World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
The resignation of Oscar Lafontaine and the crisis of the Left Party ஒஸ்கார் லாபொன்டைனின் இராஜிநாமாவும் இடது கட்சி நெருக்கடியும் By Ulrich Rippert இடது கட்சியில் தலைவர் பதவியை இராஜிநாமா செய்து, பாராளுமன்ற அங்கத்துவத்தையும் கைவிடுவதாக ஒஸ்கார் லாபொன்டைன் எடுத்திருக்கும் முடிவு கட்சியை ஆழ்ந்த நெருக்கடியில் தள்ளியிருக்கிறது. தன்னுடைய முடிவு "முற்றிலும் உடல்நலக் காரணங்களை ஒட்டித்தான்" என்று லாபொன்டைன் அறிவித்துள்ளார். டிசம்பர் மாதம் அவர் ஒரு புற்றுநோய் நிலைமையை ஒட்டிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். சிகிச்சை வெற்றி என்றாலும் அவருடைய பொது உடல்நலத்தையொட்டி அவர் அரசியல் செயற்பாட்டை குறைத்துக் கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டார். எனவே கடந்த வார இறுதியில் லாபொன்டைன் சார்லாந்தில் உள்ள மாநிலப் பாராளுமன்றத்துடன் தன் பணியை மட்டுப்படுத்திக்கொள்ள இருப்பதாகக் கூறினார். அங்கும் அவர் ஒரு பிரதிநிதியாவார். அவருடைய உடல் நிலையை பற்றி விவரம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. செய்தி ஊடகத் தகவல்கள் அவருடைய பிரோஸ்டேட் சுரப்பிக்கள் நிலைமை அறியப்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறுகின்றன. ஆனால் கட்சியை நிறுவுவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்த லாபொன்டைனின் உடல்நிலை மட்டுமே கட்சி நெருக்கடியின் ஆழ்ந்த தன்மைக்கு விளக்கம் கொடுக்க முடியாது. உண்மையில் அவரது இராஜிநாமா அவருடைய அரசியல் கொள்கைகள் தோற்றுவிட்டன என்பதைத்தான் உறுதிப்படுத்துகின்றன. ஏற்கனவே லாபொன்டைன் ஒரு முறை இராஜிநாமா செய்துள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் பதவி, கூட்டாட்சி நிதி மந்திரிப் பதவி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சிக் கூட்டணியின் துணைத்தலைவர் ஆகிய பதவிகளை வணிக வட்டங்களில் இருந்து வந்த கடுமையான அழுத்தங்களை ஒட்டி இராஜிநாமா செய்தார். அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD) பெருவணிகம் மற்றும் வங்கிகளுக்கு எதிராக எந்தக் கொள்கையையும் செயல்படுத்த முடியாது என்று வலியுறுத்தியவுடன், எந்த எதிர்ப்பையும் காட்டாமல் லாபொன்டைன் இராஜிநாமா செய்தார். இது ஷ்ரோடரையும் சமூக ஜனநாயகக் கட்சியின் எஞ்சிய தலைமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது அரசாங்கத்தின் செயற்பட்டியல் 2010 என்பதின் மூலம் பெரும் தாக்குதல்களை நடத்த உதவியது. ஏராளமான சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் வாக்காளர்களும் கட்சியை விட்டு நீங்கியபின்தான் அரசியல் வாழ்விற்கு லாபோன்டைன் திரும்பி வந்தார். சமூக ஜனநாயகத்தின் சரிவு முதலாளித்துவத்தின் குறிப்பிடத்தக்க அடுக்குகளினால் எச்சரிகையுடன் கருத்திலெடுக்கப்பட்டது. ஏனெனில் ஜேர்மனியில் முதலாளித்துவ ஒழுங்கை ஒரு நூற்றாண்டாக தக்கவைத்துக் கொள்ளும் முக்கிய பங்கை சமூக ஜனநாயகக் கட்சிதான் செய்து கொண்டிருந்தது. 1918ல் சமூக ஜனநாயகக் கட்சிதான் பேரரசர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டபின் முதலாளித்துவம் தப்பிப்பிழைக்க வகை செய்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அது தனியார் சொத்துரிமையை பாதுகாத்து, மேற்கு நோக்கிய நிலைநோக்கையும் பாதுகாத்தது. மாணவர் எழுச்சிகள், தன்னியல்பான 1968/69 வேலைநிறுத்தங்களை தொடர்ந்து சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் வில்லி பிராண்ட்தான் எதிர்ப்புக்களின் தீவிரத்தை தணியச்செய்தார். லாபொன்டைனின் இலக்கு சமூக ஜனநாயகக் கட்சியின் வீழ்ச்சியைத் தடுத்தல் ஆகும். இதையொட்டி அவர் WASG எனப்பட்ட வேலைகளுக்கும் சமூக நீதிக்குமான தேர்தல் மாற்றீடு என்று மேற்கு ஜேர்மனியில் இணைப்பிற்கு வகை செய்தார். இது ஏமாற்றத்தில் இருந்து சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் கிழக்கு ஜேர்மன் ஸ்ரானிலிசக் கட்சியில் இருந்து வெளிவந்த ஜனநாய சோசலிச கட்சியுடன்(PDS) கலந்த அமைப்பு ஆயிற்று. ஜனநாய சோசலிச கட்சி பெரிய கட்சி அமைப்பைக் கொண்டிருந்ததுடன், கிழக்கு ஜேர்மனிய மாநில, நகரசபை நிர்வாகங்களில் அதிக ஆதரவைக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இருந்து, புதிய கட்சி ஆழ்ந்த பிளவுகளில் இருந்தது. கிழக்கு ஜேர்மனிய மாநிலங்களில் புதிதாக வந்த இடது கட்சி அதன் அரசியல் செல்வாக்கையும் ஆதரவையும் செயற்பட்டியல் 2010ல் இருந்த தீவிரமான சமூகத் தாக்குதல்களையும் செயல்படுத்த பயன்படுத்தியது; அதே நேரத்தில் லாபொன்டைன் இடது வார்த்தைஜாலங்களை பயன்படுத்தி நாட்டில் சுற்றுப்பயணம் செய்து, சமூகச் செலவுக் குறைப்புக்கள், வேலைக் குறைப்புக்கள் ஆகியவற்றை கண்டித்தார். இடது கட்சி உண்மையான வேலைத்திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை. லாபொன்டைனின் எதிர் நிலைப்பாடு முற்றிலும் வனப்புரைத் தன்மையைக் கொண்டிருந்து சமூக ஜனநாயக போலித் தோற்றங்களை இயன்றவரை தக்க வைத்தது. இடது கட்சி அதிகாரத்தில் இருந்த இடங்களில், அதன் கொள்கைகள் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பழைமைவாத யூனியன் கட்சிகளிடம் இருந்து வேறுபடுத்திக்காண முடியாதவையாகத்தான் இருந்தன. லாபொன்டைனின் முக்கிய திட்டம் சமூக ஜனநாயக கட்சிக்கும் இடது கட்சிக்கும் ஒரு வருங்காலக் கூட்டணியை உருவாக்குவது ஆகும். இது மத்திய ஆட்சி அளவில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு, அரசியல் உயரடுக்கிற்கு எதிராக பரந்த மக்களின் அணிதிரளல் வராமல் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டது. வில்லி பிராண்டின் அரசியல் வாரிசு என்று தன்னை லாபொன்டைன் கருதியது தற்செயல் நிகழ்வு அல்ல. பிராண்ட், போருக்குப் பின்னர், தான் பேர்லின் முதல்வர் ஆவதற்கு முன்னரே தன்னுடைய அரசியல் பயிற்சியை போருக்கு முன் மத்தியவாத சோசலிச தொழிலாளர் கட்சியில் இருந்து பெற்றிருந்தார். அதன் பின் அவர் பழைமைவாத கட்சி/ சமூக ஜனநாயகக் கட்சியின் பெரிய கூட்டணிக்கு துணைத் தலைவர் ஆனார். இறுதியில் அதிபர் ஆனார். அதிபராக அவர் தொழிலாளர்களின் பரந்த பிரிவுகளிடம் இன்னும் ஜனநாயகம், சமூக சீர்திருத்தங்கள் வரும் என்று உறுதியளித்து ஆதரவைப் பெற்றிருந்த 1968 எதிர்ப்பு இயக்கத்தை பிசுபிசுக்க வைத்தார். சமூக நெருக்கடியைக் குறைப்பதில் லாபொன்டைன் கணிசமான அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். சார்லாந்தில் நீண்ட காலம் பிரதமராக இருந்த நிலையில், அவர் நாட்டின் எஃகு மற்றும் சுரங்கத் தொழில்களை சமூக எழுச்சி தூண்டாமல் மூடியுள்ளார். இப்பொழுது லாபொன்டைனின் திட்டங்கள் சர்வதேச நிதியமுறையின் சரிவினாலும் அதையொட்டிய பொருளாதார நெருக்கடியினாலும் தகர்க்கப்பட்டுள்ளன. இவருடைய சமூக சீர்திருத்த ஜனரஞ்சக பேச்சு முற்றிலும் ஏற்க முடியவில்லை. ஜேர்மனிய அரசியலமைப்பிற்கு முறையிடுவதைத் தவிர வேறு எதையும் இவர் கூட்டங்களில் சமூக அநீதிகளுக்குத் தீர்ப்புக் காண கூற முடியவில்லை. அவை செல்வந்தர்களிடம் கொடுக்கப்பட்டுள்ள சமூகப் பொறுப்பு என்றுதான் அவர் குறிப்பிடுகிறார். வில்லி பிராண்ட் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்த சீர்திருத்த கொள்கைகளுக்கு திரும்பிச் செல்லல் என்பதற்கான வாய்ப்பு பொருளாதார நெருக்கடியின் பேரழிவு விளைவுகளால் அன்றாட முறையிலேயே அபத்தமாகப் போய்விட்டது. லாபொன்டைன் சமூக ஜனநாயகக் கட்சியுடன் சார்லாந்து மாநில அளவில் கூட்டணி அமைக்கும் முயற்சிகள், துரிஞ்சியாவில் கூட்டாட்சி அரசாங்கத்தில் கலந்து கொள்ளுவதற்கான தயாரிப்புக்கள் ஆகியவையும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்துடன் சார்லாந்தில் பசுமைவாதிகளும், துரிஞ்சியாவில் சமூக ஜனநாயகக் கட்சியும் கூட்டணி அமைத்துக்கொள்ள காட்டிய விருப்பத்தை ஒட்டி சரிவுற்றன. ஒரு சமூக ஜனநாயகக் கட்சி-இடது கட்சிக் கூட்டணி ஏற்படுத்திய ஒரே மாநிலம் பிராண்டன்பேர்க் ஆகும். அதுவும் பொதுப்பணி வேலைகளில் ஐந்தில் ஒன்று குறைக்கப்படும் என்ற திட்டத்தை ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்துத்தான். இடது கட்சியில் அழுத்தங்கள் லாபொன்டைனின் புற்றுநோய் நிலை பகிரங்கமாவதற்கு முன்னரே அதிகமாகி வந்தன. கிழக்கில், அரசாங்க அமைப்புடன் கட்சி ஆழ்ந்து இணைந்திருக்கும் நிலையில், லாபொன்டைனின் ஜனரஞ்சக வனப்புரைகள் தடை செய்யப்பட்டவையாக கருதப்பட்டன. மேற்கில் ஜேர்மனிய அரசாங்கத்தின் கடும் சிக்கன நடவடிக்கையுடன் தானும் எளிதில் அடையாளம் காணப்பட்டால், விரைவில் அதன் நம்பகத்தன்மை போய்விடும் என்று கட்சி அஞ்சுகிறது. இந்த அழுத்தங்கள் பின்னர் லாபொன்டைனுக்கும் இடது கட்சி செயலாளர் டீற்மார் பார்ட்ஸ் இற்கும் இடைய வெளிப்படையான மோதல் என்று வெடித்து வந்தன. நாட்டின் கிழக்கில் கொண்டுள்ள வலிமையின் அடிப்படையில் அதிகாரம் பெற்றுள்ள பார்ட்ஸ் மேற்கில் கட்சி வட்டங்களால் லாபொன்டைனின் திருமண உறவிற்கு அப்பால் இருந்த உறவுகளைப் பற்றி வதந்தி கிளப்பியதாக குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் லாபொன்டைன் கொடுத்த அழுத்தத்தை அடுத்து பார்ட்ஸ் இராஜிநாமா செய்யும் கட்டாயம் ஏற்பட்டது. இப்பொழுது லாபொன்டைனும் இராஜிநாமா செய்துள்ளார். இவர் நீங்குவது ஏற்கனவே இவருக்குப் பின் எவர் பதவிக்கு வருவார் என்பது பற்றி வெளிப்படையான பூசல்கள் வந்துள்ள நிலைமையில் இது இடது கட்சியில் அழுத்தங்களை அதிகரிக்கும். மே மாதம் கட்சி மாநாடு கூட இருக்கையில், நாட்டின் கிழக்கு, மேற்கு இவற்றில் இருந்து சமமாக எடுக்கப்படும் சமரசத் தீர்வான இரட்டைத் தலைமை தொடர்பான உடன்பாடு இல்லாமல் போய்விடும் என்று நம்பியது. ஆனால் பிளவுகள் மிகவும் அதிகமாகிவிட்டன. புதிய தலைமையின் கடைசித் திட்டம் இரண்டு புதிய தலைவர்கள் (ஒருவர் மேற்கையும், ஒருவர் கிழக்கையும் பிரதிநித்துவப்படுத்தும்) என்பது மட்டும் இல்லாமல் இரு கட்சி செயலாளர்களுக்கும் வகை செய்கிறது. இரண்டு வருங்காலத் தலைவர்களுடைய முடிவுகள் கட்சியின் வருங்கால நோக்குநிலை பற்றி தெளிவு கொடுக்கின்றன. முன்னாள் ஸ்ராலினிச செயலாளரான பேர்லினில் இருந்து வந்துள்ள பஹெசீன லொட்ஸ் வழமையாக தலைநகரத்தின் செனட்டின் வலதுசாரிக் கொள்கைகளுக்கு (SPD, இடது கட்சியின் கூட்டணிக்கு) ஆதரவைக் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் IG Metall பொறியியல் தொழிற்சங்கத்தின் முழுநேர அதிகாரியான மேற்கின் வேட்பாளரான கிளவுஸ் எர்ன்ஸ்ட் நீண்டகாலமாக நிறுவனங்களின் இணை-மேலாளர்கள் என்ற பங்கை ஏற்று செயல்படுத்தி வருகிறார். இடது கட்சியில் எதிர்காலம் தெளிவில்லை. ஆனால் அதன் கடந்த காலத்தை வைத்துப் பார்க்கும்போது கட்சி தவிர்க்க முடியாமல் சமீபத்திய நெருக்கடியை இன்னும் கடினமான முறையில் முதலாளித்துவ ஒழுங்கை உறுதிபடுத்தும் சக்தி என்று தன்னை நிரூபித்துக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை |