ஜனாதிபதி மஹிந்தி இராஜபக்ஷ, செவ்வாய் கிழமை நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற
பின்னர், தனது அரசியல் எதிரிகள் மீதான பரந்த தாக்குதலுடன் இரண்டாவது முறையை ஆரம்பிக்கின்றார். கணிசமான
வாக்கு இடைவெளியில் வெற்றி பெற்ற போதும், ஆளும் வட்டாரத்திலான தொடரும் கூர்மையான பிளவின் மத்தியிலும்
மற்றும் வாழ்க்கைத் தரம் சீரழிவது தொடர்பான பரந்த வெகுஜன அதிருப்தி மற்றும் சீற்றத்தின் மத்தியிலும் இராஜபக்ஷவின்
நிலைமை பலவீனமாக இருக்கின்றது.
வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஊர்கவாற்துறை தீவில், எதிர்க் கட்சி
வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அல்லது சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வேட்பாளர்
விஜே டயசுக்கு வாக்களித்தார்கள் என தாம் கருதும் மக்களை அச்சுறுத்துவதற்காக, வியாழக் கிழமை மாலை ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) குண்டர் கும்பலை அணிதிரட்டியது. பெருமளவானவர்கள் சரீர ரீதியில்
தாக்கப்பட்டுள்ளனர். சோ.ச.க. யின் ஆதரவாளர்களில் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது
மருத்துவ நிலைமை தெரிய வரவில்லை. குண்டர் நடவடிக்கைகளுக்கு பேர் போன் ஈ.பி.டி.பி., இராஜபக்ஷவின்
ஆளும் கூட்டணியின் பங்காளியாகும். (கிடைக்கும் போது மேலும் தகவல்கள் பிரசுரிக்கப்படும்)
ஊர்காவற்துறையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒரு பரந்த எடுத்துக்காட்டாகும். நேற்று
மாலை மத்திய கொழும்பில் உள்ள எதிர்க் கட்சி வேட்பாளரான பொன்சேகாவின் தேர்தல் அலுவலகத்தில் விசேட
அதிரடிப் படையைச் சேர்ந்த சுமார் 150 பொலிஸ் கமாண்டோக்கள் தேடுதல் நடத்தினர். இராணுவத்தில் இருந்து
தப்பி வந்தவர்களையும் சட்ட விரோதமான ஆயுதங்களையும் தேடுவதாக இதற்கு சாக்குச் சொல்லப்பட்டது.
ஐந்து மணித்தியாலங்களாக தொடர்ந்த இந்த தேடுதல் நடவடிக்கை, ஆறு
அலுவலர்கள் உட்பட, ஓய்வுபெற்ற 15 இராணுவச் சிப்பாய்களை கைது செய்வதுடன் முற்றுப்பெற்றது.
கைதுசெய்யப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். கணினி ஹார்ட்
டிஸ்குகள், செல் போன்கள் மற்றும் சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி.) உப தலைவரான கரு
ஜயசூரிய, இந்தத் தேடுதலின் போது ஆயுதங்களோ வெடி பொருட்களோ கண்டு பிடிக்கப்படவில்லை என
நிருபர்களுக்குத் தெரிவித்தார். "அவர்கள் [தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்] அனைவரும் அலுவலர்கள் மற்றும்
சேவையில் இருந்து ஓய்வுபெற்ற உறுப்பினர்களுமாவர் என நாம் அவர்களுக்குக் கூறினோம்," என அவர்
தெரிவித்தார்.
வியாழக்கிழமை, தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் ஆணையாளர்
நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறுகையில், சதிப் புரட்சி ஒன்றை நடத்தவும் ஜனாதிபதி மற்றும் அவரது
சகோதரரும் நாட்டின் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷ உட்பட இராஜபக்ஷ குடும்பத்தின்
உறுப்பினர்களை படுகொலை செய்யவும் பொன்சேகாவால் தீட்டப்பட்டிருந்த திட்டம் பாதுகாப்புப் படையினரால்
கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பொன்சேகா, "இரு பிரசித்திபெற்ற ஹோட்டல்களில் 70 அறைகளை
ஒதுக்கியிருந்ததோடு ஜனாதிபதியையும் அவரது குடும்ப அங்கத்தவர்களையும் படுகொலை செய்வதற்காக ஓய்வு
பெற்ற இராணுவ அலுவலர்களையும் மற்றும் இராணுவத்தை விட்டு ஓடியவர்களையும் ஒன்றுகூட்டி வைத்திருந்தார்" என
ஹுலுகல்ல பிரகடனம் செய்தார். தனது ஊதாரித்தனமான கூற்றுக்களை ஒப்புவிக்க ஆதாரங்களை காட்டாத அந்த
பேச்சாளர், இந்த சதி வேலையில் பொன்சேகா சம்பந்தப்பட்டிருப்பது ஒப்புவிக்கப்பட்டால் அவர் கைது
செய்யப்படுவார் என மேலும் தெரிவித்தார்.
செவ்வாய் கிழமை மாலை, பொன்சேகாவும் அவரது ஆதரவாளர்களும் தங்கியிருந்த
சின்னமன் லேக்சைட் ஹோட்டலை கனமாக ஆயுதம் தரித்த நூற்றுக்கணக்கான சிப்பாய்கள் சுற்றி வளைத்தனர்.
இராணுவத்தை விட்டோடியவர்களை துருப்புக்கள் தேடுகின்றன என்ற அரசாங்கத்தின் கூற்றுடன், இந்த பதட்டமான
விட்டுக்கொடுப்பற்ற நிலைமை புதன் கிழமையும் தொடர்ந்தது. எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை. தன்னை
கைதுசெய்ய தயாராவதாக பொன்சேகா இராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டினார்.
ஹுலுகல்லவின் அறிக்கையின் பின்னர், எந்தவொரு சதித் திட்டமும் கிடையாது என
பொன்சேகா முழுமையாக மறுத்தார். "இது பணியில் இருக்கும் அலுவலர்களின் சதியாக இருக்கும். ஜனாதிபதியின்
அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்தவாறு ஒரு சதித் திட்டத்தை தீட்டுமளவு நான்
முட்டாள்தனமானவன் என அரசாங்கம் சிந்திக்கின்றது," என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இராஜபக்ஷவை
விட 18 வீதம் குறைவான வாக்குளைப் பெற்றிருந்த போதிலும், தான் தேர்தலில் வெற்றிபெற்றதாக வலியறுத்திய
ஜெனரல், பெறுபேறுகளை சவால் செய்யத் திட்டமிடுவதாகவும் தெரிவித்தார்.
"நாம் தேர்தல் ஆணையாளருக்கு கடிதமொன்று அனுப்பியுள்ளதோடு இந்த தேர்தல்
முடிவுகளின் நம்பகத்தன்மையை சவால் செய்து நீதிமன்ற நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளோம். ஆரம்ப கட்டத்தில்
அவரை விட நான் 1.4 மில்லியன் வாக்குகளால் முன்னணியில் இருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவித்தன.
இந்த தொகை ஜனாதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது," என பொன்சேகா கூறினார்.
தனது பாதுகாப்பு வசதிகளை அகற்றியதன் மூலம் தனது தனிப்பட்ட பாதுகாப்பை
கீழறுத்துள்ளதாக பொன்சேகா அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டினார். "அவர்கள் என்னை நான்கு
பொலிஸ்காரர்களோடு விட்டுள்ளதோடு நிராயுதபாணி பொது மக்களை வைத்துக்கொள்வதை நாடத்
தள்ளப்பட்டுள்ளேன். 70 பேர் அடங்கிய எனது பாதுகாப்புப் பிரிவு எப்போதும் குறைக்கப்படக் கூடாது என உயர்
நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. ஆயினும் இந்த ஜனாதிபதி நாட்டின் சட்டத்தை மதிப்பவர் அல்ல.
வியாழக்கிழமை, பாதுகாப்புச் செயாலளர் கோடாபய இராஜபக்ஷ, இன்னுமொரு
சட்ட ரீதியான அச்சுறுத்தலை விடுத்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களை கொல்வதற்கு
பாதுகாப்புச் செயலாளர் கட்டளையிட்டதாக பிரச்சார காலத்தின் போது குற்றஞ்சாட்டியது சம்பந்தமாக
பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அரசாங்கம் சிந்திப்பதாக அவர் பி.பி.சி.க்குத் தெரிவித்தார்.
பொன்சேகா பின்னர் குற்றச்சாட்டை விலக்கிக்கொண்ட அதே வேளை, கடந்த மே மாதம் யுத்தத்தின் கடைசி
நாட்களில் சர்வதேச ஊடகங்களில் வந்த செய்திகளில் தன்னை தவறாக மேற்கோள் காட்டிவிட்டதாகக் கூறினார்.
விலக்கிக்கொண்டதை ஏளனஞ்செய்த இராஜபக்ஷ தெரிவித்ததாவது: "நாங்கள் சட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவோம்.
அவர் குறிப்பிட்ட சட்டங்களை மீறியிருந்தால் நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம்."
அரசாங்கம் யுத்தக் குற்றங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக குறிப்பாக
நுண்னுணர்வுடன் உள்ளது. புலிகளின் தோல்வியுடன், ஜனாதிபதி இராஜபக்ஷ மீது அழுத்தம் கொடுக்கவும் மற்றும்
கொழும்பில் வளர்ச்சியடைந்து வரும் சீனாவின் செல்வாக்கை கீழறுக்கவும் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய
பங்காளிகளும் இந்த விவகாரத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தன. உண்மையில், இராஜபக்ஷவும் மற்றும்
தேர்தலில் போட்டியிடுவதற்காக டிசம்பரில் இராஜனாமா செய்யும் வரை நாட்டின் உயர்மட்ட ஜெனரலாக இருந்த
பொன்சேகாவும், யுத்தக் குற்றங்களுக்கும் திட்டமிட்ட அடிப்படை ஜனநாயக உரிமை மீறல்களுக்கும்
பொறுப்பாளிகளாவர்.
பொன்சேகாவுக்கு எதிரான அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள், ஊடகங்களை
இலக்குவைத்த பரந்த பிரச்சாரத்தின் பகுதியாகும். சர்வதேச ஊடக கண்காணிப்பகமான, எல்லைகளற்ற
பத்திரிகையாளர்கள் அமைப்பு, பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தலுக்கு முடிவுகட்டுமாறு நேற்று இராஜபக்ஷவை
கேட்டுக்கொண்டது. "தேர்தலுக்குப் பின்னரான இந்த வன்முறை அலை, ஜனாதிபதி இராஜபக்ஷவின் இரண்டாவது
பதவிக்காலத்தின் தொடக்கத்தின் மீது மோசமான கறையை பூசக் கூடும் மற்றும் அடுத்து வரும் ஆண்டுகளில் அரசியல்
காலநிலைக்கு தீமையை முன்னறிவிக்கிறது," என அந்த அறிக்கை தெரிவித்தது.
ஜனவரி 26 அன்று அவதூறு செய்யும் வகையிலான கட்டுரையொன்றை பிரசுரித்ததாகக்
கூறி, லங்கா பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த நேற்று மாலை கைதுசெய்யப்பட்டார். இந்த செய்திப்
பத்திரிகை யூ.என்.பி. உடன் சேர்ந்து பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்த எதிர்க் கட்சியான மக்கள்
விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி.) சம்பந்தப்பட்ட பத்திரிகையாகும். வியாழக் கிழமை, ஜே.வி.பி. தலைவர்
சோமவன்ச அமரசிங்க, தன்னைக் கொல்வதாக அச்சுறுத்துவதாகவும் லங்கா செய்திப் பத்திரிகையின்
அலுவலகத்துக்கு தீ மூட்டுவதாகவும் அச்சுறுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் இராஜபக்ஷ மீது
குற்றஞ்சாட்டினார்.
வியாழக் கிழமை மாலை, சீருடை அணியாத பொலிசாரால் லங்கா ஈ நியூஸ்
இணையத்தின் அலுவலகம் சீல் வைக்கப்பட்டமை ஏனைய சம்பவங்களில் அடங்கும். இந்த வலைத் தளம், முன்னரே
அரச தொலைத் தொடர்பு நிறுவனமான ஸ்ரீலங்கா டெலிகொம்மால் தடை செய்யப்பட்டிருந்தது. அதே வியாழக்
கிழமை, அரச கூட்டுத்தாபனமான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியாளர் ரவி அபேவிக்கிரம
நிலையத்தின் அலுவலரால் தாக்கப்பட்டார். ஒலிபரப்பு நிலைய தலைவரால் வழங்கப்பட்ட இராஜபக்ஷவுக்கு
ஆதரவான பக்கச் சார்பான தேர்தல் செய்தி வெளியீட்டை விமர்சித்ததாலேயே அவர் தாக்கப்பட்டுள்ளார்.
தனது வெற்றிப் பேச்சின் போது இராஜபக்ஷ பிரகடனம் செய்ததாவது: "இன்றுமுதல்
எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்குமான அனைவருக்கும் நான் ஜனாதிபதி." யதார்த்தத்தில்,
அடுத்த ஏப்பிரலில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் எதிர்ப்புக்களை நசுக்க அரச
இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்த இராஜபக்ஷ தயங்கப் போவதில்லை. சர்வதேச நாணய நிதியம்
கோரியுள்ள வயிற்றிலடிக்கும் திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்துகின்ற நிலையில், ஊடக விமர்சகர்களுக்கு எதிரான
இந்த நடவடிக்கைகள், களஞ்சியத்தில் என்ன உள்ளது என்பது பற்றி தொழிலாளர்களுக்கு விடுக்கும் தெளிவான
எச்சரிக்கையாகும்.
தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆறு மாதங்களுக்குள் நாட்டின் மொத்த
தேசிய வருமானத்தை இரு மடங்காக்குவதாக இராஜபக்ஷ பெருமையாகக் கூறிக்கொண்டார். தேர்தல்
பிரச்சாரத்தின் போது மின்சார நிலையங்கள், புதிய துறைமுகங்கள் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்பு
போன்றவற்றின் பிரமாண்டமான படங்களுடன் அவர் களத்தில் தோன்றினார். உண்மையில், பெரும் இராணுவச்
செலவின் விளைவாக ஏற்பட்ட பிரமாண்டமான கடனுடன் நாடு மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை
எதிர்கொள்கின்றதுடன், அதன் ஏற்றுமதிகளுக்கான சந்தை சுருங்குவதையும் எதிர்கொள்கின்றது.
அரசாங்கம் கடந்த ஆண்டு ஜூலையில் அந்திய செலாவனி பற்றாக்குறை ஏற்படுவதை
தடுக்க சர்வதேச நாணய நிதியத்திடம் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறத் தள்ளப்பட்டது.
இந்தக் கடனுக்கான நிபந்தனைகளில், வரவு செலவுப் பற்றாக்குறையை அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொத்த தேசிய
வருமானத்தின் 4 வீதத்துக்கு சமமாகக் குறைப்பதும், மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
உட்பட அரசுக்குச் சொந்தமான பிரதான கூட்டுத்தாபனங்களை மறுசீரமைப்பதும், உயர்ந்த வரிகளை விதிப்பதும்
அடங்கும்.
"பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே" தான் முன்னுரிமை அளிப்பதாக இராஜபக்ஷ
கூறிக்கொள்கின்றார். இது நடைமுறையில் எதை அர்த்தப்படுத்துகிறது எனில், உழைக்கும் மக்களதும் கிராமப்புற
வெகுஜனங்களதும் சமூக நிலைமைகள் மீது கொடூரமான தாக்குதலை தொடுப்பதையே ஆகும். இது தவிர்க்க
முடியாமல் எதிர்ப்பைக் கிளப்பிவிடும். கடந்த மே மாதம், புலிகள் தோல்வியடைந்த போதும், இராஜபக்ஷ
அவசரகால நிலைமையை இன்னமும் அமுலில் வைத்திருக்கின்றார். அவசரகால விதிகளின் கீழ் ஊடக தணிக்கையை
விதிக்க, தொழிற்சங் நடவடிக்கைகளை தடை செய்ய மற்றும் விசாரணைகள் இன்றி கைது செய்யவும் ஜனாதிபதிக்கு
அதிகாரம் வழங்கப்படுகிறது.
இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) பொதுச் செயலாளர்
மைத்ரிபால சிறிசேன, நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது இப்போது ஒரு
விவகாரமாக இல்லை, என வியாழக்கிழமை பிரகடனம் செய்தார். தன்னை ஒரு ஜனநாயகவாதியாக காட்டிக்கொள்ளும்
முயற்சியில், இந்தப் பதவியை ஒழிப்பதாக பொன்சேகாவும் கூறிக்கொண்டார். அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கவும்,
அமைச்சர்களை பதவி விலக்கவும் மற்றும் அரசாங்கத்தை பதவி விலக்கவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால்
முடியும்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி அமைச்சு ஆகிய இரு பதவிகளையும் தன் வசம்
வைத்துள்ள இராஜபக்ஷ, பாராளுமன்றத்தையும் அமைச்சரவையையும் வரையறுப்பதற்கு நிறைவேற்று அதிகாரம்
கொண்ட ஜனாதிபதி முறையை சுரண்டிக்கொண்டார். அவர் தனது சகோதரர் கோடாபய, ஜெனரல்கள் மற்றும்
அரசியல் பங்காளிகள் உட்பட உயர்மட்ட அதிகாரத்துவவாதிகள் அடங்கிய ஒரு குழுவின் மூலம் ஆட்சியை கையாண்டார்.
அவரது நாண்கு ஆண்டுகால ஆட்சியின் போது, அவர் அரசியலைமப்பு மற்றும் சிரேஷ்ட அரசாங்க நியமனங்களை மேற்பார்வை
செய்வதற்கான அரசியலமைப்புப் பேரவையை ஸ்தாபிக்கக் கோரும் 17வது திருத்தச்சட்டம் உட்பட உயர் நீதிமன்ற
தீர்ப்புக்களையும் பகிரங்கமாக மீறினார். புலிகளின் தோல்வியின் பின்னர் இராஜபக்ஷவுடன் முரண்படும்வரை பொன்சேகாவும்
ஜனாதிபதியின் குழுவில் அங்கம் வகித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை பாதுகாத்த சிறிசேன, பாராளுமன்றத்தை
கையாளும் "எதிரிகளை" வெளியேற்றுவதற்கு அது உதவியாக இருந்தது என அவர் பிரகடனம் செய்தார். அவரது
குறிப்புக்கள், இராஜபக்ஷ, தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தனது "பொருளாதார யுத்தம்" என அவர்
விவரித்ததுடன் முன்செல்லும் போது, பாராளுமன்றம், சட்ட முறைமை மற்றும் அரசியலைமைப்பின் மீது இரும்புக்
கால்களுடன் சவாரி செய்வார் என்பதற்கான தெளிவான அறிகுறியே ஆகும்.