World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குBehind Sri Lanka's political infighting: US-China rivalry இலங்கை அரசியல் உள்மோதல்களின் பின்னணியில்: அமெரிக்க - சீனப் போட்டி Peter Symonds செவ்வாயன்று இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் நடந்ததை அடுத்து, ஆளும் உயரடுக்கின் இரு பிரிவுகளும் வதந்திகள், சூழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு, ஒன்று வெற்றிபெற்ற மகிந்த இராஜபக்ஷவிற்கும், மற்றொன்று ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் ஆதரவு கொடுத்து தங்களை வெளிப்படையான அரசியல் மோதல் நிலைக்கு தயாரித்துக் கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தல், மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக ஆழ்ந்த உறுதியற்ற தன்மைக்கு அரங்கு அமைத்துள்ளது. கடந்த மூன்று நாட்களின் அசாதாரண நிகழ்வுகளில், பொன்சேகா தங்கியிருந்த விடுதியை அதிக ஆயுதமேந்திய துருப்புக்கள் சுற்றிவளைத்ததோடு, அவர் ஆட்சிச் சதிக்கு திட்டமிடுகிறார் என்ற அரசாங்க தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது, அரசாங்கம் அவரை கைது அல்லது கொலை செய்யும் என்ற எதிர் குற்றச்சாட்டை பொன்சேகா வைத்தது, தேர்தல் செல்லாதது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டதுடன், இருதரப்பில் இருந்தும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சுறுத்தல்கள் வந்தது ஆகியவையும் இவற்றில் அடங்கும். இந்தக் கடுமையான போட்டியின் பின்னணி என்ன? இருவரும் அடிப்படையில் ஒரே உள்நாட்டுத் திட்டத்தைத்தான் கொண்டுள்ளனர். தமிழீழ விடுலைப் புலிகள் (LTTE) மீதான தோல்வியை கடந்த மே மாதம் கொண்டுவந்த இனவாதப் போர் இரக்கமற்ற முறையில் நடத்தப்பட்டபோது ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி இராஜபக்ஷவின் முக்கிய உள்வட்டத்தில் ஒருபகுதியாகத்தான் இருந்தார். இப்பொழுது பொன்சேகா இலங்கையின் ஜனநாயகத்தைப் புத்துயிர்ப்பிக்க போவதாக உறுதி கூறுகிறார். ஆனால், இராஜபக்ஷவைப் போல் இவரும் போர்க்குற்றங்கள், ஜனநாயக உரிமைகள் பெரும்பாலும் மீறப்பட்டதற்குப் பொறுப்பு ஆவார். படுகொலை செய்யப்பட்டுவிடுவேன் என அஞ்சினால் அவர் அரசாங்கத்தின் கொலைக்குழுக்களின் செயல்களை நன்கு அறிந்தவர் என்றே பொருள்படுகின்றது. அவை நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள், செய்தியாளர்கள், சாதாரண மக்கள் ஆகியோரை கடந்த நான்கு ஆண்டுகளில் கொன்றிருக்கின்றன. இருவருடைய பொருளாதார செயற்பட்டியலும் ஒரேமாதிரியாகத்தான் உள்ளன. இருவரும் தாங்கள் செயல்படுத்த முடியாது என்று அறிந்திருந்த உறுதிமொழிகளின் அடிப்படையில்தான் பிரச்சாரம் செய்தனர். தீவை "ஆசியாவின் அதிசயமாக" மாற்றுவதாக இராஜபக்ஷ உறுதியளித்து, ஆறு ஆண்டுகளுள் மொத்த உள்நாட்டு உற்பத்தி தனிநபர் வருமானத்தை இருமடங்கு ஆக்குவதாகவும் கூறினார். மக்களுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் பொன்சேகா தான் 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரின் பாதிப்பு, தற்பொழுதைய உலக பொருளாதாரக் கொந்தளிப்பின் பாதிப்பு ஆகியவை இராஜபக்ஷவின் சகோதரர்களுடைய ஊழல்களை முடித்துவிடுவதால் தீர்க்கப்பட்டுவிட முடியும் என்பது போல் நாட்டின் பிரச்சினைகள் அனைத்தையும் "வீணடித்தல், ஊழல்" இவற்றை அகற்றித் தீர்த்துவிடுவதாகக் கூறினார். உண்மையில், இராஜபக்ஷவும் பொன்சேகாவும் மோசமாகிவரும் பொருளாதார நெருக்கடியின் முழுச்சுமையையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தவும், போரின்போது கட்டமைக்கப்பட்டுள்ள போலீஸ்-அரசாங்கக் கருவியைப் பயன்படுத்தி எவ்விதமான எதிர்ப்பையும் அடக்கவும் உறுதியாக இருக்கிறார்கள். இந்த அரசியல் மோதல்களின் உண்மையான காரணத்தை கொழும்பில் காணப்பட முடியாது. தமிழீழ விடுலைப் புலிகளின் தோல்வியில் இருந்து, நாடு ஏகாதிபத்திய சக்திகளின் போட்டியின் சுழலில் ஈர்க்கப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவில் இலங்கையின் மூலோபாய நிலை மற்றும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவில் இருந்து வடகிழக்கு ஆசியா மற்றும் பசிபிக்கிற்கு முக்கிய கடல்வழிகளில் இது அமைந்திருப்பது ஆகியவை முக்கிய சக்திகளின் பெருகிய கவனத்தின் மத்திய புள்ளியாகியுள்ளது. தன் கடல்வழி வர்த்தகத்தை பாதுகாக்க விரும்பும் சீனா இப்போரை கொழும்புடன் தன் நிலையை பலப்படுத்திக்கொள்ள போரை பயன்படுத்திக் கொண்டது. ஆயுதங்கள், நிதி கொடுத்தல், பொருளாதார, மூலோபாய சலுகைகளுக்காக இராஜதந்திர ஆதரவு கொடுத்தல் உட்பட, குறிப்பாக அம்பாந்தோட்டையில் உள்ள புதிய தெற்குத் துறைமுகத்தை அமைத்தல் போன்றவை இவற்றில் அடங்கும். இந்தியாவும், பாக்கிஸ்தானும் ஐரோப்பிய சக்திகளுடன் சேர்ந்து இலங்கையில் ஒரு சாதகமான நிலைக்கு போட்டியிடுகின்றன. ஆனால் முக்கிய உறுதிகுலைக்கும் காரணி அமெரிக்காதான். அது இலங்கை உட்பட, ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் கொண்டிருக்கும் சீனாவின் பெருகிய செல்வாக்கை தீர்மானமாக எதிர்க்கிறது. இராஜபக்ஷவின் போருக்கு ஆதரவு கொடுத்திருந்த ஒபாமா நிர்வாகம் தமிழீழ விடுலைப் புலிகளின் தோல்வியை அடுத்து, அவநம்பிக்கை உணர்வுடன் இப்பொழுது "மனித உரிமைகள்" கருத்தைப் பேசுகிறது. ஐரோப்பியர்களுடன் சேர்ந்து கொண்டு, வாஷிங்டன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் இராஜபக்ஷ அரசாங்கத்தின்மீது அழுத்தும் கொடுக்கும் விதத்தில் குறைந்த மட்டுப்படுத்தப்பட்ட போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்தது. ஆனால், தன்னுடைய இராஜதந்திர வலிமையை சீனா பயன்படுத்தி அமெரிக்க/ஐரோப்பிய நடவடிக்கையைத் தடுத்து இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமான தன் வெற்றியை "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்று பாராட்டிய விதத்தில் ஆதரவைக் கொடுத்தது. டிசம்பர் முன்பகுதியில் அமெரிக்கா மீண்டும் தனது நிலையை மாற்றிக் கொண்டது. "இலங்கை: போருக்குப்பின் அமெரிக்க மூலோபாயம் மறு பரிசீலனை" என்ற தலைப்பில் வந்த முக்கிய அறிக்கை, அமெரிக்க வெளியுறவு குழுவினால் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை, கொழும்பில் சீனாவின் பெருகும் செல்வாக்கால் அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை எடுத்துக்காட்டி, அமெரிக்கா "இலங்கையை" இழக்கக் கூடாது என்று அப்பட்டமாக அறிவித்தது. "இலங்கையுடன் அமெரிக்க செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் ஒரு புதிய அணுகுமுறை" பொருளாதார, வணிக, பாதுகாப்பு ஊக்குவித்தல்கள் கொடுத்து அடையப்பட வேண்டும் என்று அது கூறியது. "மனித உரிமைகளை" பொறுத்தவரையில், அவை முக்கியம் என்றாலும், "இலங்கையில் அமெரிக்காவின் கொள்கையை இந்த ஒரு தனி விடயம் மட்டும் தீர்மானிக்காது. உண்மையான சீர்திருத்தத்தை கொடுப்பதற்கு அதற்கு திறமை இல்லை, இப்பகுதியில் அமெரிக்க புவி மூலோபாய நலன்களை அது குறைத்துவிடும்" என்று அறிக்கை கூறியது. அமெரிக்காவை தான் விரோதப்படுத்திக் கொள்ள இயலாது என்று இராஜபக்ஷவிற்கு நன்கு தெரியும். ஜனாதிபதித் தேர்தலின்போது, தமிழீழ விடுலைப் புலிகளைக் காப்பாற்ற விரும்பும், இராணுவத்தின்மீது போர்க்குற்றங்கள் என்ற சகதியை வீசும் "சர்வதேச சதித்திட்டத்தை" தான் எதிர்ப்பதாகவும் இராஜபக்ஷ பெருமை அடித்துக் கொண்டார். ஆனால், அவருடைய மேற்குலக எதிர்ப்பை காட்டிக் கொள்ளுதல் மற்றும் "சிறு இலங்கையை" பாதுகாத்தல் என்பவை அவற்றின் வரம்புகளைக் கொண்டிருந்தன. ஆப்கானிஸ்தானில் வாஷிங்டனின் போர்க்குற்றங்களைச் சுட்டிக்காட்டி அவர் தன்னுடைய குற்றங்களை நியாயப்படுத்திக் கொண்டார். எப்பொழுதும் எந்தப் பெயரையும் கூற அவர் விரும்பவில்லை. இப்பொழுது "சதிகாரர்களான" அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவுகளை முன்னேற்றிக் கொள்ள அவர் விரும்புகிறார். வாஷிங்டனுடனான பொன்சேகாவின் சொந்த உறவுகள் தீவிரமான குழப்பத்தன்மை உடையவை ஆகும். அக்டோபர் மாதக் கடைசியில் தன்னுடைய Green Card ஐப் புதுப்பித்துக் கொள்ளவும் உறவினர்களைப் பார்க்கவும் அமெரிக்காவிற்கு வந்தார். பாதுகாப்பு செயலர் கோத்தபாய இராஜபக்ஷவின் போர்க்குற்றங்கள் பற்றிய வினாக்களுக்கு விடையளிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையில் அவரே ஒரு பேட்டியில் கலந்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டார் என்று கூறப்படுகிறது. இப்பேட்டியை கொழும்பு தீவிரமாக எதிர்த்தது. இறுதியில் அப்பேட்டி நடைபெறவில்லை. அமெரிக்க அதிகாரிகளுக்கும் பொன்சேகாவிற்கும் இடையே நடந்த விவாதங்களின் தன்மை இரகசியத்தில் இருந்தாலும், அவர் கொழும்புவிற்குத் திரும்பிய சில நாட்களில் இராணுவத்தில் இருந்து இராஜிநாமா செய்து, இராஜபக்ஷவின் மேற்குலக எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு எதிராக தீவிரப் பிரச்சாரம் செய்தார். வாஷிங்டனுக்கும் இராஜபக்ஷவின் ஆட்சிக்கும் வருங்கால உறவுகளின் தன்மை தெளிவாக இல்லை. ஆனால், இந்த பெரிய சக்திகளின் போட்டி, அதிலும் குறிப்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே இருப்பது, இலங்கை அரசின் கொந்தளிக்கும், உறுதியற்ற அரசியலில் ஒரு புதிய வெடிப்புத் தன்மை கொண்ட காரணியாக இருக்கும். உடனடியான விளைவு எப்படி இருந்தாலும், ஆளும் உயரடுக்கிற்குள் நடக்கும் பிரிவுப் போர் தீவை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தும். அதையொட்டி எவர் வெற்றி பெற்றுவந்தாலும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைமீது மிருகத்தனமாக தாக்குதலை நடத்துவர். |