World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP condemns EPDP thuggery on Kayts

ஊர்காவற்துறையில் EPDP இன் குண்டர் தாக்குதலை இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி கண்டனம் செய்கின்றது

By the Socialist Equality Party (Sri Lanka)
1 February 2010

Back to screen version

26ம் தேதி ஜனாதிபதித் தேர்தலை அடுத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குண்டர்கள் கடந்த வியாழனன்று, வடக்கு இலங்கையிலுள்ள ஊர்காவற்துறையில் நடத்திய அட்டூழியங்களை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது. மிகக் குறைந்த அளவில் வாக்குப்பதிவு நடந்தது பற்றியும், ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவிற்கு ஆதரவு இல்லாதது தெளிவான நிலைமையிலும், ஒரு ஈ.பி.டி.பி கும்பல் டஜன் கணக்கான இளைஞர்களையும் முதியவர்களையும் தாக்கியதோடு, வாக்குப் போடாததற்கு அவமதித்ததுடன், எதிர்த்தரப்பு வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அல்லது சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் விஜே டயசுற்கு வாக்களித்ததற்காக திட்டித்தீர்த்துள்ளது.

ஒரு தமிழ் அரசியல் கட்சியான ஈ.பி.டி.பி. ஊர்காவற்துறையிலும் மற்றும் அயலில் உள்ள தீவுகளிலும் இராணுவத்துடன் நெருக்கமாக செயற்படும் ஒரு துணைப்படைக் குழுவை வைத்துள்ளது. இந்தக் கட்சி இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதோடு அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஒரு அமைச்சரவை அமைச்சராவார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இராஜபக்ஷ அரசாங்கம் தொடங்கியதில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக, உள்ளூர் மக்களை அச்சுறுத்துவதிலும் தொந்தரவு செய்வதிலும் இராணுவத்துடன் நெருக்கமாக இயங்கிவந்துள்ளது.

ஜனவரி 28 அன்று சுமார் மாலை 5 மணியளவில், ஹை-எஸ் வான் ஒன்றில் ஊர்காவற்துறை தீவில் அம்பிகைநகர், செட்டிப்புலம், வேலனை ஏழாம் வட்டாரம், துறையூர் மற்றும் புளியங்கூடல் ஆகிய கிரமாங்களுக்கு ஈ.பி.டி.பி. யின் கும்பலொன்று பயணித்துள்ளது. இங்கு பெரும்பாலான கிராமத்தவர்கள் வறிய மீனவர்களாவர். இந்தக் குண்டர்கள் பெரிய மரப்பொல்லுகளை வைத்திருந்தனர்.

இந்தக் கும்பல் முதலில் கிராமத்தவர்களை வாக்காளிக்காமைக்காக குற்றஞ்சாட்டியது. தாம் வாக்களித்தமையை உறுதிப்படுத்த கையில் இடப்படும் மை அடையாளத்தை கிராமத்தவர்கள் காட்டிய போது, அதை நிராகரித்த குண்டர்கள், "நீங்கள் தேர்தலில் பொன்சேகாவுக்கு வாக்களித்துள்ளீர்கள், நீங்கள் கத்தரிக்கோலுக்கு [சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் சின்னம்] வாக்களித்துள்ளீர்கள், நாங்கள் கடந்த காலத்தில் உங்களுக்கு உதவியுள்ளோம், நீங்கள் எங்களுக்கும் அரசாங்கத்துக்கும் கைமாறு செய்யவில்லை," என திட்டினர்.

ஈ.பி.டி.பி. குண்டர்கள், ஒவ்வொரு கிராமமாகச் சென்று எந்தவொரு சிறிய ஆத்திரமூட்டலும் இன்றி, வீதியில் சென்ற ஆண் கிராமத்தவர்களை அடித்தனர். பல டசின் கணக்கானவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவ சிகிச்சை பெற முயன்றாலும், மேலதிக தாக்குதல்களுக்கு பயந்து மருத்துவமனைக்கு செல்லவில்லை என உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தனர். இதே காரணத்துக்காக, மருத்துவமனைக்கு சென்றவர்களும், தாக்கியவர்களின் பெயரும் அவர்களது அரசியல் தொடர்பும் தெரிந்திருந்தும் பொலிசில் முறைப்பாடு செய்யாமல் இருந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை, அதே கும்பல் அம்பிகை நகருக்கு வந்துள்ளது. உள்ளூர் மக்களின் சினத்தைப் பற்றி தெளிவாக எச்சரிக்கை அடைந்த அந்தக் கும்பலின் தலைவர், கடற்படை புலனாய்வுத்துறையினர் மக்களை சுடுவதற்கு தீட்டியிருந்த திட்டத்தை தவிர்க்கவே தனது குண்டர்கள் இத்தகைய வன்முறையை மேற்கொண்டதாக கேலிக்கூத்தாக கூறியுள்ளார். உண்மையில், ஊர்காவற்துறையில் கடற்படை புலனாய்வுத்துறையின் ஒரு இணைந்த பகுதியாகவே ஈ.பி.டி.பி. இயங்குகிறது.

வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் வந்த ஈ.பி.டி.பி. யினர், வடக்கின் பிரதான நகரான யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை நடக்கவுள்ள ஆர்ப்பாட்டம் ஒன்றில் கிராமத்தவர்கள் பங்கேற்க வேண்டும் என கோரியுள்ளனர். சிலர் ஏன் என கேள்வியெழுப்பிய போது, அவர்களை கேள்விகள் கேட்க வேண்டாம் என கூறியதோடு வியாழக்கிழமை நடந்த குண்டர் மற்றும் வன்முறைத் தாக்குதலையும் அவர்களுக்கு நினைவூட்டியுள்ளனர்.

சனிக்கிழமை ஈ.பி.டி.பி. யின் ஹர்த்தால் அல்லது பொது கடையடைப்பு என்பது, யாழ்ப்பாணத்தில் அராசங்கத்துக்கு குறைந்த வாக்குகளே கிடைத்ததால், தான் பதவி விலகப் போவதாக நாடகம் நடத்திய கட்சி தலைவர் தேவானந்தாவுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்காக வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். ஈ.பி.டி.பி. கடைகளை மூடுமாறும் போக்குவரத்து சேவைகளை நிறுத்துமாறும் அழுத்தம் கொடுத்தது. பாதுகாப்பு படைகள் நிலைமையை வழமைக்குத் திருப்புமாறு கேட்டவுடன் கட்சி உடனடியாக ஆர்ப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

கடந்த வார வாக்கெடுப்பு, யாழ்ப்பாணத்தில் பொன்சேகாவுக்கும் இராஜபக்ஷவுக்கும் ஒரு அழிவுகரமான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி என்ற வகையில் இராஜபக்ஷவும் அவரது உயர்மட்ட இராணுவத்தளபதி என்ற முறையில் பொன்சேகாவும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கை நாசம் செய்த யுத்தத்துக்கு பொறுப்பாளிகளாவர். கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் தோல்வியானது "சமாதானத்தையும் சுபீட்சத்தையும்" கொண்டுவரவில்லை. மாறாக, இராணுவ ஆக்கிரமிப்பை பலப்படுத்தியுள்ளது. இரு முதலாளித்துவ வேட்பாளர்கள் மீதும் அதிருப்தி கண்டுள்ள 74 சதவீதமான வாக்காளிக்க தகுதியானவர்கள் வாக்களிக்கவேயில்லை

பொன்சேகாவுக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவரை ஒரு "குறைந்த தீங்காக" கருதியே வாக்களித்துள்ளார்கள். விடுதலைப் புலிகள் தோல்வியடைவதற்கு முன்னர் அவர்களின் அரசியல் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இப்போது கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் ஒரு இடத்தை எதிர்பார்த்து, பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டது. தேர்தல் தினத்தன்று, பிரதேசத்தில் தீவிரமான பதட்ட நிலைமையை குறிக்கும் விதத்தில் யாழ்ப்பாணத்தில் பல குண்டுகள் வெடித்தன.

வடக்கில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தொகுதிகளில் ஊர்காவற்துறையில் மட்டுமே பொன்சேகாவை விட இராஜபக்ஷ ஒரு குறுகிய பெரும்பான்மையை பெற்றுள்ளார். அது நிச்சயமாக இராஜபக்ஷ மற்றும் ஈ.பி.டி.பி. மீதான வெகுஜன ஆதரவினால் கிடைத்ததல்ல. ஈ.பி.டி.பி. முறைகேடான வாக்களிப்பில் ஈடுபட்டதாக பலர் எமது வலைத் தளத்துக்குத் தெரிவித்தனர். தீவின் பெரும்பகுதி கடற்படையின் இறுக்கமான கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

மாவட்டத்தில் தனது கட்சி அவமானத்துக்குரிய தோல்வியை கண்ட போதிலும், இறுதியாக ஈ.பி.டி.பி. தலைவர் தேவானந்தா பதவி விலகவில்லை. அவர் யாழில் வெளிவரும் தினக்குரலுக்கு "மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டதால் அவர்கள் ஜனாதிபதிக்கு [இராஜபக்ஷவுக்கு] வாக்களிக்கவில்லை. என்னை இராஜனாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதியும் மக்கள் பிரதிநிதிகளும் கேட்டுக்கொண்டதால் நான் இராஜினாமா செய்யவில்லை." எனத் தெரிவித்ததார்.

ஊர்காவற்துறையிலோ அல்லது ஏனைய இடங்களிலோ தமிழர்கள் மத்தியில் ஈ.பி.டி.பி. இற்கு கணிசமான ஆதரவும் கிடையாது. அரசாங்கத்தை ஆதரிக்குமாறு மக்களுக்கு இலஞ்சம் கொடுக்கவும், அது முடியாத போது அவர்களை தொந்தரவு செய்யவும் மற்றும் குண்டர் நடவடிக்கைகளை பயன்படுத்தவும் அரசாங்கத்தின் கூலியில் தங்கியிருக்கும் அரசியல் குண்டர் கும்பல் அமைப்பாக இந்தக் கட்சி சீரழிந்து போயுள்ளது.

அரசாங்கத்தின் யுத்தத்தை இடைவிடாமல் எதிர்க்கும் மற்றும் வடக்கு, கிழக்கில் இருந்து சகல பாதுகாப்பு படைகளையும் திருப்பியழைக்க கோரும் சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு குறிப்பிடத்தக்க இலக்காக இருந்து வந்துள்ளது.

2000 ஆண்டில், கடற்படையின் மீன் பிடி கட்டுப்பாடுகளுக்கு எதிராக மீனவர்கள் மத்தியில் கட்சி பிரச்சாரம் செய்த பின்னர், ஈ.பி.டி.பி. ஊர்கவாற்துறையில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மீதான சரீரரீதியான தாக்குதலுடன் அச்சுறுத்தியது. கட்டுப்பாடுகளை அமுல்படுத்த கடற்படையால் நியமிக்கப்பட்டுள்ள ஈ.பி.டி.பி., உள்ளூரில் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்த போதும் யாரும் வரவில்லை. கூட்டமொன்றுக்கு சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் ஒருவரை ஈ.பி.டி.பி. குண்டர்கள் இழுத்து வந்ததோடு இன்னுமொருவரை சுட்டதில் அவர் கீழே விழுந்தார். சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தால் பழிவாங்கப்படுவர் என சகல உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தப்பட்டது. (பார்க்க: ஈ.பி.டீ.பி. குண்டர்கள் கொழும்பு அரசாங்கத்துக்கு சேவகம்: இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்களுக்கு உயிராபத்து).

2007 மார்ச் 22 அன்று, சோ.ச.க. உறுப்பினரான நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் அம்பிகை நகருக்குப் பயணித்துக்கொண்டிருக்கும் போது ஊர்காவற்துறையில் காணாமல் போயினர். இதுவரையும் அவர்களைக் காணவில்லை. சோசலிச சமத்துவக் கட்சி சேகரித்த சகல ஆதராங்களும், கடற்படையினதும் மற்றும் அதனுடன் இணைந்து செயற்படும், இத்தகைய நூற்றுக்கணக்கான "காணாமல் போன" சம்பவங்களுக்கு பொறுப்பாளியான ஈ.பி.டி.பி. போன்ற துணைப்படை குழுக்களும் சம்பந்தப்பட்டிருப்தையே பலமாக சுட்டிக்காட்டின. (பார்க்க: "இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர் நடராசா விமலேஸ்வரன் காணாமல் போய் இரண்டு வருடங்கள் கடந்து விட்டன").

ஊர்காவற்துறையில் நடந்த அண்மைய தாக்குதல்கள், கடந்த வார ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இராஜபக்ஷ அராசங்கமும் அதன் பங்காளிகளும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கும் மிகப் பரந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாகும். உத்தியோகபூர்வ முடிவுகள் இராஜபக்ஷவுக்கு பிரமாண்டமான பெரும்பான்மை கிடைத்திருப்பதாக காட்டிய போதிலும், அரசாங்கம், அரசியல் ஸ்தாபனத்தின் எதிர்ப்பிரிவினரிடமிருந்து தொடர்ச்சியான எதிர்ப்பையும் மற்றும் வாழ்க்கைத்தரம் சீரழிவது சம்பந்தமான பரந்த வெகுஜன அதிருப்தியையும் எதிர்கொள்கின்றது.

அரசாங்கம் ஏப்பிரலில் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகின்ற நிலையிலும் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கோரும் வெட்டுக்களையும் உழைக்கும் மக்களின் முதுகில் திணிக்கத் தொடங்கியுள்ள நிலையிலும், அது அடக்குமுறையையும் குண்டர் நடவடிக்கையையும் நாடுவதற்கு தயக்கம் காட்டாது என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கை விடுக்கின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்கத்தின் பிரதான பங்காளி என்ற வகையில், தயாரிக்கப்பட்டு வரும் வழிமுறைகள் பற்றி ஈ.பி.டி.பி. ஏற்கனவே எடுத்துக்காட்டியுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved