World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan government arrests opposition presidential candidate இலங்கை அரசாங்கம் எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரை கைது செய்துள்ளது By K. Ratnayake இலங்கை இராணுவ பொலிஸ், ஜனவரி 26 நடந்த நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவை நேற்று இரவு கைது செய்துள்ளது. இந்தக் கைது, கடந்த இரு வாரங்களில் அரசியல் எதிரிகள் மீதான அரசாங்கத்தின் பாய்ச்சலில் உக்கிரமடைந்திருப்பதை குறிப்பதோடு, இந்தவாரம் அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் பாராளுமன்றத் தேர்தலை நோக்கிய நகர்வில் அச்சுறுத்தல்களும் அடக்குமுறைகளும் விரிவடையவுள்ளதை முன்னறிவிக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) சோமவன்ச அமரசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ரவுப் ஹக்கீம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மனோ கனேசன் ஆகிய எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பொன்சேகா, தனது அலுவலகத்தில் இருந்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார். பொன்சேகா பெரும் இடைவெளியில் தோல்விகண்ட ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை சட்டப்பூர்வமாக சவால் செய்வதைப் பற்றியும், அதே போல் பொதுத் தேர்தலுக்கான திட்டங்களை பற்றியும் அவர்கள் கலந்துரையாடிக்கொண்டிருந்தனர். கனேசன் தெரிவித்தவாறு, டசின்கணக்கான இராணுவ பொலிஸ் அதிகாரிகள் அலுவலகத்துக்குள் வந்து பொன்சேகாவை கைதுசெய்யப் போவதாகத் தெரிவித்தனர். குற்றச்சாட்டுக்களை தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கோரிய ஓய்வுபெற்ற ஜெனரல், சிவிலியன் பொலிசாரே கைதுசெய்ய வேண்டும் எனக் கோரினார். அவர் மறுத்த போது, பொன்சேகாவும் அவரது செயலாளர் சேனக டி சில்வாவும் இழுத்துச் செல்லப்பட்டனர். "அவர்கள் அவரைக் கைது செய்து நாயைக் கொண்டு போவது போல் கொண்டு சென்றனர்," என கனேசன் நியூ யோர்க் டைம்ஸுக்குத் தெரிவித்தார். கனமாக ஆயுதம் ஏந்தியிருந்த துருப்புக்கள் அலுவலகத்தை சுற்றி வளைத்திருந்ததோடு ஊடகங்கள் கட்டிடத்துக்குள் நுழைவதை தடுத்தனர். தேர்தலில் போட்டியிடுவதற்காக நவம்பரில் இராஜனாமா செய்யும் வரை நாட்டின் உயர்மட்ட ஜெனரலாக இருந்த பொன்சேகா மீது, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு சதியை திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டியதை அடுத்து, இரண்டு வாரங்களாக அரசியல் பதட்ட நிலைமைகள் கூர்மையடைந்த நிலையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. தேர்தல் தினத்தன்று பொன்சேகா தங்கயிருந்த ஹோட்டலைச் சூழ நூற்றுக்கணக்கான படையினர் நின்றதில் பதட்டமான விட்டுக்கொடுப்பற்ற நிலை காணப்பட்டது. இந்த சதிப் புரட்சி குற்றச்சாட்டுத் தொடர்பாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களையும் பொலிஸ் ஏற்கனவே கைது செய்துள்ளது. பொன்சேகா ஆதரவாளர்கள் எனக் கருதிய இராணுவ மற்றும் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளை அரசாங்கம் வெளியேற்றியுள்ளது. இராணுவச் சட்டத்தின் கீழ் பொன்சேகா கைதுசெய்யப்பட்டுள்ளமை, மரண தண்டனையையும் விதிக்கக் கூடிய இராணுவ நீதிமன்றத்தில் மூடிய கதவுகளுக்குள் அவர் விசாரிக்கப்படுவார் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. இந்தக் கைது, இராஜபக்ஷ அரசாங்கம் அரசியல் தேவைகளுக்காக இராணுவத்தைப் பயன்படுத்துவதை அதிகப்படுத்தியுள்ளதை காட்டுகிறது. அதிகாரியாக சேவையில் இருந்த போது அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொன்சேகா மீது குற்றஞ்சாட்டும் அதே வேளை, 2006 நடுப் பகுதியில் இருந்து பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மீண்டும் தொடங்கியதில் இருந்தே ஜனாதிபதி இராஜபக்ஷ மேலும் மேலும் இராணுவத்தை அரசியல்மயப்படுத்தினார். பொன்சேகாவுக்கு எதிரான உண்மையான குற்றச்சாட்டுக்கள் பகிரங்கப்படுத்தப்படாத போதிலும், பாதுகாப்புப் பேச்சாளர் கெஹெலியே ரம்புக்வெல்ல ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: "அவர் இராணுவத் தளபதியாகவும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாகவும் மற்றும் பாதுகாப்புச் சபை உறுப்பினராகவும் இருந்த போது, இராணுவச் சட்டத்தின் கீழ் ஒரு சதிக்கு சமமானதாக இருக்கக் கூடிய வகையில் அவர் எதிர்க் கட்சி அரசியல்வாதிகளுடனும் அரசியல் கட்சிகளுடனும் நேரடி தொடர்பு வைத்திருந்தார். அவர் இராணுவத்தில் இருந்த போது அரசாங்கத்தை தூக்கிவீசும் எண்ணத்துடன் ஜனாதிபதிக்கு எதிரான சதியைத் திட்டமிட்டு வந்துள்ளார்." இதுவரை, "அரசாங்கத்தை தூக்கிவீச சதி செய்ததற்கான" ஆதாரமாக இருப்பது, அவர் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நின்றது மட்டுமே. வேறு வார்த்தைகளில் சொன்னால், தேர்தலொன்றில் அரசாங்கத்தை சவால் செய்வது சதிப்புரட்சி முயற்சிக்கு சமமானதாகும். அரசாங்கம் அத்தகைய வழிகளில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்குமானால், இந்தக் கைது நடவடிக்கையானது, அரசியல் எதிர்ப்புக்களை சட்டவிரோதமாக்குவதையும் பாராளுமன்ற ஆட்சியை கீழறுப்பதையும் நோக்கிய நகர்வாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக, ஒரு ஜனாதிபதி குழுவின் மூலம் அதிகரித்தளவில் ஆட்சி நடத்திய இராஜபக்ஷ, அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளை அலட்சியம் செய்தார். சேவையில் இருக்கும்போது அவரது நடவடிக்கைகளுக்காக பொன்சேகா மீது குற்றஞ்சாட்டுவதானது, அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு பல மாதங்கள் காத்திருந்தது ஏன் என்ற தெளிவான கேள்வியை எழுப்புகின்றது. ஜனாதிபதி வேட்பாளராவதற்காக இராஜனாமா செய்வதற்கு முன்னர், பொன்சேகா எதிர்க் கட்சி தலைவர்களுடன் சந்திப்புக்களை நடத்தியது பகிரங்கமானதாகும். இந்தக் குற்றச்சாட்டுக்கள், பொன்சேகாவின் அரசியல் பதவிக்கு முடிவுகட்டி, மக்களுக்குத் தெரியாமல் விசாரணை நடத்தி மற்றும் எதிர்க் கட்சிகளை அச்சுறுத்துவதற்கான ஒரு வசதியான சாக்குப் போக்கே என்று மட்டுமே முடிவுக்கு வரமுடியும். பொன்சேகா கைது செய்யப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர், கடந்த மே மாதம் புலிகளின் தோல்வியுடன் முடிவடைந்த யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கு சாட்சியமளிக்கப் போவதாக அவர் அச்சுறுத்தி வெளியிட்ட கருத்துக்களே இந்தக் கைதுக்கு உடனடிக் காரணமாகத் தோன்றுகிறது. தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பொன்சேகா தெரிவித்ததாவது: "[யுத்தக் குற்றங்கள் பற்றி] எனக்கு தெரிந்ததை, எனக்கு சொல்லப்பட்டதை மற்றும் நான் கேள்விப்பட்டதை நிச்சயமாக அம்பலப்படுத்தப் போகிறேன். யுத்தக் குற்றங்களை செய்த எவரும் நிச்சயமாக நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும்... உண்மையை வெளிப்படுத்துபவர்கள் துரோகிகள் அல்ல." தேர்தல் பிரச்சாரத்தின் போது, இராஜபக்ஷவும் பொன்சேகாவும் ஒருவரையொருவர் யுத்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களாக குற்றஞ்சாட்டிக்கொண்டனர். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது குற்றச்சாட்டுக்களை விலக்கிக்கொண்ட பொன்சேகா, கடந்த மே மாதம் உயர் மட்ட புலிகளின் தலைவர்களின் சரணடைவை ஏற்றுக்கொள்வதற்கு மாறாக அவர்களை கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோடாபய இராஜபக்ஷ கட்டளையிட்டார் என தெரிவித்தார். இதற்கு பதிலிறுத்த பாதுகாப்புச் செயலாளர், அரச இரகசியத்தை வெளிப்படுத்தியதாக பொன்சேகா மீது குற்றஞ்சாட்டியதோடு, அரசாங்க சார்பு ஊடகம் அவரை "துரோகி" என வகைப்படுத்தியது. யதார்த்தத்தில், இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு இருவரும் பொறுப்பாளிகள். ஐ.நா. மதிப்பீட்டின்படி, 2009 ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கிடையில், பிரதானமாக புலிகளிடம் எஞ்சியிருந்த பிரதேசத்தின் மீது இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான குண்டு மற்றும் ஷெல் தாக்குதல்களின் காரணமாக குறைந்தபட்சம் 7,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கும் மேலாக, இராணுவத்தின் ஒத்துழைப்புடன் செயற்பட்ட அரசாங்க சார்பு கொலைப் படைகள் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை கொன்றது. புலிகளின் தோல்வியை அடுத்து, தமிழ் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக 280,000 பேரை இராணுவம் கனமாக ஆயுதம் தரித்த சிப்பாய்களின் காவலின் கீழ் இருந்த இழி நிலையிலான தடுப்பு முகாங்களில் அடைத்து வைத்திருந்தது. கடந்த மே மாதம், ஐ.நா. மனித உரிமைகள் சபையில், ஒரு சுயாதீனமான விசாரணையை நடத்துமாறு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகளும் அழைப்பு விடுத்ததை அடுத்து இலங்கை யுத்தக் குற்றங்கள் நுண்னுணர்வான விடயமாகியது. சீனா, இந்தியா மற்றும் ஏனைய பங்காளிகளின் உதவியுடன் அந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்திய போதிலும், இந்தக் கோரிக்கை மீண்டும் உயிர் பெறக்கூடும் என ஜனாதிபதி இராஜபக்ஷவும் மற்றும் ஏனைய உயர்மட்ட அதிகாரிகளும் கவலைகொண்டிருந்தனர். இராஜபக்ஷவின் குற்றவியல் யுத்தத்தை ஆதரித்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் பொறுத்தளவில், தனது எதிரிகளை, குறிப்பாக சீனாவை ஓரங்கட்டும் முயற்சியில் கொழும்பு மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வசதியான வழிமுறையே இந்த விவகாரமாகும். பாதுகாப்புச் செயலாளர் இராஜபக்ஷ, இராணுவக் குற்றச்சாட்டுக்கள் ஊடாக பொன்சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராவதாக கடந்த வாரம் சமிக்ஞை செய்தார். அவர் பி.பி.சி. க்குத் தெரிவித்ததாவது: "அவர் [பொன்சேகா] குறிப்பிட்ட தவறுகளை செய்துள்ளார். அவர் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்... அவர் பாதுகாப்புத் தகவல்களை பகிரங்கப்படுத்தியுள்ளார். [யுத்த காலத்தில்] பிழையான கட்டளைகளை பிறப்பித்ததாக அவர் என்மீது குற்றஞ்சாட்டியுள்ளார்." அந்த பேட்டியின் போது, தான் எந்தவொரு யுத்தக் குற்ற விசாரணையையும் அனுமதிக்கப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தினார். சர்வதேச யுத்தக் குற்ற விசாரணையில் சாட்சியமளிக்க பொன்சேகா விருப்பம் தெரிவித்தமை, இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க ஒரு கருவியாக தன்னை பயன்படுத்திக்கொள்ளுமாறு அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பகிரங்கமாக விருப்பம் தெரிவிப்பதாகும். பிரச்சாரத்தின் போது, "சர்வதேச சமூகத்தில்" இருந்து அந்நியப்படுவதாகவும் மற்றும் நாட்டின் ஏற்றுமதிக்கு வழங்கிய மானியங்களை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளதன் விளைவாக இலங்கையின் வர்த்தகம் அழிந்து போவதாகவும் இராஜபக்ஷவை ஜெனரல் விமர்சித்தார். இப்போது, அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் பொன்சேகாவை அலட்சியம் செய்வதாகத் தெரிகிறது. தேர்தல் முடிவுகள், தேர்தல் மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகள் மீதான பாச்சல்கள் பற்றி வாஷிங்டனின் பிரதிபலிப்பு மெளனமானதாக இருக்கின்றது. நேற்று பொன்சேகா கைது செய்யப்பட்ட பின்னர், "எந்தவொரு நடவடிக்கையும் இலங்கை சட்டத்தின் படியே இடம்பெற வேண்டும் என்ற அக்கறையை" மட்டுமே அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார். எடுத்துக்காட்டான இராஜதந்திர அரைகுறை குறிப்பொன்றில், இந்தக் கைது "தேர்தல் முடிந்த கையுடன் எடுக்கப்பட்ட வழமைக்கு மாறான நடவடிக்கையாகும்" என அவர் தெரிவித்தார். இத்தகைய கருத்துக்கள், இலங்கையில் மனித உரிமை பிரச்சினை என சொல்லப்படுவதை குறைத்து மதிப்பிடும் ஒபாமா நிர்வாகத்துடன் ஒத்துப் போகின்றன. கொழும்பில் சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு வளர்ச்சியடைவதை எதிர்ப்பதன் பேரில், "இலங்கை தொடர்பாக குறுகிய கால மனிதாபிமான அக்கறைகளால் மட்டும் இயங்காமல் ஒரு பரந்த மற்றும் மிகவும் வலுவான அணுகுமுறை தேவை" என கடந் டிசம்பரில் வெளியுறவு பற்றிய அமெரிக்க செனட் அறிக்கையொன்று பரிந்துரைத்துள்ளது. தீவில் அமெரிக்க நலன்களை மேம்படுத்த பொன்சேகாவை சுரண்டிக்கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை வாஷிங்டன் காணுமெனில், அத்தகைய ஒரு அணுகுமுறை இலகுவாக மாற்றமடையக் கூடும். பெரும் வல்லரசுகளுக்கிடையிலான பகைமையில் நாடு சிக்கிக்கொண்டுள்ளமை, கொழும்பில் குழு மோதல்களை உக்கிரப்படுத்தும் ஒரு பிரதான காரணியாகும். இறுதி ஆய்வுகளில், இலங்கை அரசாங்கத்தின் பாய்ச்சல், அடிப்படையில் பொன்சேகாவை மற்றும் எதிர்க் கட்சிகளை இலக்காகக் கொண்டதல்ல. ஆனால், அது சர்வதேச நாணய நிதியத்தின் வயிற்றிலடிக்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்தவுள்ள நிலையில், தொழிலாள வர்க்கத்துடனான மோதலுக்கான தயாரிப்பாகும். ஒப்பீட்டளவில் அண்மைய காலம் வரை நம்பிக்கையான பங்காளியாக இருந்த பொன்சேகா கைது செய்யப்பட்டமை, தமது வாழ்க்கைத் தரத்தை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கும் உழைக்கும் மக்களின் எதிர்ப்புக்கு எதிராக பயன்படுத்தவுள்ள வழிமுறைகள் பற்றிய தெளிவான எச்சரிக்கையாகும். |