரசாங்கம், சர்வதேச விமர்சனங்களுக்கு மத்தியில், டி.ஆர்.எஸ். என்ற சுவிஸ்
வானொலி பொய்யான தகவலின்படி செயற்படுவதாக கூறி, அதன் தெற்காசிய செய்தியாளரான கரின் வென்கரை
வெளியேற்ற எடுத்த முடிவை கைவிட்டது. "தொந்தரவான கேள்விகளை" கேட்டதனாலேயே தன்னை வெளியேற்ற
முனைகின்றனர் என தான் நம்புவதாக வென்கர் தெரிவித்தார். பிரித்தானியாவை தளமாகக் கொண்ட டைம்ஸ் ஊடகத்தின்படி,
பொன்சேகா இருந்த ஹோட்டலை சுற்றி துருப்புக்கள் நிலைகொண்டிருப்பது ஏன் மற்றும் ஜனாதிபதியின் சகோதரரும்
ஆலோசகருமான பசில் இராஜபக்ஷ, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக தேர்தல் ஆணையாளரை
சந்தித்தது ஏன் என வென்கர் கேள்வியெழுப்பியுள்ளார். அவர் அங்கு சென்றதை அலுவலர்கள் மறுத்த போதிலும்,
அப்போது அவர் ஆணையாளரின் அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது தான் கண்டதாக வென்கர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் ஆளும் கூட்டணியின் நிலைமையை பலப்படுத்திக்கொள்ளவும் இராஜபக்ஷ
முயற்சிக்கின்றார். இராஜபக்ஷ ரஷ்யாவுக்கு அரச விஜயம் ஒன்றுக்காக வெளியேறுவதற்கு முன்னதாக பெப்பிரவரி 5
அன்று பாராளுமன்றத்தை கலைக்கத் தயாராகி வருவதாக சனிக்கிழமை ஜனாதிபதியின் பேச்சாளர் லுசியன் இராஜ
கருணானாயக்க அறிவித்தார். பொதுத் தேர்தல்கள் ஏப்பிரலிலேயே நடத்தப்படவேண்டியுள்ள போதிலும், எதிர்க்
கட்சி உறுப்பினர்களில் உள்ள அலங்கோலத்தை பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் விரும்புவது தெளிவாகிறது.
சர்வதேச நாணய நிதியம் கோரும் வயிற்றிலடிக்கும் திட்டங்களை அமுல்படுத்துகின்ற
நிலையில், அதிருப்தி வளர்ச்சியடைந்து வருவது பற்றி அரசாங்கம் தெளிவாக கவலை கொண்டுள்ளது. இந்தக் காரணத்துக்காகவே
இராஜபக்ஷ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலுக்கு அழைப்புவிடுத்தார். இப்போது அவர் தனது முதலாவது
ஆட்சிக் காலத்தில் எஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகளையும் அதே போல் இரண்டாவது ஆட்சிக்காலமான ஆறு ஆண்டுகளையும்
சேர்த்து எல்லாமாக எட்டு ஆண்டுகள் தனது ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக்கொள்ள நீதிமன்றத்தை நாட முயற்சிக்கின்றார்.
இந்த நகர்வானது எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்பட்ட பொலிஸ் அரச
ஆட்சியை பலப்படுத்துவதற்கான இன்னுமொரு அறிகுறியாகும். ஏறத்தாழ இராஜபக்ஷவின் பொருளாதார மற்றும்
அரசியல் வேலைத்திட்டத்தைப் போன்றதொரு வேலைத்திட்டத்தையே கொண்டுள்ள ஜெனரல் பொன்சேகா வெற்றிபெற்றிருந்தால்,
இதே முறையிலேயே செயற்பட்டிருப்பார்.