World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Villepin acquitted in France's Clearstream trial

பிரான்ஸ் கிளியர்ஸ்ட்ரீம் வழக்கிலிருந்து வில்ப்பன் விடுவிக்கப்பட்டார்.

By Alex Lantier
29 January 2010

Back to screen version

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி கொண்டுவந்த கிளியர்ஸ்ட்ரீம் வழக்கில் அவதூறுக் குற்றச் சாட்டுக்களில் இருந்து முன்னாள் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் விடுவிக்கப்பட்டதானது சார்க்கோசிக்கும் பிரான்ஸின் அரசியல் ஒழுங்கிற்கும் ஒரு பெருத்த அடியாகும். அவருடைய வலதுசாரி தன்மையினால் சார்க்கோசிக்கு அரசியல் எதிர்ப்பை திரட்டுவதற்கு வில்ப்பன் முயலமாட்டார் என்றாலும், இத்தீர்ப்பானது 2012ல் ஜனாதிபதிக்கான வேட்பாளர் போட்டி முயற்சியில் வில்ப்பன் ஈடுபடக்கூடும் என்ற வதந்திகளை தூண்டி, சார்க்கோசிக்கு எதிர்ப்பு என்ற அரசியல் வெற்றிடத்தை உயர்த்திக் காட்டியுள்ளது.

2004 ல் உள்துறை மந்திரி என்ற முறையில் வில்ப்பன் சார்க்கோசியின் பெயரை கிளியர்ஸ்ட்ரீம் பணப்பட்டுவாடா நிறுவன வங்கிகள் பட்டியலில் பொய்யாக சேர்க்க அனுமதித்தார் என்று சார்க்கோசி குற்றம் சாட்டியிருந்தார். இத்தகைய நடவடிக்கையின் இலக்கு சார்க்கோசியை இழிவுபடுத்துவதாக இருந்தது; சார்க்கோசி 2007 ஜனாதிபதி தேர்தலில் கன்சர்வேடிவ் UMP வேட்பாளர் தகுதிக்கு போட்டியாக இருந்தார். கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் விசாரணை முடிவடைந்ததும் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்குமுன் பல மாதங்கள் இதைபற்றி ஆழ்ந்து சிந்தித்தது.

"பட்டியல்கள் பொய் பற்றி" வில்ப்பன் அறிந்திருக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மாறாக உளவுத்துறை முகவரும் முன்னாள் ஐரோப்பிய விண்வெளி மற்றும் ஆகாய பாதுகாப்பு நிறுவனத்தின் (EADS) நிர்வாகியுமான Jean-Louis Gergorin யும், முன்னாள் CIA மற்றும் பிரெஞ்சு உளவுத்துறையை சேர்ந்தவருமான இமத் லாகோட் இருவரும்தான் குற்றவாளிகள் என்று கூறியுள்ளது; இருவருக்கும் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. "இந்த விவகாரத்தின் சர்வதேச தன்மை பற்றி வில்ப்பன் அறிந்திருந்தார்" என்றும் "இதில் இருந்து கிடைக்கக்கூடிய அரசியல் ஆதாயங்களையும்" சார்க்கோசியிடம் அவர் "கொண்டிருந்த இகழ்வுற்ற போட்டியை" ஒட்டி, அறிந்திருந்தார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிமன்ற வழக்கு விசாரணையை முடித்தபின், வில்ப்பன் செய்தியாளர்களிடம் கூறினார்: "என்னிடம் கசப்பு உணர்வு இல்லை, பழிவாங்கும் எண்ணமும் இல்லை. ஒரு புதிய பக்கத்தை திருப்புவதற்கு நான் தயார்."

சார்க்கோசியின் வக்கீல் Thierry Herzog எந்தக் கருத்தும் கூறாமல் நீதிமன்றத்தை விட்டு அகன்றார். எலிசே அரண்மனையில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சார்க்கோசி எந்தக் கருத்தையும் கூற மறுத்துவிட்டார். தீர்ப்பிற்கு முன் செய்தி ஊடகங்கள் வில்ப்பன் விடுவிக்கப்பட்டால் சவால் இல்லாமல் சார்க்கோசி விடமாட்டார் என்று செய்தி ஊடகங்கள் ஊகித்திருந்தன. ஆனால் தீர்ப்பிற்கு பின்னர் எலிசே அரண்மனையில் இருந்து ஒரு அறிக்கை, "தீர்ப்பு கருத்தில் கொள்ளப்பட்டது என்றும்" குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதில் "திருப்தி" என்றும் மேல்முறையீடு ஏதும் இல்லை என்றும் கூறிவிட்டது.

வில்ப்பனின் வழக்குத் தீர்ப்பானது முன்னாள் ஜனாதிபதி ஜாக் சிராக்கின் நீதிமன்ற பிரச்சினைகளையும் பாதிக்கும். அக்டோபர் 30ம் தேதி, வில்ப்பனின் விசாரணை முடிந்தவுடன், சிராக் 1977-1995ல் பாரிஸ் மேயராக இருந்த காலத்தில் நகரவை நிதியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இத்தீர்ப்பு சார்க்கோசிக்கு பெரும் அரசியல் சங்கடம் ஆகும். கடந்த ஆண்டு விசாரணையின்போது, அவர் குற்றம் சாட்டப்பட்டவரை "குற்றவாளி" என்று பகிரங்கமாக விவரித்தார். 2005 ல் Lagardere Group நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னதாக அவர் குற்றவாளிகள் "கசாப்புக் கடைக்காரரின் மாமிச இடுக்கிகளில் தொங்கவிடப்படுவர்" என்று கூறியிருந்தார்.

வில்ப்பன் மீது வழக்குத் தொடுக்கும் சார்க்கோசியின் முடிவு அவருடைய அரசியல் நடவடிக்கைகளின் அரசியலமைப்பு நெறி பற்றி மேலும் வினாக்களை எழுப்பியது. Le Monde எழுதியது: "நாட்டின் தலைவரை நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்பவர் என்று அரசியலமைப்பு உள்ளது; இவர் மாஜிஸ்ட்ரேட் தலைமைக்குழுவின் தலைவரும் ஆவார். இதையொட்டி அவருக்கு நீதித்துறை அமைப்பு, நீதிபதிகள் நியமனத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆனால் வழக்குத் தொடுத்தவர்கள் பட்டியலில் இவருடைய பெயர் இருந்தது, குறிப்பாக ஒரு அரசியல் போட்டியாளருக்கு எதிராக என்பது --எழுதப்படாத மரபிற்கு ஒவ்வாதது, அவருடைய முன்னோர்களால் மதிக்கப்பட்டது-- இந்த நலிந்த முறைக்கு ஊறு விளைவிக்கும்."

2002ல் தன்னைப் படுகொலை செய்ய முற்பட்ட ஒரு இளம் நவ பாசிசவாதியான Maxime Brunerie மீது சிராக் தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடுக்கவில்லை என்று Le Monde கூறியுள்ளது.

கிளியர்ஸ்ட்ரீம் பட்டியலே அரசியல் ஊழல் மற்றும் ஆசியா, முன்னாள் பிரெஞ்சு காலனிகள் ஆபிரிக்காவில் இருந்தவற்றுடன் பிரெஞ்சு எண்ணெய் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் விற்பனைகளில் இலஞ்சம் பற்றிய விசாரணைகளை உளவுத்துறை மேற்கொண்டபோது வெளிப்பட்டது. இப்பிரச்சினைகள் விசாரணையின் போது புதைக்கப்பட்டுவிட்டன; வில்ப்பன் பற்றிய தீர்ப்பு அவற்றை தெளிவுபடுத்தவில்லை.

சார்க்கோசி கொண்டுவந்த குற்றச்சாட்டுக்கள் இந்த ஊழல்களை மறைப்பதில் வெற்றி கண்டன என்றாலும், வில்ப்பனுடன் போட்டி பற்றிய அவை காட்டிய குறிப்பு எதிர்பாரா விளைவுகளை கொடுத்தது. 2002-2007 காலத்தில் வில்ப்பனின் சார்பு மற்றும் கொள்கைகள் பற்றி நீதிமன்றக் கருத்தை அறிதல் போல் விசாரணை மாறியது; அதே போல் 2007ல் சார்க்கோசி வெற்றிக்கு பின்னர் அவருடைய கொள்கைகள் பற்றிய விசாரணை என்பதாகவும் மாறியது.

ஒரு தேசியவாத பிரச்சாரத்தின் மூலம் நவ பாசிச முன்னணி (FN) ஓட்டிற்கு முறையிட்டு, தான் தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைப்பேன் என்ற அடையாளங்களை காட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சார்க்கோசி பிரெஞ்சு வலதுசாரி அரசியலில் ஒரு புதிய பாணியை பிரதிபலித்தார். சமூக செலவுக் குறைப்புக்களை வெளிப்படையாக தொழிற்சங்க தலைவர்களுடன் விவாதித்தார்; சிராக்கின் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கைகளை தீவிரப்படுத்தினார்; அவை கடந்த ஆண்டு பர்தா மீது முழுத்தடுப்பு வேண்டும் என்று கூறிய விதத்தில் இஸ்லாமிய பெண்கள் மறைப்பு ஆடை அணிவதை எதிர்க்கும் இலக்கைக் கொண்டதாகும்.

சார்க்கோசியின் வெளியுறவுக் கொள்கை வெளிப்படையாக அமெரிக்க சார்பைக் கொண்டது. ஆப்கானிஸ்தானிற்கும், பாரசீக வளைகுடாவிற்கும் 2008ல் அவர் கூடுதலான பிரெஞ்சு துருப்புக்களை அனுப்பினார்; மார்ச் 2009ல் நேட்டோவின் கட்டளை அமைப்பினில் பிரான்சை மீண்டும் இணைத்தார்; ஈராக்கிய எண்ணெய் வயல்களில் பிரெஞ்சு எண்ணெய் நிறுவனம் Total உரிமை பெற்ற நேரம் அது. மேலும் பொதுவாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை குறை கூறுவதை தவிர்த்தார்.

வில்ப்பன் சான்றுகளை தேர்தெடுத்து அறிமுகப்படுத்திய முறையில், செய்தி ஊடகத்தின் சில பிரிவுகள் அவரை சார்க்கோசிக்கு மாற்றீடு என்று காட்ட முற்பட்டுள்ளன. 2002-2003ல் வெளியுறவு மந்திரி என்ற முறையில் வில்ப்பன்தான் பிரான்ஸின் பொது முகமாக இருந்து ஈராக் படையெடுப்பு பற்றிய அமெரிக்க திட்டங்களை ஐ.நா.வில் எதிர்க்க முற்பட்டார். பதவியை விட்டு விலகியதும் அவர் சார்க்கோசியின் குடியேறுதல் எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றியும் குறைகூறினார். செப்டம்பர் 2007ல் குடியேறுதல் எதிர்ப்பு நடவடிக்கைகளை பிரான்சில் ஏற்பது ஆபத்தாக முடியும், அவை மக்கள் நினைவில் நாஜி ஆக்கிரமிப்புக் காலத்தில் அரசாங்கம் நடத்திய யூதர் எதிர்ப்பை (rafles) தூண்டும் என்றும் எச்சரித்தார்.

சார்க்கோசியின் கொள்கைகள் பெருகிய முறையில் செல்வாக்கை இழந்துள்ளது, வில்ப்பனை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. சார்க்கோசி ஆதரவு கொடுத்திருந்த "தேசிய அடையாளம்" பற்றிய விவாதம், பர்த்தாவிற்கு தடை என்ற திட்டங்கள் செய்தி ஊடகத்தில் குறைகூறலுக்கு உட்பட்டுள்ளன ஏனெனில் அவை ஆழ்ந்த எதிர்ப்பைக் கொண்டுள்ளதுடன் புதிய பாசிச கருத்துக்களுக்கும் ஊக்கம் தருகிறது. நேட்டோ ஆக்கிரமிப்பிற்கு பரந்த பிரெஞ்சு எதிர்ப்பு இருப்பதால், சார்க்கோசி தான் ஆப்கானிஸ்தானிற்கு கூடுதல் படைத் துருப்புக்களை அனுப்புவதற்கில்லை என்று அறிவித்துவிட்டார்.

எல்லாவற்றிற்கும் மேலாக வில்ப்பன் இப்பொழுது சார்க்கோசிக்கு அரசியல் மாற்றீடு என்று குறிப்பிடப்படுவது இடதிற்கான அரசியல் வெற்றிடத்தை உயர்த்திக் காட்டுகிறது.

வில்ப்பன் வேட்பாளத்தன்மை சோசலிஸ்ட் கட்சிக்கு (PS) உண்மையான கஷ்டங்களை கொடுக்கும் என்று Journal du Dimanche சுட்டிக்காட்டுகிறது; அதுதான் பிரான்சின் மரபார்ந்த ஆளும் இடது கட்சியும் அதனுடன் தொடர்புடைய கட்சிகள் PCF, பசுமைவாதிகள் போன்றவையாகும். வில்ப்பன் பற்றிய தீர்ப்பு "சார்க்கோசிக்கு மோசமான செய்திதான்; வில்ப்பனை கட்டுப்படுத்துவது அவருக்கு கடினமாகும்; ஆனால் இடதிற்கும் மோசமான செய்தியாகும்; அவை UMP யின் இரு நம்பகத்தன்மை உடைய வேட்பாளர்களை எதிர்கொள்ள நேரிடும். இரு வேட்பாளர்களும் சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் பசுமைவாதிகள் விவாதிக்கும் அல்லது விவாதிக்க திறனை உடையவர்களைவிட மிகவும் உயர்ந்தவர்கள். வில்ப்பன் விடுவிக்கப்பட்டுள்ளதானது, PS ன் தலைமைச் செயலாளர் Martine Aubry க்கு பிரச்சினை; முன்னாள் 2007 இன் PS ஜனாதிபதி வேட்பாளர் செகோலன் ரோயலுக்கும் பிரச்சினை, முன்னாள் PS தலைமை செயலாளர் François Hollande க்கு பிரச்சினை தான்."

இத்தகைய கருத்துக்கள் இக்கட்சிகள் "இடது" என்ற பலத்தை கொண்டிருக்கவில்லை என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. எந்தத் தனி நபரும் சார்க்கோசியின் கொள்கைகளுக்கு உள்நாட்டு அல்லது வெளியுறவுக் கொள்கைகளின் அடிப்படைப் பிரச்சினைகளில் எதிர்ப்பு என்று காட்டக்கூடிய நினைவிற்கொள்ளத்தக்க சான்றுகளை கொண்டிருக்கவில்லை என்பதை காட்டுகின்றன. உண்மையில் 1997-2002 பன்முக இடது (PS-PCF-பசுமைவாதிகள்) அரசாங்கம் மிக அதிக தனியார்மயமாக்குதலை நடத்தி ஆப்கானிஸ்தானிற்கு முதல் பிரெஞ்சுத் துருப்புக்களையும் அனுப்பியது.

வில்ப்பன் செயல்படுத்த இருக்கும் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு கிடையாது; சார்க்கோசியின் எதிர்ப்பாளர் என்ற தோற்றத்தை மட்டுமே நம்பியுள்ளார்.

UMP பிரதிநிதி François Goulard இடம் வில்ப்பன் நடத்திய உரையை Le Monde மேற்கோளிடுகிறது; அவர் கூறினார்: "நீங்கள் 2012ல் வேட்பாளராக இருப்பீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரிகிறது. அதேபோல் விசாரணை இல்லாவிட்டால், நீங்கள் வேட்பாளராக இருந்திருக்க மாட்டீர்கள் என்றும் தெரிகிறது." வில்ப்பன் பதிலளித்தார்: "நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்."

"அடிப்படையில் வில்ப்பன் செல்வாக்கு பெற்றவர் அல்ல" என்று Jerome St.Marie கருத்துக் கணிப்பு அமைப்பு Les Inrockuptibles இடம் கூறியது. "சார்க்கோசிக்கு ஒரு நம்பகத்தன்மை உடைய எதிர்ப்பாளர் பிரெஞ்சு அரசியலில் இல்லாதது அவருடைய செல்வாக்கை செயற்கையாக அதிகரித்துள்ளது."

ஒரு ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பை தோற்றுவிக்கும் முயற்சியை 2005 வாக்கெடுப்பால் தோற்கடித்ததின் விளைவினால் சிராக்கின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து வில்ப்பன் பிரதம மந்திரி ஆனார். அவர் பதவியில் இருந்த காலத்தில், பிரான்ஸ் ஆப்கானியப் போரில் தொடர்ந்து பங்குபற்றியது. வில்ப்பனுடைய முக்கிய முயற்சி Contrat Premiere Embauche (CPE) எனப்பட்ட முதல் வேலை ஒப்பந்தம் ஆகும்; இதன்படி ஒரு புதிய எளிதில் வேலையில் அமர்த்தி, எளிதில் வெளியேற்றும் வேலை ஒப்பந்த முறை முதலாளிகளுக்கு இளம் தொழிலாளர்களை பெற்றுக் கொடுக்கும். இதையொட்டி பெரும் ஆர்ப்பாட்டங்கள் 2006 ஆரம்பத்தில் நடைபெற்றன; மில்லியன்கணக்கான இளைஞர்களும் தொழிலாளர்களும் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

தொழிற்சங்கத்தின் அரசியல் உதவி "தீவிர இடது" கட்சிகளில் இருந்து இணைந்து சார்க்கோசியும் தொழிற்சங்கங்களும் CPE சட்டம் ஓரளவிற்குப் பின் வாங்க ஏற்பாடு செய்தனர். இது மகத்தான அரசியல் ஏற்றத்தையும் மக்களிடையே குறுகிய காலத்திற்கு பெரும் புகழையும் சார்க்கோசி பெற வகை செய்தது; அதுவும் 2007 தேர்தலுக்கு முன்பு. அதிகாரத்தை விட்டு விலகும்போது வில்ப்பன் மீது காட்டப்பட்ட இசைவு வாக்குகள் 20 சதவிகிதத்திற்கு குறைந்தவைதான்.

செய்தி ஊடகங்களானது இப்படிப்பட்ட நபரை சார்க்கோசிக்கு முக்கிய எதிர்ப்பாளி எனக் காட்டும் முயற்சியானது சார்க்கோசியின் கொள்கைகளுக்கு உண்மையான எதிர்ப்பானது இந்த அரசியல் ஸ்தாபனத்திற்கு வெளியில் இருந்துதான் வரமுடியும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved